இழை [சிறுகதை]

[ 1 ]

அந்தக்காலத்தில், அதாவது நான் சர்வீஸிலிருந்தபோது கிரேட் கோல்டன் பார்ஸி சர்க்கஸ் என்று ஒரு சர்க்கஸ் கூட்டம் எர்ணாகுளம் முதல் மதுரைவரை வளைத்து ஊர் ஊராக சர்க்கஸ் போட்டுக்கொண்டிருந்தார்கள்.  உள்ளூர் சர்க்கஸ் குழுக்கள் அன்று ஏதுமில்லை. ஆகவே ஜனங்களுக்கு ஒரே பரபரப்பு. சர்க்கஸ் வந்து ஒருமாதம் தங்கி நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து கூடாரத்தை கழற்றி கிளம்பும் வரை நகரத்தில் அது மட்டும்தான் பேச்சே. ஒருநாள் பயணத்தொலைவில் இருந்தெல்லாம் சாதிசனமாக திரண்டு வந்து சர்க்கஸ் பார்த்துச் செல்வார்கள். ராத்திரி சர்க்கஸ் விட்டபின் திருவிழா போல தெருவில் கூட்டமாக பேசிக்கொண்டே செல்வார்கள்.

சர்க்கஸ் என்பதே ஓர் வெள்ளைக்கார நிகழ்ச்சி. இங்கே கழைக்கூத்தாட்டம், தொம்பர் ஆட்டம், மோடிவித்தை என என்னென்னவோ உண்டு. ஒருவகையில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளைவிட திகைப்பூட்டுபவை  அவை. சர்க்கஸுக்கு பிறந்தது முதல் பயிற்சி வேண்டும் என்பார்கள். நம்மூர்க்காரர்களுக்கு பிறப்புக்கு முன்னரே பயிற்சி இருந்தது. தலைமுறை தலைமுறையான பயிற்சி. ஆனால் கழைக்கூத்தாடியோ தொம்பனோ திருவோடு ஏந்தினால் காலணா போட யோசிப்பவர்கள் ஐந்தும் பத்தும் ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து சர்க்கஸ் பார்க்கச் சென்றார்கள்.

சர்க்கஸ் கூடாரம் ஓர் அற்புதம். ஒரேநாளில் ஊர்நடுவே ஒரு துணிக்கட்டிடம் முளைத்துவிடுகிறது. காற்றில் வண்ணங்கள் கொப்பளித்து அலையடிக்கின்றன. அதைச்சுற்றி கம்பிவேலி. தூண்களில் வண்ணக்கொடிகள். கொடித்தோரணங்கள். இரவுபகலாக ஸ்பீக்கர் வைத்து ஆங்கில கிராமபோன் பாட்டுக்களை ஒலிக்கவிட்டார்கள். ஊர் முழுக்க சர்க்கஸ் கோமாளியின் முகத்துடன் துணிப்படங்கள் அடித்த தட்டிகளை வைத்தார்கள். ஒவ்வொரு நாளும் காலையில் சர்க்கஸில் உள்ள யாராவது ஒருவர், ஒரு கோமாளி துணையுடன் முழு ஒப்பனையுடன் சர்க்கஸ் படங்களை தட்டிகளாக வைத்துக்கட்டிய மாட்டுவண்டியில் ஏறி ஊருக்குள் சுற்றிவந்தார்கள். மாட்டுவண்டியில் இருவர் டிரம் வாசிக்க நால்வர் கொம்பு ஊதுவார்கள்.

அது தவிர ஒவ்வொரு நாளும் ஷோ தொடங்குவதற்கு முன்பு பாண்டு வாத்தியக்கோஷ்டி கூடாரத்திற்கு முன்னால் நின்று ஒருமணிநேரம் வாசித்தது. அனைவருமே ரத்தச்சிவப்பில் உடையணிந்து, பொன்னிற குச்சரி வைத்த தலைப்பாகை சூடி, பளபளக்கும் ஷூக்களும் வெண்பட்டு கையுறைகளும் அணிந்திருந்தனர். ஒருவன் ஜில்லாக் கலெக்டர் துரைபோலவே தொப்பி அணிந்து, வால்வைத்த கோட் போட்டுக்கொண்டு கையில் வெண்ணிறமான பிரம்புடன் அவர்களை ஆட்டுவித்தான்.

அவர்களின் வாத்தியங்கள் பொன்னாலான மாபெரும் மலைப்பாம்புகள் போல உடலைச் சுற்றியிருந்தன. பெரிய அண்டாக்கள் போன்ற முரசுகள். அவர்கள் இசையை சங்கீதம் என்று சொல்லமுடியாது. யானையும் கழுதையும் எருமையும் சேர்ந்து கத்துவதுபோல ஓசை. கூடவே பறையோசைபோல தாளம். ஆனால் அதைக்கேட்டால் நடனமிடத்தோன்றும். அவர்களே நடனமிட்டபடித்தான் இசைப்பார்கள்.

பாண்ட் வாத்தியம் கேட்க காசு தேவை இல்லை. ஆகவே ஒவ்வொரு நாளும் சாயங்காலம் மக்கள் கூட்டம்கூட்டமாக கூடாரத்தின் முன் கூடுகிறார்கள். அங்கே சுண்டல் சுக்குக்காபி விற்கப்படுகிறது. சிறிய சீட்டு மாஜிக் காட்டுகிறவன் அங்கே கூட்டம் தேற்றி சில்லறை பார்த்துவிடுகிறான். தொம்பர்களும் கழைக்கூத்தாடிகளும் அங்கேயே வந்து மூங்கில் நட்டு வித்தை காட்டுகிறார்கள். அவர்கள் சரடின்மேல் நடக்கிறார்கள், மூங்கிலில் இருந்து மூங்கிலுக்குப் பறக்கிறார்கள், முழு வாளையும் விழுங்குகிறார்கள், குழந்தையை தூக்கி வானில் வீசிவிட்டு மீசையை முறுக்கியபின் திரும்ப பிடித்துக்கொள்கிறார்கள்.ஆனால் அவர்களை அங்கே எல்லாரும் கேலியாகத்தான் பார்க்கிறார்கள்.

சர்க்கஸில் எல்லாமே வெள்ளைக்காரப் பாணிதான். புடவையோ வேட்டியோ அணிந்த ஒருவரைக்கூட பார்க்கமுடியாது. பெண்கள் எல்லாம் குட்டைப் பாவாடைதான். ஊஞ்சல்களில் ஆடும் பெண்கள் நிர்வாண உடல்போல மஞ்சள்நிற வெல்வெட் ஆடையை உடம்போடு ஒட்டி அணிந்து, அதன்மேல் சரிகை ஜட்டியும் மார்க்கச்சையும் அணிந்திருக்கிறார்கள். ஆண்களெல்லாம் துரைமாரைப்போலத்தான் ஆடை. நீளமான சட்டித்தொப்பியும் வால்கோட்டும் அணிந்த ஒருவன்தான் ரிங் மாஸ்டர். நல்ல கூர்மையான மூக்கும், உயரமான நீண்ட உடலும், பழுத்த கழுகுக் கண்களும் கொண்டவன். அவனுடையதுதான் சர்க்கஸ். அவன்தான் சிங்கங்களைக்கொண்டு வித்தை காட்டுவதும்.

எனக்கு ஒருமாதமும் சர்க்கஸில்தான் டூட்டி போட்டுவிட்டார் இன்ஸ்பெக்டர். நான் வயதானவன். எனக்கு பென்ஷன் ஆக எட்டுமாதம்தான் இருந்தது. என்னால் ஓடமுடியது. வெயிலில் எங்கேயும் போகமுடியாது. எப்படியும் சர்க்கஸ் அருகே சிவப்புத்தலை ஒருவன் வேண்டும். ஆகவே என்னை அனுப்பிவிட்டார்கள். எனக்கும் சந்தோஷம்தான். சர்க்கஸ் கூடாரத்தின் அருகே எனக்கு ஒரு நிழலிடம் உண்டு. ஒரு ஸ்டூல் போட்டு அமர்ந்துகொள்வேன். அங்கிருந்தே கூட்டத்தை பார்த்து சத்தம்போடுவேன். சர்க்கஸில் இருந்து காபி டீ டிபன் தருவார்கள்.

சர்க்கஸ் தொடங்குவது வரை கூடாரத்துக்கு வெளியே நிற்பேன். சும்மா தடியை சுழற்றிக்கொண்டு சுற்றி வருவேன். அம்மாக்கள் என்னை சுட்டிக்காட்டி குழந்தைகளை பயம்காட்டுவார்கள். குழந்தைகள் என்னைப் பார்த்து திகைப்புடன் விழிக்கும். நானும் மீசையை முறுக்கி, கண்களை உருட்டி அவற்றை பயமுறுத்துவேன். சில குழந்தைகள் வீறிட்டு அலறும். ஒரு குழந்தை என்மேல் ஒரு பொம்மையை வீசி எறிந்திருக்கிறது. அதன் அம்மாக்காரி அதை அணைத்து உச்சிமோந்து பரவசம் அடைந்தாள்.

சர்க்கஸ் தொடங்கியதும் உள்ளே போய்விடுவேன். தினமும் மூன்று முறை என ஒருமாதம் தொடர்ந்து சர்க்கஸ் பார்த்தும்கூட எனக்கு சர்க்கஸ் அலுக்கவில்லை. பார்க்கப் பார்க்க ஆச்சரியம் கூடித்தான் வந்தது. ஊஞ்சலில் ஆடி கைவிட்டு காற்றில் பறந்து இன்னொரு ஊஞ்சலை பிடித்துக்கொண்டார்கள். ஒருவன் மேல் பத்துபேர் ஏறி சமநிலையாக நின்றார்கள். சிங்கத்தின் வாய்க்குள் தலையை விட்டு எடுத்தார்கள். ஒரு பெண் கூந்தலில் ஸ்டேண்டேர்ட் காரை கட்டி இழுத்தாள். அவள் கூந்தலை பிடித்துக்கொண்டு ஒருவன் பால்கனி வரை ஏறினான். ஒருவன் தரையிலிருந்து எழுந்து ஏழு அந்தர்பல்டி அடித்து நின்றான். ஒருவன் குடையை பிடித்துக்கொண்டு கூடாரத்தின் உச்சியிலிருந்து கீழே குதித்தான்.

அதைவிட அற்புதம் கோமாளிகள். அவர்கள் மொத்தம் நான்குபேர். அவர்களை பார்க்கப்பார்க்க எனக்கு சிரிப்புதான். அங்கே செய்யும் சர்க்கஸையே அவர்கள் நையாண்டி செய்தார்கள். அந்த ரிங் மாஸ்டரை கேலிசெய்துகொண்டே இருந்தார்கள். அவர்களும் திடீரென்று பாய்ந்து ஊஞ்சலில் ஆடினார்கள். மேலிருந்து தவறி கீழே வலையில் விழுந்து கதறி அழுதார்கள்.

இது வேறு உலகம். இருபத்தாறாண்டுகள் நான் போலீஸ் வேலையில் செய்து செய்து சலித்த சில்லறைக் கேஸ்கள் இங்கே இல்லை. ஆனால் நான் போலீஸ்காரனும்கூட. அந்த இடத்தை விட்டுவிடக்கூடாது. ஆகவே சர்க்கஸில் எல்லாரையும் தெரிந்து வைத்திருந்தாலும் எவரிடமும் பழக்கம் வைத்துக்கொள்ளவில்லை. அது சரிவராது. பெண்களை எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். கோமாளிகளையும் பிடிக்கும். ஆனால் நான் யாரைப்பார்த்தும் புன்னகைப்பதில்லை. முதலாளியைக் கண்டால் மட்டும் வணக்கம் சொல்வேன். என்ன இருந்தாலும் அவர் முதலாளி. நான் சாயங்காலம் கிளம்பும்போது எட்டணா தருபவர்.

அப்போதுதான் ஒருநாள் ஒரு கொலை நடந்தது. கொலை என்று நான் சொல்கிறேன். விபத்து என்று இன்ஸ்பெக்டர் சொன்னார். கிரேட் கோல்டன் பார்ஸி சர்க்கஸில் இருபத்தாறாம் நாள் இரண்டாவது ஆட்டம் நடந்தபோது அது நடந்தது. அப்போது நான் காலரியில் இருந்து ஆட்டம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

 

[ 2 ]

 

செத்தவன் பெயர் ஜான். அவன் ஒரு பம்பாய்க்காரன். முழுப்பெயரை எஃப்.ஐ.ஆர் எழுதும்போதுதான் நானும் அறிந்துகொண்டேன். ஜேசன் ஜான். வயது நாற்பத்தியாறு. சர்க்கஸில் அவன் பலவகையான உடல்திறமைகளை காட்டி வந்தான். இரட்டை நாக்குகள் கொண்ட நீண்ட சுருள்வில்லை சுழற்றுவான். அவனைச்சூழ்ந்து ஒரு கண்ணாடி கூண்டு போல அது சுழன்றுகொண்டிருக்கும். அவனைநோக்கி உருளைக்கிழங்குகளை எறிவார்கள். அவை துண்டுகளாக தெறிக்கும்.

ஜான் ஒல்லியான உடம்பு கொண்டவன். அவன் வயிறு ஒரு பிடியளவுதான் இருக்கும். ஆனால் நெஞ்சு நன்றாக விரிந்தது. கைகளில் பெரிய முண்டாக்கள். கையிலும் மார்பிலும் முகத்திலும் தலையிலும் அவனுக்கு முடியே இல்லை. தலை புளிபோட்டுத் தேய்த்த செம்புத்தவலை போல வழவழப்பானது. வெள்ளை உடல் பார்க்க சுதையால் செய்தது போலிருக்கும். அவன் வெள்ளைக்காரன் என்று நான் நினைத்தேன், ஆங்கிலோ இந்தியன் என்று பிறகுதான் சொன்னார்கள். அவன் கண்களும் பூனைக்கண். உதடுகளும் மிகமெல்லியவை.

