கந்தர்வன் [சிறுகதை]

[ 1 ]

மதுரை பெரியநாயக்கர் விஜயரங்கசொக்கநாதர் தன் படைகளுடன் திருக்கணங்குடிக்கு வருவது உறுதியானதுமே பணகுடி புறக்காட்டில் காராய்மைக்காரர்கள் அறுபதுபேர் கூடி என்ன செய்வது என்று யோசித்தார்கள். காராய்மைக்காரர்கள் அனைவருக்கும் ஓலை போகவில்லை. அவர்களில் எட்டுபேர் கோழைகள், நாவில் சொல்நிற்காதவர்கள். நான்குபேர் புல்லுருவிகள். பிழைப்புக்காக மற்றவர்களை காட்டிக்கொடுக்க அஞ்சாதவர்கள்.

ஊராய்மைக்கார நம்பூதிரிகளுக்கு செய்தி தெரியக்கூடாது என்பதில் சத்தியம் காக்கப்பட்டது. ஆனால் அவர்களில் முதலடி வலியகோணன் நம்பூதிரிக்கு சிறிய சந்தேகம் இருந்தது. அவர் காராய்மைக்காரர்களில் ஒருவரான மேலோட்டுக்கோணம் கொச்சு பகவதியாபிள்ளையிடம் “என்னடே பகவதி? என்னவாக்கும் காரியங்கள்? நாயக்கரு வாற காலமாக்குமே? நாம இருக்கோம்னு காட்டவேண்டாமாடே? இல்லேன்னா செத்த பொணம்னு எடுத்து சாத்திட்டுப் போயிடுவான்லா டே?” என்று சொல்லிப்பார்த்தார்.

கொச்சு பகவதியாபிள்ளை “நாம என்ன செய்ய? தலைக்கு மேலே கிரீடம் வைச்சு இருக்கப்பட்டவன் கண்கண்ட பெருமாளாக்கும்… அவன் அடிச்சாலும் அவன் பெயரைச் சொல்லில்லா அழணும்?” என்றார்.

“நீ தண்ணியிலே தடம் பாக்கத்தெரிஞ்ச கள்ளனாக்கும்டே” என்று நம்பூதிரி சொல்லிவிட்டார்.

விஜயரங்க சொக்கநாதர் ஏற்கனவே திருநெல்வேலி வந்து நயினார்குளத்துக்கு அருகே இருந்த வசந்தகொட்டாரத்தில் தங்கியிருந்தார். பணகுடி, வள்ளியூர், திருக்கணங்குடி, நான்குநேரி, தளபதிசமுத்திரம் பிடாகைகளில் இருந்து காராய்மைக்காரர்களும் கரைவேளாளர்களும் கூடி அவரைச் சென்று பணிந்து சங்கடம் உணர்த்திக்க முயன்றனர். சங்கட ஹர்ஜி ஒன்றையும் அனைவரும் சேர்ந்து எழுதினார்கள். அதற்கு ஐம்பது வெள்ளிப்பணம் கொடுத்து சுந்தரையன் என்ற பிராமணனை அமர்த்திக்கொண்டார்கள்

அதில் திருக்கணங்குடி ராயசம் திம்மப்பையனைப் பற்றியோ, கோயில் காறுபாறு வேங்கட சுப்பையரைப்பற்றியோ ஒரு வார்த்தைகூட குறைசொல்லக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டார்கள். எங்கும் தொடாமல் சுற்றிச்சுற்றி வந்த சங்கடஹர்ஜியில் பெரும்பாலான சொற்களில் பெரியநாயக்கர் விஜயரங்க சொக்கநாதர், அவருடைய மகாமாத்ரிகர் நரசப்பையர், தளவாய் வெங்கடராகவாச்சாரியார், ராயசம் சுப்பண்ணா ஆகியோரை பற்றிய புகழ்மொழிகளும் துதிகளும்தான் நிறைந்திருந்தன. திருக்கணங்குடி ராயசம் திம்மப்பையன், அவருடைய அமாத்யன் கிருஷ்ணப்பையன், கோயில் காறுபாறு வேங்கட சுப்பையர் ஆகியோர் பற்றியும் புகழ்மொழிகளும் துதிகளும் கூடவே இருந்தன.

அனைவரையும் முறையாக வாழ்த்திய பின்னர் அரசாங்கத்தால் கல்பித்து கைக்கொள்ளப்படும் பூமிகரம் எனப்படும் நிலவரியானது எல்லாவகையிலும் நியாயமானதாகவும் நாட்டின் க்ஷேமத்துக்கு இன்றியமையாததாகவும் இருந்தாலும், அதை ஆண்டோடாண்டு அளிப்பதென்பது காராய்மைக்காரர்களுக்கும் கரைவேளாளர்களுக்கும் மிகக்கடினமானதாக இருப்பதாகவும்; அதற்கு காரணம் மழைவளம் குறைந்து ஏரிகள் வறண்டு குடியான்கள் காட்டுக்கு மலையேறி கன்றுகாலிகள் செத்தொழிந்து கூடவே நடப்புதீனமும் நடுக்குகாய்ச்சலும் வந்து ஊரே தட்டழிந்ததுதான் என்றும்; அரசரின் தானதர்ம விசேஷத்தாலும் தெய்வ கைங்கரிய வைபவத்தாலும் வானம் கனிந்து மழைவளம் சுரந்து ஏரிகள் பெருகி ஊர் செழித்து வயல்கள் நிறையும்போது கரமும் தீர்வையும் பாட்டமும் வாரமும் கணக்குவைத்து தலைகொண்டு மரக்கால் சுமந்து அள்ளி அள்ளி அளித்து ராஜ பண்டாரத்தை நிறைத்துக் கொள்கிறோம் என்ற உறுதிமொழி எடுப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது.

ஏற்கனவே அளிக்கப்படாத வரி நான்குமடங்கு நிலுவையிலிருந்தது, அதை ரத்துசெய்யவேண்டும் என்று மாராயவிளை அப்புசிவம் பிள்ளை சொன்னார். “அதை இப்ப அளந்து குடுத்தா மேக்கொண்டு மண்ணை அள்ளித்தான் விதைக்கணும்… அடுத்த பூவுக்கு நாமளும் பூதப்பாண்டி மலையேறி அந்தாலே போகவேண்டியதுதான்.”

“அதை இப்ப இதிலே எளுதினா…” என்று நாலுமலை பரமேஸ்வர பிள்ளை இழுத்தார்

“சொல்லுகதுக்கு என்னா? இப்ப சொல்லேல்லன்னா வேற எப்ப சொல்லப்போறம்?”

எனவே அதையும் எழுதிச்சேர்த்தார்கள். ஆனால் சங்கட ஹர்ஜி எழுதப்படுவது அதை எழுதி முடிப்பதற்குள்ளாகவே திருக்கணங்குடி ராயசம் திம்மையனுக்கு தெரிந்துவிட்டது. அவனுடைய ஆணையின்படி நாற்பது குதிரைகளில் படைவீரர்கள் சங்கட ஹர்ஜி எழுதப்பட்டுக்கொண்டிருந்த வள்ளியூர் மலைக்கோயில் மண்டபத்துக்கு வந்துவிட்டனர். அங்கிருந்த அனைவரையும் அடித்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். அவர்கள் அனைவருக்கும் ஆளுக்கு பத்து கசையடியும் ஆயிரம் நாழி நெல் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஆனால் அந்த ஓலையை எப்படியாவது அமாத்யர் நரசப்பையர் அல்லது தளவாய் வெங்கடராகவாச்சாரியர் கைக்கு கொண்டுசென்று சேர்ப்பித்துவிடவேண்டும் என்று நிலைச்செவல் காராய்மைக்காரர் நல்லகுத்தாலம் பிள்ளை திட்டமிட்டார். அந்த ஓலையிலிருந்த வார்த்தைகள் அவருடைய கணக்குப்பிள்ளை குமரேசக் கம்பருக்கு நினைவிலிருந்தது. அவர் அதை இன்னொரு ஓலையில் எழுதினார். குத்தாலம்பிள்ளையே அதில் தன்னுடைய சக்கர வடிவத்தை பொறித்து எடுத்துக்கொண்டு ரகசியமாக திருநெல்வேலிக்கு போனார்.

சவுக்கடி பட்டு முதுகுத்தோல் உரிக்கப்பட்டிருந்தமையால் முழுப்பயணத்திலும் நல்லகுத்தாலம்பிள்ளை குப்புற படுத்தே செல்லவேண்டியிருந்தது. திருநெல்வேலி சன்னிதித்தெருவில் எங்கே தங்கினாலும் ஆள்வைத்து பிடித்துவிடுவார்கள் என்பதனால் அவர் தாசித்தெருவுக்குச் சென்று அங்கே ஸ்ரீவில்லிப்புத்தூர் உலகம்மை வீட்டில் தங்கினார். பக்கத்து கட்டிடம் கூழைக்காட்டாள் பங்கஜவல்லியின் வீடு. அங்கே தளவாய் வெங்கடராகவாச்சாரியார் வருவதுண்டு. அப்போது அறிவிப்பில்லாமல் கொல்லை வழியாக உள்ளே சென்று முதுகைக்காட்டி அழுது ஓலையை சமர்ப்பிக்கவேண்டும் என்பது திட்டம்.

ஆனால் உள்ளே நுழையும்போதே அவரைப் பிடித்துவிட்டார்கள். கட்டி இழுத்து கொண்டுபோய் வெங்கடராகவாச்சாரியார் முன் நிறுத்தினர். அவர் முதுகுப்புண்ணைப் பார்த்து கொஞ்சம் இரங்கினார். ஆனால் ஓலையை வாசித்ததும் வெறிகொண்டார். நல்ல குத்தாலம் பிள்ளை அங்கேயே எங்கோ தலைவெட்டி புதைக்கப்பட்டார்.

அதன்பிறகும் பெரியநாயக்கரை நேரில் கண்டு ஓலையில் இருந்த விஷயங்களை தெரிவிக்க முயற்சி செய்யப்பட்டது. விஜயரங்க சொக்கநாதன் பெரும்பக்தன். நெல்லையில் தங்கிக்கொண்டு நான்குநேரி தொட்டுத் தொடங்கி தாமிரவருணிக்கரை திருப்பதிகளில் எல்லாம் விஷ்ணுதரிசனம் நடத்திக்கொண்டிருந்தான். அவன் செல்லுமிடமெல்லாம் ஓலையைக் கொண்டுசென்று அவனிடம் கொடுத்துவிடுவதற்காக காராய்மைக்காரர்கள் ஆளனுப்பினர். எல்லா முயற்சிகளையும் நரசப்பையரும் வெங்கடராகவாச்சாரியாரும் திறம்பட தடுத்து நிறுத்தினர். ஓலையுடன் போன எட்டுபேர் எட்டு இடங்களில் தலைவெட்டி புதைக்கப்பட்டனர்.

காராய்மைக்காரர்கள் சோர்ந்து இருக்கும்போதுதான் பெரியநாயக்கர் திருக்கணங்குடிக்கு வரும் செய்தி வந்தது. ஆனால் ஏற்கனவே வெவ்வேறு கோயில்களில் நாயக்கர் சன்னிதிக்கு காராய்மைக்காரர்களில் சிலர் முண்டியடித்து நுழைய முற்பட்டமையால் இம்முறை ஏழடுக்கு காவல் ஏற்பாடு செய்யப்பட்டது. காராய்மைக்காரர்களும் கரைவேளாளர்களும் தங்கள் காணிக்கைகளை மட்டும் அரசரின் செங்கோலின் முன் கொண்டுவந்து படைத்தால்போதும் என்று ஆணையிடப்பட்டது. அரசரின் செங்கோல் மதுரையில் இருந்தது. ஆகவே செங்கோலுக்குப் பதிலாக ஒரு பூங்கொத்துக்கிளை அரியணையில் வைக்கப்பட்டது. அவர்கள் காணிக்கைகளை படைத்துவிட்டு விலகிச் சென்றபின்னர் பெரிய நாயக்கர் கல்பித்து எழுந்தருளி அவற்றை திருக்கண் பார்த்து ஏற்றுக்கொண்டு அருள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

“இவன் என்ன ராசா? அவனுக்க ஜனங்கள் ஒரு வார்த்தை அவன்கிட்ட சொல்ல முடியாதுன்னா இவன் என்னத்துக்கு கோலும் முடியுமாட்டு அலையுதான்?” என்றார் கரிவந்தநல்லூர் பத்மநாப பிள்ளை.

“பெரிய பக்தனாக்கும்…” என்றார் பேராலங்காட்டான் சுப்பு பிள்ளை.

“மயித்தினான்” என்று பத்மநாப பிள்ளை காறித்துப்பினார்

“நம்ம ஓலையை அவன் கிட்ட கொண்டுசேக்க வளியே இல்லை… அப்டி ஒரு வளி இருந்திருந்தா சீவில்லிப்புத்தூரிலயும் திருநெவேலியிலயும் கழுகுமலையிலயும் ஓலையால அவனை மூடியிருப்பானுக…” என்றார் அம்பரம் தாணுபிள்ளை. “எட்டெரட்டி வரி. அபராத வரி. மாடுன்னா கறவை வத்தினா கொன்னு தோலும் கொம்பும் கொண்டுபோயி குடுக்கலாம். இது மண்ணு… அடிக்கமுடியுமா, அறுத்து கொல்ல முடியுமா? என்ன செய்ய?”

“வடுகப் பாப்பானுக… அவன் என்ன வயலைக்கண்டானா, வெளைச்சலைக் கண்டானா?”

