இன்ஸ்பெக்டர் பென் ஜோசப் போனில் அழைத்தார். “எஸ்.சரவணன்?”
”எஸ்” என்றேன்.
“மத்த கடப்பொறத்து கெழவனை கூட்டிட்டு வந்திருக்கேன். விசாரிச்சாச்சு. ஃபைனல் ரிப்போர்ட்டு எளுதுகதுக்கு முன்னாடி நீங்க பாக்கணுமானா பாக்கலாம்.”
“நான் பாத்து என்ன சொல்ல?”
“இல்ல, நீங்க எதாவது கேக்கணுமானா கேக்கலாம்.”
நான் யோசித்தபின் “வாறேன்” என்றேன்.
சட்டைபோட்டு பர்ஸை எடுத்துக்கொண்டிருந்தபோது அம்மா வந்து வாசலில் நின்றாள்.
“போலீஸ் ஸ்டேஷனுக்காடா?”
“ஆமா.”
“வியாகப்பனையா பிடிச்சு வச்சிருக்காங்க?”
“ஆமா.”
“அவரு என்ன செய்வாரு? அவரை நான் இங்க வந்த நாள்முதல் பாத்திட்டிருக்கேன்…”
“அதை போலீஸு சொல்லட்டும்” என்றேன் எரிச்சலுடன்.
“போலீஸுக்காரனுகளுக்கு கேஸை முடிக்கணும்… உடம்புக்கு முடியாத காலத்திலே கிளவனை இளுத்து கேஸிலே போட்டுரப்போறானுங்க….”
“அதுக்கு நாம என்ன செய்ய?”
“மகாபாபமாக்கும்”
“இப்ப சொல்லு. நீதானே இத்தனை வருசம் வியாகப்பனை கரிச்சு கொட்டினே? ஒருநாள் நாக்கு எடுத்து ஒரு நல்லது சொன்னதுண்டா?”
“அது எந்த பெஞ்சாதிக்கும் மனசாக்கும்… இன்னொருத்தர் அப்டி நெருக்கமா இருந்தா எரியத்தான் செய்யும்… டேய், நான் அவரு வந்தா ஒரு நாளைக்காவது நல்ல சோறு போடாம விட்டதுண்டா?”
“அது உன் வீட்டுக்காரனுக்கு பயந்து செஞ்சது.”
“செரி, நான் ஒண்ணும் சொல்லல்ல. உன் மனசாட்சிக்கு தெரிஞ்சதை செய்யி.”
நான் பைக்கை எடுத்து கடுப்புடன் உதைத்து கிளப்பி சாலையில் ஏறி விரைந்தேன். சீரான வேகம் என்னுடைய எரிச்சலையும் பதற்றத்தையும் குறைத்தது.
அம்மா சொன்னது சரிதான். வியாகப்பனுக்காகவே ஒவ்வொரு முறையும் விரிவாகச் சமைப்பாள். அவர் வருவதே சைவச்சாப்பாடுக்காகத்தான். “மீனும் கருவாடும் தின்னு சலிச்சுப்போச்சுல்லா?” என்று பெரிய வலுவான பற்களைக் காட்டிச் சிரிப்பார்.
அம்மா அவியல், துவரன், வறுத்தரைச்ச தீயல், பூசணிக்காய் கூட்டுகறி என விதவிதமாக சமைப்பாள். அவருக்கு பிடித்தது உருளைக்கிழங்கு மசாலாக்கறி. பெருஞ்சீரகம் போட்டு தேங்காய்ப்பால் ஊற்றி குறுக்கிச் செய்வது. “நல்ல உசிருள்ள கறியாக்கும்” என்று சொல்வார்.
சனிக்கிழமை சாயங்காலம் அப்பா வியாகப்பனுக்காக காத்திருப்பது நாற்பத்தெட்டு ஆண்டுக்கால வழக்கம். அப்பா வேலைக்காக மதுரைபோய் அங்கிருந்து மாற்றலாகி மீண்டும் ஊருக்கு வந்ததுமுதல் தொடங்கியது. அன்றெல்லாம் அப்பா தனியாக அவரே சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அதன்பின் கல்யாணமாகி அம்மா வந்துசேர்ந்தாள்.
