கேளி [சிறுகதை]

செண்டைமேளம் கேட்டு பாய்ந்து எழுந்து அமர்ந்தான். பிந்திவிட்டோம் என்ற பரபரப்பு அவன் உடலில் அதிர்ந்தது. ஆனால் செண்டைமேளம் அவனுக்குள்ளேதான் கேட்டுக்கொண்டிருந்தது.

ஊரே செவியை குத்தும் அமைதியில் மூழ்கியிருந்தது. ஒரு சத்தமில்லை. காலையிலும் மாலையிலும் கேட்கும் பறவையோசைகள்கூட இல்லை. ஊரில் அத்தனைபேரும் தூங்கிக்கொண்டிருக்கவேண்டும். கோழிகள், மாடுகள், நாய்கள் எல்லாமே தூங்கிக்கொண்டிருக்கும் போல.

அந்த அமைதி ஒருவகையான காலமின்மையை உணரச்செய்தது. ஓசைகள் வழியாக உலகம் காலத்தில் ஒழுகிச்செல்கிறது, ஓசையில்லை என்றால் அது எங்கோ தரைதட்டி நின்றுவிட்டது. அவன் படுத்திருந்தபடியே பார்த்தான். தென்னை மரங்களின் மண்டைகளில் ஓலைநுனிகள் அசைவில்லாமல் நின்றன. பின்னணியாக முகிலற்ற நீலவானம் தேங்கி நின்றிருந்தது.

அவன் படுத்திருந்தது பெரிய கல்திண்ணை. நெடுங்காலமாக புழக்கத்திலிருந்தமையால் தேய்ந்து கரிய நீர்ப்பரப்புபோல பளபளவென்றிருந்தது. அவன் உடலை மிகவும் குளிரச்செய்திருந்தது. ஆலமரக்கிளைகள்போல தாழ்ந்து வந்து திண்ணையை மூடியிருந்த ஓட்டுக்கூரைக்கும் திண்ணைவிளிம்புக்கும் நடுவே ஒரு ஆள் நின்றால் தலைமுட்டும் உயரம்தான். முற்றத்தில் வெயில் மஞ்சள்நிறமாக காய்ந்துகொண்டிருந்தது. திண்ணையில் அரையிருள் மெல்லிய குளிருடன் தேங்கியிருந்தது.

இடுப்பில் நழுவிய சாயவேட்டியை இழுத்து நன்றாக சுற்றிக்கொண்டு அவன் திண்ணையிலிருந்து இறங்கி முற்றத்தில் நின்றான். ஒளி கண்களைக் கூசவைத்து கண்ணீர் வழிந்தது. கைகளால் கண்களை மூடி, கண்ணீரைத்துடைத்தபடி தரையை பார்த்தான். கூழாங்கற்களின் அருகிலெல்லாம் கரிய மையை கையால் தீற்றியதுபோல அவற்றின் நிழல்கள் நீண்டிருந்தன. தென்னைமரங்களின் நிழல்கள் தென்கிழக்குநோக்கி சாய்ந்திருந்தன.

அவன் கைகளை நீட்டி சோம்பல்முறித்தான். சோம்பல்முறிக்கையில்தான் உடலில் அத்தனை இனிமை இருப்பதை உணரமுடிகிறது. உடலினுள் ஆழங்களில் ஆங்காங்கே சிறுசிறு இனிப்புகள் ஒளித்துவைக்கப்பட்டிருப்பதுபோல தோன்றுகிறது. அவை ஒவ்வொன்றும் கைபட்டு விழுந்துருண்டு சிந்திக் கரைந்து ரத்தத்தில் பரவுவதுபோல. மாறி மாறி சோம்பல் முறித்துவிட்டு அவன் திண்ணையில் கழற்றிவீசப்பட்டிருந்த தன் சட்டையை எடுத்து அணிந்துகொண்டு தெருவில் நடந்தான்.

