எழுத்தின் இருள்

அன்புள்ள் ஜெ

சமீபத்தில் ஓர் உரையிலும் ’நான் எழுத்தாளன், தத்துவஞானியோ மெய்ஞானியோ அல்ல’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்லும் தொனியில் எழுத்தாளனை ஒரு படி கீழாக வைக்கும் பார்வை உள்ளது. எழுத்தாளன் தத்துவஞானியை விட ஆன்மிகஞானியை விட கீழானவனா? எழுத்தாளன் தத்துவஞானியாகவோ மெய்ஞானியாகவோ ஆகமுடியாதா? இந்த வேறுபாட்டை நீங்கள் ஏன் சுட்டிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது என்றும் புரியவில்லை.

ஆர்.ரகுராமன்

***

அன்புள்ள ரகு,

இந்த வேறுபாடு நடைமுறையில் அழிந்துகொண்டே இருப்பதனால்தான் அதைச் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. எனக்கே அதை நித்யா கூர்மையாகச் சுட்டிக்காட்டும் வரை அதைப்பற்றிய தெளிவு இருக்கவில்லை.

’எழுத்தாளன் தீமையின் தரப்பிலிருந்து முற்றிலும் விலகமுடியாதவன்’என்ற ஒற்றைவரி உங்கள் கேள்விக்கு பதில். தத்துவஞானி தர்க்கத்தாலும் மெய்ஞானி உள்ளுணர்வாலும் தீமையின் தரப்பிலிருந்து முற்றிலும் விலக வாய்ப்புள்ளவர்கள். முழுமையான நேர்நிலையை அடைந்து கனிந்து நிறைவுகொள்ளும் பாதை அவர்களுடையது. இந்த வேறுபாடு மிகமிக முக்கியமானது.

இதை ஒரு சிறு உரையாடல்குழுவுக்குள் மட்டுமே நுட்பமாகப் பேசமுடியும். பொதுவெளியில் இதை பிழையாகப் புரிந்துகொள்வோர், அரைகுறையாகப் புரிந்துகொள்வோரே மிகுதி. அவர்களுடன் விவாதிக்கப்புகுந்தால் சொற்குப்பையே எஞ்சும். ஆகவே முதல்தள விளக்கத்தை மட்டுமே சொல்லலாம் என நினைக்கிறேன்.

எழுத்தாளன் இருளை தவிர்க்கமுடியாது. அவன் எத்தனை விழைவுடன் ஒளியை நாடினாலும் இருளின் தரப்பிலிருந்தே அதைப் பார்க்கமுடிகிறது. மகாபாரதத்திலேயே குறிப்பாகச் சொல்லப்பட்டதுதான் – வெண்முரசில் வியாசனைப் பற்றிய பகுதிகளில் விரிவாக பேசப்பட்டுள்ளது. காமகுரோதமோகங்களின் நடனமே கலையின் அடித்தளம். எழுத்தாளன் அங்கே நிலைகொள்பவன். வியாசனால் சுகன் ஆக முடியாது.

ஆனால் இதை சென்றநூற்றாண்டின் இலக்கியவிமர்சகர் சிலர்- குறிப்பாக பிரெஞ்சு விமர்சகர்கள்- மிக எளிமைப்படுத்தி முன்வைத்தனர். சொல்லப்போனால் கொச்சைப்படுத்தி முன்வைத்தனர். அவர்களில் முதன்மையானவர் சார்த்ர். எதை எடுத்துக்கொண்டாலும் அதன் எளிமையான, கொச்சையான வடிவம் விரைவில் பரவும். ஏனென்றால் அது எளியது, அதிர்ச்சியளிக்கும்படி வித்தியாசமாகவும் உள்ளது. ஆகவே எளிய உள்ளங்களால் உடனே ஏற்கப்படும்

நவீனத்துவ காலகட்டத்தில் கலை என்பதே தீமையின் வெளிப்பாடுதான் என்றும், தீயவனே கலைஞனாக இருக்கமுடியும் என்றும் சொல்லும் எல்லை வரை சென்றனர். தீமை என்பதை நோய் என்று உருமாற்றியும் கொண்டனர். எண்பதுகளில் இச்சிந்தனைகள் மலையாளத்தில் புகழ்பெற்றிருந்தன. வி.ராஜகிருஷ்ணன் எழுதிய ‘ரோகத்தின் பூக்கள்’ அன்று பெரிய கவற்சியை அளித்த கோட்பாட்டு நூல். அந்நூலால் மட்டுமே நோயாளிகளாக ஆன சிலரை எனக்கு தெரியும்.

