அறமென்ப…  [சிறுகதை]

[ 1 ]

காரை மெஜெஸ்டிக் ஆஸ்பத்திரிக்கு முன்னால் நிறுத்திவிட்டு வெளியே இறங்கி செல்வா கூவினான். “அட்டெண்டர் டிராலி… டிராலி கொண்டுட்டு வாங்க… ஒரு ஆக்ஸ்டெண்ட் கேஸ்…”

அட்டெண்டர் திண்ணையில் நின்று நிதானமாக அவனையும் காரையும் பார்த்தான். “ஆக்ஸிடெண்டா சார்? எங்க? ஆளு யாரு?”

”ஆளு வண்டிக்குள்ள இருக்காரு… சீரியஸா இருக்காரு… ஸ்ட்ரெச்சர் வேணும்.. உடனே வேணும்… ஏகப்பட்ட பிளட் லாஸ் ஆகியிருக்கு”

அவன்  “இருங்க” என்றான். பெரிய பின்பக்கத்தை உந்தியபடி நிதானமாக உள்ளே சென்றான். செல்வா திரும்பி காருக்குள் கிடந்தவரைப் பார்த்தான். நாற்பது வயதானவர், ஏதோ தொழிலாளி என்று தெரிந்தது. அவருடைய ரத்தம் வழிந்து காருக்குள் பெருகிக்கொண்டிருந்தது. அவருடைய ஒரு கால் மட்டும் மெல்ல துடித்தது.

அட்டெண்டரும் ஒரு பயிற்சி டாக்டரும் வந்தனர். பயிற்சி டாக்டர் இளைஞன், மீசையில்லாத வெண்ணிற முகம். அவன் “யாருக்கு சார் ஆக்ஸிடெண்ட்?”என்றான்.

“இதோ இவருக்குத்தான். நான் மதுரையிலே இருந்து வர்ரப்ப வழியிலே பாத்தேன். எனக்கு முன்னாலே போன யாரோ அடிச்சு போட்டுட்டு போய்ட்டாங்க. உடனே தூக்கிட்டு வந்தேன்… ரொம்ப கிரிட்டிக்கலான நெலைமையிலே இருக்கார்னு நினைக்கிறேன்”

“சார், இது போலீஸ் கேஸ். நாங்க எடுக்க மாட்டோம். நேரா கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போங்க”

“என்ன சொல்றீங்க? ஆசாமி செத்துட்டிருக்கார்.”

“ஆனா இது ஆக்ஸிடெண்டா கிரைமான்னு நாங்க சொல்லமுடியாது. லீகல் சிக்கல்கள் இருக்கு”

நம்பமுடியாமல் “ என்ன சொல்றீங்க?”என்று செல்வா கேட்டான்

“சர்க்கார் ஆஸ்பத்திரிக்குத்தான் சார் போகணும்”

சீற்றத்துடன் “அப்ப முதலுதவியாவது பண்ணுங்க” என்றான் செல்வா “இப்பவே நடுராத்திரி… இப்ப நான் வேற எங்க போகமுடியும்?”

“நாங்க இங்க இறக்கவே முடியாது சார். ஆள் போய்ட்டார்னா நாங்க சிக்கிக்குவோம். போலீஸ் எங்களைப் போட்டு படுத்தி எடுத்திருவாங்க… கொண்டுபோயிடுங்க”

“ஆள் செத்திருவான் சார்”என்று செல்வா தளர்ந்த குரலில் சொன்னான்.

”அதான் நாங்க சொல்றோம்”

“அப்ப என்னதான் பண்றது?”

“நேரா கவர்மெண்ட் ஆஸ்பிட்டல் கொண்டுபோங்க… வேற எந்த பிரைவேட் ஆஸ்பத்திரியிலேயும் எடுக்கமாட்டான்”

”அதுக்கு சிட்டிக்குள்ளே போகணுமே”

“ஆமா”

அவன் மேற்கொண்டு பேச விருப்பமில்லை என்பதுபோல பார்த்தான்.

“பாஸ்டர்ட்ஸ்”என்று கூவியபடி  செல்வா ஓடிப்போய் காரில் ஏறிக்கொண்டான். தலையை வெளியே நீட்டி “நான் பாத்துக்கறேன். ஐ வில் சேவ் ஹிம்!”என்றான்.

காரை வெளியே எடுத்து சாலையில் சீறவிட்டான். எல்இடி விளக்குகள் எரிந்த சாலை மின்னி மின்னி பின்னால் சென்றது. வெளிச்சம் அத்தனை கண்கூச வைத்ததாக முன்பு உணர்ந்ததில்லை. சாலையில் வண்டிகள் மிகக்குறைவாகவே இருந்தன

திரும்பிப்பார்த்தபோது அந்த ஆள் அசைவில்லாமல் கிடப்பதைக் கண்டான். செத்துவிட்டானா? பின்னால் கிடப்பது பிணமா? அவன் முதுகில் ஒரு குளிர்போல ஏதோ உணர்வு ஏற்பட்டது.

அவன் நெடுஞ்சாலையில் வரும்போது அந்த ஆள் சாலையோரமாக துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். பைக் தூரத்தில் தெறித்து விழுந்து ஒளிமின்னிக் கொண்டிருந்தது. அடிபட்டு அரைமணிநேரமாவது ஆகியிருக்கும். சுற்றிலும் எவருமில்லை. அவ்விடத்தை வேகத்தில் கடந்து சென்ற தன் காரை பின்னாலெடுத்து அருகே கொண்டுவந்தான். முதலில் ஒரு தயக்கம் இருந்தது. ஏதாவது வம்புகளில் மாட்டிக்கொள்வோமா?

அந்தக்கணம் அந்த ஆள் கைநீட்டி “அய்யா!” என்றான். மன்றாடும் குரல் “அய்யா!” கை அப்படியிலே மண்ணில் விழுந்தது. கண்கள் மூடிக்கொண்டு இமைகளுக்குள் விழிகள் அசைந்தன.

செல்வா முடிவெடுத்தான். காருக்குள் ஒரு பெட்ஷீட் இருந்தது. அதை எடுத்துக்கொண்டுசென்று அடிபட்டவனின் அருகே விரித்தான். அவன் உடலுக்கு அடியில் அதை இழுத்து அவனை அதன்மேல் படுக்கவைத்து அப்படியே இழுத்து கார்வரைக்கும் கொண்டுவந்தான். பின்னர் காருக்குள் இழுத்து பின்னிருக்கையில் படுக்கவைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். பின்பக்கத்திலிருந்து பச்சைக்குருதி வாடை வந்துகொண்டே இருந்தது.

அரசு தலைமை மருத்துவமனையை எளிதில் கண்டுபிடித்துவிட்டான். அந்த வேளையிலும் அதன் முன்னால் ஆள்கூட்டம் இருந்தது. தள்ளுவண்டிக்கடைகள் முன் டீ குடித்துக்கொண்டு சிலர் நின்றிருந்தனர்.

வண்டியை நேராக அவசர சிகிழ்ச்சைப் பிரிவின் முன் கொண்டுசென்று நிறுத்தினான். இறங்கியபோது அவன் மானசீகமாக களைத்திருந்தான். குரலெடுத்துப் பேசமுடியவில்லை. “அட்டெண்டர்… ஒரு ஆக்ஸிடெண்ட்”என்று தளர்ந்த குரலில் சொன்னான்.

ஆனால் அட்டெண்டர் பழகிப்போன வேகத்துடன் நேராக டிராலி ஸ்ட்ரெச்சருடன் வந்தான். அவனுடன் வந்த இன்னொருவன் டிராலியிலிருந்த அலுமினியப் பலகை ஒன்றை எடுத்து அருகே வைத்து அதில் அடிபட்டவனை புரட்டிப்போட்டு அப்படியே இழுத்து டிராலியில் வைத்தான். அதேவேகத்தில் சரிவில் உருட்டி மேலேகொண்டுசென்று மறைந்துவிட்டார்கள். இரண்டு நிமிடம்கூட ஆகவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் அவன் நின்றுகொண்டிருந்தான். ஒரு சிகரெட் பற்றவைத்தான். காரை எடுத்து அப்பால் மரநிழலில் நிறுத்தினான்.  விளக்கு வெளிச்சத்தில் தூக்கிப் பார்த்தபோது கையெல்லாம் ரத்தம். கழுவுவதற்காக அங்குமிங்கும் பார்த்தான். ஒரு கழிப்பறை கண்ணுக்குப் பட்டது.

கழிப்பறைக்குள் சென்று கழுவ முற்பட்டபோதுதான் கையில் மட்டுமல்ல முகத்தில், சட்டையில், பாண்டில் எல்லாம் ரத்தம் என்று தெரிந்தது. கைகளை உரசிக் கழுவி கர்சீஃபை நீரில் முக்கி உடைகளையும் துடைத்துக்கொண்டான்.

ஈர உடையுடன் வெளியே வந்தான். கார் அருகே சென்று நின்றான். அங்கே மேலும் பலர் நின்றனர். ஒருவன் டிரம்மில் டீ கொண்டுவந்து விற்றான். அதைப் பார்த்தபோதுதான் நாக்கு தவிப்பதே தெரிந்தது. ஒரு டீ குடித்தான்.

அதன் பின்னர்தான் மனைவியின் ஞாபகமே  வந்தது. மொபைலில் அவளை அழைத்தான். சுருக்கமாக நடந்ததைச் சொன்னான். “டாக்டர்ஸ் ஏதாவது ரிப்போர்ட் கேப்பாங்கன்னு நினைக்கிறேன். அது முடிஞ்சதுமே வந்திடறேன். காரை கொண்டுவர முடியாது. வாட்டர் செர்வீஸுக்கு விட்டுட்டு ஆட்டோவிலேதான் வரணும்” என்றான்

சற்றுநேரத்தில் முதல் அட்டெண்டர் வந்தான். “சார் வாங்க, டாக்டர் கூப்பிடறார்”

அவன் அட்டெண்டருடன் உள்ளே சென்றான். நீண்ட காரிடாரில் கண்கூசும் வெளிச்சம் இருந்தது. இரண்டு சக்கரநாற்காலிகள் கிடந்தன. ஒரு ஸ்ட்ரெச்சர் காலியாக காத்திருந்தது.

“உங்களுக்கு வேண்டப்பட்டவரா சார்?”என்றான் அட்டெண்டர்.

“இல்லைங்க, வழியிலே அடிபட்டுக் கிடந்தார். எடுத்திட்டுவந்தேன்”

”லக்கி ஆளுங்க… சரியான சமயத்திலே கொண்டாந்திருக்கீங்க”

“பொழைச்சுகிடுவாரா?”

”அப்டித்தான் பேசிக்கிட்டாங்க”

அவன் காரிடாரில் களைப்புடன் நடந்தான். பக்கவாட்டு அறைகளில் வெவ்வேறு பலகைகள் அவை எந்தெந்த இலாகா என்று காட்டின. நீலநிறமான மிகப்பெரிய போர்டில் வெண்ணிற பிளாஸ்டிக் எழுத்துக்களில் அறிவிப்புகள். அருகே சிறிய பலகைகளில் ஏராளமான காகிதங்கள் ஒட்டப்பட்டு காற்றில் பறந்தன.

“இந்தக்காலத்திலே இதெல்லாம் செய்யமாட்டாங்க சார். நீங்க துணிஞ்சு பண்றீங்க” என்றான் அட்டெண்டர்.

“ஏன்?”