ஊரில் எவரையுமே காணமுடியவில்லை. ஒரே ஒருநாய் மட்டும் சுருண்ட வாலுடன் ஒரு வீட்டின் சந்திலிருந்து வந்து நாவால் மோவாயை நக்கியபின் குறுக்காகக் கடந்துசென்றது. எங்கோ எவரோ பேசும் மழுங்கல் ஒலி. பாத்திரங்களின் ஒலி. மதியவெயிலில் காற்று விரிந்து விட்டது. மென்மையானதாக ஆகிவிட்டது. அந்த இளவெம்மைகொண்ட காற்று எல்லா ஓசைகளையும் கனமாக அழுத்தி மூடி முணுமுணுப்பாக ஒலிக்கச் செய்தது.

ஆனால் அவனுக்குள் இருந்து ஓசை எழுந்து அந்த வெளியமைதியை ஆவேசமாக முட்டிக்கொண்டிருந்தது. செண்டையும் இலைத்தாளமும் கொம்பும் கலந்த கேளிகொட்டு. ‘இதோ கதகளி தொடங்கவிருக்கிறது… இதோ ரங்கதீபம் கொளுத்தப்பட்டுவிட்டது. ரங்க மங்கலங்கள் ஒருங்கிவிட்டன. இதோ பொற்பட்டுத் திரைச்சீலை எழுந்துவிட்டது. ரங்ககேளி விலாசம் விபோ! தகிடத் தகிடத் தகிட தத! தத் தரிகிட தரிகிட தரிகிடதா!’

விழாநாட்களில் ஒவ்வொரு மதியமும் இப்படித்தான் இருக்கும். எல்லா திண்ணைகளிலும் தூங்குவதற்கு ஆளிருக்கும். பெரும்பாலானவர்கள் காலையில் ஆட்டம் முடிந்ததுமே வந்து ஆற்றில் குளித்து விடுவார்கள். கண்கள் சிவக்க ஈர ஆடையுடன் சென்று கோயிலில் கும்பிட்டுவிட்டு ஊட்டுபுரைக்குப் போய் சாப்பிடுவார்கள். காலையிலேயே ஊட்டுபுரையில் கட்டிச்சோறும் தேங்காய் சம்மந்தியும் சர்க்கரைப் பொங்கலும் வாழைப்பழமும் கிடைக்கும். அப்படியே நேராக வந்து படுத்தால் அதன்பின் மதியம் தாண்டித்தான் விழித்துக்கொள்வது.

அவன் எப்போதும் சற்று முன்னரே விழித்துக்கொள்வான். ஒவ்வொரு முறையும் அவனுக்குள் ஒலிக்கும் செண்டையின் ஓசை கேட்டே எழுவான். அவன் கனவுக்குள் கதகளி தொடங்கிவிட்டிருக்கும். திரைநோட்டம் நடந்துகொண்டிருக்கும். திரைக்கு அப்பால் கதகளி நடிகர் ஆடிக்கொண்டிருப்பார். நட்டாலம் திரிலோசனன் நாயர். தோடயம் தொடங்குகிறது.நாட்டை ராகம், செம்படை தாளம்.

ஹரிஹரவிதினுத அமரபூஜித ஹே வாமனரூப

ஏகந்தந்த சதுராத்ஃபுதபல லம்போதர ரே!

அவன் எழுந்தமர்ந்து சற்றுநேரம் கழித்தே சூழ்ந்திருக்கும் அமைதி வந்து அவன்மேல் அறையும். அக்கணத்தில் எத்தனைதான் உள்ளம் விழிப்பு கொண்டிருந்தாலும் திருவிழா முடிந்துவிட்டதோ, அது வெறும் மாயை மட்டும்தானோ என்ற பதற்றம் வந்து நெஞ்சை அடைக்கும். உடனே கணக்கிட்டு அது எத்தனையாவது நாள் திருவிழா என்று உணர்ந்ததும் உள்ளம் இனிப்படையத் தொடங்கும்.