கலைஞர்கள் தங்களை குடிகாரர்கள், பொறுக்கிகள், கெட்டவர்கள் என ‘முன்வைக்க ஆரம்பித்தது எழுபதுகளில் ஐரோப்பாவில் தொடங்கி உலகம் முழுக்க பரவியது. பல அப்பாவிகள் அந்த வேடத்தை மெய்யாகவே போட்டு போதையடிமைகளும் நோயாளிகளும் ஆனார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுத்தாளன் என்றால் புரட்சியாளன் என்ற வரையறை இருந்தது, அதை நம்பி அழிந்தவர்கள் பலர். அதன்பின் இந்த அன்னியன், கலகக்காரன், பொறுக்கி வேடம்.

இது ஒரு சிக்கலான நுட்பமான இடம். இங்கே ஒற்றைவரி மட்டையடிகள் மிக ஆபத்தானவை.இலக்கியத்தில் எல்லா விதிகளுக்கும் வலிமையான விதிவிலக்குகள் உண்டு. எல்லாமே நிகழ்ந்தபின் செய்யப்படும் அவதானிப்புகளே ஒழிய வழிகாட்டுநெறிகள் அல்ல. இலக்கியத்தில் எல்லாமே இயல்பானவைதான். இதையெல்லாம் கருத்திக்கொண்டு நான் செய்யும் இந்த அவதானிப்புகள் என் அகவய அறிந்தல்கள் மட்டுமெ.

வாழ்வியக்கத்தின் உண்மைகளை, இருத்தலின் சாரத்தை, பிரபஞ்சமெய்மையை மனிதமனம் எதிர்கொள்ளும்போது இருவகையான தன்னிலைகளை உணர்கிறது. அதை நேர்நிலை- எதிர்நிலை என அடையாளப்படுத்திக்கொள்ளலாம். நேர்நிலை என்பது ஒத்திசைவு, உச்சம்நோக்கிய விசை ஆகியவற்றைக் கொண்டது. நன்னம்பிக்கை, ஊக்கம், முழுதளிப்பு ஆகியவற்றை இயல்பாக கொண்டது

எதிர்நிலை என்பது பிரிந்து சிதறி பரவும் தன்மை கொண்டது. முரண்பாடுகளை அதிகம் உணர்வது. கொந்தளிப்பு போராட்டம் ஆகியவற்றை அடைவது. அழிவு -ஆக்கம் என முடிவிலாது ஓடும் முரணியக்கத்தை நாடுவது. அதன் உணர்வுநிலைகளும் அவ்வாறே எழுச்சியும் வீழ்ச்சியும் என மாறி மாறி அமைபவை.

மனிதர் அனைவரிலும் நேர்நிலையும் எதிர்நிலையும் உண்டு. ஆனால் தத்துவஞானிகள்,மெய்ஞானிகள் என்போர் நேர்நிலை ஓங்கியவர்கள். நேர்நிலையின் தரப்பிலிருந்தே அனைத்தையும் பார்ப்பவர்கள். மெல்லமெல்ல முழுமையான நேர்நிலை நோக்கிச் செல்பவர்கள்.

எழுத்தாளர்கள் நேர்நிலையை அறியும் திறன்கொண்டவர்கள், அதை தன் ஆக்கங்களில் மிகுந்த ஒளியுடன் முன்வைக்கக்கூடியவர்கள். வாசகர்கள் பல்லாயிரம்பேரை அவர்கள் நேர்நிலை நோக்கிச் செலுத்தக்கூடும்.  அந்தவாசகர்களில் பின்னர் தத்துவஞானியரும் மெய்ஞானியருமாக ஆகக்கூடியவர்களும் இருக்கலாம். ஆனால் எழுத்தாளர்கள் இறுதிவரை எதிர்நிலையிலேயே வேரூன்றியிருப்பார்கள். அதுவே அவர்களின் எல்லை.

