வெண்முரசின் நிலமும் மக்களும்

ஓவியம்: ஷண்முகவேல்

அன்புள்ள ஜெ,

வெண்முரசின் மலர்கள், வெண்முரசின் போர்க்கலை என்று பல்வேறுவகையில் இன்று பார்வைகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தவகையான வாசிப்பு வெண்முரசுக்கு சிறப்புசெய்வதாகுமா? வெண்முரசை இப்படி வெறுமே தகவல்களுக்காக வாசிக்கமுடியுமா? தகவல்களுக்காக வாசிப்பதென்றால் வெறும் தகவல்கள் மட்டுமே நிறைந்த ஏராளமான நூல்கள் இருக்கின்றன அல்லவா?

வெண்முரசு அடிப்படையில் தத்துவார்த்தமான தேடல்களை கொண்டது. மனிதமனம் கண்டடையும் உச்சங்கள் அதில் நிகழ்கின்றன. ஞானமும் உயர்ந்த உணர்ச்சிகளும் மட்டுமல்ல கீழ்மையும் தீமையும்கூட அதில் உச்சமாக வெளிப்படுகின்றன. தமிழில் நவீன இலக்கியத்தில் இன்றைக்கு வேறொரு படைப்பில் அவற்றை நாம் வாசிக்க முடியாது. தமிழின் அழகும் வீச்சும் வெளிப்படும் இடங்கள் நிறைந்தது வெண்முரசு.

இவை அனைத்தையுமே பொருட்படுத்தாமல் வெறுமே செய்திகளை மட்டும் பொறுக்கிச்சேர்ப்பது சரியான வாசிப்பாக அமையுமா?

என்.ராமச்சந்திரன்

***

அன்புள்ள ராமச்சந்திரன்,

வெண்முரசு ஓர் இலக்கியப்படைப்பாக இலக்காக்குவதென்ன என்று வகுத்துக்கொண்டால் இந்தவகையான வினாக்களுக்கான பொதுப்புரிதலை அடையமுடியும்

வெண்முரசு முதன்மையாக ஆன்மிகமான ஒரு தேடலையே முன்வைக்கிறது. மானுடவாழ்க்கையின் ஒட்டுமொத்தம் குறித்து, சாராம்சம் குறித்து அது உசாவிச்செல்கின்றது. அதற்கான தரிசனத்தை கண்டடைகிறது. அந்தப்பயணம் ஒரு பக்கம் நூலாசிரியரின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் மெய்த்தேடலில் இருந்து அது எழுகிறது. மகாபாரதம் வழியாக வேதாந்தத்தை, இந்தியாவின் தொன்மப்பெருவெளியை உடன் இணைத்துக்கொள்கிறது. மகாபாரதத்தினூடாக இந்த யுகத்தின் வாழ்க்கையை, என்றுமுள்ள மெய்மையை கண்டடைவது அதன் செயல்பாடாக உள்ளது.

ஒரு வாசகன் வெண்முரசில் முதன்மையாக நாடவேண்டியதும் அதுவே. அவனறிந்த வாழ்க்கைநுட்பங்கள், உணர்வுநிலைகள், தரிசனங்கள் இப்புனைவின் களங்களில் எப்படி மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளன, எப்படி கூர்கொண்டு தரிசனமாகின்றன என்று. மகாபாரதம் அளிக்கும் கதைமாந்தர், கதைத்தருணங்கள், தொல்படிமங்கள் எப்படி அந்த தனிப்பட்ட அனுபவத்தை என்றுமுள்ள மானுட அனுபவமாகவும் ஆக்கிக்காட்டுகின்றன என்று. இங்கு தானறிந்த ஒரு யதார்த்தவாழ்க்கையில் அறியத்தக்கவற்றுக்கு மிகமிக அப்பால் சென்று ஒரு மெய்நிகர்த்த புனைவுவெளியில் வாழ்க்கையின் பேருருவை தொகுத்துக்காண வெண்முரசினூடாக அவனால் இயலவேண்டும்.

ஆனால் வெண்முரசின் நோக்கம் அது மட்டும் அல்ல. அந்த தரிசனவெளி அந்தரத்தில் கட்டிநிறுத்தப்படவுமில்லை– அப்படி கட்டி நிறுத்தப்படவும் இயலாது. வெறும்புராணமாக, நிலமோ காலமோ அற்றதாக, இதை எழுதியிருந்தாலும்கூட நுண்குறிப்பாக ஏதாவது நிலமும் காலமும் அதில் வந்து அமையும்.

