கூர் [சிறுகதை]

பையனைப் பிடித்துவிட்டோம் என்று ஸ்டேஷனிலிருந்து போன் வந்தது. நான் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். உரக்க, “எங்க ?எங்க ஆளு சிக்கினான்?” என்றேன்.

“முதலிலே இட்டிலிய தின்னுங்க. பிறவு பேசலாம்” என்றாள் ரெஜினா எரிச்சலுடன்.

“இருடி…” என்றபின் “சொல்லுடே தாமஸ்” என்றேன்.

“அண்ணி கோவிச்சுக்கிடுதாங்க போல.”

“ஆமடே, நான் இப்பம்தான் வீட்டுக்கே வந்தேன். நேத்து எஸ்பி கூட்டத்துக்குப் போயிட்டு ஸ்டேஷனிலே எட்டிப்பாத்துட்டு வாறதுக்கு ரெண்டு மணி… கிடந்து கண்ணசரல்லை, அதுக்குள்ள எம்.எல்.ஏக்க விளி.. சொல்லு. பயல எங்க பிடிச்சீங்க?”

”மணிகண்டன் வர்க்‌ஷாப்புக்கு பின்னாலே ஒரு டயர்குடோன் இருக்கு. ஆபிரகாம் முதலாளிக்க பழைய கிறிஸ்டோ ஃபேக்டரி தோட்டம். குடோன்லே பளைய டயர் குமிச்சு போட்டிருக்கான். இப்ப பளைய டயருக்கு வெலை இல்லைல்லா? முன்ன எதுக்காகவோ வாங்கினது, அந்தாலே கெடக்கு. கேஸிலே கெடக்குததனாலே அந்த தோட்டத்துக்க கேட்டை திறந்தே பத்துப்பதினஞ்சு வருசம் இருக்கும். காடுபிடிச்சு கெடக்கு. துருப்பிடிச்ச சாமான் ஏகப்பட்டது உள்ள நெறைஞ்சிருக்கு.”

“நான் பாத்திருக்கேன்.”

“குடோனும் கூரையெல்லம் உடைஞ்சுபோயி இப்ப அப்பன்னுதான் நிக்குது. அந்த குடோனுக்க ஜன்னல்கதவை உடைச்சு ஒரு கூட்டம் சின்னப்பையனுங்க உள்ள போயி ராத்திரி உறங்குத வளக்கம் உண்டு. எல்லாம் ஊரும்பேருமில்லாத்த பொறுக்கிப் பயக்க… பகலிலேயும் அங்க சிலபேரு கிடப்பானுக. ஒதுக்குபுறம் ஆனதனாலே ஆரும் கண்டுகிடுதது இலை. நம்ம கஞ்சா விக்குத லாரன்ஸ் ஒரு துப்பு குடுத்தான்.நாம தேடுதது சின்ன பையன்னாக்க ஒருவேளை அங்க இருக்க வாய்ப்பிருக்குன்னுட்டு. செரின்னு விடியக்காலையிலே போனோம்.”

“ஓகோ” என்றேன்.

“நான் போனிலே விளிச்சேன். நல்லா உறங்குதாருண்ணு அண்ணி சொன்னாவ. அதனாலே நானே போர்ஸ் கூட்டிக்கிட்டு போனேன். நாங்க நாலுபேருதான் போனோம். எஃப்.ஓ.பி பயக்க எட்டுபேரும் உண்டு. குடோனுக்கு கதவு நல்லா பூட்டியிருந்தது. வெளியே வாறதுக்கு ரெண்டு ஜன்னலு மட்டும்தான். அதனாலே ஈஸியா பிடிச்சுப்போட்டோம். பய உறங்கிட்டிருந்தான். இருட்டுலே ஆளை செரியா தெரியாததனாலே உள்ள இருந்த எல்லாவனையும் அடிச்சு ஜீப்பிலே ஏத்திக்கிட்டு வந்தோம்.”

“எத்தனை பேரு?”

”ஒம்பது பயக்க” என்றான் தாமஸ் ”ஒருத்தன் வளந்த ஆளு. ஆனா செரியான கஞ்சாப்பார்ட்டி. அடிச்சா சாவுத மாதிரி இருக்கான்.”

“ஆளு அவன்தானா?”

”அவனேதான். நான் கேட்டப்ப அவனே சம்மதிச்சான். அவன் தான் கொலகாரன்.”

“பயலுக்கு வயசு என்ன இருக்கும்டே?”

“பாத்தா ஒரு பத்துவயசு சொல்லல்லாம். இந்தமாதிரி பயலுகளுக்கு வயசு கூடுதலு இருக்கும். ஆனா எங்க போயி சர்ட்டிபிக்கெட்டு தேட?”

“செரி விசாரிச்சிட்டு இரு, நான் வாறேன். நாம ஆளைப்பிடிச்ச செய்தி இப்ப மேலே யாருக்கும் தெரியவேண்டாம்.”

“செரி… அண்ணிகிட்ட சொல்லுங்க.”

நான் மொபைலை வைத்ததும் ரெஜினா “என்ன கேஸு? அந்த சாராயக்காரனை கொன்ன கேஸா?” என்றாள்.

“ஆமா” என்றேன். “ஆனா ஞானப்பன் இப்ப சாராயக்காரரு இல்லை. அதெல்லாம் பழைய கதை. அவரு கடைசியிலே தொளிலதிபராக்கும். இருந்தாருன்னாக்க எம்.எல்.ஏ மந்திரின்னு ஆயிருப்பாரு. பாவம் நடுத்தெருவிலே கிடந்தாரு”

“ஆமா மேலே ஒருத்தரு உண்டுல்லா?. சாராயம் வித்த பய. அடிதடி கொலை கட்டப்பஞ்சாயத்து… அவன் செய்யாத பாவம் உண்டுமா? அதான் கர்த்தரு கூலி குடுத்திருக்காரு.”

