யட்சன் [சிறுகதை]

கந்தர்வன் [சிறுகதை]

[ 1 ]

பொட்டல்காட்டில் கட்டப்பட்ட குடிசையில் முருகப்பன் தங்கியிருந்தான். பெரும்பாலான இரவுகளில் அவன் அங்கேதான் தங்குவது வழக்கம். தொலைவிலிருந்து பார்த்தால் இரண்டுபேர் தங்கும்படியான பனையோலைக் குடிசைதான் தெரியும். ஆனால் உள்ளே இருபதடி ஆழத்தில், நாற்பதடிக்கு நாற்பதடி சதுரமாக, பெரிய குழிவெட்டப்பட்டிருந்தது. அது ஒரு நிலவறை

நல்ல உறுதியான சொறிப்பாறையின் விளிம்புகள் சீராக வெட்டப்பட்டு செங்கல்சுவர் போல இருந்தன. அதன்மேல் பனந்தடிகளை நெருக்கமாக அடுக்கி, மேலே புல்பாய் போட்டு மண்பரப்பி, சருகுப்பத்தைகள் விரித்து அந்த பள்ளத்தை மூடி நிலவறையாக ஆக்கியிருந்தார்கள். அந்த சருகுப்பரப்பின் மேல்தான் அந்த சின்ன குடிசை அமைந்திருந்தது. குடிசைக்குள் நுழைந்து மரத்தாலான ஏணி வழியாக நிலவறைக்குள் இறங்கலாம். ஏணியை தூக்கி உள்ளே வைத்து பலகைகளை அடுக்கி அதன்மேல் புல்பாயை விரித்தால் கீழே நிலவறை இருப்பது தெரியாது. அதன்மேல் ஒரு கயிற்றுக்கட்டில்போட்டு அவன் படுத்துக்கொள்வான். துணைக்கு சங்குத்தேவன் வெளியே கையில் வேல்கம்புடன் எந்நேரமும் குந்தி அமர்ந்திருப்பான். அவன் தூங்குவதும் குந்தி அமர்ந்துதான்

தொலைவில் ஆரல்வாய்மொழி வண்டிச்சாலை போயிற்று. பழையசாலையை மங்கம்மாள் பெரியதாக வெட்டி சத்திரங்கள் வைத்து மரம்நட்டு விருத்தி செய்திருந்தாள். சாலையில் இருந்து ஒரு மண்சாலை பிரிந்து சென்று, நீரில்லாத கண்மாய்க்குள் இறங்கும். முருகப்பனுக்கு சரக்கு வரும் வண்டிகள் நாலைந்து சேர்ந்து ஒரு கூட்டமாகவே வரும். அவை பணகுடி கடந்ததும் எண்ணைவிளக்குகளை அணைத்துவிடும். காளைகளின் கழுத்துமணிகளும் அவிழ்க்கப்படும். இருட்டுக்குள் சகட ஓசை மட்டும் கேட்கும். கண்மாய்ச்சாலை விலக்கில் ஆள் நின்றிருக்கும். அவன் ஓசையால் அடையாளம் காட்டியதும் வண்டிகள் ஒதுங்கி பிரிந்து கண்மாய்க்குள் இறங்கி நின்றுவிடும். அங்கிருந்து அரிசிமூட்டைகளை தோள்சுமையாக கொண்டுவந்து நிலவறைக்குள் அடுக்கிவிடுவார்கள். சரசரவென்று ஒருநாழிகைக்குள் நிலவறைக்குள் மூட்டைகளை அடுக்கிவிட்டு வண்டிகளை திருப்பிக் கொண்டுசெல்வார்கள்.

வண்டிகள் அப்படியே திரும்பி ஆரல்வாய்மொழி சுரத்தைக் கடந்து வந்த பாவனையில் காலையில் பணகுடிக்கு வெளியே பொட்டலில் கட்டிப்போடப்பட்டிருக்கும். அங்கிருந்து உதிரிச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதிய வாக்கில் கிளம்பி திருநெல்வேலிக்கும் களக்காடுக்கும் செல்லும். பெரும்பாலும் வாழைக்குலைகள், தேங்காய்கள், வெற்றிலைச்சிப்பங்கள், கருப்பட்டிப் பொதிகள். அவை முந்தையநாள் இரவு அரிசிச்சரக்கு கொண்டுவந்தவை என்பது பல ஆண்டுகளாகவே பணகுடி மக்களுக்கு தெரியாது. ஏனென்றால் ஆரல்வாய்மொழிப் பாதையில் தினம் முந்நூறு மாட்டுவண்டிகள் மலையாளநாட்டுக்குச் சென்று திரும்பி பாண்டிநாட்டுக்கு வந்தன. கேரளவர்ம வலிய தம்புரான் காலம்முதலே அந்தச் சாலை புகழ்பெற்றதுதான். ஆரல்வாய்மொழியில் இருபக்கமும் சுங்கம் வசூலிப்பார்கள். அந்தப்பக்கம் வேணாட்டுச் சுங்கம். இந்தப்பக்கம் மதுரைநாட்டுச் சுங்கம். ஆரல்வாய்மொழி கடந்தால் அந்தப்பக்கம் தோவாளை தாண்டி கோட்டாறு சந்தை. கோட்டாறு கம்போளம் அரிசிக்குப் புகழ்பெற்றது. திருவனந்தபுரம் வரைச் செல்லும் மொத்த தானியமும் அந்த ஒரே சந்தையில்தான் விற்பனையாயிற்று.

நிலவறையில் இறக்கப்பட்ட சரக்குகளை இரவோடு இரவாக தலைச்சுமையாக எடுத்துக்கொண்டு, மலையேறி மறுபக்கம் கொண்டுசென்று இறக்க சுமையாட்கள் இருந்தனர். எல்லாம் அந்தப்பக்கம் ஒசரவிளை, பறக்கை பகுதி ஆட்கள். அதில் எல்லா சாதிகளும் உண்டு. அவர்களுக்கு கூலி என்று கிடையாது. ஒருமூட்டை அரிசி விலை இவ்வளவு என்று சொல்லி விற்பதுதான் கணக்கு. அதன்பின் மூட்டைகளைத் தலையில் சுமந்து ,இரு சுங்கங்களையும் ஏமாற்றி, அந்தப்பக்கம் இறக்கி அங்கிருந்து வண்டிகளில் கோட்டாறு கம்போளத்திற்கு கொண்டுபோனால் அரைப்பங்கு விலை கூடுதல் கிடைக்கும். பதினைந்துநாள் வயலில் மண்சுமந்தால் கிடைக்கும் கூலியைவிட அதிகம்.

ஆனால் எல்லாரும் செய்துவிடமுடியாது. மலையில் வழி தெரிந்திருக்கவேண்டும். கண்குத்தும் இருட்டில் மூட்டையுடன் ஓசையே இல்லாமல் செல்லவேண்டும். வழியில் செந்நாய்க்கூட்டம் உண்டு, யானைக்கூட்டமும் நிற்பதுண்டு. அதைவிட வழிகள் என்பவை மலைப்பிளவுகள். ஓர் இடத்தில் ஒரு காலடி வழி தவறினால் அதன்பின் சுற்றிச்சுற்றி அங்கேயே கிடக்கவேண்டியதுதான். ஆரல்வாய்மொழி மலைப்பகுதி பெரும்பாலும் மொட்டைக்குன்று. ஊற்று இருக்குமிடமே மலையில் வழிதேர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். செங்குத்தான பாறைமுனம்புகளும் ஏராளம். விழுந்துசெத்தவர்களின் எலும்புகள் கீழே குவிந்து கிடக்கும்.

முருகப்பன் இப்படி அரிசிவியாபாரம் செய்வது அவன் மனைவி வள்ளியம்மைக்குத் தெரியாது. எப்போதுமே பணகுடி அரிசிச்செட்டிகளில் சிலர் செய்துவந்த இரண்டாம் வியாபாரம்தான் இது. அவன் ஆரம்பித்து எட்டாண்டுகள் ஆகின்றன. ஆனால் இப்போது நாயக்கர் நாட்டு வரி நான்குமடங்காக ஏறியபின்னால் பாதிபேர் அதைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். பணகுடிப்பொட்டலில் ஐம்பது நிலவறைகளுக்குமேல் இருந்தன. நிலவறை பெருகப்பெருக ஆபத்துதான்.

முருகப்பன் சூதானமாக தொழில்செய்துவந்தான். சரக்கு கொண்டுவருவதும் சரி, மூட்டை கொண்டுபோவதும் சரி, நாலைந்து ஆண்டுகளாக அவனுக்குத் தெரிந்தவர்களாகவே இருக்கவேண்டும். தெரியாதவர்கள் எவரானாலும் அவன் அப்படியே அசமஞ்சமான ஒரு முகம்தான் காட்டுவான். ஊர் கண்ணுக்கு அவன் மாசத்துக்கு ஒரு வண்டி அரிசியை கோட்டாறுக்கு கொண்டுபோய் விற்றுவருவான். அதைப்பற்றி ஒருமாதம் புலம்புவான். எப்போதுமே தரித்திரத்தை நடித்துவந்தான். அழுக்கு வேட்டி அழுக்கு மேல்துண்டு. மூக்குத்தூள் நாறும் மீசை. சலிப்படைந்த பேச்சு. தலைக்கு எண்ணைக்காக எண்ணைச்செட்டி ஆண்டியப்பனிடம் போய் கைநீட்டுவான். அங்கே பேச்சுகேட்டு இளித்து வாங்கி தலையில் பொத்திக்கொண்டு குளிக்கப்போவான்.

அவன் சேர்த்து வைத்த பணம் முழுக்க ஊருக்குள் இருந்த அவனுடைய பழைய கடையில் இருந்தது. அங்கே அவன் அரிசி சில்லறை வியாபாரம் செய்துவந்தான். இரண்டு மூட்டை அரிசிதான் திறந்து வைத்திருப்பான். நயம் அரிசி கையில் காசு ஓட்டம் உள்ளவர்களுக்கு. மோட்டா அரிசி ஏழைபாழைகளுக்கு. அங்கே காலையில் கடை திறந்து நான்கு நாழிகைக்குள் மூடிவிடுவான், அதுவும் ஒரு கண்துடைப்புதான். அங்கே அரிசியில் பாதி கடனாகத்தான் போகும். கடைக்குள் சுவரில் ஓட்டைபோட்டு பொந்தில் பொன்னாக மாற்றி பணத்தை வைத்திருந்தான்.

யாருமே இல்லாதபோது கடையை உள்ளிருந்து பூட்டிவிட்டு அவன் பொந்தை திறந்து பொன்நாணயங்களை எடுத்து எண்ணிப்பார்ப்பான். பொன்னை தவிர எதையும் அவன் நம்பவில்லை. முன்பெல்லாம் மதுரையின் நாயக்கர் வராகன்கள். அதன்பிறகு இப்போது கொஞ்சநாளாக தூத்துக்குடி பறங்கிப்பொன் நாணயங்களையும் சேர்த்து வைத்திருந்தான். அவற்றை எண்ணி எண்ணி வருடி மகிழ்ந்தபின் திரும்ப வைத்துவிடுவான். அவை கூடிக்கொண்டே இருந்தன. முட்டையிட்டு பொரித்து பெருகுபவைபோல.

