ஜனநாயகம்

வணக்கம் ஜே,

இரண்டு நாட்களுக்கு முன்பு youtube -இல் இந்த வீடியோவைப்  பார்த்தேன். Animal Planet குழுவினரால் எடுக்கப்பட்டது.

இந்த வீடியோவை பார்த்த பின்னர் பல வகையான சந்தேகங்கள் என் மண்டையைக் குடைகிறது.
தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த வீடியோவை பார்த்து, அடியேனின் அறியாமையை நீக்கி உதவுங்கள்.

௧) “Survival Instinct” (உயிர் பயம் அல்லது தன்னைப் பற்றிய பயம்) தான் மனித குணத்திற்கும், மிருக குணத்திற்கும் உள்ள பெரிய வித்யாசம் என்று நினைத்திருந்தேன். தன் உயிரை பொருட்படுத்தாமல், குட்டியை காக்கச்  செல்லும் ‘இந்த சில’ எருமைகள், ‘தான் – தனக்கு’ என்ற
உணர்வைத்  தாண்டிச் செயல்படுகிறதா ?

௨) வீரம் என்றால் என்ன? காட்டு ராஜா என்று சிறுவயதில் இருந்து படித்து வந்த எனக்கு, இந்த சிங்கங்களின் ‘ஓடி-மறையும்’ குணம் ஒரு பெரிய அதிர்ச்சி.

௩) இந்த வீடியோவைப் பார்த்தவுடன் ஏற்ப்பட்ட “Raw-Feeling” என்ன?

நன்றி
அசோக்

அன்புள்ள அசோக்

இணையத்தில் மிகப்பிரபலமான காட்சித்துளி அது.

உயிர்ப்பண்புகளில் வாழ்வதற்கான துடிப்பு முதன்மையானது. ஆனால் தனிப்பட்டமுறையில் வாழ்வதற்கான துடிப்பாக மட்டும் அதைப் புரிந்துகொள்ளமுடியாது.ஒரு இனமாக, ஒரு குழுவாக, ஒரு குடும்பமாக வாழ்வதற்கான துடிப்புகள்தான் உயிரினங்களில் உள்ளன. தன் குட்டிக்காக உயிர்துறக்கச் சித்தமாக இருப்பவையே பெரும்பாலும் எல்லா உயிர்களும். சிறு பூச்சிகளில் கூட அதைக் காணலாம். குட்டிபோட்ட நாய் ஒன்று சிறுத்தையைக் கடித்துக் கொன்ற செய்தி சில வருடங்களுக்கு முன்னால் கேரள ஊடகங்களில் வந்தது. அந்த உணர்ச்சி இல்லையேல் அந்த இனம் அழியும்.

ஓர் இனமாக நீடிப்பதற்கானப் பல்வேறு அடிப்படை உந்துதல்கள் உயிர்களில் உண்டு. தனிப்பட்ட அறிவின் எல்லைக்கு அப்பால் சென்று ஒட்டுமொத்த இனமே தனக்குத் தேவையான முடிவை எடுப்பதையெல்லாம் பார்க்கலாம். கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்துகொண்டு தன் இனத்தின் எண்ணிக்கையை சமன்செய்துகொள்ளும் பறவைகளும் மீன்களும் கூட உண்டு

இந்த காட்சித்துளிக்கு நான் ஒரே தலைப்பைத்தான் வைப்பேன் – ஜனநாயகம்.

முந்தைய கட்டுரைஈரோட்டில் ஊழலுக்கெதி​ரான பெருநெருப்​பு! – அறிவிப்பு
அடுத்த கட்டுரைகலை-ஒரு கடிதம்