எனவே எழுத்தாளர்கள் மானுட உள்ளத்தின் இருளை, இயற்கையில் உள்ளுறைந்திருக்கும் அறியமுடியாமையின் இருளை , பிரபஞ்சப்பேரிருளை  பார்த்துக்கொண்டேதான் இருப்பார்கள். ’தமோமுகர்’ என ஓர் உரையாடலில் நித்யா சொன்னார்.

காமகுரோதமோகத்தின் ஒரு நுண்துளி எங்கேனும் இருந்தால்கூட எழுத்தாளனின் உள்ளம் அதை தொட்டு எடுத்துக் காட்டிவிடுகிறது. அப்படியென்றால் அவன் எத்தனைபெரிய காமகுரோதமோகம் கொண்டவன். அவனுக்குள் இருக்கும் அந்த மாபெரும் கருவி எவ்வளவு குரூரமானது. அதை கையில் வைத்துக்கொண்டு அவன் எப்படி நேர்நிலையை அடையமுடியும்?

சமூகம் வரையறுக்கும் நோக்கில் எழுத்தாளன் சமநிலைகொண்ட, நிதானமான, உணர்வுகள்மேல் ஆட்சிகொண்ட, நல்லவனாக இருக்கமுடியாது. அவனுடைய உணர்வுகள்மேல் அவனுக்கு கட்டுப்பாடு இருக்காது. அவனுடைய எண்ணம் எப்போதுமே காமகுரோதமோகங்களை தொட்டு அறியவே முயலும். தனக்குத்தானேகூட அவன் காமகுரோதமோகங்களை ஒவ்வொரு அகழ்விலும் கண்டறிந்தபடியேதான் இருப்பான்.

கொஞ்சம் நாடகீயமாகச் சொல்வதாக இருந்தால்,  ‘எழுத்தாளன் என்பவன் குற்றங்களைச் செய்யத்தேவையில்லாத குற்றவாளி’எனலாம். அவன் செய்யவில்லை என்பதனால் அவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவன் அல்ல.

எழுத்தாளனின் இந்த உளநிலை சாமானியர்களுக்குப் புரிவதில்லை. அவர்கள் எழுத்தாளன் ‘நல்லவனாக’ இருக்கவேண்டும் என்றும் சமூகம் முன்வைக்கும் ஒழுக்கம், அரசியல்சரிநிலைகளை கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் எழுத்தாளனை அணுகி அறிபவர்கள்கூட அவன் உருவாக்கும் புனைவுலகின் உச்சங்களைக் கொண்டு அவனை நேர்நிலையானவன் என்று எண்ணி மயங்கக்கூடும். அதுகூடாது.

இதுதான் வேறுபாடு. ஆனால் இதை உடனே ’எழுத்தாளன் கெட்டவனாக இருக்கவேண்டும்’என சார்த்ர் போல வகுத்துக்கொள்ளலாகாது. எழுத்தாளனின் அக ஆழம் உணரும் தன்னிலையின் ஓர் இயல்பு மட்டும்தான் இது. நல்ல எழுத்தாளன் அதை தன் அகத்தின் ஆழத்தில் மட்டுமே நிறுத்திக்கொள்வான். தன் புனைவின் உலகில், தன் கதைமாந்தரின் உள்ளத்தின் ஆழத்தில் மட்டுமே அவ்விருளை வெளிப்படுத்தவும் அறிந்திருப்பான்

நேரடியாக தீயவர்களாக தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும், நேரடியாக தீமையை எழுதும் சிலபடைப்பாளிகள் ஐரோப்பாவில் கொண்டாடப்படுவதுண்டு. அவ்வாறு கொண்டாடப்படுவதே ஒரு பிரெஞ்சு மனநிலை என நினைக்கிறேன்- அதற்கு அமெரிக்காவிலும் ஆதரவு வட்டம் உண்டு. எழுபதுகளில் ஓங்கியிருந்த அந்த அலை எண்பதுகளுக்குப்பின் சற்று ஓய்ந்துவிட்டது.

