விருந்து [சிறுகதை]

திருவிதாங்கூர் கொச்சி பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழே தனி சமஸ்தானமாக இருந்த காலகட்டத்தில், 1946-ல்  கடைசியாக தூக்கிலிடப்பட்டவன் பெயர் சாமிநாத ஆசாரி. அப்போது அவனுக்கு வயது இருபத்தாறுதான். என் தாத்தா என்.கே.தாணப்பன் பிள்ளைதான் அவனுடைய தனி ஜெயில் வார்டன். தாத்தாவின் வாழ்க்கையில் சாமிநாத ஆசாரி ஒரு முக்கியமான இடத்தில் இருந்தான். தாத்தா 1974-ல் மறைவதுவரை சாமிநாத ஆசாரி பெயருக்கு ஆண்டுதோறும் அவன் தூக்கிலிடப்பட்ட மே 12 ஆம் தேதி திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் ஒரு புஷ்பாபிஷேகம் வழிபாடு நடத்திவந்தார்.

அதிகமாக சாமிநாத ஆசாரியைப்பற்றி தாத்தா பேசுவதில்லை. பொதுவாகவே அவர் பேசக்கூடியவர் அல்ல. பல காரணங்களில் ஒன்று வாயில் எப்போதுமே வெற்றிலை போட்டிருப்பார் என்பது. ஒருமுறை போட்ட வெற்றிலையை துப்பி வாயை கழுவினாரென்றால் உடனே அடுத்த வெற்றிலை. அவர் அமர்ந்திருக்கும் திண்ணையின் ஓரமாக ஒரு தென்னைமரம். அதன்கீழ் அவர் மென்றுதுப்பிய வெற்றிலைச் சக்கையே கரிய குவியலாக இருக்கும்.

அவர் காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் காவல்பணியில் இருப்பவர்கள் வெற்றிலை போட்டுக்கொள்ளக்கூடாது. வேலைபோவது மட்டுமல்ல, சமயங்களில் தலையே போய்விடும். வெற்றிலைபோட்டுக்கொண்ட நாயர்படைவீரர்கள் அதை துப்புவதற்காக அடிக்கடி அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போனார்கள். வெற்றிலை வாயுடன் மேலதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு குழறலாக பதில் சொன்னார்கள். சீருடையில் காவிச்சாறு வழியவிட்டார்கள். திருவிதாங்கூர் காவல்துறை தலைவர் காப்டன் பிட் ஒருமுறை இன்ஸ்பெக்‌ஷன் வந்தபோது ஒருவன் அவர் ஆடைமேலேயே எச்சில் தெறிக்க பேசினான். அவனுக்கு சவுக்கடி கிடைத்தது. படையில் வெற்றிலை போட்டுக்கொள்வது இருமடங்கு சவுக்கடிக்குரிய குற்றமாகவும் ஆகியது.

தாத்தா ஓய்வுபெற்று கையெழுத்துபோட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சல்யூட் அடித்து வெளியே வந்ததுமே முதலில் முழங்கால்வரை சுற்றிக்கட்டியிருந்த கம்பளிப்பட்டையை அவிழ்த்து தலைசுற்றி வீசி எறிந்தார். வெற்றிலை போட்டு துப்பினார். அதன்பிறகு ஆண்டுக்கு ஒருமுறை உயிருடன் இருப்பதை நிரூபிக்க திருவனந்தபுரம் போகும்போது மட்டும்தான் சட்டையும் கால்சட்டையும் போடுவார். மற்ற நேரமெல்லாம் எப்போதும் பாதி அவிழ்ந்த வேட்டியும் சரிந்து கிடக்கும் மேல்துண்டும்தான்.

தாத்தா சவுத் திருவிதாங்கூர் தேர்ட் நாயர் பிரிகேடில் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று திருவனந்தபுரம் சிட்டி கார்ட்ஸ் நாயர் பிரிகேடில் ஹெட்கான்ஸ்டபிளாக ஆனார். அதன்பின்னர் ஐந்தாண்டுகள் சப்இன்ஸ்பெக்டர் ராங்கில் சிறையில் ஸ்பெஷல் வார்டர் வேலை. அப்போதுதான் சாமிநாத ஆசாரி தூக்கு விதிக்கப்பட்டு சிறைக்கு வந்தான். மகாராஜாவிடம் அவனுடைய கருணைமனு சென்றிருந்தது. அவர் முடிவெடுக்கும் வரை கண்டெம்ட் வார்டில் அவன் தனியறையில் சிறையிருந்தான். அவனுக்கு தாத்தா தனிக்காவல்.

ஜெயிலில் வெற்றிலை அனுமதி இல்லை. ஆனால் தாத்தா ரகசியமாக ஒரு பொட்டலம் வெற்றிலைபாக்கு கொண்டுசென்று சாமிநாத ஆசாரிக்கு கொடுப்பார். ஆசாரி பத்துவயதில் வெற்றிலை போட ஆரம்பித்தவன். தூங்கும்போதுகூட ஒரு கொட்டைப்பாக்கை கடைவாயில் அதக்கிக்கொண்டுதான் படுப்பான். எந்நேரமும் வாயில் வெற்றிலை நிறைந்திருக்கவேண்டும். வெற்றிலை ஊறி ’ரசம்பிடித்து’ நிறைந்திருந்தால்தான் அவனுக்கு கையில் கலை வரும்.

ஜெயிலில் ஆசாரி ஆசைப்பட்டதெல்லாம் வெற்றிலைதான். தாத்தா வெற்றிலையை கொடுத்ததும் அவன் உள்ளே சென்று அதை முகர்ந்து பார்ப்பான். பின்னர் நிதானமாக, ஒவ்வொன்றாகப் பிரிப்பான். வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு என எடுத்து வைத்தபின் சீராக வெற்றிலைபோட்டுக் கொள்வான். அவன் வெற்றிலை போடுவது ஏதோ தாந்த்ரிக பூஜைகர்மம் செய்வதுபோலிருக்கும். அவ்வளவு கவனம். அவ்வளவு நளினமான அசைவுகள்.

