உண்மை எவ்வாறு உருக்கி வார்க்கப்பட்டது?

நிகலாய் ஒஸ்திரோவ்ஸ்கி

வீரம் விளைந்தது வாங்க

ஒரு சோஷலிச யதார்த்தவாத நாவலை வேறெவ்வகையிலேனும் வாசிக்கமுடியுமா? ஏன் இந்த கேள்வி என்றால் சோஷலிச யதார்த்தவாதம் என்றாலே ஆசிரியர் சொல்வதை அன்றி வேறெவ்வகையிலும் பொருள்கொள்ள வாசகனுக்கு இடமே அளிக்காதபடி முன்னகரும் ஒற்றைத்திசைப் பாதை கொண்டது. அதன்பொருட்டே உருவாக்கப்பட்டது. பிரச்சாரமே அதன் இலக்கு. ஆசிரியர் சொல்வதற்கு அப்பால் வாசகன் செல்லமுடியுமென்றால் அது பிரச்சாரம் அல்ல.

அதோடு சோஷலிச யதார்த்தவாதம் என்பது வேறெவ்வகையில் பொருள்கொள்ளப்பட்டாலும் ஆசிரியன் தலைக்கு கேடு வந்துவிடவும் வாய்ப்புண்டு. ஆசிரியன் எழுதியதையே வாசகன் புரிந்துகொள்ளவேண்டும், கமிசார் புரிந்துகொள்ளவேண்டும், கட்சி புரிந்துகொள்ளவேண்டும். பன்முகவாசிப்பு என்றால் அது ரகசியப்பிரதி என பொருள்கொள்ளப்படும். ரகசியப்பிரதிகள் எல்லாமே அரசியல் பிரதிகள். அரசியல் பிரதிகள் எல்லாமே எதிர்ப்புரட்சிப்பிரதிகள் என்பது ஸ்டாலினிய வாய்ப்பாடு.

நான் நிகாலாய் ஒஸ்திராவ்ஸ்கிய் எழுதிய வீரம் விளைந்தது என்னும் நாவலை மீண்டும் வாசிக்க எடுத்தபோது அந்த எண்ணம் இருந்தது. மூலத்தில்  “How the steel was tempered” என்ற தலைப்பு கொண்ட இந்நாவல் சோவியத் ருஷ்யாவின் ஆட்சிக்காலத்தில் உலகமெங்கும் 200 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. ஆகவே மிகப்பரவலாகப் படிக்கப்பட்டது. உலக இலக்கியத்தில் ஆழ்ந்த செல்வாக்கையும் செலுத்தியது. இதை என் இருபதாவது வயதிலேயே படித்திருக்கிறேன்.

[இந்நாவலை மூத்த மார்க்ஸிய அறிஞர் எஸ்.ராமகிருஷ்ணன் வீரம் விளைந்தது என்ற பெயரில் 1950 களிலேயே மொழியாக்கம் செய்திருந்தார். அம்மொழியாக்கம் நீண்ட இடைவேளைக்கு பின் 2008ல்  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தால் மறு அச்சு போடப்பட்டிருக்கிறது.2017 லும் 2019 லும் மறு அச்சுகள் வந்துள்ளன. என் கையில் இருப்பது 2019 அச்சு. ஆனால் இந்நூலில் இதன் முதல் வெளியீடு பற்றிய செய்தி ஏதும் இல்லை]

இந்நாவலின் ஆசிரியர் நிகலாய் ஒஸ்திராஸ்வ்ஸ்கியின் தன்வரலாறு என இதைச் சொல்லலாம். 1904ல் பழைய சோவியத் ருஷ்யாவின் உக்ரைன் பகுதியில் பிறந்தார். 1917ல் சோவியத் ருஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி நிகழ்ந்தபோது அவர் பதிமூன்று வயதான சிறுவன். சோவியத் புரட்சி என்பது 1917ல் ஜார் மன்னர் வீழ்த்தப்பட்டபோது தொடங்கி 1923ல் போல்ஷெவிக்குகள் அறுதியாக ஆட்சியைக் கைப்பற்றியபோது நிறைவடைந்தது. அந்த ஐந்தாண்டுகளில் நிகலாய் ஒஸ்திராஸ்வ்ஸ்கி தன் வாழ்க்கையை கண்டடைவதுதான் இந்நாவலின் முதற்சித்திரம். அதன்பின் 1930 வரை சோவியத் ருஷ்யாவில் கம்யூனிச கட்டுமானம் நிகழ்ந்தது அடுத்த சித்திரம்.

