”வாலிட்டெழுதிய நீலக்கடைக்கண்ணில் மீனோ?” என்று ஒரு மலையாளப்பாட்டு. அவ்வளவு பழைய பாட்டெல்லாம் இல்லை. பழைய கவிஞர் எழுதியிருக்கவேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் பெண்கள் கண்ணில் மையெழுதுவது குறைவு. மையிட்டுக்கொண்டால்கூட இமைகளை இழுத்து அதன் விளிம்புகளில் கொஞ்சமாக தீற்றிக்கொள்கிறார்கள். கண்ணை கொஞ்சம் துலக்கிக் காட்டும், அவ்வளவுதான். புருவத்திலும் கொஞ்சமாக மைதீற்றிக் கொள்கிறார்கள். வாலிட்டு கண்ணெழுதுவது அக்கால வழக்கம்.
அன்றெல்லாம் புருவத்துக்கு நல்ல பட்டையாக பெரிதாக மையிடுவார்கள். வில்போலிருக்கவேண்டும் புருவங்கள் என்று கணக்கு. மேலிமையின் மயிர்க்கால்களில் மையிட்டு நீவுவார்கள். கீழிமைகளில் நன்றாக இறக்கி அழுத்தமாக மையிட்டு கொண்டு சென்று கண்களின் இருமுனைகளையும் அடைந்தபின் அப்படியே நீட்டி மேல்நோக்கி வளைத்து விட்டிருப்பார்கள். அதுதான் வால்.
கண்கள் மீன் என்றால் அந்த மீனின் துள்ளும் வால் அது. இரண்டு கரிய சிறு கோடுகள்தான். நகவளைவு என்று சொல்லவேண்டும். ஆனால் அவை கண்களை கூர்மையாக ஆக்கிவிடும். இரண்டு வேல்முனைகள் போல. ஆனால் மென்மையே கூர்மையாக ஆனவை.
பத்திரிகையில் பெரிய சரோஜாதேவியின் படம். வாலிட்டு எழுதிய நீலக்கருங்கண். நான் அமுதாவிடம் காட்டினேன். “பார்டி, இதான் அந்தக்காலத்து கண் எழுதுற ஸ்டைல்.”
அவள் வாயைப்பொத்தி “அய்யே” என்றாள்.
“ஏண்டி?” என்றேன்.
“இது என்ன வரைஞ்சு வச்ச மாதிரி இருக்கு?”
”வரையறதுதான்… இதான் அப்ப பேஷன். கண்ணு எழுதுறதுன்னு சொல்லுவாங்க.”
அகிலா சமையலறையில் இருந்தவாறு “இப்பல்லாம் பொண்ணுக பரீட்சைகள் எழுதுதுங்க. அப்பல்லாம் கண்ணு எழுதுறதோட சரி” என்றாள்.
அமுதா வாயைப்பொத்தி சிரித்தாள்.
“என்ன சிரிப்பு?” என்றேன்.
“ஒண்ணுமில்லை.”
”ஒரு தலைமுறைக்கு ஃபேஷனா இருக்கிறது இன்னொரு தலைமுறைக்கு சிரிப்பாத்தான் இருக்கும். இப்ப நீ போட்டிருக்கிற சட்டைய பாத்து உன் பேத்திகள் ஒரு காலத்திலே சிரிப்பாளுக.”
”இல்ல தாத்தா, நான் ஜஸ்ட் ஸ்மைல் பண்ணினேன். கிண்டல் பண்ணலை.”
”கண் எழுதுறது எவ்ளவு கஷ்டம்தெரியுமா? எப்பவுமே நீளவெரலிலேதான் மையை எடுப்பாங்க.”
“ஏன்?”
”ஆள்காட்டிவிரல் பொதுவா கொஞ்சம் காய்ச்சுப்போய் மரமரன்னு இருக்கும்.”
“ஓக்கே.”
“மையை விரலிலே எடுத்திட்டு இமையை அப்டியே இழுத்து மென்மையா கையாலே நீவி பூசிக்கிடணும்… இமையிலே மை படணும், கண்ணுலே பட்டிரக்கூடாது. கையாலே போட்டாத்தான் அப்டி பதமா போட முடியும். போடுறவங்களோட கைக்குத்தான் அது தெரியும். கண்ணுக்கும் கைக்கும் அப்டி ஒரு இசைவு வேணும்.”
