எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நூறுகதைகளின் ஆண்டுநிறைவு மனதில் நிறைந்திருந்தது. தமிழில் ஓர் எழுத்தாளர் தொடர்ச்சியாக ஒரே ஆண்டில் நூறு கதைகள் எழுதுவார் என்றும் நூறுகதைகளுமே வெவ்வேறுவகையில் கிளாஸிக் தகுதியுடன் இருக்கும் என்றெல்லாம் என்னிடம் சொல்லியிருந்தால் நாலைந்து ஆண்டுக்கு முன்பெல்லாம் நம்பியிருக்க மாட்டேன்.

நானெல்லாம் உங்கள் மேல் காழ்ப்புடன் இருந்தவன். காழ்ப்புடன் நிறைய எழுதியுமிருக்கிறேன். ஏன் அந்தக் காழ்ப்பு என்றால் நீங்கள் நான் மதிப்புடன் எண்ணிவந்த பல எழுத்தாளர்களை சிறியவர்களாக ஆக்கிவிட்டீர்கள்.மிகமிகச் சிறியவர்களாக. அதை என்னால் தாள முடியவில்லை. ஏனென்றால் அது என்னை சிறிதாக ஆக்குகிறது.

அப்புறம் அதில் கொஞ்சம் சாதிப்புத்தியும் உண்டு. என்ன இருந்தாலும் நம்மாள் போல வருமா என்ற எண்ணம் அடிமனதில் இருந்தது. ஆகவேதான் அந்த வெறுப்பு. நான் வெண்முரசை வாசிக்கவில்லை. வாசிக்காமலேயே நையாண்டியெல்லாம் செய்துகொண்டிருந்தேன்.

இந்த நூறுகதைகளையும் ஒரு சோர்வான மனநிலையில் வேறுவழியே இல்லாமல் வாசித்தேன். வாசிக்க வாசிக்க எல்லாமே உடைந்து நொறுங்கிவிட்டது. எல்லா ஆணவமும் போய்விட்டது. ஒவ்வொரு கதையிலும் வாழ்ந்தேன். பொலிவதும் கலைவதும் போன்ற கதையெல்லாம் கனவா கதையா என்றே அறியாத ஓவியம். இனி வீணாக திமிர் காட்டுவதில் அர்த்தமே இல்லை என்று எண்ணிக்கொண்டேன்.

இப்படித்தான் ஹ்யூமன் கிரியேட்டிவிட்டி ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு வழியை தேர்வுசெய்கிறது. அதன்வழியாக என்னென்னவோ பெருகி கொட்டுகின்றது. நம்மால் அதை புரிந்துகொள்ள முடியாது. அப்படி கொட்டும் வழியாக அமைந்தவன் அருள் உள்ளவன். அதற்கான துன்பமும் அவனுக்கு இருக்கும். ஈகோ இருக்கும். அதை சொல்லாமலும் இருக்கமுடியாது. ஆகவே சூழ்ந்திருப்பவர்களால் வெறுக்கப்படுவான். வசைதான் வந்துகொண்டிருக்கும்.

அப்படி அடிவயிற்றிலிருந்து நாம் வேறு எவரையுமே வெறுப்பதில்லை. கிரியேட்டிவிட்டி போல அஞ்சப்படுவதும் வேறு இல்லை. நம்மால் வெறுப்பது ஏன் என்றே சொல்லமுடியாது. வெறுப்பு வந்துகொண்டே இருக்கும்.ஏனென்றால் இங்கே வாழ்க்கையில் கிரியேட்டிவிட்டி மிகமிகக்குறைவு. பெரும்பாலும் மொனோடொனஸ் ஆன வாழ்க்கைதான். ஆகவே அதை நாம் அஞ்சுகிறோம். பொறாமை கொள்கிறோம்.

நூறுகதைகளை மீண்டும் படிக்கிறேன். ஒவ்வொரு கதையும் ஒரு உச்சத்திலே இருக்கிறது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எப்படி போகமுடிந்தது. போழ்வு ஒரு சரித்திர உச்சம் என்றால் கரு இன்னொரு புராண உச்சம். அப்படிக் கேட்டால் ஒவ்வொரு கதையின் உச்சம்தான் அடுத்த கதையை கொண்டுவருகிறது என்று சொல்லவேண்டும்.

ஒரு கதையின் உச்சம் நம்மில் ஒரு மின்சாரம் போல நிறைந்திருப்பதனால்தான் அடுத்த கதையின் உச்சத்தை மிகச்சாதாரணமாக போய் அடைய முடிகிறது. ஒரு சங்கீதகச்சேரியில் அப்படித்தான் எடுத்த எடுப்பிலேயே பிரதானமான ஒரு ராகம் அமைந்துவிட்டால் அதன்பிறகு பாடவே வேண்டாம். அதுவே வந்துகொண்டிருக்கும். பாடுவதெல்லாமே உச்சமாக இருக்கும். அதுதான் கேட்பவர்களுக்கும்.மனசு சங்கீதத்திலே குவிந்துவிடும். மிச்சம் என்று ஒன்றுமே இருக்காது. அப்படியே மனம் கொப்பளித்துக்கொண்டே இருக்கும்.

அப்படி ஒரு அனுபவம் அந்த நூறுகதைகளும். அப்பவே எழுதவேணும் என நினைத்தேன். ஆனால் என்ன எழுதுவது என்று அப்படியே ஒத்திப்போட்டேன். ஓராண்டு நிறைவில் கதைகளை மீண்டும் எடுத்துப்பார்த்தேன். கதைகளெல்லாமே அப்படி புதியவையாக இருந்தன. இப்போது வாசிக்கும்போது பலகதைகளில் புதிய புதிய கவித்துவங்கள் தென்படுகின்றன.