முருகப்பன் காலையில் நிலவறைக்குமேல் குடிலில் தூங்கி எழுந்து கோவேறுகழுதையில் ஏறி பணகுடிக்கு சென்றான். வீட்டுக்குச் சென்று துண்டை எடுத்துக்கொண்டு ஆண்டியப்பனின் எண்ணைச் செக்குக்குச் சென்றான். செக்கு ஓய்ந்திருக்க ஆண்டியப்பனின் வீடும் பூட்டியிருந்தது. எண்ணை இல்லாமலேயே குளத்துக்குச் சென்று குளித்துவந்தான். ஊரே பரபரப்பாக இருந்தது. திருக்கணங்குடிக்கு பெரியநாயக்கர் விஜயரங்க சொக்கநாதர் வருகிறார் என்று அவன் நினைவுகூர்ந்தான். காராய்மைக்காரர்களும் கரைவேளாளர்களும் கிளம்பிச் சென்றிருக்கிறார்கள். தெருவில் கொஞ்சநாட்களாகவே அனைவரும் அதையே பேசிக்கொண்டிருந்தார்கள். அவனுக்கு அதில் பெரிய ஆர்வம் எழவில்லை

வள்ளியம்மை புட்டு அவித்திருந்தாள். தொட்டுக்கொள்ள காராமணிப்பயறு சுண்டலும் கதலிவாழைப்பழமும் இருந்தன. முருகப்பன் சாப்பிட அமர்ந்தபோது அவள் முகத்தை பார்த்தான். அவள் வழக்கம்போல பொம்மைபோல முகத்தை வைத்திருந்தாள். சின்ன செம்பு போல சிறிய முகம். சிறிய மூக்கு, சிறிய உதடுகள், மென்மையான மயிர் படந்த கன்னம். சிறுமி போல இருந்தாள். அவள் இமைப்பீலிகளும் பெரியவை. அவை அவளை குழந்தைபோலவே காட்டின.

முந்தையநாள் மாலை அவன் கிளம்பும்போது அவளுக்கு ஓர் அடி வைத்திருந்தான். அந்த ‘கெறுவு’ இருக்கும் என எதிர்பார்த்தான். முகத்தில் ஒன்றும் தெரியவில்லை. அவளை கூர்ந்து பார்த்தபடி, “பப்படம் காய்ச்சல்லியா?”என்று அவன் கேட்டான்.

“எண்ணை குறைவா இருக்கு… எண்ணைச்செட்டிக்கு ஆறுபணம் நிக்குது”என்றாள் வள்ளியம்மை

“பணம் எங்கபோகுது? குடுக்க மாட்டமா? நீ கேக்க மாதிரி கேட்டுப்பாக்கணும்” என்றான் முருகப்பன்

“நான் கேட்டேன்… இல்லேன்னு சொல்லிப்போட்டான்”

“அதெப்பிடிச் சொல்லுவான்? மொறையா எண்ணை வாங்குத வீடாக்குமே இது”என்றான் முருகப்பன்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அவள் முகத்தை ஒளிகண்ணால் பார்த்தான். அவளை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் ஒன்றும் சின்னப்பெண் இல்லை. முகத்தை பாவம்போல வைத்துக்கொள்ள கற்றிருக்கிறாள். உள்ளே ஒரு நாகப்பாம்பு இருக்கிறது. அது அவனுக்கு தெரியும். அது சீறி நெளிந்தபடி வெளிவரும்போது அவன் பயந்துவிடுவான்.

அவன் அவளிடம் முந்தையநாள் இரவில் “என்ன இன்னைக்கு?” என்றான்

அவள் எழுந்து ஆடையை சுருட்டிக்கொண்டு ஜலசுத்திக்குக் கிளம்பினாள். அவன் அவளை நோக்கி “பாம்புல்லா படமெடுத்து ஆடிச்சு?”என்றான்

அவள் திரும்பிப் பார்க்காமல் வெளியே போனாள். அவள் சும்மா போனது அவனுக்கு எரிச்சலை எழுப்பியது. அந்த நடையில் ஒரு செருக்கு இருந்தது. அவன் எழுந்து பின்னால் போய் “எண்ணைப்பண்டாரத்தை நினைச்சுக்கிட்டியோ?”என்றான்

அவள் ஒன்றும் சொல்லவில்லை. செம்பில் நீர் ஊற்றி எடுத்துக்கொண்டு குடிமறைப்புக்குள் போக முயன்றாள். அவன் அவளை மறிப்பதுபோல முன்னால் சென்று  “எனக்கு தெரியும், அவனை நினைச்சாத்தான் நீ உருகுதே”என்றான்

அவள் நின்றாள். உதட்டைச்சுழித்து “அதுக்கு இப்ப என்ன?”என்றாள்

“ஏட்டி, என்ன சொல்லுதே?”என்று அவன் பதறினான்

“என்ன கேட்டியளோ அதுக்கு பதில் சொல்லுதேன்”

“என்னடி சொன்னே? சொல்லுடி…ஏட்டி இன்னொருவாட்டி சொல்லுடி”

“இன்னொருவாட்டி கேளுங்க சொல்லுதேன்”

“நாறத்தேவ்டியா”

“ஆமா தேவ்டியாதான்….தேவ்டியா ஒண்ணும் புதிசில்லியே…”

“என்னடி சொல்லுதே? ஏய்” என்று அவன் கூவினான்

“நேத்து பொன்னுத்தாய் வந்து மிச்சம் பணத்தை கேட்டா”

“அவகிட்டே நான்…” அவனுக்கு கடும் கோபம் வந்தது. “அது ஆம்புளைங்க பளக்கம். அப்டித்தான். நீ உன் சோலியப்பாருடி”

“நான் என் சோலியத்தான் பாக்கிறேன்”

அவள் மீண்டும் குடிமறைக்குள் செல்ல முயல அவன் “உன் சோலி அந்த பண்டாரம்கூடத்தானேடி? தெரியும்”என்றான்

“தெரியும்ல? போங்க”

அவன் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான். பிறகு பாய்ந்து அவளை அடித்தான். செம்பு தரையில் விழுந்து உருண்டது

அப்பால் கிழவி “அங்க என்ன சத்தம்? ஏட்டி வள்ளி, பூனையா பாரு”என்றாள்

அவள் கன்னத்தை கைகளால் பொத்தியபடி முள்போன்ற பார்வையுடன் அசையாமல் நின்றாள்

”தேவ்டியாச் சிறுக்கி…நாறத்தேவ்டியாச் சிறுக்கி” என்று அவன் உறுமினான். இன்னொரு அடி வைக்க அவனால் முடியவில்லை. அவள் பார்வையை தவிர்த்து அங்குமிங்கும் பார்த்தான். அதன்பின் வெளியே போய்விட்டான். இருட்டில் இறங்கி நின்று நட்சத்திரங்களைப் பார்த்தான். உடம்பெல்லாம் மிளகாய் அரைத்துப் பூசியதுபோல எரிந்தது.

அவள்  மீண்டும் புட்டு கொண்டு வந்து வைக்கும்போது அவள் கன்னத்தை பார்த்தான். அடியின் வடுவேதும் இல்லை. நன்றாக வடு வருவதுபோல ஓர் அறைகூட அவனால் விடமுடியவில்லை

“ஏட்டி, ஒரு கோவத்திலே அடிக்கிறதுதானே? மனசிலே வச்சுக்காதே”

“செரி”

“போவட்டு… மனசிலே வச்சுக்காதே”

“இல்ல”

“அதை ஏன் இப்டி சொல்லுதே? சிரிச்சுகிட்டே சொல்லு”

“அத்தை அந்தாலே இருக்கா”

“அவ கெடக்கா, செவிட்டு முண்டை”

அவள் உள்ளே போய்விட்டாள். அவன் எழுந்து கைகழுவிவிட்டு தாம்பூலம் போட்டுக்கொண்டான். தெருவில் சென்றுகொண்டிருந்த மக்களை கொஞ்சநேரம் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தான். அன்றைக்கு கடைதிறக்க வேண்டியதில்லை என்று முடிவுசெய்தான். கோயிலிலேயே சமையல். மக்கள் வீட்டில் அடுப்பு மூட்ட வாய்ப்பில்லை.அவனுடைய வியாபாரம் எல்லாம் பிள்ளைகள் பசித்து அழ ஆரம்பித்தபின் அரிசிக்கு ஓடிவருபவர்கள்தான்

அவன் கோவேறு கழுதையில் ஏறி மீண்டும் பணகுடிப்பொட்டலில் தன் குடிசைக்கு போனான். அன்றிரவு காவல் கொஞ்சமாகத்தான் இருக்கும். பட்டாளம் முழுக்க திருக்கணங்குடியிலேயே கிடக்கும். எஞ்சிய அரிசி முழுவதையும் ஏற்றிவிடவேண்டும். கையுதவிக்கு இருக்கும் கொச்சன்நாயரை மறுபக்கம் ஆட்களிடம் தூதனுப்பி அன்று மூட்டைகளை கொண்டு போக நல்ல வாய்ப்பிருப்பதாக அறிவித்தான். அந்தி இருண்டபோதே வர ஆரம்பித்தனர். விலைப்பணம் கையிலேயே கொடுத்துவிடவேண்டும். அவன் குடிலில் அமர்ந்து பணத்தை எண்ணி கணக்கிட்டு பெட்டியில் போட்டு மூட்டைகளை ஏற்றி அனுப்பினான்

இரவெல்லாம் மூட்டைகள் போய்க்கொண்டிருந்தன. வெள்ளி முளைப்பது வரைக்கும்கூட ஆட்கள் வந்தனர். அவர்கள் போனபின் அவன் நிலவறையை பார்த்தான். இருபது மூட்டைக்கும் குறைவாகவே இருந்தது. மனநிறைவுடன் சங்குத்தேவனுக்கும் கொச்சன்நாயருக்கும் ஆளுக்கு இரண்டுபணம் பரிசு கொடுத்தான். குடிலுக்கு வெளியிலேயே கயிற்று கட்டிலை எடுத்து கருவேலமரத்தடியில் போட்டு தூங்கிவிட்டான்

வெயில் நன்றாக ஏறிக்கொண்டிருக்கும்போதுதான் பணகுடியில் இருந்து மாணிக்கம் செட்டியாரும் ரத்தினம் செட்டியாரும் அங்கே வந்தனர்.அவர்கள் நிலவறை வணிகத்தில் அவனுடைய பங்காளிகள். அவர்கள் ஏதேதோ செய்தி கேள்விப்பட்டு பதைப்புடன் வந்திருந்தனர். திருக்கணங்குடி ராயசத்தின் படைகள் அங்கே தேடி வருமென்றால் அதற்குள் மூட்டைகளை அகற்றிவிடலாம் என்று நினைத்தனர். அதற்குத்தான் பதறியடித்து வந்திருந்தனர்.

வண்டியிலிருந்து இறங்கிய மாணிக்கம் செட்டியார் சங்குத்தேவனிடம் “ஏலே சங்கு, உன் செட்டி எப்பலே போனான்?”என்றார்

“செட்டி உறங்குதாரு” என்று அவன் சொன்னான்

“உறங்குதாரா? ஏலே, அவன் எப்பலே எந்திரிச்சு திருக்கணங்குடி போனான்?”

“செட்டியாரே, நம்ம செட்டி இந்தா உறங்குதாருல்லா?”

மாணிக்கம்  “ஆ” என்று அலறி நின்றுவிட்டான்

ரத்தினம் அருகே வந்து “என்ன ?” என்று கேட்டான். மாணிக்கம் சுட்டிக்காட்டினான். அவன் பதறிவிட்டான்

“அய்யோ… இதென்ன நடக்குது?”