“இஞ்சபாரு, கூலி குடுத்தது கர்த்தரு இல்லை. இவனைமாதிரியே இன்னொரு பெரிய கேடி. அவன் கஞ்சா கடத்துறவன்… பெருங்கொலைகாரன்.”

“சாத்தானை வைச்சுத்தான் கர்த்தர் பழிவாங்வாரு… நமக்கென்ன?”

“நமக்கென்னவா? ஏட்டி நானாக்கும் ஏரியா இன்ஸ்பெக்டர் .கொலைகாரனை புடிக்கவேண்டியவன். எஸ்பி, எம்எல்ஏ, பிசப்பு எல்லாரும் விளிச்சு நம்ம மேலே குதிரை ஏறுதான்.”

“புடிச்சாச்சு இல்ல?”

“ஆமா புடிச்சாச்சு. ஆள அப்பவே பாத்துட்டாங்க. பத்துவயசுப்பையன்…”

“ஆமா, சின்னப்பையன்னுட்டு தினத்தந்தியிலே வந்திச்சே”

“அவரு வாக்கிங் போற எடத்திலே பதுங்கி நின்னிருக்கான். அவரு எப்பமுமே ஜாக்ரதையான ஆளு. ஆனால் இவன் சின்னப்பையன் ஆனதனாலேயே கவனிக்காம விட்டுட்டாரு… சந்தையடி ரோட்டிலே காலம்பற செல்போன் பேசிக்கிட்டே நடந்து போயிருக்காரு. அவருக்க பாடிகார்டு எபநேசர் பின்னாலே வந்திட்டிருந்தான். இந்தப்பயலை பாத்து செல்போனிலே பேசிக்கிட்டே ஒதுங்கி கடந்துபோக பாத்திருக்காரு. சட்டுன்னு ஆன்னு கத்திக்கிட்டே பாய்ஞ்சு நீளமான ஸ்குரூ டிரைவராலே சரியா நெஞ்சிலே குத்திட்டான். ஹார்ட்டை துளைச்சு உள்ள போய்ட்டுது அது… எபநேசர் ஓடி வந்து பிடிக்கிறதுக்குள்ள பக்கவாட்டிலே தோட்டத்துக்குள்ளே பாய்ஞ்சு ஓடிப்போயிட்டான். அவன் வந்து தூக்குறதுக்குள்ள இவரும் போயிட்டார்.”

“இதோட எட்டாம் தடவ சொல்லியாச்சு.”

“இதக்கேளுடி… இது சாதாரண விசயம் இல்லை. மைனர் பையனுங்க கிரைம் பண்ணுறதுண்டு. ஆனா பத்துவயசுப்பையன் வாடகைக் கொலையாளின்னு இப்பதான் வருது… இது சாதாரண விசயம் இல்லை. பையனை புடிச்சாச்சு. ஆனா கேஸ் கோர்ட்டிலே நிக்கணுமே.”

“ஏன்?”

“பையனுக்கு ஏது மோட்டிவ்? கூலி வாங்கிட்டு கொலை பண்ணினான்னு சொன்னா கோர்ட்டு நம்புமா? சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினாலும் ஒரு ரெண்டு வருசம், அவ்ளவுதான்.”

“அதுக்காகவா சின்னப்பையனுகளை கொலகாரனா அனுப்புறாங்க?”

“அதுக்கும்தான். அதோட பெரிய ஆளை அனுப்பி ஞானப்பனை கொன்னிருக்க முடியுமா? அவரு அலெர்ட் ஆகியிருப்பாரு. எபநேசரு அலெர்ட் ஆகியிருப்பான். சின்னப் பையன்னு நினைச்சேனேன்னு சொல்லி எபநேசரு அப்டி அளுதான்.”

”அந்த ஞானைப்பன் எத்தனை சின்னப் பையனுகளுக்க வாழ்க்கையை அளிச்சாரோ.”

“நீ உடனே அப்டி போ… ஏட்டி இது தொளில் போட்டி. குரூஸ் மிக்கேல் ஆளுவச்சு செஞ்ச கொலை. ஆனா சாட்சி இல்லை. இந்தச் சின்னப் பையனை மிரட்டினா மிஞ்சிப்போனா அவனுக்கு பைசா குடுத்தவன் பேரைச் சொல்லுவான். அதுவும் கோர்டிலே நிக்காது.”

நான் எழுந்து கொண்டேன். தொப்பியை எடுத்தபோது ரெஜினா “இந்த சின்னப் பையனுக்கெல்லாம் அம்மை அப்பன்னு ஆரும் இல்லியா?” என்றாள்.

“இருந்தா தெருவிலே சுத்துவானுகளா? பெரும்பாலும் தெருவுபொம்புளைங்க பெத்த புள்ளைங்க. அந்தாலே வெரட்டி விட்டிருவாளுக. தெருநாய்க்குட்டி மாதிரி அதுகளா வளரும்… வளரவளர கிரிமினலாட்டு வெளையும்” என்றேன்.

“சின்னப்பய, அடிக்காதீங்க.”

“நான் என்ன அடிக்கப்போறேன்? அடியெல்லாம் அவனுகளுக்கு ஒரு விசயமே இல்லை.”

நான் ஸ்டேஷனுக்கு போனபோது மொத்த கான்ஸ்டபிள்களும் பரபரப்பான நிலையில் இருந்தார்கள். தாமஸ் சல்யூட் அடித்து “உள்ள இருத்தி வைச்சிருக்கேன் சார். ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டெவிலா இருக்கானுக.”