ஆனால் இன்று மெய்யாகவே திருவிழா முடிந்துவிட்டிருக்கிறது. நேற்றோடு பத்தாம்நாள் திருவிழா நிறைவு. நண்பர்கள் பலர் இரவே கிளம்பிவிட்டார்கள். அவனால் இரவில் நடந்த கிராதவிருத்தம் கதகளியை விட்டுப்போக முடியவில்லை. அது அலங்காரமான கதகளி அல்ல. அன்று கதகளி தவிர வேறு கலைநிகழ்ச்சிகளும் இல்லை. ஆனாலும் அவனால் கிளம்ப முடியவில்லை. கிளம்பியபின் அங்கே மேலும் தித்திப்பாக ஏதோ நடக்கக்கூடும். முக்கியமான எதையாவது அவன் தவறவிட்டுவிடக்கூடும். அதல்ல, உண்மையில் அவன் திருவிழாவை முடித்துக்கொள்ள விரும்பவில்லை. அவனுக்கு திருவிழா திகட்டவில்லை.

கோயிலின் தெற்குவாசலில் இருந்து நீண்டு நேராக ஆற்றுப்படித்துறை வரை செல்லும் தெரு அது. இருபக்கமும் சுதையாலான சுவர்கொண்ட பழைமையான வீடுகள். அந்தக்கால வீடுகள் பங்களா, தாய்வீடு, அறப்புரை என்னும் மூன்று தனிக்கட்டிடங்களால் ஆனவை. பங்களாக்களை மங்களாவு என்கிறார்கள். அவை தெருவுக்குச் சமானமாக வெண்ணிறமான சுதைச்சுவராக எழுந்து நின்றிருப்பவை. வரிசையாக ஜன்னல்கள் மட்டும் இருக்கும். தேர்த்திருவிழாவின்போது பெண்கள் உள்ளே இருந்துகொண்டு தேர்பார்க்கமுடியும்.

நீளமான மங்களாக்கட்டின் இரண்டு எல்லையிலும் இரண்டு வாசல்கள். ஒருவாசல் பெரியது. மேலே சுதையாலான அலங்காரத் தோரணவளையும் நடுவே கஜலட்சுமியோ தானியலட்சுமியோ பொறிக்கப்பட்டது. பெரிய மரக்கதவுகள் அனைத்திலும் நீலவண்ணம் பூசப்பட்டிருந்தது. அவைதான் மையவாசல்கள். மறுபக்க வாசல்கள் சிறியவை. வேலைக்காரர்கள் நுழைவதற்கானவை.

மையவாசலில் இருந்து செல்லும் பாதை உள்ளே செடிகளும் மரங்களும் அடர்ந்த தோட்டங்களுக்கு நடுவே நின்றிருக்கும் ஓங்கிய கூரைகொண்ட தாய்வீட்டை சென்றடையும். இன்னொரு பாதை தாய்வீட்டை சுற்றிக்கொண்டு அதற்குப் பின்னாலிருக்கும் அறப்புரை எனப்படும் இணைப்புக்கட்டிடத்தை சென்றடையும். அங்குதான் வேலைக்காரர்களின் உலகம். பெண்கள் புழங்குமிடம்.

அவன் படுத்திருந்தது கோயிலுக்குச் சொந்தமான களிப்புரை. நூறாண்டுகளுக்கு முன்பு மூலம் திருநாள் மகாராஜா காலத்தில் கட்டப்பட்டது. ஓடுபோட்ட சரிந்த கூரை, கருங்கல்லில் செதுக்கப்பட்ட தூண்கள், கருங்கல்லால் ஆன படிகள், கருங்கல் தரை. உள்ளே அங்கணமுற்றத்தைச் சுற்றி பெரிய வராந்தா உண்டு. அதில்தான் கதகளி நடிகர்கள் பத்துநாட்கள் தங்கி, ஆடி, தூங்கி, சாப்பிட்டு திரும்பிச்செல்வார்கள். அடுத்த திருவிழா வரை அது மூடியே கிடக்கும்.