“ஆளு மாறிப்போச்சு”

“என்னவே சொல்லுதீரு?”

“கோபுரத்திலே இருந்து குதிச்சவன் நம்ம முருகப்பன் இல்லை. வேற ஆரோ”

முருகப்பன் பேச்சு சத்தம் கேட்டு எழுந்து அமர்ந்து “என்னவே, எப்ப வந்தீக?”என்றான்

“நீ திருக்கணங்குடிக்கு போனியா?”என்றான் ரத்தினம்

“இல்லியே, நான் எதுக்கு போகணும். வாய்ப்பான நாள்னுட்டு இங்க வந்துபோட்டேனே”

”அப்ப அங்க போயி கோபுரத்திலே இருந்து குதிச்சது யாரு?”

“என்ன சொல்லுதீக?”என்றான் முருகப்பன்

ரத்தினம் “ஏலே வேற யாரோ குதிச்சான்னு வைச்சாக்கூட நம்ம காராய்மைக்காரங்கள்லா அடையாளம் காட்டியிருக்காங்க? அதவிட இவன் பெஞ்சாதி வள்ளியம்மைல்லா போயி உடன்கட்டை ஏறியிருக்கா”

“என்னவே சொல்லுதீக?”என்று பதறியபடி முருகப்பன் ரத்தினத்தின்  கழுத்தை பாய்ந்து பிடித்தான்.

“டேய் நீ குதிக்காதே. இரு… நான் சொல்லுதேன். என்னமோ பெரிய தப்பு நடந்துபோச்சு… ராஜா காரியம். இப்ப நீ நடுவிலே பூந்து குதிச்சா உன் தலை போயிரும்… நீ உக்காரு சொல்லுதேன்”

“என்னடே இது… நீங்க என்ன சொல்லுதீக? வள்ளியம்மைக்கு என்ன ஆச்சு?”

“வள்ளியம்மை நேத்து மத்தியான்னமே இங்கேருந்து குருதையிலே போயிருக்கா… அங்க ஒருத்தன் கோபுரத்திலே இருந்து குதிச்சு செத்திருக்கான். அவ செத்தவன் தன் புருசன்தான்னு சொல்லி அவன் கூட சிதையிலே ஏறிப்போட்டா”

”செத்தவன் யாரு?”

“ஏலே கோட்டி, செத்தவன் நீயாக்கும்னாக்கும் சொல்லுகானுக. இல்லேன்னா அவ உடன்கட்டை ஏறுவாளா? நம்ம சாதிசனம் தெரண்டு கொடையும் காணிக்கையுமாட்டு திருக்கணங்குடிக்கு போய்ட்டிருக்கு”

“என்னடே சொல்லுதீக? எனக்கு ஒண்ணுமெ வெளங்கல்லியே”

“இங்கபாரு, அங்க ஒருத்தன் விளுந்து செத்தான். அது நீயிண்ணு அடையாளம் காட்டினானுக காராய்மைக்காரனுக. அதை நம்பி இப்ப அங்க நம்ம இனவன்மாரு சேந்து பிரதிஷ்டை பண்ணியிருக்கப்பட்டது உன்னையாக்கும். உன்னை எறிமாடன் சாமின்னு அங்க கல்லு நிப்பாட்டியாச்சு. பக்கத்திலே வள்ளியம்மைக்கு சதிக்கல்லும் நிப்பாட்டியாச்சு. இன்னைக்கு சாயங்காலம் மகாராஜா பெரியநாயக்கரு வந்து அங்க சாமி கும்பிட்டு முதல் படையல போடுதாரு. அதாவது, பணகுடி அரிசிவாணியன் மாயாண்டி மகன் முருகப்பன் இப்ப எறிமாடன்சாமி ஆயாச்சு. அதை இனிமே மாத்தமாட்டாங்க”

“அதெப்டி? நான் இருக்கேன்லா?” என்று முருகப்பன் முனகலாகச் சொன்னான். அவனுக்கு அழுகைகூட வரவில்லை. மொத்தத்தில் வயிற்றில் ஒரு பதைப்பு மட்டும் இருந்தது.

“டேய் நல்லா சிந்திச்சு பாரு. எப்பமுமே ராஜா செய்றது சரி. மந்திரி சொல்லுறது நியாயம். ஊரு சொல்லுதது உண்மை. தனியாளு சொல்லு சபையேறாது. இப்ப நீ உசிரோட இருக்கே, செத்தவன் ஆளு வேறேன்னா என்ன ஆகும்? அடையாளம் சொன்னவன், சாமிக்கல் நாட்டினவன் எல்லாரும் களுவிலே ஏறணும் இல்லியா? அதுக்கு அவனுக விடுவானுகளா? அதுக்கு உன்னைய இருசெவி அறியாம வெட்டி புதைக்கிறதுதானே சுருக்கவளி?”

முருகப்பன் திகைத்துப்போனான்.

“அதனாலே நீ பேசாம இங்க இருந்துக்கோ. என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு நாங்க விசாரிச்சு சொல்லுதோம். அதுக்கு உண்டானதை செய்வோம். இப்ப நீ வெளியே தலைகாட்டினா உனக்குத்தான் தலை இருக்காது”

“இது என்னடே அக்குறும்பா இருக்கு…நான் என்ன தப்பு செய்தேன்” என்று முருகப்பன் அழ ஆரம்பித்தான்.

“நேரம் நிறைய இருக்கு. நிதானமாட்டு இருந்து அளுதுக்கோ. நாங்க போயி விசாரிச்சுட்டு வாறோம்”என்றான் ரத்தினம்

“ஊரே பெருகி போய்ட்டிருக்கு. புருசன் கோபுரத்திலே இருந்து குதிச்சான், பெஞ்சாதி உடன்கட்டை ஏறினா. நினைச்சு நினைச்சு பேசிக்கிடுதானுக. பொட்டைப்புள்ளைக கண்ணீருவிட்டு அளுவுதாளுக… நம்ம சாதியே எளகி நிக்குது பாத்துக்க. ஆயிரம் வருசத்திலே இப்டி ஒரு விசயம் நடந்ததில்லை. இப்ப செத்தது நீயில்லை, கண்டவனுக்கு உன் பெஞ்சாதி உடன்கட்டை ஏறிட்டான்னு தெரிஞ்சா எம்பிடு கேவலம்… மானம் காக்கணும்னு நம்மாளுகளே உன்னைய வெட்டி புதைச்சிருவானுக” மாணிக்கம் சொன்னான்.

”நான் என்ன செய்வேன்? எனக்க உடைய சாஸ்தாவே, நான் என்ன செய்வேன்” என்று முருகப்பன் விசும்பி அழுதான்.

”நான் நினைக்கப்பட்டது அதில்லே…அதெப்பிடி அவளுக்கு சொந்த புருசன் முகம் தெரியாம போச்சு?”என்றான் ரத்தினம்

“உடம்பு மேலே இருந்து விளுந்திருக்கு… கெளங்குமூட்டை மாதிரி செதறிப்போயிருக்கும்… பாத்தா தெரிஞ்சிருக்காது.” மாணிக்கம் சொன்னான்.

“இல்ல அவளுக்கு தெரியும்”என்றான் முருகப்பன்

“என்ன சொல்லுதே?”

“அவன், அந்த மூதேவி பண்டாரப்பயதான் மேலே இருந்து குதிச்சவன். அதை நம்ம காராய்மைக்காரனுக சொல்லி ஏற்பாடாக்கினானுக. செம்பகராமன் மண்டபத்திலே அவனுக பேசிட்டிருக்கிறத நான் பாத்தேன். அப்ப ஒண்ணும் தெரியல்ல, இப்ப புரியுது”

ரத்தினம் வாய் திறந்து வெறித்துப் பார்த்தான். மாணிக்கம் “இருக்கும்டே. அந்த பண்டாரப்பயல ரெண்டுநாளாட்டு வச்சு கொண்டாடினானுக. புதுத்துணியெல்லாம் வாங்கி குடுத்தானுக”

“அவனை என் பேரிலே அனுப்பியிருக்கானுக. எனக்க கண்டிகையை மாராயக்குட்டிப்பிள்ளை கேட்டாரு. நான் களட்டிக் குடுத்தேன்”

“அந்தக் கண்டிகையை வச்சுத்தான் அடையாளம் காட்டியிருக்கானுக. அதோடத்தான் உடம்ப செதையிலே ஏத்தியிருக்காங்க. வள்ளியம்மைக்க தாலியும் மெட்டியும் அவ உடம்பிலே இருந்திருக்கு. செதையிலே உருகிக்கிடந்த வெள்ளியையும் தங்கத்தையும் சேத்து எடுத்து உருக்கி எறிமாடன் சாமிக்கு காப்பு போட்டிருக்காங்க” என்றான் ரத்தினம்.

“வேணும்னே செஞ்சுட்டாங்கடே” என்றான் முருகப்பன் உடைந்த குரலில்.

“செரிடே, ஆனா உனக்க பெஞ்சாதி ஏன் அந்த பயலுக்காக உடன்கட்டை ஏறினா?” என்றான் மாணிக்கம்.

முருகப்பன் ஒன்றும் சொல்லவில்லை.

“ஆளு தெரியல்லியோ?” என்றான் ரத்தினம். அவன் தலை காக்காய்போல சரிந்து உள்ளே ஓடிய சந்தேகத்தைக் காட்டியது.

”அதெப்பிடி, அவன் பொலிகாளை மாதிரில்லா இருப்பான்?” என்றான் மாணிக்கம்.

“தெரிஞ்சேதான் ஏறியிருக்கா”என்றான் முருகப்பன்

“தெரிஞ்சுகிட்டா… ஏண்டே?”என்றான் ரத்தினம்

முருகப்பன் பதில் சொல்லவில்லை

“ஏண்டே?”என்று அவன் மீண்டும் கேட்டான்

முருகப்பன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

 

[ 2 ]

 

முருகப்பனை விட்டுவிட்டு ரத்தினம் செட்டியாரும் மாணிக்கம் செட்டியாரும் நேராக மாட்டுவண்டியில் திருக்கணங்குடிக்குத்தான் போனார்கள். அங்கே அவர்கள் சென்றபோது எறிமாடனும் உடன்நின்ற நங்கையும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறுகோயிலில் பெரியநாயக்கர் வந்து கும்பிட்டுவிட்டு சென்றுவிட்டிருந்தார். பொதுமக்களை உள்ளே அனுமதித்துக்கொண்டிருந்தனர். பெரும் கூட்டம் சூழ்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தது.

மூங்கில்கால் நாட்டி, மேலே கீற்றோலை வேய்ந்த கொட்டகையில் இரு நடுகற்கள் நின்றன.ஒன்றின்மேல் தலைப்பாகைபோல செம்பட்டு கட்டப்பட்டிருந்தது. இன்னொன்றில் செம்பட்டு விசிறிமடிப்பாக அமைக்கப்பட்டு பாவாடை கட்டப்பட்டிருந்தது. எறிமாடனுக்கு கரிய கண்களும் மீசையும் வரையப்பட்டிருந்தன. உடன்நின்ற நங்கைக்கு புதுப்பொன் தாலியை மஞ்சள் சரடால் கட்டியிருந்தனர்.

