குமிழிகள் [சிறுகதை]

இளநீலப் பட்டாலான இரவுடைக்கு மாறிக்கொண்டிருக்கும்போதுதான் லிலி அதைச் சொன்னாள். அவன் அதை அப்போது கவனிக்கவில்லை. தன் மடிக்கணினியில் அந்நாளின் இறுதி மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் “சர்ஜரியை சிங்கப்பூரிலேயே வைச்சுக்கலாம்னு இருக்கேன். எல்லாத்துக்கும் வசதி”என்றாள்

ஒருகணம் கழித்தே சர்ஜரி என்ற சொல் அவன் மண்டையைத் தாக்கியது. ”சர்ஜரியா? என்ன சர்ஜரி?”

”சரியாப்போச்சு.நான் இதுவரை என்ன சொல்லிட்டிருந்தேன்? எதையுமே கேக்கிறதில்லை. சும்மா வாயாலே உம் கொட்டுறது. ஸிக்”

ஸிக் என்பது அவளுடைய வழக்கமான வார்த்தை. சாம் மடிக்கணினியை மூடினான். “சொல்லு, யாருக்கு சர்ஜரி?”

”எங்க அம்மாவுக்கு. பரலோகம் போயி அவங்களை கூட்டிட்டுவந்து செய்யணும்…போருமா?”

“ஸாரி, ஒரு முக்கியமான இமெயில்….ஸாரி அகெயின்…சொல்லு”

“நான் ஒரு காஸ்மெட்டிக் சர்ஜரி பண்ணலாம்னு இருக்கேன்”

”அதான் ரெண்டுவருஷம் முன்னாடி பண்ணிக்கிட்டியே”

”அது மூக்கு…” என்றாள் ‘அது பக்காவா செட் ஆச்சு. அப்சல்யூட்லி நோ ரெஸிஸ்டென்ஸ். அதே டாக்டர்கிட்டேதான் இதையும் பண்ணலாம்னு இருக்கேன். பட் ஹி இஸ் நௌ இன் சிங்கப்பூர்” என்றபடி அவள் கழிப்பறைக்குள் சென்றாள். அவன் கழிப்பறை கதவின்மேல் ஒட்டியிருந்த துப்பாக்கியால் சுடுவதுபோல கைகாட்டும் மர்லின் மன்றோவின் கருப்புவெள்ளை தீற்றலோவியத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.

லிலியின் மூக்கு புடைப்பாக அகன்று இருந்தது. அது அவளுக்கு ஒரு குழந்தைத்தனத்தை அளித்தது. அது அவன் திருச்சி மலைக்கோட்டையில் பெண்பார்க்கப்போன லலிதாவின் மூக்கு. அன்று அவனும் சாமிநாதன்தான். அவளை திருமணம் செய்துகொண்டபோது அவன் மிக விரும்பியது அந்த மூக்கைத்தான். அன்றெல்லாம் அந்த மூக்கைப்பிடித்து இழுப்பதும், மூக்கம்மா என்று செல்லமாக அழைப்பதும் வழக்கமாக இருந்தது. திரும்பத்திரும்ப அவள் சிணுங்கிக்கொண்டே இருந்தாள். “சும்மா மூக்கைப்புடிச்சு இழுக்காதீங்க. அதுவும் பப்ளிக் ப்ளேஸ்லே…” என்றாள் “மூக்கம்மான்னு கூப்பிடாதீங்க… அப்றம் அதுவே கேலிப்பெயரா ஆயிடப்போகுது. எனக்கு புடிக்கலை”

அவள் மூக்கை ஐரோப்பிய மூக்காக ஆக்கிக்கொள்வதாக முடிவுசெய்து அவனிடம் சொன்னபோது அவன் முதலில் நம்பவில்லை. சிரித்து கேலி செய்தான். அதன்பின்புதான் அவள் தீவிரமாக சொல்கிறாள், இறுதிமுடிவையே எடுத்துவிட்டாள் என்று தெரிந்தது. அவனால் நம்பமுடியவில்லை. முதலில் எழுந்தது ஒரு பெரும்கொந்தளிப்பு. அதை ஓர் அவமதிப்பாகவே எடுத்துக்கொண்டான்

“நீயே முடிவெடுத்தாச்சு, எங்கிட்ட ஜஸ்ட் சொல்றே, இல்ல?”

“ஏன் நான் முடிவெடுக்கக்கூடாது? இது என்னோட பாடி. யூ நோ”

“ஆமா, ஆனா நான் உன் கணவன். உன் உடம்பு மேலே எனக்கு எந்த உரிமையும் இல்லையா?”

“நான்சென்ஸ்… இன்னொருத்தர் உடம்புமேலே உரிமைகொண்டாட நீ யார்?”

அவனால் பதில்சொல்லமுடியவில்லை. அப்படி யோசித்ததே இல்லை

“சரி, என்னோட செக்ஸுவல் டேஸ்ட் இதிலே சம்பந்தப்பட்டிருக்கா இல்லியா? ஒரு லாஜிக்குக்காக கேக்கிறேன்”

“அப்சல்யூட்லி நோ. உன்னோட செக்க்ஷுவல்  டேஸ்டுக்காக நான் மாறமுடியுமா? திடீர்னு நீ என்னை மூக்கை வெட்டிக்கோன்னு சொன்னா நான் வெட்டணுமா? உன்னோட டேஸ்ட் மாறிட்டே இருக்கும். அதுக்கு ஏத்தாப்ல நான் மாறிட்டே இருக்க முடியுமா?”

”நீ வெட்டித்தர்க்கம் பண்றே” என்றான்

“நீதான் வெட்டித்தர்க்கம் பண்றே. ஒரு அடிப்படை விஷயத்தைக்கூட புரிஞ்சுகிடமாட்டேங்கிறே. ஸீ, என்னோட உடம்பு மாறிட்டே இருக்கு. முகம் மாறிட்டே இருக்கு. அதுக்கேத்தாப்ல உன்னோட டேஸ்டும் மாறித்தான் ஆகணும்… இல்லேன்னா உறவே இல்லை. இப்ப ஒரு ஆக்ஸிடெண்ட் ஆகி என் மூக்கு கொஞ்சம் மாறிட்டுதுன்னா என்ன பண்ணுவே?டிவோழ்ஸா?”