இந்நாவலில் நிகலாய் ஒஸ்திராவ்ஸ்கி பாவல் கர்ச்சாகின் என்னும் கதைநாயகனாக தோன்றுகிறார். மதப்பள்ளிக்கூடத்தில் துடுக்குக் கேள்விகேட்டு அடிவாங்கி வெளியேற்றப்படுகிறான் பாவல். அவன் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். அன்னை வீடுகளில் சமையல்வேலை செய்கிறாள். அண்ணன் ஆர்த்தியோம் மின்நிலையத்தில் கொல்லனாக பணிபுரிகிறான். பாவெலை ரயில்நிலைய உணவகத்தில் வேலையாளாக சேர்க்கிறார்கள். அங்குதான் அவன் வாழ்க்கையின் மெய்யான கொடுமையை காண்கிறான். கூடவே உழைப்பு அளிக்கும் தன்னம்பிக்கையையும் விடுதலையையும் கண்டடைகிறான். அவனுடைய குழந்தைப்பருவம் முடிந்து இளமைப்பருவம் தொடங்கும்போது நாவலும் தொடங்குகிறது

முதல் உலகப்போர் நடந்துகொண்டிருக்கிறது. உக்ரேனின் அந்த சிறிய ரயில்நிலையத்தில் போருக்குச் செல்லும் படைவீரர்களை ஏற்றிக்கொண்டு ரயில்கள் செல்கின்றன. போரிலிருந்து காயம்பட்ட படைவீரர்களுடன் ரயில்கள் திரும்பி வருகின்றன. சீமாட்டிகளும் சீமான்களும் ரயில்களில் வந்திறங்குகிறார்கள். உணவருந்துகிறார்கள். பணியாளர்களுக்கு பணத்தை வீசுகிறார்கள்.

அந்த இடம் ஒரு விபச்சாரவிடுதியும்கூட. அங்குள்ள பணியாட்கள் பெண்தரகர்கள். பணியாற்றும் பெண்கள் வலுக்கட்டாயமாக விருந்தினர்களின் படுக்கையறைகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறார்கள். பாவல் அங்கே தன்னை கண்டடைய ஆரம்பிக்கிறான். அப்போது ஒரு செய்தி வருகிறது- ஜார் வீழ்த்தப்பட்டார்.

அந்த செய்தியை அச்சிறிய நகரம் எதிர்கொள்வதன் சித்திரத்தில் இருந்து நாவல் விரிய தொடங்குகிறது. வெவ்வேறு படைகளால் அந்நகர் கைப்பற்றப்படுகிறது. செம்படைகள் நகரை கைப்பற்றுகின்றன. போல்ஷெவிக் எதிர்ப்பாளாரான பெட்லியூராவின் ராணுவம் அவர்களை துரத்தி மீண்டும் நகரை கைப்பற்றுகிறது. மீண்டும் செம்படை வருகிறது. அவர்கள் நகரை கைவிட்டுச் செல்ல போலந்து அரசப்படை நகரை கைப்பற்றுகிறது.

இந்த தொடர் அலைக்கழிப்புகள் நடுவே பாவல் அரசியலறிவு பெறுகிறான். தலைமறைவு போல்ஷெவிக் வீரரான ஷூஹ்ராய் அவனுக்கு போல்ஷெவிக் புரட்சியின் மேல் ஈடுபாட்டை உருவாக்குகிறார். நடுவே தோன்யா என்னும் உயர்குடி அழகியின்மேல் மெல்லிய காதல் கலந்த நட்பு உருவாகிறது. சின்னச் சின்ன சாகசங்கள், பூசல்கள். பாவல் செம்படையில் சேர்ந்து போர்வீரனாகிறான்

இந்நாவலை ஒஸ்திரோவ்ஸ்கிய் மிகவிரிவான தன்வரலாறாகவே எழுதினார். மெய்வாழ்க்கையில் இருமுறை போர்க்களத்தில் காயம்பட்டு மீண்டார். டைஃபஸ் காய்ச்சலால் பலவீனமடைந்தார்.முடக்குவாதத்தால் அசையமுடியாதவரானார். பார்வையையும் இழந்தார். 1930ல் அசையமுடியாமல் பார்வையற்று படுக்கையில் படுத்திருக்கும்போதுதான் இந்நாவலை ஸ்டென்சில்தாளில் ஒற்றி ஒற்றி எழுதி நகலெடுத்து வெளியிடலானார்.