ஜானின் உடலெங்கும் நீலநிறமான நரம்புகள் புடைத்திருக்கும். கைகளிலும் கழுத்திலும் நரம்புகள் கொடிகள் போல படர்ந்திருப்பதை காணமுடியும். அவன் நிகழ்ச்சி இல்லாதபோது வெள்ளைநிற காலர் வைத்த பனியனும் காக்கி அரைக்கால் சட்டையும் அணிந்திருப்பான். எப்போதுமே இடுப்பில் ஒரு கத்தியை உறையுடன் தொங்க விட்டிருப்பான். சர்க்கஸில் சிறுத்தையுடன் குட்டிக்கரணமடிக்கும் வித்தைகளையும் அவன் செய்தான். அவ்வப்போது ஆகாச ஊஞ்சலிலும் ஆடினான்.

ஜானின் வித்தைகளில்  முக்கியமானது மனிதபீரங்கிக் குண்டு. ரிங்கில் ஒரு பெரிய  பீரங்கி இழுத்துக்கொண்டுவந்து வைக்கப்படும். கனமானது. நான்கூட அது வெறும் நடிப்பு, அவ்வளவு கனம் இருக்காது என்று நினைத்தேன். என்னால் அசைக்கக்கூட முடியவில்லை. அதை அத்தனை பேருக்கும் காட்டி பேசிக்கொண்டே இருப்பார் ரிங் மாஸ்டர். உலகமகா யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட பல பீரங்கிகளைப் பற்றி சொல்வார். பிக் பெர்த்தா என்ற ஜெர்மானிய பீரங்கி பதிநான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு குண்டுகளை செலுத்தியது என்பார். பிரான்ஸுக்கு வெளியே இருந்து பாரீஸ் மேல் குண்டு வீசியதாம். உண்மையாகக்கூட இருக்கலாம்.

அதன்பிறகு அதற்குள் வெடிமருந்து போடப்படும். அது என்ன வெடிமருந்து என எனக்கு தெரியாது. ஆனால் நிஜ வெடிமருந்து இல்லை. நிஜமான வெடிமருந்து என்றால் தீயும் புகையும் கடுமையான வெப்பமும் இருக்கும். இந்த வெடிமருந்தில் உண்மையில் தீயோ புகையோ வெப்பமோ இல்லை. தீயை தனியாக உருவாக்குவார்கள். அதற்காக அந்த பீரங்கியின் வாய் அருகே ஒரு ரகசிய எலக்ட்ரிக் பல்ப் உண்டு.

புகையும் செயற்கையாக உருவாக்கப்படுவதுதான். அந்தப்புகை ஒரு பனிக்கட்டியிலிருந்து வருகிறது. அதன்மேல் தண்ணீர் பட்டால் வெண்மையான புகை கொழுகொழுவென்று கிளம்பும். அதையும் அந்த பீரங்கியின் வாயின் அருகிலேயே ஒரு குழாய் வைத்து வெளியேற்றுகிறார்கள். வெடிக்கும் ஓசையும் செயற்கைதான். உண்மையில் பீரங்கி வெடிப்பதைப்போலவே ஓசை. ஆனால் அந்த வெடியோசை பீரங்கியில் எழுவது அல்ல. வெடிக்கும்போது வெளியே எங்கோ வெடிப்போசையை எழுப்புகிறார்கள். அதை லவுட்ஸ்பீக்கரில் கேட்கவைக்கிறார்கள்.ஆனால் அத்தனைபேரும் திடுக்கிடுவது நன்றாகத்தெரியும்.

இதில் இவர்கள் நல்ல பயிற்சி பெற்றிருக்கிறார்கள். நாடகம் போல ஒன்று நடக்கும். அது பார்வையாளர்களை ஈர்த்து அவர்கள் செய்யும் ஏற்பாடுகளை கவனிக்கமுடியாமல் ஆக்கிவிடும். பீரங்கியை கப்பல்கொள்ளைக்காரன் போல உடை அணிந்த ஓர் ஒற்றைக்கண்ணன் பற்றவைத்ததும் அது உண்மையான பீரங்கிபோலவே செயற்கைத் தீயும் போலிப்புகையுமாக பயங்கரமாக வெடிக்கும். உள்ளே குண்டு போடப்படுவதில்லை. பதிலுக்கு ஒரு மனிதன் போடப்படுவான். அது ஜான். ஜான் அந்த வித்தையால்தான் சர்க்கஸிலேயே முதலாளிக்குப் பிறகு முக்கியமானவனாக இருந்தான்.

சர்க்கஸ் ரிங்மாஸ்டர் கப்பல் காப்டனாக தொப்பி போட்டு துப்பாக்கியும் சாட்டையுமாக நின்றிருப்பார். எங்கெங்கோ வெடிச்சத்தங்களும் அலறல்களும் பியூகிள் இசையும் கேட்கும். சட்டென்று பயங்கரமான கூச்சல்கள் கிளம்பும். பலர் துப்பாக்கியால் வானை நோக்கி சுடுவார்கள். பத்து கடல்கொள்ளைக்காரர்கள் ஜானை சங்கிலிகளால் கட்டி இழுத்துக்கொண்டு வருவார்கள். அவன் கனமான கரிய தோலால் ஆன ஆடை அணிந்திருப்பான். அவனை அவர்கள் சாட்டைகளாலும் துப்பாக்கிமட்டைகளாலும் அடித்து கொண்டுவந்து ரிங் மாஸ்டர் காலடியில் வீசுவார்கள்.

ரிங்மாஸ்டர் அவனை பலவாறாக விசாரிப்பார். சாட்டையால் அடிப்பார். குறடால் அவன் பற்களில் ஒன்றை பிடுங்கி எடுப்பார். அவன் கையில் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் சூடுபோடுவார். கடைசியில் அவனை பீரங்கியில் வைத்து சுட ஆணையிடுவார். அவனை அவர்கள் கயிறுவைத்து உடம்போடு கைகளை சேர்த்து பொட்டலம்போல கட்டுவார்கள். அவன் அலறிக்கொண்டே இருப்பான். அவனை இழுத்துக்கொண்டு போய் பீரங்கியின் வாயில் நுழைப்பார்கள்.

மேலே ஒரு கடல்கொள்ளைக்காரி நின்று அவனை சாட்டையால் அடித்து உள்ளே தள்ளுவாள். காலால் அவனை உள்ளே விட்டு மிதிப்பாள். அதன்பின் அவள் பாய்ந்து இறங்கி கைகாட்டுவாள். கடல்கொள்ளைக்காரன் பீரங்கியில் தீவைப்பான். அது வெடித்ததும் ஜான் மிகவேகமாக வானத்தில் பறப்பான். குண்டுபோல பாய்ந்து சென்று கூடாரத்தின் மேலே திறந்திருக்கும் ஒரு பகுதி வழியாக வெளியே சென்றுவிடுவான். அவன் அணிந்திருந்த ஆடைகளும் அவனைக் கட்டியிருக்கும் கயிறுகளும் எரிந்தபடி ரிங்கில் வந்து விழும்.

பார்ப்பவர்கள் எல்லாம் திக்பிரமை பிடித்து அமர்ந்திருப்பார்கள். உண்மையிலேயே அந்தக்காட்சி பயங்கரமாக இருக்கும். அதற்குள் வெடிப்பது வேறு ஏதோ ஒரு வாயுக்குண்டு. ஆனால் அது வெடிப்பதும் நல்ல விசையுடன்தான். அது ஜானை பயங்கரமான வேகத்தில் வானத்தில் வீசும். ஒரு மனிதன் அப்படி வானத்தில் எறியப்படுவதை நினைத்தே பார்க்கமுடியாது.

அதன்பிறகு வேறுநிறைய ஆட்டங்கள். தட்டு நடனங்கள். கோமாளிகளின் வேடிக்கைகள். கடைசியாக சர்க்கஸ் முடிவடையும்போது சர்க்கஸிலுள்ள அனைவரும் ரிங்குக்கு வந்து கைகளை கோத்தபடி சிரித்துகொண்டு எல்லாருக்கும் வணக்கம் சொல்வார்கள். அப்போது ஜான் கையசைத்துக் கொண்டே வருவான். அவனைப் பார்தததும் சர்க்கஸ் கூடாரமே ஆர்ப்பரிக்கும். அவனும் நாலைந்துமுறை சிலாவரிசை போட்டு வணக்கம் செலுத்துவான்.

அன்று அவ்வாறு அவன் வரவில்லை. முன்பு நிகழ்ச்சியை பார்த்திருந்த சிலர் அவன் வருவான் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் சிலாவரிசை வணக்கங்கள் முடிந்து காட்சி முடிந்தபோது அத்தனைபேரும் அதை மறந்து கோமாளிகளின் கூத்துக்குச் சிரித்து கைதட்டி கலைந்தார்கள். நான் ஜான் எங்கே என்று அறிய ஆசைப்பட்டேன். அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமா?

ஜான் அந்த கூடாரத்தின் திறப்பின் வழியாக சென்று அப்பால் கட்டப்பட்டிருக்கும் பெரிய கயிறுவலையில் விழுவான். அதில் அவன் நாலைந்துமுறை தொட்டில்போல துள்ளித் துள்ளி ஆடுமளவுக்கு அந்த விசை இருக்கும். அதன்பின் எழுந்து சென்று கீழே இறங்கி அங்கே ஒரு நாற்காலியில் போய் அமர்ந்து ஒரு சுருட்டு பற்றவைத்துக்கொள்வான். அவனுக்கு அதன்பின் சர்க்கஸில் வணக்கம் நிகழ்ச்சி மட்டும்தான்.

நான் சர்க்கஸின் பின்பக்கம் போக முயன்றபோது காவல்காரன் தடுத்தான். “என்ன?”என்று கேட்டேன்.

“ஒண்ணுமில்லை. ஜான்சாருக்கு ஒரு சின்ன மயக்கம்”

“மயக்கமா? நான் பாக்கணும்”

“யாரையும் விடக்கூடாதுன்னு உத்தரவு”

“டேய் நான் போலீஸு. அரெஸ்ட் பண்ணிப்போடுவேன்… வழிய விடு”

அவன் பதறிவிட்டான். நான் ஜான் வந்து விழும் அந்த வலையை நோக்கி போனேன். ஆனால் இன்னொரு பக்கம்தான் கூட்டம் நெரித்தது. எங்கும் பதற்றமாக இருந்தது. சந்தடியைக் கேட்டு சிங்கங்களும் சிறுத்தைகளும் அஞ்சி உறுமின.

நான் கூட்டத்தை தள்ளிக்கொண்டு முன்னால் சென்றபோது ரிங் மாஸ்டர் சட்டென்று தன் விசிலை ஊதி “எல்லாரும் போங்க… எல்லாரும் போங்க… இங்க யாரும் நிக்கக்கூடாது”என்றார். உடனே சவுக்கை எடுத்து ஆடுமாடுகளை அடிப்பதுபோல ஆண்களையும் பெண்களையும் அடிக்க ஆரம்பித்தார்.

கூட்டம் ஓசையிட்டுக்கொண்டும் முட்டிமோதி தடுமாறி விழுந்தும் விலகி கலைந்தது. நான் மட்டும் நின்றுகொண்டிருந்தேன். கையில் சாட்டையுடன் முதலாளி நின்று என்னைப்பார்த்தார். கடுமையாக புருவம் சுளித்து “என்ன?”என்றார்

”ஒண்ணுமில்லை” என்று நான் சொன்னேன். “என்ன ஆச்சு? ஜான் எங்க?”

“ஜான் இந்தா கெடக்கான்”

“அவனுக்கு என்ன?”

‘ஒண்ணுமில்லை. ஒரு களைப்பு. இப்ப எந்திரிச்சிருவான். காத்து வரட்டு, நீங்க போங்க”

நாடாக் கட்டிலில் ஜான் படுத்திருந்தான். முகம் வெளிறியிருந்தது. உடல் அசைவில்லாமலிருந்தது. கைகள் இருபக்கமும் தளர்ந்து கிடந்தன. அவனை பீரங்கிக்குள் போடும் அந்தப்பெண் அவனருகே ஒரு ஸ்டூலில் அமர்ந்திருந்தாள். அவள் பெயர் டெய்ஸி. அவள் அவனுடைய மனைவி போல சர்க்கஸில் இருந்து வந்தாள். அவள் மெல்ல விசும்பி அழுதுகொண்டிருந்தாள்.

“அவ ஏன் அளுவுறா?”

“அவனுக்கு கொஞ்சம் அடிபட்டிருக்கு…”

“டாக்டரை வரச்சொல்லணும்”

“நாங்க இங்கேயே டாக்டர் வச்சிருக்கோம். அவரு வாறாரு… நீங்க போங்க”

நான் மனமில்லா மனத்துடன் திரும்பியபோது நாடாக்கட்டிலுக்கு கீழே ரத்தத்தை பார்த்தேன். சொட்டி ஊறி கருஞ்சிவப்பான ஒரு துணி சுருண்டு கிடப்பதைப்போல தெரிந்தது. ரத்தம்தானா?

“ரத்தம்! ரத்தம் வருது”என்றேன்.

“வேய் ,போவும் வே”என்று அவர் அடிப்பதுபோல சவுக்கை ஓங்கினார். அப்போது எனக்குள் இருந்து போலீஸ்காரன் வெளியே வந்தான். நான் வெள்ளைக்காரன் கீழே பயிற்சி எடுத்துக்கொண்டவன். ராஜசேவகனாக வேலை பார்த்தவன். இந்த பித்தளைவில்லைக்கு என்ன அதிகாரம் என்றுதான் எனக்கெல்லாம் முதலில் சொல்லி தருவார்கள்.