அப்பாவுக்கும் வியாகப்பனுக்குமான உறவு அம்மாவுக்கு ஆரம்பத்திலிருந்தே ஆச்சரியம்தான். அப்பாவும் வியாகப்பனும் மார்த்தாண்டம் மிஷன் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகச் சேர்ந்து படித்தவர்கள். வியாகப்பன் நான்காம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு அவருடைய அப்பாவுடன் மீன்பிடிக்கப் போனார். அப்பா மெட்ரிகுலேஷன் முடித்து பொதுப்பணித்துறையில் வேலைக்குச் சேர்ந்தார்.
ஆனால் அவர்களிடையே நட்பு அறுபடவே இல்லை. அப்பா அடிக்கடி கடற்கரைக்குச் சென்று வியாகப்பனை சந்தித்து வருவார். வியாகப்பன் மார்த்தாண்டம் வந்தால் அப்பாவை சந்திக்காமல் போகமாட்டார். வியாகப்பன் சகாயமேரியை திருமணம் செய்தபோது அப்பாதான் பெண்பார்க்கவே கூடப்போனார். ஒரு இந்து, சர்க்கார் அதிகாரி அவருக்காக பெண்பார்க்க வந்தது பெண்வீட்டுக்காரர்களுக்கு பெரிய அதிசயம். பெண்ணின் தாய்மாமா குடைந்து குடைந்து கேள்வி கேட்டதாக அப்பா சொல்வார்.
அதன்பின் அந்தச் சடங்கு எப்படியோ நிலைபெற்றுவிட்டது. சனிக்கிழமை சாயங்காலம் வியாகப்பன் சைக்கிளில் பின்பக்கம் கேரியரில் ஒரு பெரிய மீனை கட்டி எடுத்துக்கொண்டு வருவார். மீனை பனையோலைக் கடவத்திலோ கமுகுப்பாளையிலோ கட்டிவைத்திருப்பார். சிலசமயம் சாளை, அயிலை போன்ற சிறிய மீன்கள். சிலசமயம் சிவந்த இறால்.
அப்பா திண்ணையில் அமர்ந்து வெற்றிலைபோட்டு துப்பிக்கொண்டிருப்பார். சைக்கிள் மணி ஓசையே அவருக்கு வியாகப்பன் வருவதை காட்டிவிடும். “உக்காந்திட்டிருக்கதை பாரு… என்னமோ ஆசைக்கூத்தியா வாறதை பாத்து உக்காந்திருக்கது மாதிரி” என்று அம்மா அடுக்களையும் முணுமுணுப்பாள். “மனுசப்பற்று இருந்தா மத்தவங்ககிட்டையும் அந்த அன்பும் பாசமும் இருக்கும். இது அது கெடையாது. மீனு வெறி… வேறெ என்ன?”
“மீனு இங்கே கிடைக்காதா?” என்று நான் கேட்டேன்.
“இங்க இந்தமாதிரி புது மீனா கிடைக்குது?”
“பைசா குடுத்தா கிடைக்கும்.”
“நீ போயி உன் சோலியப்பாருடா” என்று அம்மா திடீரென்று சீறினாள்.
சைக்கிளை வீட்டு முன்பக்கம் கொண்டுவந்து ஸ்டேண்ட் போட்டு நிறுத்தும்போது வியாகப்பன் முகம் தீவிரமாக இருக்கும். மீனை அவிழ்த்து இருகைகளிலும் ஏந்திக்கொண்டு வந்து அப்பாமுன் நிற்கையில் தலையைச் சுழற்றியபடி கடகடவென்று சிரித்துக்கொண்டிருப்பார்.
அப்பாவும் சிரிப்பார். “என்ன மீனுடே?” என்பார்.
“கண்டு பிடிடே மயிரே… நாப்பது வருசமாட்டு நக்குதேல்ல?”
“பாத்தா உனக்க அப்பன் செவுளானை மாதிரில்லாடே இருக்கு.”
“வச்சு சாம்பிப்போடுவேன் பாத்துக்க… தாயளி, அப்பனைச் சொன்னா ஆரானாலும் விடமாட்டேன்.”
“ஏன் உனக்க அம்மை சொன்னாளா, அப்பன்பேரு ஆரும் சொல்லா ரகசியம்ன்னுட்டு? ஓலையிலே எளுதி கடப்பொறம் மணலிலே புதைச்சு வைச்சுக்கோ…”
அப்படியே அரைமணிநேரம் போகும். அவர்கள் சண்டை பிடித்துக் கொண்டிருப்பதகாவே அப்பால் நின்று கேட்டால் தோன்றும். ஆனால் முகங்களில் சிரிப்பும் பரவசமும் இருக்கும்.