”ஆமா” என்றாள்
“அப்றம் அந்த வால். அதை வரைஞ்சா அசிங்கமா கோடு மாதிரி இருக்கும். அப்டியே நீட்டிக் கொண்டுபோயி இழுத்து தீத்தி விட்டிரணும். அலட்சியமா ஒரே செகண்டிலே தீத்திக்கிடணும். இமையிலே மை எழுதின கையை எடுக்காம அப்டியே ஒரு தீற்றல்… அவ்ளவுதான். கொஞ்சம் யோசிச்சு, கவனம் வச்சு தீத்தினாலும் சரியா இருக்காது.”
”ஓவியம் வரையற மாதிரி இருக்கே.”
“ஓவியத்தை யாராவது இப்டி வரைவாங்களா? எப்பவுமே சின்னப்பொண்ணுகள்தான் வெடுக்வெடுக்னு பேசும். துள்ளிட்டே அலையும். அந்த வயசிலே அதுக அலட்சியமா சர்னு வால்போட்டு வரைஞ்சிரும். சரியா அப்டியே அமைஞ்சிரும். அதுகளுக்கே கொஞ்சம் வயசாக ஆக கையிலே அந்த அலட்சியம் போயிரும். ஏன்னா மனசிலே அந்த துள்ளல் போயிருக்கும். அவங்க பாத்து வரைவாங்க. அது எப்டி வரைஞ்சாலும் நல்லா இருக்காது… சொல்லப்போனா கன்னிவயசிலே வால்போட்டு கண்ணெழுதினாத்தான் நல்லாருக்கும். அப்றம் யாருக்கானாலும் அமையவே அமையாது. அந்த வால்கிறதே கன்னிவயசோட ஒரு அடையாளம். எ சிக்னேச்சர் ஆஃப் வெர்ஜின் ப்யூரிடி.”
“பாட்டியும் இதே மாதிரி கண்ணு எழுதியிருக்காளா தாத்தா?” என்றாள்.
“அந்தக்கால ஸ்டைல் இல்ல அது?”
“சொல்லுங்க, பாட்டி இதேமாதிரி கண்ணு வரைஞ்சு நீட்டியிருப்பாங்களா? பழைய போட்டோ இருக்கா? அம்மா, பாட்டி போட்டோ இருக்கா?” என்றாள் அமுதா.
நான் “உன் பாட்டி அப்டி எல்லாம் கண்ணு வரைய முடியாது. அவங்க வீட்டிலே அவ பாட்டி இருந்தா. சின்னவயசிலேயே விதவையானவ. சரியான ஆசாரம். பூபோட்ட புடவை கட்டுறதே ஆசாரவிரோதம்னு சொல்லி சத்தம்போடுறவ. கண்மை பௌடர் ஒண்ணும் கெடையாது” என்றேன்
“லிப்ஸ்டிக்?”
“உண்டு, அதை தாம்பூலம்னு சொல்லுவோம்” என்றேன்.
“பௌடர்கூட கிடையாதா?” என்றாள் அமுதா.
“எங்க வீட்டுக்கு வந்த பிறகு பௌடர் போடுவா. ரகசியமா எங்க ரூமிலே வச்சுக்கிடுவா. பௌடர் போட்டு அதை நல்லா துணியாலே துடைச்சுகிட்டுதான் வெளியே போகணும்… எங்கம்மா அதுக்குமேலே ஆசாரம். எங்கம்மாவும் சின்னவயசிலேயே விதவை ஆனவ”
“அப்பல்லாம் விதவைன்னா ரொம்ப ஆசாரம் இல்லை?”
”ஆசாரமா இருக்கிறது ஒரு பாதுகாப்பு வழிமுறை. எந்த அளவுக்கு ஆசாரமா இருக்காங்களோ அந்த அளவுக்கு மரியாதை இருக்கும். கொஞ்சம் ஆசாரம் தவறினாலும் பழிச்சுப் பேச ஆரம்பிச்சிருவாங்கள்ல?’
“அப்டியா?” என்றாள் அமுதா.
அகிலா உள்ளே இருந்து “அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஆசாரத்தை வைச்சு எங்களை அடக்கினீங்க இல்ல, அதே ஆசாரத்தை வைச்சு உங்களை படுத்தி எடுக்கிறோம்னு ஒரு வீம்பு, அவ்ளவுதான்” என்றாள்.
“பாட்டி வால்போட்டு கண்ணு வரையறதில்லையா?”
“இல்லை.”
“வரையச் சொன்னீங்களா? ரூமிலே பௌடர் போட்டுக்கிடறப்ப?”