”அந்த கஞ்சாக்கேஸு என்ன ஆளு?”

“அவன்பேரு ஹரிதாஸ். ரெட்டியாரு பையன். பெரிய குடும்பம். அவன் அப்பன் பழைய பள்ளிக்கூட வாத்தியார். இவன் வீட்டைவிட்டு கெளம்பி எட்டு மாசமாவுதாம். அவனே எல்லாம் சொன்னான். அவன் அப்பனுக்கு ஃபோன் போட்டு சொல்லியிருக்கு.”

“வந்தா அனுப்பிருங்க. அது நமக்கு பொல்லாப்பு கேஸு. எங்க மத்த வெளைச்சல் பாட்டிகள்?”

எட்டு பையன்களும் பெஞ்சில் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். எவரிடமும் பயமோ தயக்கமோ இல்லை. முகங்களில் தழும்புகள். கைகால்களில் சொறி. கிழிந்த டிரௌசர் சட்டை. பரட்டைத்தலை. அந்த கண்களில் இருந்த வன்மம் என்னை கொஞ்சம் பதறச் செய்தது. தேர்ந்த குற்றவாளிகளிடம்கூட கொஞ்சம் பயம்தான் இருக்கும். சிலரிடம் சலிப்பும் சோர்வும் இருக்கும். இந்த வன்மம் எவரிடமும் இருக்காது.

“டேய் எந்திரிச்சு நின்னு அய்யாவுக்கு பேரைச் சொல்லுங்கடே” என்றார் தாமஸ்.

“அப்பமே பேரு சொன்னமே. எல்லாம் எளுதியாச்சுல்லா?” என்றான் ஒருவன்.

“செரிடே மக்கா, நான் கேக்கேன்ல. நீ இன்னொரு தடவை சொல்லு” என்றேன்.

“நீரு எனக்க அப்பனாவே? மக்கான்னு விளிச்சுதீரு?”

”லே, வாயை மூடுலே” என்றான் சாமிதாஸ்.

“என்னைய அடிச்சேன்னு வை, தாயளி என்னைக்கிருந்தாலும் உன் மண்டைய பொளக்காம விடமாட்டேன்” என்றான் அவன்.

“அடிக்கல்லை, சும்மா கேக்குதேன். விசாரிக்குறதுக்காக்கும். உன் பேரு என்ன?”

“ரசினிதாஸ்… அது நான் சொல்லுத பேரு.”

“வேற பேரு உண்டா?”

“எனக்க அம்மை ஒரு அறுதலி மிண்டை. அவ என்னை யாகப்பன்னு விளிப்பா.”

“யாகப்பன் என்கிற ரஜினிதாஸ். வயசு?”

“அது ஆருக்கு தெரியும். நீரு அளந்து பாத்துக்கிடும்”

“உயரத்தை அளந்தா வயசு தெரியுமா?” என்றேன்.

“அப்ப சுண்ணிய அளந்து பாரும்.”

”லேய்” என்று சாமிதாஸ் லத்தியை ஓங்கினான்.

“சாமி” என்றேன். அவன் பின்னால் சென்றான். இன்னொருவனிடம் “நீ சொல்லு, உன் பேரு என்ன?”என்றேன்

“மாணிக்கம்… ”

“அப்பன் பேரு தெரியுமா?”

“நீருதான்.”

எல்லா பையன்களும் சிரித்தனர். கறைபடிந்த பற்களுடன் சிரித்தாலும் சிரிப்பின்போது அவர்கள் அனைவரிடமும் குழந்தைத்தனம் வந்தது.

“நீரு எனக்க அம்மைய ஓத்துட்டு பைசா குடுக்காம ஓடினீருல்லா?”

மீண்டும் அத்தனைபேரும் சிரித்தனர். வேண்டுமென்றே சத்தமாக சிரிக்கிறார்கள் என்று தெரிந்தது.

நான் பெருமூச்சுவிட்டேன். இவர்களை விசாரிப்பதில் அர்த்தமே இல்லை.

”நம்ம கல்பிரிட் ஆராக்கும்?” என்றேன்.

“இவந்தான் சார்” என்று எட்டுபேரில் மிகச்சிறியவனை சுட்டிக்காட்டினான் தாமஸ்.

“இவனா?”

“ஆமா” என்றான் தாமஸ் “லே உன் பேரென்ன சொல்லுலே.”

“ஆரீஸ்” என்றான் பையன்.

“ஆரீஸ் நீயாலே கொலையை செஞ்சே?”

“அவன்தான் செஞ்சான். ஒற்ற குத்திலே சங்கிலே எறக்கிப்போட்டான்…” என்றான் மாணிக்கம். “ஆயிரம் ரூவா குடுத்தாங்க. நாங்க பரோட்டா தின்னு சினிமா பாத்தோம்.”

“மிச்சமுள்ளவனுகளை பேரு எளுதி, போட்டோ எடுத்து, கைரேகையும் கண்ணுரேகையும் பதிவு செய்துட்டு ஹோமிலே கொண்டு போயி விட்டிருங்க” என்றேன்.

“கிரைம் ரெக்காடு பண்ணணுமா சார்.”

“வேண்டாம், சந்தேகக் கேஸ்னு போட்டாப்போரும்.”

”ஏலே வாங்கலே.”

அவர்களின் பெயர்களையும் கைரேகைகளையும் சாமிதாஸ் பதிவுசெய்ய ஆரம்பித்தான். அவர்கள் ஏனோ துப்பிக்கொண்டே இருந்தார்கள். இவர்கள் அனைவருக்குமே இந்த பழக்கம் இருக்கிறது.