“வம்புதான்.. போலீஸ்காரங்க எந்த நியாயத்துக்கும் கட்டுப்படமாட்டாங்க. அதைவிட வக்கீலுங்க. இப்ப வருவாங்க பாருங்க” என்றான் அட்டெண்டர் “இந்தப்பக்கம் சார்… இதான் ரூம்”

அவன் உள்ளே சென்றான். அங்கே நடுவயதான டாக்டர் இருந்தார். வேகமாக ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். உட்காரச்சொல்லி எழுதியதை காத்து நின்ற ஒருவனிடம் கொடுத்துவிட்டு நிமிர்ந்து கண்ணாடிவழியாகப் பார்த்து “நீங்கதான் அந்தாளை கொண்டுவந்ததா? ஆக்ஸிடெண்டிலே அடிபட்ட ஆள்?”

“ஆமா சார், நான்தான்”

”உங்க பேரு?”

“செல்வா, எம்.செல்வக்குமார்”

”என்ன பண்றீங்க?”

”பிஸினஸ் பண்றேன்… எண்ணை ஏஜென்சி எடுத்திருக்கேன். பாமாயில்”

“ஃபைன்… சரியான நேரத்திலே கொண்டுவந்திட்டீங்க. ஜஸ்ட் ஒரு எட்ஜிலே உயிர் பிழைச்சிருக்கார். தலையிலே நல்ல அடி. ரத்தம் குடுத்திட்டிருக்கோம். தலையிலே பட்ட அடியாலே ஏதாவது பாதிப்பான்னு நாளன்னிக்குத்தான் தெரியும்” என்றார் டாக்டர்.  “உங்க ஐடிகார்டு ஏதாவது இருக்கா?”

“டிரைவிங் லைசன்ஸ் காப்பி இருக்கு”

“போதும், குடுங்க”

அவன் பர்ஸிலிருந்து அதை எடுத்துக் கொடுத்தான்.

“ஒரு ரிப்போர்ட் குடுத்திட்டு நீங்க போகலாம். போலீஸ் கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்”

“நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகணுமா?”

“நாங்க இன்ஃபார்ம் பண்ணிட்டோம். அவங்களுக்கு தெரிஞ்சா வக்கீலுகளுக்கும் தெரிஞ்சிரும். அவங்களும் வந்திருவாங்க”

“வக்கீலுகள் எதுக்கு?”

“ஆக்ஸிடெண்டுன்னா அது அவங்களுக்கு காம்பன்சேஷன் கேஸ்ல? நடைமுறை என்னான்னா காம்பன்சேஷன்லே ஒரு பர்செண்டு வக்கீலுக்கு. முப்பது பர்செண்ட் வரை வக்கீல் ஃபீசா வாங்கிக்கிடறவங்க கூட இருக்காங்க…”

“ஓகோ”

”எழுதுங்க”

அவன் அவர் தந்த காகிதத்தில் நடந்ததை எழுதி டிரைவிங் லைசன்ஸ் நகலுடன் அவரிடம் கொடுத்தான்.

’பாலு இதை மாலினி கிட்டே குடு” என்று அட்டெண்டரிடம் தந்துவிட்டு “ஓக்கே, நீங்க கெளம்பலாம்… உங்க நம்பர் இருக்குல்ல இதிலே?”

‘ஆமா” என்றான் செல்வா ‘உங்க நம்பர் குடுங்க டாக்டர். ஏதாவதுன்னா கூப்பிட்டு கேட்டுக்கறேன்”

அவர் அளித்த எண்ணை சேமித்துக்கொண்டான். வெளியே வந்தபோது நடக்கவே முடியவில்லை. கார் வரைக்கும் நடப்பதற்குள் விழுந்துவிடுவான் போலத் தோன்றியது

 

[ 2 ]

 

அவன் மனைவிதான் அவனை எழுப்பினாள். அவன் அரைத்தூக்கத்தில் கனவில் இருந்தான். அவன் ஒரு பாத்திரத்தை கையால் எடுத்தான், அதில் ரத்தம் இருந்தது. அதை வைத்துவிட்டு இன்னொன்றை எடுத்தான். அதிலும் ரத்தம். இன்னொரு பாத்திரம், அதிலும் ரத்தம். எல்லா பாத்திரங்களிலும் ரத்தம். அவன் மனைவி அழைத்துக்கொண்டே இருந்தாள். “பாத்திரங்களிலே எல்லாம் ரத்தம்… ஒழுங்கா கழுவுறதில்லியா?”என்றான். விழித்துக்கொண்டான்.

“என்ன?”என்றான்.

பாமா “போலீஸ் ஸ்டேஷன்லே இருந்து கூப்புடறாங்க” என்று செல்போனை நீட்டினாள்.

வாங்கி “வணக்கம்”என்றான்.

“மிஸ்டர் செல்வக்குமாரா பேசுறது?” என்று ஒரு குரல்.

“ஆமா”

”பி த்ரீ ஸ்டேஷனுக்கு வாங்க. ஐயா கூப்புடறாரு. வாறப்ப ஆதார்காடு நகல், ரேஷன் கார்டு நகல் கொண்டுவாங்க”

“பி த்ரீ போலீஸ் ஸ்டேஷன் எங்க இருக்கு?”

”வாட்டர் டாங்கு இருக்குல்லா? வாட்டர்டேங்கு ரோடு… பழைய சித்ரா  தியேட்டர் பக்கம்”

“சரி, வந்திடறேன்”

“ஒரு பதினொரு மணிக்கு வாங்க…”

”சரி”

அவன் எழுந்து பல்தேய்த்தபோது பாமா “போலீஸ் ஸ்டேஷனுக்கா?”என்றாள்.

“ஆமா”

“எதுக்கு வம்பு? பாருங்க, இப்ப போலீஸ் அது இதுன்னு..”

”அவங்க வேலையை அவங்க பாக்கணும்ல? ஒருத்தன் அடிச்சுப்போட்டுட்டு போயிருக்கான்…அவனை அவங்க தேடிப்புடிக்கணும்ல? அடிபட்டவருக்கு ஏதாவது நஷ்ட ஈடு வாங்கிக்குடுக்கணும்ல?”

“அதெல்லாம் நமக்கு எதுக்கு?” என்று பாமா சொன்னாள்

”நாளைக்கு நான் ரோட்டிலே இதே மாதிரி கிடந்தா இன்னொருத்தன் வந்து பாத்துக்கிடணும்ல, அதுக்குத்தான். வாயை மூடு”

அவள் முகம் சுண்டிவிட்டது. ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்றாள்.

அவன் இட்லி சாட்பிட்டுவிட்டு சட்டையை போட்டுக்கொண்டே ஆஸ்பத்திரிக்கு ஃபோன் செய்தான். டாக்டர்தான் எடுத்தார்.

“சார், நான் செல்வா பேசறேன்… நேத்து ஒரு ஆக்ஸிடெண்ட் கேஸை அட்மிட் பண்ணினேன்… இப்ப எப்டி இருக்கார்?”

”சரியாயிட்டார். நினைவு திரும்பிட்டுது. எலும்புமுறிவுகள் இருக்கு. குணமாகிறதுக்கு நாளாகும். பட் ஹி இஸ் அல்மோஸ்ட் ஓக்கே”

“அவரோட மனைவி சொந்தக்காரங்க யாராவது வந்தாங்களா?”

“ஆமா, மனைவி வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்”

அவன் வெளியே வந்து பைக்கை எடுத்துக்கொண்டு சாலையில் நுழைந்தான். கேட்டை மூடிவிட்டு வெயில் பரவிய சாலையில் நடக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல தூக்கம் என்றால் உள்ளம் தெளிவாக ஆகிவிடுகிறது. உள்ளம் தெளிந்தால் எல்லாமே எளிமையானவையாக, நன்மைநிறைந்தவையாக தெரிகிறது. ஆனால் பெரும்பாலான நேரம் உள்ளம் பெரிய சிடுக்குகலும் முடிச்சுகளும் நிறைந்ததாகவே இருக்கிறது.

அவன் ஆஸ்பத்திரியைச் சென்றடைந்து பைக்கை நிறுத்திவிட்டு அவசர சிகிழ்ச்சை மற்றும் விபத்து காப்பு பகுதிக்குச் சென்றபோது அந்த அட்டெண்டர் அவனை பார்த்தான். “சார்”என்றான்.

”அந்த ஆள் எப்டி இருக்கார்?”

”மண்டையிலே செம அடி. ரத்தமும் நெறைய போய்டிச்சு. ஆனா பொழைச்சுக்கிட்டான் சார். சரியான நேரத்திலே கொண்டாந்தா இங்க எப்டியும் பொழைக்க வைச்சிருவாங்க. ஏன்னா இங்க எல்லாரும் இதிலே ரொம்ப பழக்கம் உள்ள டாக்டர். ரத்தம் வேற நெறைய ஸ்டாக் வச்சிருக்காங்களா…”

அவன் ஒரு நூறு ரூபாயை எடுத்து நீட்டி “இது இருக்கட்டும்”என்றான்.

“இல்ல சார், வேண்டாம், பரவாயில்லை”

“நானேதானே தாறேன்”

“இப்ப நான் உன்னை நீ போட்டு பேசிட்டிருக்கேன்ல? இந்த ரூபாய வாங்கினா நான் கீழே போயிருவேன்ல?”

“சரிதான்”என்றான்.  “நீங்க எதிர்பார்த்து நான் குடுக்காம இருந்திடக் கூடாதுங்கிறதனாலேதான் தந்தேன். ஸாரி”

“பரவாயில்லை சார், நான் வாங்கிறதில்லை. இங்க ஒருத்தன் மட்டும்தான் வாங்குவான். டாஸ்மாக் பார்ட்டி… இப்டியே வாங்க”

அந்த காரிடார் பகல் வெளிச்சத்தில் வேறுமாதிரி இருந்தது. சுவரில் நிறைய கறைகள். தரையில் பல இடங்களில் சிமிண்ட் பெயர்ந்திருந்தது. நல்ல கூட்டம். குறிப்புகளுடன், குப்பிகளுடன் ,கையில் ஒட்டிய மெல்லிய பிளாஸ்டிக் குழாய்களுடன் எல்லா வாசல்களின் முன்னாலும் காத்து நின்றிருந்தனர். பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்களிலும் பாதிக்குமேல் நடுவயதான பெண்கள். ஒருவாரத் தாடி முளைத்த ஆண்கள் முழுக்க முழுக்க பெண்களையே சார்ந்திருந்தது தெரிந்தது. நோய் வந்ததுமே ஆண் வெறும் நோயாளி ஆகிவிடுகிறான்.

“அங்க வராண்டாவிலே இருக்கிறது அந்தாளோட சம்சாரம் சார்” என்றான் அட்டெண்டர்.

”உள்ள போலாமா?”

“போகக்கூடாது. ஆனால் ஒரு நிமிசம் வேணுமானா விடுவாங்க. நான் டாக்டர்ட்ட சொல்லி பாக்கறேன்”

அட்டெண்டர் உள்ளே சென்று திரும்பி வந்து “பாத்துக்கிட்டு வந்திருங்க. பேசவைக்க வேண்டாம்…” என்றான்  “அழுறது பேசுறதெல்லாம் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு”

அவன் உள்ளே சென்றான். உள்ளிருந்த மருந்துவாடை, நீலமும் சிவப்பும் கறுப்புமாக டயல்கள் மின்னும் ஏராளமான கருவிகள், நீலநிறமான படுக்கையுறைகள், இரும்பு நாற்காலிகள், எனாமல் பேசின்கள், வெவ்வேறு மேஜைகளில் வெவ்வேறு கண்ணாடிக் குடுவைகள் அனைத்தும் ஒன்றென ஆகி அவனை பதற்றமுறச் செய்தன. வரிசையான கட்டில்களில் கட்டுகளுடனும், குளூக்கோஸ் கொடுக்கப்பட்ட கைகளுடனும், ஆக்ஸிஜன் மாஸ்க் அணிவிக்கப்பட்டும் பலர் படுத்திருந்தனர். ஒருவர் மட்டும் மெல்ல முனகிக்கொண்டிருந்தார்.