“போரும் போரும், வந்து சாயை குடியுங்க… சாயை குடிச்சபிறவு சரசமாடலாம்” என்று அம்மா டீ கொண்டு வைப்பாள்.
“அம்மிணி ஆளு சடைஞ்சுபோச்சே” என்று வியாகப்பன் சொல்வார். அவர் அம்மாவையும் என்னையும்கூட மரியாதையுடன்தான் பேசுவார்.
“நல்லா சடைஞ்சா… டேய் நீ அவளை போன வாரம்தானே பாத்தே?” என்று அப்பா சொல்வார். “ஒருவாரத்திலே ஆனை எப்டிடே சடையும்? என்னது கற்பூரமா?”
எந்த மீனானாலும் வியாகப்பனே அமர்ந்து சுத்தம் செய்வார். அப்பா அவர் அருகே நின்று அவர் செய்வதை கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பார். வியாகப்பனின் கைகள் மிகமிகத் தேர்ச்சியுடன் மீனை வெட்டும். செதிலைச் சீவி எடுக்கும். அல்வா போல மீனின் தசையை நறுக்கி அடுக்கும். மீன் சற்றுநேரத்திலேயே சீரான துண்டுகளாகிவிடும். ஒவ்வொரு துண்டும் ஒரே அளவாக இருக்கும்.
அதை சிறிய பொதிகளாக ஆக்கி வைப்பார்கள். அதற்குள் அப்பாவின் நண்பர்கள் வந்துவிடுவார்கள். ஆளுக்கொரு பொட்டலம் போகும். ஆனால் அவர்கள் பேச்சுக்கு அமர்வதில்லை. அவர்களுக்கும் வியாகப்பனுக்கும் ஒத்துப்போகாது. அப்பா ஊர்ப்பெரியமனிதர், அரசு அதிகாரி, படித்தவர். அவர்கள் அவரை அப்படித்தான் வைத்திருந்தார்கள். வியாகப்பன் படிப்பை நான்காம் வகுப்பிலேயே நிறுத்திவிட்டார். நான்காம் வகுப்பு உறவுதான் நீடித்தது. அவர்கள் பச்சைக் கெட்டவார்த்தைகளில் பேசிக்கொள்வார்கள். வியாகப்பன் சமயங்களில் அப்பாவை தோளில் வெடிப்போசையுடன் அடிப்பார். உரக்கச் சிரிப்பார். அப்பா அப்படி கெட்டவார்த்தை பேசுவதை வேறெங்கும் கேட்கமுடியாது. அப்படிச் சிரிப்பதுமில்லை.
அப்பா மீனை கெடாமல் வைப்பதற்காக ஐஸ் பெட்டி ஒன்றை வைத்திருந்தார். அதில் ஐஸ்கட்டிகளை மாலையிலேயே கொண்டு வைத்திருப்பார்கள். மீனை உள்ளே வைத்துவிட்டு அமர்ந்து வெற்றிலைபோட்டுக்கொண்டபடி பேசிக்கொண்டிருப்பார்கள். “அந்தாலே போகாதே… சொறியும் செரங்குமாட்டு பேசிப்பேசி எளக்குதாங்க ரெண்டுபேரும்” என்று அம்மா சொல்வாள்.
ஒன்பது மணிக்கு சாப்பிட அமர்வார்கள். பத்துமணிவரை விரிவான சாப்பாடு. அதன்பின்னர் மீண்டும் திண்ணையில் அமர்ந்து பேச்சு. பேச்சு தணிந்து தணிந்து ரகசியக் கிளுகிளுப்பாக ஆகும். சிரிப்பொலிகளும் அடங்கியே கேட்கும். இரவு பன்னிரண்டு ஒருமணிக்கு எல்லாம்கூட பேச்சு கேட்டுக்கொண்டிருக்கும். விடியும்போதுகூட சிலநாட்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படியே திண்ணையில் ஆளுக்கொரு மூலையிலாக படுத்து தூங்கிவிடுவார்கள்.
வியாகப்பன் காலையிலேயே எழுந்து ஆற்றுக்குப்போய் பல்விளக்கி வருவார். அம்மா கொடுக்கும் காப்பியை நின்றவாறே குடித்துவிட்டு கிளம்பிவிடுவார். “சர்ச்சுக்கு போகணும்…” என்பார். அதை அவர் தவறவிடுவதில்லை. அப்பா தூங்கிக்கொண்டிருப்பார். அவரை எழுப்புவதில்லை. விடைபெறுவதுமில்லை.