”ரெண்டுவாட்டி வரைஞ்சுபாத்தா. சரியா வரலே.”
“சரி, அப்ப யாரு வரைவாங்க?”
“அந்தக்கால பெண்கள்” என்றேன்.
“ஸே, அந்தக்காலப் பெண்களிலே யாரு?”
“எல்லாரும்தாண்டி… என்ன கேக்கிறே நீ?”
“எல்லாரும் வரைஞ்சா நீங்க இவ்ளவுநாள் அதை நினைச்சிட்டிருக்க மாட்டீங்க.”
“அது கேள்வி… சரியான கேள்வி” என்றாள் அகிலா.
நான் சிரித்து “சினிமா பாத்து கெட்டுப்போயிருக்கே” என்றேன்.
“சொல்லுங்க” என்றாள்.
“அப்டி தனியா யாரும் இல்லைடி… சின்ன வயசிலே பாக்கிறதுதான்… அப்ப பாக்க நல்லாருக்கும்.”
“இதுவா? இதுவா பாக்க நல்லாருக்கும்? பரதநாட்டியம் ஆடுறவங்க மேக்கப் போட்டுக்கிடற மாதிரி இருக்கு.”
“இப்ப பரதநாட்டியம் ஆடுறவங்க எதுக்காக இப்டி கண்ணை வரைஞ்சுகிடறாங்க?”
“ஆடியன்ஸுக்கு முகபாவங்கள் தெரியணும்ங்கிறதுக்காக”
“அதேதான் அப்ப. இப்ப பரதநாட்டியம் ஆடுறவ ஸ்டேஜ்லே நிக்கிறா. ஆடியன்ஸ் இருக்கிறது அம்பதடி நூறடி தள்ளி. அவங்க அவளோட முகபாவங்களை பாக்கணும்னா கண்ணை பெரிசா எழுதணும். பரதநாட்டியத்திலே பெரும்பாலான உணர்ச்சிகளை கண்வழியாத்தான் காட்டணும். அதுக்கு கண்ணு நல்ல துலக்கமா தெரிஞ்சாகணும்…”
“ஆமா” என்றாள் அமுதா.
“அதேதான் அப்ப. அப்பல்லாம் பெண்களை ஆண்கள் ரொம்ப தூரத்திலேதான் பாக்கமுடியும்…. தெருவிலே போறப்ப ஜன்னலிலே பாக்கலாம். இல்லே வண்டியிலே போறப்ப பாக்கலாம். கோயிலிலே பாக்கணும்னா அங்கே பொம்புளைங்க ஏரியாவே வேற. ஆம்புளைங்க ரொம்ப தள்ளி நின்னு பாக்கணும்… எதுவா இருந்தாலும் ஒரு செகண்ட் பார்வைதான். பாக்கிறதை யாரும் பாத்திரக்கூடாது. மீன் துள்ளுறது மாதிரித்தான் கண்ணு ஒரு செகண்ட் மின்னி அப்டியே மறைஞ்சிரும். ஒரு செகண்டிலே அந்தக் கண்ணாலே என்ன சொல்லமுடியுமோ அதைத்தான் சொல்லமுடியும். அதைத்தான் புரிஞ்சுகிடமுடியும். அப்ப உள்ள பொண்ணுகளுக்கு பாஷைன்னாலே கண்ணோட அசைவுதான்.”
“க்யூரியஸ்” என்று அமுதா சொன்னாள் “அம்மா கேட்டியா, தாத்தா என்ன சொல்றார்னு?”
”யாரைப்பத்தியோ சொல்லிட்டு வர்ரார்.”
“ஆமா, ஐ திங் ஸோ.”
“இல்லடி, நான் பொதுவாச் சொன்னேன்.”
“சரி அப்டியே ,பொதுவாகவே சொல்லிட்டு வாங்க… அப்றம்?”
“அப்றம் என்ன அப்றம்? அதுக்காகத்தான் கண்மை போட்டுக்கிடறது, வாலுபோட்டு நீட்டுறது. அதைத்தான் சொல்லிட்டிருந்தேன்.”
”சொல்லுங்க.”
“என்னத்தைச் சொல்ல?”
“எ ஸ்டோரி… எ க்யூட் லவ் ஸ்டோரி… இல்லேன்னா ஒரு சோகமான கதை. எ ரியல்லி மெலென்கொலி ஸ்டோரி.”
“அப்டி எல்லாம் ஒண்ணுமில்லை.”