“ஏன் அதுக்கு மின்னாடி பாண்டிப்பாப்பான் இருந்தானே? அவன் காலத்திலேதானே வே கூடுதல் வரி பொறுக்க முடியாம நம்ம மூத்தான்மாரு தலைமுதல் காலுவரை நெய்யை விட்டுக்கிட்டு எரிச்சு செத்தாங்க? சோளராஜா காலத்திலே ஊரோட தீயவைச்சுக்கிட்டு குலமுடியச் செத்தாங்க? இது நமக்கு எப்பமும் உள்ள விதியாக்கும். நக்கி நக்கி மேய்ஞ்சு குட்டி பெத்து வளக்கும் பசு. அதை பிடிச்சுக் கிளிச்சு திங்கும் புலி. அது பிரம்மனுக்க வெளையாட்டாக்கும்” பிரமநாயகம்பிள்ளை சொன்னார்.

“சும்மா பேச்சு வேண்டாம்… செய்யுகதுக்கு என்ன உண்டுண்ணு பாப்பம்”

“செய்யுகதுக்கு ஒண்ணுமில்லை. நாம எப்டி போனாலும் நாயக்கனை கிட்டக்க போயி பாக்கமுடியாது. வேணுமானா இப்ப இவரு சொன்னது மாதிரி தீயவைச்சு கொளுத்திக்கிடலாம்” என்றார் பத்மநாப பிள்ளை.

“பண்டு தேரை கொளுத்தினதா சரித்திரம் உண்டு” என்றார் பரமேஸ்வர பிள்ளை.

“அப்ப அப்டி தேரை கொளுத்தினப்ப காராய்மைக்காரங்க பதினெட்டுபேரை களுவிலே ஏத்தினாங்க” என்றார் பெருமாள்பிள்ளை. “அவனுகளுக்க களுபீடம் ஈசாந்திமங்கலத்திலே இருக்கு, கேட்டுக்கிடும்.”

“என்னமாம் ஒரு வளி சொல்லுங்க” என்றார் பத்மநாப பிள்ளை. “வேறே ஒரு சங்கட ஹர்ஜி வேணுமானா எளுதலாம்.”

“ஏன், முன்ன எளுதினதுக்கு என்ன கொறை?”

“அது நல்ல ஓலையாக்கும்” என்று யாரோ சொன்னார்கள்.

“உடையோன் வாசிக்காத ஓலை நல்லா இருந்தென்ன, இல்லாட்டி என்ன? பெண்டுசட்டி இல்லாதவனுக்கு குண்டுகோல் தூக்கினா என்ன சுருங்கினா என்ன?”

வயதானவரான செம்பூர் மாராயக்குட்டிப்பிள்ளை சொன்னார் “ஒரு வளி உண்டு…”

“சொல்லும்வே… வெத்தில பாக்கு வேணுமோ?”

“நாம என்ன அளிவு செய்தாலும் நம்ம குலத்தை பளிவாங்குவானுக… நாம எதையும் நாமளே அளிக்கப்பிடாது”

“பின்ன?”

“நம்மளை நாமே அளிச்சா பின்ன கேள்வி இல்லேல்லா?”

“என்ன செய்யணும்?”

“நம்மளிலே ஒருத்தன் நாயக்கன் முன்னாலே செத்துவிளணும்.”

காராய்மை கூட்டத்தில் அமைதி நிலவியது.

“செத்து விளுகதுன்னா…” என்றார் பத்மநாப பிள்ளை.

“கோபுரத்துக்குமேலே ஏறி ஒளிச்சு இருக்கணும். கையிலே இந்த ஓலை இருக்கணும். நாயக்கன் பல்லக்கிலே இருந்து எறங்கி ராயகோபுரத்து முற்றத்துக்கு வந்ததும் தர்மப்பிரபுவே ராஜாவே எங்க பிராதுகேளு, எங்க ஓலையை படிச்சுப்பாரு, எங்களுக்கு நீதி குடுன்னு கூவிக்கிட்டே மேலெ இருந்து அவனுக்கு நேர்முன்னாலே விளுந்து அங்கேயே சாவணும்… அவன் ஓலையை எடுத்து படிக்காம அடுத்த அடி வைக்க முடியாது. பளி வந்திரும்.”

“அதிப்ப… என்னன்னா…” என்று பத்மநாப பிள்ளை தயங்கினார்.

“நாயக்கன் பெரிய பக்தனாக்கும். கோயிலுக்கு முன்னாலே இப்டி நடந்தா தெய்வகுத்தம்னுதான் நினைப்பான்…. அப்டி விட்டிரமாட்டான்.”

“ஆமா, அது உள்ளதுதான்” என்றார் பரமேஸ்வர பிள்ளை.

“வேற வளி இல்லை… இது ஒண்ணுதான் வளி” என்றார் மாராயக்குட்டிப்பிள்ளை.

“கேக்க நல்லாருக்கு மாமா. ஆனா கோபுரத்துமேலே ஏறி குதிக்கணுமானா…”

“ஏலே, இங்கிண கூட்டமா செத்திட்டிருக்கோம். இப்டியே போனா அடுத்த வேனில்பூவுக்கு வயலு உப்பு பாய்ஞ்சிரும்… ஒருத்தன் செத்தா என்ன? நான் வயசானவன். கோபுரத்து மேலே ஏறி விளுறதுக்கு ஏலு இருந்தா இந்நேரம் நானே விளுந்திருப்பேன்.”

“அதனாலேதானே சொல்லுதீரு?”

“ஏலே வாய மூடுலே…”

“சண்டை வேண்டாம்” என்றார் பத்மநாப பிள்ளை. “இது நல்ல உபாயமாக்கும்.”

“நான் ஒண்ணு சொல்லுதேன்… நாம காராய்மைக்காரனுகளிலே ஒருத்தன்தான் விளணுமா? நம்மளிலே ஒருத்தன் விளுந்தாத்தானா?”

“ஆமா, ஒரு பொணம் விளணும். நாயக்க ராஜா ஓலையைப் பாக்கணும். அம்பிடுதானே?”

“ஆமா, அதுக்கு ஒரு ஆளு விளுந்தா போருமே. அதுக்குண்டான ஆளை நாம பாத்து எடுப்போம்… நாம சொன்னா கேக்கக்கூடியவன்…”

“கீளச்சாதிப் பயலுக இருக்கானுக. ஆனா கோபுரம் மேலே ஏறணும்.”

“நம்ம சாதிப்பயதான் வேணும்.”

“நம்ம சாதின்னு வேண்டாம். கைக்கோளன், செட்டி இந்தமாதிரி இருந்தாலும் போரும்.”

“அதுக்கு ஒரு ஆளு வேணுமே… அவனே நினைச்சு மனசிலாக்கி கோபுரத்திலே ஏறி இருக்கணும்…”

“நாயக்கரு வந்தா ஒரு ரெண்டுநாள் கோபுரத்துக்கு ஈட்டிக்காரன் காவல் இருக்கும். அப்ப அதுக்கு முன்னாலேயே மேலே ஏறி ஒளிச்சு இருக்கணும். சாவை நினைச்சுக்கிட்டு மனதைரியத்தோடே காத்திருக்கணும். சரியா நாயக்கரு பல்லக்குவிட்டு இறங்கி முற்றத்திலே வந்து நிக்கிறப்ப குதிக்கணும். மடையனும் மட்டியும் செய்துக்கிடுத வேலை இல்லை. பணம் வாங்கிட்டு ஆளு வருவானுக. ஆனா கடைசிநேரத்திலே பயந்துட்டான்னாக்க கதை முடிஞ்சுது.”

“அதைவிட மாட்டிக்கிட்டா நம்ம பேரைச் சொல்லப்பிடாது.”

அதை உடனே அனைவரும் உணர்ந்துகொள்ள, அங்கே அமைதி எழுந்தது.

பத்மநாப பிள்ளை ஒரு வாய் வெற்றிலை போட்டுக்கொள்ள அத்தனைபேரும் வெற்றிலைக்கு கைநீட்டினர். மெல்லும் ஓசைகள் நிறைந்திருந்தன.

“ஒரு ஆளு இருக்கு” என்றார் மாதேவன்பிள்ளை.

“ஆரு?”

“நல்ல பயலாக்கும்…கோயிலுக்காளைதான். கொஞ்சம் மங்கின ஆளாக்கும். ஆனா…”

அப்போதே அனைவரும் அது யாரென உணர்ந்தனர். கோயிலில் எண்ணை கொண்டு வந்து ஊற்றும் அணைஞ்சபெருமாள்.

“அவன் பண்டாரமாக்குமே” என்றார் பத்மநாப பிள்ளை.

“அது நல்லதுல்லா? பிள்ளையில்லை குட்டியில்லை… போறவளிக்கு ஒரு நல்ல காரியம்” என்றார் மாதேவன்பிள்ளை.

[ 2 ]

அணைஞ்சபெருமாளை பண்டாரம் என்றுதான் பணகுடி ஊரிலே சொன்னார்கள். ஆனால் அவன் பண்டாரம் இல்லை. அவன் அம்மைக்கு ஒற்றை மகன். கோயிலுக்கு தெற்கே வாணியத்தெருவில் குருணிப்பிள்ளையார் கோயில் அருகே அவர்களுக்கு வீடு. அவன் அப்பா செயலாக இருந்த எண்ணைச்செட்டி. திடீரென்று அவர் சாகும்போது அணைஞ்சபெருமாளுக்கு மூன்றுவயது. அவனுடைய சித்தப்பன்கள் அவர்களின் வீட்டைத்தவிர எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டார்கள்.

எட்டுவயது வரை அவனை அவன் அம்மா பிற வாணியச்செட்டிகளில் செக்குகளில் அடிக்காறல் பிண்ணாக்கை இரந்து பெற்று கோனார்களுக்கு விற்று அந்த பணத்தில் கஞ்சியூற்றி வளர்த்தாள். திடீரென்று ஒருநாள் அவளும் செத்தபோது அணைஞ்சபெருமாள் அனாதையானான். அவனுடைய சித்தப்பனின் மைத்துனன் ஒருவன் கிழவி அவனிடம் பணம் பெற்றிருந்தாள் என்ற ஆதாரத்தைக் காட்டி வீட்டை எடுத்துக்கொண்டான். அணைஞ்சபெருமாள் நேராக கோயிலுக்கு வந்துவிட்டான். அதன்பின் செண்பகராமன் மண்டபம்தான் அவனுடைய இடம்.

எண்ணைச்செட்டிக்கு கோயிலில் ஏராளமான வேலைகள் இருந்தன. கோயில்முழுக்க கல்விளக்குகளில் எண்ணை ஊற்றி எரியவிடவேண்டும். தூண்களின்மேலும் சிற்பங்களின்மேலும் கல்விளக்குகளில் எண்ணை ஊற்றுவதற்கு சிறுபையன்கள் தேவை. கோயிலில் வாத்தியக்காரர்கள், திருச்சேவைக்காரர்கள், மடப்பள்ளி அய்யர்கள் எவர் வேண்டுமென்றாலும் அவனுக்கு வேலை ஏவலாம். அடிக்கலாம், வசைபாடலாம்.

கோயிலிலேயே அவனுக்குத் தீனி கிடைத்தது. எதுவானாலும் சாப்பிடுவான். பெரிய உருளிகளில் ஓரம்பிடித்த பொங்கலும் சோறும் சுரண்டி எடுத்து வைத்தாலே நாலாள் தின்னும்படி இருக்கும். அவன் குந்தி அமர்ந்து ஓர் ஓரத்திலிருந்தே தின்று தீர்த்துவிடுவான். இருபது வயதில் அனந்தன் சப்பரம் போல அகன்று திரண்டு உருளை உருளையான தசைகளுடன் பலகை மார்புடன் இருந்தான்.

அவனை கோயில்காளை என்றுதான் சொன்னார்கள். பெரிய எண்ணைத்தாழிகளை காவடிபோட்டு அவன் தூக்கிச் செல்லும்போது பெண்கள் சன்னலருகே வந்து நின்று ஓரக்கண்ணால் அவன் தசைகள் இறுகியசைவதை பார்த்தார்கள். அதை ஆண்கள் பார்த்துவிட்டால் அடிதடிதான். “தட்டறுவாணி, பாத்துப்பாத்து ஊறலெடுக்குதோ? அரிஞ்சுபோடுவேன் ரெண்டையும்… உள்ளபோடி”

ஆனால் எல்லா பெண்களும் அவனைப் பார்த்தனர். கிணற்றுக்கு நீர் சேந்த போகும்போதும் குளிக்க ஆற்றுக்கு போகும்போதும் அவனைப்பற்றி கிளுகிளுவென பேசிக்கொண்டார்கள்.

“எளவு எல்லாம் சொறிஞ்சுக்கிட்டுல்லா அலையுது?” என்றான் முருகப்பன். “நம்ம வீட்டுக்காரிய வச்சு சாத்திப்போட்டேன் பாருங்க.”

“சேச்சே, என்ன பேச்சு பேசுதே? பொண்ணு மனசு அப்டித்தான். ஆடுத காத்திலே ஆடும். வேரு ஒறைச்சு நிக்குதான்னு பாக்கவேண்டியது நாம… அதை நாலாளு கேக்க சத்தம்போட்டா நம்ம பல்லிடுக்க நாம குத்தி மோந்து பாக்கிறதாக்கும்” என்று தாணப்பன் பிள்ளை முருகப்பனிடம் சொன்னார்.

“இல்ல மாமா, இவ கொஞ்சம் அடங்காத எனமாக்கும்” என்றான் முருகப்பன்.

“எல்லா குட்டிகளும் அடங்கா எனம்தாண்டே… நீ இப்டி நாலாளு செவிமடக்க விளிச்சு கூவினேன்னா உனக்க பெஞ்சாதிக்குத்தான் முத்திரை விளும் பாத்துக்கோ.”