நான் சின்னப்பையனாக இருக்கும்போதே வியாகப்பனை கண்டு வருகிறேன். அப்போதெல்லாம் கருப்பாக கட்டைகுட்டையாக உறுதியாக இருப்பார். கைகளிலும் மார்பிலும் சுருள்சுருளாக அடர்முடி. தலைமுடி நுரைபோல இருக்கும். மூக்கு கொஞ்சம் பரந்தது. எப்போது என்னை பார்த்தாலும் “பிள்ளே இப்ப என்ன கிளாஸு படிக்குது?” என்று கேட்பார். வாராவாரம் அதுமட்டும்தான் கேள்வி. நான் முனகலாக பதில்சொல்வேன்.
அவர் முதிர்ந்துகொண்டிருப்பது என் கவனத்துக்கே வரவில்லை. அவருடைய இரு மகன்களுக்கும் திருமணம் ஆகியது. அப்பாவும் அம்மாவும் திருமணங்களுக்குகுப் போயிருந்தார்கள். மகன்கள் இரண்டு பேருமே ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள். அவர்களுக்கு பிள்ளைகள் பிறந்ததற்கும் போயிருந்தார்கள். நான் கல்லூரி படிப்பை முடித்து சென்னையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒருமுறை லீவுக்கு வந்திருந்தபோது வாசலில் ஆட்டோ வந்து நின்றது. தலை நரைத்த ஒரு கிழவர் கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன் இறங்கினார்.
எனக்கு ஆளைத்தெரியவில்லை. அப்பா எழுந்துபோய் அவரிடம் சிரித்துப்பேசுவதைக் கண்டதும்தான் மெல்ல புரிந்தது. வியாகப்பனேதான். வயதாகி தளர்ந்திருந்தார். “இப்ப ஆட்டோலதான் வாறாரா?” என்று அம்மாவிடம் கேட்டேன்.
“ஆமா, இப்ப சைக்கிள் ஓட்ட முடியல்லை. மீன்பிடிக்கவும் போறதில்லை. ஆனாலும் ஆட்டோ பிடிச்சாவது வந்திடுறது. இங்க வந்து வாய நாறவைக்கணுமே…”
“மீன் கொண்டுவாறாரா?”
“கொஞ்சமா கொண்டுவருவார். கரையோரமா உக்காந்து அவரே தூண்டில்போட்டு புடிக்கிறது. ஒண்ணுமே கிடைக்கலைன்னா காசுகுடுத்து வாங்கிட்டு வருவார். சிலசமயம் சிப்பி மாதிரி… என்ன கொண்டு வந்தாலும் உங்க அப்பாவுக்கு அது அமிர்தமில்லா? நாம வச்சு வெளம்பினாத்தான் ஆயிரம் குத்தம். என்ன சொந்தமோ என்னமோ…”
”சரிதான்” என்றேன். அப்பாவும் வயதாகிவிட்டிருப்பதை அப்போதுதான் கண்டேன்.
“அப்பாவுக்கும் நரைச்சிருக்கு.”
“ஆமா… இப்பதான் பாக்கிறியாக்கும். ரெண்டுபேருக்கும் நரைச்சுப்போட்டு. மேலே போறப்ப தனியா போவாங்களோ இல்லை, அப்பமும் சேந்துதானோ” என்றாள் அம்மா.
நான் ஸ்டேஷனை அணுகினேன். பாராக்காரரை நோக்கி புன்னகை செய்தபின் பைக்கை நிறுத்தினேன். “இருக்காரா?” என்றேன்.
“உள்ள இருக்காரு” என்றான்.
உள்ளே இன்ஸ்பெக்டர் பென் இருந்தார். ”வாங்க” என்றார்.
நான் நாற்காலியில் அமர்ந்தேன். பென் என்னிடம் விழிகளால் உள்ளே காட்டி “உள்ள மகசர் எழுதுறோம்” என்றார்.
“என்ன சொல்லுதாரு?” என்றேன்.