பாவெல் பார்வையை இழந்து படுக்கையில் கிடந்தபடி “புயலின்மூலம் தோன்றியவர்கள்”என்ற நாவலை எழுத தொடங்கும்போது வீரம் விளைந்தது நாவல் முடிகிறது. இருபகுதிகளாக இது 1917 முதல் 1930 வரையிலான சோவியத் புரட்சியின் கதையை சொல்கிறது. போலந்துக்காரர்கள் உள்ளிட்ட எதிர்ப்புரட்சியாளர்களுடனான போராட்டம், லெனினின் மறைவு, தொழிற்சாலைகளையும் கூட்டுப்பண்ணைகளையும் அமைப்பது, புரட்சிகர அமைப்புகளுக்குள் உள்ள ஊடுபூசல்கள், கொள்கைக்குழப்பங்கள்.

இந்நாவல் ஸ்டாலினிஸ்ட் ரஷ்யாவில் இளந்தொழிலாளர்களுக்கான இலக்கிய அமைப்பாகிய ’மொலதாயா குவார்தியா’வால் இரு பகுதிகளாக வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட நாள்முதல் இது கம்யூனினிச பிரச்சார நாவல் என்ற அளவில் பெரிதும் முன்னிறுத்தப்பட்டது. ஒரு கம்யூனிஸ்டின் குன்றாத உளஆற்றலின் ஆவணம் என கொண்டாடப்பட்டது. அவ்வகையிலேயே தமிழுக்கும் கொண்டுவரப்பட்டது

ஆனால் இந்நாவல்கூட அன்றைய சோவியத் கமிசார்களால் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டே வெளியானது. இதில் பார்வையை இழந்தபின் தன் குடும்பம் எப்படி கொடிய வறுமைக்குச் சென்றது, தன் மனைவியும் தானும் மருத்துவ உதவிக்காக எப்படியெல்லாம் போராடவேண்டியிருந்தது என ஒஸ்திரோவ்ஸ்கி எழுதியிருந்தார். அவர் மனைவிக்கும் அவருக்கும் இருந்த கசப்பும் முரண்பாடும், இறுதியாக அது விவாகரத்தில் முடிந்ததும் எழுதப்பட்டிருந்தது.

அவையெல்லாம் வெட்டி அகற்றப்பபட்டபின்னரே நாவல் வெளிவந்தது. சோவியத் ருஷ்யாவின் உடைவுக்குப்பின்னரே முழுமையான வடிவம் வெளியாகியது. தமிழில் கிடைக்கும் இந்நாவலில் பாவலுக்கும் மனைவி தாயாவுக்குமான உறவு இலட்சியவாதத் தன்மை கொண்டதாக உள்ளது. பாவெல் அரசாலும் கட்சியாலும் மிகச்சிறப்பாக பேணப்பட்டு மாஸ்கோவில் மிக வசதியான முறையில் தங்கவைக்கப்படுகிறான். அங்கே ஓர் உதவியாளருடன் இணைந்து நாவலை எழுத ஆரம்பிக்கிறான்.

இந்நாவலில் இப்பகுதிகள் அவசரமாக, சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன “இப்போது தாயா சகல உரிமைகளும் கொண்ட கட்சி உறுப்பினராகிவிட்டாள். அவள் மிக நேர்த்தியான தொழிலாளியாக இருந்தாள். அவளுடைய சொந்த வாழ்க்கையில் சோகம் நிறைந்திருந்தபோதிலும் தொழிற்சாலையில் தலைசிறந்த முன்னணித் தொழிலாளர்களுக்கு சமமாக வேலைசெய்தாள்… உண்மையான போல்ஷெவிக்காக உருப்பெற்றுக்கொண்டிருந்த மனைவியைப்பற்றி பாவெல் பெருமை அடைந்தான். அந்த பெருமையுணர்வு தன் துன்பங்களை சகித்துக்கொள்ள அவனுக்கு உதவியது”என்பவை உண்மையில் ஆசிரியர் எழுதியவை தானா என்றே ஐயமெழும் அளவுக்கு குழந்தைத்தனமான வரிகள். ஏதாவது கட்சி கமிசார் கைவைத்திருக்கலாம்

இந்நாவல் காட்டும் எதிர்ப்புரட்சிச்சூழல் ஒன்றும் புதியது அல்ல. உக்ரேனின் பின்னணியில் மேலும் பிரம்மாண்டமாக மிகயீல் ஷோலகோவ் இதை எழுதிக்காட்டியிருக்கிறார். ‘டான் அமைதியாக ஓடுகிறது’ஒரு காவியத்தன்மை கொண்ட ஆக்கம். ருஷ்யப்பெருநாவல் மரபின் கடைசிச் சாதனை அதுதான்.