உதாரணம் டோல்கினின் லார்ட் ஆஃப் த ரிங்ஸ். அது தூய புராணம் – ஆனால் தெளிவாகவே அதில் மையகாலகட்ட ஐரோப்பா உள்ளது. வெண்முரசு தெளிவாகவே காலம் நிலம் ஆகியவற்றை வரையறைசெய்து அதன்மேல் தான் அந்த புனைவுவெளியை நிறுவுகிறது

வெண்முரசின் நோக்கங்களில் ஒன்று பண்டைய பாரதநிலத்தை முழுமையாக புனைவில் உருவாக்கிக் காட்டுவது. அதன் நிலம், வாழ்க்கைமுறை அனைத்தையும். இந்தியவரலாற்றை அறிந்த அனைவரும் உணர்ந்த ஒன்று, மகாபாரதம் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் நிகழ்ந்தது. நாம் சற்றேனும் வகுத்துக்கொண்டிருக்கும் வரலாறு மௌரியர் காலம் முதல்தான் தொடங்குகிறது.

மகாபாரதக் காலகட்டம் சார்ந்த தொல்லியல் சான்றுகள் பெரும்பாலும் ஏதுமில்லை. இலக்கியச்சான்றுகளோ தொடர்ச்சியான இடைச்செருகல்கள், மறுவிளக்கங்கள் ஆகியவற்றின் வழியாக தொகுத்தறிவதற்கு இயலாதபடி கிடக்கின்றன. ஆய்வாளார் நடுவே இன்றும் அவற்றில் எந்த தெளிவும் உருவாகவில்லை. அவற்றைப்பற்றி ‘தெளிவுடன்’ பேசுபவர்கள் அறியாமைநிறைந்த அடிப்படைவாதிகள் மட்டுமே

ஆகவே மகாபாரத யதார்த்தத்தை உருவாக்குவதற்கான வழியாக புனைவாளன் முன் இருப்பது ஒரு வழிதான். இன்றைய நிலத்தையும், பண்பாட்டையும் கற்பனையால் பின்னோக்கிக்கொண்டு சென்று அன்றைய நூல்களில் எஞ்சியிருக்கும் செய்திகளுடன் பொருத்த முயல்வது. வெண்முரசில் செய்யப்பட்டிருப்பது அதுதான். வாசகனும் வாசிப்பில் அதையே செய்கிறான். அவன் அறிந்த செய்திகள் நீண்டு பரிணாமம் கொண்டு அறியாத இறந்தகாலத்தில் படர்வதை அறிகிறான். வெண்முரசு வாசிப்பின் அனுபவங்களில் அது முக்கியமானது

ஆகவே வெண்முரசின் தகவல்களை ஆராய்பவர்கள் இயல்பாக ஒரு வாசகர் செய்யும் ஒன்றையே செய்கிறார்கள். அவர்கள்  செய்திகளை முறையாக திரட்டுவதன் வழியாக இந்த புனைவுப்பரப்பு எப்படி செய்தியும் கற்பனையுமாக நெசவுசெய்யப்பட்டுள்ளது என்பதை அறிகிறார்கள். அதன் வழியாக அப்புனைவை மேலும் நுணுக்கமாக உணர்கிறார்கள். எல்லா புனைவுகளும் இவ்வண்ணம்தான் வாசிக்கப்படுகின்றன

தகவல்களாலான ஒரு நூலை வாசிப்பதற்கும் புனைவை வாசிப்பதற்குமான வேறுபாடு இதுதான். தகவல்களாலான நூலில் தகவல்களை தெரிந்துகொள்ள, சரிபார்க்க வாசகன் முற்படுகிறான். புனைவில் தகவல்களும் கற்பனையும் ஊடாடுவதை அறிய முயல்கிறான். ‘நாவல் என்பது தகவல்களின் புனைவுவடிவம்’ என ஒரு வரையறை உண்டு. எல்லா புனைகதைகளும் தகவல்களையே கட்டுமானப்பொருட்களாக கொண்டுள்ளன. ஆனால் கற்பனையால் அவற்றை கட்டுகின்றன.

வெண்முரசு பாரதநிலத்தையே ஒரு பெரிய நிகழ்வெளியாக காட்டும் நோக்கம் கொண்டது. அதன் பிரம்மாண்டமான பண்பாட்டுவெளியை ஒருங்கிணைவுநோக்குடன் அது அணுகுகிறது—அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சித்திரத்தை அளிக்கிறது. குமரிமுதல் இமையம் வரையிலான அதன் மண், ஆறுகள், நகரங்கள், தொன்மையான பாதைகள். அவற்றை காணும்பொருட்டு தொல்நூல்களிலும் நேரிலுமாக அலைந்தபடியே இருக்கும் ஒரு வாழ்க்கை என்னுடையது. வெண்முரசின் வாசகனிடமும் அந்த பாரததரிசனத்தை நான் எதிர்பார்க்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைவடக்கு- சாவு,மீட்பு
அடுத்த கட்டுரைசென்ற ஆண்டின் கதைகள்