யமுனா ராஜேந்திரன், வாழ்க்கைவரலாற்று விமர்சனம்

அன்புள்ள ஜெ

அகழ் இதழில் ஷோபா சக்தி பற்றி எழுதப்பட்டிருந்த கட்டுரைக்கு நீங்கள் கண்டனம் தெரிவித்திருந்தீர்கள். யமுனா ராஜேந்திரன் அவருடைய முகநூலில் நீங்களே அந்த மாதிரி தனிப்பட்ட உடல்குறைகளைச் சொல்லி இலக்கிய விமர்சனம் எழுதியவர்தான் என்று சொல்லி ஒருமையில் வசைபாடியிருந்தார். மனுஷ்யபுத்திரனின் உடல்குறையைச் சுட்டிக்காட்டி நீங்கள் எழுதியிருந்தீர்கள் என்றும் கமலா தாஸ் அழகானவர் அல்ல என்று எழுதியிருந்தீர்கள் என்றும் சொல்லியிருந்தார்.

சா.திருஞானம்

***

அன்புள்ள திருஞானம்

ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால் தலைமுறை தலைமுறையாக வரும் வாசகர்களிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மீண்டும்.

யமுனா ராஜேந்திரனிடம் எனக்கு எப்போதுமே பரிவான அணுகுமுறையே உள்ளது. அவரைப்பற்றி எப்போதுமே கனிவுடன்தான் எழுதுகிறேன். அவர் வேண்டுமென்றே எதையும் சொல்லவில்லை. அவருக்கு அவ்வளவுதான் புரியும். அவர் ஒரு பெஞ்ச்மார்க். அவருக்கு புரிந்தால் தமிழகத்தில் எந்தப் பாமரருக்கும் புரியும். தமிழக முற்போக்கு எழுத்தாளர்களுக்கு அவர் ஒரு சுட்டுப்பழகும் இலக்குப்பலகை போல. அவரைச் சென்றடைந்தால் அது மக்கள் இலக்கியம்.

நான் மனுஷ்யபுத்திரனைப் பற்றி எழுதிய கட்டுரையும் கமலாதாஸ் பற்றி எழுதிய கட்டுரையும் இதே தளத்திலேயே உள்ளன. அவற்றை நீங்கள் படித்துப்பார்க்கலாம். மனுஷ்யபுத்திரனின் உடல்குறையைச் சுட்டிக்காட்டி அவரை இழிவுசெய்ய, குறைவுபடுத்த முயலும் கட்டுரை அல்ல அது. அவருடைய கவிதைகளைப் பற்றி எழுதப்பட்ட மிகப்பெரிய பாராட்டுக்கட்டுரைகளில் ஒன்று அது [கடவுளற்றவனின் பக்திக்கவிதைகள்]

நான் மனுஷ்யபுத்திரனின் கவிதைப்பணி தொடங்கும்போதே உடனிருந்தவன். அவரை ஒரு முதன்மைக்கவிஞராக தொடர்ந்து முன்வைப்பவன். அந்தக்கட்டுரையும் அப்படிப்பட்ட ஓர் ஆய்வுதான்.

மனுஷ்யபுத்திரன் அவருடைய இளமையில் அவருடைய உடல்குறை பற்றிய கவிதைகளை, தன்னிரக்கம் நிறைந்த வரிகளை எழுதிக்கொண்டிருந்தார். அன்று அத்தகைய கவிதைகளை பலர் பாராட்டினார்கள். அப்போதே அவ்வகை கவிதைகளை நிராகரித்து, அவை கவிஞனை ஓர் உடல் மட்டுமாக வாசகர் பார்க்க வைப்பவை என நான் அவருக்கு எழுதியிருக்கிறேன். கவிஞன் உடல் மட்டுமல்ல. அவன் ஓர் ஆளுமை, ஓரு பண்பாட்டு இருப்பு. அவனுடைய உடல் அவனுடைய அடையாளம் அல்ல. ஆகவே அத்தகைய தன்னிரக்கத்தை எவர் எழுதினாலும் எனக்கு உடன்பாடல்ல. அதை இன்று வரை சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