ஆனால் கல்யாண மகாதேவருக்கு ஆண்டில் நான்கு திருவிழாக்கள் உண்டு. சரியாக மூன்று மாதத்திற்கு ஒன்று. வசந்தம், சரத்காலம், ஹேமந்தம், சிசிரம் என்னும் நான்கு ருதுக்களுக்கு நான்குவிழாக்கள். வர்ஷருதுவுக்கும் கிரீஷ்மத்திற்கும் திருவிழாக்கள் இல்லை. மழைக்காலத்தில் இந்த ஊரே வேறொரு தோற்றம் கொள்ளும். கூரைகள் சொட்டிக்கொண்டே இருக்கும். ஊரே நனைந்து கருமைகொண்டு ஊறிப்போய் மண்ணோடு அமிழ்ந்திருக்கும். தரையில் இருக்கும் ஈரத்திலிருந்து பளபளத்து எழும் ஒளி தெருக்களில் நிறைந்திருக்கும்.

சிறிய ஊருக்கு பெரிய கோயில். ஒரு காலத்தில் கோயிலை ஒட்டி  ஒரு பெரிய வாழ்க்கை இருந்தது. கோயிலுக்கு ஏராளமான நிலங்கள். எல்லாமே குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்தன. குத்தகைகளை நிர்வாகம் செய்த காராய்மைக்கார வேளாளர்களும் நாயர்களும் வாழும் தெருக்கள் இவை. வடக்குத் தெருவில் சில செட்டியார் இல்லங்கள்.

கிழக்கு வாயிலை ஒட்டி மட்டும் வலப்பக்கம் பழைய அரண்மனையும், மார்த்தாண்டமடத்தின் கட்டிடமும். இடப்பக்கம் கோயிலில் பூஜைசெய்யும் நம்பூதிரியின் இல்லம். அதை நம்பி இல்லம் என்பார்கள். அதையொட்டி பிற பிராமணர்களின் இல்லங்கள். பிராமண இல்லங்களை இங்கே மடங்கள் என்பார்கள். காவிப்பட்டை அடித்திருக்கும். வள்ளியாறு கோயிலை வளைத்துச்செல்கிறது. ஆகவே கிழக்கு வடக்கு தெற்கு  மூன்று வாசல்களிலிருந்தும் செல்லும் தெருக்கள் ஆற்றங்கரையை சென்றடையும். மேற்குவாசலுக்குப் பின்புறம் மட்டும் தெருமுடியும் இடத்திலிருந்து தென்னந்தோப்புக்கள் தொடங்குகின்றன.

இப்போது கோயில் நிலங்கள் போய்விட்டன. இந்தப் பெரிய வீடுகளில் வசித்தவர்கள் பெரும்பாலும் திருவனந்தபுரம், நாகர்கோயில் என்று குடிபெயர்ந்துவிட்டார்கள். பாதிவீடுகள் பெரும்பாலான நாட்களில் காலியாகவே கிடக்கின்றன. திருவிழாக்களுக்கு மட்டும் சிலர் வருகிறர்கள். சிலவீடுகளில் வயதானவர்கள் மட்டும் குடியிருக்கிறார்கள். சிலவீடுகளில் உறவினர்கள் தங்கியிருக்கிறார்கள்.

அவன் தெருவினூடாக சோம்பலாக நடந்தான். திருவிழா முடிந்துவிட்டது என்பது அந்த ஊர்க்காரர்களுக்கு ஒருவேளை ஆறுதலை அளிக்கலாம். அவர்கள் நேற்று ஆறாட்டு முடிந்ததுமே சலிப்பும் நிறைவும் அடைந்திருக்கலாம். திருவிழா என்றால் அவர்களுக்கு பதினெட்டு நாட்களுக்கு முன்னர் கொடியும் ஆபரணமும் கொண்டு வருவதுடன் தொடங்கிவிடுகிறது. அதன்பின் ஒவ்வொருநாளும் பரபரப்பாக ஏதோ நடக்கிறது. விருந்தினர்கள் வருவதாக கடிதங்கள் வருகின்றன. விருந்தினர் வருகிறார்கள். விருந்தினர் வரவில்லை என தந்தி அடிக்கிறார்கள்.

