ஆ.மாதவன் -அஞ்சலி
ஆ.மாதவன் கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
ஆ.மாதவன் அவர்களுக்கு கேரள அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது என தினமணியில் செய்தி ஒன்று படித்தேன். அது போன்ற சூழல் தமிழ்நாட்டில் நடைபெற வாய்ப்பில்லாமல் போவது அறிவுலகத்தை அங்கீகரிப்பதில் நாம் பின் தங்கியுள்ளோம் என்பதைக் காட்டுகிறது. பிரபஞ்சன் அவர்களுக்கு புதுச்சேரி அரசாங்கம் கூட அரசு மரியாதை வழங்கியது
எழுத்தாளன் என்பவன் அத்தகைய மரியாதையை எதிர்பார்ப்பதில்லை , அது ஒரு பொருட்டே அல்ல என்பதும் எனக்கு புரிகிறது. ஆனால் ஒர் எழுத்தாளனுக்கு செய்யும் மரியாதை அவர் படைப்புகளுக்கு செய்யும் மரியாதை. மொழிக்கு அந்த எழுத்தாளன் மூலம் கிடைத்த நற்பேறுக்குச் செய்யும் பிரதி உபகாரம்.
அத்தகைய ஒரு சூழல் தமிழ்ச் சூழலில் இயல்பாக நடைபெறாமல் போவது வேதனைக்குரியது. எல்லவாற்றிற்கும் மேலாக எளிய வாசகன் எழுத்தாளருக்கு வழங்கும் மரியாதை உச்சபட்சமானது. எதிர்காலத்தில் அத்தகைய ஒரு கௌரவம் அரசின் வழியே நடைபெறும் என நம்புகிறேன். ஆனால் அதற்கான திறப்பு என் கண்ணில் தென்படவில்லை.
பா.இரமேஷ்.
அன்புள்ள இரமேஷ்,
பிரபஞ்சன் புதுச்சேரியின் படைப்பாளி. புதுச்சேரியில் இருந்து சாகித்ய அக்காதமி விருது பெற்ற ஒரே படைப்பாளி. ஆ.மாதவன் தமிழில் மட்டுமே எழுதியவர். மலையாளத்தில் அவருடைய படைப்புக்கள் அதிகம் வெளிவந்ததில்லை. அவர் மலையாள எழுத்தாளராக புகழ்மிக்கவரும் அல்ல. அவருக்கு கேரள அரசு ஒரு தமிழ் எழுத்தாளர் என்ற அளவிலேயே அந்த மரியாதையை வழங்கியிருக்கிறது. இது குறிப்பிடத்தக்கது.
அந்த முடிவை எடுக்க அவர்களுக்கு ஆதாரமாக இருந்தவை என்ன? ஒன்று அங்கே பண்பாட்டு- மக்கள் தொடர்புத்துறையில் இலக்கியம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். இது வெறுமே அதிகாரி மட்டத்திலேயே முடிவெடுக்கப்படக்கூடிய விஷயம். அத்தகைய அதிகாரிகள் தேவை. அப்படிச் சிலர் அங்கிருக்கிறார்கள். நமக்கு அப்படிப்பட்ட அதிகாரிகள் இல்லை. இருந்தால் அவர்கள் செல்வாக்காகவும் இல்லை.
இன்னொன்று, அவ்வாறு அவர்கள் முடிவெடுக்கத் தூண்டுவது அங்குள்ள நாளிதழ்களும் செய்தி ஊடகங்களும். அவர்கள் ஆ.மாதவன் மறைந்தபோது அந்த முக்கியத்துவத்தை அளித்தன. ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் மறைந்தபோதும் அங்கே ஊடகங்கள் அந்த முக்கியத்துவத்தை அளித்தன.