வாசித்துமாளவில்லை. மீண்டும் கதைகளிலே அமர்ந்திருக்கிறேன். நூறுகதைகளையும் முழுசாக வாசித்து கடப்பது எளிமையான விஷயமல்ல. நானும் வாசிக்கிறேன் என்று ஈகோவை திரட்டிக்கொண்டு சும்மா கதையோட்டங்களை மேய்ந்துவிட்டு எதையாவது சொல்லலாம். இலக்கியவாசகன் என்று ஒரு நினைப்பு வந்துவிட்டாலே அதுக்கான துணிவும் வந்துவிடும்.

இலக்கியவாசகர்கள் என்பவர்கள் எப்போதுமே எப்பவோ வாசித்தவற்றை ஞாபகம் வைத்துக்கொண்டு பிறகு வாசிப்பதையெல்லாம் அதிலே கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருப்பவர்கள். அலம்பித்துடைத்த மனசுடன் புதிய கதைகளை படிப்பது ஒரு யோகம். யோகானுபவம் என்றுதான் சொல்வேன்.

நூறுகதைகளில் பெரும்பாலும் எல்லா கதைகளுமே கதைக்கரு என்ற அளவிலேயே புதிசு. ஏழாவது போன்ற கதையெல்லாம் இதுவரை எவருமே யோசிக்காத புதிசு. அதையெல்லாம் உள்ளே போய் வாசிக்க ஒரு அபாரமான கவனம் தேவை.

இப்போதுதான் மீண்டும் தொடங்கியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன். இந்தக்கதை எண்ணும்பொழுது ஓர் அற்புதமான கதை. புராணமும் யதார்த்தமும் இரண்டு சரடுகளாகப்பின்னி ஓடுகின்ற கதை. கேட்டகேள்விக்கு பதில் உண்டு. இங்கே அவன் சொல்வது கேட்காத கேள்விக்கான ஒரு பதில்.

எண்ணும்பொழுது இல்லாமலாவதுதானா காதல் காமம் எல்லாமே? எண்ண எண்ண இனிக்கிறது. எண்ணாமல் இருக்கவும் முடியவில்லை. ஆனால் எண்ண எண்ண இல்லாமலாகிக்கொண்டும் இருக்கிறது. ஒன்றுமே செய்யமுடியாது. பாலக்காட்டு பக்கம் வெளுக்கத்தேய்த்தது பாண்டு [வடு] ஆகியது என்று ஒரு சொல் உண்டு. தேய்க்கத்தேய்க்க தங்கம் வெள்ளியாக ஆகும் அதிசயம்தான் இந்த உறவுகளெல்லாம்.

பூ உதிர்ந்திருக்கிறதா என்று காம்பைப்பார்த்தாலே தெரியும். ஆனால் மனசில் பூக்காத பூவெல்லாம் நிறைந்திருந்தால் அது உதிர்ந்திருப்பதாகவே தோன்றும். எண்ணி எண்ணி ஒருவர் தீயிலும் ஒருவர் நீரிலும் மறைகிறார்கள். இந்தக்கதை மறுபடியும் தொடக்கமாக இருக்கட்டும். இன்னும் ஒரு நூறு காத்திருக்கிறதோ என்னவோ யார் கண்டது?

 

ஜி.சுந்தர்

 

அன்புள்ள ஜெ

’எண்ணும் பொழுது’ கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் இரண்டு கதைகள் ஒன்றையொன்று சந்திக்கின்றன. சந்திக்கவில்லை, மெல்ல உரசிக்கொள்கின்றன. அப்படி ஒருகதை இன்னொரு கதையைச் சந்தித்துவிடக்கூடாது என்று கதையைச் சொல்பவரும் கேட்பவரும் கவனமாக இருக்கிறார்கள். அதற்காகத்தான் சாதாரணமாக பேசிக்கொள்கிறார்கள். சில்லறை சண்டை போடுகிறார்கள்.

ஆனால் அவர்களுக்குள் அந்தக்கதைகள் சந்தித்துக்கொண்டுதான் இருக்கும். அதை ஒன்றுமே செய்யமுடியாது. “வாலும் தலையும் இல்லாத கதை’ தான் என்றாலும் அதை அவர்கள் இருவருமே வாலும் தலையும் வைத்து உருவாக்கிவிடுவர்கள்.அவரவருக்கு பிடித்தது மாதிரி.

இந்தமாதிரி கதைகள் எப்போதுமே ஒரு கேள்வியாக அல்லது புதிராகவே வைக்கப்படுகின்றன. அந்தக்கேள்வியை அப்பெண் தவிர்க்கிறாள். அவள் எதிர்கொள்ளவேண்டுமென்றால் அவள் இன்னொரு கேள்வி கேட்கவேண்டும். அதை அவள் கேட்டாளா என்பது கதையில் இல்லை. இருவரும் மாறி மாறி அந்தக் கேள்வியை கேட்டுக்கொள்வார்கள்

பொன்னை வெள்ளியாக்குவதும் எல்லா பூக்களையும் உதிரவைப்பதும் சந்தேகம்தான். பொய் பற்றிய சந்தேகம் தெளிவு அடையலாம். உண்மையை பற்றிய சந்தேகம் என்றால் அதற்கு விடையே கிடையாது. முடிவின்மை வரை அப்படியே செல்லும் அது

ஆர்.சத்யமூர்த்தி

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது- கடிதங்கள்

முந்தைய கட்டுரைநச்சுமுள் மேல் நடக்கும் வேழம்.
அடுத்த கட்டுரைஆ.மாதவன் – கடிதங்கள்