அத்தனைபேரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இன்று மாலை எழுந்தாகவேண்டும் என்றில்லை. திருவிழா நாட்களில் மாலை நான்கு மணிக்கெல்லாம் ஓசைகள் வெடித்தெழ ஆரம்பிக்கும். ஐந்துமணிக்கு ஊரே கொடித்துணிபோல பதறிக்கொண்டிருக்கும். தெருவில் சங்கிலி ஓசையிட யானை குளித்துவிட்டுச் செல்லும். நெய்க்குடங்களை கொண்டுசெல்பவர்கள் ‘மாறிக்கோ !மாறிக்கோ!’ என்று கூச்சலிடுவார்கள். ஸ்பீக்கரில் ஜேசுதாசின் குரல் முழங்க ஆரம்பித்துவிடும். மணியோசைகள், சங்கோசைகள், முழவொசைகள்…

இன்றைக்கு அந்தி இருள்வதுவரை இப்படித்தான் இருக்கும். அந்தி மங்கியபின்புதான் வாட்ச்மேன் கணேசன் தம்பி வந்து கோயில் நடைதிறப்பார். கிழக்குநடை மட்டும்தான் திறப்பார்கள். போற்றி மேலும் பிந்தித்தான் கோயிலுக்குள் இருக்கும் குளத்தில் குளிக்க வருவார். தீபாராதனை முடிந்ததும் அரைமணிநேரத்தில் நைவேத்யம். உடனே அர்த்த சாம பூஜை முடிந்து நடைசாற்றி விடுவார்கள். அத்தனைபேருக்கும் களைப்பு இருக்கும். அனைவருமே அரைத்தூக்கத்தில் நடப்பதுபோலத்தான் தெரிவார்கள். கண்களுக்குக் கீழே வளையங்கள். சோர்ந்த உரையாடல்கள்.

அவன் ஆற்றங்கரையில் படிக்கட்டின்மேல் அமர்ந்தான். கல்லால் ஆன கரைச்சுவர் மழையிலும் வெயிலிலும் மீண்டும் பாறையாக மாறிவிட்டிருந்தது. படிக்கட்டுகள் மதியவெயிலில் காய்ந்து கிடந்தன. அவற்றில் துணி துவைப்பவர்கள் ஒட்டவைத்த சிவப்பும் வெளுப்புமான சோப்பு மிச்சங்கள் காய்ந்திருந்தன. ஆறு நிறைந்தோடியது. தூய்மையான நீலநீர்ப்பரப்பின்மேல் மீன்கள் எழுப்பிய அலைவட்டங்கள் மெல்ல விரிந்துகொண்டிருந்தன. அக்கரையில் வரிசையாக நின்றிருந்த புன்னைமரங்கள் தழைந்து நீர் அருந்தும் விலங்குகள் போல நீர்ப்பரப்பின்மேலேயே கிளைபரப்பியிருந்தன.

ஆற்றில் அந்நேரம் குளிக்க எவருமில்லை. ஆற்றை ஒட்டிய சாலையில் ஒருவன் மிகமெல்ல சைக்கிளில் உந்தி உந்தி மிதித்தபடி சென்றான். ஒழுகும் ஆற்றை பார்த்துக்கொண்டிருப்பது இதமாக இருந்தது. ஊர் அசைவற்று நிற்க ஆறுமட்டும் ஒழுகிக்கொண்டிருப்பது. அது நிற்பதே இல்லை. ஆண்டுக்கொருமுறை பெருகி எழுந்து ஊரை நிறைக்கிறது. பத்துப்பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயிலுக்குள்ளேயே வெள்ளம் புகுந்துவிடும். கோயிலில் சேறுநிறையும். நீர் ஒழுகிய தடம் கற்சுவர்களில் கோடாக பதியும்.