கட்டிலில் படுத்திருந்தவரை அவனால் அடையாளம் காணமுடியவில்லை. அவன் அங்குமிங்கும் பார்க்க வெண்ணிற ஆடை அணிந்த நர்ஸ் ‘ஆக்ஸிடெண்ட் கேஸா, இவருதான்” என்றாள்.

அவன் அந்த கட்டில்முன் நின்றான். பெரிய முண்டாசு போன்ற தலைக்கட்டு. முகம் அதைத்துப் போயிருந்தது. உதடு வீங்கி தொங்கியது. இடையிலும் காலிலும் கைகளிலும் கட்டுகள்.

“எப்டி இருக்காரு?”என்று அவன் நர்சிடம் கேட்டான்.

“ஒண்ணும் பயமில்லை”என்றாள். ஒரு குறிப்பை எழுதி அந்தக் காகிதத்தை கிழித்து ஒரு கிளிப்பில் போட்டுவைத்தாள்.

அவன் பார்த்துக்கொண்டு நின்றான். இன்னொரு இளம் நர்ஸ் அருகே வந்து “இங்க பாருங்க… கூப்பிடுறது தெரியுதா?” என அழைத்தாள்

அவருடைய வீங்கிய இமைகள் பதைத்தன. நீர்வழிய விரிசல் விட்டு திறந்தன. உதடுகள் அசைந்தன.

இளம் நர்ஸ் அவரிடம் குனிந்து “என்ன பண்ணுது? தண்ணி ஏதாவது வேணுமா?”என்றாள்.

அவர் வேண்டாம் என தலையசைத்து ,அவனை நோக்கி கண்களை திருப்பி “இவரா?”என்றார்.

“ஆமா, இவருதான் உங்களை கொண்டாந்து சேத்தது. வழியிலே யாரோ வண்டியாலே முட்டி போட்டுட்டு போயிருந்தாங்க… காப்பாத்தினவரு இவருதான்”

“ஆமா, ஞாபகம் இருக்கு” .அவர் கைகள் அசைந்தன. கும்பிட முயல்பவர்போல.

”வேண்டாம்” என்று அவன் சொன்னான்.

“தெய்வமா கும்பிடுவோம்”என்று அவர் குழறிய குரலில் சொன்னார். “என்னைய காப்பாத்தினீங்க… தெய்வமா..”

அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. உதடுகள் துடித்தன. நர்ஸ் “போதும்… தூங்குங்க”என்று அவரிடம் சொன்னார்.

“ஒண்ணும் கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாயிடும்”என்று அவன் சொன்னான்.

பெரிய நர்ஸ் அவன் போகலாம் என்று கையை அசைத்தாள். அவன் திரும்பும்போது பின்பக்கம் வாசலருகே முந்தானையால் வாயை மூடியபடி நின்றிருந்த அவர் மனைவியை பார்த்தான். அவளுக்கே நாற்பது வயதுக்குமேல் இருக்கும் என்று தோன்றியது. வறுமையில் நைந்துபோன உருவம். பழைய புடவை. மங்கலடைந்த கண்களில் நீர் நிறைந்திருந்தது.

“உங்க புருஷனாம்மா?”

”ஆமாங்கய்யா”

அவன் வெளியே போக, அந்த அம்மாள் பின்னால் வந்தாள்.

“குழந்தைங்க இருக்கா?”

“ஆமாங்க, நாலு புள்ளைங்க. நாலுமே சின்னது. ஸ்கூல் படிக்குதுங்க”

“அவரு என்ன வேலை பாக்குறாரு?”

“ஓட்டலிலே சரக்குமாஸ்டருங்க… வேலை முடிஞ்சு வாறப்பதான்…”

“இப்பதான் பிழைச்சுக்கிட்டாரே… சரியாயிரும்”

அவள் விசும்பி அழ ஆரம்பித்தாள்.

”இங்க நல்லாவே பாத்துக்கிடறாங்க. சீக்கிரமே வந்திருவாரு” என்றான். தயங்கியபின் பர்ஸிலிருந்து ரூபாய்களை எண்ணி மூவாயிரம் ரூபாய் எடுத்து நீட்டி “இதை வைச்சுக்கிடுங்க”என்றான்.

“இல்லீங்க”என்றாள்  “பணம் இருக்கு. குடுத்தாங்க”

“யாரு?”என்றான்.

“நேத்து என்னை வீட்டிலே இருந்து கூட்டிட்டு வந்தவங்க… வக்கீலுன்னு சொன்னாங்க”

“வக்கீல் வந்தாங்களா?”

”ஆமாங்க. ரெண்டுபேரு. ராத்திரியே வீட்டுக்கு காரிலே வந்தாங்க. போலீஸ்காரரும் காரிலே இருந்தாங்க. இந்த மாதிரி விசயத்தைச் சொல்லி கூட்டிட்டு வந்தாங்க… வாறப்பவே பத்தாயிரம் ரூபா பணம் குடுத்தாங்க. யார்கிட்டயும் எதுவும் பேசவேண்டாம்னு சொன்னாங்க”

”அவங்க நஷ்டஈடு வாங்கி தருவாங்க… அதிலே அந்தப்பணத்தை கழிச்சுக்கிடுவாங்கன்னு நினைக்கிறேன். பரவாயில்லை. இப்ப இந்த பணத்தை வைச்சுக்கிடுங்க… சிலசமயம் வெளியே மருந்துகள் வாங்கச் சொன்னாலும் சொல்லுவாங்க”

”வேண்டாங்க” என்று அவள் உறுதியாகச் சொன்னாள்.

“இருக்கட்டும்”என மீண்டும் நீட்டினான்

“வேண்டாங்க. அவங்க சொன்னதுக்குக்குப் பொறகு வாங்கினா நல்லா இருக்காது”

“சரி”என்று பணத்தை பையில் போட்டுக்கொண்டான். வெளியே வந்து பைக்கை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றான்

 

[ 3 ]

 

ஸ்டேஷன் எளிதில் கண்டுபிடிக்கும்படித்தான் இருந்தது. துருப்பிடித்த வண்டிகள் வரிசையாக சாலையில் நின்றன. சிவப்புச் சாயம் பூசப்பட்டிருந்தது. கேட்டின் மேல் வளைந்த பெயர்ப்பலகையும் பெரிதாகவே இருந்தது. அவன் பைக்கை நிறுத்திவிட்டு தயங்கியபடி நடந்து வாசலை அடைந்தான். காவல் நின்ற செண்ட்ரியிடம் “வரச்சொன்னாங்க”என்றான்

“உள்ள போங்க”என்று அவன் கையை காட்டினான்.

அவன் உள்ளே சென்றான். ஏன் இத்தனை தயக்கமும் பயமும் ஏற்படுகிறது என்று வியப்பாக இருந்தது. உடல் பதறிக்கொண்டே இருந்தது.

“யாரு சார்?”

“ஒரு ஆக்சிடெண்டு கேஸ்… வரச்சொன்னாங்க. என்பேரு செல்வா”

“ராமலிங்கம், உங்காளுய்யா”

ராமலிங்கம் என்ற கான்ஸ்டபிள் உள்ளிருந்து வந்தார். “வாங்கசார், வணக்கம். நான்தான் உங்களை கூப்பிட்டேன். வாங்க”

அவனை அவர் ஒரு சிறு அறைக்கு கொண்டுசென்றார். அங்கே இரண்டு நாற்காலிகள் இருந்தன. இடுங்கலான அறைக்குள் நிறைய ஃபைல் ரேக்குகள்.

“உக்காருங்க” என்று ராமலிங்கம் சொல்லி அவன் அமர்ந்துகொண்டார். செல்வா கிழிந்த நார்ப்பின்னல்கொண்ட நாற்காலியில் அமர்ந்தான்.

“சார் என்ன தொழில் பண்றீங்க?”

“நான் பிசினஸ் பண்றேன். எண்ணை ஏஜென்ஸி நடத்துறேன்.பாமாயில்” என்றான். விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான். அவர் அதை வாங்கி பையில் வைத்துக்கொண்டார்.

“ஆக்சுவலா என்ன நடந்தது?”

அவன் சொன்னான். அவர் கூர்ந்து கேட்டு தலையை ஆட்டினார்.

“அப்பவே நேரா இங்கவந்தும் ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்கலாம்ல சார்?”

“இல்ல, ஆஸ்பத்திரியிலே வீட்டுக்கு போகலாம்னு சொன்னாங்க”

”அவங்க அப்டித்தான் சொல்லுவாங்க. ஏன்னா அவங்களோட வேலை இல்ல இது. நீங்க உங்க சைடை சேஃப்கார்டு பண்ணியிருக்கணும்ல?”

அவனுக்கு படபடப்பாக இருந்தது. “என்ன சொல்றீங்க?”

“இப்ப என்ன கேஸ் ஆயிருக்கு? ஹிட் ஆண்ட் ரன்”

“யாரு?”

”நீங்கதான்… காரிலே அவனை அடிச்சுப் போட்டுட்டு எடுத்து கொண்டுபோயி ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணிட்டு அப்டியே ஓடிப் போய்ட்டீங்க. போலீஸ் உங்களை தேடி கண்டுபிடிச்சிருக்கு. இதான் இப்ப கேஸ்”

“இல்லியே, நான் எல்லா ரெக்கார்டையும் அங்கே ஆஸ்பத்திரியிலேயே குடுத்தேனே..”

“அது உங்க தரப்பு சார்… கேஸ் இப்டில்லா திரும்புது?”

“இதென்ன நான்சென்சா இருக்கு? நான் அந்தாளை காப்பாத்தினேன். அவரு கெஞ்சினாரு, அதனாலே தூக்கிட்டு வந்தேன்”

“அதெல்லாம் சொல்லலாம். ஆனா எவிடென்ஸ் வேணும்ல?”

“அந்தாளே இருக்காரே. அவரு சொல்லட்டும்”

”அதை அப்றம் பாக்கலாம்…இப்ப இன்ஸ்பெக்டர்கிட்டே பிராப்பரா கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு… எஃப்ஐஆர் போடச்சொல்லி வற்புறுத்தறாங்க”

”யாரு?”

“அவங்களோட வக்கீலுங்க… இப்ப உள்ளதான் இருக்காங்க”

அவனுக்கு படபடப்பாக இருந்தது. கைகளை கோத்துக்கொண்டான். விரல்கள் குளிர்ந்து நடுங்கின

“உடனே அரெஸ்ட் பண்ணணும்னு சொல்றாங்க..”

“அரெஸ்டா?”என்றான்.

