அஞ்சலி:இளவேனில்

இளவேனில் கோவை ஞானியுடன் இணைத்து என் நினைவில் நின்றிருப்பவர். எழுபதுகளில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முகமாக அறியப்பட்டவர். ஞானிக்கும் அவருக்குமான மோதல்கள், நையாண்டிகள் ஞானி சொல்லியே எனக்கு தெரியும். அதிலொன்றுதான் ’தோழர் இளவேனில் நீங்கள் போரீஸ் பாஸ்டர்நாக்கை படித்திருக்கிறீர்களா?”என்ற கதை.[ ஞானி-1]

அவரை நான் ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். ஓரிரு சொற்கள் பேசியிருக்கிறேன். அது ஒரு மரியாதைச் சந்திப்பு. அவர் என்னுடைய எந்த படைப்பையும் படித்திருக்கவில்லை. சொல்லப்போனால் ஞானியின் சீடன் என்று மட்டும் பொதுவாக தெரிந்து வைத்திருந்தார்

இளவேனில் போல அன்று இடதுசாரி இயக்கங்களில் தீவிரமாக இருந்த பலரும் உள்ளூர திராவிட இயக்க ஆதரவாளர்கள். பலர் மாணவப்பருவத்தில் திராவிட இயக்க ஆதரவாளர்களாக இருந்து திராவிட இயக்கம் அரசதிகாரத்திற்கு வந்தபிறகு அதில் ஓங்கிய ஊழலைக் கண்டு மனம் கசந்து இடதுசாரிகளாக ஆனவர்கள். சிலர் இடதுசாரி இயக்கங்களின் உள்ளடி அரசியலால் வெளியேற்றப்பட்டு திராவிட இயக்கத்தை நாடியவர்கள். இளவேனில் இரண்டாவது வகை.

இளவேனில் இளமைக்கான இலட்சியவாத வேட்கையுடன் கம்யூனிஸ்டுக் கட்சியிலும் முற்போக்கு முகாமிலும் செயல்பட்டார். ஆனால் அவருக்குள் திராவிட இயக்கத்தின் பரபரப்பு அரசியலில் ஈடுபாடு இருந்தது. அவருக்கும் கங்கைகொண்டான், மு.மேத்தா, நா.காமராஜன் போன்ற அன்றைய இடதுசாரிக் கவிஞர்களுக்கும் சினிமாமோகம் பெருமளவுக்கு இருந்தது. ஓர் பொதுஆளுமையாக, நட்சத்திரமாக உயர்ந்துவிடவேண்டும் என்ற வேட்கை அவர்களை ஆட்கொண்டது. சொல்லப்போனால் இன்னொரு மு.கருணாநிதி ஆகிவிடவேண்டும் என்ற வேகம். அவர்கள் எவருமே அதில் வெற்றிபெறவில்லை. அவர்களுடைய இலக்கிய வாழ்க்கையில் அந்த வேட்கை திசைமாற்றத்தையும் வீழ்ச்சியையுமே கொண்டுவந்தது.

ஞானி என்னிடம் பேசும்போது இளவேனில் மேடையில் பேசுவதைப்பற்றி வர்ணித்தார். எழுந்து கைவீசி பேசிக்கொண்டே மக்கள் நடுவில் இருந்து மேடைக்குச் செல்வது, மேடையில் சட்டென்று பேசிக்கொண்டிருப்பவரை மறித்து ஆவேசமாக பேச ஆரம்பிப்பது போன்ற நாடகீயமான முறைகள் அவருக்கிருந்தன.  “அவரு அப்டியே கார்க்கி நாவலிலே இருந்து எந்திரிச்சு வந்தமாதிரி இருக்கும். அவரு தான் ஒரு பாவெல் வ்லாசோவ்னும் புரட்சி சூழ்ந்திருக்குன்னும் நம்பினார்” அவர்கள் உள்ளூர விழைந்தது ஒரு வரலாற்று ஆளுமை என்னும் பாத்திரம்.