‘ஏலே, துப்பாதலே”

”ஆருவே துப்பினது?”

“சாமி அவனுகளை அனுப்பி வைடே”என்றேன்.

“நான் மறுக்கா வாறப்ப ஆளைப்போட்டுட்டுத்தான் வருவேன்” என்றான் மாணிக்கம். “அப்ப நீரு என்னைய பாத்து பயப்படுவீரு.”

கிளம்பும்போது ஒரு சிறுவன் “அப்பா, வாறேன்” என்று என்னிடம் சொன்னான்.

“பைசாகுடுக்காம ஓடின அப்பா வாறன், என்னடே?” என்றான் இன்னொருவன்.

அவர்கள் உரக்கச் சிரித்தபடி அடுத்த அறைக்கு சென்றனர்.

நான் பெருமூச்சுடன் என் பெல்ட்டை கொஞ்சம் இலகுவாக்கிக் கொண்டேன். அந்த சிறுவன் முன் அமர்ந்தேன்.

“ஆரீஸ், உனக்க பேரு ஆரீஸ்தானே?”

“ஆமா.”

“என்ன வயசு?”

“பத்துன்னு சொன்னாங்க.”

“ஆரு.”

”உங்க போலீஸுக்காரன்தான். காலை கவைச்சு நடக்கான்லா? அவனுக்கென்ன கொட்டை வீக்கமா?”

“சார்” என்றான் தாமஸ்.

“இருடே இரு… நானே கேக்கேன்” என்றேன். “செரி ஆரீஸ். நீதான் ஞானப்பனைக் கொன்னே இல்ல?”

“ஞானப்பனா மயிரப்பனான்னு எனக்கு தெரியாது… எனக்கு ஆளை காட்டிக்குடுத்தானுக. அவனை நான் கொன்னேன்.”

“ஞானப்பனை முன்னாலே உனக்கு தெரியுமா?”

“தெரியாது. எனக்கு ஆளைச் சூண்டி காட்டினானுக.”

“யாரு?”

“பைசா குடுத்தவனுக.”

“அவனுக பேரு என்ன, தெரியுமா?”

“பேரு தெரியாது… ஆயிரம் ரூவா குடுத்தானுக.”

“ஆளை பாத்தா காட்டித்தரமுடியுமா?”

“காட்டுதேன். எனக்கு என்ன பயமா?”

“செரி ஆரீஸ். நீ ஞானப்பனைக் கொன்னே இல்லியா?”

“அந்த நாயிக்க பேரு எனக்கு தெரியாதுன்னு சொன்னேனே.”

“இரு” என்றேன். புகைப்படத்தை காட்டி ”இந்த படத்திலே இருக்கிற ஆளைத்தானே கொன்னே?” என்றேன்.

“இவனைத்தான்.”

”ஆயிரம் ரூபாய்க்கு கொன்னே?”

“ஆமா.”

“இது பெரிய குற்றம் தெரியுமா? ஞானப்பன் பெரிய பணக்காரன்.”

“அவன் எவனா இருந்தா என்ன?” என்றான் “இம்பிடு பைசா வச்சிருக்கப்பட்டவன்னு தெரிஞ்சிருந்தா மேக்கொண்டு ஆயிரம் கேட்டிருக்கலாம். போவட்டு…”

“உன்னை தூக்கிலே போடுவாங்க.”

“போடமாட்டாங்க.”

“ஏன்?”

“என்னைய ஜெயிலிலே கூட போட மாட்டாங்க. நான் சின்னப்பையன். ஹோமுக்குத்தான் அனுப்புவானுக. அங்க போலீஸுக்காரனுக தொடைய தடவுவானுக… ராத்திரி கூட்டிட்டு போவானுக.”

”இதை ஆரு சொன்னது?”

“ரவி… அங்க போனான்லா ,அவன்.”

“உனக்கு அப்பன் உண்டா?”

“நீருதான் வே.”

“செரி, அப்பன்னே வச்சுக்க. நான் உனக்கு என்ன பண்ணணும்?”

“ஊம்பும்வே.”

“சார், இவனுக கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை.”

“இரு… ஆரீஸ், உனக்கு அம்மை உண்டா?”

“அந்த தேவ்டியா பஸ் ஸ்டாண்டிலே செத்து கிடந்தாள்லா?”

“செரி” என்றேன். தாமஸிடம் கண்களை காட்டினேன். அவன் வெளியே சென்றான். நான் மேலும் ஒருவகை அந்தரங்கத் தன்மையை உருவாக்கிக்கொள்ளும் பொருட்டு சற்று அணுகி அமர்ந்தேன். இந்த வழக்கில் ஏதேனும் ஒரு பிடி வேண்டும். இந்தப் பையனுக்கும் ஞானப்பனுக்கும் ஏதாவது தொடர்பை உருவாக்கவேண்டும். ஆனால் இவனை எதற்கும் பயிற்றுவிக்க முடியாது. உண்மையான ஏதாவது தொடர்பை கண்டுபிடித்தால் அதை வைத்து பின்னிக்கொள்ளலாம்.

எவராவது ஒரு மேஜர் ஆளை இதில் சம்பந்தப்படுத்தித்தான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் கேஸ் எந்தவகையிலும் நிற்காது. தந்தி பேப்பரில்கூட ஒழுங்காக செய்தி போடமாட்டான். இவனை புகைப்படத்தில் பார்ப்பவர்கள் பால்மணம் மாறாத பையன் என்றுதான் நினைப்பார்கள். இவனுக்கு பதினைந்து வயதாவது இருக்கும். தெருவில் வளர்ந்து சத்துக்குறைவான உணவால் நரங்கிப்போன உடல். முகமும் ஒடுங்கிய சின்னஞ்சிறுவனுக்குரியது. இவனைக் கண்டால் மனிதர்களின் அத்தனை மனிதாபிமானமும் பொங்கிப் பெருகும். போலீஸ் பொய்வழக்கு போடும் குற்றவாளிகளாக வசைபாடப்படுவார்கள்.