“ஆமா, அரெஸ்ட் பண்ணினாத்தான் ஹிட் ஆண்ட் ரன் கேஸு ஸ்டிராங்கா ஆகும்…. நாங்களே உங்களை தேடிப்புடிச்சு கைது பண்ணினமாதிரி காட்டணும்…ஹிட் ஆண்ட் ரன்னுன்னா கிட்டத்தட்ட கொலைக் குத்தம் மாதிரி. அடிபட்டவருக்கும் உங்களுக்கும் முன்விரோதம் ஏதாவது உண்டா, கொலைமுயற்சியான்னுதான் பேசவே ஆரம்பிப்பாங்க”

”இதென்ன அநியாயமா இருக்கு? நான் என்ன பண்ணினேன்? நான் அந்தாளை காப்பாத்தினேன்… நான் இல்லேன்னா…”

“சத்தம் … சத்தம் வேண்டாம். நிதானமா பேசுங்க. நாங்க அப்டீல்லாம் சட்னு எஃப்ஐஆர் போட்டிர மாட்டோம். உங்களுக்கும் ஆளிருக்கும். அது பெரிய வம்பு. ஆனா வக்கீலுங்க இப்டி வந்து கட்டாயப்படுத்தறாங்க, அதை முன்னாடியே உங்க கிட்ட சொன்னேன். தைரியமா நிதானமா எஸ்ஐ கிட்ட பேசுங்க. அவரு ஒருமாதிரி யோக்கியமான ஆளுதான்”

”சரி’என்றான். நெஞ்சடைத்து அழுகைதான் வந்தது.

“இருங்க”என்று ராமலிங்கம் உள்ளே சென்றுவிட்டு வந்து “போங்க”என்றார்.

அவன் இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றபோது உள்ளே இருவர் அமர்ந்திருந்தனர். ஒருவர் கறுப்பு கோட் போட்டிருந்தார். இன்னொருவர் வெள்ளைச்சட்டை மட்டும். அவர்களில் ஒருவர் நெற்றி நிறைய விபூதி சந்தனம் குங்குமம் அணிந்திருந்தார்.

இன்ஸ்பெக்டர் சீருடையில் இருந்தார். தொப்பி மேஜைமேல் இருந்தது. மேஜைமுழுக்க ஃபைல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மூன்று டீ டம்ப்ளர்கள் காலியாக இருந்தன. மேலே பழைய மின்விசிறி சுழலும் கறக் கறக் ஓசை.

“வணக்கம்” என்றான்.

”நீங்கதான் எம்.செல்வக்குமார் இல்லியா? உக்காருங்க”என்றார் இன்ஸ்பெக்டர். அவர் பெயர் எம்.வெங்கடேசன் என்று தெரிந்தது. குரல் குற்றவாளிகளிடம் பேசிப்பேசி அதட்டும் தொனி கொண்டிருந்தது.

செல்வா அமர்ந்துகொண்டு அவன் மூச்சை இழுத்துவிட்டான். அந்த இருவரையும் பார்ப்பதை தவிர்த்தான்.

“என்ன நடந்தது?”என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.

அவன் மீண்டும் அனைத்தையும் சொன்னான்.

இன்ஸ்பெக்டர் “என்ன சார் சொல்றீங்க?”என்று கோட் போட்டவரிடம் கேட்டார்.

“அது அவரோட தரப்பு. சாட்சிகள் இருக்குன்னா அதை அவர் கோர்ட்லே நிரூபிக்கட்டும்… நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு?”என்றார் கோட்போட்டிருந்தவர்.

சட்டென்று அவன் பொங்கிவிட்டான் “என்ன சாட்சி? என்னய்யா சாட்சி? சாகப்போன ஒருத்தரை காப்பாத்தினேன். அது தப்பா? அதுக்காகவா என் மேலே கேஸ் போடறீங்க?” என்று கூவினான். உடல் பதற எழுந்துவிட்டான். “இந்தமாதிரி பண்ணினா எவன் சார் நாளைக்கு ஒருத்தருக்கு ஒரு உதவி பண்ணுவான்?”

”உக்காருங்க” என்றார் இன்ஸ்பெக்டர் “ப்ளீஸ், உக்காருங்க”

“இந்த மாதிரி டிராமாக்கெல்லாம் இங்க எடமில்லை. இது சட்டம்”என்றார் கோட்டுக்காரர்

“யார்யா டிராமா போடுறது? பணத்துக்காக பிளாக்மெயில் பண்றது நீ”

“சார், இங்க சத்தம்போடக்கூடாது…’என்று இன்ஸ்பெக்டர் கடுமையான குரலில் சொன்னார்.

“சத்தம்போட்டா ஆச்சா?” என்றார் வக்கீல்.

“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க” என்றார் இன்ஸ்பெக்டர். திரும்பி அவனிடம் “சார் , நிலைமை உங்களுக்கு புரிஞ்சிருக்கும். நீங்கதான் அந்தாளை அடிச்சுப்போட்டுட்டு ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணிட்டு தப்பி ஓடிட்டீங்கன்னு இவங்க சொல்றாங்க…”

”ஆனா  ஆஸ்பத்திரியிலே நானே…”

”இருங்க, அதெல்லாம் கோர்ட் விவகாரம்.இவங்க இப்டி ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்தா நான் எஃப்.ஐ.ஆர் போடணும். உங்களை அரெஸ்ட் பண்ணி கேஸ் பிரிப்பேர் பண்ணணும்…”

”அரெஸ்டா சார்?” என்றபோது அவன் குரல் உடைந்தது.

“புரியுது… ஆனா எனக்கு வேறவழியில்லை. நீங்க சொல்லவேண்டியதை எல்லாம் கோர்ட்டிலேதான் சொல்லமுடியும்”

“சார், கம்ப்ளெயிண்ட் பண்ண இவங்க யாரு? இவங்க வக்கீல்தானே?”

“ஆமா, நாங்க பாதிக்கப்பட்டவங்களோட வக்கீலுங்க. அவங்க கிட்ட வக்காலத்திலே கையெழுத்து வாங்கியிருக்கோம். இப்ப அவங்களுக்காக நாங்கதான் பேசுவோம்”

“எல்லாம் சட்டப்படிதான் செய்றாங்க”என்றார் இன்ஸ்பெக்டர் “நீங்களே ஒரு சமரசத்துக்கு வந்தா கேஸ் பதிவாகாம விட்டிடலாம்… இல்லேன்னா சிக்கல்தான்”

”நான் என்ன சார் பண்ணணும்?” என்றான்.

”நீங்க இவங்க கிட்ட பேசுங்க… ராமலிங்கம்”

”சர்”

”என்னன்னு பேசுப்பா”

“சர்”

ராமலிங்கம் அவனிடம் “வாங்க சார்” என்றார்.

அவர்கள் வெளியே சென்றார்கள். ராமலிங்கம் “இங்க வைச்சு பேசவேண்டாம் சார். வெளியே டீக்கடை இருக்கு, வாங்க”என்றார்.

டீக்கடை நோக்கிச் சென்றபோது அவனால் நடக்கக்கூட முடியவில்லை. அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு பின்னால் வந்தனர்.

ராமலிங்கம் மெல்லிய குரலில் “உங்களுக்கு வக்கீல் யாராவது இருக்காங்களா சார்?”என்றார்.

”நான் அப்டி யோசிக்கவே இல்லியே” என்றான்.

”உங்க வக்கீல்னு ஒருத்தர் இருந்தா நல்லாருக்கும்… சரி பேசுங்க. விட்டுக்குடுக்காம பேசுங்க. இல்லேன்னா அடிச்சு தின்னிருவானுங்க… ஓநாய்கள் மாதிரி”

டீக்கடையில் அமர்ந்து ஆளுக்கொரு டீ சொன்னார்கள்.

செல்வா கோட்டு போட்டவரிடம் “சார் , நிஜம்மாவே எனக்கு ஒண்ணுமே தெரியாது. உண்மையாகவே ஒரு உசிரை காப்பாத்தணும்னு நினைச்சேன். அதுக்காக அந்தாளை அவசரமா ஆஸ்பத்திரிக்கு கொண்டுட்டுப்போனேன். சரியான நேரத்திலே நான் கொண்டுபோகலேன்னா அவர் செத்திருப்பார்னு டாக்டரே சொன்னார்… கேட்டுப்பாருங்க”என்றான்

“சார், எங்களுக்கு எல்லாமே தெரியும். நாங்க கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்கிறது எங்க தொழிலுக்காக…”

“என்ன சொல்றீங்க? வேணும்னே சொல்றீங்களா? என்னை மாட்டிவிட்டு என்ன பண்ணப்போறீங்க? இப்டி பண்ணினா நாளைக்கு யாரு ஒருத்தருக்கு ஹெல்ப் பண்ணுவாங்க?”

”நாங்க பண்றதும் ஒரு ஹெல்புக்காகத்தான். ஹிட் ஆண்ட் ரன் பண்ணினவன் யாருன்னு நமக்கு தெரியாது. டயர் தடத்தை வைச்சுப்பாத்தா அது ஒரு பொலிரோ ஜீப்பு. உங்களுது போலோ கார். ஆனா போலீஸ் அதையெல்லாம் துப்பறிஞ்சு அந்த பொலிரோ வண்டியை கண்டுபிடிக்கப்போறதில்லை. ஹிட் ஆண்ட் ரன் கேஸ்லே கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். பல மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். வேற ஸ்டேட் காரா கூட இருக்கலாம். கண்டுபிடிக்கணும்னா கண்டுபிடிக்கலாம். ஆனா அது பெரிய வெட்டிவேலை. செய்யவே மாட்டாங்க”

“அதுக்காக?”

“யோசிச்சுப் பாருங்க… ஏழைப்பட்ட குடும்பம். ஆறுமாசம் அந்தாள் வேலைக்கு போகமுடியாது. வாழ்நாள் முழுக்க இனிமே முன்னமாதிரி வேலைசெய்யவும் முடியாது. மருந்து மாத்திரைக்கே லட்சக்கணக்கில ஆயிரும்… அடிச்சுட்டு போனவனை புடிக்கலைன்னா எங்க போயி காம்பன்சேஷன் கேப்பாங்க? ஒத்த பைசா கிடைக்காது”

“அதுக்காக காப்பாத்தினவனை மாட்டிவிடுறதா?”

“வேற வழியே இல்லை… நீங்க சரியான அடையாளத்தோட சிக்கியிருக்கீங்க. சாட்சிகள் இருக்கு. அப்றம் என்ன? எங்க வேலை நஷ்டஈடு வாங்கிக்குடுக்கிறது மட்டும்தான்”

”அதிலே பாதியை பிடுங்கிக்கிடறது?”

“அது எங்க ஃபீஸ். நாங்க சரியான நேரத்திலே வரலைன்னா அவங்களுக்கு ஒத்த பைசா கிடைக்காது…”

“நான் இப்ப என்ன பண்ணணும்?”

அவர் சற்று தயங்கி, செல்போனில் எதையோ கணக்கிட்டு, “பதினைஞ்சு லட்சம் குடுத்திருங்க… ஒரே செட்டில்மெண்ட்” என்றார்.

“என்னய்யா சொல்றே?”என்றபடி செல்வா எழுந்துவிட்டான்.

“தோ பார், மரியாதையா பேசு… இல்லே நானும் அதேமாதிரி பேசுவேன்”

“பதினஞ்சு லட்சமா?”