வெற்றிலைபோட்டதும் அவன் முகம் இன்னொன்றாக ஆகிவிடும். அதுவரை சந்தையில் கைவிடப்பட்ட சிறுவனின் முகம் அவனுக்கு இருக்கும். பதற்றப்பட்டுக்கொண்டே இருப்பான். மீசைமயிரை இழுத்து வாயில் வைத்து கடிப்பான். தாடியை நீவி நீவி இழுப்பான். அமரமுடியாமல் சுற்றிச்சுற்றி வருவான். வாய் அசைந்துகொண்டே இருக்கும். விழிகளும் நிலையற்றிருக்கும். வெற்றிலை போட்டுக்கொண்டதும் முகம் மலரும். தெய்வச்சிலைகளில் காணும் அமைதியும் புன்னகையும் தோன்றும். அதன்பின் எதைப்பற்றியும் கவலைப்படாதவனாக இருப்பான்.

அந்த சாமிநாத ஆசாரியை தாத்தா விரும்பினார். அவனிடம் பேசிக்கொண்டிருக்க முடியும். அவனுக்கு அவர் ராத்திரிகாவல்தான். பகலுக்கு பிரபாகரன் நாயர் என்பவர் காவல். அவன் இரவில் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்பதனால்தான் தாத்தாவை காவல்போட்டிருந்தார்கள். வெற்றிலை போட்டுக்கொண்டால் அவன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று தாத்தா கண்டுபிடித்தார். ஆகவே தினமும் பத்து வெற்றிலை நான்கு பாக்குடன் வந்தார். ஆனால் அவர் கடமையை மீறி அவர் வெற்றிலை போட்டுக்கொள்ளவில்லை.

வெற்றிலை நிறைந்த வாயுடன் அமர்ந்திருக்கும் ஆசாரி பேச்சில் கெட்டிக்காரன். வெறும் முகபாவனைகளைக் கொண்டே வெவ்வேறு மனிதர்களை தன் மேல் தோன்றச்செய்வான். கதகளி நடிகரைப்போல விரல்களால் சைகைகள் செய்து விளையாடுவான். சொற்களை விதவிதமாக வளைத்து பகடி பேசுவான். குட்டிக்கதைகள் சொல்வான். அனுபவக்கதைகளை வளைத்தும் திரித்தும் சொல்வான். தேவை என்றால் எழுந்து நின்று நடித்தும் காட்டுவான்.

கைதி- காவலன் என்ற நிலைமுறைகள் மறந்து தாத்தா வெடித்துச் சிரிப்பார். வயிற்றைப் பிடித்துக்கொண்டு தரையில் உருள்வார். கண்ணீரை துடைத்தபடி “டே போதும்டே ஆசாரியே. சிரிப்பாணி காட்டி கொன்னிராதே ஆளை” என்று மன்றாடுவார். கொஞ்சநேரம் சிரித்தபின் “டே பாடுடே” என்பார். ஆசாரியின் குரல் சன்னமானது. அவனால் உரக்க குரலெழுப்பிப் பாடமுடியாது. ஆனால் நல்ல சுகபாவம் கொண்ட ஆலாபனை.

பெரும்பாலும் கதகளிப்பதங்கள்தான் பாடுவான். “சாம்யமகந்நொரு உத்யானமே” அவன் பாடிக்கேட்டபின் எந்த கதகளிப் பாடகன் வந்து பாடினாலும் மெருகில்லாமல்தான் இருந்தது என்றார் தாத்தா. உண்ணாயி வாரியார் கேட்டால் மகனே என்று ஆசாரியை அள்ளி அணைத்துவிடுவார். அப்படி ஒரு கனவு பாவனை கொண்ட பாட்டு. “அவன் பாடி முடிச்சபின்னாடி மெல்ல கொஞ்சநேரம் மெல்லமாட்டு முனகுவான்லே. செத்திரலாம்போல இருக்கும்” என்றார் தாத்தா.

விடியற்காலையில்தான் தூக்கம். ஆசாரி கண்டெம்ப்ட் பிரிசனர் ஆதலால் வேலை ஏதும் செய்யவேண்டியதில்லை. டிரில்லும் இல்லை. காலையில் ஒருமுறை அட்டெண்டன்ஸ் கொடுக்கவேண்டும். பகலில் இரண்டுவேளை சாப்பாட்டுக்குப் பிறகும் நல்ல ஆழ்ந்த தூக்கம்தான். அவனை பகலில் காவல்காக்க வரும் பிரபாகரன் நாயர் “என்னமா உறங்குதான்… என்னமோ கடமைய முடிச்சுட்டு சப்பரமஞ்சத்திலே கிடக்குத மாதிரி” என்று அடிக்கடிச் சொல்வார்.

சாயங்காலம் எழுந்து சிறையின் சுவர்களில் அவன் படம் வரைவான். கருங்கல்லை கூர்முனையாக்கி அதைக்கொண்டு உரசி உரசி வரையப்படும் படங்களில் ஆண்களே இல்லை. பெண்கள், மயில்கள், மான்கள், கிளிகள், அன்னங்கள், பூக்கள், மலர்மரங்கள். எல்லாம் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்து ஒரே படலம் போலிருக்கும்.

“இதென்னடே ஆசாரி தண்ணியிலே பாசம் படிஞ்சதுமாதிரி எல்லா படமும் சேந்து ஒரே படமா இருக்கு?” என்று ஒருமுறை தாத்தா கேட்டார்

“வெளியே பாருங்க வார்டர் சாரே. எல்லாம் கலந்து ஒற்றை படமாட்டுல்லா இருக்கு. தனித்தனி படமா என்ன இருக்கு பூமியிலே?” என்று ஆசாரி கேட்டான்.

“அதுவும் சரிதான்” என்று தாத்தா சொன்னார்.