“அது வேற…”

“அப்ப அட்ஜஸ்ட் பண்ணிக்குவே இல்ல? அது மாதிரித்தான் இதுவும். நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுதான் ஆகணும். ஆக்சுவலா நீ பேசிட்டிருக்கிறது ஜஸ்ட் மேல் ஈகோ. ஆம்புளைத்திமிர்னு சொன்னா இன்னும் சரியா இருக்கும். நீ அதை விட்டுட்டு யோசிச்சா ஒரு பத்துநாள் கண்ணு பழகுறது வரைக்கும் இருக்கிற தடுமாற்றம்கிறதுக்கு அப்பாலே இதிலே ஒண்ணுமே இல்லை”

“இப்ப எதுக்கு இது?” என்று அவன் குரல்தணிந்து கேட்டான். அவள் சீண்டப்பட்டுவிட்டால் அவளிடம் பேசவே அவனால் இயலாது

”நான் இப்ப போர்டிலே இருக்கேன். நெறைய மீட்டிங் போகவேண்டியிருக்கு. அங்க எல்லாருமே மும்பைவாலாக்கள். பார்சிகள், மார்வாடிகள், வெள்ளைக்காரிகள். போன மாசம்  மாலினி தாருவாலா எங்கிட்ட ஐ லைக் யுவர் நோஸ், டிப்பிக்கல் டிராவிடன் நோஸ் அப்டீங்கிறா. பக்கத்திலே நின்னுட்டு அருணா கைத்தான் ‘ஸோ நோபடி கேன் கிவ் ஹெர் எ நோஸ்கட்’னு சொல்றா. ஸிக்”

அவள் மூக்கை வெட்டி ஒட்டி கூர்மையாக்கிக்கொண்டு வந்தாள். மூக்குத்துளைகள் செங்குத்தான கோடுகள் போல அமைந்திருந்தன. அவள் முகமே ஒடுங்கிவிட்டதுபோலிருந்தது.

”உங்கிட்ட இருந்த அந்த குழந்தைத்தனம் போய்ட்டுது”என்றான்

“அதை ஒழிச்சுக்கட்டணும்னுதான் செஞ்சுக்கிட்டேன்”

“அதிலே நீ படிச்ச காலேஜ், உன்னோட திருச்சி ஊரு எல்லாமே இருந்தது”

“ஃபக் ஆஃப்” என்றாள்

அவள் சொன்னதுபோல ஒருமாதத்தில் அந்த முகம் பழகிவிட்டது. பழையமுகம் நினைவிலிருந்து மறைந்தும் விட்டது. ஆனால் சாம் ஒன்றைக் கவனித்தான், அவன் மனதில் அவள் புதிய ஒருத்தியாக ஆகிவிட்டிருந்தாள். அவளையும் முன்பிருந்தவளையும் ஒருவர் என்றே எண்ணமுடியவில்லை. ஒரு அறுவைசிகிழ்ச்சை வழியாக இவளை அவளிடமிருந்து வெட்டி எடுத்து தனியாக நிறுத்தியதுபோல.

அது உடலுறவுகளின்போது இன்னும் கூர்மையாக தெரிந்தது. முற்றிலும் புதிய ஒரு பெண்ணுடன் இருக்கும் ஒவ்வாமை முதலில் இருந்தது. பின்னர் அதற்குப் பழகிக்கொண்டான். புதிய ஒரு பெண்ணை பழகிக்கொள்வதுபோல.

ஒரே ஒருமுறை அவன் அவள் மூக்கில் கையை வைக்கப்போனான். அவள் சட்டென்று அதை தன் கையால் தடுத்தாள். “நோ…”என்றாள்

அவன் பதறி கையை எடுத்துக்கொண்டான்

“அது ரொம்ப டெலிகேட்…குளிக்கிறப்பகூட ரொம்ப கேர்ஃபுல்லாத்தான் தொடணும்” என்றாள்

“ஸாரி’என்றாள்

“டேக் கேர்”

அவன் அதன்பின் அவள் மூக்கை தொடமுயன்றதே இல்லை. அவள் உடலில் அவன் தொடாத ஓர் உறுப்பு. ஒருமுறை அதை எண்ணி புன்னகைத்துக்கொண்டான். அந்த உறுப்புதான் ஒவ்வொருமுறையும் முன்னால் வருகிறது. சிரிக்கிறது, கோபித்துக்கொள்கிறது, அவளுடைய முகமும் அடையாளமும் ஆகித் தெரிகிறது.

கதவைத் திறந்து அவள் வெளியே வந்தாள். ஒரு மென்மையான டவலால் முகத்தை ஒற்றி ஒற்றி துடைத்தாள். காண்டாக்ட் லென்ஸ்களை கழற்றி டம்ளரில் போட்டாள். திரும்பியபோது அவள் சற்று மென்மையாக மாறிவிட்டதுபோலிருந்தது. சற்றே நீலம் தெரியும் காண்டாக்ட் லென்ஸ்களில் அவளிடம் குடியேறுவது வேறொருத்தி. ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருத்தி.

“என்ன காஸ்மெட்டிக் சர்ஜரி?”என்றான்

“சொல்லலையா?”என்றாள். தலைமயிரை சீவியபடி “சிங்கப்பூர்லே ஒரே வாரத்திலே பண்ணிடலாம். இப்ப தொடர்ச்சியா பூஜா ஹாலிடேஸ் வருது. எப்டியும் நாலுநாள் லீவு. ஒரு மூணுநாள் எக்ஸ்டெண்ட் பண்ணலாம். அதோட மூணுநாளுக்குப்பிறகு மெயில் பாக்கிறது, போன்பேசுறதெல்லாம் பண்ணலாம்…”

“என்ன சர்ஜரின்னு நீ சொல்லலை”

“அதான் சொன்னேனே, நீதான் கவனிக்கலை. செஸ்ட் டெவெலெப்மெண்ட்”

“புரியல்லை” என்றான். உண்மையாகவே புரியவில்லை

“ஸீ, இப்ப நாப்பதாயிடுச்சு… நாப்பதிலே பெண்களுக்கெல்லாம் செஸ்ட் சுருங்கி சின்னதாயிடுது. தொங்கியும் போயிடுது. அதுவும் நான்லாம் ராஜ் பிறந்ததுமே சர்ஜரி பண்ணிட்டேன். ஸோ அது ஒரு பிராப்ளமா இருந்தது. தீபா கன்னாதான் சொன்னா , இப்பல்லாம் இது ரொம்ப காமன் அப்டீன்னு. அவ நாலு வருஷம் முன்னாடியே லண்டன்போயி சர்ஜரி பண்ணிக்கிட்டாளாம்”

அவனுக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. அவளை பார்த்துக்கொண்டிருந்தான்

“ப்ரெஸ்ட் ஆகுமென்டேஷன் சர்ஜரின்னு பேரு. பாஸ்னு சாதாரணமா சொல்றாங்க… ஹைலெவல் லேடீஸ்லே பாதிப்பேரு இதை பண்ணிக்கிட்டவங்கதான்”என்றாள் “எனக்கு இப்ப ஷுகர் ,பிரஷர் ,ஹார்ட்பிராப்ளம் ஒண்ணுமே கிடையாது. முன்னாடி பண்ணின காஸ்மெட்டிக் சர்ஜரியிலேயும் எந்த அலர்ஜியும் இல்லை. அப்ப சாதாரணமா பண்ணிக்கலாம்”

அவன் பேசுவதற்காக தொண்டையை கனைத்து மீட்டவேண்டியிருந்தது. “லிலி இப்ப இது எதுக்கு? எவ்ளவோ வழிகள் இருக்கு” என்றான்