கோடையில் நீர் குறைந்தாலும் ஒழுக்கு நிற்பதில்லை. மணல் பரப்பில் ஏழெட்டு நீலச்சுழிப்புள்ள ஓட்டங்களாக நீர் இருக்கும். வெள்ளம் பெருக்கெடுக்கையில் இந்த மீன்கள் எங்கே செல்கின்றன? நீர் குறையும்போது எப்படி தாக்குப்பிடிக்கின்றன?

அவன் தன்னுள் செண்டை ஒலித்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தான். உள்ளிருந்து எழுந்த ஓசையால் செண்டையின் தோல்பரப்பு போல அவன் உடலெங்கும் சருமம் அதிர்ந்துகொண்டிருந்தது. கைவிரல்நுனிகளில் அந்தத் தினவு இருந்தது. கண்களை மூடியபோது காதுமடல்களிலும் மூக்கிலும்கூட அந்த செண்டை மேளத்தின் கூச்சத்தை உணரமுடிந்தது. நாக்கு நுனியில் இரும்பைத் தொட்டது போல அதன் இனிமை எஞ்சியிருந்தது.

அவன் எழுந்து சாலையோரமாக நடந்தான். அது ஆற்றுப்பாலத்தை சென்றடையும். ஆற்றுப்பாலத்துக்கு அப்பால் நமச்சிவாயம் பிள்ளையின் டீக்கடை. எதிரில் கன்னங்கரிய உடலில் விபூதிப்பட்டைகளுடன் வயதான நாடார் ஒருவர் வந்தார். அவர் குளித்து முடித்து கோயிலுக்குச் செல்கிறார் என்று தெரிந்தது. கண்களைச் சுருக்கி அவனை பார்த்தார்.

அவருக்கு எந்த மாறுதலும் தெரிந்திருக்காது. நேற்றுபோலவே இன்றும், அதே நேரம் அதே செயல்கள். நேற்று அத்தனை மக்கள் கொந்தளிப்பின் நடுவே எவர் உடலிலும் முட்டிக்கொள்ளாமல் கோயிலுக்குப் போய்விட்டு வீட்டுக்குச் சென்று வழக்கமான நேரத்தில் படுத்திருப்பார். இன்றும் அதே நேரத்தில் கிளம்பிவிட்டார். நடைபூட்டியிருந்தால் அமைதியாக காத்திருப்பார். இன்று இல்லாமலான கூட்டமும் அவர்மேல் முட்டிக்கொள்வதில்லை.

நமச்சிவாயம் டீக்கடையில் இருவர் பஸ்ஸுக்காக காத்திருந்தனர். அவன் ஒரு டீ சொன்னான். அவர் டீ போட்டுக்கொண்டிருந்தபோது அங்கே கிடந்த கசங்கி கைந்துணி போல ஆகிவிட்டிருந்த தினத்தந்தியை எடுத்து புரட்டினான். செய்திகள் எதையும் வாசிக்கத் தோன்றவில்லை. எழுத்துக்கள் அவன் மனதில் சொற்களாக ஆகவில்லை.

டீ நன்றாக இருந்தது. தூக்கத்தில் இருந்து விழித்தெழும்போதுதான் டீ அத்தனை மணமும் சுவையும் அடைகிறது. சாயங்காலத்துப் புதுப்பாலின் மணம் அதற்கு இருந்தது. டீயை குடித்துவிட்டு பணத்தைக் கொடுத்து நடந்தபோது தன் உடலுக்குள் மெல்லிய மாற்றம் நிகழ்ந்திருப்பதாகத் தோன்றியது. டீயின் மணம் அவனுள் நினைவுகளாக இருந்த பலவற்றை எழுப்பிவிட்டது. தொலைவில் எங்கோ ஒலித்துக்கொண்டிருந்த இளையராஜா பாடலை அப்போதுதான் அவன் கேட்க ஆரம்பித்தான்.