அவனுடன் தாத்தா அணுக்கமாக ஆனபின் ஒருமுறை மெல்ல கேட்டார். “ஏண்டே, கெந்தர்வன் மாதிரி இருக்கே. எதுக்குடே அந்த நாயரை கொன்னே?”

அவன் புன்னகைத்து “கெந்தர்வர்கள் கொலை பண்ணுவாங்க வார்டர் சாரே. மகாபாரதம் கதை கேட்டதில்லையோ?” என்றான்.

“செரி, ஏன் கொன்னே?” என்றார்.

“கேஸு முடிஞ்சுபோச்சுல்லா?”

“ஏம்டே கொன்னே?”

“கொல்லவேண்டிய ஆளு. கொன்னாச்சு…”

”நிஜம்மாவே நீதான் கொன்னியா?”

“ஆமா”

“பொய் சொல்லக்கூடாது”

“உங்க கிட்ட எதுக்கு பொய் சொல்லணும்?”

“உன்னாலே கொல்லவும் முடியுமாடே ஆசாரி?”

“நான் கெந்தர்வன்லா?”

ஆசாரி உருளக்கட்டிவிளை கரைநாயர் திவாகர குறுப்பை ஒரு அரிவாளால் வெட்டி கொன்றான். அவர் தன் இல்லத்து முகப்பில் சாய்வுநாற்காலியில் அமர்ந்திருந்தபோது ஆசாரி அவரைப் பார்க்கவேண்டும் என்று வந்து நின்றிருக்கிறான். ‘என்னடா?’ என்று அவர் கேட்டபோது இரண்டு படி மேலே ஏறியவன் மேலாடைக்குள் வைத்திருந்த அரிவாளால் ஒரே வெட்டில் தலையை துண்டாக்கினான். வெட்டி எடுத்த தலையை குடுமியில் பிடித்து தூக்கிக் கொண்டு கோயிலடி தெருவில் நடந்து சென்றான். ஆட்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். ஆற்றங்கரை வரை சென்றவன் அங்கே தலையை வீசிவிட்டு போலீஸ் வரும்வரை அரிவாளுடன் மதகில் அமர்ந்திருந்தான்.

“ஏம்டே தெருவிலே தலையோட போனே?”

“எனக்க வீடுவரை போகணும்னு நினைச்சேன்… அம்மிணிக்க குழிமாடம் இருக்குத எடம் வரை. ஆனா மனுசத்தலை இந்த கனம் கனக்கும்னு நான் கண்டேனா? கல்லு மாதிரி இருக்கு. தோளு இத்துப்போச்சு.”

“அம்மிணி எப்டிடே செத்தா?”

“அவளுக்க ஆயுசு முடிஞ்சுபோச்சு.”

“தூக்குபோட்டுல்லா செத்தா?”

அவன் அதற்கு “செரி ,உமக்கு நான் பொரகாட்டு குறத்திக்க கதையைச் சொல்லுதேன். அவ கீழ்வாயாலே பேசுவா தெரியுமா?”

அதன்பின் சிரிப்பு. ஆசாரி சொல்லும் பெரும்பாலான கதைகள் ஆண்களுக்கு மட்டும் உரியவை.

கரைநாயர் ஒருவரின் கொலை. அதுவும் அவருடைய குடிகிடப்பு ஊழியனால். கொன்றது மட்டுமல்ல, தலையை கொண்டுசென்று ஆற்றில் வீசிவிட்டான். போலீஸ் தலையை தேடி எடுக்கவே ஒருநாள் ஆகியது. எல்லா கரைநாயர்களும் வெறியுடன் இருந்தனர். எல்லா நீதிபதிகளும் கரைநாயர்கள்தான். ஆகவே தூக்கு. கருணைமனு மகாராஜா மேஜையில் இருந்தது. ஆனால் என்ன முடிவு வரும் என்று நன்றாகவே தெரிந்திருந்தது. அங்கே முடிவெடுப்பவர் திவான் பேஷ்கார். அவர் ஒரு கரைநாயர்.

அப்படியே முடிவு அறிவிக்கப்பட்டது. கருணை மனு நிராகரிக்கப்பட்டு, தூக்கு தேதி முடிவுசெய்யப்பட்டு, ஒரே கடிதத்தில் ஜெயிலருக்கு அனுப்பப் பட்டது. ஜெயிலர் கட்டமம் வர்கீஸ் தாமஸ் மாப்பிள்ளை தாத்தாவை நேரில் அழைத்தார். அலுவலகத்தில் அவர் மட்டும் தனிமையில் இருந்தார். ஒன்றும் சொல்லாமல் கடிதத்தை நீட்டினார். தாத்தா படித்துவிட்டு மேஜையில் கடிதத்தை வைத்தபோது காகித ஓசை மட்டும் கேட்டது.

“நம்ம தலையிலே பாவம் விடியப்போகுது பிள்ளைவாள்.”

“அதுக்கு நாம என்ன செய்ய? நாமளா செய்யுதோம்?”

“தீர்ப்பு எளுதின நீதிபதிக்கு பொறுப்பில்லை. உத்தரவு போடுத ராஜாவுக்கும் பொறுப்பில்லை. பின்ன ஆருக்குடே பொறுப்பு?”

“நாம நினைச்சா அவனை விட்டிர முடியாதுல்லா? அப்ப நாம பொறுப்பில்லை. அவ்ளவுதான்” என்றார் தாத்தா.

”எல்லாத்துக்கும் ஒரு வளி கண்டுபோடுவே. சரி, நீ அவனுக்கு நெருக்கம். நீ வெத்திலைபாக்கு கொண்டுபோய் குடுக்கிறதெல்லாம் எனக்கு தெரியும்… நீயே அவன்கிட்டே சொல்லிடு.”

“நானா?”

“அஃபிசியலா நான் சொல்லணும். என்னாலே முடியாதுடே. நீ சொல்லு.”