ஷோலக்கோவ்

கம்யூனிசத்தை கட்டி எழுப்புவதைப்பற்றியானாலும்கூட ஷோலக்கோவின் ’உழுதுபுரட்டப்பட்ட கன்னிநிலம்’ பலமடங்கு மேலான படைப்பு. அதிலுள்ள மனித குணத்தின் வண்ணவேறுபாடுகள் கலைஞனின் ஆக்கம் என அந்நாவலை காட்டுபவை. அதை ஷோலக்கோவ் கட்டாயத்தின்பேரில் எழுதினார், அதில் எவ்வகையிலும் உண்மையில்லை என்பதெல்லாம் பின்னர் வெளிவந்தது.தமிழிலேயே அவ்வாறு ரஷ்யக்கம்யூனிஸ்ட்டான தொ.மு.சி ரகுநாதன் எழுதியிருக்கிறார்.

அதனுடன் ஒப்பிடும்போது இந்நாவல் முதிரா முயற்சியாகவே தெரிகிறது. கதையொழுக்கு இல்லை. நிகழ்வுகளில் நுட்பங்கள் குறைவு. நினைவிலெழும் தன்வரலாற்றுக் காலம் இதிலுள்ளது. ஆகவே ஒழுக்கு முறிந்து தாவித்தாவிச் செல்கிறது நாவல். ஷோலக்கோவின் நாவல் பிரம்மாண்டமான காட்சிவெளியாக விரியக்கூடியது. இந்நாவலில் போர்க்களக்காட்சிகளைக்கூட சுருக்கமான செய்திகளாகவே ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.

ஷோலக்கோவ் நெருக்கடிகளில் மானுட ஆளுமைகள் உருகி தன்னை மறுவார்ப்பு செய்துகொள்வதன் பெருஞ்சித்திரத்தை அளிக்கிறார்.இந்நாவலில் பாவெலின் அண்ணன் ஆர்தியேமின் குணச்சித்திரம் தவிர எதுவுமே ஆர்வமூட்டும் அளவுக்கு சொல்லப்படவில்லை. போல்ஷெவிக்குகள் எல்லாருமே மிகச்சரியாக ஒரே அச்சுவார்ப்புகள். அதாவது அப்பழுக்கற்ற புரட்சியாளர்கள். இந்நாவலின் நிகழ்வுகள், கதாபாத்திரங்கள் ஆகியவற்றை பார்க்கையில்  ஒரு ‘போல்ஷெவிக் ஏட்டு’ எழுதிய முதல்தகவல் அறிக்கை என்று சொல்லத்தோன்றுகிறது. இதனுடன் ஒப்பிடுகையில் உழுதுபுரட்டப்பட்ட கன்னிநிலத்தின் நாயகன் டாவிடோவ் ஒரு காவியநாயகன் என்று படுகிறது

ஒரு காலப்பதிவாக இந்நாவலுக்கு மதிப்பே இல்லை– ஏனென்றால் இது அதிகாரவர்க்கம் சமைத்த வரலாற்றின் மொழிவடிவம். கலையம்சம் என்றால் ஒரு இடத்தில்கூட வாழ்க்கையின்மேல் கலைஞனுக்குரிய தனித்தன்மை கொண்ட பார்வை விழவில்லை. தன் சொந்த வாழ்க்கையைச் சொல்லும்போதுகூட அதிகாரபூர்வ போல்ஷெவிக் கதையாடலையே ஆசிரியர் சொல்கிறார்.

வேறென்ன எஞ்சுகிறது?  ஒரு புனைவாக மட்டும் எடுத்துக்கொண்டால் இது ஒரு விசித்திரமான வாழ்க்கைச்சூழலை காட்டுகிறது. பதின்பருவத்தில் ‘வயதடைதல்’ நிகழ்வது அனைவருக்கும் உரிய பரிணாமம். உண்மையில் சமூகத்தின் கட்டமைப்பு, விதிகள், அதன் இயக்கமுறை, அதன் இருள், ஒளி ஆகியவற்றை ஓர் இளைஞன் முதன்முதலாக அறியும் திருப்புமுனைத்தருணம் அது. அறிதலின் கொந்தளிப்பு அடங்கும்போது அவன் முதிர்ந்தவனாகிவிடுகிறான்.