முருகப்பன் இரவில் வள்ளியம்மையிடம் “அப்டி என்னட்டி பாக்கே? அவன் என்ன மம்மதனா?” என்றான்.

“நான் பாக்கேல்ல” என அவள் முனகினாள்.

“நீ பாத்தே… நீ பாத்ததை நான் பாத்தேன்.”

“தயிருகாரி வாறாளோன்னு பாத்தேன்.”

“இல்ல, நீ பாத்தே… நீ பாத்தே.”

“அம்மை சத்தியமாட்டு இல்லை… பெருமாள் மேலே ஆணை.”

“சம்மதிக்க மாட்டீக… வெட்டி துண்டு துண்டா போட்டாலும் சம்மதிக்க மாட்டீக.”

அவள் உடனே அழ ஆரம்பித்தாள்.

“செரி செரி விடு… என்ன இப்பம் அளுதுகிட்டு?”

உறவு முடிந்து அவள் அரை மயக்கிலே இருக்கும்போது அவன் மீண்டும் கேட்டான். “என்னடீ பாக்குதிய அப்டி?”

“ஆரு?” என அவள் கண்மலர்த்தி கேட்டாள்.

“நீ படிச்ச கள்ளி.”

அவள் மீண்டும் அழுதாள்.

“அளுது சாவு, சனியன் புடிச்சவ.”

ஆனால் பண்டாரம் எவரையும் பார்ப்பதில்லை. சோறு தவிர இவ்வுலகில் வேறெதிலும் அவனுக்கு ஆர்வமிருப்பதாகவும் தெரியவில்லை. என்றாலும் ஊரில் அனைவரும் அவனை ஏளனம் செய்வார்கள். சீண்டிப்பார்ப்பார்கள்.

“பய சின்ன வயசிலே தூணிலே ஏறுறப்ப விளுந்து காயடிபட்டுப் போட்டான். அதாக்கும் இந்த மாதிரி வெம்பொலி ஏறி கிடக்கு.”

“வே பண்டாரம் உனக்கு ஒரு குட்டி வேணும்லாடே? நம்ம பொறவாசத்தெரு குச்சுக்காரி கோசலைக்கு ஆளுவேணுமாம்… நல்ல செம்பகராமன் கல்லுத் தூணுதான் அவளுக்குச் செரியாவருமாம்”

“பொலிகாளைய ஒழவிலே கெட்டிப்பாக்கணும்டே.”

அவன் அவர்கள் பேசுவதை பெரிய கண்களால் வெறுமே பார்த்துக்கொண்டிருப்பான். ஏதாவது கேலிசெய்தால் அவர்களுடன் சேர்ந்து தானும் சிரிப்பான். பெரிய மாட்டுப்பற்களுடன் அவன் சிரிப்பு அழகாக இருக்கும்.

“இந்த சோறெல்லாம் தலைக்கு போயிருந்தா இவன் இந்நேரம் உலகை வித்திருப்பாண்டே… நல்லவேளை அங்க உள்ளுக்குள்ள பத்தாயம் காலியாக்கும்”

அவனுடைய பேச்சும் சிரிப்பும் பத்துவயது பையன் போல. ஆனால் முட்டாள் அல்ல. கோயில் மண்டபத்தில் அண்ணாவி தேவார திருவாசக வகுப்பு எடுக்கும்போது போய் கேட்டுக்கொண்டிருப்பான். கதை சொல்லும் இடங்களில் எல்லாம் பின் வரிசையில் தூண் சாய்ந்து அமர்ந்திருப்பான். அவனுக்கு எல்லாம் புரிகிறது என்றும் தோன்றும்.

மாராயக்குட்டிப்பிள்ளை அவனிடம் விஷயத்தைச் சொல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். காலையில் நேராக ராமலிங்கசாமி சன்னிதிக்குப் போய் கும்பிட்டுவிட்டு விபூதிப் பட்டையுடன் பெருமாள் சன்னிதியில் இருந்த அவனிடம் போய் அருகே அமர்ந்தார். அவன் புன்னகைத்தான்.

“லே அணஞ்சி, நான் உங்கிட்ட ஒரு வார்த்தை பேசணும்னாக்கும் வந்தது.”

“சொல்லுங்க” என்று அவன் கும்பிட்டான்.

“நீ அறிவுள்ளவனாக்கும்டே. இப்ப நீயே பாத்திருப்பே. இங்க நேரே செவ்வே மளை பேய்ஞ்சு எம்பிடு நாளாகுது?”

அவன் யோசித்து “நெறைய நாள்” என்றான்.

“மளை பெய்ஞ்சாத்தானேடே வெள்ளாமை? வெள்ளாமை கைக்கு வந்தாத்தானே ஊருக்குச் சோறு? சாமிக்குப் படையலுக்கும் நெல்லு வேணுமே?”

“ஆமா”

“இப்ப பாரு. ஊரிலே முக்காவாசி குடியானவன் மலையாளக்கரை பக்கம் மலையேறி போயிட்டான். வயலுகளிலே வெதைப்பு இறக்க ஆளில்லை, தண்ணியுமில்லை. இப்ப இப்டி வரிபோட்டு ஓலைக்குமேல் ஓலை விட்டா நாங்க என்னண்ணு குடுப்போம்? இந்த பூவிலே வயலு புகைஞ்சுபோச்சு. இந்த வரியே குடுக்க முடியாது. எட்டு வருசத்து பாக்கி வரிகளையும் கேக்குதானுக…”

அவன் பேசாமல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“குடுக்கக்கூடாதுன்னு இல்லை. ஆண்டவனுக்கும் அரசனுக்கும் மடத்துக்கும் மகமைக்கும் ஆண்டிகளுக்கும் அணைஞ்சவனுகளுக்கும் குடுத்து சாப்பிடணும் வெள்ளாளன். அது நியாயம். ஆனா வெளைஞ்சு வரணும்ல? குடுக்கிறோம். மழை பெய்யட்டு, ஏரி நெறையட்டு. வயலு வெளைஞ்சா அள்ளி அள்ளி குடுக்கோம்.”

“ஆமா” என்று அவன் சொன்னான்.

“அதை ராசா கிட்டே சொல்லணும்… ராசா கண்ணுபாத்து நெஞ்சு இரங்கி இந்த ஆண்டு நிலவரியை வஜா பண்ணி விடுங்கன்னு சொல்லணும். சங்கட ஹர்ஜி எளுதி ராஜாகிட்டே குடுக்க பட்ட பாடு கொஞ்சமில்லை. ராஜா மனசுலே கனிவு உண்டு. ஆனா சுத்தியிருக்கப்பட்டவனுக ஏழு வளையமா இருக்கானுக. அருகே போக விடமாட்டானுக… எல்லா வளியிலேயும் பாத்தாச்சு…. ஏன் விடமாட்டானுகன்னா கொள்ளையடிக்குததே இவனுகதான். இவனுகளை ராஜா கணக்குக் கேட்டுட்டார்னா நாறிரும். அதனாலே ராஜாவை சாமி கொளம் பூசை வழிபாடுன்னு ஆண்டிப்பண்டாரம் கணக்கா வச்சிருக்கானுக.”

“ஓகோ”

“ஆனா வேறவளியில்லை. சொல்லியாகணும். ஏளு வேலியையும் கடந்து ராஜாகிட்ட போயி சொல்லியாகணும்… அதுக்கு ஒரு வளிதான்…. நாங்க யோஜனை பண்ணி கண்டுபிடிச்சோம். கொஞ்சம் கடுமையான வளி. ஆனா வேற வளி இல்லை பாத்துக்க.”

“சொல்லுங்க பண்ணையாரே.”

எப்படிச் சொல்வது என்று யோசித்து தலைதூக்கியபோது அப்பால் அனுமார் சிலை கண்ணுக்குப்பட்டது.

“நாங்க அனுமார்சிலைகிட்ட உக்காந்து பேசிட்டிருந்தோம். அப்ப ஒரு வளி தெரிஞ்சுது” என்றார். “அனுமார் என்ன செய்யும்?”

“மரம் ஏறும்.”

“ஆமா, கோயில்கோபுரத்து மேலேயும் ஏறும்லா?”

“ஆமா”

“அனுமார் அம்சமுள்ள ஒருத்தர் கோபுரத்துமேலே ஏறணும். அங்கேருந்து அப்டியே நாயக்கராஜா முன்னாலே குதிச்சிரணும்.”

“மேலேருந்தா?”

“ஆமா… அவன் குதிக்கிறப்ப சத்தம்போடணும்… ராஜா எங்க குறை கேளுங்க, எங்க சங்கட ஓலையை படியுங்க, எங்களுக்கு நீதி குடுங்கன்னு கூவிட்டே குதிக்கணும்”

“மேலே இருந்தா?”

“கோபுரத்துக்கு உச்சியிலே இருந்துதான்… திருக்கணங்குடி கோபுரம் கொஞ்சம் பெரிசுல்லா?”

“திருக்கணங்குடியிலயா?”

“ஆமா. நாயக்கராஜா பல்லக்கிலே இருந்து எறங்கி கோயிலுக்குள்ள போகப்போறப்ப காலடியிலே வந்து விளுந்துபோடணும். முற்றத்திலே கல்தளம் மேலே.”

“உயிரைக்கொடுக்கணும்?”

“அப்டி சொல்ல முடியாது… பக்தி இருந்தா…”

“எலும்பும் மிஞ்சாது”

“நாங்க அனுமார் சன்னிதியிலே குறிமானம் போட்டு பாத்தப்ப…”

“சரி, நான் குதிக்கிறேன்.”

“அதாவது…”

“ஊருக்காகத்தானே? பஞ்சம் போறவரை வரி வாங்கக்கூடாது. அந்த தாக்கல் நாயக்கரு வரைக்கும் போகணுமானா இந்த தந்திரம்… செய்யுதேன்.”

“அனுமாரு…. நீ அனுமார் உபாசகன் ஆனதனாலே.”

“ஊருக்காக செத்தா நல்லதுதான். இது ஊரு போட்ட சோத்திலே வளந்த உடம்பு.”

“நாங்க என்ன செய்யணும்?”

“எனக்கு ஒண்ணும் வேண்டாம்.”

“இல்ல, நடுகல்லு நாட்டுதது, கொடை குடுக்குதது, இந்தமாதிரி…”

“வேண்டாம்.”

“இல்ல…” என மேலும் தயங்கினார் மாராயக்குட்டிப் பிள்ளை.

“சொல்லுங்க”

“கன்னி களியாம…. அதாக்கும். ஆசை இருந்தா ஒரு குட்டிய பாத்து கெட்டி வைக்குதோம்.”

“அவ தாலியறுக்கணுமா? வேண்டாம்.”

“தாலி அறுக்காத சாதி இருக்கே… தாசிக்குடியிலேகூட நல்ல குட்டிகள் இருக்கு.”

“வேண்டாம்.”

“அப்ப செரி…”

“செரி”

மாராயக்குட்டிப் பிள்ளை தயங்கி “நான் சொன்னதாலே என் மேலேயோ என் குடும்பம் மேலேயோ கோவம் இருக்கப்பிடாது” என்றார்.

“சேச்சே” என்றான் அணஞ்சபெருமாள்.

“இந்த ஊருமேலே கோவம் இருக்கப்பிடாது… எங்களை சாபம் போட்டுட்டு போகப்பிடாது. நீ எனக்க சொந்த பயலை மாதிரியாக்கும். நான் அப்டித்தான் நினைக்கேன்… இப்பம் என் சங்கு வேவுதது எனக்குத்தான் தெரியும்”

மாராயக்குட்டிப் பிள்ளை உண்மையாகவே மனம் உருகி அழத்தொடங்கினார். அவன் நிதானமாக சிரித்தபடிச் சொன்னான் “நான் இந்த ஊரை வாழ்த்திக்கிட்டேதான் போவேன். பயப்படவேண்டாம். எல்லாம் நல்லபடியா முடியும்.”

“அப்ப உறுதி செய்துகிடலாமே.”

“உறுதிதான்.”

“சும்மா வாக்காலே சொல்லாமே…”

“என்ன பண்ணணும்?”

“அந்த அனுமாரை தொட்டு ஒரு வார்த்தை சொன்னா.”

“அனுமார் சத்தியமா நீங்க சொல்லுற அண்ணைக்கு நான் கோபுரம் ஏறி நாயக்க ராஜா முன்னாடி பாய்ஞ்சு சாவுதேன். நீங்க சொன்னதை கூவுதேன். கையிலே அந்த ஓலையையும் வச்சிருக்கேன். போருமா.”

“போரும்… போரும்…” என்று மாராயக்குட்டிப் பிள்ளை கைகூப்பினார். “இந்த ஊரிலே மக்க மனுசங்க வாழுற வரை மறக்கமாட்டோம். எங்க குடும்பங்களுக்கு காவல்தெய்வமாட்டு கும்பிடுவோம்… நண்ணி மறக்குத ஆளுங்க இல்ல நாங்க.”

“செரி. நல்லா வாழுங்க…நல்லபடியா நெறைஞ்சு வாழுங்க.”

அவன் கும்பிட மாராயக்குட்டிப் பிள்ளை விசும்பி விசும்பி அழுதபடி அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.

[ 3 ]

அணஞ்சபெருமாள் சாதாரணமானவன் அல்ல என்று அத்தனை பேருக்கும் தெரிந்திருந்தாலும் அவன் மேல் சந்தேகமும் இருந்தது. மாராயக்குட்டிப்பிள்ளை மட்டும்தான் உறுதியாக இருந்தார். “நான் சொல்லுதேன், அவன் சொன்னதைச் செய்யுத ஆளாக்கும். அவனுக்கு எடம் வலம் இல்லை. உசிரு ஒரு பொருட்டு கெடையாது. அப்டிப்பட்ட ஆளாக்கும் அவன்.”