ஆற்றுப்படிக்கட்டில் இருவர் குளிக்க வந்துவிட்டிருந்தார்கள். வழுக்கைத்தலையர் ஒருவர் தலையில் தேய்த்த எண்ணையை கையால் மீண்டும் மீண்டும் தேய்த்துக்கொண்டிருந்தார். இன்னொருவர் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு தோள்களைக் குறுக்கியபடி இடைவரை நீரில் இறங்கி நின்று நீரை அள்ளி வாய் கொப்பளித்தார்.

அவன் படிக்கட்டின் மேல் சென்று நின்றபோது நீரில் நின்றவர் பளேரென்று நீர்ப்பரப்பில் பாய்ந்து கைகளைச் சுழற்றி நீந்தி உள்ளே சென்று ஒழுக்கில் மிதந்து அகன்றார். எண்ணை தேய்த்தவர் கண்களைச் சுருக்கியபடி நீரில் இறங்கி இடைவரை ஆழத்தில் நின்று மூழ்கினார். அவன் அவர்களை பார்த்துக்கொண்டு நின்றான்.

பின்பக்கம் இன்னொருவர் வந்தார்.  “பிள்ளை ஏதாக்கும்?” என்று அவனிடம் கேட்டார்.

“நான் மஞ்சாலுமூடு… விழாபாக்க வந்தேன்”

“மஞ்சாலுமூட்டிலே ஆருக்க மகன்?”

“வாத்தியார் சங்கரப்பிள்ளை இருக்காருல்லா?”

“அவருக்க மகனா? மூத்தவரை கண்டிட்டுண்டு”

அவன் தன் இடுப்புவேட்டியை அவிழ்த்து கரையில் வைத்துவிட்டு சட்டையை அதன்மேல் வைத்தான். உள்ளே சிவப்புநிறமான கால்சட்டை போட்டிருந்தான். கையை நீட்டி நீரில் கெண்டைச்சாட்டமாக குதித்தான். மூழ்கி கொப்புளங்கள் நடுவே துழாவி மூச்சு இறுகியபோது எழுந்து நீரைப்பிளந்து வெளியே வந்தான். “உப்புக்கலந்தா கஞ்சி இனிக்கும் உன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும். அட என்னாட்டம் ராஜாத்தி எவ இருக்கா சொல்லு?”என்று தொலைவில் பாட்டு கேட்டது.

அவன் நீந்தி கரைக்கு வந்தான். இன்னொருவரும் கரையில் வந்து வேட்டியை அவிழ்த்துக்கொண்டிருந்தார். வயதானவர். மிகமெல்ல அதை அவர் செய்தார். வயதானவராக இருந்தார். அவருடைய கால்கள் நீருக்குள் அலையலையாக தெரிந்தன.

அவன் மீண்டும் நீரில் பாய்ந்து ஒழுக்கு நடுவே சென்று விசைக்கு எதிராக நீந்தினான். கைகளைச் சுழற்றி வீசி வீசி நீந்திக்கொண்டிருந்தான். மூச்சு இறுகி நுரையீரல் வெடிக்குமளவுக்கு நீந்திவிட்டுப்பார்த்தபோது நெடுந்தொலைவுக்கு வந்துவிட்டிருந்தான். அங்கிருந்த படித்துறை நோக்கிச் சென்று ஏறிக்கொண்டான். அங்கே சிலர் குளித்துக்கொண்டிருந்தார்கள்.

ஈரம் சொட்ட எழுந்து சாலைவழியாக தன் படித்துறை நோக்கி நடந்தான். “அடடட மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே” நின்று தன்னுள் அந்த வரி ஓடுவதை உணர்ந்தான். ஒரு கணம் கழித்து ஆழமான ஏமாற்றத்தை அடைந்தான். அவனுள் ஒலித்துக்கொண்டிருந்த செண்டையின் தாளம் முடிந்துவிட்டிருந்தது. அவன் அதை நினைவுகூர முயன்றான். வியப்பூட்டும்படி ஒரு வாய்த்தாரி கூட, ஒரு சிறு ஓசைகூட நினைவுக்கு வரவில்லை. மிகமிக அப்பால் எங்கோ இருந்தது அது.