அந்த அறியும் தருணத்தில் அச்சமூகமே ஒட்டுமொத்தமாக இடிந்துசரிந்து உருமாறிக்கொண்டிருந்தால் என்ன ஆகும்? அவன் அறிவது எதை? அவன் எங்கே நிலைகொள்வான்? அந்த வினாவை இந்நாவல் முழுக்க எழுப்பிக்கொள்ள முடிகிறது. பாவல் அறியும் புறவுலகில் ஒன்று இடிந்துகொண்டிருக்கிறது, இன்னொன்று உருவாக துடிக்கிறது. இயல்பாகவே உருவாகிவருவதன்மேல்தான் இளைஞனின் ஆர்வம் திரும்பும், அதன் மெய்யான மதிப்பை அவனால் உணரவே முடியாது. வீழ்பவை அவை வீழ்ந்துகொண்டிருப்பவை என்பதனாலேயே அவனால் துறக்கவும்படும்.

சாகசம் இளைஞர்களின் இயல்பு. அவர்களுக்குள் இருந்து உந்தும் உயிர்விசையின் வெளிப்பாடு அது.கருத்துக்கள் அல்ல, சாகசத்துக்கான வாய்ப்புகளே அவர்களை நிலைபாடுகொள்ளச் செய்கின்றன. போல்ஷெவிக் புரட்சி முதல் நக்சலைட் புரட்சி, ஈழப்போராட்டம் வரை திரும்பத்திரும்ப நிகழ்கிறது இது. உலகம் முழுக்க அரசியல் எழுச்சிகளில் முதிரா இளைஞர்களின் வெற்றுச்சாகசமோகம் என்ன பங்கை வகிக்கிறது என்று இந்நாவலை வாசிக்கையில் நினைத்துக்கொண்டேன்.

உண்மை, அந்த முதிரா இளைஞனின் உணர்வுகளில் கற்பனாவாதத்தன்மை உள்ளது. அதில் பாவனைகளோ தன்னலமோ இல்லை. ஆனால் அது கொண்டாடத்தக்கதுதானா? உலகை அந்த கட்டற்ற விசைவெளிப்பாடு ஆட்டுவிக்குமென்றால் அது உகந்ததுதானா? இந்நாவல் முழுக்க பாவெல் ஒரு தக்கைபோல சாகச உணர்ச்சியால் அடித்துக்கொண்டு செல்லப்படுகிறான். அது முடியும்போது அவன் வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது

இந்நாவலில் ஆசிரியரால் நையாண்டியுடன் சொல்லப்படும் ஒரு சித்திரம் உள்ளது. ’புரட்சிகரப்’பார்வையில் அப்படி அது தோன்றவும்கூடும். ஆனால் இன்றைய உலகில், புரட்சிகரம் என்பது ஒருவகை அபத்தமான வன்முறை என்று தோன்றுவதாக வரலாறு உருமாறியிருக்கையில், அமைதியான ஆக்கபூர்வமான வாழ்க்கை வாழும் எளியவர்களின் அவலம் என்றே அதை பார்க்கமுடிகிறது

நகரத்தை ஒரு படை கைப்பற்றுகிறது. உடனே ஊரிலிருப்பவர்கள் அந்தப் படை என்ன, அதன் சின்னம் என்ன என்று ஆராய்ந்து அவசரமாக அதை தங்கள் வீடுகளுக்கு முன் மாட்டிக்கொள்கிறார்கள். ஏதேனும் வகையில் முந்தைய அதிகாரத்துடன் ஒத்துழைத்தவர்கள் கடுமையாக பழிவாங்கப்படுகிறார்கள். புதிய ராணுவத்துடன் ஒத்துழைக்காதவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.

போர் திசைமாறுகிறது. இந்த ராணுவம் நகரை கைவிட்டு செல்கிறது. அதன் ஆதரவாளர்கள் எதிரிகளிடம் மாட்டிக்கொள்ளவேண்டியதுதான். மக்கள் அவசரமாக வென்று உள்ளே நுழையும் ராணுவத்தின் அடையாளங்களை வீடுகளில் மாட்டிக்கொள்கிறார்கள். ஆனாலும் முந்தைய ராணுவத்துடன் ஒத்துழைத்தவர்கள் பிடிபட்டு தண்டிக்கப்படுகிறார்கள். தங்களுக்கு வேறுவழியில்லை என அவர்கள் முறையிட்டாலும் பயனில்லை.