“எதையாவது இமேஜின் பண்ணி சொல்லுங்க, கேக்கற மூடுக்கு வந்திட்டோம்ல?”
“அப்ப ஒரு கதை சொல்றேன், மௌனி கதை. மௌனின்னு ஒரு ரைட்டர் அந்தக்காலத்திலே இருந்தார். அவர் எழுதினது.”
“ஓக்கே.”
“ஸ்டோரின்னு சொல்ல முடியாது. ஒரு எக்ஸ்பீரியன்ஸ். அல்லது ஒரு ஃபேண்டஸின்னு வைச்சுக்கோ. இதெல்லாம் அந்தக்காலத்திலேதான் சாத்தியம். ஆணும் பெண்ணும் பேசிக்கவே முடியாத காலத்திலே.”
“ஓக்கே.”
“ஒருத்தன் மனசுக்குள்ளே பேசிட்டே இருக்கிறவன். ஒரு சாஃப்டான லவ்வர் பாய். அவன் ஒருநாள் ஒரு கல்யாணத்திலே ஒரு பெண்ணைப்பார்க்கிறான். அவ இந்தமாதிரிதான் வால்போட்டு கண் எழுதியிருக்கா. பெரிய கண். அவன் ரொம்ப தூரத்திலே இருந்து அவளை பாக்கிறான். அவளோட கண்ணிலே ஏன் அப்டீங்கிற ஒரு கேள்வி இருக்கிறதா அவனுக்கு தோணுது. அந்த கேள்வி ஏன்னு அவனுக்கு புரியலை. அது அவனா கற்பனை பண்ணிக்கிட்டதான்னும் தெரியல்லை. ஆனா அந்தக் கேள்வியிலே இருந்து அவனாலே வெளியே போகவே முடியலை. அவ ஏன் அப்டி பாக்கிறா? ஏன் அவ முகத்திலே அப்டி ஒரு துக்கம்? அந்த துக்கத்தாலேதான் அந்த கேள்வியா, அல்லது அந்த கேள்விதான் அப்டி துக்கமா ஆயிட்டுதா?”
அமுதாவின் கண்கள் மாறிவிட்டன.
“அப்றம் ஒருநாள் அவனுக்கு ஒரு செய்தி கிடைக்குது. அவளுக்கு ஹார்ட்லே நோய் இருக்கு. அவ ஒரு சங்கீதக்காரி. ஆனா பாடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிடறாங்க. அதான் அந்த துக்கமா, அந்த ’ஏன்’ங்கிறது அதனாலேதானான்னு நினைச்சுக்கிடறான். இன்னொருநாள் ஒரு கல்யாணம் மாதிரி ஒரு விருந்து. யாரோ பாடிட்டிருக்காங்க. யார் பாடுறதுன்னு இவன் எட்டிப்பார்க்கிறான். அவதான் பாடிட்டிருக்கா. யாரோ அவளை பாடச்சொல்லிட்டாங்க. அவ பாடுறப்பவும் கண்களிலே ஏன் அப்டீங்கிற கேள்விதான் இருக்கு. ஏன் ஏன் ஏன்னு பாடுற மாதிரி இருக்கு. அப்றம் சட்டுன்னு விழுந்திடறா. எல்லாரும் பரபரப்பா சத்தம் போடுறாங்க. அவ பாதிப்பாட்டிலே அப்டியே செத்துப்போயிடறா.”
“ஹார்ட் ஃபெய்லியரா?”
“ஆமா. அவ செத்து கிடக்கிறா. அவ முகத்திலே ஏன் அப்டீங்கிற பாவனை அப்டியே இருக்கு… “
“அவ்ளவுதானா?”
“அவ்ளவுதான் மௌனி எழுதினது. பிரபஞ்சகானம்னு நினைக்கிறேன். இல்ல அழியாச்சுடரா, சரியா ஞாபகமில்லை. அந்தக்காலத்திலே படிச்ச கதை.”
“ஸோ ஆர்ட்டிஃபிஷியல். மெலோட்டிராமாக்குன்னே உருவாக்கின மாதிரி இருக்கு”
“இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி கதையெல்லாம் வந்ததே அந்தக்காலத்திலே வாயாலே பேசிக்கிட முடியாதுங்கிறதனாலேதான். கண் பேசுறதெல்லாம் மௌனத்தோட பாஷைதானே? அதோட அர்த்தமெல்லாம் அதை வாங்கிக்கிறவன் கிட்டே இருக்கு. ஒரு சின்ன பாவனை, அப்டியே வாழ்க்கை முழுக்க என்னென்னமோ சொல்லிட்டு இருக்கும்.”