அவன் தன் படித்துறைக்கு வந்து நீரில் இறங்கி மூழ்கி எழுந்தான். ஈரமான கால்சட்டையுடன் வேட்டியை எடுத்து தலைதுவட்டிக்கொண்டான்.

கீழே நின்றிருந்த எண்ணைதேய்த்த நபர்  ‘துவர்த்து இல்லியோ?’ என்றார்.

“கொண்டுவரல்லை” என்றான்.

ஈர கால்சட்டைக்குமேலேயே வேட்டியை கட்டிக்கொண்டான். சட்டையை எடுத்து பையிலிருந்த பணத்தை எடுத்துவிட்டு உதறி போட்டுக்கொண்டான். இரண்டாவது கையை நுழைக்கும்போது மிகமெல்லிய ஓசை ஒன்று கேட்டது. யாரோ முனகலாக பாடுகிறார்கள். முள்ளால் கீறுவதுபோல அவன் மனதை தீற்றிச்சென்றது. அது என்ன என்று உணர்வதற்குள்ளாகவே அவன் உள்ளம் இனிமைகொண்டது. உடல் குளிர்போல சற்று நடுங்கியது.

அவன் அந்த ஓசை என்ன என்று சுற்றும் பார்த்தான். யார் பாடுவது? நீரில் கைகளால் அளைந்தபடி அந்தக் கிழவர் அவரையறியாமல் முனகிக்கொண்டிருந்தார்.

“மஞ்சுதர குஞ்சதல கேளீ சதனே

இஹ விலஸ ரதிரஃபஸ ஹஸித வதனே

ப்ரவிஸ ராதே மாதவ சமீபம்!”

அவன் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. அவர் நீரில் இறங்கி மூழ்கினார். நீர்ப்பரப்பில் அலையலையாக அந்தப் பாடலை கண்ணால் பார்க்கமுடியும் என்று தோன்றியது. மோகனராகம், செம்பட தாளம்.

அவன் திரும்பி தெருவில் நடந்தபோது உடலுடன் ஒட்டிய கால்சட்டையின் ஈரத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான். மனதில் ”நவஃபவத ஸோகதள சயன சாரே, இஹவிலச குசகலச தரள ஹாரே” என்ற வரி ஓடியது.

எதிரில் பெண்களின் குழு ஒன்று வந்தது. தலையை ஆட்டி, கைகளை வெவ்வேறுவகையாக முத்திரை காட்டி அவர்கள் பேசிக்கொண்டு சென்றார்கள். குச கலச தரள ஹாரம். பொற்கலம்போன்ற முலைகளின்மேல் ததும்பும் முத்தாரம். செம்பட தாளம் விரியும் விழியசைவுகள். விரிந்து மலர்ந்து குவிந்து சுழிக்கும் விரல்கள்.

அவன் விழிகள் வியந்து விரிந்திருக்க பார்த்துக்கொண்டே சென்றான். எதிரே மக்கள் வந்துகொண்டிருந்தனர். தோளில் வாழைக்குலையுடன் ஒருவர். கன்றுப்பசுவை இழுத்துக்கொண்டு இன்னொருவர். கையில் குழந்தையுடன் ஒரு பெண். ஒரு சிறுவன் அவளுக்குப்பின்னால் ஓடினான். இருவர் மெல்ல பேசியபடி வந்தனர். ஒருவர் துண்டை உதறிக்கொண்டு வந்தார். அனைவரிலும் அந்தத் தாளம் திகழ்ந்தது.

பின்னர் சுவர்ப்பரப்புகள் எல்லாமே செண்டைத்தோல் ஆக மாறின. கேளிகொட்டு முழங்கத்தொடங்கியது.

14. விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைஆமென்பது, ஏழாம்கடல், கடிதங்கள்
அடுத்த கட்டுரைபிரயாகை