இலக்கியம்,யானைகள்- கடிதம்

Elephant Terrace

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் அமெரிக்க பயணத்தின் போது உங்களை இருமுறை சந்தித்திருக்கிறேன் என்று பலரிடம் பெருமையாகச் சொல்லித்திரியும் வாசகி நான்.

முதல் முறை (2015) ராலேயில் ராஜன் அவர்களின் வீட்டில் பார்த்த போது தங்களின் அறம், இன்றைய காந்தி, வெண்முரசு போன்ற படைப்புகளைப் பற்றி எனது கணவர் சிலாகித்து என்னிடம் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை அன்றி வேறேதும் நான் அறிந்திருக்கவில்லை. சொல்லப்போனால் அச்சமயத்தில் ஓரிரு சிறுகதைகள் மற்றும் வார இதழ்களைத் தவிர வேறெந்த வாசிப்பனுபவமும் என்னிடத்தில் இல்லை.

ஆனால் 2019-ல் சார்லட், வட கரோலினாவில் எங்கள் வீட்டில் காலை உணவருந்த தாங்கள் வரும் போது இன்றைய காந்தி, காடு, ரப்பர், பனிமனிதன் முக்கியமாக வெண்முரசு நூல்களை வாசிக்கத் தொடங்கி விட்டிருந்தேன். தங்களை சந்தித்ததை எண்ணி மகிழ்ந்தேன்.

தங்களின் கதைகளைப் வாசிக்கையில் இதற்கு என்ன அர்த்தம்? , எதை இங்கு மறைமுகமாக குறிப்பிடுகிறீர்கள்? என்றெல்லாம் நான் பெரிதாக யோசிப்பது/ Interpret செய்தது  கிடையாது. படித்து முடித்து மூடி வைத்து விடுவேன் ஆனால் சில கதாபாத்திரங்களுக்கு ஒரு முகத்தை கொடுத்து விடுவேன். பின் அக்கதைகளை  என் கணவரிடமும் குழந்தைகளுடனும் பகிர்ந்து கொள்ளும் போது அதன் வேறு கோணத்தைக் கண்டு வியப்படைவேன். சில சமயம் நண்பர்களிடம் பொதுவாகப் பேசிக் கொண்டிருக்கும் போதும் திரைப்படங்களைப் பார்க்கும் போதும் தங்கள் கதைகளும் ஒரு சில குறிப்பிட்ட வரிகளும் என் நினைவுக்கு வருவதுண்டு.

சமீபத்தில் டிஸ்னி தயாரிப்பில் வெளிவந்திருக்கும் “Mulan” திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அதில் போருக்குத் தயாராகும் வீரர்களையும் அவர்களின் கூடாரங்களையும்  அக்கணத்தை லேசாக்க அவர்கள் பேசும் அர்த்தமில்லா கேலிப் பேச்சுக்களையும், போர் தொடங்கியதும் படைத்தலைவன் எவ்வாறு படைகளுக்கு தாக்குதல் ஆணைகளைப் பிறப்பிக்கிறான் என்றும் காட்டியிருப்பார்கள். எனக்கு தங்களின் திசைதேர் வெள்ளம் கண்ணின் முன் விரிந்தது. என் கணவரும் வாசித்திருப்பதால் என் எண்ணத்தை அவரிடம் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருந்தது.

மிக சமீபத்தில் தான் தங்களின் நூறு கதைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். நண்பர் ஒருவர் அமெரிக்க கடற்படையில் கொடுக்கப்படும் கடினமான பயிற்சியைப் பற்றி ” எவ்வளவு Tiredness இருக்குமுன்னா ஓடிக்கிட்டே இருக்கும் போது ஒருத்தன் கீழே விழுந்து அப்பிடியே தூங்கிருவான்” என்று கூற “ராஜன்” சிறுகதையின் பூதத்தான் நாயர் என் கண் முன்னே வந்து நின்றான்.

வெண்முரசு நூலில் நீங்கள் அனைத்து உயிரினங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள் ஆனால் யானைகளைப் பற்றி நீங்கள் பிற நூல்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். ராஜன் கதையைப் படிக்கும் போது எனக்கு “யானை டாக்டர்” மற்றும் வெண்முரசு நூல்களில் நீங்கள் குறிப்பிடும் அங்காரகன், சுபகம், சுப்ரதீகம், ஐராவதம் போன்ற பெயர்கள் என் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தன. யானைகளைப் பற்றிய டாக்குமெண்டரிகளைப் பார்க்கும் பொழுதும் யானைகளின் குணாதிசயங்களைப் பற்றி நீங்கள் எழுதியிருக்கும் வரிகளை நினைத்துக் கொள்வேன்.

இவ்வளவு சிறப்பாக யானைகளைப் பற்றி எப்பிடி எழுதுகிறீர்கள்? யானைகளை அருகிருந்து நோக்கிய/பழகிய அனுபவம் உண்டோ? இதைப் பற்றி ஏற்கனவே தாங்கள் வாசகர்களிடம் பகிர்ந்து கொண்ட விவரங்கள் இருந்தால் அப்பக்கங்களை எனக்கு  சுட்டிக் காட்டுங்களேன்.

– நிர்மலா கணேஷ்

 

அன்புள்ள நிர்மலா,

நீங்கள் வாசிக்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. வாசிப்பு பலபடிகளாலானது. முதலில் நாம் கதையையும், செய்திகளையும்தான் படிக்கிறோம்.மெல்ல மெல்ல அக்கதை உணர்த்துவதென்ன, அச்செய்திகள் மேலும் செலுத்துவது எங்கு என்று ஆராய ஆரம்பிக்கிறோம். ஒரு கட்டத்தில் கதையை விட அக்கதையை ஒட்டி நாம் செல்லும் பயணமே முக்கியமாக ஆகிறது. நாம் இலக்கியவாசகர்களாக ஆவது அப்படித்தான். தொடர்ச்சியான வாசிப்பும், வாசிப்பு குறித்த உரையாடல்களும் அந்த விரிவை உருவாக்குவன.

நான் யானைகள் சூழ்ந்த திருவரம்பு – திற்பரப்பு பகுதிகளில் இளமையை கழித்தவன். பல யானைகளை தனிப்பட்ட முறையில் அறிந்தவன். இப்போதுகூட அப்பகுதிகளில் சாதாரணமாக யானைகளை பார்க்கலாம் – வளர்ப்புயானைகளை. அடர்காடுகளில் காட்டுயானைகள் உண்டு. என் அப்பாவும் ஒரு ’யானைக்கோட்டி’தான். மலையாளிகளுக்கு பொதுவாக மூன்றுவகை ‘பிராந்துகள்’ [பைத்தியங்கள்] உண்டு என்பார்கள். யானைப்பிராந்து, களிப்பிராந்து [கதகளிப் பிராந்து], சத்யப்பிராந்து [விருந்துச்சாப்பாடு பைத்தியம்]. என் அப்பா மூன்று பைத்தியங்களால் ஆனவர். எனக்கும் கொஞ்சம் தந்திருக்கிறார்

ஜெ

 

முந்தைய கட்டுரைசிதையும் கனவுகள்
அடுத்த கட்டுரைஜெயமோகன் : இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் -தொகைநூல்