“உங்க பின்னணி என்னன்னு தெரிஞ்சுதான் இப்டி நடவடிக்கை எடுத்தோம். பதினஞ்சு லட்சத்துக்கு ஒரு பைசா குறையாது… இல்லேன்னா அரெஸ்ட் ஆகி ஜாமீன்ல வெளியே வாங்க.  கேஸை நடத்துங்க… கேஸ்லே அப்டி தப்பிச்சுக்க முடியாது. கிரிமினல் கேஸ்… ஐபிசி 279, 338 ரெண்டு செக்சன்ஸ் இருக்கு. கவனமற்று வாகனத்தை ஓட்டி கொடுங்காயம் விளைவித்தல். இதை கொலைமுயற்சி கேஸா கொண்டுபோகவும் எங்களாலே முடியும்… முன்விரோதம் இருக்குன்னு அந்தாளைச் சொல்லவைச்சா போரும். ஒரு மாசம் ஜாமீன் கெடைக்காம பாத்துக்கிடமுடியும் எங்களாலே… பேப்பரிலே நியூஸ் வரவழைப்போம்”

“எதுக்கு இப்டியெல்லாம் பண்றீங்க? நான் என்ன தப்பு பண்ணினேன்?”என்று சொல்லும்போதே அவன் விம்மிவிட்டான்.

”இதிலே செண்டிமெண்ட்டுக்கு இடமில்லை சார். இது தொழில். எங்க தொழிலிலே நாங்க வெற்றியை மட்டும்தான் பாப்போம்…” என்றார் கோட் போடாதவர். “நீங்க ஆனதை பாத்துக்கலாம்னு முடிவெடுத்தாக்கூட ஒரு வக்கீலை வைச்சுக்கிடணும். அவருக்கு ஃபீஸ் குடுக்கணும். அவரு வழக்கை இழுத்தடிக்கத்தான் முயற்சி பண்ணுவார். எப்டியும் காம்ப்ரமைஸ்தான் ஆகும். மொத்தமா பதினைஞ்சு உங்களுக்கு செலவாயிரும். இங்கேயே முடிச்சுக்கிட்டோம்னா உண்மையிலேயே உங்களுக்கு நல்லது. நல்லா யோசிச்சு சொல்லுங்க. இல்லேன்னா போலீஸ் ஸ்டேஷன்லே கேட்டுக்கிடுங்க. அப்டில்லாம் ஈஸியா வெளியே போயிட முடியாது”

“முடியாது. ஒரு பைசா தரமுடியாது”

“அப்ப ஜெயிலுக்கு போங்க… எல்லாம் உங்க முடிவு”

”போறேன்யா, ஜெயிலுக்கு போறேன்… அப்றமென்ன?” என்று அவன் கூவினான். டீக்கடைக்காரர் திரும்பிப் பார்த்தார்.

“சரி. அப்ப பேச்சு முடிஞ்சுபோச்சு. ராமலிங்கம் சார் , எங்க கம்ளெயிண்ட் அங்க இருக்கு. எஃப்.ஐ.ஆர் இப்ப போடலேன்னா நாங்க எஸ்பி கிட்ட கம்ப்ளெயிண்ட் குடுப்போம். இல்லே கோர்ட்லே ரிட் போடுவோம்” என்றார் கோட்டு போட்ட வக்கீல் “இது ஆக்ஸிடெண்ட் இல்லை. மர்டர் அட்டெம்ப்ட். இந்த அக்யூஸ்ட் ஏற்கனவே எங்க கட்சிக்காரரைக் கொல்ல ஒரு அட்டெம்ட் பண்ணியிருக்கார். ஆதாரம் இருக்கு”

“அதெல்லாம் வேண்டாம்… நான் பேசிக்கிடறேன்… நீங்க போங்க”என்றார் ராமலிங்கம்.

அவர்கள் எழுந்து சென்றபிறகு “சார் நீங்க சீரியஸ்நெஸை புரிஞ்சுகிடலைன்னு நினைக்கிறேன். இவனுங்களுக்கு இதேதான் தொழிலே. எப்டி எங்க மாட்டுறதுன்னு தெரிஞ்சவனுக. அதான் சரியா உங்களை பிடிச்சிருக்கானுக. நீங்க இதுவரை சட்டப்படி போலீஸ் ஸ்டேஷன்லே ரிப்போர்ட் பண்ணலை. இதுவே போதும் ஹிட் ஆண்ட் ரன் கேஸுக்கு… நீங்க நினைக்கிற மாதிரி ஈஸியா முடியாது… உங்க தொழில் பெர்சனல் லைஃப் எல்லாமே பாதிக்கும்… கௌரவம் போச்சுன்னா எல்லாமே போச்சே”

“அதுக்காக, இந்த நாயிங்க கேக்கிறத குடுக்கிறதா?”

“சரி, கம்மியா குடுங்க… பேசிப்பாப்பம். பதினஞ்சு கேக்கிறானுக. பத்துக்குள்ள முடிச்சிடலாம்”

“பத்துலட்சமா?”

“ஒரு வக்கீலை வைச்சாலே ஒரு லெட்சம் குடுக்கவேண்டாமா?” என்றார் ராமலிங்கம் “இப்ப பிரச்சினை உங்க கௌரவத்துக்கும் தொழிலுக்கும் குடும்பவாழ்க்கைக்கும் என்ன வெலைங்கிறதுதான்… தொகையை நாம பேசிப்பாப்போம்”

அவன் பெருமூச்சுவிட்டான். பின்பு சட்டென்று எழுந்தான்.

“நான் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிப்பாக்கிறேன்… அவர்ட்டடே நேரடியா பேசுறேன்”

”பேசலாம்… ஆனா அவரு இதிலே பெரிசா ஒண்ணும் பண்ண முடியாது”

”பாப்போம்”

அவன் எழுந்து போலீஸ் ஸ்டேஷன் நோக்கிச் சென்றான். வாசலிலேயே இரு வக்கீல்களும் நின்றிருந்தனர். அவர்கள் செல்லவில்லை என்பது அவனுக்கு சிறிய தயக்கத்தை அளித்தது. சிரமப்பட்டு அவர்களைப் பார்க்காமல் உள்ளே நுழைந்தான்.

அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் “எஸ்,ஐய பாக்கணும்’என்றான்.

அவர் உள்ளே சென்று விட்டு “போங்க”என்றார்.

அவன் நுழைந்து வணக்கம் சொன்னான்.

“சொல்லுங்க”என்றார் இன்ஸ்பெக்டர்.

“சார் என்ன சார் இது? அவங்க ரெண்டுபேருக்குமே நல்லா தெரியுது, இது நான் பண்ணின குற்றம் இல்லை. நான் அந்தாளை காப்பாற்றத்தான் செஞ்சேன். வேணும்னே கேஸுக்காக இப்டிச் சொல்றாங்க. அதை அவங்களே தெளிவாச் சொல்றாங்க…”

“எனக்கும் தெரியும். டாக்டர் ராஜ்குமார் அப்பவே சொல்லிட்டார்”

“பணம் கேக்கிறாங்கசார், பதினஞ்சுலட்சம்”

”பதினஞ்சுலட்சமா? டூ மச்”

“சார், நான் எதுக்கு பணம்குடுக்கணும்? நான் எந்த தப்பும் பண்ணலை”

“சார், நீங்க தப்பு பண்ணலைன்னு தெரியாத ஒருத்தர்கூட இங்க இல்லை. உங்க கிட்ட பணம் இருக்கு, மாட்டிக்கிட்டிருக்கீங்க, அவ்ளவுதான். நான் இதிலே எல்லாம் தலையிடறதே இல்லை. நான் போலீஸ்காரன், எங்களுக்கு டிபார்ட்மெண்ட் மட்டும்தான் இருக்கு. அவங்களுக்கு எவ்ளவோ பின்னணி உண்டு. அந்த கூட்டத்திலே எல்லா அரசியல்கட்சிக்காரங்களும் உண்டு. எங்களை எதிலயாவது இழுத்து விட்டுட்டாங்கன்னா அப்றம் நான் ஊரூரா ஓடிட்டிருக்கமுடியாது. அதான் சமரசமா போங்கன்னு சொன்னேன். பேரம்பேசி கட்டுப்படியாகிற தொகைக்கு செட்டில் ஆயிடுங்க”

“நான் தப்பு பண்ணாதவன் சார்”

“ஆமா, ஆனா நான் என்ன பண்ணமுடியும்? அவங்க கம்ப்ளெயிண்ட் குடுத்தா நான் நடவடிக்கை எடுத்தாகணும். தப்பு சரியை தீர்மானம் பண்றது கோர்ட்,நான் இல்லை”

“சார் ப்ளீஸ்” அவன் குரல் மீண்டும் உடைந்தது.

“ப்ளீஸ், என் நிலைமையை நீங்களும் புரிஞ்சுகிடணும். ஹானஸ்டா சொல்றேன், எனக்கு இதிலே சம்பந்தம் இல்லை. ராமலிங்கம் அவங்க ஆளு… அவனும் கொஞ்சம் நியாயமானவன்தான்”

“சார் நான் என்ன பண்ணணும், சொல்லுங்க?”

“ஒரு லாயரோட ஹெல்ப் தேடுங்க. தெரிஞ்ச லாயரா இருந்தா நல்லது. பேரம்பேசிப்பாருங்க. மிரட்டிப் பேரம்பேசி தொகையை குறைச்சு குடுத்திட்டு தப்பிச்சிருங்க… இல்லேன்னா…”

அவன் காத்திருந்தான்.

“அந்த ஆக்சிடெண்ட் ஆன ஆள் நீங்க அவனை இடிக்கலை, நீங்க தான் காப்பாத்தினவர்னு சொல்லிட்டா கேஸ் முடிஞ்சுடுது… அவனுக்கு என்னவேணுமோ அதை பண்ணிடுங்க.  நேரடியா அவங்ககிட்டேயே பேசிப்பாருங்க”

அவன் பெருமூச்சு விட்டான்.

“நான் எஃப்ஐஆர் போடுறதை டிலே பண்றேன்… எப்டியும் சாயங்காலத்துக்குள்ள முடிச்சிருங்க. ஏன்னா அங்க அந்தாளை அட்மிட் பண்ணியிருக்கு… மேக்சிமம் நாளைக்கு காலை பத்துமணி. அதுக்குள்ள முடிச்சுக்கிடுங்க”

’சரி சார்”

வெளியே வந்தபோது இரு வக்கீல்களும் ராமலிங்கத்திடம் பேசிக்கொண்டிருந்தனர். அவன் நேராக பைக்கை நோக்கி போனான். ராமலிங்கம் அவனை நோக்கி வந்தார். அவன் பைக்கை திருப்பி நிறுத்தினான்

ராமலிங்கம் “அவங்க கிட்டே பேசிட்டேன். ரொம்ப துள்றாங்க. ஆனா பத்துக்கு படிஞ்சுவருவாங்கன்னு நினைக்கிறேன்” என்றார்

அவன் ஒன்றுமே சொல்லாமல் பைக்கை கிளப்பினான்

 

 [ 4 ]

 

அவன் ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் கார் சரியாகிவிட்டது என்று செர்வீஸ் ஸ்டேஷனிலிருந்து ஃபோன் வந்தது. அவனுக்கு செல்லச் செல்ல நம்பிக்கை வந்துகொண்டே இருந்தது. அடிபட்டவனும், அவன் மனைவியும் வக்கீல்களுக்கு வக்காலத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான், அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்று தெரிந்திருக்காது.

மணிக்கூண்டை தாண்டும்போது சட்டென்று பழைய வகுப்பு நண்பன் பீட்டர் ராஜின் நினைவு வந்தது. அவன் வக்கீல்தான். பைக்கை ஓரம் கட்டி அவன் எண் இருக்கிறதா என்று தேடினான். இல்லை. ஆனால் பழைய மாணவர்களின் வாட்சப் குழுவில் அவன் தொடர்பு எண் இருந்தது. ”அவசரம் , கூப்பிடு”என்று ஒரு செய்தி அனுப்பினான்.