“இந்த லெட்டரையே கொண்டுபோயி காட்டினா என்ன? ஆசாரிக்கு மலையாளம் வாசிக்க தெரியும்.”

“அதுவேண்டாம்… லெட்டரை ஆவேசத்திலே கிளிச்சுட்டான்னா? இது டாக்குமெண்டாக்கும்.”

தாத்தா கடைசியில் அவரே சொல்வதாக ஒப்புக்கொண்டார். அதை எப்படிச் சொல்வது என்று விதவிதமாகச் சொற்களை அமைத்துப் பார்த்தார். “பிறப்பவன் சாவான், சாகிறவன் பிறப்பான்” என்று வேதாந்தமாக சொல்லிப்பார்த்தார். “மனுசனானா என்னிக்குமே சாவு உண்டு” என்று லௌகீகமாக சொல்லிப்பார்த்தார். எப்படிச் சொன்னாலும் அபத்தமாகவும் குரூரமாகவும் இருந்தது.

கடைசியில் அவர் நேரடியாகவே சொல்லும்படியாகியது. அவரை பார்த்ததுமே ஆசாரி எச்சரிக்கை அடைந்தான். கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவர் ஒன்றும் சொல்லாமல் வெற்றிலை கட்டை அவன் முன் வைத்தார். வழக்கத்தைவிட இரு மடங்கு இருந்தது.

“என்னவாக்கும் சங்கதி?” என்றான்.

“ஒண்ணுமில்லை.”

“சொல்லுங்க வார்டர் சார்.”

“ஒண்ணுமில்லடே, ஒரு ஒற்றைத்தலைவலி.”

“லெட்டர் வந்தாச்சா?”

“என்ன? என்னடே சொல்லுதே?”

”தூக்கு எத்தனாம ்தேதி?”

அவர் அவனை கூர்ந்து பார்த்தார். இனிமேல் ஒளிக்க ஒன்றுமில்லை. ”மேட மாசம் இருபத்தொன்பதாம் தேதி…அதாவது மே 12.”

”செரி” என்று அவன் சாதாரணமாகச் சொன்னான்.

“மகாராஜா உத்தரவுடே.”

“இனிமே எத்தனை நாள் இருக்கு?”

“ஒம்பது நாள்.”

“ஒம்போது” என்று அவன் தனக்குதானே சொல்லிக்கொண்டான்.

“ஞாயித்துக்கிழமை.”

“அன்னைக்கு என்ன நாள்?என்ன நச்சத்திரம்?”

அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு “அத்தம் நட்சத்திரம், துவாதசி” என்றார்.

“நல்ல நாளா பிள்ளைவாள்?”

அவர் ஒன்றும் சொல்லவில்லை.

“சாவுறதுக்கு எல்லா நாளும் நல்ல நாளுதான்” என்று அவன் சிரித்தான்.

“ஏண்டே மக்கா” என்று கேட்டபோது அவர் அழுதுவிட்டார்.

“சேச்சே, என்ன இது? நானே அழல்லை. நீங்க என்னத்துக்கு? விடுங்க… நான் ஒரு கதை சொல்லுதேன்”

“வேண்டாம்…”

“அப்ப பாடுதேன்.”

அவன் அன்றிரவு முழுக்க பாடிக்கொண்டிருந்தான். அவர் கல்படிகளில் அமர்ந்து அவனுடைய பாட்டை கேட்டுக்கொண்டிருந்தார். துக்கமான பாட்டுக்கள் அல்ல. எல்லாமே திருவாதிரக்களி, ஓணக்களி பாட்டுக்கள். நாற்றுநடவுப்பாட்டு, தோணிப்பாட்டு. அவன் மகிழ்ச்சியாகத்தான் பாடினான். அவர் அவ்வப்போது கண்ணீர் சிந்தினார். அப்படியே தூங்கி அதில் அவனை கனவு கண்டார். அவன் சுதந்திரமனிதனாக ஒரு சந்தையில் கவிழ்த்துப்போட்ட தோணிமேல் அமர்ந்து தோணியில் தட்டியபடி பாடினான். விழித்துக்கொண்டு பெருமூச்சுவிட்டார்.

மறுநாள் காலையில் அவர் கிளம்பும்போது சாமிநாத ஆசாரி “வார்டர் சாரே, தூக்குக்காரனுக்கு கடைசி ஆசை உண்டுல்லா?” என்றான்.

“ஆமா.”

“அதை எப்டியும் நிறைவேத்துவாங்கள்லா?”

“ஆமா.”

“எனக்கு ஒரு கடைசி ஆசை. ஒரு நல்ல முட்டன் ஆட்டுக்கிடா வாங்கணும். அதை இங்கயே பொலிபோட்டு கறிவைச்சு இந்த ஜெயிலிலே உள்ள எல்லாருக்கும் குடுக்கணும். வார்டர்மாரு, கான்விக்ட்மாரு எல்லாருக்கும்.”

“அது செய்துபோடலாம். நான் சொல்லுதேன்” என்றார் தாத்தா.

அவர் சொன்னதுமே ஜெயிலர் “செய்யலாம்… கடாதானே? நல்ல காரியம்தான்” என்றார்.

செண்ட்ரிமேன் கருணாகரன் நாயர் எண்பது ரூபாய்க்கு நல்ல முட்டன் ஆட்டை வாங்கிக்கொண்டு வந்தான். கருப்பும் வெள்ளையுமாக பளபளத்த முடியும், நீண்ட தாடியும், சிப்பி போன்ற கண்களும் கொண்ட ஆட்டுக்கடா. கல் குழவிபோல விதைகள் தொங்கின. பரபரவென்று இருந்தது. அங்குமிங்கும் மோப்பம் பிடித்து தும்மலோசை எழுப்பியது. காரைச்சுவரை நக்கிப்பார்த்துவிட்டு பச்சையாக நாலைந்து சொட்டு சிறுநீர் கழித்தது.