ஆனால் சிறுவன் கொலைசெய்ததை கண்ணால் பார்த்ததாக ஏற்கனவே எபநேசர் கோர்ட்டிலும் ஊடகத்திலும் சொல்லிவிட்டான். ஞானப்பனின் மனைவியே பத்திரிகைகளில் சிறுவனை வைத்து எதிரிகள் கொலைசெய்தார்கள் என்று சொல்லிவிட்டாள். ஆகவே இவனை முன்வைப்பது ஒன்றும் பிழையில்லை. மேலுமொரு பிடி வேண்டும். சின்னப்பிடி.

“நீ ஞானப்பனை எப்ப முதல்ல பாத்தே?”

“வெள்ளிக்கிழமை.”

கொலைநடந்தது வியாழக்கிழமை. நான் ஒருமுறை ஃபைலை பார்த்துவிட்டு “நல்லா யோசிச்சுச் சொல்லணும். வெள்ளிக்கிழமையா வியாழக்கிழமையா?” என்றேன்

“வெள்ளிக்கிழமை. அதுக்கு அடுத்த வியாழக்கிழமைதான் அந்தாளை போட்டுத்தள்ளினேன்.”

”ஓகோ” என்றேன். “எங்க வச்சு பாத்தே?”

“சர்ச்சு ரோட்டிலே… அவன் சர்ச்சுக்கு போய்ட்டிருந்தான்.”

“ஓ” என்றேன். ஒருவாரம் வேவு பார்த்திருக்கிறார்கள் என்பது புதிய தகவல்.“வேவு பாத்தீங்களோ?”

“என்னது?”

“எப்டி கொல்லுகதுன்னு தடம் பாத்திகளோ”

“இல்ல. என்னைய பணம் குடுத்த தாடிக்காரன் கூட்டிட்டு வந்து ஒரு வீட்டுக்க மாடியிலே உக்கார வைச்சான். அப்ப இந்தாளு காரிலே வந்து எறங்கி சர்ச்சுக்கு நடந்து போனான். நல்லா பாத்துக்க இந்தாளுதான்ன்னு சொன்னான். நான் மனசுக்குள்ள ஆளை குறிச்சுக்கிட்டேன்.”

“அதுக்குப்பிறகு சந்தையடி ரோட்டிலே வேவு பாத்தீங்க”

“இல்ல. சந்தையடியிலே இவன் நடக்கப்போவான்னு சொன்னானுக. நான் சந்தையடி ரோட்டுக்கு தனியாத்தான் போனேன்.”

“எப்ப?”

“மறுநாள்… சனிக்கிளமை”

“அப்ப என்ன பண்ணினே?”

“பாத்துட்டிருந்தேன்.”

“அவனை எப்டி கொல்லுறது, அவனுக்கு காவலா யாரு வாறாங்க, அவங்க கையிலே என்ன ஆயுதமிருக்கு எல்லாம் நோட்டம் விட்டே?”

“இல்ல. நான் என்னத்துக்கு அதெல்லாம் பாக்கணும். சாடி நெஞ்சிலே ஒரு குத்து… நான் ஒருக்கா மேய்ஞ்சுக்கிட்டிருந்த ஒரு எருமைக்குட்டியை ஒற்றைக் குத்திலே சாய்ச்சுப்போட்டேன். சங்கிலே ஸ்க்ரூடிரைவராலே சரியா ஒரு குத்து… சங்கு எங்க இருக்கும்னு எனக்கு தெரியும்.”

“எதுக்கு எருமைக்குட்டியை குத்தினே?”

அவன் கண்கள் இடுங்க புன்னகை செய்தான். “சும்மா”. அப்போது மீண்டும் குழந்தைபோல ஆனான்.

“வேற எதை குத்தியிருக்கே?”

“சும்மா லாரியிலே அரிசியோ சீனியோ கொண்டுபோறதைப் பாத்தா ஓடிப்போயி ஒற்றைக் குத்து குத்திருவேன். ஒளுகிட்டே போகும். லே, ரெத்தம் ஒளுகுதுலே ரெத்தம்லேன்னு சொல்லி சிரிப்போம்”

“ஓகோ…”

“ஒருக்கா எசக்கியேலு சொன்னான், ஏலே பண்ணிய குத்துவியான்னு. நான் பதுங்கி போயி பண்ணியை குத்தினேன். ஆனா பண்ணிய குத்த முடியாது. அதுக்க தோலு வேற மாதிரி. அது குத்துபட்டு ஓடிப்போச்சு. நான் சாக்கடையிலே விளுந்துபோட்டேன்”

“செரி, நீ செரியா குத்துத ஆளு. ஆனா அவனுகளுக்கு காவலுக்கு ஆளிருந்தா வேலை சரியா நடக்காதுல்ல? அதனாலே நீ நோட்டம் பாத்தே, இல்லியா?”

“இல்ல. காவலுக்கு எவன் வந்தா எனக்கென்ன? வளந்த தடிமாடனுங்க ஒருத்தனும் என்னைய பிடிச்சுக்கிட முடியாது. ஒற்றைக் குத்து, அந்தாலே ஓடிருவேன்.”

“அவன் துப்பாக்கி வச்சிருந்தா?”

“அது எனக்க மேலே படாது. நான் ஓடிருவேன்.”

”செரி, அப்ப எதுக்கு ஞானப்பனை சனிக்கிழமை கொல்லல?”

