உண்மை எவ்வாறு உருக்கி வார்க்கப்பட்டது?
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
இங்கிலாந்தில் இன்னும் கோவிட் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கின்றன.மிக தேவையின்றி வெளியே போக முடியாது, கூடாது. விண்வெளி கப்பலில் பயணம் செய்வதாக நினைத்துக்கொள்வேன். உள்ளேயே எல்லாம் – உடற்பயிற்சி, உணவு, கேளிக்கை, வேடிக்கைப்பார்த்தல்..ஆனால் கப்பலின் உள்ளேயே எல்லாம்; வெளியே போக முடியாது…
தங்களது சமீபத்திய “உண்மை எவ்வாறு வார்க்கப்பட்டது?” வீரம் விளைந்தது நாவலைப்பற்றிய கட்டுரையைப் படித்தேன்.
முதிரா இளைஞனின் கற்பனாவாதத்தன்மை கொண்ட படைப்பு என்று நீங்கள் குறிப்பிட்டது மிகச்சரி.
இந்த நாவலை, என் பதின்ம வயதில் வாசித்திருக்கிறேன். பாவெல் கர்ச்சாகின்! அடேயப்பா, என்னென்ன கிளர்ச்சிகள் இதைப்படித்தபோது!
80களின் ஆரம்பத்தில் தாராபுரம் எனும் கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத (ஆப்டிக்கல்ஸ் கிடையாது ஆனால் நான்கு தியேட்டர்கள் உண்டு) புழுதிகாற்று வீசி அடிக்கும் “டவுனில்” வாழ்ந்திருந்த போது இந்த நாவலை வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது – பாவெல் என் உடனடி கதாநாயகனாக மாறிப்போனார்.
தாராபுரம் சுப்பிரமணியர் கோவிலுக்கு எதிர் சாரியில், புது காவல் நிலையத்திற்கு அருகில் இருந்த தபால் நிலையத்தை ஜெர்மானிய பாஸிஸ படைகள் சூழ்ந்துகொண்டபோது நான் உள்ளிருந்து தபால் நிலைய அக்காக்களை ஓர் அறையில் பத்திரமாக அடைத்துவிட்டு சப் மெஷின்களுடனும் என்னிடமிருந்த ஓரிரு எறி குண்டுகளைக் கொண்டும் வீரத்துடன் போரிட்டேன். ஒரு நாள் கழித்து அலை அலையாய் ஆர்ப்பரித்து வந்த செம்படை பாஸிசிட்டுகளை அழித்தொழிக்கும் வரை தபால் நிலையத்தை நானொருவனாகவே அரணாக தாங்கி நின்றேன். எல்லாம் முடிந்த பின் செம்படை கமாண்டர் வஸ்கோவ் குதிரையிலிருந்து குதித்து வந்து என் தலையை செல்லமாக தட்டிவிட்டு, “அடேயப்பா..ம்! பெரிய ஆள்தான் நீர்..தோழர்! இந்தா, இதை வைத்துக்கொள் என்னருமை குமார்..!” என்று என்னிடம் இரு பிஸ்கோத்துகளையும் புது சப்பாத்துகளையும் அளித்துவிட்டு புகையிலை பொட்டலத்தை பிரிக்கும்போது வீட்டு வேலைக்கார கமலா பாட்டி எழுப்பிவிட்டு விட்டார்.
அந்த பதின்ம வயதில், பாவெலின் தோழி/காதலி (இரண்டாவது பாகத்தில் இவர் திருமணம் ஆன சீமாட்டியாக ரயிலில் பாவெலைச்சந்திப்பார்), ரயில்வே ஷெட்டில் வேலை செய்த அண்ணன் ஆர்த்தியோமும் அதன் பின் அந்த “தோழர்” ஷூஹ்ராய் (இவர் பாவெலுக்கு குத்துச்சண்டையும் சொல்லித்தருவார்) இவர்கள்தாம் மனதில் நின்றிருந்தார்கள்.
பாவெல் போரில் முதன் முறையாக ஒரு போலிஷ் வீரரரை குத்திக்கொல்வதும் நினைவிலிருக்கிறது…ஆனால் நூலில் இருந்த வேறு எந்த சோஷலிஸ பிரச்சாரமும் நினைவிலில் இல்லை. ஏனெனில் ஒரு நீங்கள் குறிப்பிட்டது போல் காலம் செல்லச்செல்ல இந்நாவலுக்கு மதிப்பே இல்லை.–வெறும் அதிகாரவர்க்கம் விரும்பியபடி எழுதி வைக்கப்பட்ட எழுத்து.