“நல்லா விளைஞ்ச ஆடாக்கும். நெஞ்சிலே கொளுப்பு தொங்குது” என்றார் ஜெயிலர்.

“கிடா வாங்கியாச்சா வார்டர் சார்?” என்றான் சாமிநாத ஆசாரி.

”வாங்கியாச்சுடே… “

“அதை இங்க கொண்டு வந்து கட்ட முடியுமா? நான் அதை பாக்கணும். அதுக்கு நல்ல தழையும் இலையும் ஒடிச்சு என் கையாலே கொடுக்கணும்.”

தாத்தா கொஞ்சம் தயங்கினார். ஆனார் ஜெயிலர் “செரி, அது ஆசைன்னா அப்டி ஆவட்டு. இப்ப என்ன? அவன் செல்லுக்கு முன்னாலே ஒரு வராந்தா இருக்குல்ல?” என்றார்.

அந்த வராந்தாவில் ஜெயிலறையின் கம்பியிலேயே கடாவை கொண்டுசென்று கட்டினார் தாத்தா. அவனுக்கு கொண்டுவந்து கொடுத்த கம்புச்சோறு, களிக்கட்டிகள் எல்லாவற்றையும் அதற்கு அவன் ஊட்டினான். அது ஆவலாக நாக்கை நீட்டி தின்றது. அருகே நின்றிருந்த அரசமரத்திலிருந்து இலைகளை ஒடித்து கொண்டுவந்து அவனுக்கு கொடுத்தார். அதை அவனே அதற்கு ஊட்டினான்.

“ஆடு எப்பமுமே அவசர அவசரமாத்தான் திங்குது. என்னமோ ஜோலி கிடக்குதுங்கிற மாதிரி” என்றான்.

”அதோட வாய் அமைப்பு அப்பிடி” என்றார் தாத்தா.

“ஒருவேளை சாவுறதுக்குள்ள இந்த அளவுக்கு தின்னுடணும்னு அதுக்கு ஏதாவது கணக்கு இருக்கோ என்னமோ.”

அவன் சிரித்தபோது அவரால் சிரிக்க முடியவில்லை.

மூன்றுநாள் கடா அங்கேதான் நின்றது. தூக்குக்கு இரண்டுநாள் முன்னதாக அவன் அவரிடம் “ஒரு அரை மணிநேரம் ஆட்டை என் ரூமுக்குள்ள விடமுடியுமா?” என்றான்.

“எதுக்குடே?”

“அதுக்கு நான் ஒரு சடங்கு செய்யணும்”

“அதுக்கு ரூல் இல்லை பாத்துக்க.”

“தயவு செய்யுங்க வார்டர் சார், ஒரு சாவப்போறவன் கேட்கிறதுல்லா?””

“நீ என்ன செய்யப்போறே? உன் உடம்பிலே அது எங்கியாம் குத்திட்டுதுன்னா பிரச்சினையாயிடும்.”

“காயம் ஆறுறது வரை கொல்லமுடியாது இல்லியா? நான் அப்டி செய்ய மாட்டேன்.”

”எதுக்குடே வம்பு?”

“நீங்க நின்னுக்கிடுங்க… நான் வெளியே வந்துகூட ஆட்டுக்கிட்ட அந்த சடங்கை செய்வேன். ஆனா வெளிய விட்டா அது சட்டவிரோதம்.”

“ஆடு உள்ள வந்தாலும் சட்டவிரோதம்தான்.”

“ஆனா உள்ள வரக்கூடாதுன்னு சட்டம் இல்லியே.”

“அன்னியர் உள்ள வரக்கூடாது.”

“ஆடு அன்னியரா? அது மனுசன் இல்லைல்ல. அது சாப்பாடு. சாப்பாடு உள்ள வரலாமே?” என்றான்.

“வெளையாடாதே.”

“வார்டர் சார், உள்ள வார சாப்பாடு வெளியே போய்த்தான் ஆகணும்.”

தாத்தா சிரித்துவிட்டார். “செரிடே, உள்ள விடுதேன். ஒரு அரைமணி நேரம்…”

கம்பிக்கதவை திறந்து ஆட்டை உள்ளே விட்டார் தாத்தா. கம்பிக்கதவை மூடியபின் அவர் வெளியே நின்றுகொண்டார்.

ஆடு உள்ளே போனதுமே நிலையழிந்து அங்குமிங்கும் முட்டி மோதியது. அவன் தயாராக வைத்திருந்த கம்பங்களி உருண்டைகளை கொடுத்ததும் அவசரமாக சாப்பிட ஆரம்பித்தது.

அவன் ஒரு வெற்றிலையை எடுத்து அதன் வலது காதின்மேல் வைத்தான். அந்த வெற்றிலைமேல் வாயை வைத்து ஏதோ முணுமுணுத்தான். ஆடு திரும்பி அந்த வெற்றிலையை மென்றது.

“அவ்ளவுதான்… ஆட்டை வெளியே கொண்டுபோங்க” என்றான்

“அவ்ளவுதானா? என்ன செய்தே?”

“அது ரகசியம்” என்று புன்னகைத்தான்.

மறுநாள் காலையில் ஆட்டை சமைக்க கைதிகள் தயாரானார்கள். ஆயுள்தண்டனைக் கைதியாகிய அப்துல் நாசரும், கரீம் குட்டியும் கசாப்புக்கும் சமையலுக்கும் பொறுபேற்றார்கள். அன்றெல்லாம் சிறையில் அசைவமே இல்லை. அரிசிச்சோறே அபூர்வத்திலும் அபூர்வம். பெரும்பாலும் உப்புடன் உருட்டிய வெறும் களியுருண்டைகள்தான். ஒருவனின் சாவுச்சோறாக இருந்தாலும் கைதிகள் கொஞ்சநேரத்திலேயே அதையெல்லாம் மறந்துவிட்டார்கள். சிறையெங்கும் கைதிகளின் குரல்கள் ஓங்கி ஒலித்தன. மகாராஜா பிறந்தநாள் அன்று கைதிகளுக்கு இனிப்பு வழங்குவார்கள். அன்று வேலையும் கிடையாது. அன்று மட்டும்தான் அத்தனை உற்சாகம் இருக்கும்.