ராணுவங்கள் நகரை பிடிக்கின்றன, மக்களை கொள்ளையிடுகின்றன, கைவிட்டுவிட்டுச் செல்கின்றன, அடுத்த ராணுவம் வருகிறது. முந்தைய ராணுவத்தால் கொள்ளையிடப்பட்டு ஒன்றுமே இல்லாமல் மக்கள் இருந்தால் அவர்களை அதற்காக தண்டிக்கிறது. ஆகவே எத்தனை அடிவாங்கினாலும் மக்கள் வரும் ராணுவத்துக்காக கொஞ்சம் பதுக்கி வைத்தேயாகவேண்டும். இதில் செம்படையும் எதிர்ப்படையும் எல்லாம் ஒன்றுதான்.

போல்ஷெவிக் பார்வையில் ஒரு ‘மாபெரும் நன்மைக்காக’ மக்கள் படவேண்டிய சிறுதுயரம் என இதை சொல்லிவிடலாம்தான். ஆனால் அந்த மாபெரும் நன்மை என்பது வரலாறுகண்ட கொடிய சர்வாதிகாரியின் அடக்குமுறை ஆட்சி. உக்ரேன் மக்களுக்கு ஸ்டாலினிஸ்ட் ருஷ்யா  ஆதிக்கம் செலுத்தும் அன்னிய சக்தியும்கூட. அவர்களால் சுரண்டப்பட்டு கோதுமைக்களஞ்சியமான உக்ரேனில் மாபெரும் பஞ்சம் வந்து லட்சக்கணக்கானோர் மாண்டனர்.

இன்று வரலாறு சோவியத் ருஷ்யாவின் எழுபதாண்டு கம்யூனிசமே ஒரு மாபெரும் அவப்பிழை என காட்டுகிறது. உக்ரேனியர்களுக்கு அது ஒரு கெட்ட கனவு. அப்படியென்றால் மாறிமாறி சூறையாடப்பட்ட அந்த போர்க்காலத்தின் பொருள் என்ன? எந்தப்போருக்குப்பின்னும் எதுவும் நல்லது நிகழ்வதில்லை. போரை நிகழ்த்திய ஆதிக்கசக்திகளில் ஒன்று வலுப்பெற்று அதிகாரம் அடையலாம், அவ்வளவுதான். மக்களைப்பொறுத்தவரை போரின் அழிவுகள் அழிவுகள் மட்டுமே.

இந்நாவலை இன்று நாமறியும் வரலாற்றுடன் இணைத்து வாசிக்கையில் வரலாற்றுப்பெருக்கின் பொருளின்மை அளிக்கும் பெருஞ்சலிப்பே எஞ்சுகிறது. ”மாஸ்கோவின் மைய வீதிகளில் ஒன்றாகிய கோர்க்கிய் வீதியில் 14 ஆம் எண் கொண்ட வீட்டில் நிகலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் மியூசியம் அமைந்திருக்கிறது. அது இவ்வெழுத்தாளரின் இல்லமாக இருந்தது” என தொடங்கும் குறிப்பு ஒன்று இந்நூலின் தமிழ் வடிவில் உள்ளது.

“…இங்குள்ள நூல்கள் பல குண்டுகளால் துளைக்கப்பட்டவை. இரத்தத்தில் ஊறியவை. இவை ஃபாசிசத்துக்கு எதிராக போரிட்டவர்களின் கைகளில் கொண்டவை.. இங்குள்ள புத்தகங்கள் ஆயிரம் ஆடிரம் கைகள் மாறியவை, உருக்குலையும்வரை படிக்கப்பட்டவை.”இது 1950களில் சோவியத் வெளியீடாக இந்நாவல் வந்தபோது எழுதப்பட்டதாக இருக்கலாம்

ஆனால் நிகலாய் ஒஸ்திராவ்ஸ்கி இன்று அவருடைய சொந்த நாடான உக்ரேனில் தேசத்துரோகியாக கருதப்படுகிறார். உக்ரேனை ருஷ்யர்களுக்கு காட்டிக்கொடுத்தவர். உக்ரேனின் கம்யூனிச நீக்கச் சட்டப்படி அவருடைய பெயரை எந்த அமைப்புக்கும் ,இடத்திற்கும் போடுவது குற்றம். ஆகவே உக்ரேனில் பழைய சோவியத் காலகட்டத்தில் நிகலாய் ஒஸ்ரோவ்ஸ்கியின் பெயர் போடப்பட்ட அத்தனை இடங்களும் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவரைப்பற்றிய தடமே அங்கில்லை