இன்று முதிராவாசகர்களுக்கு உரிய மனநிலை அது. வாழ்க்கையை அறியாத நடுத்தரவர்க்கத்து ’பாதுகாக்கப்பட்ட மக்கள்’ அவ்வகை மனநிலையை கிளர்ச்சியுடன் தழுவிக்கொள்கிறார்கள். அதைப்பேசிப்பேசி பரவசமடைகிறார்கள்.ழெனேயை புனிதர் என்று சொன்ன  ‘ஜெண்டில்மேன்’சார்த்ரின் மனநிலையை என்னால் புன்னகையுடன் புரிந்துகொள்ளமுடிகிறது

ழெனே, அல்லது சேட் அல்லது பத்தாய் அல்லது புக்கோவ்ஸ்கி முன்வைக்கும் தீமைகளின் உலகம் நேரடியானது. ஆகவே அப்பாவித்தனமானது. சொல்லப்போனால் அந்த தீமைப்பரப்பை சராசரி மானுடன்கூட எளிதாகக் கையாளமுடியும். ஏனென்றால் தன் அகத்தை நோக்கித்திரும்பும் ஒருவன் முதன்முதலாகக் கண்டடைவது அதைத்தான். அதை கையாள்வதன் வழியாகவே அவன் தன் அடிப்படைச் சமநிலையை அடைந்திருக்கிறான்.

இப்படிச் சொல்கிறேனே, வாழ்நாளில் தொடர்ச்சியாக ஒருமாதம் தியானம் செய்த ஒருவனுக்கு இவர்கள் எதையும் புதிதாகக் காட்டுவதில்லை. கண்மூடி அமர்ந்து அகத்தை நோக்கினால் நாம் நமக்குள் காண்பது ழெனேக்களை புக்கோவ்ஸ்கிகளை வெட்கிநாணச்செய்யும்ம் காமகுரோதமோகங்களைத்தானே? அப்படி இல்லை, கண்மூடினாலும் கள்ளமற்ற வெள்ளையுள்ளத்தையே காண்கிறேன் என்பவர்கள் புனிதர்கள்.

ஆனால் பெரும்பாலும் எளியோர் தங்கள் சொந்த காமகுரோதமோகங்களை நேருக்குநேர் பார்த்திருப்பதில்லை. அதை ‘அன்றாடப்பண்பாடு’ என்னும் ஒரு பெரும்படலத்தால் மூடியே வைத்திருப்பார்கள். அதுவே உலகத்தில் புழங்குவதற்கு உகந்த தளம். ழெனேயோ புகோவ்ஸ்கியோ அந்த படலத்தை விலக்கி காட்டும்போது திகைப்பும் கிளர்ச்சியும் அடைபவர்கள் அவர்களே.

நான் நீண்ட தியான அனுபவங்களுக்குப்பின் – அத்தகைய தியான அனுபவங்கள் அளித்த என் ஆழம் பற்றிய அறிதல்களால் தற்கொலைமுனை வரை சென்று மீண்டபின்- இவர்களைப் படித்தபோது இவை ஒருவகை முதிரா எழுத்து என்ற எண்ணமும் சலிப்பும்தான் உருவானது. ஆனால் அதற்கப்பாலும் திகைப்பளித்த தீமையின் உருவங்கள் பேரிலக்கியங்களிலேயே இருந்தன. அவை எந்த பேரருளாலும் செரித்துக்கொள்ள முடியாத இரும்புக்குண்டுகள் என நின்றிருந்தன

தீயவனாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் எழுத்தாளன் சிறியவகை படைப்பாளி மட்டுமே. அதில் அனுதாபத்திற்குரிய ஒரு துடுக்குத்தனம் மட்டுமே உள்ளது. தல்ஸ்தோயோ, தஸ்தயேவ்ஸ்கியோ, தாமஸ் மன்னோ, ஐசக் பாஷவிஸ் சிங்கரோ தாராசங்கர் பானர்ஜியோ, பஷீரோ, சிவராம காரந்தோ அவர்களுக்கு பல படி மேலே நின்றிருப்பவர்கள். இவர்களைவிட பலமடங்கு வீச்சுடன் தீமையை தங்களுக்குள்ளும் கண்டறிந்தவர்கள் அவர்கள். அதை எழுத்தில் வெளிப்படுத்தியவர்கள். ஆனால் அந்த நஞ்சை கழுத்தில் நிறுத்திக்கொள்ளவும் கற்றிருப்பார்கள்

இரண்டுவகை தன்னிலைகளை உருவாக்கிக்கொள்வதன் வழியாக அவர்கள் அதை அடைகிறார்கள். ஒன்று, வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் விரிவுகொள்கிறார்கள். அதன் ஒரு துளியென தன்னை நிறுத்திக்கொள்கிறார்கள்.. இரண்டு, தன்னை வெறும் சாட்சியாக வரையறைசெய்துகொள்கிறார்கள். அனைத்திலிருந்தும் இணையான விலக்கத்தை அடைகிறார்கள்.

அந்த விலக்கம் காரணமாக பெரும்படைப்பாளி தனக்கென ஒரு சமநிலை கொண்டிருப்பான். அவனுடைய ஆளுமை நிலைகொண்டிருக்கும். அவனுக்கு கயவன், கலகக்காரன், புரட்சிக்காரன் என்றெல்லாம் வேடங்கள் பூணவேண்டிய தேவையில்லை. அவ்வேடங்கள் அனைத்திலும் அவனுக்கு ஒவ்வாமையும் சலிப்புமே இருக்கும். அடையாளமற்ற ஒரு சாட்சியாகவே அவன் தன்னை நினைத்துக்கொள்வான்.

அவனுடைய நிலையழிவுகள், கொந்தளிப்புகள் அனைத்தும் புனைவுலகில் மட்டுமே வெளிப்படும். நேரடியாக அல்ல, பிறரில், பிறிதென. அதை அவ்வண்ணம் தன்னிலிருந்து அகற்றுவதெப்படி என்று அறிந்தவனே கலைஞன். அவ்வண்ணம் தன்னிலிருந்து அகற்றுவதன் பெயர்தான் கலை

ஒரு படைப்பாளியின் அகத்தை ஒரு படைப்பில் நேரடியாக உணரமுடிந்தால் அவன் எளிமையான படைப்பாளி என்று முடிவுசெய்யலாம். அதை தனக்கு வெளியே கொண்டுசெல்லும் ஆற்றலே பெரும்படைப்பாளிகளின் இயல்பு. அதை வரலாற்றில் மானுடப்பெருக்கில் அவன் விரித்துக் காட்டிவிடுகிறான். ஆகவே புனைவில் அது முற்றிலும் பிறிதொன்றாக மாறி, வரலாற்றில் இருந்தும் பண்பாட்டிலிருந்தும் வெளிப்படலாம். வெவ்வேறு மானுடரில் இருந்து வெளிப்படலாம். அந்நிலையிலேயே அது கலையென்று ஆகியிருப்பதாகப் பொருள்.

பெரும்படைப்பாளியின்  புனைவுலகில் அவன் கண்ட தீமையின் தூலங்கள் , அதாவது அனைவரும் அறிந்த தளங்கள் அனைத்தும், முழுமையாக வடிகட்டப்பட்டு அதன் கூர்முனை மட்டுமே வெளிப்பாடு கொண்டிருக்கும். தூலங்கள் மேல் சலிப்பு என்பது கலைஞனின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. ஓர் உடலுறவை திகட்டத்திகட்ட வர்ணிப்பவன் கலைஞன் அல்ல. அதில் ஓரு நுண்ணிய தருணம் சொல்லப்படவேண்டும் என்றால் அதை மட்டும் கூர்மையாக சொல்பவனே கலைஞன்.