“மிஸ்டர் வில்லியம்ஸ்,  இப்ப இது கேஸ் வேற. ஒரு சந்தேக மரணம் நடந்திருக்கு. இனி இது போலீஸுக்க வேலையாக்கும். தடுத்தா உம்மை அரெஸ்ட் பண்ணவேண்டியிருக்கும். வாழ்நாளிலே மறுக்கா வெளிச்சத்தைப் பாக்க மாட்டீங்க” என்றேன்.

என்னுடைய குரல் மாற்றம் முதலாளியை திகைக்கவைத்தது. உடனே அவர் உடலும் மொழியும் மாறின. “என்ன சொல்றீங்க சார்? ஒண்ணும் நடக்கல்லை இங்க. ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட். அது எப்பவும் உள்ளதாக்கும்…”என்றார்.

“அதை நாங்க முடிவு செய்வோம் ஓய்… இங்க யாரும் எதையும் தொடக்கூடாது. முதல்ல டாக்டரை கூப்பிடுங்க”

“ஒரு பிரச்சினையும் இல்லை…பிரச்சினைய நீங்க உண்டுபண்ணக்கூடாது. என்னவேணுமானாலும் பாத்துக்கிடலாம். எங்க பிழைப்பாக்கும் இது. ஆயிரக்கணக்கான ரூபா போட்டிருக்கு. அறுபதுபேருக்க ஜீவிதமாக்கும்… சொன்னா கேக்கணும்”

அவர் கெஞ்சியபோது என்னுடைய சந்தேகமும் தோரணையும் அதிகரித்தன. நான் அருகே சென்று ஜானை பார்த்தேன். ஜான் உயிருடனில்லை என்று தெரிந்தது. இமைக்குள் விழிகள் ஓடவில்லை. மூச்சு இல்லை. நான் என் கைக்குட்டையை எடுத்து மூக்கருகே தொங்கவிட்டுப் பார்த்தேன், அசைவில்லை.

“ஆளு போயாச்சு சார்”என்றேன்.

“ஆமா, அப்பமே போயிட்டான். நாங்க சர்க்கஸ் முடிஞ்சு வாறப்ப இங்க கிடக்குதான்… உயிரு இல்லை”

“இந்த ரத்தம் எப்டி வந்தது? எங்க முறிவு?”என்றேன். அவன் உடலில் எங்கும் காயம் இருப்பதாகத் தெரியவில்லை. நான் கீழே பார்த்தேன். அவன் வலையில் இருந்து எழுந்து நடந்து இதுவரை வந்தானா? வலையில் விழும்போது காயம் இருந்திருந்தால் வலையிலும் அதன் கீழேயும் ரத்தம் இருக்கும். வரும் வழி முழுக்க ரத்தம் இருக்கும்.

நான் வலையை அணுகி கூர்ந்து பார்த்தேன்.வலைக்கு கீழே ரத்தம் ஏதும் இல்லை. வரும் வழியிலும் ரத்தம் விழுந்திருக்கவில்லை. அப்படியென்றால் அவன் கட்டிலில் அவனேதான் போய் படுத்திருக்கிறான். அதன்பிறகுதான் காயம்பட்டிருக்கிறது. கொலையாக இருக்குமோ?

என் தலை வற்றல்மிளகாய் அரைத்து தேய்த்தது போல எரிந்தது. நான் என் சர்வீஸில் எட்டு கொலைவழக்குகளை விசாரித்திருக்கிறேன். எல்லாவற்றிலும் குற்றவாளிகளை பிடித்திருக்கிறேன். எனக்கு இரண்டு முறை சூப்பரிண்டெண்ட் பணப்பரிசு தந்திருக்கிறார். மற்ற கான்ஸ்டபிள்களைப்போல நான் வேறுவேறு விஷயங்களில் ஈடுபடுபவன் அல்ல. ஒரு கேஸ் என்றால் அதிலேயே ஈடுபட்டிருப்பேன். அது சார்ந்த எல்லா ஆவணங்களையும் முழுமையாகவே படிப்பேன். அது சார்ந்த இடங்களுக்கு பலமுறை போவேன். நான் பொறுமையானவன். சொந்தமாக எதுவும் கற்பனை செய்யவும் மாட்டேன். ஆகவே என்னிடமிருந்து குற்றவாளிகள் தப்பமுடியாது.

நான் முதலாளியிடம் சொன்னேன். “மிஸ்டர் வில்லியம்ஸ், இங்கே நடந்தது ஒருவேளை கொலையா இருக்கலாம். கொலைன்னா அது பெரிய கேஸ். விசாரணை முடியுறது வரை நீங்க யாரும் இங்கேருந்து போக முடியாது. யார் வேணுமானாலும் விசாரணைக்கு வரணும். கேக்கிற எல்லா கேள்விகளுக்கும் ஒழுங்கா பதில் சொல்லணும். கொஞ்சம் எடக்குமடக்கா நடந்துகிட்டாக்கூட எவனா இருந்தாலும் கேஸிலே கூட்டுப்பிரதிவாதியா சேத்துவிட்டிருவோம். பிறகு சீவிதம் பாழாப்போயிரும். சொல்லுறது மனசிலாகுதில்லா?”

வில்லியம்ஸ் கண்ணீர் படிந்த கண்களுடன் கைகூப்பினார். “நான் என்ன வேணுமானாலும் செய்யுதேன். எனக்கு ஒண்ணுமே தெரியாது… இந்த ஸ்தாபனத்தை கட்டி மேய்க்கதுக்குன்னு அன்றாடம் செத்துக்கிட்டிருக்கேன்…”

“செரி… இங்க ஆரும் எதையும் தொடக்கூடாது. எல்லாரும் அவங்கவுங்க எடத்துக்கு போகச்சொல்லுங்க” என்றேன். வில்லியம்ஸ் தலையை ஆட்டினார்.

நான் சர்க்கஸ் உதவியாளனிடம் சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு செய்தி அனுப்பினேன். என் நோட்புக்கை எடுத்து நான் கண்டவற்றை வரிசையாக எழுத ஆரம்பித்தேன். சர்க்கஸ் நடந்த விதத்தை மிக விரிவாக நினைவிலிருந்து குறித்துக்கொண்டேன். அதில் ஜான் என்னென்ன செய்தான், அவனுடன் விளையாடிய ஒவ்வொருவரும் என்னென்ன செய்தார்கள், அந்த பீரங்கி சுடும் வித்தையில் என்ன நடந்தது, அதில் யாரெல்லாம் என்னென்ன செய்தார்கள் எல்லாவற்றையும்  எழுதிக்கொண்டேன்.

நான் எழுதுவதை வில்லியம்ஸ் திகைப்புடன் கைகட்டி பார்த்துக்கொண்டிருந்தார். டெய்ஸி பக்கத்தில் அமர்ந்து மெல்ல விசும்பி அழுதுகொண்டிருந்தாள். நான் எழுந்து வலையின் அடிப்பக்கத்தை கூர்ந்து பார்த்தேன். அங்கிருந்து நாடாக்கட்டில் வரையிலான பாதையை மீண்டும் பார்த்தேன். நாடாக்கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்தேன். ரத்தம் உறைந்து கருமைகொள்ள ஆரம்பித்திருந்தது.

ஆனால் அவன்மேல் காயம் ஏதும் இல்லை. அவன் உடலை தொடாமலேயே கூர்ந்து பார்த்தேன். எங்கும் காயமே இல்லை. கூர்ந்து பார்த்தபடி சுற்றி வந்தேன். அதன்பின் கண்டுபிடித்தேன். அவனுடைய வெள்ளைநிறமான கழுத்தில் ஒரு சிவந்த கோடு இருந்தது. கருஞ்சிவப்பான ஒரு தலைமுடி இழை ஒட்டியிருப்பதாகவே தோன்றியது. குனிந்து பார்த்தேன். அது ஒரு வெட்டுக்காயம். அது அவன் கழுத்து நரம்பை வெட்டியிருந்தது. அந்த வெட்டுக்காயம் வழியாக வந்த ரத்தம் கழுத்தின் அடியில் இருந்துதான் சொட்டியிருந்தது.

 

[ 3 ]

 

இன்ஸ்பெக்டர் வர கொஞ்சம் தாமதமாகியது. அதற்குள் டாக்டர் வந்துவிட்டார். அவர் ஓர் ஆங்கிலோ இந்தியன் அப்போத்திக்கிரி. பழைய ஆள். காக்கி கோட்டும் கறுப்பு பாண்டும் அணிந்து பிளாண்டர் தொப்பி வைத்தவர். ஆங்கிலோ இந்தியனாக இருந்தாலும் கருப்பானவர். தன் தகரப்பெட்டியுடன் வந்தார். அதை ஒரு ஸ்டூல் மேல் வைத்துவிட்டு பிணத்தை கூர்ந்து பார்த்தார். சிலுவைபோட்டுக்கொண்டு என்னிடம் “உசிரு இல்லை”என்றார்.

நான் ”தெரியும்”என்றேன்.

அவர் பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்து ரப்பர் கையுறைகளை எடுத்து மாட்டிக்கொண்டார். விரல்களை நீட்டி சுருக்கி கையுறையை இயல்பாக்கிய பின்னர் உள்ளிருந்து கிடுக்கிகள், கூர்மையான ஒரு முள் ஆகியவற்றை எடுத்தார். அவருடைய கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. ஒரு குப்பியில் ஸ்பிரிட் வைத்திருந்தார். இன்னொரு கிண்ணத்தில் பஞ்சு. ஸ்டூலை இழுத்துபோட்டு பிணமருகே அமர்ந்தார். டெய்சியிடம் எழுந்து அப்பால் போகச் சொன்னார். அவள் மூக்கை உறிஞ்சியபடி எழுந்து போனாள்.

அவர் பிணத்தை கூர்ந்து பார்த்தார். பின்னர் கிடுக்கியால் பஞ்சை எடுத்து ஸ்பிரிட்டில் நனைத்து அவன் கழுத்தில் அந்த சிவந்த கோடை துடைத்து தூய்மைசெய்தார். நான் திகைப்புடன் எழுந்து அருகே போய்விட்டேன். அந்த மிகமெல்லிய மயிரிழைக்கோடு உண்மையில் மிக ஆழமான வெட்டு. பஞ்சால் தொட்டதுமே அது வாய் போல பிளந்து விட்டது. உள்ளிருந்து ரத்தம் கருமையான ஈரமாக ஊறித் தயங்கியது.

அவர் துடைப்பதை நிறுத்திவிட்டு “நல்லா வெட்டியிருக்கு… தலைக்கு ரத்தம்போற குழாயை வெட்டியிருக்கு”என்றார்.

“கத்தியாலா?”என்றேன்.

“தெரியல்ல….ஆனா ரொம்ப ரொம்ப கூர்மையான எதனாலோ வெட்டியிருக்கு. சரியா ஒரே வீச்சு”

”அப்டி எந்த கத்தி? ரேசர் கத்தியாக இருக்குமோ?”

“ரேசரா இருக்கலாம்… ஆனா ரேசர்னாகூட இந்தளவுக்கு கூர்மையா இருக்குமா?”

நான் கீழே பார்த்தேன். அவ்வளவு ரத்தம். தலைக்குப்போகும் ரத்தம் அவ்வளவுக்கு வெளியே போனால் உடனே மயக்கம் வந்துவிடும். அது ஓர் இனிமையான மயக்கம். நல்ல போதை போல. நினைவுகள் தாறுமாறாக அலையும். வாய்குளறும். கண்கள் மங்கிவரும். உடலில் எல்லா தசைகளுமே தளர ஆரம்பிக்கும். இந்த வெட்டுக்காயத்துடன் ஜான் நடந்திருக்க முடியாது. அவன் இங்கே வந்தபின் வெட்டு விழுந்திருந்தால் அவனால் எழுந்து கூச்சல்போடவே முடிந்திருக்காது. இனிய மயக்கத்தில் தளர்ந்து அமிழ்ந்துகொண்டே இருந்திருப்பான்.

அதற்குள் ஜீப் வந்துவிட்டது. இன்ஸ்பெக்டர் முத்தையா பிள்ளை இறங்கி வந்தார். அவருடன் கான்ஸ்டபிள் சண்முகமும் வந்தான். நான் எழுந்து சல்யூட் அடித்தேன். டாக்டர் இன்ஸ்பெக்டருக்கு வணக்கம் சொன்னார். முதலாளி சொன்ன வணக்கத்தை இன்ஸ்பெக்டர் வேண்டுமென்றே கவனிக்கவில்லை.

“என்னய்யா?”என்று நாற்காலியில் அமர்ந்தபடியே இன்ஸ்பெக்டர் கேட்டார்.

“சார், நான் ஸ்பாட்டிலே இருந்தேன் சார். நான் ரெக்கார்ட் பண்ணியிருக்கேன்”

“சரி சொல்லு”

நான் சுருக்கமாக எல்லாவற்றையும் சொன்னேன். “நோட் டீடெயிலா இருக்கு சார். காப்பி பண்ணி ஃபைலுக்கு அனுப்புதேன்”

இன்ஸ்பெக்டர் தரையை பார்த்தார்.”நல்ல மண்ணுப் புழுதி… இதிலே ரத்தம் ஒண்ணுரெண்டு சொட்டு விழுந்தா நம்மாலே கண்டுபிடிக்க முடியாது. நாய் வரணும்” என்றார்.

”ஆமா சார்”

“சரி. முதல்ல பாத்தவங்க வரட்டும்…”என்றபின் சண்முகத்திடம்  “பாடிய கொண்டுபோக ஏற்பாடு செய்யும் ஓய்”என்றார்.

“சரி சார்” என்று அவன் சொன்னான்.

எப்போதுமே ஸ்பாட்டிலேயே ஒரு விசாரணை நடத்துவது எங்கள் வழக்கம். இப்போது எல்லாருமே நிலைகுலைந்திருப்பார்கள்.அவர்கள் கூடிப்பேசி ஒரே கதையை உண்டுபண்ணிகொள்ள நேரமில்லை. இப்போது எல்லாருமே யோசிக்கவே முடியாத நிலையில் இருப்பார்கள். ஒருமணிநேரம் கழித்து ஸ்டேஷன் வரச்சொன்னால் ஒரே கதையோடு வந்து நிற்பார்கள்.

