எண்ணும்பொழுது – கடிதங்கள்

எண்ணும்பொழுது [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

மீண்டும் ஒரு கதைக்காலத்துக்காக ஏங்குகிறது மனசு. இப்போதெல்லாம் கொரோனாக்கால ஓய்வு முடிந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தாகிவிட்டது. கொரோனா காலகட்டத்தின் சோர்வும் தனிமையும் இல்லாமலாகிவிடவில்லை. அதெல்லாம் அப்படியே இப்போதும் நீடிக்கிறது என்பதுதான் உண்மை. என்னவென்றே தெரியாத ஒரு சலிப்பு. நாம் பார்த்த உலகமே மாறிவிட்டது என்ற எண்ணம். அப்படி இல்லாமல் நாம் பார்த்த உலகின் சாராம்சமாக உள்ள விஷயங்களிலேயே திளைக்க வைத்தன கதாகாலத்தின் நூறு கதைகளும்

அந்த வரிசையில் வரும் கதை எண்ணும்பொழுது. எண்ண எண்ண குறையும் கூடும் சில விஷயங்களைப் பற்றிய கதை. ஆனால் இக்கதையில் அதெல்லாம் கோணச்சிக்குத்தான் சிக்குகின்றன. வாழ்க்கையை கோணலாகப்பார்த்தால் மட்டுமே பார்வைக்குச் சிக்கும் சில உண்மைகள் உள்ளன. நேராக வாழ்பவர்கள் அதைப் பார்ப்பதில்லை. அவர்களால் நேர்வாழ்க்கையை பார்க்கமுடியாது. நேராக இருப்பவர்கள் கோணலை பார்க்கிறார்கள். கோணச்சிகளே நேரான உண்மைகளைப் பார்க்கிறார்கள்.

கோணச்சி சொல்வன எல்லாமே ஆழமாக உள்ளன. பறக்கிறது நடக்க ஆரம்பித்தால் காலடிகளை எண்ணும் என்பதுதான் ஆதாரமான வரி. எங்கே நடக்க ஆரம்பிக்கிறோம் என்பது தெரியாது. நடக்க ஆரம்பித்ததுமே பதிந்த கால்களை எண்ண ஆரம்பிக்கிறோம். எண்ண எண்ண நல்லவை குறைய அல்லவை கூட கணக்குகள் எல்லாமே தவறிவிடுகின்றன

சரியான கணக்குகளைக்கூட தவறாக எண்ணி கணக்குபோடும் ஒரு வாசனாவைபவம் மனுஷனுக்கு உண்டுபோல

 

ஸ்ரீனிவாஸ்

 

அன்பு ஜெ,

கதையை முடித்ததும் மீண்டும் தலைப்பையும், முகப்பு படத்தையும் பார்க்க தொடுபேசியை தொட்டு சறுக்கிக் கொண்டே மேற் சென்றேன். கன நேரமும் தலைப்பின் ஆர்வம் மட்டுமே முடுக்கித் தள்ளியது. எப்பொழுதும் உங்கள் தலைப்பு கதையை சுருக்கி உள்வைத்திருப்பதாக எண்ணம் எனக்கு. “எண்ணும்பொழுது”… என்ற வார்த்தை எண்ணத்தை சொல்கிறதா அல்லது எண்ணிக்கையை எண்ணுவதைச் சொல்கிறதா என்று சிந்தித்திருந்தேன் ஜெ.

பின்னும் அந்த முகப்புப் படம்… குளிரைக் காணிக்கும் வெள்ளி நிறம் மற்றும் வெம்மையைக் காணிக்கும் தங்க நிறம்.. அதில் சில எண்கள்… வேறோர் எண்ணத்திற்கு இட்டுச் சென்றது.

போம்பளார் விரும்பியது என்பது தண்ணீரில் கண்ட கன்னியை தானே. பின்னும் அவர் அதிகம் விரும்பியது கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தின் கன்னியைத் தான். இரண்டிலுமே அவர் விரும்பியது கன்னியின் குளிர்ந்த பிம்பத்தைத் தான். ஆனால் திருவீட்டு கன்னியோ தீயின் தன்மையானவள். தீயில் தகித்து தீயினால் உயிரை விட்டவள். ஒருவேளை ஒன்றாய் காலம் முழுமைக்கும் சேர்ந்திருந்தாலும் அவரால் அந்த கனலின் கன்னியைக் கண்டிர இயலாது. போம்பளார் விரும்பிய கன்னியின் பிம்பத்திற்கும் அனலாயிருந்த அவளின் உடலுக்கு இடையில் இருந்ததும் கூட தீராத வானமும் மடங்காத காலமும் தான். ஆக அவர் இறப்பிற்குப் பின் சென்றடைந்ததும் அவர் விரும்பிய அந்த இடத்திற்குத் தான் என்று நினைத்தேன் ஜெ. பின்னும் குறுந்தொகைப் பாட லான “பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன.. ” என்ற வரிகள் என்னை சூழ்ந்து கொண்டது. கூடவே நீங்கள் அதற்குக் கொடுத்த விளக்க உரையும் ஞாபகம் வந்தது. எண்ண ஆரம்பித்த கனம் பூ வந்து விழுந்தது போன்ற கற்பனையை நிகழ்த்திக் கொண்டேன். அந்த ஒற்றை எண்ணப்பூவால் மட்டுமே அவர்கள் இருவரையும் அந்த மடங்காத காலம் பிரித்து வைக்க முடியும் எனக் கொண்டேன்.

