அன்புள்ள ஜெ,
வெண்முரசு பற்றி நான் நண்பர்களுடன் உரையாடும்போதெல்லாம் இடதுசாரி நண்பர்கள் அதை இப்போது அதிகம்பேர் படிப்பதில்லை என்றும் உங்கள் வாசகர்களில் ஒரு சின்ன வட்டம் மட்டுமே அதை வாசிக்கிறது என்றும் சொல்வார்கள். உங்கள் வாசகர்களிலேயே பெரும்பாலானவர்கள் அதை வாசிப்பது குறைவு என்பதும் சொல்லப்படுகிறது.
இன்னும் சிலர் வெண்முரசு மதவிஷயங்களில் ஈடுபாடுள்ள நடுத்தரவயதினரும் முதியவர்களும் வாசிப்பது என்பது உண்டு. என்னிடம் சிலர் ‘அதை நாற்பது வயசுக்குள்ள யாருமே வாசிக்கிறது இல்லை” என்று ஆவேசமாக சொல்வார்கள்
பொதுவான பேச்சுக்களில் இலக்கியவாதிகள் சிலரும் இதைமாதிரி சொல்லியிருக்கிறார்கள். வெண்முரசு நவீன இலக்கிய வாசகனுக்கு பிடிக்காது, அது பழைய எழுத்து என்று ஒரு எழுத்தாளர் சொன்னார். நீங்கள் வாசித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை என்று சொன்னார்.
சரி நானறிந்தே நூறு இளைஞர்கள் வெண்முரசு படிக்கிறார்கள், அனைவருமே இலக்கியம் அறிந்தவர்கள் என்றேன். நவீன இலக்கியவாசகனுக்குரியது வெண்முரசு என்று சொன்னேன். நீங்கள் ஜெயமோகன் ஃபேனா என்று என்னிடம் திருப்பிக்கேட்டார்
இது எப்போதும் நடப்பது. வெண்முரசுக்கு வாசகர்களே இல்லை என எவரேனும் சொன்னால் உடனே அங்கேயே ஒருசில வாசகர்கள் இருப்பது தெரியவரும். உடனே அவர்கள் வாசகர்கள் அல்ல ,ஃபேன்கிளப் என்பார்கள். ஃபேன்கிளப் என்றே வைத்துக்கொள்வோம், இந்த ஃபேன் கிளப்பில் இருப்பவர்கள் அளவுக்கு இலக்கியவாசிப்புள்ளவர்கள் வெளியே எவராது இருக்கிறார்களா, இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், நானும் பார்த்துக்கொள்கிறேன் என்றுதான் நான் சொல்வேன்.
இத்தனை மகத்தான வாசகர்கள் ஒரு பெரிய குழுவாக திரண்டுவாசிக்கிறார்கள் என்றால் அந்த படைப்பு எப்படிப்பட்டது என்று நான் கேட்டதுண்டு. ஓர் எழுத்தாளரிடம் ‘சரிங்க, இந்த ஃபேன்கிளப்பின் ஒரு சாதாரண வாசகர் அளவுக்கு தரமான ஒரு வாசகராவது உங்களுக்கு உண்டா?” என்றே ஒரு முறை கேட்டேன்.
டிவிட்டரிலேயே ஏராளமானவர்கள் வெண்முரசு வாசித்து அதைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். வெண்முரசு டிவிட்டரில் பேசப்படாத நாளே இல்லை. பூங்குன்றன் [ PS@D10SPS ] என்பவர் டிவிட் செய்வதை இப்போது பார்த்தேன். வெண்முரசு படிக்கிறார். மிகுந்த ரசனையுடன் பதிவுசெய்கிறார். அவருடைய குறிப்புகளே முக்கியமான பார்வையை அளிக்கின்றன.அவர் தேர்ந்தெடுத்து அளிக்கும் வரிகள் வழியாகவே ஒரு வெண்முரசு வாசிப்பை அடையமுடியும்.