முதலில் பார்த்தவன் சுல்தான் என்பவன். அவன் சர்க்கஸில் ஒரு பின்னணி உதவியாளன். பின்னணியில் வேலைபார்ப்பவர்கள் மொத்தம் பதினெட்டு பேர். நான்கு பேர் சமையல்காரர்கள். அவர்கள் முன்பக்கம் வருவதில்லை. மிருகங்களைப் பார்த்துக்கொள்ளும் இருவர். அவர்களும் முன்பக்கம் வருவதில்லை. மேடைக்கு தேவையான உதவிகளைச் செய்ய எட்டுபேர் திரைகளுக்கு பின்னால் நிற்பார்கள். பின்பக்கம் நான்கு பேர் தேவையான பொருட்களை கொண்டுவரவும் ஆட்டக்காரர்களுக்கு தேவையான உணவு, பானம் ஆகியவற்றை கொண்டுவரவும் நிற்பார்கள்.

அன்றைக்கு பின்னால் நின்றவர்கள் ரஞ்சன், கணேசன், ஜூலியன்,சுல்தான் என்ற நான்குபேர். அதில் சுல்தான் ஜானுக்கு மிக நெருக்கம். ஜானுடைய அணுக்கச் சேவகன் மாதிரி. ஜானுக்கு சுருட்டு பற்றவைத்துக்கொடுப்பதுவரை அவன்தான் செய்வான்.

அவன் கைகட்டி நின்றிருந்தான். “வாருமய்யா”என்றபோது மெல்லிய நடுக்கத்துடன் வந்து நின்றான். இன்ஸ்பெக்டர்தான் கேள்விகள் கேட்பார். நான் பக்கவாட்டில் அமர்ந்து அவனுடைய முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். என் வேலை அவர்களின் முகபாவனைகளை கவனிப்பது, நடிக்கிறார்களா என்று கண்டுபிடிப்பது, அவர்களை நிலைகுலைய செய்யும்படி ஊடே திடீர்க்கேள்விகளை கேட்பது.

சுல்தான் அறுபதுக்குமேல் வயதானவன். பொதுவாக இவர்களெல்லாம் முன்னாள் ஆட்டக்காரர்கள். அது உடலில் தெரியும். முதுமையாலோ, அல்லது குணமாகாதபடி அடிபட்டதனாலோ வேலைக்காரர்களாக ஆகிவிடுவார்கள். சுல்தானின் உடலெங்கும் நரம்புகள் புடைத்த இறுகிய தசைகள் இருந்தன. கைகளில் நரம்புகள் பாம்புக்குஞ்சுகள் போல பரவியிருந்தன. தொப்பையே இல்லாத வயிறு. பெரிய மார்பு. அவன் குறுந்தாடி வைத்து வலைக்குல்லா அணிந்திருந்தான். கண்களில் கள்ளம் இல்லை. பதறிப்போயிருந்தான் என்பது தெரிந்தது.

“சொல்லுய்யா?”என்றார் இன்ஸ்பெக்டர். “எப்ப முதல்ல பாத்தே? என்ன பாத்தே? உண்மையைச் சொல்லணும். பொய் சொன்னேன்னு பின்னாடி தெரிஞ்சுது நீயும் கேஸிலே மாட்டிக்கிடுவே. பிறவு களிதான்”

“சார்”என்று அவன் கும்பிட்டான். “நான் பாத்ததைச் சொல்லுதேன்… நான் ஏழையாக்கும். ஆறுவயசிலே எங்க உம்மா இங்க கொண்டாந்து விட்டது முதல் இதுக்குள்ளெயே ஜீவிக்குதேன். எனக்கு வேற ஒண்ணும் தெரியாது”

“சொல்லும்”

அவன் சுருக்கமாக சொன்னான். பீரங்கியில் இருந்து பறந்து சரியாக வலையில் வந்து விழுவான் ஜான். ஒரு நிமிடம் படுத்துவிட்டு அப்படியே உருண்டு வந்து வலையின் விளிம்பை அடைந்து குதித்து கீழே இறங்குவான். வந்து நாடா நாற்காலியில் அமர்ந்து கொள்வான். அப்போது அவனுக்கு ஒரு சுருட்டு பற்றவைத்துக் கொடுக்கவேண்டும். யாழ்ப்பாணம் நயம் சுருட்டு. ஒரு டம்ளர் விஸ்கி. க்ளென்ஃபிட்டிஷ் சிங்கிள்மால்ட் ஸ்காட்ச். இரண்டு இஞ்ச் அளவு மதுவுக்கு ஐஸ் போடாத தண்ணீர். விஸ்கியை துளித்துளியாக குடித்தபடி சுருட்டை ஊதி முடிப்பான். அதன்பிறகு நாடாக்கட்டிலில் படுத்து தூங்கிவிடுவான். ஷோ முடியும்போது அவனை சுல்தான் தட்டி எழுப்பவேண்டும்.

அன்றைக்கு வலையில் இருந்து உருண்டு இறங்கி நின்றபோது ஜான் கொஞ்சம் தள்ளாடினான். சுருட்டுடன் சுல்தான் வந்தபோது போ என்று கையை காட்டிவிட்டு நேராகச் சென்று நாடாக்கட்டிலில் படுத்துக்கொண்டான். அவன் விஸ்கி கொண்டுவந்து அருகிலிருந்த முக்காலியில் வைத்தான். ஆனால் ஜான் அதை எடுக்கவில்லை. கையை முகத்தின்மேல் வைத்தபடி படுத்திருந்தான்.

சுல்தான் அவனை தூங்கவிட்டுவிட்டு ரிங் மாஸ்டருக்கு விஸ்கி கலந்து கொண்டு கொடுக்கப் போனான். அவர் திரைக்குப்பின்னால் வந்து குடித்துவிட்டுப் போனார். அதன்பின் சிங்கம் ரிங்குக்கு போயிற்று. அதற்கான வேலைகள். நடுவே அவ்வழியாக போனபோது சுல்தான் பார்த்தான், விஸ்கி அப்படியே இருந்தது. ஜான் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான்.

ஷோ முடியும் தருணத்தில் சுல்தான் வந்து ஜானை எழுப்பினான். வழக்கமாக ஜானை சத்தம் கொடுத்துதான் எழுப்பவேண்டும். தூக்கத்தில் தொட்டால் அவன் திடுக்கிட்டு எழுந்து அடித்து விடுவான். ஆகவே கை தட்டியும், கட்டிலில் தட்டியும் கூப்பிட்டான். ஜான் அசையவில்லை. கடைசியில் தோளை தொட்டே கூப்பிட்டான். உலுக்கி கூப்பிட்டபிறகும் ஜான் அசையவில்லை. ஆகவே ஓடிப்போய் டெய்சியிடம் சொன்னான். டெய்ஸி வில்லியம்ஸிடம் சொல்லும்படி சொன்னாள். வில்லியம்ஸ் ஷோ முடியட்டும், யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொன்னார்

”நீர் தொட்டப்ப ஜான் உடம்பிலே சூடு இருந்ததா?”என்று இன்ஸ்பெக்டர் சொன்னார்

“இல்ல, தெரியல்ல”

“அது எப்டி இருந்தது? நல்லா ஞாபகம் வச்சு சொல்லும்”

“நான் சாதாரணமா அவனை தொடுறதில்லை சார்… தொட்டப்ப ஒண்ணும் தெரியல்லை”

”அவன் செத்திருக்கலாமோங்கிற டவுட் வந்ததா?”

”இல்ல”

“நீரு பயந்தீரா?”

“ஆமா”

“ஏன்?”

சுல்தான் ஒன்றும் சொல்லவில்லை

“சரி போவும்”

அவர் திரும்பிய கணம் நான் “ஜான் எந்தக்கையாலே போன்னு உங்க கிட்ட காட்டினான்?”என்றேன்.

சுல்தான் விழித்தார்.

“நல்லா ஞாபகப்படுத்திச் சொல்லணும்”என்றேன்.

அவன் அந்தக்காட்சியை அவனே நடித்தான். “இடதுகையாலே”என்றான்.

“ஏன் ?அவன் இடது கைக்காரனா?”

“இல்ல” என்றபின் “வலது கையை இப்டி வச்சிருந்தார்”என்றான். கழுத்தை அழுத்தியது போல காட்டினான்.

“சரி போவும்”

“நல்ல கேள்வி ஓய்” என இன்ஸ்பெக்டர் முணுமுணுத்தார்.

“தேங்க்ஸ் சார்”என்று நான் சொன்னேன்.

அதற்குள் ஆம்புலன்ஸ் வந்தது. அவர்கள் ஜானின் சடலத்தை துணியால் மூடி மெல்ல எடுத்து ஒரு பெட்டிக்குள் வைத்து பெட்டியை கொண்டுபோய் ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

“டெட்பாடி பக்கத்திலே வைச்சு விசாரணை செய்தா கூடுதல் எஃபக்டாக்கும்”என்று இன்ஸ்பெக்டர் சொன்னார்.

அடுத்ததாக வில்லியம்ஸை விசாரித்தோம். வில்லியம்ஸ் நன்றாகவே குலைந்துபோயிருந்தார். நடுவே அவர் இரண்டுமுறை விஸ்கி சாப்பிடுவதை நான் கண்டேன்.

அவரிடம் ஒன்றுமே பெரிதாக சொல்வதற்கில்லை. சுல்தான் வந்து ஜான் எழுந்திருக்கவில்லை என்று சொன்னபோது ’அடிபட்டதா?’ என்று கேட்டாராம். ’அடிபட்டதாக தெரியவில்லை’ என்று சுல்தான் சொன்னான். ஜான் கூடுதலாக விஸ்கியை குடித்துவிட்டான் என்றுதான் அவர் நினைத்தார்.  ‘சரி,யாரிடமும் சொல்லாதே, ஷோ முடியட்டும்’ என்றார்.

ஷோ முடிந்து அவர் வந்தபோது அதற்குள்ளாகவே டெய்சி ஓடிப்போய் ஜானை தொட்டுப் பார்த்து கூச்சலிட்டாள். அவர் அருகே வந்தபோதே தெரிந்துவிட்டது, ஜான் செத்துவிட்டான் என்று. ஆனால் எப்படி செத்தான் என்று தெரியவில்லை. உடலைப் பார்த்தால் காயமே இல்லை. அப்போதுதான் கணேசன் நாடாக்கட்டிலுக்கு அடியில் ரத்தம் சொட்டி உறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினான். அதற்குள் எல்லாரும் கூடிவிட்டார்கள்.

விலியம்ஸ் நிலைகுலைந்திருந்தாலும் சீராகவே சொன்னார். கண்கள் குரூரம் தந்திரம் எல்லாம் கொண்டவை. ஆனாலும் பொய் என்று தோன்றவில்லை.

போலீஸ் நாய்  நாகர்கோயிலில் இருந்து வருவதற்கு நாளை ஆகிவிடும் என்று ஃபோன் வந்ததாக சண்முகம் வந்து சொன்னார். “ஏன் நாளைக்கு? அடுத்த வாரமோ அடுத்த மாசமோ அப்பாயின்மெண்ட் குடுக்கவேண்டியதுதானே”என்றார் இன்ஸ்பெக்டர். “இந்த எளவுலே இன்வெஸ்டிகேசன் வேற. மயிரானுக!”

“சர்”என்றேன். “இங்கியே சர்க்கஸ் நாயி இருக்கு… நாம ஒருவாட்டி அதை வைச்சு மோந்து பாக்க வைப்போம். இந்த ரத்தத்தை மோந்து பாக்க வைச்சுட்டு அப்டியே வலைவரைக்கும் கொண்டுபோனா போரும்லா? ரத்தம் கித்தம் இருந்தா தெரிஞ்சிரும்… ஏதாவது சின்ன விசயம் மண்ணிலே கிடந்தாலும் தெரிஞ்சிரும். நாளை வரை இவ்ளவு ஏரியாவை நாம காவந்து பண்ணிக்கிட முடியாது”

யோசித்தபின் இன்ஸ்பெக்டர் “செரி, நீரே செய்யும்”என்றார்

நான் கணேசனிடம் சொல்லி சர்க்கஸ் நாய்களில் ஒன்றை கொண்டுவரச் சொன்னேன். ஏற்கனவே அது ரத்த மணம் அடைந்து பதறி துள்ளிக்கொண்டிருந்தது.

“இங்க பிடியும்வே”என்றேன்.

அவன் அதை நாடாக்கட்டில் அருகே கொண்டு வந்தான். அது ரத்தத்தை முகர்ந்தது. வாலைச் சுழற்றியபடி எம்பி எம்பி குதித்து குரைத்தது.

“அப்டியே வலைப்பக்கமா கொண்டு போவும்”என்றேன்.

வலை வரைக்கும் போவதற்குள் அது நாலைந்து இடங்களில் முகர்ந்து குதித்தது. அந்த இடங்களில் வட்டம் போட்டேன். மண்ணை கூர்ந்து பார்த்தேன். ரத்தத் துளிகள் இருந்தன.

“சார், ரத்தம் விழுந்திருக்கு… வரிசையா ஒவ்வொரு துளி. ரொம்ப சின்ன துளி. நாய் இல்லேன்னா கண்ணிலே பட்டிருக்காது”

ஆனால் வலையில் ரத்தம் இல்லை. வலைக்கு கீழேயும் ரத்தம் ஏதுமில்லை.

”அந்த குட்டி யாரு? டெய்சியா அவ பேரு?”

”ஆமா”

“அவ யாரு? இவனுக்க பெஞ்சாதியா?”

“பெஞ்சாதின்னு இல்லை”

“பின்ன?”