ஒரு கதையை விஷயத்தை, எதைப் பேசினாலும் ஆண் என்ன காரணத்திற்காக பேசுகிறான் என்பதையே பெண் மனம் முதலில் நாடுகிறது. முடிவிலா தர்க்கத்தை கனகனமும் நிகழ்த்தக்கூடியது பெண் மனது. இன்ன காரணாகாரியத்தோடு இன்ன நேரத்தில் இன்ன விடயம் நியாபகம் வருகிறது என்றறியாத பேதை ஆணுள்ளம் அந்தக் கேள்விக் கனைகளை எதிர்கொள்ளும்போது விக்கித் தான் தவிக்கிறது…  ஆனால் இந்த இரண்டடுக்குக் கதையின் கதைசொல்லி அப்படியல்லாது ஏதோவொரு காரணத்திற்காகவும் கூறியிருப்பாரோ என்று எண்ணிப் பார்த்தேன். காமத்தை காதலை அதிகரிக்கும் பொருட்டு எழுப்பப்படும் ஒருவகை சந்தேகத் தொனியாக கதை இருக்குமோ என்று நினைத்தேன் ஜெ. “என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்” என்ற ஒற்றைக் கேள்வியை தலைவன் எதிர்கொள்ளும் போது ‘இப்ப காமிக்கிறேன் பார்’ என்ற கர்சிணையோடு ஆரம்பிக்கும் தழுவல்களின் நெருக்கம், அது எண்ணாமலிருக்கும் போது குறைவு தான். கதையில் தலைவியின் தழுவல்கள் கூட அப்படிப்பட்டதாகத் தான் இருந்தது. அவன் தன்னை சந்தேகிப்பதாய் அமைந்ததோ என எண்ணிய தழுவலின் தகிப்பை அவனே உணர்ந்திருந்த தருணத்தையும் கண்டேன்.

பின்னும் இந்த வரிகளை “எண்ணி எண்ணிப் பார்ப்பதெல்லாம் எண்ணிக்கை தவறும். கணக்கிட்டுப் பார்ப்பதெல்லாம் குறைஞ்சுகூடும். ரெண்டுபேரையும் எண்ணவைப்போம், இழந்ததும் விட்டதும் எண்ணினால் கூடும். எடுத்ததும் வைச்சதும் எண்ணினால் குறையும்” ஓட்டிப் பார்த்தேன். அப்படியானால் அவர்கள் எண்ணியது எடுத்ததையும் வைத்ததையும் மட்டுமே.  காதலில் தன் இணை இழந்ததையும் விட்டதையும் யோசிக்க அந்த காதல் பெருகிவருவதை நானே உணர்ந்திருக்கிறேன். என் காதல் அவன் மேல் பெருகிக் கொண்டே இருப்பது அதனால்தான் என்பதை இந்த வரிகளில் உணர்ந்தேன் ஜெ. அவன் இழந்ததையும் விட்டதையும் நினைக்கும்போதே என் கண்கள் பொங்கி என்னுள் அணைத்துக் கொள்ளத் தோன்றும் எனக்கு. அதற்கு நேர்மாறாக சில சமயம் உச்ச எரிச்சலில் நான் எண்ணிக் கொண்டது அவன் என்னிடம் எடுத்ததும் வைத்ததையும் தான் என்பதையும் உணர்ந்தேன். குறைவதும் கூடுவதும் அவரவர் எண்ணிக் கொள்வதைப் பொறுத்தே அமைக்கிறது. எண்ணிக்கையோ எண்ணமோ அல்லது இரண்டுமோ குறைவதும் கூடுவதும் அவரவர் எண்ணுவது பொறுத்தமைகிறது…

இன்னும் ஒருவரி என்னை ஈர்த்திருந்தது ஜெ. எப்பொழுது நாம் எண்ண ஆரம்பிக்கிறோம் என்ற புள்ளியை நீங்கள் சொன்ன போது… “பறக்கிறது நடந்தா பதிஞ்ச காலை எண்ணும்” என்ற வரிகள். ஆம்! அங்குதான் நாம் எண்ண ஆரம்பிக்கிறோம். எப்படி நீங்கள் எண்ணத்தின் ஆழம் வரை பயணிக்கிறீர்கள் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். அருமையான கதை ஜெ. நன்றி.

 

அன்புடன்

இரம்யா.

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது- கடிதங்கள்

முந்தைய கட்டுரைFeeling Blue
அடுத்த கட்டுரைவசந்தம், மலர்