“நான் அவனுக்க முன்னாலேதான் நடந்துவந்தேன். அவன் மூஞ்சியப் பாத்தேன். பேசிக்கிட்டே போனான். அவனை எனக்கு பிடிக்கல்ல. ஆனா கொல்லுத மாதிரி பிடிக்காம ஆவல்ல… அந்தமாதிரி அவனை எனக்கு பிடிக்காம ஆனாத்தான் கொல்ல முடியும். அப்பதான் நல்லா ஓங்கி ஒற்றை குத்து…”

”சரிதான்” என்றேன். “அப்ப, நீ அவரை பாத்துட்டே இருந்தே. அவரு நீ வெறுக்கிற மாதிரி எதையாவது செய்யணும்னு நினைச்சே?”

“வெறுக்குததுண்ணா?”

”அதாவது உனக்கு பிடிக்கவே பிடிக்காத மாதிரி… பாத்ததுமே கொல்லணும்னு தோணுத மாதிரி.”

“ஆமா.”

“அவரு எப்டி இருந்தாரு?”

“வெள்ளை வேட்டி கெட்டி, வெள்ளை சட்டைபோட்டு, ஷூ போட்டுட்டு செல்போனிலே பேசிக்கிட்டே நடந்தாரு.”

“கெட்டவன் மாதிரி இருந்தாரா?”

“தெரியல்ல…”

“சனிக்கிழமையும் எபநேசரு மட்டும்தான் கூடவே இருந்திருக்கான், இல்லியா?”

“ஆமா”

“சனிக்கிழமை நீ அவரை பாத்தே. அவரு உனக்கு ரொம்ப கோவம் வாற மாதிரி ஒண்ணுமே செய்யல்ல. சரியா?”

”ஆமா.”

“என்ன செய்தாரு?”

“போனிலே ஆரையோ திட்டிக்கிட்டு போனாரு. வண்டைவண்டையா கெட்ட வார்த்தை.”

“பொறவு?”

”மறுக்காவும் போனேன்… ஞாயித்துக்கிளமை அவரு சந்தையடி ரோட்டிலே நடக்க வரல்லை. அதனாலே சர்ச்சுக்கு போனேன். அவரு சர்ச்சிலே மாஸ் முடிஞ்சபிறவு தனியா வந்தாரு. உள்ள போயி ஜெபம் செய்துபோட்டு திரும்பி போனாரு.”

“காரிலேயா வந்தாரு?”

“இல்ல நடந்துதான் வந்தாரு.”

“அப்பவும் அவரு உனக்கு பிடிக்காதமாதிரி ஒண்ணும் செய்யல்ல.”

“அந்த தாயளியை எனக்கு பிடிக்கல்ல.”

“அப்ப?”

“ஆனா கோவம் வரேல்ல, அம்பிடுதான்.”

“செரி. திங்கக்கிழமை போனியா?”

“ஆமா, திங்கக்கிழமை காலம்பற சந்தையடி ரோட்டிலே பாத்தேன்”

“அப்பவும் கோவம் வாற மாதிரி ஒண்ணும் நடக்கல்ல?”

“ஆமா…”

“பிறவு?”

”செவ்வாக்கிளமை அவரு வரேல்ல. நான் உச்சைநேரம் வரை காத்திருந்துட்டு திரும்பி வந்தேன். டயர் கெட்டிடத்திலே உறங்கிட்டிருக்கிறப்ப பைசா குடுத்தவன் என்னைய தேடி வந்து ஏண்டே கொல்லல்ல, பயப்படுதியான்னு கேட்டான். பயம் உனக்க அப்பனுக்கு, போவும்வே, உம்மை குத்திச் சாய்ச்சுப்போடுவேன்னு சொன்னேன். பின்ன எதுக்கு கொல்லல்லன்னு கேட்டான். எனக்கு அவனை கொல்லதுக்குண்டான வெறி வரேல்லன்னு சொன்னேன்.”

“அவன் என்ன சொன்னான்?”

“அந்தாளு கெட்டவன், பல சின்னப்பிள்ளைகளை கொன்னிருக்கான்னு சொன்னான். சின்னப்பிள்ளைகளை புடிச்சு வயத்த கிளிச்சு கிட்டுணியை எடுத்து வித்திருக்கான். கண்ணையெல்லாம் நோண்டி வித்திருக்கான். சின்னப்பையனுங்களை கெட்டிப்போட்டு தோலை உரிச்சு வித்திருக்கான். அதையெல்லாம் சொன்னான். மறுக்கா ஐநூறு ரூவா தாறேன்னு சொன்னான்.”

“செரி, நீ என்ன பண்ணினே?”

”புதன்கெளமையும் சந்தையடிக்கு போனேன். அவன் வந்தான்.”

“அப்ப கோவம் வரேல்லியா?”

“இல்ல. நான் பாத்துட்டே இருந்தேன்…”

“அவன் என்ன செய்தான்?”

“போனிலே பேசிக்கிட்டே இருந்தான்… அப்டியே என்னைய தாண்டிப்போனான்”

“நீ கொல்லணும்னு நினைக்கல்ல?”

“வெறி வரேல்ல.”

”அடுத்தநாள் வியாழக்கிழமை… அன்னைக்குதான் கொன்னே.”

“ஆமா”

“அப்ப எப்டி வெறி வந்தது?”

“தெரியல்ல. நான் அவனுக்கு எதுக்காலே வந்தேன். அவன் போனிலே பேசிக்கிட்டே வந்தான். அவன் பக்கத்திலே வந்தப்ப சட்டுண்ணு எனக்கு ஒர்ரே வெறி வந்துது. டீசலிலே தீ பற்றி எரியும்லா, அந்தமாதிரி. பாய்ஞ்சு குத்திச் சாய்ச்சுப்போட்டேன். அந்தாலே ஓடிட்டேன்.”

நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவன் எழுந்து “ஒண்ணுக்கு வருது” என்றான்.

“தாமஸ்” என்றேன்.

தாமஸ் வந்தான்.

“இவனை பாத்ரூம் கூட்டிட்டுப் போ” என்றேன் “பாத்து…. இதெல்லாம் முன்னபின்ன யோசிக்காத கூட்டம். வெலங்க அவுக்கவே அவுக்காதே”

”சரி சார்.”

அவன் கையில் விலங்கிட்டு தாமஸ் கூட்டிப்போனான். நான் என் இருக்கைக்கு வந்து ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன்.

இந்த வழக்கில் ஒரு ’அடல்ட்’ வேண்டும். யாராவது சின்னக்குற்றவாளியை சிக்கவைத்து கேஸ் சமைத்துவிடலாம். ஆனால் அவனுக்கும் ஞானப்பனுக்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்க முடியாது. அது கோர்ட்டில் நிற்காது.

ஒரு நல்ல கான்ஸ்பிரஸி வேண்டும். அது இல்லாமல் இதை மேலே கொண்டுபோகவே முடியாது.

“சர், எபநேசர் வந்திருக்கான்” என்று ராமதாஸ் சொன்னான்.

“வரச்சொல்லு.”

எபநேசர் வந்தான். வணக்கம் சொல்லிவிட்டு பவ்யமாக நின்றான். வழக்கமான அடியாள். கருங்காலிக்கட்டை போல உடல். எப்போதோ அடிபட்டு உடைந்த மூக்கு சப்பையாக தெரிந்த மொண்ணை முகம். மங்கலான சிறிய கண்கள் நேருக்குநேர் பார்ப்பதில்லை. அறிவு குறைவானவன், அதனாலேயே விசுவாசமானவன். பதினெட்டு ஆண்டுகளாக ஞானையா கூடவே இருப்பவன். பல அடிதடிகள் ,கொலைகள் அவன் கணக்கில் இருந்தாலும் ஞானையா அவனை ஒருநாள்கூட ஜெயிலில் இருக்க விட்டதில்லை.

நான் தாமஸை அழைத்தேன். “இந்தாளாலே அடையாளம் காட்ட முடியுதா பாரு” என்றேன்.

“வாரும்வே” என்றான் தாமஸ்.

அவர்கள் உள்ளே சென்றார்கள். நான் எபநேசரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன்தான் கொலையின் முக்கியமான சாட்சி. கண்ணால் கண்ட சாட்சி. கொன்றவன் சின்னப்பையன் என்று திரும்பத்திரும்ப எல்லா இடங்களிலும் சொன்னவன். அவன் அப்படி மாறாமல் சொல்லுவான் என்று தெரிந்தே அவர்கள் ஞானையாவை கொல்ல அவன் அவர் கூடவே இருக்கும் வேளையை தேர்வுசெய்திருக்கிறார்கள். கேஸில் ஒரு அடல்ட் கொலையாளியை உள்ளே கொண்டுவர முடியாமலிருக்கும் முக்கியமான தடையே எபநேசர்தான்.

தாமஸ் வெளியே வந்தான். என்னை பார்த்து தலையை அசைத்தான்

எபநேசர் பின்னால் வந்தான்.

“என்னவே, அவனா?” என்றேன்.

“ஆமா சார். எட்டுபேரிலே அவனை பாத்ததுமே சொல்லிட்டேன். சார், இந்தபய ரெண்டுமூணு தடவை அந்த ரோட்டிலே லாந்துறதை பாத்திருக்கேன். அதனாலேதான் அன்னைக்கு கொஞ்சம் அசால்டா இருந்துபோட்டேன்.”

”செரி உக்காரு” என்றேன்.

“இருக்கட்டும் சார்.”

“உக்காருடே.”

அவன் முக்காலியில் அமர்ந்தான்.

“ஞானப்பன் எப்பமும் ஃபோனிலே பேசிக்கிட்டேதான் நடக்கப் போவாரு இல்லியா?”

“ஆமா சார்.”

“என்ன பேசுவாரு?”

“சில விசயங்களை வீட்டுக்குள்ளே பேசமுடியாது இல்லியா? அண்ணிக்கு இப்பல்லாம் ஒண்ணும் பிடிக்கிறதில்லை. பிள்ளைக வளந்துபோச்சு. மூத்தவ டாக்கிட்டராக்கும். இப்ப ரெண்டாம் பிரசவத்துக்கு வீட்டுக்கு வந்திருக்கா… அதனாலே வீட்டிலே பலதும் பேசுறதில்லை.”

”பலதும்னா?”

“இந்தமாதிரி உள்ள விசயங்கள்…”

“நீ பேசுறதை கேக்குறதுண்டா?”

“ஆமா, செவியிலே விளுமே.”

“கொலை நடக்கிறதுக்கு முன்னாலே அந்த வெள்ளிக்கிழமை என்ன பேசினார்னு தெரியுமா?” என் கையில் ஞானப்பனின் செல்பேசி உரையாடலின் எண் பதிவுகள் இருந்தன.

“அதெப்பிடி சார்?”