“இங்க கொஞ்சம் அப்டி இப்டிதான் இருப்பாங்க….”என்றார் வில்லியம்ஸ். “அவங்க ரெண்டுபேரும் சேந்தே இருந்தாங்க”

“ஓ…”

டெய்சி மலையாளப்பெண். அவள் உண்மையான பெயர் சோசாம்ம்மா. சொந்த ஊர் தலைச்சேரி. அவளை ஐந்து வயதில் சர்க்கஸுக்காக விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்கள். அதன்பின் அங்கேயே பயிற்சி எடுத்துக்கொண்டு வளர்ந்திருக்கிறாள். அவளுக்கு இருபத்தாறு வயது ஆகிறது. சோசாம்மா ஆரம்பத்தில் ஆகாய ஊஞ்சலில் ஆடியிருக்கிறாள். அவளுக்கு கண்ணிலோ உடலிலோ சரியான சமநிலை இல்லை. விழுந்து அடிபட்டு ஒரு கால் சற்று கோணலாகிவிட்டது. சமையல்வேலையில் உதவியாளாக இருந்தாள். அப்போதுதான் அவளுக்கு ஜான் பழக்கமானான்.

ஜான் அவளுக்கு ஒரு புதியவித்தையை கற்றுக்கொடுத்தான். ஆகாய ஊஞ்சல் ஆடும்போது சோசாம்மா குட்டையாக தலையை வெட்டியிருந்தாள். சமையற்காரியாக ஆனபின் நீளமாக வளர்த்திருந்தாள்.அவளுடைய கூந்தல் கெட்டியான வளைவே இல்லாத மயிரிழைகளால் ஆனது. தொடைக்கும் கீழே தொங்கும். அதில் காரை கட்டி இழுக்க ஜான் பயிற்சி அளித்தான்.

அவளுடைய ஒரு கால் வலுவற்றது. ஆகவே அதில் ஒரு அலுமினிய பட்டையைக் கட்டி அதன்மேல் பாண்ட் போட்டுக்கொள்வாள். அந்தப்பட்டை வெளியே தெரியாது. அவள் சின்ன உடல்காரி. அவள் வந்து தலைமுடியால் கட்டி ஒரு காரை இழுத்துக்கொண்டு ரிங்கைச் சுற்றிவரும்போது அத்தனைபேரும் வியந்து கைதட்டுவார்கள்.அதன்பின் அவள் தன் கூந்தலை அவிழ்த்து நீட்டி காட்டுவாள்.அதன் நீளமும் பளபளப்பும் பெண்களை திகைப்படையச் செய்யும்.

கூந்தலை வைத்தே நாலைந்து வித்தைகள் செய்வார்கள். அவள் ராப்புன்ஸா என்ற இளவரசியாக ஒரு செயற்கை உப்பரிகையில் நிற்பாள். இளவரசனாக வரும் செறியான் தோமஸ் என்பவன் அவளுடன் கொஞ்சிப்பேசுவான். அவள் தன் கூந்தலை அவிழ்த்து போடுவாள். அது கீழே வரை வரும். அந்தக் கூந்தலைப் பிடித்துக்கொண்டு அவன் மேலே ஏறி அவளருகே செல்வான். அந்தக் கூந்தலில் ஒரு கோமாளியை கட்டித் தூக்கி சுழற்றியும் காட்டுவாள்.

டெய்ஸி அழுது ஓய்ந்திருந்தாள். அவளுக்கு மிகவும் துக்கம் இருப்பதாக தோன்றவில்லை. ஜானை போன்ற ஒருவன் யோக்கியனாக இருக்க வாய்ப்பில்லை. அவன் பெண்களிடம் அன்பானவனாக இருக்க கொஞ்சம்கூட வாய்ப்பில்லை. செத்தது நல்லது என்றுகூட நினைக்கலாம். ஆனால் பெண்கள் தங்களை மோசமாக பயன்படுத்திக் கொண்ட கயவர்களுக்காகக்கூட அழுவதுண்டு.

அவள் நிகழ்ச்சி முடிந்து கலையும்போதுதான் ஜான் வரவில்லை என்பதை கவனித்தாள். சுல்தானின் குரல்கேட்டு அவள்தான் முதலில் ஓடி ஜான் அருகே போனாள். அவனை தொட்டதுமே தெரிந்துவிட்டது, அவன் செத்துவிட்டான் என்று. அதைச் சொன்னபோது மீண்டும் அழுதாள்.

நான் அவள் அழுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். உண்மையான அழுகைதான். மிகையான அழுகையும் அல்ல. கைக்குட்டையால் முகத்தை துடைத்தாள்.

“சரி நீ போகலாம்”என்றார் இன்ஸ்பெக்டர். “மிச்சமுள்ளவங்களை ஸ்டேஷனுக்கு வரச்சொல்லுங்க”

அவள் எழுந்துகொண்டாள். அப்போது ஒருகணம் அவள் கண்கள் சற்று அப்பால் திரண்டு நின்றிருந்தவர்களில் யாரோ ஒருவரின் கண்களுடன் சென்று தொட்டு மீண்டன. நான் உடனே திரும்பிப் பார்க்கவில்லை. ஃபைலை கட்டியபடி இயல்பாக பார்த்தேன். அவள் பெண்கள் கூட்டத்துடன் போய் நின்றாள். அவள் பார்த்தது ஆண்களின் கூட்டத்தை.

அவள் யாரை பார்த்தாளோ அவன் அவளையே பார்த்துக்கொண்டிருப்பான் என்று நான் நினைத்தேன். அவனை உடனே கண்டுபிடித்துவிட்டேன். தோமஸ் செறியான். விலங்குகளை பராமரிப்பவன், சர்க்கஸில் நாடகங்களில் மட்டும் வேடமிட்டு வருவான். வித்தையெல்லாம் செய்ய மாட்டான். அவன் ஒரு முண்டா பனியன்போட்டு கைகளை மார்பில் கட்டிக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த பாவனையே காட்டியது அவர்கள் காதலர்கள்.

 

[ 4]

 

முதல்கட்ட விசாரணையை இன்ஸ்பெக்டரும் நானும் ஷண்முகமும் சேர்ந்து நடத்தினோம். அந்த பீரங்கியை நன்றாக சோதனை செய்தோம். அதற்குள் குழாய் பளபளப்பாக நேரான உருளையாக இருந்தது. நேர்கீழே குழாயின் அடிப்பக்கம் சட்டிபோல குழிவாக இருந்தது. வெடிமருந்தாக போடப்படுவது ஒரு ரசாயனம்.ஒரு கால்பந்து அளவுக்கு இருக்கும். அதை வாய்வழியாக உள்ளே போடுவார்கள். அது அந்த சட்டிக்குழியில் சென்று பதியும்.

அதன் மேல் தீ வைக்கப்படுவதில்லை. தீவைப்பதுபோல பாவனைதான் காட்டுவார்கள். அதனுடன் இன்னொரு திரவம் கலக்கப்படும். அதை ஒரு சிறிய குழாய் வழியாக உள்ளே பீய்ச்சுவார்கள். அந்தக்குழாய் ரகசியமானது. அந்த திரவம் பட்டதும் உருண்டை வெடித்து நைட்ரஜன் வாயுவை உருவாக்குகிறது. நைட்ரஜன் வாயு குழாயில் அமர்ந்திருக்கும் ஜானை தூக்கி வானத்தில் வீசுகிறது.

ஜான் குழாயின் தொடக்கத்திலேயே உடலை நன்றாக உருட்டி இறுக்கிக்கொண்டு அமர்ந்திருப்பான். அவன் அந்தக் குழாயின் அடியில் சென்றுவிடாமலிருக்க குழாயில் இரண்டு சிறிய தடுப்புவெட்டுகள் உண்டு. அவற்றில் காலை ஊன்றி பிடித்துக்கொள்வான். வாயு அவனை நன்றாக உந்தி பறக்கவிடவேண்டும் என்றால் அவன் நன்றாக அடைத்துக்கொண்டிருக்கவேண்டும். உடலை சரியாக உருளையாக ஆக்கிக்கொள்ளவேண்டும்.

அதற்குள் ஜான் எப்படி அமர்ந்திருப்பான் என்று காட்டும்படி இன்ஸ்பெக்டர் சொன்னார். கணேசன் அமர்ந்து காட்டினான். தலையை மேலே வைத்து, கால்களை மடித்து முழங்கால்களை நெஞ்சோடு அழுத்திக்கொண்டு, கைகளால் கால்களை கட்டியபடி அவன் அமர்ந்திருப்பான். கட்டைவிரலால் குழாயின் வெட்டுத்தடுப்பை அழுத்தியிருப்பான். குண்டு வெடித்து விசையுடன் வரும் வாயு அவன் பிருஷ்டத்தில் ஓங்கி ஓர் உதைவிட்டதுபோல அடிக்கும். அவனை தெறிக்கவிடும். சரியாக அமராவிட்டால் அந்த அடியிலேயே முதுகெலும்பு முறிந்துவிடும்.

ஜான் சரியாக பறந்து கூடாரத்தின் திறப்பின் வழியாக வெளியே செல்லவேண்டும் என்றால் பீரங்கியை சரியான கோணத்தில் அமைக்கவேண்டும். இல்லாவிட்டால் கூடாரத்தின் மேல் கம்பியில் சென்று அறைந்து முதுகெலும்போ மண்டையோ உடைந்து அக்கணமே செத்துவிடுவான். அதற்கு கூடாரம் கட்டும்போதே ஒத்திகை செய்வார்கள். ஜானின் அதே எடையும் அளவும் கொண்ட ஒரு டம்மி இருந்தது. அதை வைத்து பலமுறை சுட்டு அது செல்லும் திசை, விழும் இடம் எல்லாவற்றையும் சரியாக அடையாளப்படுத்திக்கொள்வார்கள். பீரங்கி அதே இடத்தில், அதே நிறுத்தப்படும். அதை ஒரு மில்லிமீட்டர் கூட மாற்றாமல் அப்படியே அமைப்பார்கள்.

பதினெட்டு ஆண்டுகளாக ஜான் அந்த வித்தையைச் செய்துவந்தான். எந்த பிழையும் நடந்ததில்லை.”இந்த வித்தை அவனே கொண்டுவந்தது சார். பீரங்கியை எல்லாம் அவனே சரிபார்த்து அமைப்பான். அதோட இடம், கோணம் எல்லாம் அடையாளப்படுத்தி பெயிண்டால் மிகச் சரியா குறிச்சு குடுப்பான். அவன் கணக்கிலே கில்லாடி சார். இது எப்டி நடந்ததுன்னே தெரியல்லை” என்று வில்லியம்ஸ் சொன்னார்.

நானும் எல்லா இடத்தையும் பார்த்தேன். என் மனம் வேறுதிசையில் ஓடிக்கொண்டிருந்தது. இன்ஸ்பெக்டருக்கு சந்தேகம் மேலே கூரையில் இருந்த திறப்பிலோ அல்லது கீழே விழுமிடத்தில் இருந்த வலையிலோ அவன் கழுத்தை அறுக்கும்படியான கூர்மையான ஏதாவது பொருள் இருந்திருக்குமோ என்பதுதான். கூரையில் அவரே ஏறி ஆராய்ந்தார். வலையை அவிழ்த்து உதறிப்பார்த்தார். தரையில் சோதனைசெய்து பார்த்தார். எதுவுமே இல்லை.

ஜான் மேலே சென்றதுமே அங்கே ஏற்கனவே கட்டிவைக்கப்பட்டிருக்கும் அவனுடைய உடைபோன்ற உடைகள் எரிந்தபடி கீழே விழும்படி அமைத்திருந்தார்கள். அவை ஏற்கனவே ரகசியமாக தீவைக்கப்பட்டு, ஒரு கயிறால் மேலே தூக்கப்பட்டு, அங்கே கொண்டுசெல்லப்படும். சுருக்கை இழுத்ததுமே விழும். அதை கணேசன்தான் இழுத்திருக்கிறான். ஆனால் அந்த கயிறுக்கும் ஜான் எரிந்தபடி செல்லும் வழிக்கும் சம்பந்தமில்லை.

ஜானின் கைகளை கட்டுவது ஒரு தந்திரமான முடிச்சு. அவன் வலையில் விழுந்ததுமே தலைவழியாக அவற்றை உருவிவிடுவான். அந்தக் கயிறுகளை பார்த்தோம். அவை நல்ல பருத்தி நூலால் ஆன மென்மையான கயிறுகள். அவற்றாலும் எந்த ஆபத்தும் இருப்பதுபோலத் தெரியவில்லை.

ஒவ்வொருத்தரையாக ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி விசாரித்தோம். அவர்கள் சொன்னவற்றில் முரண்பாடுகள் ஏதுமில்லை. “இது விபத்துதான். அவன் மேலே போற வேகத்திலே என்னமோ கூர்மையா பட்டு அவன் கழுத்தை அறுத்திருக்கு”என்று இன்ஸ்பெக்டர் சொன்னார். “அந்தப் பொருள் என்னான்னு கண்டுபிடிச்சா கேஸை முடிச்சிரலாம். பாவம் கூத்தாடிக்கூட்டம். அந்த ஓனர் கண்ணீரு விடுதான்.”

சண்முகம் அவனுடைய சில சந்தேகங்களை சொன்னான். நான் பேசாமலிருந்தேன். கேட்காமல் சொல்வது கான்ஸ்டபிள்களுக்குரிய இயல்பு அல்ல. “என்னவே, உம்ம நெனைப்பு என்ன?”என்று இன்ஸ்பெக்டர் என்னிடம் கேட்டபோது நான் மெல்ல அசைந்து அமர்ந்தேன்.

“வேற எண்ணம் இருக்கு போல?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“நாம அந்த குட்டி டெய்சியை ஒருதடவை நல்லா விசாரிக்கணும் சார்” என்றேன்.