“என்ன பண்றது? பேட் வைச்சுக்கிடறதா? அதைப்பாத்தாலே தெரியும், அதிலே மூவ்மெண்டே இருக்காது.அதோட குளோஸ்ட் டாப்ஸ் தான் போடமுடியும். காஷுவல் பார்ட்டிகளிலே அப்டி டிரெஸ் பண்ணிக்கிடறது இப்ப ஃபேஷன் இல்லை. எனக்கு இப்ப பிஸினஸ்லே முக்காவாசி காஷுவல் பார்ட்டிகளிலேதான் நடந்திட்டிருக்கு”

“அதாவது டிரஸ்ஸுக்கு மேலே பிரெஸ்ட்ஸ்டோட விளிம்பு தெரியணும்… அது துள்ளிட்டிருக்கணும்”

அவன் குரலில் இருந்த எரிச்சல் அவளை சீண்டியது. “ஆமா, அதான் ஃபேஷன். அதான் ஒரு சி.இ.ஓக்கு தேவையான ஸ்டைல்”

சாம் தலையை அசைத்தான்.

“என்ன தலையை ஆட்டுறே? புடிக்கலையா?”

“புடிக்கலைன்னா நீ என்ன பண்ணப்போறே? நீ என்னை கன்சிடர் பண்ணப்போறியா என்ன?”

“சென்ஸிபிளா ஏதாவது சொன்னா கன்ஸிடர் பண்ணலாம். நீ சொல்றதெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு பாட்டிக்கதை. அதை நம்பிட்டிருந்திருந்தா நான் அந்த இன்ஷூரன்ஸ் மேனேஜரா இந்நேரம் நாளை எண்ணிக்கிட்டு இருந்திருப்பேன்”

சாம் பெருமூச்சுடன் மடிக்கணினியை மீண்டும் எடுத்தான்

அவள் எரிச்சலுடன் குரலை உயர்த்தினாள். “லுக், இந்த அலட்சியநடிப்பு இருக்கே, அதான் என்னை இரிட்டேட் பண்ணுது. நீ பண்ற புரோக்கர் பிஸினஸுக்கு உன்னோட தொப்பையும் தாடையும் ஓக்கே. யாரும் உன்னை பாக்கப்போறதில்லை. நான் அப்டி இல்லை. நான் சிஇஓ. மாசம் முப்பதாயிரம் ரூபா பணம்குடுத்து டிரெயினர் வைச்சு உடம்பை ஃபிட்டா வைச்சுக்கிடறேன். மாசம் பதினஞ்சாயிரம் ரூபாய் குடுத்து டயட்டீஷியனை வைச்சுக்கிடறேன்…”

”பியூட்டீஷியனையும்”

“ஆமா பியூட்டீஷியனையும்… என்னா என்னோட லுக் அப்டி இருக்கணும். மாடர்னா, கான்ஃபிடண்டா, ஸ்டிராங்கா… தொளதொளன்னு இருந்தா கிழவீன்னு ஒரே வார்த்தையிலே கடந்துபோயிடுவாங்க. இது வேற உலகம். வைல்ட் காம்பெட்டிஷனோட உலகம்… ஒருத்தரை ஒருத்தர் வேட்டையாடி கொன்னு திங்கிறதுதான் இங்க திறமையே”

“ஐ நோ” என்றான்.

“நோ,யூ டோண்ட் நோ” என்று லிலி மூச்சிரைக்க கூவியபடி எழுந்தாள்.  “என்னதான் இருந்தாலும் உங்களுக்கெல்லாம் பொண்ணுங்கிற எளக்காரம் மாறவே போறதில்லை. பொண்ணு அதிகாரத்திலே மேலே போனா அதிலே எரிச்சல். சொந்த மனைவியா இருந்தாலும் எரிச்சல் மாறாது.ஸிக்…”

“ஸீ நான் இப்ப என்ன சொன்னேன்?”

“ஒண்ணுமே சொல்லலை. யூ ஆர் ஜஸ்ட் கூல்… நையாண்டி வேற. முன்னாடி மூக்கு சர்ஜரி பண்ணினப்ப என்ன குதி குதிச்சே”

“அப்ப இருந்த மனநிலை வேற”

”அப்பவும் இப்பவும் அதே மனநிலைதான். ஒரு பொண்ணு திறமையாலே ஜெயிக்கமுடியும்கிற நம்பிக்கையே இல்லை”

அவன் எரிச்சலடைந்தான். “செய்றது எல்லாம் செஞ்சுக்கிடறது. ஏதாவது விமர்சனம் வந்தா உடனே பொம்புளைப்புரட்சின்னு ஆரம்பிச்சிடறது… இப்ப நீ மார்புக்குள்ள சிலிக்கன் ஜெல்லிய வைச்சு அடைச்சு தூக்கி காட்டுறது எந்த தெறமைக்காக? நீ என்ன காபரேவா ஆடப்போறே?”

அவள் முகம் சிவந்து சிறுத்தது. கண்களில் தெரிந்த வெறுப்பு அவனுக்கு கூர்மையான கத்தியால் உரசுவதுபோல ஒவ்வாமையையும் தினவையும் உருவாக்கியது

“ஸோ, நீ உன்னோட நஞ்சை கக்கிட்டே… நீ அப்டித்தான் பேச முடியும்… உன்னாலே வேற எதையுமே பேசமுடியாது. யூ…”

“ஆணாதிக்கப் பன்றி… அதானே. வேற என்ன சொல்லப்போறே?”

“எஸ்… அதேதான். வேற ஒண்ணுமே இல்லை. அதேதான்…”

“தேங்க் யூ”என்று அவன் மறுபடியும் மடிக்கணினியை எடுத்துக்கொண்டான்

அவள் எழுந்து வந்து அதை பிடுங்கி அப்பால் வீசினாள். ‘நௌ டெல்மீ. நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்? இப்ப சொன்னதுக்கு என்ன அர்த்தம்?”

“என்ன சொன்னேன்?”

”காபரேன்னு சொன்னே..”

“ஆமா, மார்பை ஆப்பரேஷன் பண்ணிகிடறது அவங்கதான்”

”வெக்கமா இல்ல? ஒரு பொம்புளைய நடுவிலே நிப்பாட்டி துணிய கழட்டவைச்சு சுத்தி உக்காந்து ரசிக்கிறது, அதுக்கொரு பேரு… ஸிக்” என்றாள்.

“இப்ப நீ சர்ஜரி பண்ணிக்கிடறது எதுக்கு? ஆம்புளைங்க பாக்கணும்னுதானே?”