”நாப்பத்தொன்பது வருசமா எல்லா சனிக்கிழமையும் வந்து பாத்து மீனு குடுக்குற வழக்கம் இருக்குன்னு சொல்லுதாரு… சேந்து சாப்புட்டு ஒருநாள் தங்கி ஞாயித்துக்கிளமை காலை கெளம்புவாராம்.”
“அதெல்லாம் உண்மைதான்.”
“அன்னைக்கு அவரே பாறையிலே சிப்பி பிடிச்சிருக்காரு. அதை கொண்டுபோயி குடுத்திருக்காரு. வழக்கமா கழுவி பதம் வச்சு குடுப்பாராம். சிப்பி ஆனதினாலே அப்டியே குடுத்தாராம். அது சீவனோட இருக்கும்லா?”
நான் தலையசைத்தேன்.
“இங்க ஏட்டு ஒருத்தர் கடப்பொறம் ஆளு. அவருகிட்டே கேட்டேன். சிப்பியிலே ஆயிரத்திலே லெச்சத்திலே ஒண்ணுலே அப்டி ஒரு வெசம் இருக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லுதாரு.”
“பாத்தா தெரியாதா?”
“பாத்தா தெரியாது… சிலசமயம் ஒரு நீலரேகை இருக்கும். ஆனா அது இல்லாமலும் இருக்க வாய்ப்பிருக்கு” என்றார் பென். “வேணுமானா ஒரு எக்ஸ்பர்ட் அட்வைஸ் கேட்டுக்கிடலாம்.”
“இது என்னவகை சிப்பி?”
“இது முத்துச் சிப்பிதான்… ஆனா முத்து இருக்கிறதில்லை. அந்த அளவுக்கு வெளையாது. அதுக்குள்ள புடிச்சிருவாங்க..”
“சாதாரணமா கடலோர சிப்பிதானே பிடிப்பாங்க.”
“ஆமா, அது வேற. அதை கல்லும்மேல்காயின்னு வடக்கே சொல்லுவாங்க. அது கொஞ்சம் சின்ன சிப்பி.”
“சாப்பிட்ட மிச்சம் சாம்பிள் ஒண்ணும் இல்லையில்லா?” என்றேன்.
“உங்க வீட்டிலே அதை உங்க அப்பா மட்டும்தான் சாப்பிட்டிருக்காரு. கொஞ்சம்தான் கொண்டுவந்திருக்காரு வியாகப்பன். உங்கம்மாவுக்கு சிப்பி பிடிக்காது. மிச்சம் கொஞ்சம் இருந்ததை குப்பையிலே கொட்டிட்டாங்க உங்கம்மா. உங்கப்பாவும் ஒண்ணும் வித்தியாசமா சொல்லலை. ருசியோ மணமோ வேற மாதிரி இருக்கல்லை. ஆனா ராத்திரி வாந்தி எடுக்க ஆரம்பிச்சிருக்காரு. உங்கம்மா இஞ்சித்தண்ணி போட்டு குடுத்திருக்காங்க. வாந்தியோட மூச்சுமுட்டலும் வந்தப்ப ஜங்ஷனுக்கு போன்பண்ணி டாக்சி வரச்சொல்லி ஜேம்ஸ் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருக்காங்க. போறதுக்குள்ள உசிரு போய்ட்டுது. ஜேம்ஸுக்கு ஃபுட்பாய்சன்னு சந்தேகம் வந்திருக்கு. அதனாலே வயித்திலே இருந்து சாம்பிள் எடுத்து பாத்திருக்கார். அவருக்க ரிப்போர்ட் இருக்கு”
நான் பெருமூச்சுவிட்டேன்.
“இவரு அங்க சிப்பிமீன் கறி சாப்பிடாம வந்திட்டாரு, அதான் டாக்டருக்கு சந்தேகம். வேற யாருமே சாப்பிடலை”
“இவரு எப்பவுமே கொண்டுவாறதைச் சாப்புடுறதில்லை.”
”வேணும்னே செஞ்சிருக்க வாய்ப்பில்லை. அதுக்குண்டான சூழலும் இல்லை. வயசும் இல்லை. ஆனா மனுஷ மனசு… அறுபதுவருச சேர்க்கை. அதிலே என்னென்னமோ இருந்திருக்கலாம். நம்ம கண்ணுக்கு வராம என்னமோ நடந்திருக்கலாம்… ஒரு பேச்சுக்கு மறுபேச்சு தப்பா போயி மனசிலே நஞ்சு சேர்ந்திருக்கலாம். என்ன இருந்தாலும் வேற வேற சாதி. வேற வேற மதம்… நான் தப்பாச் சொல்லல்ல. நாம சாத்தானை குறைச்சு நினைச்சுக்கிடமுடியாது அதைச் சொன்னேன்.”