“அவளா? அவ சொன்னது உண்மை, சாட்சி இருக்கு. அவ அவன் செத்த பிறகுதான் பாத்திருக்கா”

“அவதான் ஜானை பீரங்கிக்கு உள்ள போட்டிருக்கா”

“அப்ப கொன்னிருப்பாங்கிறே? ஆயிரம்பேரு சுத்தி உக்காந்திட்டிருக்கானுக”

“ஆமா”என்றேன். “ஆனா இது கொலைன்னு யோசிச்சா மோட்டிவ் இருக்கணும். மோட்டிவ் இருந்தா அவளுக்குத்தான் இருக்கும்”

“என்ன மோட்டிவ்?”

“அவ மலையாளத்துக் குட்டி. வயசும் சின்ன வயசுதான். இந்த ஜான் பாம்பேக்காரன். வயசு வித்தியாசமும் கூடுதல். கல்யாணம் பண்ணிக்கிடவும் இல்ல. அவளுக்கு இதையெல்லாம் விட்டுட்டு எங்கியாம் போயி கல்யாணம் பண்ணி பிள்ளைகுட்டியா ஜீவிக்கணும்னு தோணுமா இல்லியா?”

”அதுக்காக அவ கொல பண்ணினான்னு சொன்னா, எப்டி? எந்த ஆயுதத்தாலே? எப்ப?”

“அதை சமானமா தனியா யோசிப்போம் சார். இப்ப இது விபத்துன்னு சொல்லுறதுக்கும் ஆதாரமில்லை பாத்துக்கிடுங்க.”

”சரி, நான் அந்த திசையிலே யோசிக்கேன். நீரு இந்த திசையிலே இந்த குட்டியை விசாரிச்சுப் பாரும்”என்றார் இன்ஸ்பெக்டர்.

நான் சர்க்கஸ் கூடாரத்துக்கு நேரில் போய் டெய்சியை மீண்டும் விசாரணை செய்தேன். அவளுடைய தோழிகளையும் விசாரித்தேன். பெண்களுக்கான மேக்கப் கூடாரத்தில் விசாரணை நடந்தது. டெய்சியையும் தோழிகளையும் அப்பால் அமரவைத்துவிட்டு, அவள் தோழிகளை ஒவ்வொருத்தியாக வரச்சொல்லி விசாரணைசெய்து மறுபக்கம் வழியாக அனுப்பினேன்.

நான் அமர்ந்திருக்கும் இடத்தருகே ஒரு நிலைக்கண்ணாடி. அதில் டெய்சியை பார்க்கமுடிந்தது. அவள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எங்கள் குரல்களை கேட்க முடியாது. ஆனால் அவள் எங்கள் முகபாவனைகளை பதற்றத்துடன் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கைகள் முந்தானையை பிசைந்துகொண்டே இருந்தன. அவள் முன்பைவிட பதற்றமானவளாக இருந்தாள்.

நான் கேள்விகளை சுற்றிச்சுற்றி கேட்டேன். குறிப்பாக ஜானின் குணம் பற்றி. “அவன் ஆளு எப்டி?”என்று கேட்டேன்.

எல்லா பெண்களும் தயங்கியபடி “ஆளு நல்ல மாதிரி”என்றனர்.

“போலீஸுக்கு சில தகவல்கள் கிடைச்சிருக்கு. பொய் சொல்லக்கூடாது. அவனுக்க டைரி ஒண்ணும் சிக்கியிருக்கு”என்று சொல்வேன். உடனே அவர்களின் முகம் மாறிவிடும்.

“அவன் உன் மேலே கையை வச்சிருக்கான் , எல்லாம் தெரியும். உள்ளதைச் சொல்லு”என்று மேலும் சொல்வேன். அப்படியே உடைந்து விசும்பி அழ ஆரம்பித்துவிடுவார்கள்.

அந்த சர்க்கஸில் எல்லா பெண்களையும் ரிங்மாஸ்டர் வில்லியம்ஸும் ஜானும் வலுக்கட்டாயமாக அனுபவித்து வந்தார்கள். வில்லியம்ஸ் எல்லாரையும் ஒரு சில முறை அனுபவித்துவிட்டால் அதன்பின் பெரிதாக தொந்தரவு செய்வதில்லை. திரும்பத் திரும்ப லீலாவும், அல்காவும்தான் அவனுடன் படுக்கச் செல்லவேண்டும். ஆனால் ஜான் அப்படி அல்ல. அவன் ஒரு காமவெறியன். ஒரு நாளிலேயே பல பெண்கள் அவனுக்கு வேண்டும். அதோடு அவனுடைய ருசிகள் எல்லாமே விபரீதமானவை. ரீட்டாவை சிங்கத்தின் கூண்டுக்குள் கொண்டுசென்று உறவு வைத்திருக்கிறான். அனகாவை யானை மேல் படுக்க வைத்து உறவுகொண்டிருக்கிறான். பலர் பார்க்க உறவுகொள்வது, இயற்கை மீறிய உடலுறவு முறைகள் எல்லாமே உண்டு.

ஆனால் அதைவிட அவர்கள் கொடுமையாக நினைத்தது அவன் காமத்தின்போது அடிப்பதும் கடிப்பதும். “ஓநாயி மாதிரி ஆயிடுவான் சார். ரத்தம் காணாம அவன் கிட்டே இருந்து தப்ப முடியாது. வான்னு கூப்பிட மாட்டான். தண்ணி போட்டுட்டு வந்து அடி அடியா அடிச்சு அப்டியே தலைமுடியை புடிச்சு இளுத்திட்டு போவான். அவன் கொண்டுபோற குட்டி போடுத ஓலம் கூடாரம் முழுக்க கேட்கும். என்னென்ன செய்வான்னு சொல்லவே முடியாது. ஒருத்திக்க கீழே முடியிலே பிராந்திய ஊத்தி தீயவைச்சுட்டான் ஒருக்கா” என்றாள் எலிசா.

கேட்கக்கேட்க எனக்கே கைகால்கள் பதற ஆரம்பித்துவிட்டன. “அவனுக்கும் டெய்சிக்கும் உறவு எப்டி?”என்று கேட்டேன்.

எலிசா என் பார்வையை தவிர்த்து “அவனுக்க மனைவி மாதிரி”என்றாள்.

“மனைவி மாதிரின்னா?”என்றேன்.

“அவனுக்கு எல்லாம் அவதான் செய்யணும்… குளிப்பாட்டிக்கூட விடணும்”

“அவளை அடிப்பானா?”

எலிசா “ஆமா, தினமும் அடிப்பான். என்னென்னவோ செய்வான். ஒரு தடவை அவளை தலைமுடியை பிடிச்சு தூக்கி கயித்திலே கட்டி தொங்கவிட்டுட்டான். ஒருநாள் முழுக்க தொங்கி அலறிட்டே இருந்தா” என்றாள்.

கடைசியாக நான் டெய்சியை அழைத்தேன். அவள் வந்து அமரும்போதே அழுதுகொண்டிருந்தாள்.

“நீ ஜானுக்க பெஞ்சாதியா?”என்றேன்.

“அவன் என்னைய அடிமையா வச்சிருந்தான் சார், எனக்கு போக்கிடம் இல்லை”

“அவன் உன்னை அடிப்பானா?”

அவள் அழ ஆரம்பித்தாள்.

“சொல்லு, அடிப்பானா?”

“ஆமா”

“சித்திரவதை செய்வானா?”

அவள் தலையசைத்தாள்

“சொல்லு, என்ன சித்திரவதை செய்வான்?”

“எல்லாம் உண்டு”

“எல்லாம் உண்டுன்னா?”

அவள் உதட்டை கடித்துக்கொண்டு சும்மா அமர்ந்திருந்தாள். கைவிரல்கள் பின்னிக்கொண்டிருந்தன

“என்ன செய்வான்? ஒண்ணு சொல்லு”

அவள் சட்டென்று தன் கவுனை தோள்பக்கம் நெகிழ்த்தி இடது முலையை காட்டினாள். வெண்ணிறமான இளமையான பெரிய முலை. ஆனால் அது முழுக்க தழும்புகள். பழைய வடுக்கள். நீலம் பாரித்தவை, செக்கச்சிவப்பானவை. தீயால் சுட்ட புள்ளிகள். முலைக்காம்பு சிதைந்து போயிருந்தது

“கிடுக்கி வச்சு நசுக்குவாம்” என்றாள்.

நான் உறைந்துபோய் அமர்ந்திருந்தேன். அவள் பாவாடையை தூக்கப்போனாள். நான் “போரும்”என்றேன்

அவள் பெருமூச்சுவிட்டாள்.”இங்கேருந்து எங்கபோனாலும் மானமா பிழைக்கலாம். ஆனா இவனுக விடமாட்டானுக. திருடீட்டு ஓடிப்போனதா போலீஸிலே கம்ப்ளெயிண்ட் குடுத்து பிடிச்சு திருப்பி கொண்டாந்திருவானுக. அப்டி பலபேரை கொண்டுவந்து திருப்பி போட்டு அடிக்கிறத நான் பாத்திருக்கேன்…. எனக்கு  இங்கேருந்து ஒரு மோட்சம் உண்டுன்னா இவனுகளே குடுத்தாத்தான் உண்டு”

நான் அவளை கூர்ந்து பார்த்து “சரி செறியான் தோமஸுக்கும் உனக்கும் என்ன உறவு?”என்றேன்.

அவள் திடுக்கிட்டு “இல்ல சார்… ஒண்ணுமில்லை சார்”என்றாள்.

“அதை ஏற்கனவே அவன் சொல்லியாச்சு”

“இல்ல சார், ஒண்ணுமில்லை சார்”

“பொய் சொன்னா கேஸு பெரிசாகும்”

“இல்ல சார், ஒண்ணுமில்லை சார்”

“நீ அவனை ஆசைப்படுதே, இல்லியா?”

“சத்தியமா இல்ல சார்”

என் முயற்சி தோற்றது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. அப்படி எதிர்பாராமல் கேட்டால் அவள் ஒப்புக்கொள்வாள் என்றுதான் நினைத்தேன். அதிசயமாக இருந்தது.

அடுத்து கணேசனையும், கால்வினையும், செறியான் தோமஸையும் விசாரித்தேன். கணேசனிடம் பூடகமாக டெய்சிக்கு ஏதாவது காதல் கீதல் உண்டா என்று கேட்டுப்பார்த்தேன். அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. தாமஸிடம் டெய்சி பற்றி கேட்டேன். “நல்ல பெண்ணாக்கும் சார்”என்றான்,

“டெய்சிக்கும் உனக்கும் அடுப்பம் உண்டுன்னு ஒரு பேச்சு இருக்கே?”என்றேன்,

“சார், இங்க இப்டி மாறிமாறி என்னமாம் சொல்லிட்டேதான் இருப்பாளுக. அதுக்கெல்லாம் அர்த்தமே இல்லை”என்று அவன் சொன்னான்,

“உண்மையிலே உனக்கு அவகிட்டே என்ன உறவு?”

“பரிதாபம் உண்டு சார்… மத்தபடி ஒண்ணுமில்லை. எப்பவாவது சிலசமயம் நாலஞ்சு வார்த்தை பேசிக்கிடுதது உண்டு”

நான் சோர்ந்துவிட்டேன். இப்படி முட்டுச்சந்தில் போய் முட்டும் என நான் நினைத்திருக்கவே இல்லை.

கடைசியாக அங்கே இருந்ததிலேயே வயதானவளான எலியாம்மாவை விசாரித்தேன். ஆலீஸ் என்றும் பெயர் உண்டு. பழைய ஊஞ்சலாட்டக்காரி. பிறகு சமையற்காரியாக ஆனவள்.

அவளிடம் எந்தப் பயமும் இல்லை. ஆகவே மிரட்டும் தொனியிலான கேள்விகளுக்கெல்லாம் மிகையான பணிவும் பயமுமாக பதில் சொன்னாள். நான் அவளை இயல்பாக ஆக்கினேன். அவள் வம்புபேசுபவள் என்பது அவளுடைய குரல் நடிப்பிலேயே தெரிந்தது. அத்தனை ஏற்ற இறக்கங்கள், போலிக்குரல்களுடன் பேசுபவர்கள் பெரும்பாலும் பெரிய வம்புக்காரிகளாகவே இருப்பார்கள்.

பேசிப்பேசி அவள் எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தாள். ஜான் அவளையும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியிருக்கிறான் என்றாள். அவள் ஒரு காலத்தில் வில்லியம்ஸுக்கு மனைவி மாதிரி இருந்தாள். அதன்பின் லீலா அல்கா என்ற இரண்டு மேனாமினுக்கிகளும் வந்து அவளை துரத்திவிட்டுவிட்டார்கள்.

”டெய்சி எப்படி?”என்றேன்

“நல்லகுட்டி. ஆனா பெண்ணானா உள்ளதை வைச்சு ஓணம் கொண்டாட தெரிஞ்சிருக்கணும். ஒரு ஆம்புளைக்கு உன்மேலே ஆசை இருக்குன்னா அதை அப்டியே விருத்தி பண்ணிக்கிடணும். நனைஞ்ச இடம் குழிக்கணும்னுதானே சொல்லு இருக்கு. கையிலிருக்கிறத விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படக்கூடாது.”

“அவமேலே ஜானுக்கு ஆசையா?”

“பின்னே கொள்ளை ஆசையாக்குமே. சார், அவன் ஆருகிட்டே என்ன செய்தாலும் ராத்திரி உறங்கணுமானா இவ வேணும். இவளுக்க தலைமுடியை நல்லா பாய் மாதிரி மெத்தையிலே பரப்பிப் போட்டு அதுமேலே படுத்துதான் அவன் உறங்குவான்….நான் எத்தனையோ தடவை பாத்திருக்கேன்”

“ஓகோ”என்றேன்.