”இதான் உன்னோட ஒரிஜினல் தாட். இதுக்கு வரத்தான் அப்டி சுத்தினே. நான் சர்ஜரி பண்ணிக்கிட்டா மத்த ஆம்புளைங்க பாப்பாங்க. அது உனக்கு புடிக்கலை.வெறும் பொறாமை… வேற ஒண்ணுமே இல்லை”

“சரி, வைச்சுக்கோ”

“நான் சர்ஜரி பண்ணிக்கிடறது எந்த ஆம்புளைக்காகவும் இல்லை. எல்லா ஆம்புளைங்களும் எனக்கு இந்த ஆட்டத்திலே ஜஸ்ட் ஹேங்கிங் பால்ஸ்தான்”

“அது நல்ல லைன்” என்று அவன் புன்னகைசெய்தான்

“என்ன?”

‘ஆம்புளைங்கன்னா ஜஸ்ட் ஹேங்கிங் பால்ஸ்தான்னு சொன்னது” என்றான் “குளிர்காலத்திலேயுமா?”

“ஷிட்”என்றாள். “நேஸ்டி ஜோக்”

”சரி சொல்லு, ஆம்புளைங்களை கவரணும்னு இல்லேன்னா பிறகு எதுக்கு இந்த சர்ஜரி?”

”நான் பொம்புளை. என்னோட உடம்புக்கு ஒரு ஐடியல் இருக்கு. அது எனக்கு வேணும். அதான் என்னோட பெஸ்ட் எக்ஸ்பிரஷன் ஆஃப் பாடி. என் பேச்சுமாதிரி, சிரிப்பு மாதிரி ,பார்வை மாதிரி, என்னோட பாடியும் என்னோட எக்ஸ்பிரஷன்தான். நான் அதை ஐடியலா மாத்திக்கிடணும். அதுக்குத்தான்… ”

“பொம்புளை பாடியே ஆம்புளைய அட்ராக்ட் பண்ணணும்னு டிசைன் ஆகியிருக்கிறதுதான்”

“இருக்கட்டும். என்னோட பாடி அட்ராக்ட் பண்ணுதுன்னா என்னோட குரல் பேச்சு அதெல்லாம் அட்ராக்ட் பண்ணாதா? என்னோட எஜுகேஷன், கல்ச்சர் அதெல்லாம் அட்ராக்ட் பண்ணாதா? இது மட்டும் என்ன வித்தியாசம்?”

“பேசிட்டே இருக்கலாம், ஆனா உனக்கே தெரியும்”

“இல்ல, நீங்களே பேசிப்பேசி சிந்தனையிலே ஒரு டிசைன் பண்ணி வைச்சிருக்கீங்க. அதை சொல்லிட்டே இருப்பீங்க. ஒரு பொண்ணோட பிரில்லியன்ஸை பாத்து ஒரு ஆம்புளைக்கு செக்ஷுவல் டிசையர் வரக்கூடாதா? அதனாலே உடனே அவ அசமஞ்சமா ஆயிடணுமா? இல்ல பேசாம வாயை மூடிட்டிருக்கணுமா? பொம்புளைய கறுப்புத்துணியாலே மூடிவைக்கணும்னு சொல்றவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்”

“இப்ப ஏன் ப்ளூரலிலே பேசுறே”

“நீங்கள்லாம் ஒண்ணு… ஒரே குரல்”

“நீ பேசுறது வெறும் விதண்டாவாதம்”

”இல்லை. பேஸிக்கலா கேள்வி ஒண்ணுதான். பொம்புளை தன்னை எக்ஸ்பிரஸ் பண்ணணுமா இல்லை ஒளிஞ்சுகிடணுமா? எக்ஸ்பிரஷன்னா அது எல்லா வகையிலயும்தான். எல்லா திறமையையும்தான் வெளிப்படுத்தணும். பலசாலியா, அழகா, இளமையா வெளிப்படவேண்டிய இடத்திலே அப்டித்தான் வெளிப்படணும்… வெளிப்பட்டாத்தான் ஜெயிக்கமுடியும். ஒளிஞ்சுக்கிட்டா அடிமையாத்தான் இருக்கமுடியும்… “

சாம் பெருமூச்சுவிட்டான்

“என்ன ஒண்ணுமே பேச்சை காணும்?”

“நீ ஈஸியா ஒரு போலரைஸேஷனை கொண்டுவந்திட்டே. இனிமே இதுவா அதுவான்னுதான் கேள்வி. ரெண்டுலே நீ எனக்கு ஒரு சைடை குடுக்கிறே. அதை நான் எடுத்து வாதாடணும்… அதான் நீ எதிர்பார்க்கிறே. நான் இந்த ஆட்டத்துக்கே வரல்லை”

”எதாவது ஒண்ணைச் சொல்றது, அதை கேள்விகேட்டோம்னா அதிலே நிக்காம ஒதுங்கிக்கிடறது…”என்று அவள் உதட்டைச் சுழித்தாள்

“சரி, நேரடியா இப்ப கேட்கிறேன். இது உன்னோட செக்ஸ் அப்பீலை கூட்டிக்கிடறதுதானே? உன் தொழிலிலே இது தேவைப்படுதுன்னா அது திறமையா?”

“இல்லை, இது என்னோட பெர்சனாலிட்டியை நான் கூட்டிக்கிடறது. எல்லா பெர்சனாலிட்டியிலேயும் ஒரு செக்ஸ்அப்பீல் அம்சம் கண்டிப்பா இருக்கு. அது ஹ்யூமன் நேச்சர். ஆம்புளைங்களும் அப்டித்தான். ஏன் முடி டிரான்ஸ்பிளாண்ட் பண்ணிக்கிடறீங்க? எதுக்கு பல் கட்டிகிடறீங்க? அதுவும் இதுவும் ஒண்ணுதான். இது ஏன் என்னோட தொழிலிலே தேவைப்படுதுன்னா ஆம்புளைங்களுக்கு கிளுகிளுப்பு அளிக்கிறதுக்காக இல்லை. என் சர்க்கிளிலே அப்டி கிளுகிளுப்பு அடையறவங்க யாருமில்லை. அப்டி பொண்ணு வேணும்னா அவங்களுக்கு இண்டர்நேஷனல் மாடல்ஸ் கிடைப்பாங்க”

“பின்ன எதுக்கு?”

“நான் ஒரு பிராஜக்ட் ஐடியாவை முன்வைக்கிறேன், அப்ப முதல் கேள்வியே அந்த பிராஜக்டை  எட்டோ பத்தோ வருஷம் எடுத்து நடத்தி முடிக்க என்னாலே முடியுமா, அதுக்கான ஆரோக்கியமும் இளமையும் எங்கிட்ட இருக்காங்கிறதுதான். நான் ஒரு ஐடியாவை சொன்னா முதல்லே வாற சந்தேகமே நான் இந்தக்காலத்து இளந்தலைமுறையோட வேவ்லெங்க்திலே இருக்கேனா இல்லியாங்கிறதுதான். என்னாலே ஆயிரம் பத்தாயிரம் இளைஞர்களை புரிஞ்சுக்கிட்டு, அவங்களை ஒருங்கிணைச்சு ஒரு வேலையைச் செஞ்சு முடிக்கமுடியுமாங்கிறது எப்பவுமே முக்கியமான கேள்வி. அதுக்கு நான் இளமையா, துடிப்பா ,ஹெல்தியா இருந்தே ஆகணும்”

“ஆனா நீ அப்டி இருக்கியா, இல்ல அப்டி வேஷம்போடுறியா?”