உடனே பீட்டர் அழைத்தான். “என்னடா, என்ன பிரச்சினை?”

அவன் நடந்ததைச் சொன்னான்.

“இது வழக்கமா நடக்கிறதுதான். ஆக்ஸிடெண்ட் ஆன ஆள் ரோட்ல கிடக்கிறப்ப அங்கேயே போய் ரத்தம் சொட்டச்சொட்ட வக்காலத்திலே கையெழுத்து வாங்கிடுவாங்கன்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். இவங்களை நாங்க வுல்ஃப்ஸ்னு சொல்றதுண்டு. சரி, நீ ஆஸ்பத்திரி போய் அவங்க கிட்ட பேசிப்பாரு… ஆனா சத்தம்போடக்கூடாது. சண்டைபோடக்கூடாது. அது மறுபடி பிரச்சினை ஆயிடும். கம்போஸ்டா பேசமுடியும்னா பேசு. அதுக்குள்ள நான் வந்திடறேன்”

“ஒகேடா,.. ரொம்ப தாங்க்ஸ்”

“பிரச்சினைன்னு வர்ரப்பதான் வக்கீல் நினைப்பே வரும்”

“அது உண்மைதான்… நோய்வந்தாத்தான் டாக்டர் நினைப்பும் வருது. ஆனா நீ பேசினதுமே ஆறுதலா ஃபீல் பண்றேண்டா”

பீட்டர் சிரித்தபடி ஃபோனை வைத்தான்.

ஆஸ்பத்திரி வாசலில் வண்டியை நிறுத்தியதுமே அவன் கண்கள் அந்த அட்டெண்டரைத்தான் தேடின. படியேறி வராந்தா சென்ற பின்னரும் தேடிக்கொண்டிருந்தான். அவனை காணவில்லை.

அங்கே வராந்தாவில் அவர் மனைவி இருந்தாள். அவனை கண்டதும் எழுந்து நின்றாள்

“எப்டிம்மா இருக்கார்?”

“பயமில்லேன்னு சொன்னாங்க”

“நீங்க ஏதாவது சாப்பிட்டீங்களா?”

“சாப்பிட்டேன்…’

“பிள்ளைங்கள்லாம் என்ன பண்றாங்க?”

’‘பக்கத்துவீட்டிலே இருக்கச் சொல்லியிருக்கேன். அவங்க தெரிஞ்சவங்கதான்” என்றாள் “எங்க அண்ணாரு வந்திருக்காரு. டீ குடிக்கப்போனாரு”

“இங்க பாருங்கம்மா நான் ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசவந்தேன். நீங்க ஒரு வக்கீலுக்கு வக்காலத்திலே கையெழுத்து போட்டுக்குடுத்தீங்க…அவரு உங்களுக்காக கேஸ் நடத்துறாரு. அது நல்லதுன்னு நானே சொன்னேன். அவரு உங்களுக்கு ஏதாவது நஷ்ட ஈடு வாங்கிக்குடுத்தா ரொம்ப நல்லது. ஆனா அவங்க என்ன பண்ணுறாங்கன்னு தெரியுமா? நான்தான் உங்க வீட்டுக்காரரை காரிலே மோதினேன்னு கேஸ் குடுத்திருக்காங்க… நான் உங்க வீட்டுக்காரரை காப்பாத்தினேன். அவரு கெஞ்சினதனாலே தூக்கிட்டு வந்து அட்மிட் பண்ணினேன். சரியான நேரத்திலே அட்மிட் பண்ணலேன்னா அவரு செத்திருப்பாரு… இதெல்லாம் உங்களுக்கே தெரியும்…இப்ப என்மேலேயே கேஸை திருப்பிட்டாங்க. அதை உங்க பேரைச் சொல்லி செய்றாங்க”

அவள் தலைகுனிந்து பேசாமல் நின்றாள்.

“அவங்க கிட்ட சொல்லிடுங்கம்மா. இப்டி என்னைய மாட்டிவிடுறதுக்கு சம்மதம் இல்லேன்னு சொல்லிடுங்க… நான் உதவி பண்ணிட்டு இப்ப மாட்டிக்கிட்டு இருக்கேன்”

அவள் ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து நின்றாள்.

“நான் சொல்றது புரியுதாம்மா…என்னைய மாட்டி விட்டிருக்காங்க”

”எதுவானாலும் வக்கீலய்யா கிட்டே பேசிக்கிடுங்கய்யா… எங்க கிட்ட பேசாதீங்க”

“என்னம்மா சொல்றீங்க? அவங்க பண்ணுற அனியாயத்தைப் பத்திச் சொல்றேன்… உங்க புருஷன் உயிரைக்காப்பாத்தின என்னைய மாட்டிவிடுறாங்க…”

“வக்கீலய்யா கிட்ட பேசுங்க… உங்க கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்கு”

“தெரிஞ்சுதான் பேசுறீங்களா? நான் இல்லேன்னா ரோட்லே கிடந்து செத்திருப்பாரு உங்க வீட்டுக்காரர்”

”எனக்கு ஒண்ணுமே தெரியாது… வக்கீலுகிட்டே பேசிக்கிடுங்க”

அவன் சலிப்புடன் தலையசைத்து “அப்ப நான் மாட்டிக்கிடுறது உங்களுக்கு சம்மதமா? என்னைய ஜெயிலுக்கு அனுப்பணும்னு சொல்றீங்களா?”

“நீங்க அவங்க கிட்ட பேசிக்கிடுங்க. நான் படிக்காதவ. சித்தாள் வேலை செய்றவ… ஏழை…”

“ஆனா உங்களுக்கு எல்லாமே தெரியுது… உங்களுக்கு மனசாட்சி இருந்தா சொல்லுங்க. நான் உதவி பண்ணினவன். உசிரை காப்பாத்தினவன்”

அவள் அழ ஆரம்பித்தாள். முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு விசும்பி விசும்பி அழுதாள்.

அவன் குரலை தழைத்து “இந்தாம்மா, உங்க நிலைமை எனக்கே தெரியும். என்னால முடிஞ்ச உதவியை நானும் செய்றேன். உண்மையான குற்றவாளியை போலீஸ் புடிச்சு உங்களுக்கு பணம் வாங்கி குடுப்பாங்க… உங்களுக்கு உதவி செஞ்சதுக்காக என்னை ஜெயிலுக்கு அனுப்பினா அது உங்களுக்கே நியாயமா படுதா?”

”எனக்கு ஒண்ணுமே தெரியாது… நான் நாலு புள்ளைங்களோட நடுத்தெருவிலே நிக்கிறேன்… ஒரு ஆதரவு இல்லை”

”அதெல்லாம் பாத்துக்கலாம்மா… என்ன வேணுமானாலும் செய்யலாம்… கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. நான் உதவி செஞ்சவன். என்னை மாட்டி விட்டு நீங்க பணம் சம்பாரிக்கலாமா?”

“நீங்க அதெல்லாம் வக்கீலய்யா கிட்ட பேசிக்கிடுங்க”

“அவங்க பண்ற அநியாயத்தைத்தான்மா பேசிட்டிருக்கேன்”

“நீங்க அவங்ககிட்டேயே பேசிக்கிடுங்க… எனக்கு ஒண்ணுமே தெரியாது”

அவன் ஒருகணம் திகைத்து நின்றான். பின்னர் திரும்பி நேராக தீவிர சிகிழ்ச்சை பிரிவுக்குள் நுழைந்தான்.

“இந்தா, சார், யாரு அது… நில்லுங்க”என்றாள் நர்ஸ்.

“சிஸ்டர் ஒரு செக்கெண்ட்… ஒரே செகெண்ட்… இப்ப போயிடுறேன்”என்று சொல்லிக்கொண்டே அவன் விபத்துக்கு ஆளாவரை நோக்கிச் சென்றான்.

“டாக்டர் வர்ர நேரம்… எனக்கு பிரச்சினையாயிடும் சார்”

“ஒரு செகண்டும்மா… இதோ”

அவன் ஓசைகேட்டு அவர் விழித்துக்கொண்டார். அவன் அவர் அருகே கட்டிலுக்கு கீழே மண்டியிட்டான்.

”என்னை தெரியுதா? என்னை முதல்ல எப்ப பாத்தீங்கன்னு தெரியுதா?”

அவர் ஆமாம் என்று தலையசைத்தார்.

“நீங்க அடிபட்டு துடிச்சிட்டிருந்தீங்க. நான் காரை நிப்பாட்டினப்ப என்னை பாத்து கைய நீட்டினீங்க… நான் போர்வையை போட்டு உங்களை இழுத்துட்டு வந்தப்பகூட உங்களுக்கு நல்லா ஞாபகம் இருந்தது…சொல்லுங்க”

“ஆமா” என அவர் முனகினார்.

”நான் கொண்டுவரலேன்னா அங்கேயே செத்திருப்பீங்க. ரத்தம் போய்ட்டிருந்தது. தலையிலே அடிபட்டிருந்தது. நான் உங்களை சரியான நேரத்திலே கொண்டுவந்தேன்னு டாக்டரே பலவாட்டி சொல்லியிருக்காரு”

”ஆமா” என்று அவர் சொன்னார். கண்கள் நிறைந்து வழிய ஆரம்பித்தன.

“இப்ப என் மெலேயே  கேஸை திருப்பிட்டாங்க உங்க வக்கீலுங்க. நான்தான் உங்களை அடிச்சுப் போட்டுட்டு கொண்டுவந்து அட்மிட் பண்ணிட்டு ஓடிட்டேன்னு கதையைக் கட்டுறாங்க. உங்கள அடிச்ச வண்டி பொலிரோ, நீங்களே பாத்தீங்கள்ல?”

“ஆமா”

”சொல்லுங்க, உங்க வக்கீலுங்க கிட்ட பேசி என்னை கேஸிலே மாட்டவைக்கிறது பெரும்பாவம்னு சொல்லுங்க. நான் உங்க உசிரை காப்பாத்தினவன்”

“நீங்க அவங்க கிட்டே பேசிக்கிடுங்க” என்றார்.

“என்ன சொல்றீங்க?”

”நாங்கள்லாம் ஏழைங்க… எங்களுக்கு யாருமில்லை” அவர் கண்களை தாழ்த்திச் சொன்னார்.

“வக்கீலுங்க நஷ்டஈடு வாங்கிக் குடுக்கட்டும்… ஆனா காப்பாத்தின என்னை மாட்டி விடக்கூடாதுல்ல? அது அநியாயம்ல? சொல்லுங்க”

”நீ வக்கீலய்யாகிட்டயே பேசிக்கிடுங்க”

அவனுக்கு சட்டென்று எல்லாம் புரிந்தது. “அப்ப உங்க கிட்ட சொல்லிட்டுத்தான் என்மேலே புகார் குடுத்திருக்காங்க, இல்லியா? உங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரியும்”

”நான் ஏழை…”

“நான் காலையிலெ உங்களை பாக்க வந்தப்பவே நீங்க என் மேலே கம்ப்ளெயிண்டு குடுத்தாச்சு இல்ல?”

“எம்பிள்ளைங்க தெருவிலே நிக்குது” என்று அவர் கரகரப்பான குரலில் சொன்னார்.