”அம்மா ஒண்ணுமே சொல்லல்ல. அந்த சனிக்கிளமையும் வழக்கம்போல நடுராத்திரிவரை சிரிச்சு பேசி சந்தோசமாத்தான் இருந்திருக்காங்க.”
“முன்னாடி ஏதாவது உரசல் உண்டா?”
“ஒண்ணுமே இல்லேன்னு அம்மா சொல்லுதா… உறுதியாச் சொல்லுதா. அம்மாவுக்க நினைப்பிலே வியாகப்பன்மேலே தப்பே இருக்காது. அவருக்கு அவ விசம் வைச்சாலும் நம்பலாம், வியாகப்பன் அவருக்க மறுசீவனாக்கும்னு சொல்லுதா.”
”ம்ம். நான் அவருக்க ரெண்டு பிள்ளைங்க கிட்டேயும் கேட்டேன். அப்பன் பாதி பிள்ளைவாள் பாதின்னாக்கும் கணக்கு. ஒரு வார்த்தை குறைச்சோ வெறுத்தோ சொன்னதில்லைன்னு சொல்லுதாங்க.”
“அப்டித்தான் இருக்கும்” என்று நான் சொன்னேன்.
“என்ன பண்ணலாம்? இதைக் கேஸாக்கினா பிரச்சினை. டாக்டர்கிட்ட பேசினேன். ஃபுட்பாய்சன்னுகூட காட்டவேண்டாம், அலர்ஜின்னு முடிச்சுகிடலாம்னு சொல்லுதாரு. நீங்க முடிவெடுத்தா போரும்.”
“அப்டியே முடிச்சுகிடலாம்னு நினைக்கேன்”
“செரி. அப்டியே செய்வோம். ஆளு உள்ள இருக்காரு. பாக்குதீங்களா?”
எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் ஆர்வமும் எழுந்தது. “செரி” என்றேன்.
“வாங்க” என்று பென் எழுந்து என்னை கூட்டிச்சென்றார். மறு அறையில் ஒரு பெஞ்சில் வியாகப்பன் அமர்ந்திருந்தார். மிகவும் வயதானவராக தெரிந்தார். தொளதொளவென சட்டைக்குள் தேம்பிய தோள்கள். மயிர் முழுமையாகவே உதிர்ந்திருந்தது. முகம் சுருக்கங்கள் அடர்ந்து சற்று வெளுத்திருந்தது. ஒருவாரத்தாடி நுரைபோல முகத்தில் படர்ந்திருந்தது.
வியாகப்பனுடன் அவருடைய இளைய மகன் பர்னபாஸ் நின்றிருந்தார். என்னைப்பார்த்து சங்கடமாக புன்னகை செய்தார்.
நான் புன்னகைத்து பர்னபாசிடம் “ஒண்ணுமில்லை. கேஸெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றேன்.
அவர் ஆறுதல் அடைவது தெரிந்தது.”சரி” என்றார்
“அப்பாவை பாத்துக்கிடுங்க” என்றேன் “வயசான காலத்திலே…”
“ஆமா” என்றார் “ரொம்ப முடியாம இருக்காரு… மனசு நல்ல நிலையிலே இருக்கிற மாதிரி தெரியல்ல. இந்த செய்தியை கேள்விப்பட்டப்ப பதறிட்டார். ஆனா அதுக்குப் பிறகு கொஞ்சம் கலங்கிப்போயி என்னென்னமோ பேசுதார்.”
“நான் பேசிப்பாக்குதேன்” என்றேன்.
”அப்பா, இஞ்ச பாக்கணும், அப்பா” என்று பர்னபாஸ் அழைத்தார். “இது சரவணன். பிள்ளைவாளுக்க மகன். சரவணன்… பிள்ளைவாளுக்க மகனாக்கும்.”
வியாகப்பன் என்னை நிமிர்ந்து பார்த்து என்ன ஏது என்று தெரியாமல் புன்னகை செய்தார். வாயில் இரண்டு பற்கள் நீட்டியிருந்தன. புருவங்கள் நரைத்து பழுத்த கண்களுக்குமேல் வெண்முடிகள் விழுந்திருந்தன. “நல்லா இருக்கியளா?” என்றார். அவருக்கு என்னை தெரிகிறதா என்று சந்தேகமாக இருந்தது.