“இப்ப சொன்னியே வேஷம்னு, அதான் பத்தொன்பதாம்நூற்றாண்டு ஐடியா. நான் பிரசண்ட் பண்றேன். என்னை எக்ஸ்பிரஸ் பண்றேன். அது வேஷமில்லை. எனக்கு பயமிருக்கலாம், சந்தேகமும் குழப்பமும் இருக்கலாம். ஆனா அதை நான் பிரசண்ட் பண்ணமாட்டேன். என்னை தைரியமான, தெளிவான ஆளாத்தான் புரஜக்ட் பண்ணுவேன். என்னோட எக்ஸ்பிரஷன்தான் நான். அதுக்கு அப்பாலே உண்மையிலே நான் யார்னு யாருக்கும் தெரியாது. அது முக்கியமே இல்லை”

“உண்மையிலேயே உள்ள நீ யாருன்னு முக்கியமில்லையா? இந்த பில்டிங்கிலே உள்ள கம்பிக்கு பதிலா குச்சியை வைச்சு கட்டினா ஸ்டிராங்கா இருக்குமா?”

“இது பில்டிங் இல்லை. இது மனசு. நான் எப்டி என்னை எக்ஸ்பிரஸ் பண்றேனோ அப்டி நான் படிப்படியா மாறிடுவேன். துணிச்சலான பொண்ணா நான் என்னைய காட்டிக்கிட்டா எங்கிட்ட துணிச்சல் வந்திரும். காலையிலே எழுந்து இந்த நிலைக்கண்ணாடியிலே என்னை நான் பாத்துக்கிடறேன்ல, அதான் நான். அப்பதான் நான் என்னை கிரியேட் பண்ணிக்கிடறேன்… அந்த கிரியேட்டட் பர்சனாலிட்டியைத்தான் வெளியே கொண்டுபோறேன்… அவ்ளவுதான்”

“நாம இதை இப்பவே நிப்பாட்டிக்கிடலாம்னு நினைக்கிறேன்” என்றபின் சாம் எழுந்து கழிப்பறைக்குச் சென்றான்

அவன் திரும்பி வரும்போது அவள் மார்புவரை போர்வையை எடுத்து போர்த்திக்கொண்டு செல்பேசியில் மின்னஞ்சல்களை பார்த்துக்கொண்டிருந்தாள்

அவன் வந்து படுத்ததும் அவள் ஒரு ஆல்பத்தை எடுத்து “இது டாக்டர் குடுத்த மாடல்ஸ்” என்றாள்

”என்ன மாடல்?”என்றான். அது ஆல்பம் அல்ல,ஒரு பெரிய புத்தகம்.

“ஸீ, பூப்ஸ்னா அது சாதாரணமா ரெண்டு ஃப்ளெஷ் பல்ப்ஸ் இல்லை. அதிலே அவ்ளவு நுட்பங்கள் இருக்கு. ஏஷியன், இண்டியன், அராப், ஆப்ரிக்கன், யூரோப்பியன்னு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வகை. அதுக்குள்ளே ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு இனத்துக்கும் வேறவேற வடிவங்கள் இருக்கு. ஒவ்வொரு உடம்புக்கும் அதுக்கான பிரெஸ்ட் வடிவம் இருக்கு.”

“கம்ப்யூட்டர் டிசைன் பண்ணுதாமா?”என்று அவன் கேட்டான். அவளிடம் அப்பேச்சை நிறுத்திக்கொள்ளவும் ஒரு குவளை ஒயின் அருந்திவிட்டு படுக்கவும் விரும்பினான்

“நோ நோ… கம்ப்யூட்டரை வைச்சு அப்டி மெக்கானிக்கலா முடிவு எடுக்கமுடியாது. ஆக்சுவலி இதிலே மூணு ஃபினாமினன் இருக்கு. ஒண்ணு பயாலஜிக்கல். இந்த உடம்பு அமைப்புக்கு இந்த பிரெஸ்ட் பொருத்தம்னு சொல்றது. அது பியூர்லி அனாட்டமிக்கல் பார்வை. அதிலே எலும்புக்கூடு அமைப்பைத்தான் கணக்கிலே எடுத்துக்கிடறாங்க. குறிப்பா தோள் எலும்பு, விலாவெலும்பு ரெண்டையும். அதைவைச்சு கம்ப்யூட்டர்லே டிசைன் பண்ணி இதான் இந்த உடம்புக்கான பிரெஸ்ட் ஐடியல்னு சொல்லிடறாங்க”

“அப்றமென்ன?”என்றபடி அவன் மெத்தைமேல் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டான்.

”பூப்ஸ்ங்கிறது ஜஸ்ட் ஆன் ஆர்கன்னா பிரச்சினையே இல்லியே. அது வெறும் ஒரு ஆர்கன் மட்டும்தான்னா இந்த காஸ்மெட்டிக் சர்ஜரிக்கே தேவை இல்லையே”என்றாள் லிலி “அதிலே இருக்கிற கல்சுரல் எலெமென்டுன்னா டேஸ்டுதான்… விஷுவல் டேஸ்ட். எது நமக்கு அழகுன்னு தோணுது, ஏன் தோணுதுன்னு பாக்கணும்ல? ஏஷியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் வேற வேற டேஸ்ட் இருக்கு. ஆப்ரிக்காவிலே பூப்ஸ்னாலே தொங்கி வயிறுவரைக்கும் இருக்கிறமாதிரித்தான் பெரும்பாலான சிற்பங்களிலே செதுக்கியிருக்காங்க. அவங்களுக்கு அது மதர்ஹுட் மட்டும்தான். யூரோப்லே வீனஸ் சிலையெல்லாம் பாத்தா பூப்ஸே இருக்காது. ரொம்பச் சின்னதா இருக்கும். நிப்பிள் எல்லாம் ரெண்டு டாட் மட்டும்தான். ஆனால் இந்தியாவிலே பழைய சிற்பங்களிலேயே பூப்ஸ் ரொம்ப பெரிசா இருக்கும். இடைவெளியே இல்லாம ரெண்டும் நெருங்கிட்டிருக்கும்… ஸீ… இதிலே எல்லா சிற்பங்களையும் மாடலா குடுத்திருக்கான். கிரீஸ் ,ரோம், சீனா, இந்தியா எல்லா ஊர் சிலையையும் பெயிண்டிங்கையும் காட்டுறான்… இது கஜுராகோ… பாத்தியா, இந்த அப்சரசோட பூப்ஸை… ஸோ லார்ஜ்”

“ஆமா, நாமகூட போயிருந்தோமே…”என்று அவன் ஆர்வமில்லாமல் சொன்னான்

“இப்ப என்னோட பாடின்னா இந்தியன் அனாட்டமி உள்ளது. அதிலே குறிப்பா திராவிட அனாட்டமி. என்னோட போன் ஸ்டிரக்சருக்கு எனக்கு இருக்கிற சாய்ஸ்களிலே நான் திராவிட அனாட்டமியைத்தான் செலெக்ட் பண்ணணும். அதுக்குள்ள எனக்கு நெறைய சாய்ஸ் இருக்கு. அதுக்குமேலே நான் எந்த கல்சுரல் பிளெண்ட்டை விரும்புறேன்னு இருக்கு. ஆனா நான் திராவிட ஷேப்பை விரும்பலை”

“ஏன்?”