இந்த நாவலைப் படித்து ஓரிரு வருடங்களுக்குப்பின் திண்டுக்கல் புனித மேரி மேல்நிலைப்பள்ளியை ஒட்டிய நியு செஞ்சுரி புக் ஹவுஸில்தான் “அதிகாலையின் அமைதியில்” எனும் நூலைப் படித்தேன். பாவெலுக்குப்பின் வஸ்கோவ் என் கதாநாயகனாக மாறிப்போனார் (என்னது முப்பது வயது கதாநாயகனா…சரி, பரவாயில்லை என்றெல்லாம் நினைத்திருக்கிறேன்!).
அந்த நாவலில் அந்த விமான எதிர்ப்பு படை பெண்களில் ஒருவர், தான் பாவெலைச் சந்தித்திருப்பதாக சொல்லும் போது “ஆகா, நம்ம பாவெல்!” என்று உற்சாகமானேன்!
அதிலும் கூட “பாவெல், எளிமையானவன். எங்களிடம் சாதாரணமாக பழகினான். தேநீர் கொடுத்து உபசரித்தான்” என்றெல்லாம் ஒருவர் சொல்லும் போது இன்னொருவர் அந்த பிம்பத்தை உடைத்துவிடுவார்! “ அவர் பாவெல் இல்லை; பெயர் ஒஸ்திராவ்ஸ்கி. அவருக்கு பாரிச வாய்வு; கண்கள் தெரியாது; எங்கள் பள்ளியிலிருந்து கடிதங்கள் எழுதினோம்!”
யுத்தத்தில் போர் வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்காக, அவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதற்காக, இன்னும் கொடூரமாகச் சொல்லவேண்டுமெனில் திரும்பி வராத பயணத்திற்கு அவர்களை செலுத்த பல கதாநாயகர்கள், சாகசகாரர்கள் தேவைப்படுகிறார்கள்.
அண்டார்ட்டிக்கா தென் துருவத்தை அடையச்சென்ற பயணத்தில் உயிரிழந்த கேப்டன் ராபர்ட் பால்கன் ஸ்காட் பற்றிய சித்திரங்கள் முதல் உலகப்போர் சமயத்தில் பிரிட்டிஷ் போர் வீரர்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டன.
ஸ்காட்டின் மனைவிக்கு யுத்த (சகதி) களத்திலிருந்து ஏராளமான பிரிட்டிஷ் போர் வீரர்களிடமிருந்து கடிதங்கள் வந்தன. நாட்டிற்காக உயிர் கொடுத்த ஸ்காட்டின் தியாகம் அவர்களுக்கு பெரும் உத்வேகத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
இன்று திரும்பிப்பார்க்கையில் இது போன்ற படைப்புகள் நிச்சயம் “customise” செய்யப்படாமல் வெளி வந்திருக்க சாத்தியமே இல்லை என்பது தெரிகிறது.
சிவா கிருஷ்ணமூர்த்தி
திரு ஜெமோ
பாவல் கர்ச்சாக்கின் நேற்றும் இன்றும் மட்டுமல்ல நாளைக்கும் ஒவ்வொரு கம்யூனிஸ்டுக்கும் ஆதர்சமாகவே இருப்பான். ஏனென்றால் கம்யூனிசம் தோல்வி அடையாது. கம்யூனிசத்தில் பின்னடைவு உண்டு, வீழ்ச்சி கிடையாது. ஏனென்றால் அது அறிவியல்
இன்று நிகலாய் ஒஸ்திரோவ்ஸ்கிய் ரஷ்யாவில் தூற்றப்படலாம். உக்ரேனில் அவர் தேசத்துரோகி என்று பழிக்கப்படலாம். ஒரு நல்ல கம்யூனிஸ்டு தேசத்துரோகி மதத்துரோகி இனத்துரோகியாகத்தான் இருக்கமுடியும். அவன் கம்யூனிசத்துக்கு மட்டுமே விசுவாசமானவனாக இருப்பான்
இன்று துரோகியான பெத்லியூரா போன்றவர்கள் கொண்டாடப்படலாம். ஆனால் ஒரு நாளை வரும். அன்று பெத்லியூராவின் சிலைகளும் நினைவிடங்களும் இடித்து அழிக்கப்படும். அங்கே மீண்டும் நிகலாய் ஒஸ்திரோவ்ஸ்கிய் பொலிவுடன் இடம்பெறுவார். அப்போதும் வீரம் விளைந்தது வாசிக்கப்படும்.
ஆர். ராஜ்குமார்