“ஃபன்னி” என்றாள்.
“என் ஃப்ரண்டு ஒருத்தன் இப்டித்தான் ஒரு அனுபவம் சொன்னான். அவன் மதுரையிலே படிச்சிட்டிருந்தான். ஒரு மாடியிலே அவனும் இன்னொரு ஃப்ரண்டுமா ரூம் போட்டிருந்தாங்க. நேர் கீழே ஒரு வீடு. அதிலே ஒரு தாசில்தார் ஆபீஸ் கிளார்க்கோட குடும்பம் இருந்தது.”
“அதிலே ஒரு பொண்ணு.”
“எஸ்…ஒரு பொண்ணு.”
“அழகா?”
“அழகான்னா? தெரியல்லை. அவனுக்கு அவ அழகா தெரிஞ்சிருக்கா. அவ எட்டாம் கிளாசோட படிப்பை நிறுத்திட்டு வீட்டிலே இருந்தா. வீட்டிலே எந்நேரமும் சிலோன் ரேடியோ பாடிட்டிருக்கும். அந்தக்காலப் பெண்கள் சிலோன் ரேடியோவாலேதான் வாழ்ந்தாங்க. பாட்டுபாட்டு அதுதான் வாழ்க்கையே. கே.எஸ்.ராஜான்னு ஒருத்தர். அவரோட குரல்தான் அவங்களுக்கு எல்லாமே. ஏன்னா வீடு ஒரு ஜெயில்மாதிரி… படிப்பை நிப்பாட்டி பத்துவருசம் வீட்டுக்குள்ளே இருக்கணும். அது ஒரு ஆயுள்தண்டனை… ”
நான் சொன்னேன் ”அவ வீட்டிலே அவளை வெளியேவே விடுறதில்லை. கன்னிப்பொண் சினிமா பாக்கிறதெல்லாம் அப்ப நினைச்சே பாக்கமுடியாது. எப்பவாவது யாராவது சின்ன வியாபாரி முன்னாடி வந்து சத்தம்போடுறப்ப வீட்டிலே அவ அம்மா கைவேலையா இருந்தா இவ சட்டுன்னு வெளியே வந்து வாங்கிட்டு போவா. மின்னல் மாதிரி தெரிஞ்சு மறைஞ்சிருவா. ஆனா அதுக்காக மாடி வராந்தாவிலே தவம் கெடக்கணும்…”
“உங்க ஃப்ரண்டு தவம் கிடப்பாரோ?”
“இல்லல்ல. அவனுக்கு அவமேலே அப்டி எல்லாம் ஒரு மோகம் கிடையாது. அடிக்கடி கண்ணிலே படாததனாலே ஒரு ஆர்வம். கண்ணிலே படுறப்ப ஒரு சின்ன அதிர்ச்சி. அந்தமாதிரித்தான்… அப்பப்ப நைட்லே அவ ஞாபகம் வரும். மத்தபடி ஒண்ணுமில்லை. அப்ப எல்லா பெண்ணுமே அந்த அதிர்ச்சியை குடுத்தா… இப்ப நீ ஒரு குளத்தைப் பாக்கிறே. சட்டுன்னு ஒரு மீன் துள்ளினா அதிர்ச்சியா இருக்கும்ல? அதே மாதிரி. அந்த மீனை சரியாக்கூட பாக்கமாட்டோம். ஒரு ஃப்ளாஷ், அவ்வளவுதான்”
“அவகிட்டே பேசினதே இல்லியா?”
“பேசுறதா? நல்ல கதை. நேரே பாக்கவே முடியாது.”
“ஓ…”
“ஒருவாட்டி அவன் ரோட்டிலே வர்ரப்ப வளையல்சத்தம் கேட்டுது. அவன் நிமிர்ந்து பாத்தா அவ கீரைக்காரிக்கிட்டே கீரை வாங்கிட்டு உள்ளே போனா. அவ பார்வை வந்து அவன் பார்வையை ஒரு செகண்ட் தொட்டுட்டுப் போச்சு. அப்பதான் அவ வால்போட்டு கண் எழுதியிருக்கிறது அவனுக்கு தெரிஞ்சுது. அவ கண்களிலே கூர்மையா என்னமோ இருந்தது. அவ என்னமோ சொல்ல வர்ரதுபோல. வால்போட்டு கண்ணெழுதினாலே அப்டி ஒரு கூர்மை வந்திரும். ஒரு விஷயத்தை எந்த அளவுக்கு சுருக்கமாச் சொல்றோமோ அந்த அளவுக்கு அது கூர்மையா ஆயிடுது. வார்த்தையே இல்லாம ஒரு கண்ஜாடையாலே சொன்னா அது ஒருமாதிரி மந்திரம்போல சக்தியா ஆயிடுது” என்றேன்.