ஆனால் ஊடகங்களுக்கு உண்மையிலேயே முக்கியமானவர்களை அடையாளம் காணும் திறன் இருக்கவேண்டும். அடையாளம் காணும் , வேறுபடுத்தும் தகுதி கொண்டவர்கள் ஊடகங்களிலும் அதிகாரிவர்க்கத்திலும் இருக்கவேண்டும்
ஓர் உதாரணம் சொல்கிறேன். சிலகாலம் முன்பு வரை மருத்துவ படிப்பு ஒதுக்கீடுகளில் ‘தமிழறிஞர்- எழுத்தாளர்’ கோட்டா ஒன்று இருந்தது. அதன்படி தங்கள் பிள்ளைகளுக்கு இடம் வாங்கிக்கொண்ட தமிழறிஞர்- எழுத்தாளர்களில் எத்தனைபேர் உண்மையில் தமிழறிஞர்- எழுத்தாளர் என்று பார்த்தால் திகைப்பாக இருக்கும்.
தமிழகத்தில் திமுக,அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே ‘இலக்கிய அணி’ உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள். மாவட்ட, வட்ட அளவில் அதற்கு உறுப்பினர்களும் தலைவர்களும் செயலர்களும் உண்டு. எல்லாருமே கவிஞர்கள்தான், இலக்கியவாதிகள்தான். இதைத்தவிர ஒவ்வொரு நகரத்திலும் எத்தனை பேர் மரபுக்கவிஞர்கள், தமிழறிஞர்கள், புதுக்கவிஞர்கள் என்று பாருங்கள்.
இலக்கியவாதி மறைந்தால் அரசு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற ஒரு மரபு தொடங்கிவைக்கப்பட்டால் என்னாகும்? அரசுமரியாதை கொடுப்பதற்கென்றே மாவட்டம்தோறும், வட்டம்தோறும் காவல்துறை பிரிவு உருவாக்கவேண்டியிருக்கும். பல குழுக்கள் நாள்தோறும் அரசு மரியாதையை அளித்துக்கொண்டே இருக்கவேண்டியிருக்கும். அதற்கு தனி பட்ஜெட் ஒதுக்கவேண்டியிருக்கும். அதற்கு சிபாரிசுகள், ஆள்பிடித்தல்கள், தரகர்கள், லஞ்சம், கமிஷன் வெட்டுதல்கள்… தேவையா?
நமக்கு இலக்கியத்தில் தேவையாக இருப்பது அரசு, ஊடகங்கள் இலக்கியத்தை அறிந்துகொள்வதும் மரியாதை செய்வதும் அல்ல. அவர்கள் வெளியே இருக்கிறார்கள். நாம் முதலில் நம் இலக்கியத்தை அறிந்துகொள்வதும், கட்சிச்சார்பு- கருத்துச்சார்புகளுக்கு அப்பால் நின்று இலக்கியவாதிகளுக்கு மதிப்பளிக்கும் அடிப்படை எண்ணம் கொண்டிருப்பதும், அதை எப்போதும் வெளிப்படுத்துவதும்தான் தேவை.
அப்படி இலக்கியச்சூழலில் மதிப்பு உருவாகும்போது, இலக்கியவாதிகள் என சிலர் மறுப்பில்லாமல் முன்வைக்கப்படும்போதுதான் வெளியே இருப்பவர்கள் மதிப்பார்கள்.