“செரிதான், சொந்தம் சாதி சனம் ஒண்ணும் இல்லல்லா” என்றார் நம்பியாபிள்ளை.

பரமேஸ்வரன் பிள்ளை “ஆனா மனுசப்பய காரியமாக்கும். எப்ப என்ன செய்யுதான்னு தெரியாது. எல்லா உடம்புக்கும் உசிரு அருமையாக்கும்…” என்றார்.

“நானும் அதைத்தான் நினைச்சேன் மச்சினா. இவன் இப்ப இப்டி சொல்லுதான். கடைசிநாள் தயங்கிட்டான்னா?” என்றார் கொக்குமுறை சிவன்பிள்ளை.

“அப்டி நிக்குத ஆள் இல்லை” என்றார் மாராயக்குட்டிப்பிள்ளை.

“என்ன பிரச்சினைன்னா கோபுரத்திலே ஏறி ரெண்டு நாள் ஒற்றைக்கு காத்திருக்கணும். ஒருத்தன் தன்னந்தனியா சாவை எதிர்பாத்துட்டு அங்க உக்காந்திருக்கிறதை நினைச்சுப்பாருங்க. சட்டுன்னு கீழே சாடுதது பெரிய விஷயமில்லை. சாடிப்போடலாம். ஆனால் அங்க ரெண்டுநாள் ராவும்பகலும் ஓரோ நிமிசமும் சாவுறதைப்பத்தி நினைச்சுக்கிட்டு உக்காந்திட்டிருக்கணும். ஒரு நிமிசம் மனசு விட்டுப்போச்சுன்னா? ஒரு தடவை எதுக்கு இதெல்லாம்னு நினைச்சு பாத்தான்னா? மனுச மனசுல்லா?” என்றார் பரமேஸ்வரன் பிள்ளை.

அது உண்மைதான் என்று அவர்கள் அனைவருக்குமே தோன்றியது. ஆனால் ஒன்றும் செய்வதற்குமில்லை. அவனை நம்பித்தான் ஆகவேண்டும்.

“நாம முடிவெடுத்தாச்சு. ஆளையும் தேடியாச்சு. இந்த மட்டுக்கும் இப்டி ஒருத்தன் அமைஞ்சதே பெரிய விஷயம். இனி ஆதிசிவனார் விட்ட வளி” என்றார் மாராயக்குட்டிப்பிள்ளை.

“அனாதையை பலிகுடுக்குததா வே ஆதிசிவனுக்க வளி?”

“இல்ல, அப்பனாத்தா உள்ள பிள்ளை வேணும். உனக்க மகன் ஆவுடையப்பனை கொண்டுட்டு வாறியாடே? கொண்டுவாடே. இவனை விட்டிருவோம்.”

“நான் பேச்சுக்கு சொன்னேன்.”

“என்ன பேச்சு? செய்யுததை செய்யவும் வேணும். பெரிய மனசாட்சி மயிரு மாதிரி ஒரு நொடிப்பும் காட்டணும்… போக்கத்த பயக்க.”

“மாமா என்ன, பேச்சு பேச்சா இல்ல?”

“டேய் விடு அதை… வே பாட்டா நீரு சும்மா இரும்… அப்ப காரியங்க எல்லாம் பேசி முடிச்சாச்சு. இனி சம்பவம் நடக்கிறவரைக்கும் வாய மூடி வச்சுக்கிட்டு இருங்க. சோலிமுடிஞ்ச சீரிலே பெஞ்சாதிகிட்டே பேசி வைக்கவேண்டாம். இங்க அவனவனன் கொடி எறங்கினதுமே கொடிமரத்தையும் சாய்ச்சுப்போடுதான்.”

“பெஞ்சாதிகிட்ட வாய மூடிக்கிடுவானுக. கூத்தியா கிட்ட உளறுவானுக”

“நீரு உம்ம கதையைச் சொல்லுதேரு”

“பொம்புளை ஆரா இருந்தாலும் தெரிஞ்சா அவனை சாவ விடமாட்டா… அதை நினைச்சுக்கிடுங்க.”

காராய்மைக்காரர்கள் அணைஞ்சபெருமாளுடன் எப்போதும் இருந்தார்கள். அவனுக்கு சிறப்பாக வீட்டிலிருந்து உளுந்தங்களி பொங்கி கொண்டுவந்தார் நம்பியா பிள்ளை.

“என்ன மாமா மாப்பிள்ளைச் சீராட்டு போல?” என்றான் சிவனடியா பிள்ளை

“சவம் தின்னுட்டு போகட்டு. கோயிலிலே இதெல்லாம் அவன் எங்க தின்னான்?”

“நல்ல உளுந்தங்களி தின்னு ருசி கண்ட பயலுக்கு சாக மனசு வராது பாத்துக்கிடுங்க”

“ஏலே சும்மா இருலே… கிடந்து அலமுறை இடுதானே. யாராவது கேட்டா அம்பிடுதான்”

அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்ய தயாராக இருந்தார்கள். யாராவது அவனிடம் அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

“நல்ல வருக்கைச் சக்கை பளம் இருக்கு. பத்து சுளை எடுத்து கொண்டுவரட்டா? தேன் தொட்டு தின்னா அமிருதமாட்டு இருக்கும்.”

“புட்டு அவிச்சு கொண்டுவரட்டாலே மக்கா? கதளிப்பளம் போட்டு பிசைஞ்சு தின்னு பாரு.”

திருவடியாபிள்ளை அவனுக்கு நல்ல குண்டஞ்சி வேட்டியும் சிவப்புத்துணி கச்சையும் புளியிலை கரையிட்ட மேல்வேட்டியும் வாங்கி கொண்டு வந்து கொடுத்தார்.

முருகப்பனுக்கு திடீரென்று அணஞ்சபெருமாள் கல்யாணக்கோலம் பூண்டது வியப்பாக இருந்தது. “என்னடே நம்ம பய இப்ப இப்டி பொலிஞ்சு நிக்கான்? பொண்ணு கிண்ணு பாத்து கெட்டிவைக்க போறாகளா ஊரிலே?”

“அதுக்கு ஊரிலே எல்லா பெண்ணும் நான் நான்னு ஒருங்கித்தான் நிப்பாளுக” என்றான் தாணப்பன்.

முருகப்பன் வெறுப்புடன் “அரிப்பெடுத்த சனியனுங்க… மச்சான் கேட்டேரா, நல்ல அரக்கை உருக்கி வச்சு அடைக்கணும் சனியனுங்களை” என்றான்.

புதிய ஆடையுடன், கனமான கட்டுக்குடுமியில் பெருமாள் கோயில் பூசைச்சரம் வைத்து கட்டி வாய்நிறைய வெற்றிலையை குதப்பியபடி அணைஞ்சபெருமாள் மண்டபத்தின் கல்திண்ணையில் கவலையே இல்லாமல் படுத்திருந்தான். இடதுகாலை வலதுகால்மேல் வைத்து வெடுக் வெடுக் என ஆட்டினான். கண்கள் சோற்றுக்களைப்பில் சொக்கிச் சொக்கி அணைந்தன.

“பய இப்டி மயங்கி கிடக்கானே… கவலையே காணும்?” என்றார் நம்பியா பிள்ளை.

“கவலைப்படுதவனா இருந்தா இதுக்கு வருவானா வே?” என்றார் சண்முகம்பிள்ளை.

“வேற எதாவது திட்டமும் வச்சிருப்பானோ?”

“என்ன திட்டம்?”

“இல்ல… நாம வெள்ளாம்புள்ளைகோ. நமக்கு ராச்சியபாரம் தெரியாது. இவன் ஒருவேளை நாயக்கமாருக்க ஒற்றனா இருப்பானோ?”

அவ்வளவுதான், நம்பியாபிள்ளை கொளுத்திப் போட்டுவிட்டார். காராய்மைக்காரர்கள் நடுவே பயம் படர்ந்து பிடித்தது. சாயங்காலம் சங்கர நயினார் பிள்ளை வீட்டுக்கு வந்த சண்முகம் பிள்ளை குமைந்தார்.

“அவன் ஆளு மத்தவனாக்கும். எனக்கு அப்பமே சந்தேகம் உண்டு மாப்பிள்ளை. பாக்க கிறுக்கன் மாதிரி இருக்கான். ஆனா இங்க ஊராய்மைக்காரங்களை வேவு பாக்குததுதான் அவனுக்க திட்டம்.”

பீதியுடன் சங்கரநயினார் பிள்ளை கண்களை உருட்டினார்.

“நாயக்கன் வாற அண்ணைக்கு இங்க காராய்மைக்காரனுக களுவிலேதான் இருக்க போறானுக… குடபண்டி உள்ளவனுக்கு களுவு நல்லதாக்கும், அமைஞ்சு இருக்கும்”

“ஆமா, நாம தாசிக்குட்டிகளை நம்ம களுவிலே இருத்துதோம்லா? ஆண்டவன் விடுவானா?”

பொறுமையிழந்துபோய் மாராயக்குட்டிப்பிள்ளை கத்திவிட்டார் “ஏலே கோட்டிக்காரப்பயக்களே. நீங்களே தேடிப் போயி களுவிலே ஏறி இருந்துபோடுவீங்க போல இருக்கே. சும்மா இருக்க மாட்டியளா? பீத்த பயக்களா.”

திருக்கணங்குடிக்கு திருநெல்வேலியில் இருந்து முதல்பட்டாளம் வந்துவிட்டது என்று செய்தி வந்தது. அவர்கள் கோயிலைச் சுற்றியிருக்கும் தெருக்களில் காவல் ஏற்படுத்துகிறார்கள். இரண்டாம் படை வந்து ஊரை சுற்றிவளைக்கும். அதன்பின் மூன்றாம்படை சாலையை காவல்காக்கும். அதன்பிறகுதான் பெரியநாயக்கர் தன் பரிவாரங்களுடன் வருவார்.

மாராயக்குட்டிப்பிள்ளை அணைஞ்சபெருமாளை தயார்ப்படுத்தினார். “ஏலே நீ ஒருக்கமாலே?”

“நான் போறேன். எப்ப போகணும் சொல்லுங்க.”

“சொல்லுதேன்.”

மறுநாள் விடியற்காலை காராய்மைக்காரர்கள் பணகுடியில் இருந்து திருக்கணங்குடிக்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள். திருக்கணங்குடி பெருமாளுக்கு ஒரு புஷ்பாபிஷேகம் செய்யலாம். எண்ணைக்குடத்துடன் அணைஞ்ச பெருமாளையும் கூட்டிக்கொண்டு போவதாகத் திட்டம்.

அப்போதுதான் நம்பியாபிள்ளை ஒரு சந்தேகத்தை கிளப்பினார். “இல்லை, இவன் சாடிச் சாவுதான். ஆனா இவனுக்கு இதிலே என்ன காரியம்னு ஒரு கேள்வி இருக்கும்ல? இது வரிவிதிப்பை குறைக்கணும்னு கோரிக்கை. இவனுக்கு வரியே இல்லியே. இவன் பண்டாரமாக்குமே.”

“அதெல்லம் யோசிச்சுத்தானே வே முடிவு செய்தோம்?”

“ஆமா, ஆனா அப்ப தோணல்ல. இவன் சாடி சாவணுமானா இவனுக்கு ஒரு பாதிப்பு இருக்கணும்லா?”

“அது உள்ளதுதான்” என்றார் மாராயக்குட்டிப்பிள்ளை.

“வாணியனுங்களுக்கும் வரி கூடுதலாக்கும். பாதிப்பேரு எண்ணையை ஒளிச்சு ஒளிச்சு விக்குதான். வடுகப்படை தேடிவந்து அவனுகளை புடிச்சு முக்காலியிலே கட்டி வைச்சு அடிக்குது.”

“இவனுக்கு இதுக்கு முன்னாடி வரிகுடுத்த சன்னத்து எதாவது உண்டுமாடே?” என்றா மாராயக்குட்டிப்பிள்ளை.

“என்ன அம்மான் கேக்குதீக? வரியா இவனா?”

“வரி ஒரு முறை குடுத்தாக்கூட அங்க வடுகனுக்க கணக்கோலையிலே பேரு இருக்கும். இவன் பண்டாரமில்லா?”

“அண்ணாச்சி நான் சொல்லிடுதேன். வரியே குடுக்காதவன் வரிகூடுதலுண்ணு சொல்லி செத்தா அது செரியா இருக்காது. அவனை சொல்லி ஏமாத்தி சாவடிச்சோம்னு நம்ம மேலே பளி வரும்… தலைக்கு தீம்பு.”

“பின்ன இப்ப என்னடே செய்யுதது? இந்த கடைசி நேரத்திலே?”

“இவன்பேரிலே ஒரு அரைப்பணம் வரி கெட்டியிருந்தாக்கூட சமாளிச்சுப்போடலாம்.”

“வரி கெட்டுதான்னு நாம சொன்னா முடியாது. அவனுகளுக்க ஓலையிலே இருக்கணும்.”

அப்பால் குடத்தில் எண்ணையை நிறைத்துக்கொண்டிருந்த அணைஞ்சபெருமாளை மாராயக்குட்டிப்பிள்ளை திரும்பிப் பார்த்தார். திரும்பி சாலையை பார்த்தபோது ஓர் எண்ணம் தோன்றியது.