இவர்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் அவரே பதிலாக சுட்டிக்காட்டலாம்.அவர் மிகவிரிவாக உலக இலக்கியப் பெரும்படைப்புகளை படித்திருக்கிறார். அடுத்த தலைமுறை இலக்கியவாசகரின் சரியான உதாரணம் அவர். அவரளவுக்கு படித்த எவரும் இங்கே பேசிக்கொண்டிருப்பவர்களில் இல்லைஅவரைப்போன்ற ஒரு வாசகர் அமைவது எந்த எழுத்துக்கும் பெருமை.
அவரைப்போன்றவர்கள் படிப்பதனால்தான் இந்த மாதிரியான மனம்புழுங்கிய வெளிப்பாடுகளாக உள்ளது என நினைக்கிறேன்
எம்.ராஜேந்திரன்
அன்புள்ள ராஜேந்திரன்,
வெண்முரசு போன்ற படைப்பின் பெருஞ்சிக்கல் என்னவென்றால் அது பெரிய எடைகொண்டது, எழுதியவனை அதில் கட்டி அசைவில்லாமலாக்கிவிடும். நான் அதிலிருந்து வெளியேறவே நூறு கதைகளை எழுதினேன். மேலும் கதைகளுக்குள் செல்லவே விரும்புகிறேன். சென்ற சில மாதங்களாக இவையனைத்தையும்விட முக்கியமான பெருமுயற்சிகள் சிலவற்றிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன்
இந்நிலையில் வெண்முரசை வாசிக்கிறார்களா என்று நான் கணக்கிட்டுக்கொண்டிருந்தால் அதிலேயே சிக்கிக்கொள்வேன். ஆகவே அதை எண்ணுவதே இல்லை. அது முடிந்துவிட்டது. அது இங்கே இருக்கிறது. அதை ஒருவருமே வாசிக்கவில்லை என்றாலும் ஒன்றுமில்லை, எவரேனும் எப்போதேனும் வாசிப்பார்கள்.
பேராலயங்கள் பெருங்கோபுரங்கள் பல தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றை எழுப்பியவர்கள் அவற்றை எவர் ரசிக்கிறார்கள், எத்தனைபேர் பார்க்கிறார்கள் என எண்ணியதில்லை. அவை தியானங்கள், பிரார்த்தனைகள். வெண்முரசும் அப்படித்தான். அது தமிழிலக்கியம் அடைந்த முதன்மை உச்சம், கம்பராமாயணம் ஒன்றுடன் மட்டுமே ஒப்பிடத்தக்கது. அது தமிழ்ப்பண்பாட்டின் வெற்றி. அது எனக்கு தெரியும், தமிழ்நாட்டில் ஒருவருக்குக்கூட அப்படி தோன்றவில்லை என்றாலும் அது அவ்வண்ணமே நிலைகொள்ளும்.
இத்தகைய ஆக்கங்களுக்கு எப்போதுமே ஏற்பு சிக்கலானதுதான். வெளிவரும்காலகட்டத்தில் சிலருக்கே அவற்றை அறியும் கூர்திறன் இருக்கும். ஆகவே தேர்ந்த வாசகர்கள், தங்களுக்கு நிகழ்காலமும் இறந்தகாலமும் அளிக்கும் வரையறைகளைக் கடக்கக்கூடியவர்கள் மட்டுமே அதன் வாசகர்கள். அவர்களின் எண்ணிக்கையால் அல்ல, தகுதியால்தான் அப்படைப்பு நிலைகொள்ளும்
மேலும் இதன் அளவும் ஆழமும் எக்காலத்திலும் பெருமளவு வாசகர்களை அடையாமல் செய்யும். என்றும் சில ஆயிரம்பேர் மட்டுமே இதன் வாசகர்களாக இருப்பார்கள். எண்ணிக்கையே அளவுகோல் என்றால் எப்போதுமே இது இப்படித்தான் இருக்கும். ஆகவே எழுதியதுமே வெளியேறிவிடுவதுதான் நாம் செய்யக்கூடியது. அதை எழுதிக்கொண்டிருக்கையிலேயே என் ஆசிரியர்கள் சொன்னார்கள்
வாசிக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், வணக்கங்கள். பிறகெப்போதாவது நானும் வாசகனாக வந்து கலந்துகொள்கிறேன்
ஜெ