எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன்

எண்ணும்பொழுது கதைக்கு வெளியே விரியும் ஒரு தலைப்பு. கதையில் அவனுடைய பிரச்சினை எண்ணி எண்ணிப்பார்ப்பதுதான். அவள் எண்ணாமலிருக்க முயல்கிறாள். அதை தவிர்க்க முயல்கிறாள். அவனால் அது முடியாது. எண்ணி எண்ணி வெங்காயம் போல எல்லாவற்றையும் உரித்து சூனியத்தை கண்டுகொண்ட பின்னர்தான் அவனுக்கு தீ ஆறும். அதைத்தான் அவள் சொல்கிறாள். எதற்கு இப்படி என்ணிக் கணக்கிடுகிறான் என்று கேட்கிறான். அவன் சிந்திக்கத்தெரிந்த பேதை. அவள் வாழ்க்கையைப் பற்றிய நுட்பத்தை உள்ளுணர்வாலேயே அறிந்த புத்திசாலி. அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடலும் இப்படித்தான்

ஆனால் கதையில் தவிர்த்துக்கொண்டே செல்லும் அவள் ஒரு கேள்வி கேட்கிறாள். யார் முதலில் எண்ண ஆரம்பித்தது என்று. அங்கே அவளும் சிக்கிவிடுகிறாள். அவளும் என்ண ஆரம்பித்துவிட்டாள். அவன் அவளையும் எண்ண வைத்துவிட்டான். அவள் தவிர்த்துக்கொண்டே இருந்ததில் அவளும் விழுந்துவிட்டாள். எண்ணி எண்ணி குறைப்பார்கள். எண்ணி எண்ணி கூட்டிக்கொள்வார்கள். அதுதான் இந்த முடியாத மாபெரும் நாடகம்

 

அர்விந்த்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

எண்ணும்பொழுது அருமையான சிறுகதை. நீண்ட நாள் நினைவில் நிற்கும். .

ஆனால், என்னுடைய வாசிப்பு இப்போதைக்கு தலைப்பிலேயே நிற்கிறது. நாம் அன்றாட கொடுக்கல் வாங்கல்களோடு நிற்காமல் உணர்வு உறவுகளையும் எண்ணி அளக்கிறோமா? மனித இனத்தை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்துவது, நமக்கு எண்ணத் தெரியும், சிரிக்கத் தெரியும் என்பதுதான் என்பார்கள். இந்த பரிணாம வளர்ச்கியால் பீடிக்கப்பட்டு எல்லாவற்றையும் எண்ணுகிறோமோ?

மார்க்கெடிங் துறை வல்லுனர் ஒருவர், நுகர்வோர் பொருட்களையும் சேவைகளையும் கணக்குப்போல் எண்ணி எண்ணி வாங்குகிறார்களா அல்லது உணர்ச்சியால் எண்ணாமல் வாங்குகிறார்களா என்ற கேள்வியை எடுக்கிறார். மார்க்கெடிங் துறையில் இருப்பவர்கள் எண்ணிக்கைக்கு அப்பால் (beyond numbers) என்று அடிக்கடி சொல்கிறார்களே அப்படி எண்ண முடியாதது இருக்கிறதா என்ற கேள்விக்கு அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ (The Little Prince) நெடுங்கதையிலிருந்து ஒரு பத்தியை பதிலாக சுட்டுகிறார்.

கதை ஒரு சிறுவனால் சொல்லப்படுகிறது. அவன் ஓத்த வயதுள்ள ஒரு சிறுவனை சந்திக்கிறான். வந்த சிறுவன் அருகாமையிலுள்ள ஒரு சிறுகோளின் இளவரசன். கதை தொடங்கும்போதே பூமியின் சிறுவன் தன் நண்பன் சிறுகோள் எண் பி- 612 லிருந்து வந்திருக்கிறான் என்று சொல்லிவிடுகிறான். மேலதிகமாக அந்த சிறுகோளைப்பற்றி பல தகவல்களையும் சொல்கிறான். இதோடு நிற்காமல், சிறுகோளின்  எண்ணையும் பௌதிக விவரங்களையும் ஏன் இவ்வாறு முன்வந்து சொல்கிறேன் என்று விளக்குகிறான்:

” நான் ஏன் உங்களுக்கு சிறுகோள் பி-612 பற்றி இவ்வளவு விவரங்களையும் சொல்லி அதன் அடையாள எண்ணையும் சொல்கிறேன் என்றால், அது பெரியவர்களால்தான். இந்த பெரியவர்களுக்கு எண்ணுவதில் அவ்வளவு ஆர்வம். உங்களுடைய புது நண்பனைப்பற்றி அவர்களிடம் சொன்னால், அவசியமான விஷயங்களைப்பற்றி கேள்வியே கேட்க மாட்டார்கள். ‘அவன் குரல் எப்படி இருக்கும்?  அவனுக்கு எந்த விளையாட்டு பிடிக்கும்? அவன் பட்டாம்பூச்சி பிடித்து சேர்ப்பானா?’ என்றெல்லாம் ஒருபோதும் கேட்க மாட்டார்கள். ‘அவன் வயது என்ன? அவனுக்கு அண்ணன் தம்பிகள் எத்தனை பேர்? அவன் எடை என்ன?’  என்றெல்லாம்தான் கேட்பார்கள். அப்படி கேட்டால்தான் அந்த பையனைப்பற்றி சரிவர தெரிய வந்தது என்று நினைப்பார்கள்.

‘நான் ஒர் அழகான வீட்டைப் பார்த்தேன்.   இளஞ்சிவப்பு கல்லால் கட்டியது.  ஜன்னல் அருகே ஜெரானியம் பூஞ்செடிகள் இருந்தன. மேல் கூரையில் புறாக்கள் இருந்தன’ என்று நீங்கள் பெரியவர்களுக்கு சொன்னால்  அவர்களால் அத்தகைய  வீட்டை  கற்பனை செய்து பார்க்க முடியாது. ‘ஓரு லட்சம் பவுண்ட் பெறுமானமுள்ள வீட்டைப் பார்த்தேன்’ என்றுதான் சொல்ல வேண்டும். உடனே அவர்கள், ‘ஓ, எவ்வளவு அழகு’ என்று குரல் கொடுப்பார்கள்.”

எண்ண எண்ண குறையும். எண்ணினால் துன்பம்தான். போம்பாளர் எண்ணாமல் இருந்திருக்கலாம்.

– வைகுண்டம்

மதுரை

எண்ணும் பொழுது வாசித்த போது ஏனோ அக்னி பிரவேசம் செய்த சீதையும் சரயுவில் மறைந்த ராமனும் நினைவுக்கு வந்தனர்.

நெல்சன்

எண்ணும்பொழுது- கடிதங்கள் 4

எண்ணும்பொழுது- கடிதங்கள் 3

எண்ணும்பொழுது- கடிதங்கள் 2

எண்ணும்பொழுது- கடிதங்கள் 1

முந்தைய கட்டுரைலலிதா என்ற யானை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநற்றுணை கலந்துரையாடல்