“நம்பர் சொல்லுதேன்”

நான் எண்ணைச் சொன்னதும் எபநேசர் “அது மத்தவன்சார்… பெருமாள்புரம் மணி. அவனுக்க கையிலே ஒரு நல்ல தொகை நிக்குது. பளைய சரக்கு குடுத்த கணக்கு. கேட்டா அல்லுசல்லு சொல்லுதான். அவனை எக்குதப்பா பேசிட்டு இருந்தாரு… வெட்டி வகுந்திருவேன்னு சொன்னாரு. போனை நிப்பாட்டிக்கிட்டு எங்கிட்ட அவனுக்கு ஒருமாசம் டைமு குடு. இல்லேன்னா ஆனதை செஞ்சிரவேண்டியதுதான்னு சொன்னாரு”

“செரி, இந்த நம்பர்? இதிலேதான் சனிக்கிழமை பேசியிருக்காரு”

அவன் நம்பரை ஒருமுறை நினைவுகூர்ந்து “இது நம்ம ஆளுசார். அப்பப்ப சின்ன வேலைகள் நமக்காகச் செய்வான். கொலை வரை போகமாட்டான். சும்மா அடிக்கிறது, சீவுறது இந்தமாதிரி…”

“அவன் கிட்ட என்ன பேசினாரு?”

“ஒரு வேலை சொன்னாரு. சாமித்தோப்பு பக்கம் ஒருத்தன்… அலம்பு பார்ட்டி. அவனை கொஞ்சம் பயமுறுத்தி வைக்கணும்டேன்னு சொன்னாரு.”

“இது திங்கள்கிழமை பேசினது.”

அவன் அந்த எண்ணை தன் செல்பேசியில் டயல்செய்து அதன் ஆளைப்பார்த்துவிட்டு “இது கோரோயில் பாலு… இவனும் ஒரு வில்லங்கப் பார்டியாக்கும். ஒரு கெட்டிட விசயமா கொஞ்சநாளாகவே அடியும்பிடியும் போயிட்டிருக்கு. இவனையும் விசயம் முடியல்லேன்னா இந்த ஆண்டே போட்டுத்தள்ளணும்னு சொல்லுவாரு. அன்னைக்கு நல்ல வாய்ச்சண்டைதான்…”

நான் ”புதன்கிழமை அதே நம்பர்” என்றேன்.

”ஆமா, அவன் அடங்கமாட்டேன்னு நின்னான். அவன் மத்தபார்ட்டிகளை தேடிப்போயிருவானோன்னு பயந்தாரு. வவுந்திருவேன்லேன்னு சொல்லி மெரட்டினாரு.”

“செரி, இது அவரு சாவுறப்ப அந்த நேரத்திலே பேசிட்டிருந்த நம்பர்.”

அவன் அந்த எண்ணை பார்த்தான். “இது தெரியல்லியே” என்றான். அந்த எண்ணை டயல்செய்து பார்த்தான். “நம்ம கணக்கிலே இந்த நம்பர் இல்ல பாத்துக்கிடுங்க”

நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குள் முடிவுசெய்துவிட்டிருந்தேன். இவன் சாட்சி அல்ல, இவன்தான் முதன்மைக் குற்றவாளி. ஞானப்பனைக் கொன்றது இவன் என்றுதான் வழக்கை ஜோடிக்கவேண்டும். சிறுவன் குத்திவிட்டு ஓடினான். ஆனால் அது ஆழமான காயம் அல்ல. ஏனென்றால் அவன் சிறுவன். அந்த ஸ்க்ரூ டிரைவரை எடுத்து மறுபடியும் ஆழமாக குத்தியவன் எபநேசர்தான். எபநேசருக்கு ஞானப்பனிடம் பணம் கொடுக்கல்வாங்கல் இருந்தது. அதனால் பகை இருந்தது. அதுதான் கதை. இன்னொருவரை உள்ளே கொண்டுவராமலேயே கேஸை முடித்துவிடலாம்.

நான் புன்னகைச் செய்தேன். ”தாமஸ்” என்றேன்.

“சர்”

“எபநேசர் கிட்ட ஸ்டேட்மெண்டு வாங்கிக்க. ஆதார், பேங்க் நம்பர், மற்ற டீடெயில் எல்லாம் வேணும்…” இடைவெளிவிட்டு “கைரேகைகளும் கொஞ்சம் வேணும்” என்றேன்.

தாமஸ் புரிந்துகொண்டான். புன்னகைத்து “சரி சார் ” என்றான்.

“வாறேன் சார்” என்று எபநேசர் எழுந்துகொண்டான்

“அந்த நம்பர் எங்களுக்கு தெரியும்” என்று நான் சொன்னேன். “அது அவருக்க மகளுக்க நம்பர். பிரசவத்துக்கு வந்திருக்காள்லா, அவ”

“ஆமா சார்… அவரு அவகிட்டதான் பேசிட்டு வந்தார். அவருக்க பேரனுக்க கிட்ட போனை குடுக்கச்சொல்லி அவனை போனிலே கொஞ்சிக்கிடே வந்தாரு… பேரனைக் கொஞ்சுறப்ப தன்னை மறந்திருவாரு. பச்சைப்புள்ளை மாதிரித்தான் இவரும் பேசுவாரு. அப்டி சத்தமா கொஞ்சிட்டு வந்தாரு… செரியா அப்பதான் இந்த நாயி பாய்ஞ்சு குத்திப்போட்டுது…”

“செரி போவும்” என்றேன். பெருமூச்சுடன் கால்களை நீட்டிக்கொண்டேன்.

எபநேசர் வணக்கம் போட்டுவிட்டுச் சென்றான். தாமஸ் என்னிடம் “எளுதிக்கிடலாமா சார்?” என்றான்

“வேறவளி? அந்தாள் போயிட்டான். இவன் இப்டியே வெளியே இருந்து என்ன செய்யப்போறான்?” என்றேன்.

***

 

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைநாகர்கோயிலில் ஓர் உரை
அடுத்த கட்டுரைநீர்ச்சுடர் – அவல நகைச்சுவை