”அதெல்லாம் பாத்துக்கிடலாம்… நான் ஹெல்ப் பண்றேன்… என்னை ஜெயிலிலே போடுறதனாலே உங்களுக்கு பணம் வந்தா அதை வாங்குவீங்களா? கேஸ் போட்டா என் தொழில் வாழ்க்கை எல்லாமே அழிஞ்சிரும்”

“நான் ஏழை… எங்களுக்கு யாருமில்லை”என்று அவர் மிகத்தாழ்ந்த குரலில் முனகினார்.

“இதோபாருங்க. நீங்க ஏழைதான். கஷ்டப்படுறீங்க. ஆனா வேண்டிய உதவியை நான் செய்றேன். செய்றதுக்கு வேற சில அமைப்புகள் இருக்கு. நான் பாத்துக்கறேன். என்மெலே கேஸ் போடுறது நியாயமா? அதை நீங்க செய்யலாமா?”

“நீங்க வக்கீலய்யா கிட்டே பேசிக்கிடுங்க”

“அய்யா நல்லா யோசிச்சு பாருங்க”

“எங்க கிட்ட பேசாதீங்க…”

“இங்க பாருங்க”

”எங்கிட்ட பேசாதீங்க”

“இங்க பாருங்க…”

“நர்சம்மா, இங்க வாங்க” என்றார்.

நர்ஸ் வந்து “சார், பேசாதீங்க” என்றாள்.

செல்வா திகைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றான். அவர் கண்களை மூடிக்கொண்டார். கண்ணீர் மட்டும் வழிந்துகொண்டிருந்தது.

நர்ஸ் செல்வாவிடம் “சார் பிளீஸ்”என்றாள்.

அவன் தளர்ந்த கால்களுடன் மெல்ல வெளியே வந்தான். விழுந்துவிடுவோம் போலிருந்தது. கண்களில் காட்சிகள் அலையடித்தன.

வெளியே நின்றிருந்த ஒருவன் அவனை நோக்கி வந்தான். “என்னா சார், என் தங்கச்சியையும் வீட்டுக்காரரையும் பயமுறுத்திறீங்க? கேஸு போலீஸிலே இருக்குல்ல? அப்றம் எதுக்கு வர்ரீங்க?”என்றான்.

”நீங்க யாரு?”என்றான்.

“நான் லச்சுமிக்க அண்ணன்… கொத்தனார் வேலை பாக்கிறேன். என்பேரு முருகேசன்”

“இங்கபாருங்க முருகேசன், நான் இவரை அடிச்சுப்போடலை. நான் இவர் உசிரை காப்பாத்தினேன். சரியான நேரத்திலே நான் இவரை கொண்டாரலைன்னா செத்திருப்பார்”

”தெரியும், மச்சானே அதைச் சொன்னார்” என்றான் முருகேசன். “வக்கீலு பேசினப்ப கையெழுத்து போடமாட்டேன்னு சொல்லி அழுதாரு. வேறவழியில்லே, அடிச்சவனை போலீஸ் புடிக்கவே போறதில்லை அஞ்சுபைசா கிடைக்காதுன்னு சொன்னப்பதான் ஒப்புத்துக்கிட்டு கையெழுத்தே போட்டாரு”

“டிரீட்மெண்டுக்கு வேணுமானா நான் ஏதாவது ஹெல்ப் பண்றேன்… குடும்பத்துக்கும் ஹெல்ப் பண்றேன். அதுக்காக என்னை குற்றவாளியாக்குறது நியாயமா?”

”என்ன நியாய அநியாயம் பேசுறே நீ? அவ்வளவு பெரிய கார் வைச்சிருக்கே. பங்களா வீட்டிலே இருக்கே. தொழில் பண்றே. ஏழைக்கு கொஞ்சம் காசு குடுக்கணும்னா வந்து நின்னு பஞ்சாயத்துப் பேசுறே பாத்தியா? அதான் பணக்காரப்புத்தி. நாங்க நாள் முழுக்க தீவெயிலிலே நின்னு வேலை பாத்தா என்ன மிச்சம்? இந்தா இந்த ரெண்டு கையும் காலும்தான். அந்தா உள்ள கெடக்கிறாரே, இருபத்தெட்டு வருசமா அடுப்படியிலே வேகுறாரு… இப்ப புள்ளைங்க நடுத்தெருவிலே நிக்குமேன்னு நினைச்சு பதறுறாரு… அதெல்லாம் உனக்கு எங்க புரியும்? உனக்கு உன் பணம் பெரிசு… அதானே. போய்யா நீ போயி வக்கீல் கிட்டே பேசிக்கோ”

அந்தப் பெண் வந்து அவன் சட்டையை பிடித்து இழுத்து “முருகேசு, நீ வா. நீ எதுக்கு அவங்க கிட்ட தேவையில்லாம பேசுறே?”என்றாள்.

செல்வா உரக்க,  “ஏய்யா, மனசாட்சின்னு ஒண்ணு இல்லியா? நான் அவரோட உசிரை காப்பாத்தினேன்”என்றான்.

”மனசாட்சி இருக்கு. ஆனா அது உங்கள மாதிரி பணக்காரங்களுக்கு புரியாது. எங்க மனசாட்சி வேற. கஷ்டப்படுறவன் மனசாட்சி வேறய்யா… போயி ஆவுறதைப்பாரு. வந்திட்டான்”

“அப்ப நான் காப்பாத்தியிருக்கக் கூடாதுங்கிறீங்க?”

”எதுக்கு வெட்டிப்பேச்சு? நீ பணக்காரச் சீமான். நாங்க ஏழைங்க. நீ வசமா மாட்டியிருக்கே. நீ வச்சிருக்கிற சொத்து எங்களை மாதிரி ஏழைங்களை ஏமாத்தி சம்பாரிச்சது. அதிலே கொஞ்சத்தை குடு… அவ்ளவுதானே? அதுக்கு எதுக்கு நொண்டிநாயம் பேசிக்கிட்டு”

“எங்கிட்ட அப்டி பெரிய பணம்லாம் ஒண்ணும் இல்லை. நான் சின்ன தொழில் பண்றவன்… என்னாலே முடிஞ்ச அளவுக்கு உதவி பண்றேன்னு சொல்லிட்டேன்ல?”

“என்ன உதவி பண்ணுவே? என்னய்யா பெரிசா உதவி பண்ணுவே? ஆயிரமோ ரெண்டாயிரமோ குடுப்பே. இல்லே ஆறுமாசம் இதுகளுக்கு செலவுக்கு உண்டானதை குடுப்பே. அம்பது லெச்சம் குடுப்பியா? சொல்லு… இல்ல இருவத்தஞ்சு லெச்சம் குடுப்பியா? இவங்க கடனை எல்லாம் அடைச்சு ஒரு வீடு கட்டிக்கிட்டு சந்தோசமா இருப்பாங்க… குடுப்பியா?”

“நான் எதுக்கு குடுக்கணும்?”என்றான்.

”நீ குடுப்பே. குடுக்கவைக்க வக்கீலுங்களாலே முடியும். அதான் இந்த பொறி… நீயே வந்து மாட்டிக்கிட்டே. இவ்ளவுநாள் நீ சுகிச்சு வாழ்ந்தேல்ல. இனிமே கொஞ்சநாள் அந்தப்பணத்திலே இவங்களும் சுகிச்சு வாழட்டும்… போ”

”முருகேசு, நீ வா. நீ எதுக்கு கண்டவன்கூட முட்டிக்கிட்டு?”என்றாள் அந்தப்பெண். திரும்பி அவனிடம் உரக்க “சார் நீங்க எதுக்கு இங்க வந்து சண்டை போடுறீங்க? எதுவா இருந்தாலும் வக்கீல்கிட்டே பேசிக்கிடுங்க, போங்க”

”சரிம்மா”

திரும்பி நடந்தபோது சட்டென்று செல்வா புன்னகைத்தான். வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் போலிருந்தது. உண்மையாகவே சிரித்திருப்பான்போல. எதிரே வந்த இருவர் விசித்திரமாக பார்த்துக்கொண்டு சென்றார்கள்.

பைக்கை எடுக்கும் முன் செல்பேசியை பார்த்தான். இரண்டு தவறிய அழைப்புகள் இருந்தன. பீட்டர்தான். திரும்ப அழைத்தான்.

“டேய், நான்தாண்டா” என்றான் பீட்டர் “என்ன ஆச்சு?”

அவன் நடந்ததை பீட்டரிடம் சொல்லச் சொல்ல சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துக் கொண்டே சொல்லி முடித்தான். “நிஜம்மாவே நம்ப முடியல்லை… இப்டித்தான் உலகம் எப்பவும் இருக்கு. நான் பிஸினஸிலே சந்திச்சவங்க பெரும்பாலும் இப்டித்தான். ஆனாலும் இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்திலே…நாம இதையெல்லாம் சட்டுன்னு ஒரு கதையா ஆக்கிடறோம். அந்தக்கதையிலே ஒரு லாஜிக் ஒரு எதிக்ஸ் இருக்கணும்னு நினைக்கிறோம்”

“சரி, மெய்ஞானத்தை அடைஞ்சிட்டே… அங்கேயே இரு. நான் வர்ரேன். சில டாக்குமெண்ட்ஸ் எடுக்கணும்”

அவன் பாமாவை கூப்பிடலாமா என்று யோசித்தான்., வேண்டாம் என்று தவிர்த்தான். அங்கே கூடிநின்றவர்களை வெறுமே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒரு நைந்துபோன கிழவி அருகே வந்து ஓசையின்றி அழுதபடி “பெத்த புள்ளைசார், சாரத்திலே இருந்து விழுந்துட்டான். மண்டை உடைஞ்சு உள்ள கெடக்கான் சார்” என்றாள். “துணைக்கு ஆருமில்லை. ஒருவாய் சோறு வாங்கித்தர ஆருமில்லை…”

“போம்மா”என்று அவன் கசப்புடன் கையை காட்டினான். அவள் வலிகொண்டவள் போல உதட்டை கடித்தபின் விலகிச் சென்றாள்.

அவளுடைய அந்த முகம் அவனை தொந்தரவு செய்தது. “இந்தாம்மா”என்று பின்னால் அழைத்தான். அவள் அருகே வந்தாள். பையிலிருந்து இரண்டாயிரம் ரூபாயை எடுத்து “இந்தா வச்சுக்கோ… ஏதாவது சாப்பிடு”என்றான்.  “வார்டுக்கு கொண்டுவந்திட்டாங்கன்னா சாப்பாடு குடுப்பாங்க. அது உனக்கும் சேத்தே போதுமா இருக்கும்”

அவள் ரூபாயை கண்ணில் ஒற்றிக்கொண்டாள். “நல்லா இருப்பீங்க தம்பி”என்றாள்.

பீட்டர் வந்த கார் வந்து வளைந்து நின்றது. அவன் அருகே சென்றான்.

“சரிதான், இங்கேயே ஒருமாதிரி ரிலாக்ஸ்டா ஆயிட்டே போல… “என்று பீட்டர் சிரித்தான். “முகத்திலே எந்த டென்ஷனும் இல்லியே”

“ஆமா, ரிலாக்ஸ்டாதான் ஃபீல் பண்றேன்…”

பீட்டர் ”நீ இங்கியே இரு… நான் ஒரு அரைமணிநேரத்திலே வந்திடறேன்”என்றான். ஆஸ்பத்திரிக்குள் ஏறி மறைந்தான்.

செல்வா செல்போனில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான். பாமாவின் அழைப்பு வந்தது.