அந்த கட்டுரையில் ஆரம்பத்தில் தன் உடற்குறை சார்ந்த தன்னிரக்கத்துடன் எழுதிய மனுஷ்யபுத்திரன் பின்னாளில் அந்த உடற்குறையாளன் என்னும் தன்னுணர்வை சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட அனைவருடனும் அடையாளப்படுத்திக் கொள்வதாக எப்படி விரித்தெடுக்கிறார் என்றும், அது அவரை மேலான அறவுணர்வு கொண்டவராக எப்படி ஆக்குகிறது என்றும், அது அவருடைய அரசியலாக எப்படி ஆகிறது என்றும் விவாதித்திருக்கிறேன். அதை மீண்டும் பலமுறை விளக்கியிருக்கிறேன்.

கமலா தாஸுடன் நேரடியான மெல்லிய பழக்கமும் சில உரையாடல்களும் இருந்தன. அவருடைய கதைகள் தமிழில் கொண்டுவரப்படவேண்டும் என்று நான் முயற்சி எடுத்தேன். என்னுடைய முன்னுரையுடன், நண்பர் நிர்மால்யா மொழியாக்கத்தில், முதல் தொகுதி வெளிவந்தது.

கமலா தாஸ் பற்றி வாசிக்கப்புகுபவர்கள் அவர் தன்னைப்பற்றி எழுதியவை, பொதுவெளியில் கருத்துச் சொன்னவை ஆகியவை சார்ந்து அவருடைய படைப்பாளி என்னும் ஆளுமையை தொகுத்துக்கொள்ள முடியாது. தன் கட்டற்றகாமம் மற்றும் முறைமீறிய காதல் பற்றி அவர் எழுதிய ’என் கதை’ என்ற தன்வரலாறு தொடக்க கால படைப்பு. புகழ்பெற்றது. பின்னர் அது முழுக்கமுழுக்க பொய், பணத்துக்காக பிரசுரகர்த்தர் கோரியதை எழுதினேன் என அவரே எழுதினார்.

பின்னர் அவர் என்னென்னவோ சொல்லியிருக்கிறார். கிருஷ்ணபக்தையாக திகழ்ந்திருக்கிறார். இந்து மதவெறியர் போல பேசியிருக்கிறார். தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். காந்தி, மார்க்ஸ், இஎம்எஸ் எல்லாரையும் வசைபாடியிருக்கிறார். நெருக்கடிநிலையை ஆதரித்திருக்கிறார். அவருடைய கருத்துக்களில் தொடர்ச்சியோ ஒழுங்கோ இருக்காது. கடைசியாக அவர் இஸ்லாமுக்கு மாறினார். சில ஆண்டுகளிலெயே இஸ்லாம் தன்னை ஏமாற்றிவிட்டது , மீண்டும் இந்துவாக மாறப்போகிறேன் என்று பேசினார். [அந்தப்பேச்சையே நான் கேட்டேன். அது செய்தியாகவும் வந்தது. அதைப்பற்றி கல்பற்றா நாராயணன் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார்] அதன்பின் அதை மறுத்தார். சிலநாட்களில் மறைந்தார்

நான் அவருடைய அவரைப்பற்றி எழுதிய குறிப்பில் அவருடைய அந்த ஆளுமையை புரிந்துகொள்ள முயல்கிறேன். கமலாவின் தோற்றம் பற்றிய அவருடைய தாழ்வுணர்ச்சி அவரை அவருடைய உயர்குடிச்சூழலில் எப்படி அன்னியப்படுத்தியது, அதன் விளைவாக அவர் எப்படி ஒரு கலகக்காரியாகவும் மரபுமறுப்பு மனநிலை உடையவராகவும் மாற்றியது என்பதை விளக்கியிருந்தேன்.[ கேரளத்தின் புகழ்பெற்ற நாயர் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் கமலா.மாத்ருபூமி அவர்களின் குடும்பப் பத்திரிகை]