சாலையில் முருகப்பன் ஒருகாலை நீட்டி நீட்டி நடந்து வந்துகொண்டிருந்தான். உடம்பெல்லாம் எண்ணைபூசி குளிக்கச் சென்றுகொண்டிருந்தான். தொப்பை மொழமொழவென்று துள்ளியது.

“ஏலே முருகப்பா, இங்க வா”

அவன் அருகே வந்து “கும்பிடுதேன் பண்ணையாரே” என்றான்.

“உனக்க களுத்திலே கிடக்குத அந்த வெள்ளிக் கண்டிகையை களட்டிக்குடு”

“அது எங்களுக்க குலச்சின்னமாக்குமே”

“ஏய் சொன்னதைச் செய்டே… உனக்கு வேற ஒண்ணு செஞ்சுக்க. அதுக்குண்டான பணத்தை வாங்கிக்கோ”

“செரி” என்று அவன் குழம்பியபடி அதை கழற்றி கொடுத்தான். “எண்ணைச் சிக்கு நிறைஞ்சிருக்கு. வள்ளிகிட்டே சொல்லி ஒரு மட்டம் நல்லா புளியப்போட்டு…”

“இதுபோரும். நீ போ… இதை நான் வாங்கினதை ஆருகிட்டையும் சொல்லாதே”

“நான் என்னத்துக்குச் சொல்லப்போறேன். நான் உண்டு எனக்க சோலி உண்டுன்னு கெடக்கேன்…” அவன் வெறுப்புடன் மிக அப்பால் பயணத்துக்காக ஒருங்கிக்கொண்டிருந்த அணைஞ்சபெருமாளைப் பார்த்துவிட்டு “இந்த போக்கணம் கெட்டவனை கெட்டி எடுக்க இந்த ஊரிலே ஆளில்லியா பண்ணையாரே? பெண்ணடிகள் மானமா சீவிக்க வளியில்லியே” என்றான்.

“பாப்பம்டே… நீ போ.”

அவன் சென்றபின் “இந்த கண்டிகையை அணைஞ்சபெருமாள் களுத்திலே போட்டுக்கிடச் சொல்லுங்க” என்றார் மாராயக்குட்டிப்பிள்ளை.

“என்ன சொல்லுதீக மாமா?”

“டேய், கோபுரத்திலே இருந்து அவன் விளுந்ததும் அடையாளம் காட்டணும்லா? நாம ஆராவது அங்க இருப்போம். ஓடிப்போயி இந்த கண்டிகையை பாத்துட்டு செத்தவன் மாயாண்டி மகன் முருகப்பன்னு சாட்சி சொல்லிடுவோம். முருகப்பன் ஆண்டுக்கு ரெண்டு தடவை வரி கட்டுதவன்லா?”

“ஆனா..”

“முருகப்பன் காரியத்தை பிறவு பாப்போம். அந்நேரம் முருகப்பன் இங்க இருக்கணும். அங்க வந்திரப்பிடாது.”

“செரி” என்றார் சண்முகம்பிள்ளை.

“சாவுதது வரிகெட்டி வரிகெட்டி நொடிச்சுப்போன முருகப்பனாக்கும். சோத்துத் திண்டோதரன் அணைஞ்சபெருமாள் இல்லை. தெரியுதுல்ல? எல்லாரும் கேட்டாச்சுல்ல?” என்றார் மாராயக்குட்டிப்பிள்ளை “முதல்ல அது நடக்கட்டு. பிறவு இந்த முருகப்பன் வேற ஆளுண்ணு சொல்லிப்போடுவோம். ஊரிலே நாம சொல்லுதது தானே? பட்டாமணியம் பிரவர்த்தியாரு எல்லாம் நாமல்லா?”

அனைவரும் வெவ்வேறு குரலில் “ஆமா”, “செரிதான் மாமா” “பாத்துக்கிடலாம் பண்ணையாரே” என்றார்கள்.

[ 4 ]

திருக்கணங்குடியில் ஏரிக்கரையிலிருந்தே காவலிருந்தாலும் அவர்களை எவரும் ஒன்றும் கேட்கவில்லை. கோயிலுக்கு நேர்ச்சைக்காகச் செல்லும் ஊராய்மைக்காரர்கள் என்று தொலைவிலேயே தெரிந்தது. எவருக்கும் எந்த ஆயுதமும் பழக்கமில்லை என்பதை உடம்பும் நடையும் காட்டிக்கொடுத்தன. நடுவே எண்ணைக்கொப்பரை சுமந்துசென்ற அணைஞ்சபெருமாளும் சந்தேகப்படும்படியாக இல்லை.

கோயிலுக்குள் போய் எண்ணைக்கிணறு அருகே எண்ணை குண்டானை வைத்துவிட்டு அணைஞ்சபெருமாள் நின்றான். “நான் மேலே போறேன்” என்றான்

“ரெண்டு நாளைக்கு உண்டான தண்ணியும் நாலஞ்சு சுட்ட அப்பமும் இருக்குடே” என்றார் நம்பியாபிள்ளை

“வேண்டாம்” என்று அவன் சொன்னான். அவர்கள் ஏதோ சொல்வதற்குள் “ஓலையை குடுங்க” என்றான்.

அவர்கள் ஓலையை கொடுத்தனர். அதை இடையில் செருகிக்கொண்டான். அவன் கழுத்தில் அந்த கண்டிகையை அணிந்திருந்தான் நம்பியாபிள்ளை மற்றவர்களைப் பார்த்தார்.

சண்முகம்பிள்ளை “கோபுரத்திலே கீழே காவலிருக்கு. மேலே முதல் அடுக்கிலே கணக்குபிள்ளைமாரும் குறிப்புதவிக்காரனுகளும் இருக்கானுக” என்றார்

“ரெண்டாம் அடுக்குக்கு மேலேதான் ஒழிஞ்சு கிடக்கும்” என்றார் பரமேஸ்வரன் பிள்ளை

“அதை நான் பாத்துக்கிடுதேன்” என்று அணைஞ்சபெருமாள் சொன்னான். நேராக கோபுரமருகே போய் இரண்டே தாவலில் எட்டு கைகளுடன் ஏழு புரவித்தேரில் நின்றிருத்த சூரியன்மேல் ஏறி, வெவ்வேறு தேவர்கள் மேல் தொற்றி, நாலாம் அடுக்கின் சிறிய சாளரம் வழியாக ஓணான் போல உள்ளே போய்விட்டான்.

“எண்ணைக்காரப்பய கல்லிலே ஏறிப் பளகினவனாக்கும்” என்றார் நம்பியா பிள்ளை.

அவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு கிளம்புவதென்றும் இரண்டுநாள் கழித்து மகாராஜா வரும்போது திருவிழாவுக்கு வருவதென்றும் முடிவாகியது. என்ன ஏது என்று பார்ப்பதற்காக சண்முகம் பிள்ளையும் நம்பியாபிள்ளையும் மட்டும் அங்கேயே நம்பியாபிள்ளையின் மருமகனின் இல்லத்தில் தங்குவது.

அவர்கள் கிளம்பிச் சென்றபின்னர் சண்முகம் பிள்ளை பதற ஆரம்பித்தார். “ஏண்ணே, கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ?” என்றார்.

“ஏண்டே?”

“ராஜகாரியம்… ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுண்ணா ஆரு பிணை? மசநாயக்கன் நம்மளை குடும்பத்தோட கழுவிலே ஏத்திப்போடுவானே?”

“ஏண்டே சங்கைக் கலக்குத மாதிரி பேசுதே?”

“இல்லண்ணே, இப்ப மேலே இருந்து சாடுதான். நேரா ராஜா தலைமேலே வந்து விளுந்துட்டான்னா? கொலைல்லா? ராஜாவை கொலை செய்தா குலத்தையே காவு வாங்கிப்போடுவானே.”

நம்பியாபிள்ளை பதறிவிட்டார் “என்னடே சொல்லுதே?”

“அண்ணே அவனுக்கு குறி தவறிப்போட்டுதுன்னா?”

“ஆமால்லா”

“நாம ஓடிருவோமா?”

“எங்க?”

“நாம பணகுடி போயிருவோம்… நமக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லீருவோம்”

“அவன் கையிலே நம்ம ஓலையும் உண்டு ….நாம ஒரு வார்த்தையும் சொல்ல முடியாது.”

“ஆமாடே… இப்ப என்னடே செய்ய?”

“அவனைத் திரும்ப கூப்பிடுவோம்ணே…”

ஆனால் அவனுடன் தொடர்பு கொள்ள ஒரு வழியும் இல்லை. அவர்கள் கோபுரம் வழியாக அங்குமிங்கும் நடந்து பார்த்தார்கள். கோயில் காவல்நாயகம் சிக்கையா நாயக்கர் அவர்களை அழைத்து என்ன ஏது என்று விசாரித்தபோது உளறியடித்தபடி ஓடி வந்துவிட்டார்கள்.

கோபுர உச்சியை பார்த்தபடி பதைபதைத்துக்கொண்டு இருவரும் திண்ணையில் அமர்ந்திருந்தார்கள். திட உணவை விழுங்க முடியவில்லை. வியர்த்துக்கொட்டியது. அவ்வப்போது நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது. மயக்கம் மயக்கமாக வந்தது.

“உள்ளங்காலு எரியுதுண்ணே.”

“இம்பிடு நல்லெண்ணை வாங்கி போடுடே. கேக்கான் பாரு.”

நல்லெண்ணை போட்டுக்கொண்ட சண்முகம்பிள்ளை வழுக்கி விழுந்து நிலைப்படியில் மண்டையை மோதிக்கொண்டார்.

மறுநாள் புலரியிலேயே ஊர் முழுக்க சந்தடி நிறைந்தது. குளம்படியோசைகளுடன் குதிரைகள் சென்றுகொண்டே இருந்தன. அவற்றில் விதவிதமான அலங்காரங்களுடன் படைவீரர்கள் சென்றனர்.

“என்னடே பட்டாளம்லா எறங்கியிருக்கு? தெரிஞ்சுபோச்சோ?”

“ராஜா வந்தா பட்டாளம் வராம இருக்குமா?”

கொம்புகளும் குழல்களும் முழங்கின. முரசுகள் பல இடங்களில் ஓசையிடத் தொடங்கின. கோயிலில் இருந்து நாதஸ்வரமும் தவிலும் கேட்டது.

வரிசையாக நெற்றிப்பட்டம் அணிந்த யானைகள் தெரு நிறைத்துச் சென்றன. தலைப்பாகை அணிந்த படைவீரர்கள் உருவிய வாளுடன் அணிவகுத்து முன்னால் செல்ல பல்லக்குகள் சென்றன.

“எங்கடே போறானுக? ஒருகூட்டம் இந்தாலே போகுது இன்னொரு கூட்டம் அந்தாலே வருது… போறானுகளா வாறானுகளா?”

“விடுங்கண்ணாச்சி”

“எனக்கு என்னமோன்னு வருதுடே”

வெளியே எங்கோ ஆசாரவெடி முழங்கியது.

“வெடி வைக்குதானுக! வெடி வைக்குதானுக!”

“அண்ணாச்சி அது ஆசார வெடி…. நாயக்கராஜா ஊருக்குள்ளே வாறாரு”

“ஒப்பம் அந்த அகமுடிவானுக வருவானுக. எனக்க குமரகுருபர நாதா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சா நான் குமாரகோயில் கூட்டிவந்து சின்னவனுக்கு முடியெறக்கிப்போடுதேன்.”

இருவரும் திண்ணை இருளை விட்டு நகரவில்லை. ஊரார் தெருவோரங்களில் கூடி நின்று பார்த்தார்கள். விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் அணிவகுப்பு நகருக்குள் நுழைந்தது. முதலில் நெற்றிப்பட்டம் இட்ட ஐம்பது யானைகள். அவற்றின்மேல் முத்துக்குடையும் அம்பாரியும். அவற்றில் தாசிகள் அமர்ந்திருந்தனர். தொடர்ந்து உருவிய வாளுடன் பட்டாளம். அனைவரும் செம்பட்டுத் தலைப்பாகை அணிந்தவர்கள். ஆயிரக்கணக்கான யானைகளின் ஓசைபோல கொம்பு முழக்கம். பெரிய வெண்ணிற காளைகள் இழுத்த வண்டிகளில் முரசுகளை வைத்து முழக்கியபடியே சென்றார்கள்.

அதன்பின்னர் பல்லக்கு வரிசை. ஒரு பல்லக்கு மிகப்பெரியது. அதன்மேல் காவிப்பட்டுக் கொடி பறந்தது. அதன் இருபுறமும் உருவிய வாளுடன் வேளக்காரப்படை காவலுக்கு வந்தது.

“நேரா அரண்மனைக்கு போவாரோ?”

“இல்லை, ஊருக்குள்ள வந்தா சாமி கும்பிட்டுட்டுத்தான் போறது வழக்கம்.”

“மத்தவன் மேலே இருக்காண்டே”

“ஏண்ணே, மேலே இருந்து பாக்குறப்ப அவனுக்கு என்னடே தோணும்… கீழே இருக்கப்பட்ட மனுசக்கூட்டத்தைப் பத்தி என்ன நெனைப்பான்?”

“ஏன்?”

“நம்மளையெல்லாம் பாத்து சிரிப்பான்னு நினைக்கேன்.”

“மேலே போனா என்ன அவன் சாமியா? மனுசன் தானே?”

மாராயக்குட்டிப் பிள்ளை தலைமையில் காராய்மைக்கூட்டம் வந்து சேர்ந்தது. திருவடியாபிள்ளை வந்து சண்முகம்பிள்ளையிடம் “ஏண்டே அவன் இருக்கானா ஓடிப்போயிட்டானா?” என்றார்.