ஆகவே சீரிய கலைப்படைப்பு என்பது தீமையின் தூலங்களை கண்டு கொந்தளிக்கும் எளிய வாசகர்களுக்குரியது அல்ல. நுண்முனைகளை மட்டுமே தேடும் சிறந்த வாசகர்களுக்கு மட்டுமே உரியது. பரபரப்பாகப் பேசப்படும் எழுத்துக்களுக்கும் பேரிலக்கியங்களுக்குமான வேறுபாடென்பது இதுதான்.

இங்குதான் சிக்கல் வருகிறது. படைப்பாளி தன் காமகுரோதமோகங்களை தன்னில் இருந்து அகற்றுவதில் கலையினூடாக வெற்றிபெறுகிறான். அவன் அகத்தில் இருந்து வெளியேறி அவை புனைவு என்னும் மாபெரும் மேடையில் ஆடிநிறைவுறுகின்றன. அவற்றுக்கு அப்பால் அவன் விடுதலைகொண்டவனாக, வெறும் சாட்சியாக நின்றிருக்கிறான். அந்நிலையில் அவன் நேர்நிலைகொண்டவனாக தோற்றமளிக்கிறான். அவனுக்கும் தத்துவஞானிக்கும் மெய்ஞானிக்கும் வேறுபாடே தெரிவதில்லை.

ஒரு தத்துவஞானியை விட, மெய்ஞானியை விட வாழ்க்கையின் உண்மைகளை பிரபஞ்சமெய்மைகளை எழுத்தாளன் மேலும் அழகாகச் சொல்லவும் முடியும். ஏனென்றால் அவன் மொழிவல்லுநன். ஆகவே அவன் தத்துவஞானியைவிட தத்துவஞானியாக, மெய்ஞானியைவிட நன்றாக வெளிப்படும் மெய்ஞானியாக தோற்றமளிக்கமுடியும்.

ஆனால் அவன் வேறு, அவன் எந்நிலையிலும் எதிர்விசைகளைச் சார்ந்தவன். அதையே மீளமீள வலியுறுத்துகிறேன்.தத்துவஞானியாக மெய்ஞானியாக அவன் தோற்றமளிக்கலாகாது, பிறர் அவ்வண்ணம் எண்ண இடமும் அளிக்கலாகாது. அது பிழையானது, தனக்குரியதல்லாத ஒன்றை கோருவது.

ஆகவே திரும்பத்திரும்பச் சொல்கிறேன். என்னைப்பற்றி மட்டுமல்ல எழுத்தாளர்களாகிய பிறரைப்பற்றியும். எழுத்தாளனாக வாழ்க்கை பற்றி, தத்துவம் பற்றி, மெய்ஞானம் பற்றிகூட பேசலாம். ஆனால் எழுத்தாளனாக நின்று மட்டுமே பேசவேண்டும்.

தத்துவஞானியை விட, மெய்ஞானியை  விட இலக்கியவாதி ஒரு படி குறைவானவனா? ஆமாம், ஐயமே இல்லாமல். அப்படியெல்லாம் இல்லை என எழுத்தாளன் தருக்கிக்கொள்ளலாம், ஆனால் அவன் எதிர்நிலையில் இருத்தல்கொண்டவன் என்பதனால் எந்நிலையிலும் அப்படித்தான். அது வியாசனுக்கும் கம்பனுக்கும்கூட பொருந்துவதே.

தத்துவஞானியிலும் மெய்ஞானியிலும் அமையும் நேர்நிலை நிறைவு ஒரு பெருங்கொடை. அதை தன் புனைவின் உச்சியில் கலைஞன் நிகழ்த்திக்காட்டிவிடமுடியும். காட்டியதுமே அவன் கீழிறங்கி தன்னியல்புக்கு மீளவும் வேண்டியிருக்கும்.

ஆகவேதான் தாந்தேக்கு செய்ண்ட் தாமஸ் அக்வீனாஸ் தேவைப்பட்டார். பாரதிக்கு நிவேதிதையும் அரவிந்தரும் தேவைப்பட்டனர். கலைஞன் சென்றமர ஞானியின் காலடி என்றும் தேவைப்படுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைகதைகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆடிப் பாவைகளும் நிழல்களும்