பெரியநாயக்கர் வந்து மலர்மாலை சார்த்தி பூசைசெய்துவிட்டு சென்றிருந்தார். அவரைத் தொடர்ந்து அமாத்யரும் தளவாயும் ராயசமும் பிறரும் வரிசையாக மலர்மாலை சூட்டி வழிபட்டனர். அவர்கள் சென்றதுமே அந்த மலர்மாலைகள் அகற்றப்பட்டு அருகே பெரிய கடவத்தில் சேர்க்கப்பட்டன. மேலும் மேலும் மலர்மாலைகளுடன் மக்கள் வந்துகொண்டிருந்தமையால் மாலைகள் மாடனுக்கும் அம்மனுக்கும் சூட்டப்பட்டு உடனே எடுக்கப்பட்டன.

சன்னிதி முன் தூபம் புகைந்துகொண்டிருந்தது. இருபக்கமும் இரண்டு நெய்ப்பந்தங்கள் நெய்யூற்றி தொடர்ச்சியாக எரியவிடப்பட்டன. மாடனுக்கு இளநீரும் அம்மனுக்கு தேங்காய்பழமும் படைக்கப்பட்டன. ”வரிசையா வரிசையாட்டு வாருங்க” என்று கூட்டத்தை ஒழுங்குசெய்துகொண்டிருந்த திருக்கணங்குடி மூத்தசெட்டியார் அரவணைப்பெருமாள் கூச்சலிட்டார். ”பாத்து… பொம்புளையாளுங்க தனியாட்டு போங்க” என்று பணகுடி செட்டிகுல முதலடி நாராயணன் செட்டியார் இன்னொருபக்கம் கூப்பாடு போட்டார்

மாடனுக்கும் அம்மனுக்கும் பூசைசெய்யும் பொறுப்பை திருக்கணங்குடி நல்லசிவம் செட்டியார் ஏற்றுக்கொண்டார். மாடனுக்கு இறுதிச்சடங்கு செய்தது அவரும் அவர் பேரனும் என்பதனால் அவர்களின் குடும்பத்துக்கு முறைபாத்தியதை இருந்தது. இருந்தாலும் முருகப்பனின் பெரியம்மை மகன்  அனந்தன் செட்டி வந்து சிலைக்கு அருகிலேயே சப்பணம் போட்டு அமர்ந்துகொண்டான். அவனும் அவ்வபோது ஓரிரு மலர்களை எடுத்து சிலைக்கு முன் போட்டபடி ஓரக்கண்ணால் உண்டியலையும் தட்டத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவ்வப்போது சில வெள்ளிக்காசுகளை நல்லசிவம் செட்டியார் எடுத்து தன் சுருக்குப்பையில் போடுவதை அவன் கவனித்தான்.

அவனிடம் அவனுடைய நண்பனும் பங்காளியுமான கிருஷ்ணன் செட்டி “ஏலே அவன் பணத்தை எடுத்துக்கிடுதாம்லே”என்றான்.

“ஆமா”என்றான் அனந்தன் செட்டி

“அது உனக்க பணம். செத்தவன் உனக்க பங்காளி பாத்துக்கோ”

“இரு இரு. பாப்பம். கூட்டம் கொஞ்சம் குறயட்டும். அப்டி விட்டிர முடியதுல்லா?”என்று அனந்தன் செட்டி சொன்னான்.

அவர்கள் பேசிக்கொள்வதை நல்லசிவம் செட்டியார் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, கூட்டத்தை நோக்கி  “சீக்கிரம் வாருங்க… எங்க பிறந்தா என்ன, நம்மூருலே தெய்வமாகணும்னு விதியிருந்திருக்கே… திருக்கணங்குடி எறிமாடசாமிய கும்பிட்டு அருள் வாங்கிட்டு போங்க வாங்க” என்று கூவினார்.

மாணிக்கம் செட்டியாரும் ரத்தினம் செட்டியாரும் எறிமாடனையும் உடன்நின்ற நங்கையையும் வணங்கி விபூதி குங்குமம் பெற்று மறுபக்கம் வந்தனர். அவர்கள் கண்களால் துழாவி மாராயக்குட்டிப்பிள்ளையை கண்டடைந்தனர். அவர்கள் தங்களைப் பார்ப்பதை அவரும் கண்டார். அவர்கள் அணுகியதும் வாருங்கள் பேசலாம் என்று சைகை காட்டி அழைத்துச்சென்றார்

ஓரமாக அழைத்துச்சென்று வேளாளத்தெருவில் சண்முகம் பிள்ளையின் மருமகன் வீட்டு திண்ணையில் அமரச்செய்து அவர் நடந்ததை எல்லாம் சொன்னார். “வாறதை பாத்துக்கிடலாம்னு நினைச்சு செஞ்சதாக்கும். பண்டாரப்பயலுக்கு கேக்க ஆளில்லேன்னு நினைச்சோம். இந்தக் குட்டி இப்டி செய்வான்னு மனசிலையும் நினைச்சுப் பாத்ததில்லை. செரி, எல்லாம் நல்லதா நடந்துபோட்டுதுன்னு வையுங்க. இப்ப மகாராஜா வரிகுறைக்க சம்மதிப்பாருன்னு தோணுது. திருச்செவி வரை செய்தியை கொண்டுபோயாச்சு. திருநெல்வேலியிலே முகம் காட்டுறது நல்லபடியா நடந்தா செட்டிகளுக்கும் லாபமாக்கும்” என்றார்

“ஆமா, ஆனா ஒரு குடும்பம் சீரளிஞ்சுபோச்சு” என்றான் மாணிக்கம்

“அந்தக்குட்டி செய்ததுக்கு நாங்க பொறுப்பில்லை”என்றார் மாராயக்குட்டிப்பிள்ளை. “இனியிப்போ செத்தது முருகப்பன் இல்லேண்ணு மாத்திக்கிட முடியாது. முருகப்பனுக்கு உண்டான நட்டத்தை குடுத்துப்பிடலாம். அவன் ஒரு நாலஞ்சு வருசம் மலையாளக்கரைப் பக்கமாட்டு போயி தொளிலு பாக்கட்டும். அவன் உங்க பங்காளிதானே. உங்களுக்கு அங்கையும் ஏவாரம் உண்டுல்லா? எடம் மாறிக்கிடுங்க, அதிலே ஒண்ணும் நட்டம் இல்லல்லா?”

“ஆனா…”என்று மாணிக்கம் ஆரம்பிக்க மாராயக்குட்டிப் பிள்ளை இடைமறித்தார்

“ஆனா பூனா ஒண்ணுமில்லை. செட்டி முத்தப்பிடாது, சாரை பத்தி எடுக்கப்பிடாதுன்னு சொல்லு உண்டுல்லா? சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். நீங்க ஏவாரம் பண்ணுத ஆளுங்க. சாதியிலே மூத்த கூட்டம். வே, பஞ்சாயத்திலே இருந்து பேசுத கௌரவம் உள்ள ஆளுக நீங்க, எந்திரிச்சு நின்னு சத்தம் போடலாமா? குலமுறைன்னு ஒண்ணு இருக்கா இல்லியா? இல்ல கேக்கேன்”

“அது உண்மைதான்”என்றான் மாணிக்கம்

“இப்ப செத்தது முருகப்பன் இல்லேன்னு மாத்த முடியாது. முருகப்பன் சாவல்லேன்னு சொன்னா சாவடிக்கவேண்டிய பொறுப்பு எங்களுக்கு வந்துபோடுது. அது உங்களுக்கும் பொறுப்புதான்னு வையிங்க. பாத்தியள்ல, காசு வாறது உங்க மடியிலேயாக்கும். அவன் சாவப்பிடாதுன்னுதான் நாங்க இந்த பாடுபட்டு உங்ககிட்ட பேசிட்டிருக்கோம்”

“அது தெரியாதா?”என்றான் ரத்தினம்

“அப்ப காரியங்கள் நடக்கட்டு… கெளம்புங்க”

“ஆனா சட்டுன்னு அவனை அந்தாலே அனுப்புறதுன்னா கொஞ்சம் செலவுண்டு”

“என்னண்ணு சொல்லுங்க செஞ்சுருவோம்”

“ஒரு நூறு பணமாவது ஆவும்”

“நூறு பணமா?”மாராயக்குட்டிப்பிள்ளை யோசித்தார். “இப்ப எப்டியும் சிவராத்திரிக்கு ராமலிங்கசாமிக்கு உச்சவம் வரும். அதிலே செட்டிப்பிள்ளைக உங்க சாதிப்பங்குக்கு செலவளிப்பீக. அதிலே நூறுபணம் குறைச்சுக்கிடலாம்… செரி, குறைச்சாச்சுன்னே வச்சுக்கிடுங்க.. அப்ப நூறுபணம் குடுத்தது மாதிரில்லா? செரி பாப்போம்”

திரும்பும்போது ரத்தினம் “இந்தக் கிளவன் செரியான நஞ்சவிஞ்சான்.வெசம் இவனுக்க கிட்டே இருந்துதான் போயிருக்கு” என்றான்

மாணிக்கம் “இப்பம் என்னடே செய்யுதது?”என்றான் “நாம காரியங்களை நம்ம செட்டிமுதலடி கிட்டே சொல்லிருவோம். சபை கூடி முடிவெடுக்கட்டும். அதாக்கும் முறை”

“இருடே” என்றான் ரத்தினம். “இப்ப செட்டிசபை கூடினா என்ன செய்யும்? முருகப்பன் செத்தாச்சுன்னுதானே முடிவுசெய்யும்? மாத்தி முடிவெடுக்க நமக்கு சங்குறைப்பு இல்லல்லா?”

“அதெப்படி? தவளை பறக்குறதும் செட்டி சீறுறதும் அளந்து வைச்ச கணக்குதான்னு ஒரு சொல்லு உண்டுல்லா? இப்ப செட்டிமுதலடிக்கும் நல்ல லாபமாக்கும்… மூஞ்சி தெளிஞ்சுல்லா இருக்கு!”

“அப்ப என்ன? செட்டிமுதலடி கூடி முருகப்பன் சாவல்லேன்னு முடிவுசெய்து அவனை வேத்தூருக்கு அனுப்பினா அவனுக்க வீடும் கடையும் மத்த சொத்துக்களும் செட்டிமுதலடிக்கு போவும். நமக்கு என்ன லாபம்?”

“ஆமா”

“அவன் அப்டியே செத்தாச்சுன்னு இருந்தா எல்லாம் நமக்கு வரும். ஏன்னா நாம அவனுக்க பங்காளிகள். நமக்கு நட்டம் வரப்பிடாதுல்லா?”

“ஆமா”

“அப்ப அப்பிடி… அவனை அப்டியே அனுப்பி வைப்போம்”

மாணிக்கமும் ரத்தினமும் இரவில் பணகுடி பொட்டலுக்கு வந்தபோது  முருகப்பன் காத்திருந்தான். அவர்கள் அவனை ரகசியமாக கொண்டுசென்று அமரவைத்து பேசினர்

“டேய் காரியங்க கைமீறிப் போயாச்சு. இனி பேசி பிரயோசனமில்லை பாத்துக்கோ. அங்க செத்துப்போன முருகப்பன் எறிமாடன் ஆயாச்சு. வள்ளியம்மை உடன்நின்ற நங்கையா இருந்தாச்சு. பெரியநாயக்கரு வந்து கும்பிட்டாச்சு. ஆயிரம்பேரு காணிக்கையிட்டு பலிகொடை குடுத்தாச்சு. இனி ஒண்ணும் சொல்லுறதுக்கில்லை. நாங்க கொஞ்சமாட்டு சொல்லிப்பாக்கலாம்னு நினைச்சோம். அப்பதான் ஒரு செய்தி கிடைச்சுது. அந்தாலே ஓடி வந்துட்டோம். ”

“என்ன செய்தி?” என்றான் முருகப்பன்

”உன்னைதேடி ஆளு போயிருக்கு…நல்லவேளை நீ இங்க குடிசையிலே இருக்கே. இப்டி ஒரெடம் இங்க இருக்கிற செய்தி காராய்மைக்காரனுகளுக்கு தெரியாது. ஊரிலேயும் ஒருத்தனுக்கும் தெரியாது. ”

“எதுக்கு தேடுதானுக?” என்று முருகப்பன் நடுக்கத்துடன் கேட்டான்.