“சொல்லு”என்றாள்.

“எங்க இருக்கீங்க?”

”ஆஸ்பத்திரியிலேதான்”

”போலீஸ் ஸ்டேஷனுக்குத்தானே போனீங்க?”

“ஆமா, அங்க முடிஞ்சுது. சரி இவங்களை பாக்கலாம்னு வந்தேன்”

“ஒரு அஞ்சோ பத்தோ குடுத்திட்டு வந்திருங்க…அதுவேற நம்ம தலையிலே விடிஞ்சிரப்போகுது”

“சரி” எத்தனை சரியாகச் சொல்கிறாள் என்ற வியப்பு அவனில் எழுந்தது.

”என்ன சரி? இளிச்சவாய்னா நீங்கதான். இப்டி ரோட்லே கிடக்கிற சனியனை யாராவது தூக்கி தலைமேலே வைச்சுகிட்டு அலைவாங்களா?

”உண்மைதான்”

”நக்கல் பண்றீங்க, தெரியுது. ஆனா நல்லா யோசிச்சுப்பாருங்க. அந்தவழியா எத்தனை வண்டி போயிருக்கும். எவனாவது நிப்பாட்டினானா? நீங்க ஒருத்தர் மட்டும்தானே நிப்பாட்டினீங்க?”

“உண்மைதான்…. போருமா?”

“என்னமோ பண்ணுங்க… மதியம் சாப்பாட்டுக்கு வருவீங்களா”

“இல்லை… சாயங்காலம் ஆயிடும்”

அவள் போனை வைத்தாள். அவன் அவள் முகத்தை எண்ணி புன்னகைத்தபடி நின்றிருந்தான்.

பீட்டர் திரும்பி வந்தான். “பாதிப் பிரச்சினை சால்வ் ஆயாச்சு… மிச்சத்தை பாத்துக்கிடலாம்” என்றான்.

“நீ அவங்க கிட்ட பேசறியா?”என்றான் செல்வா.

”இவங்க கிட்டேயா? இவங்க கிட்ட பேசுறதிலே அர்த்தமே இல்லை. வக்கீல்கிட்டே பேசுங்கன்னுதான் சொல்லிட்டிருப்பாங்க. ஏன்னா வக்கீல் பத்துலட்சம் இருபது லட்சம்னு ஆசைகாட்டியிருப்பான். இவங்களோட அழுகையெல்லாம் சும்மா. உள்ள இருக்கிறது பணத்தாசைதான். லட்சக்கணக்கான ரூபா சும்மா கிடைக்குதுன்னா ஆசை அப்டியே வளந்திருது… இதுக்குள்ள பல கற்பனைகள் ஓடியிருக்கும்”

”ஆமா, கடனை அடைக்கிறது, வீடு கட்டுறதுன்னு சொன்னாங்க”

“பாத்தியா? வக்கீல் வேலையிலே எவ்ளவு பாத்திருக்கோம்”என்றான் பீட்டர் “இப்ப ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு, பண்ணையார் வழி. கொஞ்சம் காசுவச்சிருக்கிற அடாவடி ஆளு பண்றது. அதுக்கு நம்ம கிட்ட ஆளிருக்கு. வந்து இந்த குடும்பத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு போவான்… சாட்சி கையெழுத்துன்னு போனே சிதைச்சிருவோம்னு சொன்னா பயந்திருவாங்க”

“அந்த வழி வேண்டாம்”

“அப்ப நேரா அந்த வக்கீல்கிட்டே பேசலாம்… ரெண்டு மூணு லட்சத்திலேயே முடிச்சிடலாம்”

“ரெண்டு லட்சத்திலேயா?”

“இந்த கேஸை விரிவா முதல்ல சொல்லிடறேன். போலீஸ் ஸ்டேஷனிலே அவங்க பயம்காட்டின மாதிரி இதெல்லாம் பெரிய கேஸே இல்லை. அதிகபட்சம் ஐயாயிரம் ரூபாய் ஃபைன் வரும். ஆனா அப்றம் இன்சூரன்ஸ் எகிறிரும். அது வேற சிக்கல். அரெஸ்ட் ஆகி அன்னிக்கேகூட ஜாமீன்லே வந்திடலாம். ஆனாலும் அரெஸ்ட்னா சிக்கல்தான். இது கிரிமினல் வழக்கு. நஷ்டஈடு கேக்கிறது சிவில் வழக்கு. அது வேற. அதிலே பணம்குடுக்கவேண்டியது நீ இல்லை, இன்சூரன்ஸ்காரங்கதான். மிஞ்சிப்போனா ஒரு ரெண்டுலெட்சம் கிடைக்கும். ஆனால் இன்சூரன்ஸ்காரன் எமனுக்கு எமன். பத்துபைசா குடுக்கமாட்டான்.”

நான் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்

“இப்ப அவங்க உன்மேலே கம்ப்ளெயிண்ட் குடுக்க இருக்கிற ஒரே ஆதாரம் என்ன? இந்த மாதிரி ஒரு கேஸ் அட்மிட் ஆனா ஒரு ரெஜிஸ்டர் மெயிண்டெயின் பண்ணுவாங்க. உடனே போலீஸுக்கு செய்தி குடுப்பாங்க. ஆனா வழக்கமா அதையெல்லாம் மெதுவாத்தான் செய்வாங்க. ரெஜிஸ்டர்லே ஒண்ணும் ரெக்கார்ட் பண்ணலை. எழுதி வைச்சிருக்காங்க. உனக்கு எதிரா ஏதாவது சாட்சி இருக்குன்னா இங்க நீ குடுத்த நம்பரும் டிரைவிங் லைசென்ஸும்தானே? அதையெல்லாம் திருப்பி வாங்கியாச்சு… இதோ இங்க இருக்கு” என்று பீட்டர் காட்டினான். “டாக்டர் கிட்டே விஷயத்தைச் சொன்னேன். அவரையும் கோர்ட்டிலே நிப்பாட்டிருவேன்னு சொன்னப்ப தலையிலே அடிச்சுகிட்டார்”

“அப்ப யாரு இங்க கொண்டுவந்து அட்மிட் பண்ணினது?”

“அது யாரோ தெரியாத ஆளு… அட்டெண்டர் மட்டும்தான் ஆளைப் பாத்திருக்கார். அவராலே அடையாளம் காட்டமுடியும். அவ்ளவுதான் ஆஸ்பத்திரி டேட்டா….” என்றான் பீட்டர் “இனிமே அவங்க கிட்ட நான் பேசுறேன். முதல்ல என்னை மாதிரி வக்கீல் வந்து பேச ஆரம்பிச்சாலே மடிஞ்சிருவாங்க… சல்லி வக்கீலுங்க அவங்கள்லாம்”

“ரெண்டு லட்சத்திலே நிக்குமா?”

“ரெண்டு லட்சமே நீ பயப்படுறதனாலேதான்… இப்பல்லாம் இது ஒரு வழக்கே கெடையாது. சும்மா அதிரடியா மெரட்டியிருக்காங்க. சாதாரணமா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு வக்கீல் கூட இல்லாம யாரும் போக மாட்டாங்க. நீ சும்மா போனதனாலே புடிச்சுக்கிட்டாங்க”

“அப்ப இவங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று செல்வா கேட்டான்.

”ஒரு லட்சம்… இல்லேன்னா அம்பதாயிரம்”

“அந்த ரெண்டு லெட்சத்தை நாமே இவங்களுக்கு குடுத்திரலாமே”

“அது தப்பான வழி. இவங்களுக்கு இருக்கிற பேராசையிலே அதுக்கு சம்மதிக்க மாட்டாங்க. நாம என்ன சொன்னாலும் ஏமாத்தப் பாக்கிறோம்னுதான் நினைப்பாங்க. அவங்க நம்மளை நம்பாம இருக்கிறதுக்கு அவங்களுக்கான நியாயங்களும் அனுபவங்களும் இருக்கலாம்… இப்ப அந்த வக்கீலுங்களை மட்டும்தான் நம்புவாங்க. அதோட அந்த சல்லி வக்கீலுங்க இவங்களை மறுபடி தூண்டிவிட்டு ஏதாவது பிரச்சினை பண்ண வாய்ப்பிருக்கு. அவங்களுக்கான வாய்க்கரிசியை போட்டு முடிக்கிறதுதான் சரி”

”ஓக்கே”என்றான் செல்வா

“இனிமே உன்னை நெருங்க முடியாது. அவங்க உன் காரை இதிலே சம்பந்தப்படுத்தணும்னா எவிடென்ஸ் வேணும். ஆக்ஸிடெண்ட் நடந்த இடத்திலே இருக்கிற டயர்தடம் உட்பட பல விஷயங்கள் வேணும்… பொதுவா போலீஸ் அப்டியெல்லாம் ஆராய்ச்சிகள் பண்ணமாட்டாங்க. இனந்தெரியாத வாகனம் இடிச்சுட்டுப் போச்சு, அவ்ளவுதான். அதுவும் ஆளு சாகலைன்னு தெரிஞ்சா கேசையே தொட்டுப்பாக்கமாட்டாங்க”

“தாங்ஸ்டா’

”முறையா ஃபீஸ் தரணும் மாப்ள”

“சொல்லு, தந்திடறேன்…”

“பணமா இல்லை, திரவ வடிவமா” என்று பீட்டர் சிரித்தான்

காரில் ஏறி அமர்ந்தபின் கதவைச் சாத்துவதற்கு முன் “இனிமே காரிலே போறப்ப எவன் சாகக்கிடந்தாலும் கண்டுக்கமாட்டியே”என்றான் பீட்டர்.

“இல்லடா, அதைப்பத்தித்தான் நினைச்சுக்கிட்டே இருந்தேன். அவங்க கிட்டே பேசிட்டு காரிடார் வழியா வர்ரப்ப நான் சிரிச்சிட்டே இருந்தேன். லைஃப்ல அவ்ளவு சந்தோஷமா இருந்ததே இல்லை” என்றான் செல்வா “அந்த சந்தோஷம் எனக்கு வேணும்”

“அது ஏன் தெரியுமா? சட்டுன்னு நீ ரொம்ப நல்லவனா செயிண்ட் மாதிரி உன்னை ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டே”

“மே பி… தெரியலை. ஆனா அப்டியே நிறைவா, சந்தோஷமா, ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றேன்”

”நாசமா போ”என்றான் பீட்டர் “காந்திகளாலேதான் நாடே நாசமா போகுது”

“டேய் , ஒரு நிமிஷம், இந்த பணம் குடுக்கிற தகவல் பாமாவுக்கு தெரியாது. நீயும் வாயை விட்டிராதே”

“அவதான் நீ செயிண்ட் இல்லேன்னு தெரிஞ்ச ஒரே ஆத்மா, இல்ல?”என்றபடி பீட்டர் காரை சாத்தி கிளம்பிச் சென்றான்

செல்வா தன் பைக்கை நோக்கி சென்றபோது மூச்சுக்குள் சீட்டியடித்துக் கொண்டிருந்தான்.

 

20. நகை [சிறுகதை]

19.எரிசிதை [சிறுகதை]

18 இருளில் [சிறுகதை]

17 இரு நோயாளிகள் [சிறுகதை]

16 மலைபூத்தபோது [சிறுகதை]

15 கேளி [சிறுகதை]

14 விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைஓஷோ- உரை- கடிதம்
அடுத்த கட்டுரைகொதி, குமிழிகள்- கடிதங்கள்