அமுதாவின் விழிகளில் சிரிப்பு மறைந்துவிட்டிருந்தது.
“அவன் மனசு கலைஞ்சு போச்சு. அதோட அடிக்கடி அவளை நினைக்க ஆரம்பிச்சான். ஒரு நோட்டுபுக்கிலே அவ கண்ணை வரைஞ்சு வரைஞ்சு வைப்பான். வால்போட்டு நீட்டி கண் எழுதின கண்கள்.”
“அப்றமாவது பேசினாரா இல்லியா?”
“அதான் சொன்னேனே, பேசவே இல்லை. பேசுறது அந்தக்காலத்திலே அவ்ளவு ஈஸி இல்லை. அவன் அடிக்கடி அந்த வீட்டையே பார்த்திட்டிருந்தான். அப்பப்ப அவ வந்து வந்து மறைவா. அவ புடவையோட நெறம்தான் தெரியும்னு வை. அதுவே ஒரு படபடப்பு மாதிரி வந்திரும்.”
“தென்?”
“அதுக்கப்றம் மீனாட்சி திருக்கல்யாணத்தன்னிக்கு கோயிலிலே அவளை பாத்தான். எதிர்பாராம எதிரே வந்திட்டா. அவளும் அவங்க வீட்டு பொம்புளைங்களுமா. அவன் முதல்லே அவளைத்தான் பாத்தான். அவளோட அந்த சேலையோட அசைவே அவளை காட்டிட்டுது. அவ கையை தூக்கி தாழ்த்தினப்ப வளையலோட சத்தமும் கேட்டுது…”
“அது வேணும்னே கேக்கவைக்கிறது. ஐ நோ” என்றாள் அமுதா, அருகே சற்று நெருங்கி அமர்ந்தபடி.
“இருக்கலாம்… அவன் அவ கண்களை பாத்தான். வால்போட்டு எழுதின கண்ணு. நேருக்குநேர் ஒரு அரைசெகண்ட் தான் பாத்திருப்பான். அவ்ளவுதான். ஒரு மூச்சுக்காத்து வந்து தொட்டுட்டு போன மாதிரி. என்னமோ சொன்னா. அவன் மனசுக்கு அது தெரிஞ்சுது. என்னமோ சொல்லிட்டு போனா. முதல்வாட்டி கூர்மையா வந்து தொட்ட அந்த வார்த்தை. அது இப்ப அப்டியே கனிஞ்சிருந்ததுன்னு தோணிச்சு. அவன் அப்டியே நின்னான். ஆளில்லாத கோயில் பிரகாரத்திலே கல்தூண் பக்கத்திலே எங்க இருக்கோம் என்ன யோசிக்கிறோம்னு தெரியாம பைத்தியம் மாதிரி நின்னிட்டிருந்தான்.”
“அப்றம்.”
“அந்த உருக்கம் அப்டி ஒரு இனிப்பா இருந்ததுன்னு சொல்லுவான். அதை நினைச்சு நினைச்சு அம்பது அறுபது வருசம் ஏங்கியிருக்கான். ரொம்ப நேரம் கோயிலிலே அங்கேயே நின்னுட்டிருந்தான். அப்ப பக்கத்திலே அம்மன் சப்பரம் போச்சு. நாதஸ்வரமும் தவிலுமா சங்கீதம். அவனுக்கு அப்டியே மெய்சிலிர்த்திருச்சு. கைகூப்பி நின்னு கண்ணீர் விட்டான். அழுதுகிட்டு அங்கேயே உக்காந்துட்டான். விடியறது வரை அங்கேதான் இருந்தான். விடியற்காலையிலே சொக்கநாதர் பவனி வாறப்பதான் வெடிச்சத்தம் கேட்டுத்தான் எந்திரிச்சு வீட்டுக்கு போயிருக்கான்.”
”அப்றம் அவங்களை சந்திக்கலையா?”