“ஏன் திராவிட மூக்கை விரும்பலை, அதே காரணத்தாலேதான். இப்ப எது சக்ஸஸ்புல்லோ அந்தச் சாயல் இருக்கணும்.. ”

“ஓகோ”என்றான்

”எப்பவுமே அது அப்டிதான். யாரு ஜெயிச்சு மேலே இருக்கிறாங்களோ அவங்களை மாதிரி ஆகிறதுதான் ஃபேஷன். தென்னிந்தியர்கள் வட இந்தியர்கள் மாதிரி ஆகிறாங்க. வட இந்தியர்கள் வெள்ளைக்காரங்களை மாதிரி ஆகிறாங்க… நான் சின்னப்பொண்ணா இருக்கிறப்ப வெள்ளைக்காரிகளை மாதிரி சுருண்ட அலையலையான தலைமுடிதான் ஃபேஷன்.கர்லிங் அயர்ன் வைச்சு சுருட்டிக்கிடுவோம். இப்ப சீனா சக்ஸஸ்புல் நாடு. அதனாலே அமெரிக்காக்காரிகள் சீனாக்காரிகளை மாதிரி இருக்கிற சுருளையும் நீவி நீட்டி விட்டு கலர் பண்ணிக்கிடறாங்க. தலைமுடியிலே இப்ப இருக்கிற எல்லா ஃபேஷனும் சீனா மாடல்தான்…”

“அப்ப சீன மாடல்தான், என்ன?”

”இல்ல, சீனமாடல்னா ரொம்பச் சின்னதா இருக்கணும். அது என்னோட தோள் அளவுக்கு சரியா வராது. பெரிசாகவும் இருக்கக்கூடாது. நடுவிலே ஒரு பிளெண்ட் வேணும். அதான் நாலைஞ்சுநாளா யோசிச்சிட்டிருக்கேன். நாலு டிசைன் ஓக்கே பண்ணி வைச்சிருக்கேன்”

“ஓக்கே பண்ணியாச்சா?”என்று கொட்டாவி விட்டான்

“ஆமா, ஆனா குழப்பமா இருக்கு. நான் செலெக்ட்பண்ணி குடுத்தா அதைவைச்சு என்னோட விர்ச்சுவல் மாடலை அவங்க அனுப்பி வைப்பாங்க. ஆக்சுவலா பணம் குடுத்தா த்ரீடி சிற்பமா கூட பிளாஸ்டர் ஆஃப் பாரீஸிலே செஞ்சு அனுப்புவாங்க. அதைப்பாத்து ஃபைனலா ஓக்கே பண்ணிடலாம்”

“சர்ஜரின்னா என்னதான் பண்ணுவாங்க?”என்றான் சாம்

“ரெண்டு முறை இருக்கு. ஸ்டெரிலைஸ் பண்ணின சால்ட்வாட்டர் உள்ள வைக்கிறதுக்கு சலைன் மெதட்னு பேரு.ரொம்ப சின்னதா என்லார்ஜ் பண்ணினாப் போரும்னா அதைப் பண்ணுவாங்க. சாதாரணமா வைக்கிறது சிலிக்கன் ஜெல்லி… பிரெஸ்டுக்கு கீழேயோ பக்கவாட்டிலோ சின்னதா கட்பண்ணி உள்ளே இஞ்செக்ட் பண்ணுவாங்க”

”அது லைஃப் லாங் இருக்குமா?”

“ஏழெட்டு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன். அப்ப மாத்திக்கிடணும்”

“பிராப்ளம் ஏதாவது இருக்குமா?”

“ஒண்ணும் இருக்காது. ஆனா கேர்ஃபுல்லா இருக்கணும். பிரஷர் இருக்கக்கூடாது. சாஃப்டாத்தான் தொடணும்”

“அப்ப நான் தொடமுடியாது?”

”எந்த ஆம்புளையும் தொடமுடியாது”என்று அவள் சிரித்தாள் “இப்ப தெரியுதுல்ல, இது செக்‌ஷுவல் பர்ப்பஸே இல்லை…”

”ஜஸ்ட் எ டிஸ்பிளே?”என்றான்

“இல்லை, பிரசண்டேஷன், சொன்னேனே”

அவன் ‘“நைஸ்” என்றான்

அவள் அந்த புத்தகத்தை அப்பால் வைத்துவிட்டு “சாம்’என்றாள்

”சொல்லு”

“உண்மையிலேயே உனக்கு அவெர்ஷனா இருக்கா?”

”எது?”என்றான்

“இப்டி பண்ணிக்கிடறது?”

“இல்லை”

“பொய்… நீ நார்மலா இல்லை. ஸீ, இது புதியவாழ்க்கை. மிடில்கிளாஸ் பெண்கள்கூட அடுத்த தலைமுறையிலே இதைத்தான் பண்ணிக்கிடப்போறாங்க. நாம அப்பர்கிளாஸ். நாம கொஞ்சம் ஃபார்வேடா இருக்கோம்…”

“ஆமா”

“என் கரியருக்கு இது தேவைப்படுது… என்னோட ஃபோட்டோ இப்ப எல்லா கம்பெனி பிரௌஷரிலேயும் வருது…. மாசம் ஒரு இண்டர்வியூ பப்ளிஷ் ஆகுது…நான் என்னை பிரசண்ட் பண்ணணும். இப்ப ஒவ்வொருத்தர்கிட்டேயும் இந்த காலகட்டம் கேக்கிறது ஒண்ணேதான். எப்டி உங்களை பிரசண்ட் பண்ணிக்க போறீங்க? ஆக்டிவா, எனெர்ஜெட்டிக்கா, யூத்தா பிரசண்ட் பண்ணிக்கிடலாம். கால்குலேட்டிவா, பேஷியண்டா, சைலண்டா பிரசன்ட் பண்ணிக்கிடலாம்….அரகண்டா, எய்ம்லெஸ்ஸா, கிறுக்கனா எப்டி வேணுமானாலும் பிரசண்ட் பண்ணிக்கிடலாம்.”

அவளுக்கு அவள் எண்ணங்களை கோவையாகச் சொல்லித் தொகுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஏற்கனவே சொன்னபோது ஒருங்கிணைந்து வராத கருத்துக்கள் அப்போது திரண்டன.