“இருக்கான்னுதான் நினைக்கேன்.”

“அவன் குதிப்பானாடே?”

“ஏன்?”

“குதிக்காம இருந்தா நல்லதுன்னு எனக்கு நினைப்புடே. நான் ரெண்டுநாளா உறங்கல்ல கேட்டுக்கோ.”

கொட்டும் குரவையொலிகளும் ஆர்ப்பு விளிகளுமாக கேட்டுக்கொண்டிருந்தது. பெரும்பாலானவர்கள் தெலுங்கில் வாழ்த்துக்களை கூவிக்கொண்டிருந்தார்கள்.

“தெலுங்கிலே சத்தம்போடுதானுக.”

“அவருக்குக் கேட்டு புரியணும்லா?”

“தமிழ் தெரியாதோ?”

“எல்லாம் தெரியும். அவரை சந்தோசப்படுத்தணும்னு நினைப்புதான். தமிழிலே வாழ்த்துங்கன்னு அவரு சொன்னாலும் இவனுக கேக்கமாட்டானுக”

“எளவு, அந்த சத்தம் நெஞ்ச அடைக்குதுடே”

ஊரே பெரும்பறை போல முழக்கமிட்டுக் கொண்டிருந்தது. மக்களின் கூச்சல்கள் அலையலையாக எழுந்து எழுந்து அடங்குவதுபோல செவிக்கு பிரமை எழுந்தது.

“கூட்டம் கூட்டமாட்டு வாறானுகளோ?”

“அது செவிக்கு அப்டி கேக்குது. மழை அலையலையா கேக்கும்லா?”

“போயிப் பாப்பம்… கோயில் முகப்புக்கு போயாச்சுன்னு நினைக்கேன்.”

கனத்து குளிர்ந்து கல்குண்டு போல ஆகிவிட்ட கால்களை இழுத்து இழுத்து வைத்து காராய்மைக்காரர்களும் கரைவேளாளர்களும் கோயில் முகப்பு நோக்கிச் சென்றார்கள். மேலே பார்த்த சண்முகம்பிள்ளை கோபுரத்தைப் பார்த்துத் திடுக்கிட்டுத் தலை கவிழ்ந்தார்.

“எளவு, படமெடுத்த வெசநாகம் போலல்லா தெரியுது கோபுரம்?” என நம்பியாபிள்ளை அவர் மனதில் ஓடியதையே சொன்னார்.

“மேலே இருக்கானாடே?”

“எங்க போவான்?”

“அவனுக்கு என்ன தீனம்? நாம அறிவுகெட்டு ஒரு பேச்சுக்குச் சொன்னா அவனுக்கு புத்தி எங்க போச்சு? ஏன் செத்தே தீருவேன்னு வம்படியா இருக்கான்?”

“அவன் பிடிவாதமான ஆளு.”

“மயிரு பிடிவாதம். எவனோ நாலாளு சொன்னான்னு சாடி சாவுததா வே பிடிவாதம்? நல்ல ஆம்பிளையா இருந்தா இந்நேரம் எறங்கி எங்கிணயாம் போயிருப்பான்.”

கோயில் கோபுர வாசலில் கோயில் அந்தணர் பதினெட்டுபேர் பூர்ணகும்பம் மங்கலத்தாலம் மரியாதைகளுடன் நின்றிருந்தனர். இருவர் தீப்பந்தமும் பன்னிருவர் சளையோலைகளாலும் மலர்களாலும் பின்னப்பட்ட அலங்கார விசிறிகளும் ஏந்தியிருந்தார்கள். வரிசையாக நடப்பட்ட மூங்கில் கழிகளில் பட்டுத்துணியாலான பாவட்டாக்களும் அலங்காரத்தூண்களும் தொங்கி காற்றில் ஆடின. தலைக்குமேல் சிறுகுருவிகளின் சிறகடிப்பு போல துணித்தோரணங்கள் காற்றில் சிர் சிர் என துடித்தன. தீப்பந்தங்களின் தீ காலையொளியில் சிவந்த துணிக்கிழிசல் போல தெரிந்தது.

கோயிலின் வாத்தியக்காரர்கள் பின்பக்கம் கொம்புகளும் குழல்களும் குறுமுரசும் மிழவும் பறைகளுமாக காத்திருந்தார்கள். கோயில் ஸ்தானிகரும் ஸ்ரீகாரியமும் வெண்பட்டுத்தலைப்பாகையும் மார்புக்கு குறுக்காக செம்பட்டுப்பட்டையும் அணிந்து நின்றனர். ஊராய்மைக்கார நம்பூதிரிகள் வலப்பக்கமாக வரிசையாகக் கூடி நின்றனர். அனைவருமே வெண்பட்டு ஆடைகட்டி இடுப்பில் மஞ்சள் சரிகைப்பட்டு கச்சையை இறுக்கி வெறுந்தலையில் சரிந்த குடுமியுடன் தெரிந்தனர்.

நாயக்கர் ஊர்வலம் கோயில் முகப்பை அடைந்தது. பெரியபல்லக்கு கட்டை போட்டு நிறுத்தப்பட்டது. முன்னால் சென்ற சிறிய பல்லக்குகளும் அசைந்தாடி கட்டைகள்மேல் நின்றன. கோயில் முகப்பில் நின்றிருந்த ஸ்தானிகரும் ஸ்ரீகாரியமும் கும்பிட்டபடி முன்னால் வந்தனர். நகருக்கு வெளியிலேயே ஊர்வலத்துடன் சென்று சேர்ந்துகொண்டு முன்னால் வந்த கோயில் காறுபாறு வெங்கடசுப்பையர் உடல்குலுங்க ஓடிப்போய்க் கைகளை மிகையாக வீசி ஆணைகளை போட்டார். அவர்கள் குழம்பிப்போய் அங்குமிங்கும் பாய்வதுபோல உடலசைவுகளுடன் அங்கேயே நின்றனர். நாலைந்துபேர் இலக்கில்லாமல் கைவீசி மற்றவர்களை நோக்கிக் கூச்சலிட்டனர். அதைத் தவறாகப் புரிந்துகொண்டு வாத்தியகாரக் கோஷ்டி இசையை ஆரம்பிக்க ஸ்ரீகாரியம் குமரேசபிள்ளை அவர்களை கையை ஓங்கி வசைபாடியபடி அடிக்கப் பாய்ந்தார். அவரை காறுபாறு வசைபாடித் தடுத்தார்.

பெரியநாயக்கர் விஜயரங்க சொக்கநாதரின் மகாமாத்ரிகர் நரசப்பையர், தளவாய் வெங்கடராகவாச்சாரியார், ராயசம் சுப்பண்ணா ஆகியோர் தனிப்பல்லக்குகளில் வந்திருந்தார்கள். அவர்கள் வந்த பல்லக்குகள் இருபக்கமும் ஒதுங்கின. காறுபாறு வெங்கடசுப்பையரும் ஸ்ரீகாரியம் குமரேசபிள்ளையும் முதல் பல்லக்கின் அருகே நின்றிருந்த திருக்கணங்குடி ராயசம் திம்மப்பையனையும் அவருடைய அமாத்யன் கிருஷ்ணப்பையனையும் அணுகி வணங்கினர். அவர்கள் நால்வரும் மகாமாத்ரிகர் நரசப்பையரின் பல்லக்கின் அருகே சென்று கும்பிட்டு முகமன் உரைத்தனர். அவர் பட்டுத்திரைச்சீலையை விலக்கி வெளியே வந்தபோது சூழ்ந்திருந்தவர்கள் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.

அதன்பின் நால்வரும் சென்று தளவாய் வெங்கடராகவாச்சாரியாரையும் ராயசம் சுப்பண்ணாவையும் முகமன் கூறி பல்லக்கில் இருந்து இறங்க வைத்தனர். வெங்கடராகவாச்சாரியார் மிகப்பெரிய உடைவாளை இடுப்பில் அணிந்திருந்தார். தலைமுடியை முன்கொண்டையாகக் கட்டி அதன்மேல் பச்சைப்பட்டு முண்டாசு கட்டி அதன்மேல் முத்துச்சரங்களை சுற்றியிருந்தார். கழுத்தில் சரப்பொளியும் அடுக்குமாலையும் பதக்கமாலையும் அணிந்திருந்தார். காலில் தோல்குறடுகள்.

ஸ்ரீகாரியம் குமரேசபிள்ளை கைகாட்ட முரசுகளின் கதி மாற ஆரம்பித்தது. வாழ்த்தொலிகள் அதற்கேற்ப உச்சத்தை அடைந்தன. மகாமாத்ரிகர் நரசப்பையர், தளவாய் வெங்கடராகவாச்சாரியார், ராயசம் சுப்பண்ணா ஆகியோர் கைகூப்பி இருபக்கமும் நின்றனர். ஆலயத்தின் காறுபாறு வெங்கடசுப்பையர் ஸ்ரீகாரியம் குமரேசபிள்ளை ஆகியோரும், திருக்கணங்குடி ராயசம் திம்மப்பையன் அவருடைய அமாத்யர் கிருஷ்ணப்பையன் ஆகியோரும் கும்பிட்டபடி பெரிய பல்லக்கின் அருகே சென்று வணங்கி முகமன் உரைத்தனர். கொம்புகளும் குழல்களும் முரசுகளும் முழவுகளும் இன்னும் என்னென்னவோ வாத்தியங்களும் சேர்ந்து ஒற்றை பிளிறலாக ஒலிக்க நகரின் சுவர்கள் எல்லாம் எதிரொலி செய்தன. வாழ்த்தொலிகள் அதற்குள் அழுந்தியவையாகவே கேட்டன.

பெரிய பல்லக்கின் செம்பட்டுத்திரையை விலக்கி உள்ளிருந்து மதுரை மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் தோன்றினார். மெலிந்த வெளிறிய சிறிய உருவம். தேம்பிய தோள்கள். நரையோடிய சிறிய மீசை. சிறிய மூக்கும் வெளிறிய சிறிய உதடுகளுமாக நோயாளிச்சிறுவன் போலிருந்தார். நாயக்கர்களின் வழக்கப்படி தலைமுடியை சுருட்டி முன்கொண்டையாக இட்டு இடப்பக்கமாக சரித்து, அதன்மேல் பொற்பட்டுசுற்றி முண்டாசாக கட்டி, அதைச்சுற்றி முத்துமாலைகள் அணிந்திருந்தார். கழுத்தில் சரப்பொளி, இலையாரம், மலராரம், மடக்காரம், காசுமாலை, பதக்கமாலை, கண்டசரம் ஆகியவை கொத்தாக கிடந்தன. தோள்களில் தோள்வளை, கைகளில் கங்கணம் வளையல். பத்துவிரல்களிலும் வைரமோதிரங்கள். காதுமடல்களை வடித்துத் தோள்வரைக்கும் நீட்டி அவற்றில் அடுக்கடுக்காக பொன்னாலான காதுமலர்கள் அணிந்திருந்தார். கைகூப்பியபடி அவர் படிகளில் இறங்கி தரையில் நின்றார். சற்றே கூன்விழுந்த உடம்பாதலால் அவருடைய நகைகள் மார்பில் தொங்கி ஆடிக்கிடந்தன.

விஜரங்கசொக்கநாதரை நோக்கித் தாசிகளின் அணி ஒன்று மங்கலத்தாலங்களுடன் வந்தது. அவர்கள் குரவையிட்டபடி பொற்குடங்களில் மஞ்சள்நீரை அவர் கால்களில் ஊற்றிக் கழுவினார்கள். மலர்களைத் தூவி வணங்கினார்கள். நடனம்போல கையசைவுகளால் அவர் கோயிலுக்குள் வரவேண்டும் என்று வரவேற்றார்கள். அவர் கும்பிட்டபடியே தரையில் விரிக்கப்பட்டிருந்த நடைபாவாடைமேல் நடந்தார். சூழ்ந்திருந்தவர்கள் வாள்களையும் வேல்களையும் தரைவரைக்கும் தாழ்த்தி அவரை வாழ்த்தி கூச்சலிட்டார்கள். கோயிலுக்குள் நின்றிருந்த வாத்தியக்காரர்களை நோக்கி ஸ்ரீகாரியம் குமரேசபிள்ளை கைகளை வெறிகொண்டவர் போல ஆட்டினார். அவர்கள் ஒத்திசைந்து பெரிய ஓசை எழுப்பினர். வியர்வை வழிந்த உடல்கள் இசைக்கு ஏற்ப துள்ளி துடித்தன. தசைகள் பளபளத்து அசைந்தன. யானைகள் செவிகளை அசைத்தன. பட்டுப்பாவட்டாக்களும் அலங்காரத்தூண்களும் காற்றில் அசைந்தன.

நாயக்கர் நேராக முற்றம்நோக்கிச் செல்லும்போது சண்முகம்பிள்ளை “எனக்கு என்னமோ போல வருதுடே” என்றார்.

நம்பியா பிள்ளை ஏதோ சொல்வதற்கு முன்னால் அவர் அப்படியே தளர்ந்து விழுந்துவிட்டார்.

குமாரசாமிப்பிள்ளை “அத்தான் நான் தம்பியா பிள்ளைய பாத்துக்கிடுதேன். நீங்க போங்க” என்றார்.

“அவன் அப்டி கழன்றுகிட்டான்… என்ன நடக்கப்போகுதோ” என்றார் திருவடியாபிள்ளை.

“சும்மா வாங்கடே” என்றார் மாராயக்குட்டிப்பிள்ளை.

“அத்தான் மேலே பாருங்க.”