ஜெ
அன்புள்ள ஜெ
கேரளத்தில் ஆ.மாதவன் அவர்களுக்கு இடதுசாரி அரசு அரசமரியாதை அளித்தது பற்றி இங்கே சில தோழர்கள் எழுதினார்கள். அங்கே காங்கிரஸ் அரசு இருந்தபோதும் முக்கியமான படைப்பாளிகளுக்கு அரசமரியாதை அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராகச் செயல்பட்ட இடதுசாரி எழுத்தாளர்களுக்கும் அந்த மரியாதை அளிக்கப்பட்டது
ஆ.மாதவனுக்கு அரசு மரியாதை அளிக்கப்படுவதற்கு திட்டவட்டமான காரணமாக இருந்தது என்றால் அது அவருக்குச் சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டதுதான். சாகித்ய அக்காதமி விருது அவருக்கு அளிக்கப்பட என்ன காரணம்? 2010க்கு முன் அவர் எழுதிக்கொண்டிருப்பதே எவருக்கு தெரியும்? 2010ல் அவருக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டது. தனக்கு கிடைத்த முதல் விருது மட்டுமல்ல தனக்காக நடத்தப்பட்ட முதல்கூட்டமும் அதுதான் என்று அவர் அந்த மேடையிலே சொன்னார். அந்த விருதை ஒட்டி எல்லா ஊடகங்களிலும் அவர் முன்வைக்கப்பட்டார். அவரைர பற்றி கட்டுரைகள் எடுக்கப்பட்டன [ஓர் ஆவணப்படம் எடுத்திருக்கலாம்] அந்த புகழ்வெளிச்சம் சாகித்ய அக்காதமி விருதுக்கு வழி அமைத்தது
எழுத்தாளர்களுக்கு சாவுக்கு மரியாதை அளிப்பது தேவைதான். ஆனால் வாழும்போது அவர்களை மதிப்பதும், அவர்களின் படைப்புக்களை படிப்பதும் விமர்சிப்பதும் கொண்டாடுவதும்தான் முக்கியமானது. அதைச் செய்கிறோமா? ஆ.மாதவனுக்கு இங்கே உள்ள இடதுசாரிகள் அதைச் செய்தார்களா?வேறு எந்த எழுத்தாளர்களுக்காவது செய்தார்களா? விஷ்ணுபுரம் அமைப்பு தவிர இன்று இங்கே இப்படி மூத்தபடைப்பாளிகளை அடையாளம் காட்டி பாராட்டி விமர்சனம் செய்து முன்வைக்கும் அமைப்பு வேறு உண்டா? விஷ்ணுபுரம் அமைப்பின் அந்தச் செயல்பாடுகளையே ஏளனம் செய்யவும் இருட்டடிப்பு செய்யவும்தான் இங்கே ஆளிருக்கிறது
ஆ.மாதவன் விருதுபெற்ற நிகழ்விலேதான் நான் விஷ்ணுபுரம் விழாவைப்பற்றி கேள்விப்பட்டேன். இப்போது அவருடைய மறைவை ஒட்டி எண்ணிப்பார்க்கையில் செய்யவேண்டிய ஒன்றை விஷ்ணுபுரம் செய்திருக்கிறது, நானும் கூடவே நின்றிருக்கிறேன் என்ற எண்ணம் உருவாகிறது
எஸ்.ராமநாதன்
அன்புள்ள ராமநாதன்,
நாம் போராடுவது நம் சூழலில் உள்ள மொண்ணைத்தனத்துக்கு எதிராக. அந்த மொண்ணைத்தனம் நம்மை ஏன் அங்கீகரிக்கவில்லை என்று கேட்பதுபோல அபத்தம் உண்டா என்ன? இங்கே பெரும்படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்கள் இருக்க சல்லிகளெல்லாம் கொண்டாடப்பட்டார்கள். சரியானவர்களை சுட்டிக்காட்டி, இவர்கள் உங்கள் சொத்து என தமிழின் புதியவாசகர்களை நோக்கிச் சொல்வதையே விஷ்ணுபுரம் அமைப்பு செய்கிறது. ஆ.மாதவனுக்கும் உரியவற்றைச் செய்தோம்.
இங்கே இன்னமும்கூட முறையாக முன்வைக்கப்பட்டால் உரைநடையாசிரியர்களை ஏற்றுக்கொள்ள ஆளிருக்கிறது. அவர்களுக்கு அங்கீகாரங்கள் அமைகின்றன. கவிஞர்களுக்கு அந்த ஏற்பு நிகழ்வதில்லை. அதை மெல்லமெல்லவேனும் மாற்றவேண்டும்