“ஆனா நல்ல பய… நாளைக்கு அவனுக்கு தூக்கு” என்று மூத்த கைதி அப்துல்லா குட்டி சொன்னான்.

“அது அவனுக்க தலையெழுத்து…. அவனைச்சொல்லி ஒருவாய் நல்ல சோறு திங்கிறது நம்ம தலையெழுத்து… நாம மட்டும் எத்தனைநாள் இருக்கோம்னு என்ன தெரியும்?” என்றார் காட்டுமாடம் கருணன் ஆசான்.

சாமிநாத ஆசாரி தாத்தாவிடம் “அந்த கிடாயை அறுக்கிறதை நான் பாக்கணும்” என்றான்.

“அதென்னதுடே?” என்றார் தாத்தா.

“இங்க வச்சு வெட்டச் சொல்லுங்க… இந்த அரசமரத்திலே தொங்கட்டும்”

“உனக்கு என்னடே கிறுக்கா? நாலுநாளு நம்ம கூடவே நின்னிருக்கு. நம்ம கையாலே வாங்கித்தின்னிருக்கு.”

“நான் பாக்கணும்.”

”என்னாலே அதை பாக்க முடியாது”

“நான் பாக்கணும்” என்று அவன் பிடிவாதமாகச் சொன்னான். சிறுகுழந்தைபோல தலையை அசைத்தான்.

”செரிடே செரிடே”.

அவன் கேட்டபடி கிடாயை அவன் சிறைக்கு முன்னாலேயே கொன்று அறுத்தார்கள். அதன் கால்களை கட்டி பக்கவாட்டில் வீழ்த்தி தாடை எலும்பைப் பற்றி தலையை தூக்கி கழுத்தை நீட்டி வைத்து கூரிய வளைந்த கத்தியால் அதன் கழுத்து நரம்பை அறுப்பதை அவன் கம்பிகளைப் பிடித்தபடி இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அதன் உடல் உலுக்கி உலுக்கி இழுபட்டது. கால்கள் மணலில் துடித்தன. ஓடுவதுபோல உடல் கிடந்து எம்பியது. பின்னர் அது அடங்கியதும் தலையை வெட்டி அருகே ஒரு செங்கல்மேல் வைத்தனர்.

“அதை இப்டி திருப்பி வையுங்க காக்கா” என்று அவன் சொன்னான்

”எதுக்கு?” என்று கரீம்குட்டி கேட்டார்.

“நான் அதைப் பாக்கணும்”

அவர் திருப்பி வைத்தபோது அதன் சிப்பிக்கண்கள் சிறையிலிருந்த சாமிநாத ஆசாரியை சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன. அவன் அதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆட்டை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அதன் வயிற்றை கிழித்து குடல் இரைப்பை ஈரல்களை கொத்தாக பிடுங்கி எடுத்தனர். அவற்றை ஒரு பனம்பாயில் வைத்தனர். பின் சிறியகத்தியால் அதன் தோலை வெட்டி அந்தச் சிவந்த வடுவில் கைவிட்டு பிரித்து, வெடுக் வெடுக்கென்று இழுத்து தோலை உரித்தனர். வெள்ளைப்பற்றுக்களை கத்தியால் அறுத்தனர்.

கம்பிளிச்சட்டை போல தோலை கழற்றி அப்பால் வைத்தனர். அது செத்த குழிமுயல்போல அங்கே இருந்தது. சிவந்த மாமிசத்தில் வாதாமரத்து இலைபோல நரம்புப்பின்னல் படர்ந்திருந்தது.

கரீம் குட்டி “போதுமா பாத்தாச்சா? சமையலறைக்கு கொண்டுபோகலாமா?” என்று கேட்டார்.

அவன் புன்னகையுடன் தலையசைத்தான்.

“காலு போட்டு சூப்பு வைச்சு குடுக்கவா மகனே?” என்றார் கரீம் குட்டி.

“வேண்டாம் இக்கா” என்றான் சாமிநாத ஆசாரி.

கறிவேகும் மணம் சிறைமுழுக்க பரவியது. கைதிகள் எல்லாம் ரத்தமணம் கொண்ட நரிகள் போல அமைதியிழந்தனர். கூச்சல்கள் பூசல்கள் சிரிப்போசைகள். சிலர் வேண்டுமென்றே ஊளையிட்டனர்.

மதியம் இரண்டு மணிக்கெல்லாம் பிரியாணியும் கறியும் தயாராகிவிட்டன. பெரிய எனாமல் தட்டுகளில் ஜெயிலருக்கும் வார்டருக்கும் பிரியாணியையும் கறியையும் கொண்டுவந்து வைத்தார்கள்.

“எப்டிடே சாப்பிடுகது?” என்றார் ஜெயிலர்.

தாத்தாவாலும் சாப்பிட முடியவில்லை. ஆனால் பிரபாகரன் நாயர் “அப்பிடிப்பாத்தா நாம சாவு வீட்டிலே விருந்து சாப்பிடுதோம். துட்டிச்சோறு சாப்பிடாமலா இருக்கோம்?” என்றார் “நாம நல்லா சாப்பிட்டு வாழ்த்தினா அவனுக்கு சொர்க்கமாக்கும்.”

அவர் சாப்பிட ஆரம்பித்தார்.

“சாப்பிட்டு வைப்போம்” என்று ஜெயிலரும் பிரியாணியை எடுத்துக்கொண்டார்.

தாத்தா பேசாமல் இருந்தார்.

“நல்லா பண்ணியிருக்கான்… சாப்பிடும் ஓய்” என்றார் ஜெயிலர்.

தாத்தாவால் தட்டமுடியவில்லை. சாப்பிடாமல் இருந்தால் ஜெயிலர் தப்பாக நினைக்கக்கூடும்.