“இல்லை, அதுக்குப்பிறகு அவளை பாக்க நிறையவாட்டி அந்த வீட்டுமுன்னாடி நடந்திருக்கான். அதுக்குப்பிறகு பரீட்சை வந்திட்டுது. லீவு விட்டாங்க. ஊருக்கு போறதுக்குள்ள ஒரு தடவை பாத்திரணும்னு நினைச்சான். முடியல்லை. ஊருக்கு போய்ட்டு ஒருமாசம் கழிச்சு வந்தா அந்த வீட்டிலே அவங்க இல்லை. மாத்திட்டு போய்ட்டாங்க.”
“தேடிப் போகலையா?”
“இல்ல.”
“ஏன்?”
“ஏன்னா அந்தக்காலத்திலே அதெல்லாம் வழக்கம் இல்லை.”
“தாசில்தார் ஆபீஸிலேயே விசாரிச்சிருக்கலாமே.”
“அதுக்கெல்லாம் ஏது தைரியம் அந்தக்காலத்திலே? அவன் அப்டியே நினைச்சுக்கிட்டே இருந்தான். அப்றம் அவனுக்கு வேலைகிடைச்சுது. கல்யாணம் ஆச்சுது. புள்ளைகுட்டி பிறந்தது, அதுக பெரிசாச்சு. அப்டியே லைஃப் போச்சு”
“அவங்க என்ன ஆனாங்க?”
“என்ன சொல்றது? அவ அங்கேருந்து போன மறுமாசமே ஒரு விஷக்காய்ச்சலிலே செத்துட்டா”
“அய்யோ, நிஜம்மாவா?”
“ஆமா, அப்பல்லாம் விஷக்காய்ச்சல் ஜாஸ்தி”
“உண்மையாகவா?”
“ஆமா”
“ஸோ பாத்தட்டிக்”
“பாத்தியா, மெலென்கொலி தேவைப்படுதுல்ல? அவ அப்டியே செத்தாத்தானே கதைக்கு ஒரு அர்த்தம் வருது? அதான் மௌனி அப்டி எழுதறார்.”
“வெளையாடுறீங்களா?”
“சரி, அவ சாகல்லை. கொஞ்சநாள் கழிச்சு அவளை ஒரு கோயிலிலே பாத்தான். ரெட்டை மூக்குத்தி போட்டு பட்டுப்புடவை கட்டி பின்னலிலே மரிக்கொழுந்து வைச்சுக்கிட்டு எல்லா பொண்ணுகளையும் மாதிரிதான் இருந்தா. இடுப்பிலே ஒரு குழந்தை, கையிலே ஒண்ணு.”
அமுதா “உம்” என்று என்னை பார்த்தாள்.
“அப்றம் ரொம்பநாள் கழிச்சு அவளை மதுரை பஸ்ஸ்டாண்டிலே பாத்தான். அவளோட பையன் தோளுக்குமேலே வளந்தாச்சு. அவ ஒரு சணல்சாக்கிலே ஏதோ கட்டி எடுத்துக்கிட்டு பையன் பின்னாலே பஸ் புடிக்க ஓடுறா.”
“போரும்” என்றாள் அமுதா எரிச்சலுடன்.
“பாத்தியா? நாம வேற ஒண்ணை எதிர்பார்க்கிறோம். டிவைனா, பொயட்டிக்கா, மிஸ்டீரியஸா. அதான் கதையை சட்டுன்னு சாவுக்கு கொண்டுபோறோம்” என்றேன். “ஆக்சுவலா பாத்தா இதும் சாவுதான். இதுதான் பூர்ணமான சாவு. ஒண்ணுமே மிச்சமில்லாம ஆகிறது. நினைச்சுக்கிடக்கூட ஒண்ணும் இல்லை. சாவுன்னா ஆளு போனபிறகு அந்த இடத்திலே இன்னும் பெரிசா என்னமோ வந்திடுது. இது பரிபூர்ணமான சூனியம்… ஜஸ்ட் எம்ப்டினெஸ்..”
“ஏன் தாத்தா?” என்றபோது அவள் கண்கள் தழைந்திருந்தன. அழுபவள் போலிருந்தாள்.
“அவ்ளவுதான்… அந்த வால்போட்டு எழுதின கண்ணு. அதிலே துள்ளின அந்த ஒற்றை வார்த்தை. அது எங்க இருக்கு? அந்த கணத்திலே அந்த எடத்திலே அது இருக்கு. நாம இங்க வந்திடறோம். அது அப்டியே நிகழ்ந்து மறைஞ்சிருது. ஒரு மாயை. அவ்ளவுதான்… அதைத்தான் எப்டி எப்டியோ மாத்தி மாத்திச் சொல்லிடலாம்னு பாக்கிறாங்க.”