ஆனால் அன்றும் இன்றும் கம்யூனிஸ்டுக் கட்சிகள் அந்தவகையான தனிநபர் கனவுகளுக்கு இடமளிப்பவை அல்ல. அதன் தலைவர்களே தங்களை முன்னிறுத்துவதில்லை. தொண்டர்களுக்கு முகமே அனுமதிக்கப்படுவதில்லை. அத்துடன் பழைய நக்சலைட்கால பிரிவினை அனுபவங்கள் இருந்தமையால் கட்சி கலையிலக்கியச் செயல்பாடுகளை கடுமையாக கண்காணித்தது. கட்சியின் அதிகாரபூர்வ நிலைபாட்டுக்கு அப்பால் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. கட்சியின் ஊழியர் ஒருவர் நேரடியாக நியமிக்கப்பட்டு, கலையிலக்கிய அமைப்புக்களில் தலைமைவகித்து, அனைத்தையும் கண்காணித்தார்

அவ்வாறுதான் இளவேனில் கட்சியை விட்டு வெளியேறினார். நேராக திமுகவுக்குச் சென்று சேர்ந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். “முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலே ரெண்டாயிரம் உறுப்பினர்னு சொல்றாங்க. அத்தனை எழுத்தாளர்களாய்யா தமிழ்நாட்டிலே? அத்தனை எழுத்தாளர் எழுதினா உருப்படுமாய்யா தமிழ்?” என்ற அவருடைய கேலி புகழ்பெற்றது.

ஆனால் திமுகவில் அவர் இடதுசாரிகளை எதிர்ப்பதற்கான கருவியாகவே பயன்படுத்தப்பட்டார். அன்றுமின்றும் அறிவியக்கவாதிகளை அவ்வாறு பயன்படுத்தும் தன்மை அக்கட்சிக்கு உண்டு. மு.கருணாநிதிக்கு மிகநெருக்கமானவராக இருந்தார் இளவேனில் – அல்லது அப்படி தோற்றமளித்தார். மு.கருணாநிதியை மேடைகளில் உச்சகட்டமாக புகழ்ந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அரசியலில் அவருக்கு எந்த இடமும் அளிக்கப்படவில்லை. சினிமாவிலும் வாய்ப்புகள் அமையவில்லை. பொருளாதார வெற்றியும் கைகூடவில்லை. உளியின் ஓசை படத்துக்கு அவர் இயக்குநர் என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் அதனால் அவருக்கு பொருளியல் லாபம் ஏதும் இல்லை என்றும் சொல்லப்பட்டது.

கடைசிக்காலத்தில் கைவிடப்பட்டவராகவும் கசப்பு நிறைந்தவராகவும் இளவேனில் இருந்தார். அவர் எண்ணியதுபோல இலக்கியத்திலும் அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை. இன்று இலக்கியத்தில், தமிழக முற்போக்கு இலக்கியத்தில்கூட இளவேனிலுக்கு எந்த குறிப்பிடும்படியான பங்களிப்பும் இல்லை.

இக்குறிப்பில் முன்னாள் மனஓசை குழு இடதுசாரி எழுத்தாளரான [பசலை] கோவிந்தராஜ் இளவேனில் பற்றி ஒரு சித்திரத்தை முன்வைக்கிறார். அது எந்த அளவுக்கு மெய்யானது என்று சொல்லத் தெரியவில்லை. இளவேனில் முற்போக்கு முகாமிலிருந்து வெளியேறி தீவிர இடதுசாரியாகச் செயல்படவில்லை, திராவிட இயக்கத்துக்கே சென்றார். ஆகவே அவருடைய முரண்பாடு இடதுசாரி கொள்கைநிலைபாடு சார்ந்தது அல்ல, அவருடைய இலக்கு புகழும் செல்வமும்தான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது

கட்சியில் இருந்து இளவேனில் வெளியேறியமைக்குக் காரணம் அவருடைய தனிப்பட்ட ஆசைகளும், அவருடைய தன்னை முன்னிறுத்தும் இயல்பும்தான். மறுபக்கம் கம்யூனிஸ்டுக் கட்சி பரப்பியல் அணுகுமுறைகளை கடுமையாக நிராகரித்து தன்னை ஒரு கட்டுப்பெட்டியான தொண்டர்கட்சியாகவே முன்வைத்துக்கொண்டிருந்தது.அதன் ராணுவத்தனமே கலைஞர்களையும், தனிநபர் சார்ந்த இலட்சியவாதம் கொண்டவர்களையும், தனக்கென கனவுகள் கொண்டவர்களையும் வெளியேற்றியது.