“இப்ப சோஷியல் மீடியா எதுக்கு இருக்கு? நம்மை நாமளே பிரசன்ட் பண்ணிக்கிடத்தான். சோஷியல்மீடியா ஒவ்வொருத்தர்ட்டையும் அவங்களை ஒருவிதமா முன்வைக்கத்தானே சொல்லிட்டிருக்கு? இந்தியாவிலே இன்னிக்கு இருபதுகோடிப்பேர் அதைத்தான் செஞ்சிட்டிருக்கான். ஒவ்வொருத்தனும் அவனையே ஃபிக்ஷனைஸ் பண்ணிட்டிருக்கான்… ஃபோட்டோவா போடுறான். மலையுச்சியிலே, கோயில்முகப்பிலே போஸ் குடுக்கிறான். குடும்பத்தோட, நாய்குட்டியோட நின்னு சிரிக்கிறான். புரட்சிகரமா பாலிடிக்ஸ் பேசுறான். இண்டெலக்சுவலா காட்டிக்கிறான்… ஜாலியானவனா, பணக்காரனா, கேர்ஃப்ரீ ஆளா காட்டிக்கிறான். சிலபேர் பொறுக்கியா, அயோக்கியனாக்கூட காட்டிக்கிடறாங்க. அதெல்லாம் பொய் இல்லை. அவன் எதை முன்வைக்கிறானோ அதான் அவன்… அதுக்குமேலே அவனுக்கு எந்த செல்ஃபும் இல்லை. அப்டி ஒரு மாறாத செல்ஃப் இருக்குன்னு சொல்றது பொய். அப்பப்ப எப்டி முன்வைச்சுகிடறோமோ அதுதான் நாம…”

அவளால் எண்ணியதைப் பேசிப்பேசி பெரிய கொள்கையாக ஆக்கிவிடமுடியும் என அவன் அறிவான். ஆகவே சலிப்புடன் காலை ஆட்டிக்கொண்டு கேட்டிருந்தான்

அவள் சொன்னாள் “ஏற்கனவே காலாகாலமா அதைத்தான் செஞ்சிட்டிருந்தோம். ஆள்பாதி ஆடைபாதின்னு அதைத்தான் சொன்னாங்க. திண்ணையிலே உக்காந்து பேசிப்பேசி நம்மளை நாம பிரசண்ட் பண்ணினோம். ஒரு தெருவிலே இல்லேன்னா ஒரு ஊரிலே பண்ணினதை இப்ப உலகம் முழுசுக்காக பண்ணச்சொல்லுது சோஷியல்மீடியா….ஒரு மனுஷனோட பர்சனாலிட்டிங்கிறது அவன் பிரசண்ட் பண்றது மட்டும்தான். அதுக்குமேலே அவன் யாருன்னா வெறும் உயிர். வெறும் உடம்பு. வெறும் பயாலஜிக்கல் எண்டைட்டி, அவ்ளவுதான்…”

“குட்”என்று அவன் சொன்னான்

அதுவரை அவளிடமிருந்த ஆர்வம் அறுபட்டது. “நான் சொல்றதிலே உனக்கு சம்மதமில்லேன்னா ஆர்க்யூ பண்ணு… இந்த ஒத்தைச் சொல் எல்லாம் வேண்டாம்” என்று எரிச்சலுடன் சொன்னாள்

“இதோபார், நான் எப்டி ஆர்க்யூ பண்ணணும்? நீ சொல்றதை எதுத்து எது சொன்னாலும் அதெல்லாம் மேல்சாவனிசம், ஓல்ட் ஃபேஷண்ட் அர்ரகன்ஸ்… ஆனா அதை நான் சொல்லணும். அதை எதுத்து பேசி நீ ஜெயிக்கணும்… அதானே?”

“நீ ஏன் இர்ரிட்டேட் ஆகிறே? அதை மட்டும் யோசிச்சுப்பாரு”

“நான் ஒண்ணும் இர்ரிட்டேட் ஆகலை”

“பின்ன? நீ சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லியா?”

“இருக்கு. ஆனா எனக்கு கோர்வையா சொல்லத்தெரியாது. நான் ஒண்ணும் உன்னைமாதிரி இண்டெலெக்சுவல் இல்லை. ஜஸ்ட் எ டிரேடர்”

“சொல்லு, நான் இண்டலெக்சுவலைஸ் பண்ணிக்கிடறேன்”

“இதபார், பொம்புளை உடம்புமேலே ஆம்புளைக்கு எந்த உரிமையும் இல்லியா?”

“உரிமையா? என்ன நான்சென்ஸ்?”

“நான் கேக்கிறது வேற. பொம்புளை உடம்பை சார்ந்துதான் ஆம்புளையோட காமம்  இருக்கு. ஆம்புளை உடம்பைச் சார்ந்துதான் பொம்புளையோட காமம் இருக்கு. என்னோட காமம் மேலே எனக்கு ஒரு உரிமை இருக்குல்ல? அப்ப பொம்புளை உடம்பு மேலே எனக்கும் ஒரு உரிமை இருக்குல்ல? சாரி, என்னாலே சரியா கேக்க முடியல்லை. இப்டி கேக்கறேன். இப்ப உன் உடம்பிலே ஒரு உறுப்பை என்னாலே தொடமுடியாது. நாளைக்கு உன் பூப்ஸை தொடமுடியாது. அப்டியே கொஞ்சம் கொஞ்சமா ஒரு காலத்திலே பொம்புளை உடம்பே ஆம்புளையாலே தொடமுடியாததா ஆயிடுமா?”

அவள் ஏதோ பேசும் முன் “இரு இரு, நான் சரியா கேக்கல்லை. இதோபார், பொம்புளைங்க ஆம்புளைங்களோட டேஸ்டை பத்தி கவலையே படாம அவங்க உடம்பை மாத்திகிடறாங்க. ஆம்புளைங்களும் தங்களை மாத்திக்கிடறாங்க. அப்ப அந்த உலகத்திலே ஆண்பெண் உறவு என்னவா இருக்கும்? ஆண்பெண் செக்ஸ் இல்லாம ஆயிடுமா? செக்ஸுவல் பிளஷருக்கு டெக்னிக்கலான வழிமுறைகள் வரலாம். இந்த உலகமே வேறமாதிரி ஆயிடலாம்”

“ஆகட்டுமே. ஸோ வாட்?”என்றாள். அவள் அந்த கோணத்தை எதிர்பார்க்கவில்லை

“ஆணும் பெண்ணும் உடம்பாலேதான் உரையாடிக்க முடியும். ஐ மீன் கம்யூனிகேஷன். அந்த கம்யூனிகேஷன் ரொம்ப டீப்பானது. அதுக்கு பல லட்சம் ஆண்டு பரிணாம வரலாறு இருக்கு. அந்த உரையாடலே இல்லாம ஆயிடுமா? என்னோட உடம்பு என்னோடது மட்டுமேன்னு சொல்றது அந்த உரையாடலுக்கு வரமாட்டேன்னு கதவை மூடிக்கிடறதுதானே?”