“காதோடு காதா வெட்டி புதைக்கத்தான்.வேறே என்னத்துக்கு? நீ இருக்கிற செய்தி தெரிஞ்சா காராய்மைக்காரனுகளுக்கு களுமரம்லா கணக்கு? செட்டிமுதலடியும் பக்கத்துலே களுவிலே உக்காரணும்லா?”

“எனக்க பெருமாளே”என்றான் முருகப்பன்

“அங்க திருக்கணங்குடி அரிசிச்செட்டியானுங்கதான் வீறோட நிக்கானுக. அவனுகளுக்கு இப்ப எறிமாடன்னா பொன்னுச்சுரங்கமாக்கும். நீ இருக்கேன்னு தெரிஞ்சா அவனுகளும் நூறுபணம் குடுத்து தேவமாரை வேட்டையாட அனுப்புவானுக”

”நான் இப்ப என்ன செய்ய?”

“பேசாம மலையாளநாட்டுக்கு போயிடு… இங்க கோட்டாறு, அந்தாலே பப்பனாவரம், அதுக்கும் அந்தாலே பாறசாலையோ திருவனந்தபுரமோ ,எங்கபோனாலும் உன்னை சுளுவிலே விடமாட்டாங்க. காராய்மைக்காரனுக உன்னைக்கொல்ல தேவமாருக்கு வெத்திலைமேலே பைசா வைச்சு குடுத்தாச்சுன்னாக்கும் கேள்வி. அவனுக உப்புதொட்டு சத்தியமும் செஞ்சாச்சு. இனிமே விடமாட்டானுக. காலமாடன்மாரைப்போல வந்துக்கிடே இருப்பானுக…”

“நான் எங்க போக?” என்று முருகப்பன் தழுதழுத்தான்.

“நீ அந்தாலே கொல்லம் கொச்சீன்னு போயிரு… அங்க பேரும் ஊரும் மாத்திக்கிட்டு என்னமாம் சின்ன ஏவாரம் செய்யி. கைப்பணம் நாங்க தாறோம். அந்தாலே கெளம்பிடு”

”நான் ஒருதடவை ஊருக்குள்ளே போயி…”

“ஊருக்குள்ளே போனா உனக்கு தலை கெடையாது பாத்துக்க”

“கடையிலே கணக்கு பாத்துட்டு…”

“லே மயிராண்டி, உனக்க கணக்க தீக்கப்போறானுக. நீ என்ன கணக்கு பாக்கப்போறே? அப்டியே ஓடீரு… மலை ஏறி மறுபக்கம் போயிரு. கோட்டாறு பப்பனாவரம் எங்கயும் உனக்க மணம் வரப்பிடாது. வந்து சங்கை அறுத்துப்போடுவானுக”

“அய்யோ எனக்க பொன்னு பெருமாளே… எனக்க ராமலிங்க சாமீ”

“எல்லாம் செரியாவும்டே. ஒரு நாலஞ்சு வருசம் போகட்டு. நீ செத்துப்போன முருகப்பனுக்க அப்பன்வகை பங்காளிக்க மகனாக்கும்னு சொல்லிப்போட்டு திரும்பி வா. உனக்க அப்பன் மாயாண்டிக்கு கொல்லத்திலே ஒரு சித்தப்பன் வகையறா உண்டுல்லா? அந்த கொலமுறைன்னு சொல்லிக்கோ. நாங்க சாட்சி சொல்லுதோம். உனக்க வீடும் கடையும் எங்க போவுது? உனக்க பங்காளிக நாங்க, எங்க கையிலேதான் இருக்கும். நீ வந்ததும் கையிலே குடுக்கப்போறம். நீ ஒரு பெண்ணும் கெட்டி சந்தோசமா இதே பணகுடியிலே இருக்கலாம். ஆரும் ஒண்ணும் சொல்லமுடியாது”என்றான் மாணிக்கம்

“ஆமா, அதாக்கும் ஒரே வளி…நீ கெளம்பு” என்றான் ரத்தினம்

முருகப்பன் கொஞ்சநேரம் விசும்பி விசும்பி அழுதான்

“செரிடே, இவனுக்கு போக மனசில்லை. அப்ப நடக்குதது நடக்கட்டு”என்றான் மாணிக்கம்

“இல்ல நான் போறேன்… இப்பமே போறேன்”என்றான் முருகப்பன்

அவர்கள் அவனை சங்குத்தேவனிடம் ஒப்படைத்தனர். சங்குத்தேவன் அவனை மலைகடந்து ஒசரவிளை அருகே காட்டுச்சாலைக்கு கொண்டுபோய் விடவேண்டும். அங்கிருந்து மணக்குடி வழியாக அவன் கொல்லம் பக்கமாகச் சென்றுவிடவேண்டும். கைச்செலவுக்கு பத்துபணம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்

முருகப்பன் அழுதுகொண்டே சங்குத்தேவனுடன் சென்றான். இருட்டுக்குள் கண்வெளிச்சத்தின் துணையால் அவர்கள் நடந்து மலையேறினர். பாம்புகள் விலகுவதற்காக சங்குத்தேவன் தரையை கோலால் தட்டிக்கொண்டே சென்றான். முருகப்பன் அந்த தாளத்திற்கு ஏற்ப விசும்பி அழுதுகொண்டே நடந்தான்.

 

[ 3 ]

 

முருகப்பன் நேராக மணக்கரை காயல் சென்று ,அங்கே படகிலேறி அஞ்சுதெங்கு சென்றான். அங்கிருந்து கொல்லம் சென்றான். அவனை பொறுப்பேற்று உப்புதொட்டு சத்தியம் செய்து அழைத்துச்சென்ற நாயர்படை வழியிலேயே வாரிக்குந்தத்தால் அவன் மண்டையில் அடித்து கைப்பணத்தை பிடுங்கிச் சென்றுவிட்டனர். நாயர் சத்தியமும் நாய்மூத்திரமும் என்ற சொலவடையை அவன் அறிந்திருந்தாலும் அதை எதிர்பார்க்கவில்லை.செருப்புத்தோலுக்குள் அவன் பதுக்கி வைத்திருந்த பத்து வெள்ளிக்காசுதான் மிச்சம்.

அஞ்சுதெங்கு துறைமுகத்தில் கையில் இருந்த பணம் தீரும்வரை கலத்தப்பமும் களியும் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு அலைந்தான். கையிலிருக்கும் வெள்ளிப்பணம் தீர்ந்தபின் என்ன செய்வது என்ற பயம் மணக்கரையிலேயே அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. ஆகவே ஆங்காங்கே கூடுமானவரை தர்மக்கஞ்சியும் கோயில் பிரசாதமுமாகவே சென்றான். சோற்றுக் கவலையில் வேறு கவலைகள் மறைந்தன. அவனுக்கும் பூணூல் இருந்தமையால் பல இடங்களில் பிராமணர்களுக்கான அன்னதானங்களிலும் ஊடுகலந்தான்.

கிளம்பியது முதலே அவன் தன்னை ஈட்டி வாள் ஏந்திய மறவப்படை துரத்திவருவதாக கற்பனை செய்துகொண்டான். எந்த மறவனைக் கண்டாலும் மறுபக்கம் சென்று ஒண்டிக்கொண்டான்.அஞ்சுதெங்கில் இறங்கியபோது அங்கேயும் மறவர்கள் நிறைய நடமாடுவதைக்கண்டு அடுத்த படகில் ஏறி கொல்லம் சென்றுவிட்டான். கொல்லத்தில் சோனகர்களும் பறங்கிகளும் காப்பிரிகளும் சுமைதூக்கும் ஈழவர்களும் சில்லறைத் திருடர்களான நாயர்களும் கலந்து கூட்டம் எந்நேரமும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. எவரும் எவரையும் கவனிக்கவில்லை. எதையெதையோ வாங்கி, விற்று, ஏலம்போட்டு, சுமந்து கொண்டு அடுக்கி, திரும்ப எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். கடலில் பெரிய கப்பல்கள் நின்றிருந்தன. அவற்றிலிருந்து சிறிய படகுகள் கரைக்கு வந்துசென்றன.

முருகப்பன் அங்கே என்ன நடக்கிறது என்பதை நாலைந்து நாளில் புரிந்துகொண்டான். அங்கே சரக்குகளை எண்ணி அடுக்கி கணக்கு பதிவுசெய்ய ஆட்கள் தேவைப்படுவதை அறிந்ததும் ஒரு சோனக வணிகனின் பெரிய பண்டகசாலையில் சேர்ந்துகொண்டான். செட்டிகளுக்கு எந்தக் கடையிலும் முதல் மதிப்பிருந்தது.

சோனகனான பீரான்குட்டி ஹாஜி அவனிடம் “இந்தா இந்த அட்டியிலே எத்தனை மூட்டை இருக்கு சொல்லு” என்றார்.

அவன் ஒருமுறை பார்த்தபின்  “ஆயிரத்து எரநூற்றி எம்பது” என்றான்

“டேய் நீ அசல் செட்டியில்லா? வேண்டியதைக் கேளு…” என்றார் பீரான்குட்டி ஹாஜி.

சோறு போட்டு, தலையணைக்கு இடம்கொடுத்து ,மாதம் பத்து வெள்ளி சம்பளம் என உறுதியாயிற்று. அருகே இருந்த குட்டிக்கிருஷ்ணன் நாயருக்கு மாசம் இரண்டு வெள்ளி. ஆனால் அவருக்கு கணக்கு இரண்டு கைவிரல் அளவுக்குத்தான் திட்டவட்டம்

முருகப்பன் கணக்கோலைகளை மொத்தமாக கையாள ஆரம்பித்தான். ஒருவாரத்தில் பண்டகசாலையே அவன் கைக்கு வந்தது. குட்டிக்கிருஷ்ணன் நாயர் அவனை “செட்டிப்பிள்ளை எஜமான்” என்று அழைத்து பணிய ஆரம்பித்தார். கணக்கு ஏதோ மாயவித்தை போல அத்தனைபேரையும் அச்சுறுத்தியது.  அவனுடைய கணக்கு  நேர்த்தியைக் கண்ட சோனகன் ஒரு மாதம் தாண்டியதும் அவனை தனக்கு அருகிலேயே அமர்த்திக்கொண்டான். மாதம் முப்பது வெள்ளி நாணயம் சம்பளம். திருவனந்தபுரம் பேஷ்காருக்கே மாதச் சம்பளம் நூறுவெள்ளிதான் என்றார்கள்.

ஆறே மாதத்தில் முருகப்பன் கொல்லம் பட்டணத்தில் சுனையில் மீன் போல திளைக்க ஆரம்பித்தான். சோனகர்கள் கொண்டுவந்த சரக்குகளை முழுக்க அவன்தான் எண்ணி வாங்கினான். அவற்றை அவனே கொட்டகைகளில் அடுக்கினான். எங்கே என்ன எவ்வளவு இருக்கிறது என்பது அவனுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது. அதற்கேற்ப அவன் கையில் பணம் துள்ளியது. பணத்தை எண்ணி எண்ணி சுருக்குப்பைக்குள் வைப்பதைத்தான் அதுவரை அவன் பழகியிருந்தான். பணகுடியில் பணத்தை வைத்துக்கொண்டு செய்வதற்கும் ஒன்றுமில்லை.