மாராயக்குட்டிப்பிள்ளை அனிச்சையாக மேலே பார்த்தார். கோபுரத்தின்மேல் அணைஞ்சபெருமாள் தோன்றினான். கீழே கூட்டத்தில் இருந்து முழக்கமாக ஓசைகள் கேட்டன. உடனே ஓசைகள் அவிந்து அமைதி ஏற்பட்டது.

எவரும் எதுவும் முடிவுசெய்வதற்குள் அணைஞ்சபெருமாள் “மதுரை ராசாவே அநியாய வரிகெட்டி சீரளியுதோம் ராசாவே. எங்க சங்கட ஹர்ஜியை கேக்கணும் ராசாவே” என்று கூவியபடி கைகளை விரித்து பறப்பவன் போல கீழே குதித்தான்

அவன் மிகமெல்ல ஓர் இறகுபோல மிதந்து இறங்குவதாக தோன்றியது. “பய கெந்தர்வன் மாதிரில்லா வாறான்” என்று அவர் நினைத்துக்கொண்டார். கோபுரத்தில் சிலையாக இருந்த ஆயிரம் கந்தர்வர்களில் எவரோ பிரிந்து மண்ணிறங்குவதுபோல.

அவன் உடலில் காற்றுபட்டு ஆடைகள் கொப்பளித்தன. தலைமயிர் அவிழ்ந்து பின்பக்கம் பறந்தது. ஆனால் மறுகணம் தட் என்ற ஓசையுடன் அவன் வந்து கல்தரையில் அறைபட்டு விழுந்தான். துடிப்போ துள்ளலோ இல்லாமல் அப்படியே அசைவில்லாமல் கிடந்தான்.

[ 5 ]

நினைத்து அஞ்சியதுபோல தவறாக ஏதும் நடக்காமல் எல்லாம் முறையாகவே நடந்தேறியதில் மாராயக்குட்டிப் பிள்ளைக்கே கொஞ்சம் ஏமாற்றம்தான். அதைவிட எல்லாம் முடிந்து கண்விழித்த கணேசபிள்ளைக்கு கடுமையான சோர்வு. “என்னமாம் யுக்தி வச்சிருக்கானாவே? பிறவு எல்லாரையும் சேத்து களுவிலே ஏத்திப்போடலாம்னு திட்டமோ?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

அணைஞ்சபெருமாள் கீழே விழுந்ததுமே காவலர்கள் ஓடிவந்து பெரியநாயக்கரைச் சூழ்ந்து கொண்டார்கள். மகாமாத்ரிகர் நரசப்பையர், தளவாய் வெங்கடராகவாச்சாரியார், ராயசம் சுப்பண்ணா ஆகியோர் அரசர் அருகே நின்றுகொண்டு அவர் திரும்பிப் போய்விடலாம் என்றார்கள். ஆனால் நாயக்கர் அவர்களை விலகிச் செல்லும்படி சொல்லிவிட்டு சூழ்ந்திருந்தவர்களை நோக்கி கும்பிட்டார். சடலத்தின் கையில் இருந்த ஓலையை எடுத்து தன் கையில் தரும்படி ஆணையிட்டார். அதை அங்கேயே பிரித்து படித்தார். பின்னர் அதை ராயசம் சுப்பண்ணா கையில் கொடுத்துவிட்டு மீண்டும் அனைவரையும் பார்த்து கும்பிட்டார். “ஸ்ரீ மீனாள் துணையால் வேண்டியவை செய்யப்படும்” என்று அறிவித்துவிட்டு திரும்பத் தன் பல்லக்கு நோக்கி நடந்தார்.

மன்னரின் அறிவிப்பை கோல்காரர்கள் திரும்பத் திரும்பக் கூவி ஊராருக்கு அறிவித்தார்கள். நகரமே ஓசையடங்கி பீதியுடன் பதுங்கியிருந்தது. படை அப்படியே வளைந்து திரும்பி அரண்மனை வளாகம் நோக்கிச் சென்றது. நுரை அழிவதுபோல சரசரவென்று ஒருநாழிகையில் நகரமே ஒழிந்தது. சற்றுமுன் தெருக்களில் அத்தனை பொலிவும் திரளும் இருந்ததா என்று சந்தேகம் வரும்படியாக அனைத்தும் மாறின. யானைகள் குதிரைகள் பல்லக்குகள் முத்துக்குடைகள் எல்லாம் கண்ணுக்குத்தெரியாத வளைகளுக்குள் தங்களை இழுத்துக்கொண்டன.

“ஈசல்பட்டாளம் கெளம்பின மாதிரில்லா கெளம்பி வந்தானுக!” என்று மாராயக்குட்டிப் பிள்ளை சொல்லிக்கொண்டார்.

கோயில் ஸ்ரீகாரியம் குமரேசபிள்ளை சொல்லி அனுப்பிய ஆள் வந்து காராய்மைக்காரர்களை அழைத்தான். மாராயக்குட்டிப்பிள்ளையும் பதினெட்டு காராய்மைக்காரர்களும் சென்று கோயில் முகப்பில் நின்றிருந்த ஸ்ரீகாரியம் குமரேசபிள்ளையை கண்டு வணங்கினர். செத்துப்போனவனை அடையாளம் காட்ட முடியுமா என்று குமரேசபிள்ளை கேட்டார்.

மாராயக்குட்டிப்பிள்ளை கீழே வெள்ளை துணிமூடி போடப்பட்டிருந்த சடலத்தை பார்த்தார். ஒருவன் துணியை விலக்கிக் காட்டினான். அவர் குனிந்து கூர்ந்து பார்த்தார். “எங்கிணயோ பாத்த முகம்” என்றார். பின்னர் குனிந்து அந்த கண்டிகையை பார்த்து “அரிசிச்செட்டியாக்கும்…” என்றார்.

அதற்குள் மாராயக்குட்டிப்பிள்ளை அருகே நின்ற நம்பியாபிள்ளை “அண்ணா இது நம்ம அரிசிவாணியன் முருகப்பனாக்குமே” என்றார்.

“ஆமால்லா… எளவு முருகப்பனாலே? அவனுக்கு என்னலே தீனம்?”

“அவனை வரிகெட்டேல்லண்ணு வந்து கோயில்முறைக்காரனுக தேடினாங்கள்லா? பாவம், முக்காலியிலே கெட்டிவைச்சு அடிப்பாங்கன்னு பயந்துபோயிட்டான் போல” என்றார் கணேசபிள்ளை. அவர் நன்றாகவே தெளிந்து முகம் மலர்ந்தவராக தெரிந்தார்.

“நல்ல பய,பாவம்” என்றார் திருவடியாபிள்ளை.

அணைஞ்சபெருமாளை என்ன செய்வது என்று கோயில் காறுபாறு வெங்கடசுப்பையர் தலைமையில் ஊராய்மை நம்பூதிரிகளும், வைதிகர்களும் கூடி அமர்ந்து ஒரு சிறு விவாதம் நடைபெற்றது. முதியவரும் தந்த்ரியுமான ஸ்ரீபாதமங்கலம் நரசிம்மதாசர் கோயிலைத் தீட்டாக்கினாலும் பெருமாள் காலடியில் விழுந்து உயிர்விட்டதனால் அணைஞ்சபெருமாளுக்கு மோட்சம் உண்டு என்றும், அவனை ஸ்ரீபாததாசனாக அறிவித்து ஒரு சிறு பூடம் அமைத்து ஆண்டோடாண்டு பலிபூசனாதிகள் செய்துவருவதே ஆசாரம் என்றும் அறிவித்தார். அதற்கு எவரும் மாற்று சொல்லவில்லை.

திருக்கணங்குடி ராயசம் திம்மப்பையன் “ராஜாமேலே விளுந்திரப் பாத்தான். கொலகாரப்பாவி” என்றார்.

வெங்கடசுப்பையர் “நானும் அதையே நினைச்சேன்” என்றார்.

ஆனால் அமாத்யன் கிருஷ்ணப்பையன் “நல்லா யோஜனை பண்ணி பாக்கணும். நல்லவேளையா அவன் ஆளு கீழ்ச்சாதி இல்லை. அந்த மட்டுக்கும் க்ஷேமம். ஆனால் காலம் போகப்போக கதை எப்டி மாறும்னு சொல்ல முடியாது. இப்டி ஒண்ணு நடந்தா அவனை அப்டியே ஒரு சாமியா ஆக்கி பூசை வழிபாடுன்னு போயிடறது நல்லது. இங்கேருந்து போறதுக்குள்ள மகாராஜாவே அவனுக்க பூடத்தை வந்து கும்பிட்டுட்டு போனார்னா அவன் சாமியா ஆயிருவான். பின்னாளிலே கோயில்மேலே ஏறி குதிச்சவன் எதுக்கு குதிச்சான் என்ன ஏதுங்கிறதெல்லாம் மறைஞ்சுபோயி அதொரு சாமிக்க லீலையா மாறிடும்… காலாகாலமா இங்க எல்லாமே அப்டித்தான் நடந்துட்டு வருது. கோயிலைச்சுத்தி இருக்கப்பட்ட பிரம்மஹத்தியும் மாடசாமிகளும் எல்லாம் இப்டியெல்லாம் வந்த தெய்வங்களாக்கும்” என்றார்.

“அதுவும் செரிதான்” என்றார் வெங்கடசுப்பையர்.

“பிணத்தை அவனுக்க காராய்மைக்காரனுக கிட்ட குடுத்திடலாம். அவனுக அதை இங்கேயே சுடுகாட்டிலே எரிக்கட்டும். சாம்பலை இங்க ஒரு எடம்பாத்து கொண்டுவந்து வைச்சு சுடலைப்பிரதிஷ்டை செய்வோம்.”

“ஆனா அவனுக ஊருக்கு கொண்டுபோகணும்னு ஆசைப்படலாம். அவனுக்கு சாதிசனம் உண்டுல்ல. எனத்திலே அணையணும்னாக்கும் சொல்லு.”

“இப்ப ராஜா ஊரிலே இருக்காரு. அந்திக்குள்ள சடலம் எரிஞ்சாத்தான் அவரு தீட்டுமாறி அடுத்த மங்கலகர்மங்களைச் செய்ய முடியும். கோயிலையும் புண்ணியாகம் பண்ணி நடைதெறக்கணும். அவனுக சடலத்தை பணகுடிக்கு கொண்டுபோனா பிறகு இங்க அவனை தெய்வமா நிறுத்த முடியாது” என்றார் கிருஷ்ணப்பையர். “மட்டுமில்லை அவனுக அங்க இதை ஒரு ஜெயமாட்டு கொண்டாடுவானுக. திருக்கணங்குடியை பணகுடி ஜெயிச்சுப்போட்டுதுன்னு சொல்லுவானுக. அதுக்கு எடம்குடுக்கவேண்டாமே.”

“அப்ப செரி.. இங்கேயே உடனே எரிச்சுப் போடச்சொல்லு” என்றார் வேங்கடசுப்பையர்

பிணத்தை தங்களிடம் தந்தால் என்ன செய்வது என்று முணுமுணுப்பாக பேசிக்கொண்டு நின்றிருந்த காராய்மைக்காரர்களிடம் தகவல் சொல்லப்பட்டபோது மாராயக்குட்டிப்பிள்ளை “அப்டியே செய்யுதோம்… மகாராஜா உத்தரவுல்லா” என்றார்.

பிணத்தை நேரடியாகவே சுடுகாட்டுக்கு கொண்டு போகச் சொல்லிவிட்டார்கள். திருவடியாபிள்ளையிடம் மாராயக்குட்டிப்பிள்ளை “ஒருநாழிகைக்குள்ள தீ ஏறிப்போடணும் சுடலையிலே” என்றார்.

நம்பியாபிள்ளை “அதென்ன மாமா அப்டி சொல்லிப்போட்டிய? அவனுக்கு ஆளு இருக்குல்லா? கெட்டினவ இருக்காள்லா?” என்றார்.

“ஏலே அவன் பண்டாரம்ல?”

“அது அப்ப. இப்ப அவன் அரிசிவாணியன் முருகப்பனாக்கும். ஆறாயிரம் கூட்டம். அவனுக்கு பெஞ்சாதி இருக்கா. வள்ளியம்மைன்னு பேரு, நல்ல வாழைக்கண்ணு மாதிரி குட்டி”

“ஏலே வகதிரிவு கெட்டவனே. அவனுக வந்து பொணத்தை பாத்தா இது முருகப்பன் இல்லைன்னு சொல்லிருவானுக. பெறவு அடையாளம் காட்டின உனக்கும் எனக்கும் சூத்துக்குக் களுமரம்தான்.”

“ஆமால்ல?”

“நாம அறிஞ்சாப்போரும்… இங்கிணயே உடன்கொள்ளி போட்டிருவோம். அதுக்கு எவனாவது ஒரு செட்டியாப் பையனை தேடிப்பிடிப்போம். சட்டுன்னு செதையிலே ஏத்தி தீய வச்சுப்போட்டோம்னாக்க பிறவு நாம தவுதாயப்படவேண்டாம் பாத்துக்கோ”

“ஆனா அவன் வந்து நிப்பானே, அவன்தான் முருகப்பன்னு”

“அதை பிறவு பாக்கலாம். அவன் வேற ஒரு முருகப்பன்னு சொல்லிப்போடலாம். பணகுடியிலே அவன் சாதிக்குள்ள தலைச்செட்டியை பாத்து பேசினா முடிஞ்சுது. ஏலே, இந்த வரிக்கொடுமை நம்மளை விட செட்டியாருங்களுக்கு கூடுதல். அதோட அவன் சாதியிலே ஒருத்தன் இப்டி சாமியாயிட்டான்னாக்க அவனுக்கு அது பெருமையில்லாடே? பேசிருவோம். முருகப்பன் கிட்டயும் பேசி சரியாக்கிப் போடுவோம். முதல்ல இந்தப் பொணம் செதையேறணும்.”