“உரையாடலை நிப்பாட்டிக்கிடறது பத்தி நான் சொல்லலை. அந்த உரையாடலும் என்னோட சாய்ஸ்தான் சொல்ல வர்ரேன். என்னோட மனசிலே எந்த பகுதி இன்னொருத்தர்கூட உரையாடணும்னு நான் முடிவுபண்ணுவேன். மிச்ச பகுதி என்னோட பிரைவசி. அதேமாதிரித்தான் என்னோட உடலும். தட் இஸ் ஆல்” என்றாள்.

அவன் தலையை அசைத்து “இப்பவும் நான் சரியா சொல்லலை. என்னாலே சொல்ல முடியலை. இப்டிச் சொல்றேன், என்னோட காமம் பொண்ணோட உடம்பிலே கொஞ்சம்கூட பிரதிபலிக்கலைன்னா எனக்கு அதோட என்ன தொடர்பு இருக்கும்? அது மூடின கட்டிடம் மாதிரித்தானே?” அவள் பேச வாயெடுப்பதற்குள் அவன் “இரு இரு, இதேதான் ஆம்புளை உடம்புக்கும்….அதையும் சேத்துத்தான் சொல்றேன்” என்றான்

“ஸீ, நீ பேசிட்டிருக்கிறது வெறும் ஊகம். அதுக்கெல்லாம் பிராக்டிக்கலா எந்த அர்த்தமும் இல்லை. உரையாடல்னு சொன்னியே. அந்த உரையாடல் காலகாலமா நடந்திட்டிருக்கு. ஒரே பேட்டர்ன், ஒரே ஸ்டைல். அதிலே ஒரு சுரண்டல் இருக்கு. ஒரு அடிமைத்தனம் இருக்கு. அது வேண்டாம்னுதான் சொல்றேன். உரையாடல் வேண்டாம்னு சொல்லலை. வேற வகையான உரையாடல் நடக்கலாமேன்னு சொல்றேன்”

“ஐ சரண்டர். அவ்ளவுதான். எனக்கு இதுக்குமேலே வார்த்தைகள் இல்லை” என்றான்.

’ஓக்கே, குட் நைட், நான் நாளைக்கு கொஞ்சம் முன்னாடியே கெளம்பணும்”என்று அவள் திரும்பி அவளுடைய தலைமாட்டிலிருந்த சிறிய பெட்டியில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்து கிழித்து வாயில்போட்டுக்கொண்டு அருகிலிருந்த கண்ணாடி கூஜாவில் இருந்து நீர் ஊற்றி விழுங்கினாள்

“குட் நைட்’என்று அவன் சொன்னான்

அவள் முத்தமிடுவதுபோல உதட்டை குவித்து “லவ் யூ”என்றாள்

போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு குழந்தைபோல அவள் சுருண்டு கொள்வதை அவன் பார்த்துக்கொண்டிருந்தான். இருமுறை அவள் முனகினாள். கண்ணிமைகள் அசைந்துகொண்டிருந்தன. அதன்பின் மூச்சு சீராக ஒலிக்க ஆரம்பித்தது

அவன் அவள் மார்புகளைப் பார்த்தான். உண்மையாகவே சுருங்கிய மார்புகள்தான். சென்ற சில ஆண்டுகளாக அவள் செய்யும் உடற்பயிற்சியும், தொடர்ந்த விமானப்பயணங்களின் தூக்கமிளைப்பும் அவளை மெலியச்செய்து, தோல்வரளச்செய்து, கண்ணிமைளை கருகவைத்து களைத்த கிழவியாக மாற்றிக்கொண்டிருந்தன. இன்னும் சிலநாட்களில் அந்த மார்புகள் அவனால் தொடமுடியாதவையாக ஆகிவிடும். தொடமுடியாதவை. அப்படி ஏதோ கோயில் சாமிக்கு பெயர் உண்டே. அபிதகுசலாம்பாள். ஆமாம், அதுதான்.

அவன் எழுந்துசென்று மினிபாரைத் திறந்து அங்கிருந்த வண்ணப்புட்டிகளை தொட்டுத்தொட்டு அவனுடைய வழக்கமான பிராண்ட் வைனை எடுத்தான். அதிலிருந்து சிவப்பு ஒயினை கோப்பையில் விட்டுக்கொண்டான். அதை விரல்கள் நடுவே வைத்து கோப்பையை சற்று சுழற்றி செந்நிறமான திரவத்தை கையிலிருந்து சுழிக்கவிட்டான். அவனுக்கு எப்போதுமே கிளர்ச்சியூட்டும் இனிய மணம் எழுந்தது

ஒயின் கோப்பைகள் முலைகளின் வடிவில் அமைந்தவை என்பார்கள். இளம் வெள்ளைக்காரிகளின் முலைகள். தொன்மையான பெல்ஜியத்தில் அவ்வாறு உருவம்கொண்டன. பெல்கே நாடு. அக்காலத்தில் அது கௌல்களின் நிலம்.கௌல் பெண்களின் இளமுலைகள். போதையைக் கிளறும் மது நிறைந்தவை. அவன் அதை எப்போதோ கேள்விப்பட்டிருந்தான். ஒவ்வொருமுறை ஒயின்கோப்பையை தொடும்போதும் நினைவுகூர்ந்தான். எப்போதும் பெரிய கோப்பைகளையே அவன் தேர்வுசெய்தான்.

ஒயின்கோப்பையைக் கையிலெடுத்தபடி அவன் சென்று மேஜைமேல் அமர்ந்துகொண்டான். உடலை எளிதாக்கிக்கொண்டு ஒயினை துளித்துளியாக அருந்தினான். சற்றே முகர்ந்து,நாநுனியை நனைத்து, ஆவியை மூக்கில் நிறைத்து, முழுமையாக அதில் ஈடுபட்டிருந்தான். உடல் பதற்றமிழந்து இயல்படைந்தது. கைகால்களில் தசைநார்கள் தளர்ந்தன

அவன் எழுந்துசென்று அந்த பெரிய புத்தகத்தை எடுத்துவந்தான். அதை மெல்ல புரட்டினான். விதவிதமான முலைகள். சிறியவை பெரியவை சரிந்தவை பெருகியவை. சிற்பங்கள், ஓவியங்கள். கிரேக்க, ஆப்ரிக்க, காந்தார, இந்திய, தாய், பாலி சிற்பங்கள்.சீனத்து பீங்கான் முலைகள். சிற்றோவியங்கள். வெவ்வேறு நடிகைகள், போர்ன் நட்சத்திரங்கள், விபரீதமான பெருமுலைகள்… அவன் ஒயினை உறிஞ்சியபடி, தாள்புரளும் ஓசை மட்டும் ஏஸியின் ரீங்காரத்துடன் இணைந்து ஒலிக்க, மெல்ல புரட்டிக்கொண்டிருந்தான்.

***

 

3. வலம் இடம் [சிறுகதை]

2. கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைநாகர்கோயிலும் நானும்
அடுத்த கட்டுரைகண்கூடான காந்தி