அன்று சாயங்காலம் வரை ஜெயிலில் சாப்பாடு கொண்டாட்டம் நடைபெற்றது. பிரியாணி வைத்த அண்டாக்களை சுரண்டி தின்ன கைதிகள் நடுவே போட்டியும் அடிதடியும் நடைபெற்றது.

மாலையில் தாத்தா அவன் அறைக்கு போனார். “என்ன செய்யுதான்?” என்று காவல் மாறும்போது பிரபாகரன் நாயரிடம் கேட்டார்.

“சும்மாதான் இருக்கான்.”

”உறங்குதானா?”

”இல்ல, சும்மாவே இருக்கான்.”

அவர் உள்ளே பார்த்தார். அவன் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தான். அருகே அந்த பிரியாணியும் கறியும் அப்படியே இருந்தன.

“சாப்பிடலியாடே?”

“வேண்டாம்” என்றான்.

ஆனால் அவன் அவர்கள் கொண்டுவைத்த வெற்றிலைய முழுக்க மென்று கலம் நிறைய துப்பி வைத்திருந்தான். மீண்டும் வெற்றிலையும் பாக்கும் கொண்டுவந்து வைத்துவிட்டு தாத்தா  ஒன்றும் சொல்லாமல் வெளியே திண்ணையில் அமர்ந்துகொண்டார்.

நள்ளிரவு வரை அவன் அப்படியே அமர்ந்திருந்தான். வெற்றிலை மெல்லும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அதன்பின் எப்போதோ பாட ஆரம்பித்தான். ஆனால் பாட்டு அல்ல. சொற்களே இல்லை. வெறும் ஆலாபனம். ஒரு வலிமுனகல் போல ஆரம்பித்தது. அழுகைபோல ஆகியது. எங்கோ பறந்துபோவதுபோல மாறியது. சுழன்றுகொண்டே இருந்தது.

அதைக் கேட்டுக்கொண்டு தாத்தா அமர்ந்திருந்தார். யாரோ கந்தர்வர் தேவர்களெல்லாம் வந்து அவனுக்காக இசைமீட்டுவது போலிருந்தது. மனித உடலை ஒரு வீணையோ நாதஸ்வரமோ ஆக மாற்றி அந்த இசையை வாசிக்கிறார்கள்.

பின்னிரவில் அவன் தூங்கிவிட்டான். விடியற்காலையில் தூக்கு. மூன்றுமணிக்கு ஆராச்சாரும் உதவியாளனும் தூக்குமேடைக்கு வந்துவிட்டார்கள் என்று பிரபாகரன் நாயர் வந்து தாத்தாவிடம் சொன்னார்.

“அவனை எழுப்புங்க… அவன் பல்லுதேய்ச்சு குளிக்கணுமானா செய்யட்டும்… இப்ப ஜெயிலர் வந்திருவாரு.”

”சாவுறதுக்கு எதுக்குடே குளியலும் பல்லுதேய்ப்பும்?” என்றார் தாத்தா.

“தெய்வத்துக்கிட்டே போறதில்ல?”

அவர் கழியால் கம்பியை தட்டி சாமிநாத ஆசாரியை எழுப்பினார். “ஆசாரி, டேய், ஆசாரி”

அவன் எழுந்து அமர்ந்து தலையைச் சொறிந்தான். அவன் மனம் விழித்தெழவில்லை என்று தெரிந்தது.

“டேய் ஆசாரி, எந்திரி. இப்ப ஜெயிலர் வந்திருவார். உனக்கு பல்லு தேய்ச்சு குளிக்கணுமானா கூட்டிட்டு போறேன்”

அவனுக்கு அப்போதுதான் எல்லாம் உறைத்தது. “ஆமா…. ஆமா… பல்லு தேய்க்கணும்” என்று சொன்னான். எழுந்துகொண்டான்.

“செரி வா”

அவனை தாத்தாவும் பிரபாகரன் நாயருமாக அழைத்துச் சென்றார்கள். அவன் காலைக்கடன் கழிக்கும்போது அருகே நின்றார்கள். பல்தேய்த்தபின் தொட்டித்தண்ணீரில் பக்கெட்டை முக்கி அள்ளி மூன்றுமுறை விட்டுக்கொண்டான்.

தலைதுவட்டிவிட்டு அங்கே தேடினான். ஒரு சின்ன பிறையில் விபூதி இருந்தது. அதை தொட்டு ஈரநெற்றியில் போட்டுக்கொண்டான்.

“என்னமாம் சாப்பிடணுமாடே?” என்று பிரபாகரன் நாயர் கேட்டார்

“வேண்டாம்”

“ஜெயிலருக்கு காப்பி கொண்டு வந்திருப்பான். பிளாஸ்கிலே இருக்கும். ஒருவாய் குடிக்குதியா?”என்றார் தாத்தா.

“வேண்டாம்” என்றான்.

அவன் திரும்பச் சென்று அறையில் சப்பணம் இட்டு அமர்ந்து கண்களை மூடி எதையோ ஜெபித்துக்கொண்டிருந்தான்.

விடியற்காலை நான்கு மணிக்கு ஜெயிலரும் டாக்டரும் வந்தார்கள். ஜெயிலரின் ஃபைல்களை பியூன் வேதமாணிக்கம் கொண்டுவந்தான். ஆங்கிலோ இந்திய டாக்டர் ஜான்சன் டேவிட் தொளதொளவென்ற சட்டை அணிந்து டைகட்டி பிளாண்டர் தொப்பி அணிந்திருந்தார். அவர் நடந்தபோது நீளமான ஷூக்கள் விசித்திரமாக முனகின.

பிரபாகரன் நாயர் கம்பியை கழியால் மெல்ல தட்டி ஜெயிலர் வந்திருப்பதை அறிவித்தார். ஆனால் சாமிநாத ஆசாரி எழுந்திருக்கவில்லை. அதேபோல கண்களை மூடி ஜெபித்துக்கொண்டிருந்தான்.