ஆனால் கொல்லம் அப்படி அல்ல. அங்கே பணத்தை அள்ளி அள்ளி செலவழிக்க வழிகள் இருந்தன. விதவிதமான வேசிகள். வெளிர் உடலும் பூனைக்கண்களும் கொண்டவர்கள். கன்னங்கரிய பெரிய உடலும் தேரட்டைபோல உதடுகளும் நுரைச்சுருட்டை முடியும் கொண்டவர்கள். சப்பை மூக்கும் உருண்ட முகமும் கோலன் முடியும் கொண்டவர்கள். அந்த வடிவங்களை வெவ்வேறு வகையில் கலந்து கலந்து உருவாக்கப்பட்ட முடிவில்லாத பெண்ணுருவங்கள்.

முருகப்பன் பெண்பித்தன் ஆனான். அவனுக்கு குடியிலோ சூதிலோ விருப்பம் இருக்கவில்லை. தீனியில்கூட ஆர்வம் குறைவுதான். கையில் கிடைக்கும் பணம் முழுக்க வேசிகளுக்குத்தான். திடீரென்று திருக்கணங்குடி கோபுரத்தில் நின்றிருக்கும் அத்தனை அப்சரஸ்களும் யட்சிகளும் மண்ணில் இறங்கி நகரத்தில் நிறைந்துவிட்டதுபோல.அவன் ஒரு யட்சனாக மாறி அவர்கள் நடுவே பறந்து உழன்று அலைவதுபோல.

அவன் அத்தனை சூழ்ச்சிகளையும் அறிந்தவனாக இருந்தான். ஆரம்பத்தில் சோனகர்களை மற்றவர்கள் ஏமாற்றுவதை கண்டுபிடித்து கொடுத்தான். அவர்களை அவன் கண்டுபிடித்த நுட்பத்தை உணர்ந்த சோனகன் அவனை தன் பங்காளியாக ஆக்கிக்கொண்டான். அதன்பின் அவன் கையில் பணம் குறையவே இல்லை. பணம் கிடைக்க கிடைக்க அவன் புதுப்புதுப்பெண்களை தேடிச்சென்றான். துறைமுகத்தில் பெண்களை ஏற்பாடு செய்து கொடுக்கும் அத்தனை ‘அண்ணன்’ மாருக்கும் அவனை தெரிந்திருந்தது. அவனை அவர்கள் வட்டமிட்டுக்கொண்டே இருந்தார்கள்.

அவன் இளம்பெண்களை மட்டுமே விரும்பினான். பதினாறு முதல் இருபது வயதுக்குள் உள்ள பெண்கள். மெலிந்த குள்ளமான சிறுமிகளைப்போன்ற பெண்கள். அவர்கள் கேட்பதை அள்ளி கொடுத்தான். அவர்களை கொஞ்சியும் கெஞ்சியும் சீராட்டினான். ஆனால் இரவில் உறவு முடிந்ததுமே அவன் வெறிகொண்டவனானான்.”தேவ்டியா, தேவ்டியா, நாறத்தேவ்டியா” என்று கூவிக்கொண்டே அவர்களை அடித்தான். “எவனை பாத்தே? இப்ப சொல்லு, எவனைபாத்தே?”என்று அவர்கள் முடியை பிடித்து உலுக்கினான்.

காலையில் அதற்காக மனம் வருந்தி அவர்களுக்கு பணத்தை மேலும் அள்ளி கொடுத்தான். அவர்களின் கால்களில் முத்தமிட்டு கண்ணீர்விட்டு அழுதான். அவர்கள் அவனை எந்த அளவுக்கு அவமதித்தார்களோ அந்த அளவுக்கு பணம் கிடைத்தது. அவர்கள் அவனை தலையில் உதைத்து, கெட்டவார்த்தை சொல்லி காறி முகத்தில் உமிழ்ந்தனர். அவன் அழுதபடி பொன்னை அள்ளி அவர்களின் காலடியில்போட்டான். ஒவ்வொருநாளும் அவன் அழுதபடியேதான் தன் வேலைக்கு திரும்பினான்.

மெல்லமெல்ல அவன் இப்படி என்பது கொல்லம் துறைமுகத்தில் அத்தனை வேசிகளுக்கும் தெரிந்தது. அவனுடன் இருப்பதற்காக அவர்கள் போட்டிபோட்டார்கள். ’அண்ணன்’கள் பெண்களை கொண்டுவரும்போதே அவர்களுக்கு அவனுடைய குணம் என்ன என்று சொல்லி அழைத்து வந்தார்கள். அந்த நாடகத்தை மற்ற பெண்களிடமிருந்து தெரிந்துகொண்ட அவர்களும் சிரித்துக்கொண்டே வந்தனர். அவன் அடிக்க ஆரம்பித்ததும் மிகையாக அலறி அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்பின் அவனை வசைபாடி அடித்து நாடகமாடினர்.

நாலைந்து ஆண்டுகளில் முருகப்பன் மிகவும் உப்பிவிட்டான். அவன் உடல் மஞ்சளாக ஆரம்பித்தது. கண்களுக்கு கீழே தடிப்பான வளையங்கள் வந்தன. காதுமடல்களும் தடித்தன. மூக்கைச் சுற்றி புண்ணாலான கோடுகள் தோன்றின. உதடுகளும் வெந்ததுபோல் இருந்தன. அவனிடம் வெவ்வேறு ஆட்கள் சொல்லிப் பார்த்தனர். ஒருமுறை அவனிடம் பணம் வாங்க வந்த மூத்த சோனகர் ஒருவர் முகம் சுளித்தபடி “வெட்டைச் சீக்குக்காரன் தொட்ட பணத்தை நான் கையால் தொடமாட்டேன்”என்றார்.

அப்போதுதான் அவனுக்கு உறைத்தது. பல மாதங்களாக எத்தனை பணம்கொடுத்தாலும் சிறுபெண்கள் தனக்கு ஏன் அமையவில்லை என்பதும் புரிந்தது. உள்ளூர் அஷ்டவைத்தியர் ராமன் எழுத்தச்சனை போய்ப்பார்த்தான். அவர் அவன் வேட்டியை அவிழ்த்து பார்த்ததுமே திகைத்தார். “முத்திப்போச்சே செட்டி”என்றார். “நல்லா முத்திப்போச்சு. இனி இதுக்கு நம்ம மருந்து கேக்காது”

அவன் மேலும் மேலும் வைத்தியர்களைச் சென்று பார்த்தான். தினசரி தங்கபஸ்பமும் கஸ்தூரி லேகியமும் சாப்பிட்டான். வைத்தியர்கள் வந்து பணம் பிடுங்கிக்கொண்டே இருந்தார்கள். ’அண்ணன்’ ஒருவன் அவனை பறங்கி வைத்தியனிடம் அழைத்துச் சென்றான். அவன் தீபோல எரியும் தைலத்தால் அவன் உடலை கழுவும் மருத்துவமுறை ஒன்றை கையாண்டான். அவன் உடல் தோல் உக்கி அப்படியே வெந்த கிழங்கு போல ஆகியது. ஒரு அண்ணாவி அவனை யுனானி மருத்துவனிடம் கூட்டிச்சென்றான். அவன் கொடுத்த உப்புக்கல்லை உரசி நீரில் கலந்து குடித்தபோது அவன் கைகால்கள் வளைந்து குறுகி குஷ்டரோகி போல ஆகிவிட்டான்.

பண்டகசாலைகளில் வேலைபார்க்க முடியாமலாகியது. எவரும் அருகே வராமலானார்கள். வேலை இல்லாமல் பணமும் இல்லாமல் மருத்துவம் பார்ப்பதும் நின்றது. சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பிச்சை எடுக்க ஆரம்பித்தான்.முதலில் சாலையில் தெரிந்தவர்கள் எவராவது தென்பட்டால்  “பசிக்குது” என்று சொல்லி பணம் கேட்டான். அவர்கள் கொடுக்காமல் சென்றால் மனம் வெதும்பி அழுதான். ஆனால் நாளடைவில் அதுவும் பழகியது.துறைமுகச் சாலையில் இருந்து சந்தைக்குச் செல்லும் குவார்னியர் முடுக்கில் நிரந்தரமாக இருக்கும் பிச்சைக்காரனாக அவன் ஆனான்.

சில ஆண்டுகளிலேயே அவனை முன்பு கண்டிருந்தவர்கள் முகம் மறந்தனர். வாடிக்கரிந்த குறுகிய உடலும் ,வளைந்த கைகால்களும் ,மட்கிய முகமும் கொண்ட முருகப்பனை எதனாலோ ‘பாற்றா பாவா’ என்று அழைத்தனர். பாற்றா என்றால் கரப்பாம்பூச்சி பொருள். அவன் எப்படி பாபா ஆனான் என எவரும் எண்ணிப்பார்க்கவில்லை. அவனும் தன்னை கரப்பாம்பூச்சியாகவே எண்ணத் தலைப்பட்டான். அவன் எந்த ஊர், எந்த மொழி என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. பிச்சைக்காரர்களின் உலகில் அப்படி எவருக்குமே இறந்தகாலம் என்பது இருக்கவில்லை.

வலிநோவு அவனை கஞ்சா பக்கம் கொண்டுசென்றது. ஒரு கட்டத்தில் கஞ்சா இல்லாமல் விழித்திருக்கவே முடியாத நிலை ஏற்பட்டது. அவன் பிச்சை எடுப்பதே கஞ்சாவுக்காகத்தான். அவன் தோற்றமும் பாபா என்ற பெயரும் அவனுக்கு பணம் குறைவில்லாமல் விழச்செய்தன. கஞ்சா துறைமுகத்தில் தாராளமாகவே கிடைத்தது. அவனுக்கு அவன் இருக்கும் இடத்தில் கஞ்சாவை கொண்டுவந்து தருவதற்கு ஆளிருந்தது. கஞ்சா ஏற ஏற விழிகள் மயங்கி உள்ளே திரும்பியதும் அவன் திருக்கணங்குடி கோயிலின் பெரிய கோபுரத்தின் சிற்பங்களில் ஒரு யட்சனாக ஆனான். அவனைச்சுற்றி கந்தர்வப்பெண்களும் யட்சிகளும் நிறைந்திருந்தனர்

ஒருநாள் அவன் ஒரு கந்தர்வப்பெண்ணுடன் அணுக்கமாக இருந்தான். “தேவ்டியா தேவ்டியா” என்று அவளை அவன் வசைபாடினான்.அவள் “சீ” என்று அவனை நோக்கி சீறினாள். அவன் அவள் முகத்தை அருகே பார்த்தான். அலறிக்கொண்டு விழித்துக்கொண்டான்

அன்றே அவன் கொல்லத்திலிருந்து கிளம்பிச் சென்றான். அவன் சென்றதை எவரும் பார்க்கவில்லை. எப்படிச் சென்றான் என்று எவரும் எண்ணவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் அப்படி எண்ணிப்பார்க்கிறவர்களாகவும் இருக்கவில்லை.