”யூ நோ, அவங்க கண்ணிலே என்ன இருந்ததுன்னு உங்களுக்கு தெரியும்.”
“நோ… சத்தியமா தெரியாது. எனக்கு எப்டி தெரியும்.”
“அது நீங்கதான்.”
“இல்ல. சொன்னேன்ல, என் ஃப்ரண்டு. ஆனா அதிலே என்ன? அவனாலேகூட சொல்லிட முடியாது. நினைச்சு நினைச்சு பாக்கலாம். கற்பனையாலே பின்னாலே பின்னாலே போயி அந்த ஒரு செக்கண்டை ஞாபகத்திலே திருப்பி நடத்திக்கலாம். ஆனா அது வேறே எங்கியோ எப்டியோ இருக்கு. நாம நினைக்கிறதும் கற்பனை பண்ணிக்கிடுறதும் வேறே. அது அந்த கணத்திலேயே அப்டியே காணாம போயிடுச்சு. அந்த கணம் நிஜம். அப்ப மனசு தித்திச்சதும் கண்ணீர் வந்ததும் எல்லாம் உண்மை. அந்த ராத்திரியே உண்மைதான். ஆனா அது அப்பவே முடிஞ்சாச்சு. ஒரு தீற்றல். லைஃபோட ஒரு ஃப்ளாஷ். அவ்ளவுதான், அதுக்குமேலே ஒண்ணுமில்லை.”
“அதெப்டி?” என்றாள்.
“அதைத்தான் மௌனி மாதிரி சொல்லணும்னா அவ அந்த பார்வையோட அப்டியே செத்துட்டா. அவன் அந்த ராத்திரியோட அப்டியே செத்துட்டான். ரெண்டுபேருமே இப்ப இல்லை” என்றேன்.
அவள் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். சட்டென்று எழுந்து சென்றாள். இளமையின் துடிப்பான உச்சத்தில் இருந்தாலும்கூட அது புரியத்தான் செய்யும்.
நான் மீண்டும் வார இதழில் சரோஜாதேவியின் படத்தைப் பார்த்தேன். “வாலிட்டு எழுதிய நீலக்கடைக்கண்ணில் மீனோ”.
அந்த வீட்டுக்குள் மீண்டும் ஒருமுறை போனேன். வெள்ளையடித்து மறுபடியும் வாடகைக்கு விட வைத்திருந்தார்கள். வெறுமையான அறைகள் தோறும் சுற்றிவந்தேன். உள்ளே சுவரோடு பதிக்கப்பட்ட சிறிய முகம்பார்க்கும் கண்ணாடி. அதனருகே ஒரு சிறு கரிய தீற்றலை கண்டேன். கண்ணில் மையிட்டபின் அப்படியே விரலைத் தீற்றிக்கொண்டது. ஒரு சின்னஞ்சிறு குருவியின் சின்னஞ்சிறு இறகுபோல. ஒரு மெல்லிய வளைவு. ஓர் அலட்சியமான கீற்று. ஒரு கணம், அந்த ஒருகணம், அது அங்கிருந்தது. கண்கள் இல்லை, மையிட்ட இமைகளும் இல்லை, நீட்டிவரைந்த வால் மட்டும் எஞ்சியிருந்தது.
அதை பார்த்துக்கொண்டு நின்றேன். அது அழியவே இல்லை. அது எப்போதும் மிஞ்சிவிடும்.
***
8.படையல் [சிறுகதை]
7.கூர் [சிறுகதை]
6. யட்சன் [சிறுகதை]
5. கந்தர்வன் [சிறுகதை]
4.குமிழிகள் [சிறுகதை]
3.வலம் இடம் [சிறுகதை]
2.கொதி[ சிறுகதை]
1.எண்ணும்பொழுது [சிறுகதை]
வாலிட்டெழுதிய நீலக்கடைக்கண்ணில்
மீனோ இளமானோ ?
ஓலஞாலி குருவியோ கூடுகூட்டும் புளகமோ
பீலிவீசி ஆடும் மாமயிலோ?
இசை -இளையராஜா
பாடல்- பிச்சு திருமலை
பாடியவர் -ஜேசுதாஸ்,ஜானகி