“இவ தலைமுடிய விரிச்சுப் போட்டு குளிக்கிறப்ப வந்து உக்காந்து பாத்திட்டிருப்பான். இவ தலைமுடி ஆத்துறப்ப ஃபேன் வைச்சு குடுப்பான். சாம்பிராணிப் புகையெல்லாம் போட்டு குடுப்பான் சார்… இவளுக்கு தலைமுடிக்கு எண்ணையோ தைலமோ என்ன வேணுமானாலும் வாங்கிக்குடுப்பான். நீலிபிருங்காதி மாசம் ஏழெட்டு குப்பி ஆயிடும் பாத்துக்கிடுங்க”

“பிறகு ஏன் இவ மத்தவன் மேலே ஆசைப்பட்டா?”என்று ஊடாக கேட்டேன்.

“கொளுப்பு… கறிக்கொளுப்பு. வேறே என்ன? அவன் இவளுக்க சாதி. ரெண்டுபேரும் மார்த்தோமா கிறிஸ்தியானிகள். அவன்கூட எர்ணாகுளத்துக்கு போயி ஓட்டலு வைச்சு சீவிக்கலாம்னு ஆசை. அவன் சொல்லிக் குடுத்திருப்பான். இவகிட்டே கையிலே கொஞ்சம் சில்லறை உண்டு. கொஞ்சம் பொன்னும் உண்டு. எல்லாம் ஜான் குடுத்தது. அவன் நெறைய குடுத்திருக்கான் சார். இவ மேலே அவனுக்கு அவ்ளவு ஆசை… சார் ஒண்ணு யோசிச்சுப்பாக்கணும், ஜான் இல்லேன்னா இவ ஆரு? வெறும் சமையக்காரில்லா? இவ முடியிலே இம்பிடு சக்தி உண்டுன்னு கண்டுபிடிச்சது யாரு?”

”அவன் ஆளு எப்படி?”என்றேன்.

“வாயி கூடுதல். திறமையும் ஒண்ணும் கெடையாது. அனாதையா வந்தவனை முதலாளி இப்டி ஒரு ஆளா ஆக்கினாரு. அந்த நண்ணி இல்லை. இப்ப கையும் காலும் வளந்து பைசாவோட ஒரு பெண்ணு கூட வாறேன்னு சொன்னதும் அப்டியே போகலாம்னு ஆசைப்படுதான். முதலாளி விட்டிரமாட்டாரு. ஜானுக்கு தெரிஞ்சா கொன்னு போட்டிருவான்… இவனுக்க நல்லகாலம், இப்ப ஜான் போயாச்சு”

“ஜானுக்கு இது தெரியாதா?”

“தெரியாதுன்னு நினைக்கேன்… கொஞ்சம் சந்தேகம் இருக்கும்போல. ஆறேளுநாளா அவளை போட்டு அடிக்கிறதும் அவ அளுவுறதும் நடந்திட்டிருந்தது. இப்பம் என்ன, அவன் போயாச்சே. இனி இவளுகளுக்க ராச்சியம்தானே?”

“அப்ப செறியான் தோமஸ் ஜெயிச்சுட்டான்?”

அந்தப் பெயர் அவளை திடுக்கிடச்செய்தது. அப்போதுதான் அவளுக்கு தான் சொன்னதென்ன என்று தெரிந்தது. “நான் என்னத்த கண்டேன்.நான் சமையக்காரி. நானுண்டு என் சோலியுண்டுன்னு இருக்கேன். சமையக்காரி என்னத்த காணமுடியும்? சமைக்கவே நமக்கு ஏலு இல்லை”

அவளை அனுப்பிவிட்டு அமர்ந்து யோசித்தேன். சந்தேகமே இல்லை கொலைதான். அவனை கொல்லாமல் இவர்களால் வாழவே முடியாது. ஆகவே தீர்த்துக்கட்டிவிட்டார்கள். வேறெந்த விளக்கமும் சரியாக வரவில்லை. கொலை செய்ததனால்தான் இருவருக்கும் நடுவே உறவு உண்டா என்று கேட்டதற்கும் உறுதியாக மறுத்தார்கள். ஏனென்றால் உறவு இருக்கிறது என்று சொன்னால் எப்படியோ அது கொலைவரை கொண்டுசென்று சேர்த்துவிடும்.

 

[ 5 ]

 

”கொலைன்னா ஆயுதம் எங்க?”என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். போஸ்மார்ட்டம் ரிப்போர்ட்டை மேஜைமேல் தூக்கிப்போட்டு “பிஎம் ரிப்போர்ட் வந்திருக்கு. படிச்சுப்பாரும். மிகக்கூர்மையான பொருளாலே ஒரு வெட்டு விழுந்திருக்கு. அரை இன்ச் ஆழத்திலே தொண்டை கிழிஞ்சிருக்கு”

“சரி சார், உங்க கணக்குப்படி இது ஆக்ஸிடெண்ட். கூர்மையான ஏதோ அவன் வேகமா பறக்கிறப்ப கழுத்தை வெட்டிட்டுது. அவன் எப்டி அந்த காயத்தோட எந்திரிச்சு நடந்து வந்து கட்டில் வரை வந்தான்?”

இன்ஸ்பெக்டர் பதில் சொல்லவில்லை. அவர் அதைத்தான் பலநாட்களாக யோசித்துக்கொண்டிருந்தார்.

“அவன் கழுத்தைப்பொத்திட்டு நடந்து வாறதை சுல்தான் பார்த்திருக்கான் ,அவன் பொய் சொல்லலை”

“அப்ப உம்ம கதை என்ன?”

“எனக்கும் ஒண்ணும் புரியல்லை சார். அவன் கழுத்தை பிடிச்சுட்டு வலையிலே இருந்து நடந்து வந்தது உண்மை. அப்பவே கழுத்து அறுந்து போச்சுன்னா அவன் எப்டி இவ்ளவு தொலைவு நடந்தான்? மொத்தமே நாலு சொட்டு ரத்தம்தான் தரையிலே விழுந்திருக்கு…. அவ்ளவு ஆழமா வெட்டு விழுந்தா ஏன் ரத்தம் வரலை?”

“இட்சிணி வேலை, இல்ல?”

“ரெண்டு வாய்ப்பு இருக்கு. அவன் கழுத்து லேசா கீறியிருக்கலாம். அவன் அப்டியே வந்து படுத்து, சுல்தான் பாத்திட்டு அந்தாலே போன பிறகு ,யாராவது வந்து அந்த காயத்துக்கு மேலேயே இன்னொரு நல்ல வெட்டு போட்டிருக்கலாம்”

“அந்த காயத்த பாத்தேருல்லா? ஒரு செவப்பு முடியிழை மாதிரி இருந்தது. அதிலே ரெண்டு வெட்டு இருக்கதெல்லாம் …சரி, சொல்லும்”

“இல்லேன்னா கழுத்திலே வெட்டு விழுந்ததே படுத்த பிறகுதான். வலையிலே இருந்து வாறப்ப சின்னதா ஏதாவது சுளுக்கு மாதிரி இருந்திருக்கலாம்”

“செரி, சொல்லும்”

“தோமஸ் எங்க இருந்தான்னு பாக்கணும். டெய்சி எங்க இருந்தான்னு பாக்கணும். மத்த ஒவ்வொருத்தனும் எங்கெங்கே இருந்தான்னு பாக்கணும்.”

“செரி பாரும். ஆனா இந்த கேஸிலே மெயின் விசயம் அந்த வெப்பன் என்னங்கிறதுதான்… அது கத்தியோ வாளோ ஒண்ணுமில்லை. ரேசர் பிளேடுகூட இல்லை. அதைக்காட்டிலும் ஷார்ப்பான என்னமோ ஒண்ணு. அப்டி கூர்மையா வெட்டியிருக்கு. அதை கொண்டுட்டு வாரும்”

“அதெப்டி… “என்றேன்.

“அப்டி நீரு அந்த ஆயுதத்தைக் கொண்டு வந்தா இதைக் கொலைக்கேஸா எடுப்போம். இல்லேன்னா சிம்பிள் ஆக்ஸிடெண்ட்டுன்னு சொல்லி கேஸை முடிப்போம். இந்த பாம்பேக்கார நாயி ஒண்ணும் யோக்கியன் கெடையாது. இவனுகளுக்கெல்லாம் நல்ல சாவு கிடையாது. அவன் விதி அதுன்னு விட்டிர வேண்டியதுதான். இந்த சின்ன ஊரிலே இருக்கிற குடிகார நாயிங்களுக்க ஆயிரம் கேஸுக்கு எடையிலே இதுக்காக தலைபுகைஞ்சு யோசிக்க முடியாது. எஸ்பி கிட்டே சொல்லிட்டேன். என்னமாம் எளுதி முடிச்சு விடுடேன்னு அவரும் சொல்லியாச்சு”

வில்லியம்ஸ் கொஞ்சம் பணமும் இறக்கியிருப்பார், அது எனக்கு புரிந்தது. ஆனால் அந்தமாதிரி அறிதல்களைக் கண்ணில்கூட காட்டக்கூடாது என்ற பயிற்சி எனக்கு உண்டு. சில சமயம் நானும் சில்லறைகளை வாங்கிக்கொள்வேன்.

“சார், இவனுக சர்க்கஸ் ஆளுங்க. இந்த சர்க்கஸிலே எல்லாமே நூதனமான தந்திரங்கள்தான். பாருங்க இந்த பீரங்கி வெடிக்கிறதிலேயே என்னென்ன சூட்சுமம் இருக்குன்னு. அந்த புகைய கெளப்புதது உலர்பனிக்கட்டிதான். கார்பன் டையாக்சைடு உலந்ததாம். தண்ணிபட்டா புகைய கெளப்புது. அந்த குண்டு என்னமோ நைட்ரைட்டு. என்னென்னமோ கருவிகள்லாம் வச்சிருக்கானுக. கூர்மையான ஏதோ கத்தி அவனுக கையிலே இருக்கு”

“அந்த குட்டி கையிலே, இல்ல?”

“இல்ல. வில்லியம்ஸ் கையிலே இருக்கலாம். அதை அவளோ தாமஸோ அதை திருடியிருக்கலாம்”

“விடமாட்டேரு… சரி, ஒரு நாலு நாளு எடுத்துக்கிடும். அதுக்குள்ள அந்த ஆயுதத்தோட வாரும். அவனுகளுக்கு இந்த ஊரிலே ஷோ முடிஞ்சுபோச்சு. கெளம்புறேன்னு சொல்லி அளுறானுக. உமக்காக நாலு நாளு டைம் தாறேன். நாலு நாளிலே ஆயுதம் கிட்டல்லேன்னா கேஸு ஓவர். சரியா?”

“சரி சார்”என்றேன்.

எனக்கு பதற்றம் வந்துவிட்டது. உண்மையில் அப்படி ஓர் ஆயுதம் உண்டா? ரேசர் பிளேடைவிட கூர்மையானது? ஏதாவது ஆங்கிலப்படத்தில் ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்தியிருப்பாரா? ஆங்கிலசினிமா பார்க்கும் ஒருவர் நாகர்கோயிலில் உண்டு. அவரைப் போய் பார்த்து கேட்கலாம். ஆனால் நேரமில்லை. நான்கே நாட்கள்.

நான் மீண்டும் சர்க்கஸுக்கு போனபோது என்னை எல்லாரும் வெறுப்புடன் பார்த்தார்கள். நான் கேட்ட எந்த கேள்விக்கும் விரிவாக பதில் சொல்லவில்லை. ஒவ்வொருவரையாக மீண்டும் விசாரித்தேன்.

ஜான் பறந்து வந்து விழுந்தபோது அங்கே இருந்தவன் சுல்தான் மட்டும்தான். சமையலறையில் சிலர் இருந்தனர். ஆரீஸும் மாரீஸும் சிங்கங்களுடன் இருந்தனர். தோமஸ் ரிங்கில் ராப்புன்ஸா நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தான். டெய்ஸி உப்பரிகையில் நின்றிருந்தாள். மற்ற அத்தனைபேரும் ரிங்கிலோ ரிங்கைச் சுற்றியோதான் இருந்தனர்.

சுல்தானை திரும்பத்திரும்ப விசாரித்தேன். சுல்தான் ரிங்கில் இருந்த வில்லியம்ஸுக்கு விஸ்கி கொண்டு சென்று கொடுத்தான். மாலினிக்கு அவளுடைய மேலாடையை கொண்டுசென்று கொடுத்தான். ஆலிஸுக்கு அவளுடைய மேக்கப் கண்ணாடியை கொண்டு சென்று கொடுத்தான். அப்போதெல்லாம் ஜான் கிடந்த நாடாக்கட்டிலை கடந்துதான் சென்றுகொண்டிருந்தான். அங்கே எவருமே நடமாடவில்லை. அவனால் உறுதியாகச் சொல்லமுடியும்.

இன்னொருமுறை எல்லாரும் சொல்வது உண்மையா என்று விசாரித்துக்கொண்டேன். உண்மையேதான். அதோடு வலையில் வந்து விழும்போதே ஜானுக்கு காயம் பட்டிருக்கிறது, இல்லையேல் நான்கு துளி ரத்தம் விழுந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவ்வளவு பிளந்தும் ஏன் நிறைய ரத்தம் வரவில்லை?

அந்த வெட்டுக்காயம் அத்தனை மெல்லிய கத்தியாலானது. மிக ஆழமாக போனால்கூட தசை விரிந்து பிளக்கவில்லை. ஆகவே ரத்தம் வர மிகவும் தாமதமாகியிருக்கிறது. வலியும் இருக்கவில்லை. ஆகவேதான் ஜான் அதை பொருட்டாக நினைக்கவில்லை. சின்ன எரிச்சலும் மெல்லிய ரத்தக்கசிவும் இருந்திருக்கலாம். அவனுக்கே அது எத்தனை ஆழமானது என்று தெரிந்திருக்காது.