 

[ 4 ]

 

திருக்கணங்குடி தெற்குமண்டகப்படி தெருவில் இருந்தது எறிமாடசாமி, உடனுறை நங்கை கோயில். அரிசிவாணியர் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட கோயில் அது. சில ஆண்டுகளுக்கு முன் கோயில் காணிக்கை சம்பந்தமாக அரிசிவாணியர்களின் இரு சமூகங்களுக்கு நடுவே அடிதடி நடந்து இரண்டுபேர் சாகநேர்ந்தபின்னர் திருக்கணங்குடி ராயசம் ஆணைப்படி அங்கே பூசைக்கான முறைகள் வகுக்கப்பட்டன. ஆண்டுக்கு இரண்டு முறை இரண்டு சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் தனித்தனியாக பூசைமுறைகள் நடத்திக்கொள்ளவேண்டியது என்று ஆணை.

ஆனால் அடிதடிக்குப்பிறகு பணகுடி வகையறா திருக்கணங்குடிக்கு வருவதை நிறுத்திக்கொண்டார்கள். அடுத்த ஆண்டு திருக்கணங்குடி வகையறாவிலும் இரண்டு குழுக்களாகி அடித்துக்கொண்டபின், பலவகையான பஞ்சாயத்துக்களுக்குப்பிற்பாடு, யாருமே கும்பிட வராமலானார்கள். பக்தர்கள் வராததனால் பூசைசெய்ய எவருமில்லை. அன்றாடப்பூசைக்கே செலவுசெய்ய ஆளில்லை. கோயிலுக்கு பாத்தியதை கோரி சண்டைபோட்ட குடும்பங்கள் “நமக்கு என்ன தலையெளுத்தா? இல்ல கேக்கேன். ஊருக்கு சாமிய வேண்டாம்னா நமக்கு என்ன மசுத்துக்கு?” என்று சொல்லிவிட்டன.

அரிசிவாணியர்களில் எவருக்காவது கெட்டசொப்பனம் வந்தாலோ, ராத்திரி முனி வழி மறித்ததாக தோன்றினாலோ, பிள்ளைகளுக்கு நோவுகண்டு வேண்டிக்கொண்டாலோ, நள்ளிரவில் ஒரு கோழியை கொண்டுவந்து கழுத்தறுத்து பலிபீடத்தில் நான்குசொட்டு ரத்தம் விட்டபின் உப்பில்லாமல் பச்சரிசியுடன் சமைத்து கறிக்கஞ்சி படைத்து கும்பிட்டுவிட்டு போனார்கள். மற்றபடி ஆண்டுகொடை திருவிழா நித்தியபூசை என ஏதுமில்லை

கோயில் சிறியதுதான். இரண்டு ஆளுயரமான செங்கல் சுவர்களுக்குமேல் பனங்கை உத்தரங்களினாலான ஓலைவேய்ந்த கூரை கொண்டது. உள்ளே இரண்டு நடுகற்களாக எறிமாடசாமியும் உடனுறை நங்கையும் அமர்ந்திருந்தனர். இருபக்கமும் ஒருமுழம் உயரமான இரண்டு கல்தூண் அகல்விளக்குகள் கன்னங்கரிய எண்ணைப்பிசுக்குடன் நின்றன. அங்கே நின்றிருந்த ஓர் ஆலமரம் கொஞ்சம் வளர்ந்து சடைபோல விழுதுகளை காற்றிலாடவிட்டிருந்தது.

கோயில் நெடுங்காலம் திறந்துதான் கிடந்தது. உடனுறைநங்கை அணிந்திருந்த பொற்தாலியை எவரோ திருடிக்கொண்டு போன பிறகுதான் கம்பி அழியாலான கதவு போடப்பட்டது.தெருவில் போகிறவர்களுக்கே அந்த நடுகல் வடிவங்களில் வரையப்பட்ட கண்களும் மீசையும் தெரியும். அரிசிவாணியர்கள் மட்டும் போகிறபோக்கிலேயே திரும்பி கன்னத்தில்போட்டுக்கொள்வார்கள். மற்றவர்கள் எப்போதாவது கும்பிட்டால் உண்டு.

எறிமாடசாமிக்கு கட்டப்பட்ட பட்டுத்தலைப்பாகையும் உடனுறைநங்கையின் பட்டுப்பாவாடையும் ஆண்டுக்கு ஒருமுறைதான் மாற்றப்பட்டன. ஆகவே அவை நிறம் மங்கி புழுதிபடிந்திருந்தன. அங்கே அன்றாடபூசனை என ஏதுமில்லை. கடைசியாக பூசை செய்தவர்கள் அணிவித்த மலர்மாலைகள் சருகுகளாகி கல்மேல் சுற்றிக்கிடந்தன. கொடை கொடுத்தவர்கள் கறிக்கஞ்சி குடித்துவிட்டு வீசிவிட்டுப்போன பனையோலை தொன்னைகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன

அங்கே ஒருநாள் ஒரு குஷ்டரோகிப் பிச்சைக்காரன் தோன்றியபோது எவரும் பொருட்டாக நினைக்கவில்லை. அவ்வழியே சென்றவர்கள் ”ஆளு யாரு, புதிசா இருக்கே?”என்று எண்ணிக்கொண்டார்கள். அரிசிச்செட்டியார் குலத்து முதலடி அரவணைப்பெருமாள் நின்று கூர்ந்து பார்த்து “ஆருவே? எந்த ஊரு?”என்றார்.

பிச்சைக்காரன்  ”ஆருண்ணா கேக்கே? வேய், இந்தா உள்ள கல்லிலே அடிச்சு வைச்சிருக்கேருல்லா, அந்த முருகப்பன் செட்டி நானாக்கும். கிட்டத்திலே நிக்கப்பட்டது எனக்க பெஞ்சாதி வள்ளியம்மை. தெரிஞ்சுகிடும். உம்மாணை ஓய், கள்ளமில்லை”என்றான்.

“செரி, கஞ்சாக்குடிக்கி” என்று முடிவு செய்த அரவணைப்பெருமாள் “இங்கிண இருக்கப்பட்டது செரி. அளுக்கு தூமை பண்ணி வைக்கப்பிடாது. ஆளோடே அப்டியே வாரி தூர எறிஞ்சுப்போடுவேன்”என்றார்

“வே, இது எனக்க இடம். இந்தா  கல்லா நிக்கப்பட்டது நான். பணகுடி அரிசிச்செட்டி மாயாண்டி மகன் முருகப்பனாக்கும் நான். என்னைய தூக்கி வீச நீரு ஆருவே?”

“சவம் கிறுக்குன்னுல்லா தோணுது”என்றபடி அரவணைப்பெருமாள் சென்றார்

பிச்சைக்காரன் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டான். அவனால் நடக்கமுடியாது. தவழ்ந்து தவழ்ந்து ஊருக்குள் போய் கோயிலுக்கு வருபவர்களிடம் பிச்சை எடுப்பான், அவனுக்கு கஞ்சா கொண்டுவந்து கொடுக்கவும் ஆளிருந்தது. கஞ்சாவை இழுத்ததும் தொண்டை திறந்துகொள்ளும். அதன்பின் எறிமாடனுக்கும் உடனுறை நங்கைக்கும் மொட்டைவசைதான்

“ஏ நாறமிண்டைத் தேவ்டியா… ஏட்டி குச்சிக்கார களுதை. விட்டைதீனி, தூமைக்குடுக்கி, புளுத்த நாயே, சிரிக்காதே. உனக்க வெளையாட்டு எனக்கு தெரியும். கட்டினவன் இருக்க உனக்கு பொலிகாளை வேணுமாடி பொச்சரிப்பு வச்ச பொறவாசக்காரி… சூத்தளிஞ்ச நாயே, ஏலே ஆம்புளையா இருந்தா சொல்லுலே, அவ உனக்க பெஞ்சாதின்னு. ஏலே ,என் மூஞ்சியபாத்து சொல்லுலே பாப்பம். கண்டவன் பெஞ்சாதிய கிட்டத்திலே வச்சுக்கிட்டு நிக்குதே… உனக்கு வெக்கமில்லியாலே?”

விடியவிடிய குரல் கேட்டுக்கொண்டிருக்கும். பின்னிரவில் கொஞ்சம் ஓயும், மீண்டும் ஆரம்பமாகிவிடும்.

“அவனுக்கு என்ன தீனம்?”என்று அணைக்கரைப்பெருமாள் நாடார் கேட்டார்

“மனோரோகம்”என்றார் சூடாமணிப்பெருமாள்

“அவன் சொல்லுகதிலே என்னமோ காரியமுண்டு. அவன் செட்டியாக்கும்னு சொல்லுதான்”

“அப்டி பலதும் அவனுகளுக்கு தோணும்”

சிலநாட்கள் நேர்மாறாக பிச்சைக்காரன் மகிழ்ச்சியான மனநிலையில் உடனுறை நங்கையிடம் சரசமாடிக்கொண்டிருப்பான். “உள்ளதைச் சொல்லணுமானா எனக்கு உன்மேலே ஒரு கோவமும் இல்ல கேட்டியா? நீ பொலிகாளையை நினைச்சு சந்தோசமா இருந்தா அந்நேரம் எனக்கும் சந்தோசமாத்தான் இருக்கும். ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவிலே அம்பிடு வெளையாட்டு உண்டும்லா? கசப்பாக்கும் அதிமதுரம். நாத்தமாக்கும் தீராத்த நறுமணம்.வெசமாக்கும் நல்ல லகரி. என்ன சொல்லுதே? ”

“இவன் என்ன சொல்லுதான்?”என்று ஒருநாள் நல்லசிவம் செட்டியார் கேட்டார்

“உடனுறைநங்கையை போகிக்கிறானாம்”

“அடி தாயோளிய செருப்பாலே”

“செட்டியாரெ, இதுக்கு முன்னாலே யாரையாவது செருப்பாலே அடிச்சிருக்கேரா?” என்றார் நாராயணக் கோனார்.

“செட்டி அடிச்சும் தவளை கடிச்சும் செத்தவன் உண்டா வே?”

“பின்ன?” என்று கோனார் சிரித்தார்

நல்லசிவம் செட்டியாரும் சிரித்துவிட்டார். “இல்ல, இவன் என்ன பேச்சு பேசுகான்?”

“அவன் பேசத்தானே செய்யுகான்? விடும்”

“வே, அவன் உண்மையாட்டே அவனாக்கும் பணகுடி முருகப்பன் செட்டின்னு சொல்லுதான்”

”ஒருவேளை வந்து எறங்கியிருக்குமோ?”

“ஆரு?”

“எறிமாடன்… நாம இப்ப கொடையும் குடுக்குறதில்லை. இந்த ஆளுக்குமேலே வந்தெறங்கியிருக்குதது மாடனேதானா?”

”போவும்வே… ஆளப்பாத்தா காய்ஞ்ச பீ மாதிரி இருக்கான்”

“மாடனுக்கு எல்லாம் ஒண்ணுதான். உபாசனை உள்ள மனசுதான் அவனுக்க பீடம்”

”கிறுக்கு பேசாதீரு”

ஆனால் அவர் சொன்னது பரவ ஆரம்பித்தது. பலரும் பலவாறாகப் பேசிப்பரப்பினார்கள். பெருவடி அருணாச்சலம் பிள்ளை ஒரு நிலவுநாளில் உடனுறை நங்கை பெண்வடிவில் தோன்றி அவனுடன் பேசிக்கொண்டிருப்பதை கண்ணால் பார்த்ததாக சத்தியம் செய்தார்.”கண்ணாணே வே, எனக்கு அப்டியே சிலுத்துப்போச்சு. அப்டி அந்தாலே காலுமேலே காலுவைச்சு அப்டியே கல்லுச்சிலைமாதிரி இருக்கா அம்மை. இவன் இப்டி இந்தாலே இருக்கான்.ரெண்டுபேரும் இருந்து பேசிக்கிட்டிருக்காங்க. சிரிப்பு அப்டி கேக்குது… என்னண்ணு சொல்ல?”