“நல்லா இருக்கேன்” என்றேன்
“அப்பா எப்டி இருக்காரு?. மத்த கேஸுக்கு போகணும்லா, புதுக்கோட்டைக்கு?”
நான் ஒன்றும் சொல்லவில்லை. அவருக்கு ஆள் தெரிகிறது, நிலைமை தெரியவில்லை.
“வாற சனிக்கிழமை வாறேன்… மீனு கொண்டு வாறேன்.”
நான் பர்னபாஸை பார்த்தேன். ஆனால் அதற்குள் வியாகப்பனே புரிந்து கொண்டுவிட்டார். பாய்ந்து என் கைகளை தன் கைகளால் பற்றிக்கொண்டார். அவர் கைகள் நடுங்கின. என் கைகளை பிடித்து ஆட்டுவதுபோல அசைந்தன.
“பிள்ளைவாளுக்கு நான் விசம் வைச்சேன்… நான் குடுத்த விசமாக்கும்.”
“ஒண்ணுமில்லை… நீங்க பேசாம இருங்க..”
“இல்ல, அந்தச் சிப்பி நான் கொண்டுபோயி குடுத்தது… அதிலே ஒண்ணு விசம்.”
”விசத்தாலே அப்பா சாகல்லை…டாக்டர் சொல்லியாச்சு“ என்றேன்.
“நான் அறிஞ்சு கொண்டு வரல்லை… விசம்னு எனக்கு தெரியாது. ஆனா தெரிஞ்சாலும் இல்லேன்னாலும் அது நான் குடுத்த விசம்… நான் கடலு கண்டவனாக்கும் பிள்ளே. கடலு, ஆழி, பாராவாரம்… அதுக்க ஆழத்துக்கும் தொலைவுக்கும் முடிவே இல்லை. மண்ணிலயும் விண்ணிலயும் இருக்கப்பட்ட அத்தனையையும் அறிஞ்ச பரிசுத்த ஆவிக்கு மட்டும்தான் அதிலே என்னென்ன எங்கெங்க இருக்குன்னு தெரியும். மத்தவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. மனுசப்பயக்களுக்கு தெரியாது. பரமபிதாவுக்கும் மனுசகுமாரனுக்கும் மாதாவுக்கும்கூட தெரியாது… தெரிஞ்சுகிடவே முடியாது.”
அவர் இருமினார். இருமி இருமி கண்களில் நீருடன் மேல்துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டார்.
“போரும் பேசவேண்டாம்” என்றேன்
“அந்த கடலாழத்திலே இருந்திருக்கு விசம்… ஒரு துளி விசம்… கோடிச் சிப்பியிலே ஒரு சிப்பியிலே இருக்குத விசம். அது அங்க இருந்திருக்கு. அது என்னதுன்னு எனக்கு தெரியல்லியே. அது என் கடலிலே இருக்குன்னு எனக்கு தெரியல்லியே. ஏழாம் கடலுக்க ரகசியம் தெரியல்லியே. மாதாவே எனக்க மாதாவே.”
“சும்மா ஓரோண்ணு நினைச்சுக்கிட வேண்டாம்… பேசாம ஆண்டவன் மேலே பாரத்தைப் போட்டு நிம்மதியாட்டு இருங்க” என்றேன்.
“நான் சடைஞ்சுபோட்டேன்… போறவளி தெரிஞ்சாச்சு.. ஒப்பம்சேந்து போலாம்னு பிள்ளைவாள் சொல்லுவாரு.”
அவர் கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார். முகச்சுருக்கங்களில் கண்ணீர் வழிந்து தாடையிலிருந்து மடியில் உதிர்ந்தது.
நான் அவர் கைகளைப் பற்றி அழுத்தினேன் “விடுங்க… அப்பாவுக்கு உங்களை தெரியும். எனக்கும் தெரியும். நம்ம எல்லாரையும் தெய்வத்துக்கு தெரியும். அப்றமென்ன? வியாகூலமாதாவுக்கு ஒரு நேர்ச்சை நேர்ந்திருவோம்… ஒரு பரலோகராஜ்ய ஜெபம் செஞ்சிருவோம்” என்றேன்.