சைமொன் பெட்லியூரா

இன்னொரு பக்கம் உண்டு. இந்நாவலில் எதிர்ப்புரட்சிக்காரராக, உக்ரேனிய தேசிய ராணுவத்தலைவராக வருபவர் சைமன் பெட்லியூரா. அவரை ஒன்றும்தெரியாத அசடனாக, குரூரமானவனாக, ஒருவகை ராணுவப் பொம்மையாக இந்நாவல் காட்டுகிறது. அவருடைய படைகள் அவரை எவ்வகையிலும் மதிக்கவுமில்லை என்கிறது. அவலட்சணமானவர் என்றும் காட்டுகிறது

ஆனால் உண்மையான சைமன் பெட்லியூரா  உக்ரேனின் தேசியப்பெருந்தலைவர். கம்பீரமானவர். இதழாளர், எழுத்தாளர், மாபெரும் அறிஞர். உக்ரேனியப் பண்பாடு, வரலாறு, இலக்கியம் பற்றி அவர் எழுதி இன்று தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளே இருபதாயிரத்திற்கும் மேல். உக்ரேனியப் பண்பாட்டின் கலைக்களஞ்சிய தொகுதிகள் போல அவை மதிக்கப்படுகின்றன. ருஷ்யபுரட்சிக்கு இருபதாண்டுகளுக்கு முன்னராகவே பெட்லியூரா உக்ரேனிய பண்பாட்டு அடையாளத்தை நிறுவும் 15000 கட்டுரைகளுக்குமேல் எழுதியிருக்கிறார்.

உக்ரேனின் தனி அரசியலுரிமைக்காக போராடியவர் பெட்லியூரா. ஜாரின் ஆதிக்கத்துக்கு எதிராக போரிட்டவர் செம்படையினருக்கு எதிராகவும் போரிட்டார். போலந்துடன் அதற்காக படையொப்பம் செய்துகொண்டார். உக்ரேன் நிலமானது  பண்பாடு சார்ந்தும் அரசியல் சார்ந்தும் ஒரு தனித்தேசியம் என நிலைபாடு கொண்டிருந்தார். அது என்றும் தனித்தன்மையுடன், தனிநாடாகவே நிலைகொள்ள வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

செம்படைகளுடனான போரில் பெட்லியூரா தோற்கடிக்கப்பட்டார். போலந்திலிருந்து பாரீஸ் வந்து அங்கே தங்கியிருந்தார். அங்கிருந்துகொண்டு உக்ரேனின் பண்பாட்டு அடையாளத்தை தக்கவைப்பதற்கான பெருமுயற்சிகளில் ஈடுபட்டார். உக்ரேனிய மொழிக்கான அகராதிகளை உருவாக்கினார். உக்ரேனிய நாட்டாரியல் பாடல்களையும் கதைகளையும் தொகுத்தார்.

இன்று உக்ரேன் ஒரு நவீன பண்பாட்டுத்தேசியமாக முன்வைக்கும் அடையாளம் முழுக்க பெட்லியூரா தனியொருவராக எழுதி உருவாக்கியது.இன்று வாசிக்கும்போது அந்த மாபெரும் அறிவுப்பணி பிரமிப்படையச் செய்கிறது.

1926ல் பெட்லியூரா பாரிஸில் ஷாலோம் ஷ்வாட்ஸ்ஃபார்ட் என்னும் யூதனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய கொலை பற்றிய விசாரணையில் பெட்லியூரா உக்ரேனில் யூதர்களின்மேல் பொக்ரம் என்னும் ராணுவக்கொள்ளைகளுக்கு ஆணையிட்டதனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவனாகிய ஷாலோம் அவரை பழிவாங்கியதாக வாதிடப்பட்டது. ஜூரிகளால் ஷாலோம் விடுதலை செய்யப்பட்டான்