ஆனால் அவன் தலைக்கு ரத்தம் போவது குறைந்துவிட்டிருக்கிறது. ஆகவே களைப்பும் மனக்குழப்பமும் வந்திருக்கலாம். அப்படியே வந்து கட்டிலில் படுத்திருக்கிறான். படுத்தபோது உடலை வளைத்தமையால் அந்த வெட்டுக்காயம் விரிசலிட்டு ரத்தம் கொஞ்சம் அதிகமாகச் சொட்ட ஆரம்பித்திருக்கிறது. அதன்பின் ரத்தமே வழி கண்டுபிடித்துவிட்டது. ஆனால் வெட்டுக்காயம் வழியாக கழுத்துக்குகீழே ஊறிச் சொட்டியிருக்கிறது. மேலே ஒரு மிகமெல்லிய கோடுபோல கீற்றல் மட்டும்தான். ஆகவே எவரும் அதைப் பார்க்கவில்லை.

நான் கடைசியாக செறியான் தோமஸை அழைத்து நேரடியாகவே பேசினேன். “இங்க பாரு, போலீஸுக்கு தெரியாதது ஒண்ணுமில்லை. உள்ளதைச் சொல்லணுமானா எங்களுக்கு கேஸை கோர்ட் வரைக்கும் கொண்டுபோறதிலேதான் இண்ட்ரெஸ்ட். கோர்ட்டிலே குற்றவாளி தப்பிச்சுப்போனா எங்களுக்கு ஒண்ணுமில்லை. அதனாலே உள்ளதைச் சொல்லுறதனாலே உனக்கு லாபம்தான். கேஸை நாங்க பிடிச்சாச்சு. சில சாட்சிகளும் தொண்டி சாமானங்களும் தேவைப்படுது அவ்வளவுதான். உங்கிட்ட சொல்றதுக்கென்ன, உண்மையான சாட்சிகளும் தொண்டி சாமானும் கிடைச்சா அதை கொண்டு கோர்ட்டிலே வைப்போம். இல்லேன்னா நாங்களே உண்டாக்கிக்கிடுவோம். நாங்களும் தொளிலு செய்யணுமா இல்லியா?”

“சார், நீங்க சொல்லுறது என்னன்னே எனக்கு தெரியல்ல… சத்தியமாட்டு தெரியல்ல”

“நீயும் டெய்சியும் நெருக்கமா இருக்கிறது தெரிஞ்சாச்சு. எல்லாத்தையும் ஏலியாம்மா சொன்னா. அதுக்குப்பிறகு மத்தவங்களும் சொல்லியாச்சு”

அவன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்

“சொல்லு, அவளை நீ கெட்டிக்கிட ஆசைப்படுதே தானே?”

“ஆமா சார்… நாங்க எப்டியாவது மானமா ஜீவிக்கணும்னு நினைக்குதோம் சார். இங்க இந்த வாழ்க்கை இனிமே முடியாது சார். அவ வாழுறது வாழ்க்கை இல்லை சார். தெருநாய்க்கும் கீழே ஒரு வாழ்க்கை… அடிமை சார். அடிமை இல்லை, அதைவிட கேவலம் சார்”

“தெரியும்” என்றேன். “ஆனா ஜான் நீங்க சேந்து வாழ விடமாட்டான். அவனுக்கு தெரிஞ்சுபோச்சு. அவன் அவளை கொடுமைபண்ணினான். எங்க போனாலும் விடமாட்டேன்னு சொன்னான்”

“அதெல்லாம் எனக்கு தெரியாது சார்”

“அதனாலே ஜானை கொல்ல திட்டம் போட்டீங்க. நான் நல்லா யோசிச்சாச்சு. அந்த கொலை இப்டி நடக்கத்தான் வாய்ப்பு. வேற மார்க்கமே இல்லை. டெய்சி ஜானை அந்த பீரங்கிக் குழாய்க்குள்ள போடுறப்ப பீரங்கி வாயிலே கூர்மையான எதையோ பொருத்தி வைச்சுட்டா… தூரத்திலே இருந்து பாத்தா தெரியாத மாதிரி ரொம்ப சின்ன ஆயுதம்.. அதை ஜானும் பாத்திருக்க வாய்ப்பில்லை. பீரங்கி வாயிலே சரியா ஜானுக்க கழுத்து வெளியே போற மார்க்கத்திலே அதை பொருத்தி வைச்சிட்டா. பீரங்கி வெடிச்சு அவன் வெளியே பறக்கிறப்ப அவன் கழுத்தை அது அறுத்திட்டுது”

“இல்ல சார். அவ அப்டி செய்யக்கூடியவ இல்லை. அவளை எனக்கு நல்லாவே தெரியும். அவ அப்டிப்பட்டவ இல்லை”

“அந்த ஆயுதம் என்ன? அதைச் சொல்லிடுங்க. அதை எடுத்து குடுத்திருங்க… என் அப்பா மேலே சத்தியம். நான் கேஸு எழுதுறப்ப எல்லாம் சாதகமா எழுதுவேன். கேஸ் முதல் ஹியரிங்கிலேயே உடைஞ்சிரும். நீயும் அவளும் விடுதலை ஆயிடுவீங்க”

“சார், உங்களை என் அப்பா மாதிரி நினைச்சு சொல்லுதேன் சார். சத்தியமா எனக்கு தெரியாது. சத்தியமா அப்டி அவ கொலையெல்லாம் செய்யமாட்டா… அந்தாளு எப்டி செத்தான்னே எனக்கு தெரியாது…”

“சரி நான் கட்டாயப்படுத்தல்லை… நீ நிதானமா யோசிச்சுப்பாரு. உண்மையைச் சொல்லுதேன். நாங்க பொய்ய்யா ஒரு தொண்டி சாமானை வைச்சு கேஸு போட்டா அது ஸ்டிராங்கா இருக்கும். அதுக்குண்டான எல்லாத்தையும் செய்வோம். நீ உண்மையைச் சொல்லி, நாங்க செரி பொழைச்சு போகட்டும்னு கேஸு போட்டாத்தான் நீ தப்ப முடியும்… உனக்கு வேற வழி இல்லை”

“சார், நான் ஏழையாக்கும் சார்… அனாதையாக்கும் சார். சத்தியமா நான் தெரிஞ்சு நானோ அவளோ செய்யல்ல சார். இத்தனை நாள் வாழ்க்கையிலே ஒரு மனுசன் எங்கிட்ட அன்பா ஒரு வார்த்தை சொன்னதில்லை சார். உங்களை பெத்த அப்பன் மாதிரி நினைச்சு கேக்கிறேன் சார்… எங்கள வாழவிடுங்க சார்”

அவன் அழுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். அது நடிப்பு அல்ல. உண்மையான அழுகை. அதை அறிய எல்லா போலீஸ்காரர்களாலும் முடியும்.

சலிப்பாக இருந்தது. ஒன்றும் சொல்லாமல் எழுந்துகொண்டேன். பக்கத்து கூடாரத்தில் டெய்சி இருந்தாள். அங்கே நின்றே அவளை பார்த்தேன். அவள் செய்திருப்பாளா? அவள் செய்தாள் என்றே எனக்கு தோன்றிக்கொண்டிருந்தது. யோசித்துப் பார்த்தால் முதல்முறை அவளை பார்த்தபோதே அப்படி தோன்றியது

டெய்சியை மீண்டும் விசாரித்தேன். “இங்கே பார், தோமஸ் சொல்லிட்டான்”என்றேன்

அவள் எரிச்சலுடன் “என்ன சார் இதையே சொல்லிட்டிருக்கீங்க? அவன் அப்டி என்ன சொன்னான்? அவன் சொன்னா ஆச்சா? செரி, உங்களுக்கு நான் அந்தாளை கொன்னேன்னு கேஸு போடணுமானா போடுங்க. இனி என்னாலே பேசமுடியாது” என்றாள். “இங்க இருக்கிறதுக்கு ஜெயிலிலே இருக்கேன். எனக்கு அது நல்ல ஜீவிதம்தான்” என்றாள்.

“அவன் நீ கொன்னதா சொல்லல. உங்க ரெண்டுபேருக்கும் மனசு ஒத்துப்போனதைப் பத்தி சொன்னான்”

“ஆமா, மனசு ஒத்துப்போயிருக்கு. அவன்கூட சேந்து வாழணும்னு ஆசை. அது தப்பா? அதுக்காக நான் சாகணுமா? சாகணும்னா எங்கள கொல்லுங்க… பீயிலே புழு மாதிரி ஜீவிக்குத பெண்ணாக்கும் நான். என்னைய மெரட்டாதீங்க… எனக்கு இனி ஒண்ணும் நஷ்டப்படுறதுக்கு இல்ல” என்றாள் டெய்சி.

“சரி, இல்லல்ல? விடு”என்றேன். “ஆனா, கடைசியா ஒரு கேள்வி. ஜான் சாகிறப்ப, அந்த கடைசி நாளிலே, அவனுக்கும் உனக்கும் என்ன நடந்தது? சண்டையா?”

“ஆமா, எப்பவும் சண்டைதான்… அதுதான் அப்பவும்”

“சரியா என்ன நடந்தது? அதை மட்டும் சொல்லமுடியுமா?”

“அவன் என்னமோ பழைய நாடகம் பத்தி சொன்னான். இங்கிலீஷ்லே யாரோ கவிஞன் எழுதின கவிதையோ நாடகமோ என்னவோ ஒண்ணு. அதை அடிக்கடி சொல்லுவான். அந்த நாடகத்தை முன்னாடி அவனுக்க பழைய மனைவியும் அவனும் சர்க்கஸிலே நடிப்பாங்களாம். அவளுக்கு நெறைய தலைமுடி இருந்திருக்கு”

“தலைமுடி பத்தின நாடகமா?” என்றேன்

‘ஆமா சார், ஞாபகம் வந்துபோட்டுது… அது ஆரோ வெள்ளைக்காரன் எழுதின பாட்டுநாடகம்.  அந்த புக்கு அவன் ரூமிலே இருக்கு”

நான் உடனே என் ஃபைலில் இருந்த பட்டியலில் விரல் வைத்து தேடினேன். அந்த நாற்பதுபக்க புத்தகம் ‘ஃபோர்பிராஸ் லவ்வர்’.ராபர்ட் பிரௌனிங்.

“ஃபோர்பிராஸ் லவ்வரா?”

“அதெல்லாம் தெரியாது… அவன் அதை மனப்பாடமாச் சொல்லுவான்”

”ஓகோ” நான் அதை குறித்துக்கொண்டேன்.

“ஆமா. அதிலே ஒரு ராஜா அவனுக்க காதலிய அவ தலைமுடியை கழுத்திலே போட்டு முறுக்கியே கொன்னிருவான்… அதைச் சொல்லிட்டே என் தலைமுடியை பிடிச்சு என் கழுத்திலே போட்டு முறுக்கினான். மூச்சு நின்னுட்ட மாதிரி இருந்தது. காலையும் கையையும் போட்டு உதறினேன். செத்திருவேன்னு நினைச்சேன். அவன் கையை விட்டப்ப அப்டியே தரையிலே விழுந்துட்டேன். இருமி இருமி மூச்சு வாறதுக்கு அரைமணி நேரமாச்சு. அவன் நின்னு சிரிச்சான். ஒரு சுருட்டு கொளுத்தி புகையை இளுத்து என் தலைமுடிமேலே ஊதினான்.”

சட்டென்று என் மனம் அதிர்ந்தது.

“கொலைக்கான ஆயுதம் என்னான்னு கண்டுபிடிச்சாச்சு”என்றேன்

“சார்”என்றாள். உண்மையாகவே பதறிவிட்டாள். நடுங்கும் கைகளை மார்போடு சேர்த்துக்கொண்டாள்.

“ஆனா அதைக்கொண்டுபோயி இன்ஸ்பெக்டர்ட்ட காட்ட முடியாது. கோர்ட்டிலேயும் நிக்காது”என்றேன்.

அவள் கலங்கிய கண்களுடன் என்னை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். உதடுகள் சற்று விலகி நடுங்கிக்கொண்டிருந்தன. கைவிரல்கள் துடித்தன.

நான் எழுந்துகொண்டு “செரி, நீ சூட்சுமம் அறிஞ்சவ. உனக்க தெய்வமும் உனக்கு துணையாட்டு இருக்கு. உன்னை ஒண்ணும் செய்ய முடியாது” என்றேன்.

அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக முகத்தை மூடிக்கொண்டாள்.

“நெறைய கஷ்டப்பட்டுட்டே. இனியாவது பிள்ளைகளை பெத்து சந்தோசமா இரு. முருகனருள் துணையிருக்கட்டும்…”என்று அவள் தலையை தொட்டுவிட்டு வெளியே வந்தேன்.

தோமஸ் பதறியபடி நின்றிருந்தான்.

“செரிடே, இந்த கேஸு சாதாரண ஆக்சிடெண்டுன்னு முடியட்டும்… வாறேன் என்ன?”என்றேன்.

அவன் கைகூப்பினான்.

“அவ நல்ல குட்டியாக்கும். படாத பாடு பட்டவ, இனியாவது அவ சந்தோசமா இருக்கணும்… ஒளுங்கா கல்யாணத்தை பண்ணி மரியாதையா சீவிக்குத வழியப்பாரு என்ன?” என்றேன்

“செரி சார்”என்றான், அழுதபடி மீண்டும் கும்பிட்டான்.

“அந்த தலமுடிய வெட்டிப்போடச் சொல்லு. குடும்பப்பெண்ணுக்கு அவ்ளவு தலைமுடி என்னத்துக்கு?”என்றேன். லத்தியையும் டைரியையும் இடுக்கிக்கொண்டு என் சைக்கிளை நோக்கி நடந்தேன்.

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை

முந்தைய கட்டுரை’ஆமென்பது’- அறிவும் உணர்வும் ஒரு விவாதம்.
அடுத்த கட்டுரைஇமையத்திற்குச் சாகித்ய அக்காதமி