இளவேனில் ஒரு மாயமான் வேட்டையில் தன்னை அழித்துக்கொண்டவர் என்றே சொல்லவேண்டும். அவர் பெயர் சொல்ல ஒரு படைப்பையாவது எழுதிவிட்டுச் சென்றிருக்கலாம்

 

இலட்சியவாதத்தின் கரைந்த நிழல்- கோவிந்தராஜ்

கவிஞர் இளவேனில் காலமானார் என்கிற செய்தியும் அதைத் தொடர்ந்து முகநூல் முழுக்க அஞ்சலி செய்திகளும் பரவலாகப் பேசப்படுகின்றன.ஒரு காலத்தில் அவரது எழுத்துக்களால் வசீகரிக்கப்பட்டவன் என்ற வகையில் அவர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்.

80, 90 களில் முற்போக்கு முகாமில் எழுந்த மிக நுட்பமான குரல் அவருடையது. திரு. அஸ்வகோஷ் [ராஜேந்திரசோழன்] அவர்கள் எழுதிய ‘வட்டங்கள்’ நாடகத்தைத் திருப்பூர் ‘யுக விழிப்பு’ பதிப்பகம் வெளியிட்டது. அதற்கு அட்டைப் படத்தை வரைந்தவர் இளவேனில்.அவருடைய அட்டைப்படங்கள் செம்மலர் பத்திரிகையில் முகப்பில் இடம் பெற்றன.அதைத் தொடர்ந்து அவர் ஏராளமான கவிதைப் புத்தகங்களுக்கு அட்டைப் படங்களை வரைந்திருக்கிறார்.மலையூர் மம்பட்டியான் பட எழுத்துக்களை உருவாக்கியதும் அவர்தான்.

இன்குலாப் கவிதைகள் புத்தகத்திற்கு அவர் எழுதிய முன்னுரை மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.”லட்சியங்களே நிச்சயமானவை, மனிதனின் கனவுகள் மரணம் இல்லாதவை!” “நான் இலக்கியவாதிதான் அதற்காக என் சாப்பாட்டுத் தட்டில் புத்தகத்தை வைத்துக் கொள்ள முடியாது.நான் இலக்கியவாதிதான் என் கட்டிலில் புத்தகங்களோடு தூங்கி விட முடியாது.எனக்கு நிஜமான வாழ்க்கை வேண்டும்!”

சாலையோரத்தில் நடந்த கண்மணி ராஜம் இறப்பு குறித்த அவருடைய கவிதைகள் உணர்ச்சிகளோடு இருப்பது.ராஜராஜசோழன் குறித்த இன்குலாப்பின் குரலோடு இணைந்து ஒலித்தது அவருடையது!

இந்தத் தீவிர இலக்கியவாதிகள் பின்னாட்களில் பொதுவுடைமை இயக்கங்கள் குறித்து வைத்த விமர்சனங்களும், அவர்களுக்கு எதிரான அவருடைய கருத்துக்களும் மிக முக்கியமானவை.பொதுவுடைமை இயக்கங்கள் பாராளுமன்றப் பன்றித் தொழுவத்தில் ஈடுபட்டு வாய்ச்சொல் வீரர்களாக பவனி வந்த காலகட்டத்தில் “லட்சியங்களே நிச்சயம் ஆனவை” என்கிற அவருடைய குரல் மெல்ல மெல்லத் தேய்ந்து போனது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து ஒருவன் முற்போக்காளர் ஆகவே வாழ வேண்டுமென்றால் சில அடிப்படைக் கட்டாயங்கள் தேவையாக இருக்கின்றன. அவன் அரசு ஊழியராக இருக்க வேண்டும்.அல்லது குறைந்தபட்சம் சொந்த வீட்டிலாவது வசிக்கிற பணக்காரனாக இருக்க வேண்டும்.அல்லது கட்சியில் தீவிரமான கட்டப்பஞ்சாயத்து ஆளாக இருக்கவேண்டும்.இவைகள் எல்லாம் இல்லாமல் ஒருவன் முற்போக்காக எழுதிப் பிழைப்பது என்பது அபத்தம்…!

“இந்த ஓநாய்களின் பள்ளத்தாக்கில் தான் உயிர் பிழைக்க ஓடினேனே…!”\

“வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு போவது மட்டுமல்ல,முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு போவதும் முட்டாள்தனம்தான்” என்ற அவருடைய விமர்சனம் காத்திரமானது.

பின்னாட்களில் அவர் திமுக ஆதரவாளராகவும் அதற்கு சேவகம் செய்கிற ஆளாகவும் மாறி விட்ட போது கார்க்கி பத்திரிகையில் அவர் எழுதிய அந்தத் தீவிரமான வார்த்தைகள், இலட்சியவாதம் எல்லாம் எவ்வாறு சீரழிக்கப்படுகிறது என்பதற்கான சமகால சாட்சியங்கள்.