அவருக்கு நான் சொல்வது சென்று சேரவில்லை. மீண்டும் மேல்துண்டால் முகத்தை அழுத்தித் துடைத்தார்.
“ஆனா ஒண்ணு உண்டு. எனக்க கடலிலே பிள்ளைவாளுக்காக ஒரு முத்து உண்டு… ஒரு அருமுத்து, ஆணிப்பொன் மணிமுத்து. அதை நான் எடுக்கல்லை. ஆனா எனக்கு தெரியும். அப்டி ஒரு முத்து அங்க ஆழத்திலே காத்து இருக்குன்னுட்டு. நான் சிப்பி கொண்டுபோயி குடுக்கிறப்ப அதை திறக்காம குடுக்குறது அதனாலேதான். பிள்ளைவாள் அந்தக் கறிய திங்கிறப்ப அவருக்க வாயிலே ஒருநாள் அது தட்டுபடும்… கையிலே எடுத்து பாப்பாரு. முத்துன்னு தெரிஞ்சிரும். லே, தாயோளி இது உனக்க முத்தில்லாடேன்னு சொல்லுவாரு. என்னென்னமோ மனசிலே நினைச்சுக்கிட்டேன். என்னென்னமோ சொப்பனம் கண்டேன். மாதாகிட்ட அப்டி நடக்கணும்னு நேந்துகிட்டேன்… பாவம் மாதாவுக்கும் தெரியாது… சிக்கினது ஒருதுளி வெசமாக்கும்.”
அவர் பெருமூச்சு விட்டார். “செரி, அது விதி. மேலே சொர்க்கம்னு இருக்கும்லா? அங்க இருந்து பிள்ளைவாள் நினைப்பாரு… பாவம் வியாகப்பன் நல்லவனாக்கும்னு… அவரு என்னைய வெறுக்க மாட்டாரு… பிள்ளே, அப்டி வெறுத்துப்போட்டா பின்ன மனுசப்பிறப்புக்கு அர்த்தமுண்டா?”
நான் கண்ணீருடன் அவர் கைகளில் தலையை வைத்தேன். “என் அப்பா இப்ப நீங்களாக்கும். என் அப்பா வேற நீங்க வேற இல்லை… என்னை அனுக்ரகிக்கணும்” என்றேன்.
அவர் என் தலைமேல் கையை வைத்தார் “நல்லா இருக்கணும். நிறைஞ்சு வாழணும்” என்றார்.
பர்னபாஸ் கண்களால் விடைபெற்றுக்கொண்டார். மெல்ல கைத்தாங்கலாக அவரை பர்னபாஸ் ஆட்டோவில் ஏற்றி கொண்டுசெல்வதை கண்டேன். போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்று ஆட்டோ கடைசி திருப்பத்தில் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அடுத்தநாளே வியாகப்பன் மறைந்தார். ஆட்டோவிலிருந்து இறங்கி கட்டிலில் போய் படுத்தவர் ஒருமணிநேரம் கழித்து தண்ணீர் கேட்டிருக்கிறார். மருமகள் கொண்டு வருவதற்குள் அசைவற்றிருந்தார்.
அவருடைய இறுதிச்சடங்குக்கும் அதன்பிறகு நடந்த மோட்சஜெபத்திற்கும் நானும் அம்மாவும் சென்றிருந்தோம். அதன்பின் அவர்களின் குடும்பத்துடன் தொடர்பு குறைந்துவிட்டது. அவர்களும் அந்த விலக்கத்தை விரும்பினர். நாங்களும் அந்த நிகழ்ச்சிகளைக் கடந்துவிட விரும்பினோம். அது நாமறிய முடியாத ஒரு சென்ற காலகட்டத்திற்கு உரிய நினைவு என ஆகியது.
மேலும் ஓராண்டுக்குப்பின் எனக்கு திருமணம் ஆகியது. அம்மாவையும் சென்னைக்கு அழைத்துக் கொண்டேன். வீட்டை காலி செய்யும்போது அப்பாவின் உடைமைகளை பிரித்து அடுக்கினோம். அப்போதுதான் கண்டடைந்தேன், ஒரு சிறிய வெள்ளிச் சிமிழில் அப்பா ஒரு முத்தை வைத்திருந்தார். ஒரு சிறிய மக்காச்சோள மணி போல இருந்தது. அதை சென்னையில் கொடுத்து சோதனை செய்து பார்த்தேன். அசல் முத்து.