“அவனுக என்னமாம் சொல்லுவானுக… தர்மக்கொள்ளி போட்டா அதொரு ஐஸ்வரியமில்லை” என்றார் சண்முகம்பிள்ளை

“ஆமா, ஆனா இது ராஜ உத்தரவு. ராஜா சாயங்காலத்துக்குள்ள பள்ளிவேட்டைக்கு எறங்கியாகணும். கோயில் நடைதெறக்கணும்… நாம என்ன செய்யமுடியும்?’

“அதுவும் செரிதான்”

“இங்க உள்ள அரிசிச்செட்டியானுங்க நாலாளை சாட்சிக்கு கூப்பிடு… செதைகாரியங்களை அவனுக பாத்துக்கிடட்டும். அவனுகளிலெ ஒரு பய கொள்ளியும் போடட்டும்.”

ஏரிக்கரையில் செட்டியார்களின் சுடுகாட்டில் சிதை ஒருக்கப்பட்டது. திருக்கணங்குடி அரிசிச்செட்டிகள் எல்லாவற்றையும் பெருமிதமாக எடுத்துச் செய்தனர். எல்லா வீடுகளில் இருந்தும் ஏதாவது ஒன்று கொண்டுவரப்பட்டது. சந்தனக்கட்டைகள் கொண்டுவந்து அடுக்கப்பட்டன. நெய்க்குடங்களும் மலர்மாலைகளும் வந்தன. ஊர் தலையடியும் அவருடைய ஆட்களும் சுடுகாட்டில் அதிகாரம் செய்தனர்

“பாத்தா, எங்க சாதிக்கொரு பெருமை. எங்களுக்கு குடும்பிடுகதுக்கு ஒரு சாமியாக்கும் வந்திருக்கு. அதுக்குண்டானதைச் செய்யணுமா இல்லியா? அப்டி விட்டிரப்பிடாதே? ஏது?” என்று நல்லசிவம் செட்டியார் சொன்னார். “அதனாலேதான் எனக்க பேரப்பயலை கொள்ளிவைக்க கூட்டிட்டு வந்தேன். செத்தவன் நம்ம குடும்பம்னு ஒரு பிடி நமக்கு இருக்கும். நாளைப்பின்னை கோயில் கொடைன்னு வரும்போ எல்லாம் நம்ம கையிலே நிக்கும்… ஏது?”

“பின்ன இல்லாம?” என்றார் மாராயக்குட்டிப் பிள்ளை. “ஆனா அதுக்காக வச்சு தாமதிக்கவேண்டாம்… ஒடைஞ்சபொணம். அந்திக்குள்ள கரியாயிடணும்னு ராஜ சாசனம்”

“செய்துபோடுவோம்… தீய வைச்சா ஒருநாழிகையிலே மேலே ஏறிரும்…. ஒருநாழி எரிஞ்சா சாம்பலுதான் மிஞ்சும்… அம்பிடும் நெய்யி… ஹெஹெஹெ”

“சீக்கிரம் நடக்கட்டு” என்றார் திருவடியாபிள்ளை.

மாராயக்குட்டிப்பிள்ளை “ஏலே இவன் கொண்டாடிக் கொண்டாடி குடத்தை உடைச்சுப்போடுவான் போலுக்கே” என்றார்.

“பிள்ளைவாள், செதையேற்றம் முடிஞ்சபிறவு நம்ம வீட்டிலே துட்டித்தீனி. பத்தாம்நாள் காடாத்துக்கு எங்க சமுதாயவகை ஊரடங்க சத்யைவட்டம் உண்டு. நல்ல ஏர்வாடி அய்யமாரு சமையல். வந்து சாப்பிட்டு எங்க சாதிய ஆசீர்வாதம் பண்ணணும்” என்றார் நல்லசிவம் செட்டியார்.

“பண்ணிப்போடலாம் பண்ணிப்போடலாம்”

“கோயிலையும் நாங்களே எடுத்து கட்டுறதா தீர்மானம் ஆகியிருக்கு” என்று பெரியகருப்பு செட்டியார் சொன்னார்.

“அதை நான் முன்னாடியே சொல்லியாச்சு” என்று நல்லசிவம் செட்டியார் முறைப்புடன் அவரிடம் சொன்னார். “கோயில் எங்க குடும்பத்துக்கு பாத்தியப்பட்டதாக்கும். அங்க வேண்டிய முறையும் பூசையும் கொள்ளி போட்ட நம்ம பயலாக்கும் செய்யவேண்டியது”

“கொள்ளி அவன் மட்டுமே போடணும்னு இல்லை…” என்றார் பெரியகருப்புச் செட்டியார்.

பிணத்துக்கு அலங்காரம் எல்லாம் செய்யவில்லை. உடல் சிதைந்திருந்தது. அதை வெள்ளைத்துணியால் சுற்றி சிதைமேல் வைத்தார்கள். முகம் மட்டும் வெளியே தெரிந்தது. சாந்தமாக தூங்குவதுபோலிருந்தான் அணைஞ்சபெருமாள்

திருவடியாபிள்ளை வந்து மாராயக்குட்டிப்பிள்ளையிடம் “அண்ணேன், நல்ல செய்தி வந்திருக்கு. மகாராஜா எட்டூரு காராய்மைக்காரங்களையும் அடுத்தவாரம் திருநெல்வேலிக்கு வந்து நேரிலே முகம்காட்டச் சொல்லி உத்தரவு போட்டிருக்காரு. அதுவரை காராய்மை, கரைவேளான், செட்டி, வாணியன் எல்லாருக்கும் வரிவசூல் நிப்பாட்டி வைக்கணும்னு ஆணை” என்றார்

“நல்ல காரியமாக்கும்டே. ஆனா எனக்கு சங்கிலே தீயாட்டு இருக்கு. இந்த கூறுகெட்ட வாணியச் செட்டியானுங்க அடிவயித்திலே கொள்ளி வைக்கானுக.”

பிணம் காத்திருந்தது. திருவடியாபிள்ளை பெரியகருப்பு செட்டியாரிடம் “அப்ப எதுக்கு நேரம்போகணும்? கொள்ளிக்கு பய வந்தாச்சுன்னா காரியங்கள் நடக்கட்டு” என்றான்.

“ஒரு காரியம் இருக்கு” என்றபடி நல்லசிவம் செட்டியார் அருகே வந்தார். “என்ன இருந்தாலும் பிள்ளையில்லாத ஆளு. புதுப்பெஞ்சாதிக்கு தெரியாம எரிச்சா மரியாதை இல்லை. அதனாலே முருகப்பனுக்க பெஞ்சாதியை கூட்டிவாறதுக்கு ஆளனுப்பியிருக்கோம்…”

“அய்யோ” என்றார் திருவடியா பிள்ளை.

“அவனுக கூண்டோட கெளம்பி வருவானுகளே… பொணத்தை அங்கே கொண்டு போகணும்னு சொல்லுவானுகளே…. இங்க எரிச்சாகணும்னு ராஜசாசனம். அவனுக வந்தா ராஜகோபம் உண்டாகுமே” என்றார் மாராயக்குட்டிப்பிள்ளை.

“அது நமக்கு தெரியாதா? அவனுக வந்தா பொணத்தை அவனுக கொண்டு போவானுக. இல்லேன்னா அவனுகளே கொள்ளி போடணும்னு நிப்பானுக. இது எங்கூரு பொணம், எங்க ஊருக்க சொத்து. அப்டி விட்டுக்குடுப்போமா? காதும்காதும் வச்சமாதிரி அந்த குட்டியை மட்டும் கூட்டிவான்னு சொல்லியிருக்கு… வேற யாருகிட்டயும் ஒரு வார்த்தை சொல்லலை.”

“அதெப்பிடி?” என்றபோது மாராயக்குட்டிப்பிள்ளைக்கு குரலே எழவில்லை.

“அவகிட்ட இங்க ஒரு கோயில்சடங்குக்கு கூட்டிவர மூத்தசெட்டி உத்தரவுண்ணு மட்டும் சொல்லச் சொன்னேன். அப்டியே கையோட கூட்டிட்டு வாறதுக்கு உத்தரவு போட்டாச்சு. குதிரையிலே ஏத்தி வேகமா கொண்டுவந்தா ரெண்டு நாழிகையிலே வந்துபோடலாம். அங்க ஊரிலே இன்னும் முருகப்பன் விளுந்துசெத்த விசயம் தெரியாது. தெரிஞ்சு அவனுக கிளம்பறதுக்குள்ள இங்க பொணம் எரிஞ்சிரும்.”

திருவடியா பிள்ளை “அண்ணா நான் அவசரமா போகணுமே…” என்றார்.

“குட்டிக்கிட்ட ஒண்ணும் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன். இங்க சுடுகாட்டிலே நுழையறப்ப சொன்னா போரும்… ஏது?” என்றார் நல்லசிவம் செட்டியார்.

“அண்ணா, எனக்கு அவசரமா ஒரு ஜோலி” என்றார் நம்பியாபிள்ளை.

மாராயக்குட்டிப்பிள்ளை வாயை திறந்து இறந்த சடலம் போல தெரிந்தார். மூச்சு ஓடுகிறதா என்றே நம்பியாபிள்ளைக்கு சந்தேகம் வந்தது.

போகலாமா என்று அவர் ததும்பிக்கொண்டிருக்கும்போது குதிரைகள் இரண்டு ஏரிக்கரையில் வந்து நின்றன. ஒரு குதிரையில் இருந்து பாய்ந்திறங்கி வள்ளியம்மை “எனக்க ராசாவே! எனக்க ராஜாவே! எனக்க பொக்கிசமே! எனக்க பொன்னே! எனக்க காசுபணமே!” என்று கதறியபடி நெஞ்சிலறைந்து கொண்டு ஓடிவந்தாள்.

அந்தக்குதிரையை ஓட்டிவந்த வீரன் இறங்கி கடிவாளத்தை பிடித்துக்கொண்டு நின்றான். மற்ற குதிரைகளும் குளம்பு அறைந்து சுழன்று நின்றன.

வள்ளியம்மை தலையிலும் மார்பிலும் அறைந்து கதறியபடி சிதையருகே ஓடிவந்தாள். பிணத்தருகே வந்து முகத்தை பார்த்ததும் திகைத்தவள்போல நின்றாள். இருகைகளும் சிறகுகள்போல விரிந்து நின்றன. முகம் உறைந்துவிட்டது

திருவடியாபிள்ளை நம்பியாபிள்ளையின் தோளைத் தொட அவர் திடுக்கிட்டார்.

வள்ளியம்மை ஒரு சொல்கூட பேசாமல் அப்படியே தரையில் அமர்ந்து தலைமேல் கைகளை வைத்துக்கொண்டாள். உடலை குறுக்கி குந்தி அமர்ந்தாள். முந்தானையை இழுத்து முகத்தின் மேல் போட்டுக்கொண்டாள். ஒரு துணிக்குவியல்போல தெரிந்தாள்.

“செரி, செதையேத்துங்கலே” என்றார் நல்லசிவம் செட்டியார்.

சுடலைக்காரர்கள் பிணத்தைத் தூக்கிச் சிதையில் வைத்தனர். குடிமகன் மெல்லிய குரலில் ஆணையிட நல்லசிவம் செட்டியாரின் பேரன் நமச்சிவாயம் குடமுடைத்து கொள்ளி போட்டான்.

நெய் நனைந்திருந்தமையால் சிதைத்தீ சட்டென்று பற்றிக்கொண்டு கொழுந்தாடியது. சூழ்ந்திருந்தவர்கள் “சிவசிவசிவ! ஹரஹரஹர!” என்று குரலெழுப்பினர்.

சட்டென்று வள்ளியம்மை எழுந்து கைகூப்பியபடி பாய்ந்து சிதைத்தீயில் புகுந்தாள்.

“அய்யய்யோ! அய்யய்யோ!” என்று நல்லசிவம் செட்டியார் கூச்சலிட்டார். கூடிநின்றவர்கள் வெறிகொண்டு வெவ்வேறு சொற்களில் அலறினர். சிலர் சிதைநோக்கி பாய்ந்தார்கள்.

ஆனால் அவள் தீயில் அவனருகே விழுந்து அவன் உடலை தழுவிக்கொண்டாள். நெய்த்தீ அவள் ஆடைகளை பொசுக்கி அவளைச் சூழ்ந்து அலையடித்தது. அவள் உடல் துடிப்பதும் நெளிவதும் செந்தழல்களுக்குள் தெரிந்தன.

“சதிமாதாவே! சதிமாதாவே” என்று நல்லசிவம் செட்டியார் கூச்சலிட்டார். உடனே “சதிமாதாவுக்கு மங்களம்! சதிமாதாவுக்கு சுபமங்களம்!” என்று கூடிநின்றவர்கள் கூவத்தொடங்கினர்.

“என்னடே இது?” என்றார் நம்பியாபிள்ளை.

“எனக்கு ஒண்ணுமே புரியல்லை” என்றார் திருவடியாபிள்ளை.

மாராயக்குட்டிபிள்ளை வெறிகொண்டவராக கைகளை விரித்து “எறிமாடனுக்கு ஜெயமங்களம்…. உடன்நின்ற நங்கைக்கு சுபமங்களம்” என்று கூச்சலிட்டார்.

****

4. குமிழிகள் [சிறுகதை]

3. வலம் இடம் [சிறுகதை]

2. கொதி[ சிறுகதை]

1. எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைகொதி- கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைபெண்களின் நெஞ்சில் மூண்ட கனல்: இரம்யா