மறைந்துவிட்ட டாக்டர் கே எனும் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி நம் கண் முன்னே நடமாடும் ஓர் அழகான கலைச்சித்திரம் இது. காட்டினுள் அவர் நகர்த்திய ஒவ்வொரு நாளும் அர்த்தமுள்ளதாய்த் தோன்றிக் காட்டின் வெளியே நாம் நகர்த்திக் கொண்டிருக்கும் நாட்கள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்க வைக்கின்றது. கதையினுள் தலை காட்டும் மிருகங்கள் யாவும் தங்களின் தன்மையை நம்மீது நிழலாய் பரவவிட்டு நம்மை உற்று நோக்குகின்றன.
இக்கதை டாக்டர் கே வாழ்க்கையின் ஒரு சிறு அத்தியாயம். இந்தச் சிறு வாழ்க்கைப்பகுதியில் அவரின் ஒரு செயலைக்கூட புறந்தள்ள இயலவில்லை. அச்செயல்களின் பின்னால் ஒளிந்திருக்கும் வாழ்வியல் கூறுகளைக் கண்டடையும் தருணங்களில் அவர் மீதான மரியாதை அதிகரித்து கொண்டே போகின்றது.
தன் கடமையை நிறைவாய்ச் செய்யும் டாக்டர் கேவின் பேச்சுக்களில் யானையும் சுவாசமாய்க் கலந்து வருகின்றது. மனதில் ஆழ்ந்து கிடக்கும் விஷயங்களே செயலிலும் சொல்லிலும் வெளிப்படுகின்றன. எண்ணம், சொல், செயல் என மூன்றும் எதிர்மறையின்றி இருந்தால் மட்டுமே வாழ்க்கையின் பேரின்பத்தை அடைய முடியும். டாக்டர் கே அதை அடைந்து விட்டார். யானைகளின் மீதும் பிற விலங்குகளின் மீதும் அவர் காட்டும் சுயநலமற்ற அன்பையும் பரிவையும் வியக்கும் வேளையில் அவை நம்மையும் தொற்றிக் கொள்கின்றன.
புழுக்கள் மீதான அச்சம் சிறிதும் விலகாமல் என்னுள் ஒட்டிக் கொண்டிருக்கும் அதே தருணம் இவரால் முடிகின்றதே என டாக்டர் கேவின் மீது ஆழமான பெருமிதம் உருவாகின்றது. புழு மற்றும் யானையின் உருவ வேற்றுமை உயிரைத் தரம் பிரிக்கவில்லை. எல்லா உயிரிலும் மிளிரும் இறைத்தன்மைக்கு இது தக்க சான்று. உயிர் விலகிய உடல்கள் யாவும் மண்ணோடு மண்ணாய்க் கலந்து விடும் கூற்றை மனதில் எழுப்பிவிடுகின்றன உயிரற்ற யானையின் உடல் முழுதும் பரவியிருக்கும் புழுக்கள்.
‘நரி இப்டியெல்லாம் பண்ணாதுடா..’ என்ற வார்த்தைகள் நம்மீது தெளித்து விழுந்த பின்னரும் அதன் ஈரம் ஒளிந்திருக்கும் நிதர்சனத்தை ஞாபகப்படுத்தி கொண்டே இருக்கின்றது. மனிதர்களை மிருகங்களுடன் ஒப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையைப் பிறப்பிக்கத் தோன்றுகின்றது.
பல அபூர்வங்களைத் தன்னுள்புதைத்துக் கொண்டிருக்கும் காடு டாக்டர் கேவையும் தன் வசம் இழுத்துக் கொண்டது. மனிதர்களைச் சந்திப்பதே அரிதாகிவிட்ட இக்கால சூழலில்டாக்டர் கே எனும் ஓர் உன்னத மனிதரைச் சந்தித்துவிட்ட
திருப்தி கதையின் நிறைவில் மனதை நிரப்புகின்றது.
க.ராஜம்ரஞ்சனி
மலேசியா
அன்புள்ள ரஞ்சினி
எல்லாக் காலத்திலும் இலட்சியவாதிகள் குறைவாகவே இருப்பார்கள். அவர்கள் வாழ்வது இன்னொரு காலகட்டத்தில். இன்னொரு யுகத்தில் . அங்கே அவர்கள் பெறுவதென்ன என்று நமக்கு தெரிவதில்லை, இழப்பவை நம் உலகம் சார்ந்தவையாதலால் அவை மட்டும் தெரிகின்றன. அவற்றை வைத்து நாம் அவர்களை மதிப்பிடமுயல்கிறோம். யானைடாக்டர் நாம் வாழும் உலகில் இல்லாத ஓர் அழகையும் நேர்த்தியையும் முழுமையும் கண்டு கொண்டவர். அங்கே நிறைவாக மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
நேற்று மாலை “இரவை” வாங்கி வந்து இதுகாறும் நான் அடைந்திராத
இரவைப் பற்றிய புனைவைப் பருகி முடித்தேன்.
எத்தனை விதங்கள்.
எத்தகைய அழகுணர்ச்சி!
இரவைப் பற்றிய தங்களது ஒவ்வொரு கவிதையையும் மீண்டும் மீண்டும் ரசித்து ருசித்தேன்.
“எத்தனை கோடி பகல்களை
அணைத்து இரவை உருவாக்கினோம்”
“இரவின் புன்னகை உதடுகள் இல்லாத பற்கள் இல்லாத
கருவிழிகளால் மட்டுமே ஒளிரும் புன்னகை…”
ஆச்சர்யமும் பரவசமும் தாங்க முடியாமல் தங்கள் கவிதைகளை இரவு 12 மணி அளவில் tweet செய்து கொண்டிருந்தேன்.மேனனின் கதாபாத்திரமும் தங்களது சொல் வீச்சும் நாவலை அடைய முடியாத உயரத்துக்கு இட்டு செல்கின்றன. இரவைப் போலவே ஆரவாரமற்று,அதே சமயம் அழுத்தமாய் இரவின் நீலத்தில் கலந்து விட்ட படைப்பு. வாழ்த்துக்கள்.
ப்ரியமுடன்
கோகுல்ப்ரசாத்
அன்புள்ள கோகுல்,
நன்றி.
இரவு நம் நரம்புகளை இன்னும் நுட்பமாக ஆக்கிவிடுகிறது. காற்றுப்பட்டாலே அதிரும்படியாக.அப்போது அறியப்படும் உலகமே வேறு இல்லையா?
ஜெ