உண்மையில் பொதுவுடைமையாளர்கள் இதுபோன்ற பார்வை உடையவர்களை திட்டமிட்டு அமைப்பில் இருந்து வெளியேற்றினார்கள்.

எமர்ஜென்சி காலத்தில் கே.முத்தையா, ராமாயணம் உண்மையும் புரட்டும், மகாபாரதம் உண்மையும் புரட்டும் என்று எழுதிக் கொண்டிருந்த காலத்தில் இளவேனிலும், தணிகைச்செல்வனும், இன்குலாப்பும் அரசுக்கு எதிரான தீவிரமான இலக்கியங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அஸ்வகோஷ் எழுதிய பல கதைகள் முற்போக்கு முகாமில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பாத்ரூம் போவதற்கு வழி இல்லாமல் சிக்கிக் கொண்ட ஒருவர் குறித்த அவருடைய கதை விமர்சிக்கப்பட்டது.”ஆய் போவதெல்லாம் பிரச்சினையா தோழர்…!என்ற கேள்வியை அவர் இளிவரலோடு சந்திக்க நேர்ந்தது.

கார்க்கி பத்திரிக்கைக்குப் பிறகு அவர் குறித்து எந்தச் செய்தியும் வாசிக்கவில்லை. கொஞ்ச காலம் தராசு பத்திரிகையில் தொடர் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது வி.பி.சிந்தன் இறந்தபோது அவர் குறித்த ஒரு கட்டுரையும் எழுதி இருந்தார்.

இளவேனிலுடைய இந்தப் பாதை மாற்றம் அவர் ஏற்றுக் கொண்டதா?அவருக்கு வேறு வழி இல்லை. முகத்தில் அறையும் வாழ்க்கை அவரை வழி நடத்தியது…!உளியின் ஓசை என்ற படம் அவர் இயக்கியது என்று சொன்னார்கள் நான் அதைப் பார்க்கவில்லை. அவர் இறந்த பிறகும் முற்போக்கு முகாமில் இருந்து வருகிற அஞ்சலிகள் அவருடைய எழுத்தைத் தவிர்க்கமுடியாமல், அந்த உணர்வுகளை மறைக்க முடியாமல் இருப்பதைக் காண முடிகிறது.

ஆனால் அவருடைய பாதை மாற்றத்திற்கு அவர் மட்டும்தான் காரணமா…?இவர் போன்ற எண்ணற்ற மனிதர்களுடைய கனவுகளைத் தீயிட்டுக் கொளுத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளினுடைய திரிபுவாதம்…! பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போனதுவே….!என்ற பாரதியின் சுயசரிதை முன்னுரை கவிதையை ஞாபகப்படுத்திக் கொள்ள முடிகிறது…!

இளவெனில்… இது போல் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்றமனிதர்களை நம்மால் காண முடியும்.இந்தச் சமூகத்தின் நன்மையின் பொருட்டு தனது சொந்த வாழ்க்கைக்குத் தீ வைத்துக் கொண்டவர்கள் இவர்கள்.ஒரு 70 ஆண்டுகால நீண்ட வாழ்க்கையை பரிசீலிக்கும் போது நமக்குக் கிடைப்பது பெருமூச்சுகளும் கழிவிரக்கமும் தான்.லட்சிய வாதத்தின் கடைசிச் சுழி முகம் சமரசங்களோடு மையம் கொள்வதுதான்.வாழ்க்கைப் பயணத்தில் பெரும் சலிப்பைக் கண்டுணர முடிகிறது.இந்தச் சமூகத்தின் பொருட்டு சிந்தித்து வந்த ஒருவரின் பயணம் இவ்வாறாக நிறைவானது.

கற்றுக்கொள்ள இன்னும் இருக்கிறது.இருளிலிருந்து ஒளியை நோக்கி…! “அஸத்தோமா ஸத்கமய..!” சென்று வருக !!

கோவிந்தராஜ்/ முகநூலில் இருந்து

முந்தைய கட்டுரைஅஞ்சலி:சோலை சுந்தரப்பெருமாள்
அடுத்த கட்டுரையமுனா ராஜேந்திரன், வாழ்க்கைவரலாற்று விமர்சனம்