ஆனால் பின்னர் ருஷ்ய உளவுப்படையிலிருந்து விலகிய பீட்டர் டெரியாபின் என்பவரால் ஷாலோம் உண்மையில் ருஷ்ய உளவுப்படையான NKVDயால் தெரிவுசெய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு பெட்லியூராவை கொல்லும்பொருட்டு அனுப்பப்பட்டவன் என்பது வெளிப்படுத்தப்பட்டது. கன்னியாஸ்த்ரீகளாக இருந்த பெட்ல்யூராவின் சகோதரிகள் ஸ்டாலினால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இன்று பெட்லியூரா உக்ரேனின் தேசியத்தலைவராக மீண்டெழுந்துவிட்டிருக்கிறார். உக்ரேனின் நகர்கள் அனைத்திலும் அவருக்கு நினைவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவருடைய எழுத்துக்கள் அச்சாகி படிக்கப்படுகின்றன. வரலாறு தலைகீழாகத் திரும்பியிருக்கிறது. இன்றைய பார்வையில் நிகலாய் ஒஸ்த்ரோஸ்வ்கி உளவுத்துறையின் கைப்பாவையாக எழுதிய ஒரு பயில்முறை எழுத்தாளர். உலகம் முழுக்க பொய்யாகக் கொண்டு செல்லப்பட்ட ஒரு வெறும் ‘பிராண்ட்’. பெட்லியூரா வரலாற்று நாயகன்.

இந்நாவலில் ஒஸ்திரோவ்ஸ்கி பெட்லியூராவை கிட்டத்தட்ட மனம்பிறந்த ராணுவக்கோமாளியாக சித்தரிக்கிறார். பெட்லியூராவின் படை பொக்ரம்களில் ஈடுபட்டதற்குச் சான்றுகள் இல்லை. பெட்லியூரா அதற்கு ஆணையிட்டார் என்பதற்கும் சான்றுகள் இல்லை. ஆனால் சோவியத் முகாம் அந்த சித்திரத்தை தெளிவாகவே கட்டமைத்தது.இந்நாவல் பெட்லியூரா கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப்பின் எழுதப்பட்டது. இதில் பெட்லியூரா பற்றிய சோவியத் ருஷ்யாவின் உளவுப்படையின் சித்திரத்தையே ஒஸ்திரோவ்ஸ்கி அளிக்கிறார். நாவலில் பெட்லியூரா பற்றிய ஒரே தெளிவான சித்திரம் என இருப்பது அவர் பொக்ரம்களுக்கு அனுமதி அளித்தார் என்பதும் அதைப்பற்றி ஒரு யூதர் முறையிட்டதும் அந்த யூதர்களையே தண்டிக்க ஆணையிட்டார் என்பதும் மட்டும்தான்.

உக்ரேனிய அதிபர் பெட்ல்யூராவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துகிறார் 2005

இலக்கியம் அதிகாரத்தின் கையில் ஆயுதமாக பயன்பட்டதன் மிகச்சிறந்த சான்றாவணம் இந்த நாவல். உளவுத்துறை அளித்த அப்பட்டமான பொய்கள் ஆசிரியரால் எழுதவைக்கப்பட்டு உலகமெங்கும் கொண்டு செல்லப்பட்டன. பெட்லியூரா எவரென்று உலகில் எவருக்கும் தெரியாது, அவர் அயோக்கியக்கோமாளி என்று இந்நூல் உலகம் முழுக்க சென்று இருநூறு மொழிகளில் கூவியிருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஒரு பேரரறிஞரால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இத்தனை பிரச்சாரம், இத்தனை ஒருங்கிணைக்கப்பட்ட உலகுதழுவிய அமைப்பு வல்லமை, இன்றும் தொடரும் கண்மூடித்தனமான விசுவாசிகளின் அணி ஆகியவற்றைக் கடந்து உண்மை நிலைகொண்டுவிட்டிருக்கிறது. உக்ரேன் சென்றால் பெட்லியூராவின் நினைவகத்திற்குச் சென்று ஒரு மலர் வைக்கவேண்டும்– இந்நாவலை வாசித்த இருபது அகவைகளில் இது சொல்லும் சித்திரத்தை நான் நம்பியமைக்காக மன்னிப்பு கோரவேண்டும்.

”கடவுள் எல்லாவற்றையும் காண்கிறார், ஆனால் மிகத்தாமதமாக’ என்று ஒரு சொல்லாட்சி உண்டு. வரலாறும் எல்லாவற்றையும் சரிசெய்கிறது, எல்லா உண்மைகளையும் வெளிக்கொண்டுவந்து நிலைநாட்டுகிறது. ஆனால் மிகமிக தாமதமாக.

சைமன் பெட்லியூரா

முந்தைய கட்டுரைஎண்ணும்பொழுது- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநச்சுமுள் மேல் நடக்கும் வேழம்.