“ராத்திரி சிவமூலி இளுத்திருப்பாரு போல”என்று அவர் போனபின் கடம்பூர் நாராயணன் சொன்னான். ஆனால் அவர் சொன்னது ஒரே நாளில் ஊரெல்லாம் பரவிவிட்டது

பணகுடியில் இருந்து மாதேவன்பிள்ளை பாட்டா வந்தார். “எங்கலே இருக்கான்?”என்றார்

அவரை அவர்கள் கோயில் அருகே கொண்டுசென்றதும் அவன் அவரை பார்த்து “இந்நா வாறாரு மாதேவன்பிள்ளை… வேய் மாதேவன் பிள்ளை, சொல்லும்வே. நான்லா இந்நா கல்லாட்டு நிக்குதேன்?. இவ எனக்க கெட்டினவ வள்ளியில்லா?”என்றான்

மாதேவன்பாட்டா திகைத்து நின்றார். பின்னர் “ஆளு தெரிஞ்சிருக்கு… இவன் ஆரு?”என்றார்

பின்னால் சண்முகம்பிள்ளையும் திருவடியா பிள்ளையும் வந்தனர். “சம்முகம் பிள்ளைவாள், திருவடியா பிள்ளைவாள் ரெண்டுபேரும் உண்டே. அய்யா நானாக்கும் இந்நா சாமியா நிக்குதவன்.. இவ எனக்க பெஞ்சாதி வள்ளி. உமக்கு தெரியும்ல? சொல்லும்வே”

மாதேவன் பிள்ளை “இது மத்ததுதான். ஆவேசிதம்”என்றார். “சிலவேளை துடியுள்ள மாடனுங்க இப்டி ஆளுமேலே எறங்கிடுதது உண்டு. கல்லுண்ணா நினைக்கே, செரி அப்டின்னா மனுசனா வாறேன்டான்னு சொல்லுதான் மாடன்”

”நாம முறையா கொடை குடுத்து பல ஆண்டு ஆகுது பாத்துக்கிடுங்க”

“ஆமா ….அதாக்கும் காரியம். கொடை முடங்கிக் கிடக்கு. கொடை குடுக்கணும்…”

கொடைக்கான ஏற்பாடுகள் தொடங்கின. திருக்கணங்குடி காராய்மை முதலடி கண்ணன் பிள்ளை நூறுபணம் கொடுத்ததும் அத்தனைபேரும் ஆளுக்கு ஆள் பணம் கொடுக்கலாயினர். கோயிலைச் சுற்றி நூற்றுகால் பந்தல் அமைந்தது. அரிவைப்பு சாலை அப்பால் கட்டப்பட்டது. வாழைக்குலைகள், காய்கறிகள், கருப்பட்டி சிப்பங்கள் வந்து சேர்ந்தன. பணகுடியிலிருந்தும் ஆட்கள் வந்து மாடனையும் உடனுறை நங்கையையும் கும்பிட்டுச் சென்றனர்

பிச்சைக்காரனுக்கு எந்த குறைவுமில்லை. இருந்த இடத்திலேயே சோறும் கஞ்சாவும் வந்தது. அது அவன் தெம்பை கூட்டியது. அடிவயிற்றிலிருந்து கத்திக்கொண்டிருந்தான். “ஏலே, நான் சாகல்லை. இந்தா கல்லு மாதிரி நான் நிக்கேன். கல்லை வச்சு கும்பிடுதியளே… நானாக்கும் அரிசிவாணியன் முருகப்பன். இந்நா நிக்கப்பட்டவ எனக்க பெஞ்சாதி. இந்த தடிமாடன் எனக்க பெஞ்சாதியை பக்கத்திலே நிக்கவச்சுக்கிட்டு நிக்கான்… அறுதலிபெத்த பய அடுத்தவன் பெஞ்சாதிக்கு ஆசைப்படுதான். என்னைய கும்பிடுங்கலே, கல்லைக் கும்பிடுதீக…நாறமிண்டைங்க, அறிவுகெட்ட செண்டைங்க..”

செவிபுளிக்கும் சொற்களால் அவன் உடனுறைநங்கையை வசைபாடினான்.”இப்டி போட்டு தானக்கேடு அறுக்குதானே?”என்றார் ஆனைக்கண் தேவர்

“அதனாலேதான் இப்டி இருக்கான்… அதொரு தெய்வசாபமாக்கும்”

“இருந்தாலும் கோயில் இருக்கப்பட்ட எடத்திலே”

“வேய், வந்து எறங்கியிருக்கது மாடனாக்கும். மாடனுக்கு இதாக்கும் பேச்சு பாசைன்னா நீரும் நானும் என்ன செய்ய?”

கொடையன்று காலை உடனுறை நங்கைக்கு பணகுடி செட்டிகுல முதலடி கணக்கில் மிகப்பெரிய மலர்மாலை கொண்டுவரப்பட்டது. புதியபட்டுப்பாவாடை உடுத்தி பொற்தாலி அணிந்து மஞ்சள்பூசி பொட்டுவைத்து அம்மை மங்கலமாக இருந்தாள். மலர்மாலையை பூசகர்கள் அம்மைக்கு அணிவிக்க கொண்டுபோனபோது பிச்சைக்காரன் எழுந்து வந்து அதைப் பிடிக்கப்போனான்

“அறுதலித் தேவ்டியாளுக்கு மாலையா? கெட்டினவன் இருக்க கண்டவனுக்கு தீப்பாஞ்ச சிறுக்கிக்கு மாலையும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம்”

ஆனால் மாலையை தூக்கிவந்த ஆறுமுகக்கண் ஒரு தள்ளு தள்ளி விட்டான். பிச்சைக்காரன் அப்படியே மல்லாந்து விழுந்துவிட்டான். அசைவே இல்லை

“ஏலே, அந்தாலே கெடக்கான்லே… பாருலே”

மூச்சு இல்லை. உலுக்கிப் பார்த்தபோது தெரிந்தது, உயிர் போய்விட்டிருந்தது.

“பேசாம எடுத்து கிடத்துலே. ஒரு மாலையை அவன் மேலெயும் போடு. சித்தர் சமாதியாயிட்டார்னு சொல்லி வைப்போம்”

சித்தன் சமாதியான செய்தி பரவி ஊரே கூடியது. கொடை ஒருநாள் ஒத்திப்போடப்பட்டது. சித்தன் அங்கே ஒரு பழைய துணிப்பொட்டலம் வைத்திருந்தான். அதற்குள் அழுக்குத்துணிகள் செம்மியிருந்தன. அவனையும் துணிப்பொட்டலத்தையும் கொண்டுபோய் ஏரிக்கரை சிதையில் வைத்தனர். ஊர்கூடி எல்லாவற்றையும் செய்தது. சுடுகாட்டுக்கு நாற்பதுபேர் சென்றிருந்தார்கள்.

“சட்டப்படி சித்தபுருஷனை பத்மாசனத்திலே யோகமுத்திரையோட இருக்கவைச்சு புதைச்சு மேலே சிவலிங்கம் வைக்கணும்”என்றார் நமச்சிவாயம் பிள்ளை. “ஆண்டோடாண்டு பூசையும் கொடையும் வேணும்”

“அப்டி அவரு சொல்லிட்டுப் போகல்லேல்லா… நல்ல சீக்குப்பட்ட உடம்புவேற” என்றார் திருவடியா பிள்ளை.

“ஆமா, சொல்லல்ல”

“எரிச்சுப்போடுவோம். சித்தனுக்கு எல்லாம் சமம்தான்” என்றார் திருவடியா பிள்ளை.

சித்தன் சிதைக்கு ஊருக்கு வந்த ஒரு அயலூர் பண்டாரத்தைக் கொண்டு எரியூட்டினார்கள்.

“எரியுறப்ப ஒரு மணம் வருதுல்லாடே?”என்றார் பெருவடி அருணாச்சலம் பிள்ளை

“ஒருமாதிரி ஒரு கற்பூர வாசனை” என்றார் அம்மச்சிமடம் சிவன்பிள்ளை

அதை மறுத்துப்பேச எவரும் துணியவில்லை. அனைவரும் சித்தரின் பெருமைகளை பேசியபடி திரும்பி வந்தனர்.

“அவரு ஒருதடவை தன்னை யட்சன்னு சொன்னாரு… திருக்கணங்குடி கோயில் கோபுரத்திலே சிலையா நிக்கப்பட்ட யட்சனாக்கும்டே நான்னு சொன்னாரு” என்றார் அருணாச்சலம்பிள்ளை

அதை நமச்சிவாயம்பிள்ளையும் கேட்டிருந்தார். பலரும் கேட்டதாகச் சொன்னார்கள்

“யட்சனோ என்னமோ. நாம என்ன கண்டோம்? இந்த பூலோகத்திலே நாம கண்டதா நடக்குது?”என்றார் திருவடியா பிள்ளை

மறுநாள் சிதை காணப்போன வெட்டியான் ஊருக்குள் வந்து அலறி அழைத்தான். அத்தனைபேரும் சிதைக்கு ஓடினார்கள். சிதை எரிந்த சாம்பலில் பொன் உருகி படர்ந்திருந்தது. தூய பசும்பொன் பாம்புபோல சுருண்டு பளபளத்தது.

“பொன்னாடே?”

“ஆடகப்பசும்பொன்… யட்சர்களுக்கு அந்த வெளையாட்டு உண்டு”என்றார் பெருவடி அருணாச்சலம்பிள்ளை

அந்தப்பொன் சேகரிக்கப்பட்டது. நூறுவராகனுக்குமேலே தேறியது பொன். அதைக்கொண்டு கோயில் கல்லால் எடுப்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மிகப்பெரிய அளவில் கொடைவிழா நடைபெற்றது. திருக்கணங்குடி பணகுடி வகையறாக்கள் இருசாராரும் பகை மறந்து கலந்துகொண்டார்கள். பதினெட்டு கடா வெட்டி ஊரே சாப்பிட்டு கொண்டாடிய கொடை. திருநெல்வேலி வீரம்மாள் கோஷ்டியின் கரகாட்டம் கும்பாட்டம், பேட்டை கான்சாகிப்பின் அடிமுறை வின்னியாசம், சூரங்குடி ஜமாவின் கணியான் மகுடம், புலவர்விளை நாராயணன் நாடாரின் வில்லுப்பாட்டு என ஒரு பெரிய திருவிழாவின் எல்லா அம்சங்களும் இருந்தன.

கோயிலுக்குள் எறிமாடசாமிக்கும் உடனுறைநங்கைக்கும் நேர்கீழாக அவர்களின் காலடியில் பக்கவாட்டில் பார்ப்பதாக உருளைக்கல் வடிவில் இயக்கன்சாமிக்கும் ஒரு பிரதிஷ்டை நிறுவப்பட்டது. வெண்ணிறத்தலைப்பாகை அணிந்து பெரிய கண்களை விழித்து உடனுறைநங்கையையும்  எறிமாடனையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் இயக்கன்சாமி.

*********************************

5 கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3. வலம் இடம் [சிறுகதை]

2. கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

 

முந்தைய கட்டுரைநகரங்கள், மலைகள்
அடுத்த கட்டுரைஒருமையும் முழுமையும்