தாத்தா ஜெயிலை திறந்தார். டாக்டரும் பிரபாகரன் நாயரும் உள்ளே சென்றனர். டாக்டர் அவன் கையைப்பிடித்து சும்மா நாடி பார்த்தார். அவன் நெஞ்சில் ஸ்டெதெஸ்கோப் வைத்துப் பார்த்தார். தலையை அசைத்தார். ஜெயிலர் காகிதத்தில் ஏதோ எழுதினார்.

டாக்டர் வெளியே வந்ததும் ஜெயிலர் “குற்றவாளி நம்பர் டி.கே எஸ் பார் த்ரீ பார் ஃபார்ட்டினைன் பார் ஒன் டேட்டட் ட்வெல்வ் மே நைண்டீன் ஃபார்ட்டி சிக்ஸ்” என்றார். அவன் கண்களை திறக்கவில்லை.

ஜெயிலர் அவனுடைய மரணவாரண்டை படித்தார். விடுவிடுவென பல வார்த்தைகளை விட்டு விட்டு படித்து முடித்தார். மரணவாரண்டை தூக்கில்போடும் இடத்தில்தான் படிக்கவேண்டும் என்று தாத்தா கேட்டிருந்தார். ஆனால் அந்த ஜெயிலில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டு நீண்டநாட்கள் ஆகியிருந்தன.

ஜெயிலர் முன்னால் நடக்க சாமிநாத ஆசாரியை பிரபாகரன் நாயரும் தாத்தாவும் அழைத்துச் சென்றனர். அதற்குள் ஜெயிலில் பலர் தூங்கி எழுந்துவிட்டிருந்தனர். அங்கிருந்து பலர் சேர்ந்து பேசும் முழக்கம் இருட்டுக்குள் கேட்டுக்கொண்டிருந்தது.

தூக்குமண்டபம் கதவு மாற்றப்பட்டு பழுது பார்க்கப்பட்டிருந்தது. கதவின் முன் சாமிநாத ஆசாரியும் தாத்தாவும் நின்றனர். ஜெயிலரும் டாக்டரும் பிரபாகரன் நாயரும் உள்ளே போனார்கள்

ஆசாரி தாத்தாவைப் பார்த்து புன்னகைச் செய்தான். தாத்தாவால் அந்த தருணத்தை என்ன செய்வதென்று முடிவுசெய்ய முடியவில்லை. அவரும் புன்னகைத்தார். அது அபத்தமாக இருப்பதாக உடனே தோன்றியது

“சாமி கும்பிட்டுக்கோ” என்று சொன்னார். அது இன்னும் அபத்தமாக இருந்தது.

அவன் புன்னகைத்தான்.

அவர் அந்த நிமிடங்களை இயல்பாக ஆக்கும்பொருட்டு “எல்லாரும் உனக்காக பிரார்த்தனை செய்யுதாங்கடே” என்றார்.

“ஆமா, நேத்து நல்ல பிரியாணில்லா?” என்று மெல்லிய புன்னகையுடன் ஆசாரி சொன்னான்.

“நல்ல ஆடு” என்றார் தாத்தா. உடனே நினைவு வந்தவராக “நீ அதுக்கு என்ன சடங்குடே செய்தே?” என்றார்.

“பேரு போடுத சடங்கு”என்றான் ஆசாரி.

“பேரு போட்டியா? ஆட்டுக்கடாவுக்கா?”

“ஆமா”

“எதுக்கு?”

“சும்மா” என்று அவன் சிரித்தான்.

தாத்தா அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். பிரபாகரன் நாயரும் ஆராச்சாரின் உதவியாளனும் வெளியே வந்து அவனிடம் வரும்படி கைகாட்டினார்கள். அவன் தாத்தாவிடம் இன்னொருமுறை புன்னகை செய்துவிட்டு அவர்களுடன் சென்றான். கதவு ஓசையுடன் மூடிக்கொண்டது.

உள்ளே கொண்டி விலகும் ஓசை கேட்டதா என்று தாத்தா எண்ணுவதற்குள் மடேர் என்று காலடிக்கதவு விழும் ஓசை கேட்டது. அந்த ஓசை சிறை முழுக்க ஒலித்தது. சிறையிலிருந்து குரலாக திரளாத ஒரு முழக்கம் எழுந்தது.

தாத்தாவின் உள்ளே ஒரு நடுக்கம் ஓடியது. அந்தக் குளிர்நடுக்கத்தை அவர் வாழ்க்கை முழுக்க கடந்து செல்ல முடியவில்லை. எப்போது நினைத்தாலும் அந்நடுக்கம் அவருக்கு வரும். நள்ளிரவில் அந்நடுக்கம் வந்து எழுந்து அமர்ந்து நடுங்கும் கைகளைக் கூப்பிக்கொண்டு “நாராயணா! ஆதிகேசவா!” என்பார்.

அவனுடைய உடலை வாங்க யாரும் வரவில்லை. ஆகவே அது கரமனை ஆசாரிமார் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. அவனைப்பற்றி கொஞ்சநாள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதன்பின் வேறு சம்பவங்கள். தாத்தா ஓய்வுபெற்றுவிட்டார்.

”அவன் அதுக்கு என்ன பேரு தாத்தா போட்டான்?” என்று நான் கேட்டேன்

“அதை நான் கேக்கல்லடே” என்றார் தாத்தா.

“ஏன்?”

“என்னமோ கேக்கல்ல.”

நான் தாத்தாவிடம் மீண்டும் வெவ்வேறு தருணங்களில் அதை கேட்டிருக்கிறேன். அவர் உண்மையாகவே அதை கேட்டுத்தெரிந்துகொள்ளவில்லையா என்று தெரியவில்லை. அவர் கடைசிவரை அதைச் சொல்லவே இல்லை.

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைநூல்களை முன்வைத்தல்
அடுத்த கட்டுரைஇனிய போர்வீரன்