2012ல் வெளிவந்த ஸ்பிரிட் என்ற படத்தில் ஒருபாடல். ரஞ்சித் எழுதி இயக்கிய படம். குடிக்குஅடிமையான செய்தியாளர், எழுத்தாளர் ரகுநந்தனன் [மோகன்லால்]. அவருடைய மனைவி அவரை திருத்த முற்பட்டு முடியாமல் விவாகரத்து செய்து மகனுடன் பிரிந்துசென்று அவருடைய நெருங்கிய நண்பனையே திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார். அவ்வப்போது மனைவியைச் சந்திக்கவரும் ரகுநந்தனன் குடித்திருந்தால் அவளுடன் பேசுவதில்லை
குடியை நிறுத்திவிட்டபின் மனைவியைப்பற்றிய ஏக்கம் மேலெழுகிறது. மனைவியைப் பார்க்க வருகிறார். அப்போது ஒரு பாடல். அதனூடாக அவர்களின் உள்ளம் வெளிப்படும் காட்சி. அந்தப்படத்தின் மிகச்சிறந்த காட்சியும் இதுவே.
இதில் வசனங்களும் கூர்மையானவை. மனைவி சொல்லும் வரி “இதுபோல ஒரு இரவுக்காக நான் என்னையும் சற்று மிச்சம் வைத்திருக்கவேண்டும்”
லால் சொல்லும் வரி “குடி நிறுத்தியது நல்லதாகப் போயிற்று. இல்லாவிட்டால் உன்னை ரேப் செய்திருப்பேன்”
கடைசி வசனம். “ஒரு காலத்தில் என் மனைவியாக இருந்தவளே, நாம் இன்னொரு பிறவியில் சந்திப்போம். பழைய ரோலில்”
மோகன்லால் என்னும் மகாநடிகனை இந்த ஒரு பாடலிலேயே காணலாம். கொந்தளிப்பு, பெரும்காதல், இழப்பின் ஏக்கம், தனிமை, துயரின் உச்சியில் மெல்லிய புன்னகை என வெறும் முகத்தாலேயே வெளிப்படுகிறார். ஆனால் ஒரு நடிகர் அதை நடிக்கிறார் என்று நமக்குநாமே சொல்லி நம்பவைக்க முயன்றாலும் முடிவதில்லை. இது பலபேர் கூடியிருக்க, ஒளியமைப்பும் கலையமைப்பும் செய்ய, துளித்துளி ‘ஷாட்’களாக எடுக்கப்பட்டது என்பதையே நம்பமுடியவில்லை. அத்தனை பிசிறற்ற உணர்வுத்தொடர்ச்சி. நடிப்பு சிலசமயம் உண்மையான வாழ்க்கையையே மிஞ்சி நின்றிருக்கிறது.
*
மலையாளக் கவிஞர் ரஃபீக் அகமது எழுதிய பாடல். மலையாள நவீனக் கவிஞராக அறிமுகமான ரஃபீக் அகமது பி.ராமன், பி.பி.ராமச்சந்திரன் ஆகியோரின் தலைமுறை. குற்றாலத்தில் நிகழ்ந்த தமிழ் மலையாள கவிதை உரையாடலுக்கு வந்திருக்கிறார்.
ஷஹபாஸ் அமன் இசை பாடலுக்கு போடப்பட்ட ஒரு ஆலாபனம் மட்டும்தான். விஜய் ஜேசுதாஸின் குரலில் பழைய ஜேசுதாசின் சாயலைக் கேட்கமுடிகிறது. மலையாளத்தின் புகழ்பெற்ற கவிதை-பாடல் இது. மலையாளம் கற்பனாவாதத்திற்குரிய இசைகொண்ட மொழி. அந்த மென்மை வெளிப்படும் ஒரு பாடல்.
மலையாளம்
எழுதியவர் ரஃபீக் அகமது
இசை ஷஹபாஸ் அமன்
பாடியவர் விஜய் ஏசுதாஸ், காயத்ரி
மழகொண்டு மாத்ரம் முளைக்குந்ந வித்துகள்
சிலதுண்டு மண்ணின் மனஸில்
ப்ரணயத்தினால் மாத்ரம் எரியுந்ந ஜீவன்றே
திரிகளுண்டு ஆத்மாவினுள்ளில்
ஒரு சும்பனத்தினாய் தாகம் சமிக்காதே
எரியுந்ந பூவிதள் தும்புமாயி
பறயாத்த ப்ரியதரமாம் ஒரு வாக்கின்றே
மதுரம் படர்ந்ந ஒரு சுண்டுமாயி
வெறுதே பரஸ்பரம் நோக்கியிரிக்குந்நு
நிற மௌன சஷகத்தினு இருபுறமும் நாம்
சமய கல்லோலங்கள் குதறுமீ கரையில்நாம்
மணலின்றே ஆர்த்ரமாம் மாறிடத்தில்
ஒரு மௌன சில்பம் மெனஞ்ஞு தீர்த்து எந்தினோ
பிரியுந்நு சாந்த்ய விஷாதமாயி?
ஒரு சாகரத்தின் மிடிப்புமாயி?
மழகொண்டு மாத்ரம் முளைக்குந்ந வித்துகள்
சிலதுண்டு மண்ணின் மனஸில்
ப்ரணயத்தினால் மாத்ரம் எரியுந்ந ஜீவன்றே
திரிகளுண்டு ஆத்மாவினுள்ளில்
தமிழில்
மழையால் மட்டுமே முளைக்கும் சில விதைகள்
சில உண்டு மண்ணின் மனதில்
காதலால் மட்டுமே எரியும் உயிரின்
சில திரிகளுண்டு ஆத்மாவின் உள்ளே
ஒரு முத்தத்திற்காக தாகம் அடங்காமல்
எரியும் பூவிதழ் நுனியுடன்
கூறாத இனியதொரு சொல்லின்
இனிமை படர்ந்த உதடுகளுடன்
வெறுமே ஒருவரை ஒருவர் பார்த்து அமர்ந்திருக்கிறோம்
நிறையும் மௌனக் கோப்பைக்கு இருபுறமும் நாம்
காலத்தின் நீரொலிகள் திமிறும் இந்தக் கரையில் நாம்
மணலின் ஈரமார்பில்
ஒரு மௌனசிற்பம் வனைந்து முடித்து
எதற்காகவோ பிரிகிறோம் இருளும் துயரத்துடன்.
ஒரு கடலின் துடிப்புடன்.
மழையால் மட்டுமே முளைக்கும் சில விதைகள்
சில உண்டு மண்ணின் மனதில்
காதலால் மட்டுமே எரியும் உயிரின்
சில திரிகளுண்டு ஆத்மாவின் உள்ளே
*
இசையமைப்பாளர்- பாடகர் ஷஹபாஸ் அமன் பாடிய வடிவம்