இது அவரே அவருடைய இளமைக்காலம் பற்றி எழுதியது. தான் கருப்பாகவும் குண்டாகவும் இருப்பது உயர்சாதி- உயர்குடிச் சூழலில் என்னென்ன அவமதிப்புகளை அளித்தது என்பதும் , அது எப்படி தன்னை சொந்த குடும்பத்தில் இருந்தே அன்னியப்படுத்தியது என்றும், தன் அன்னையே தன்ன அவலட்சணமானவள் என்று எண்ணினார் என்றும் கமலா தாஸ் எழுதியிருக்கிறார். எப்படி அவர்களை சீண்டும் படி நடந்துகொள்ள செய்தது என்றும் கமலா தாஸ் எழுதியிருக்கிறார். நான் அதைத்தான் எழுதியிருக்கிறேன்.

கவனியுங்கள், இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நான் தோண்டி எடுக்கவில்லை. அவர்களின் தனிப்பட்ட தோற்றத்தையோ குறையையோ நான் பேசுபொருளாக ஆக்கவில்லை. அவர்களே தங்கள் புனைவுலகிலும் வெளியிலும் எழுதியவற்றையே விவாதிக்கிறேன். அந்த செய்திகளைக்கொண்டு அவர்களை மட்டம்தட்டவில்லை, அவர்களை சிறுமைசெய்யவில்லை. அவர்களின் புனைவுலகை புரிந்துகொள்ள முயல்கிறேன்.புனைவை புரிந்துகொள்ளும்பொருட்டு படைப்பாளிகளாக அவர்களின் ஆளுமையை வகுத்துக் கொள்ள முயல்கிறேன்

மனுஷ்யபுத்திரன் உடற்குறை கொண்டவர் என்பதும், அவருடைய ஆரம்பகால கவிதைகளின் பொதுவான பேசுபொருளாக அதுவே இருந்தது என்பதும் அவர் கவிதைகளை மதிப்பிடும்போது தவிர்க்கவே முடியாத விஷயம். அதை தவிர்த்து  பேசுவதே அரசியல் சரி என்றால் அது என் வழி அல்ல. கமலா தாஸ் ஒருங்கிணைவு கொண்ட கருத்துநிலையை வெளிப்படுத்திய ‘sane’ படைப்பாளி அல்ல. அவரிடம் இருந்த படைப்பூக்கம் என்பது கிறுக்குத்தன்மை கொண்டது. அந்த கிறுக்குத்தன்மையை புரிந்துகொள்ள அவரே எழுதிய வாழ்க்கைக்குறிப்புகளை கருத்தில் கொண்டாகவேண்டும். அவரைப்பற்றி எழுதிய முன்னுரையிலும் அதையே சொல்கிறேன்

இந்த அணுகுமுறையே வாழ்க்கைவரலாற்று விமர்சனம் என்பதன் வழி. அதற்கும் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொண்டு இலக்கியப்படைப்புக்களை நிராகரிப்பதற்கும், தனிப்பட்ட வாழ்க்கையை இலக்கிய வம்பாக மாற்றி அவதூறு செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு

பத்தாண்டுகளாக இதை யமுனா ராஜேந்திரனுக்குப் புரியவைக்க முயல்கிறேன். அவருக்கு புரியும்படி எழுத என்னால் முடியவில்லை. அடுத்த தலைமுறையில் மேலும் மொழித்திறன் கொண்ட எவராவது முயலவேண்டும். ஒரு சமூக சேவையாக. அது முற்போக்கு இலக்கியத்திலேயே ஒரு பெரிய புரட்சியாகக்கூட அமையலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி:இளவேனில்
அடுத்த கட்டுரைமழையால் மட்டுமே முளைப்பவை