அபயா கொலைவழக்கு,சட்டமும் நடைமுறையும்- கடிதம்

இரு நாயகர்கள்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் அப்போது திண்டுக்கல்லில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு தனியார் பள்ளியில் 10 வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு பயனற்ற கிணற்றில் பிணமாகக் கிடந்தான். அவன் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. அம்மாணவன் தேர்வில் காப்பியடித்ததாகக் கூறி தலைமையாசிரியர் அறையில் வைத்து ஆசிரியர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் மூர்ச்சையாகி உயிர் இழந்ததாக மாணவர்கள் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘நீதி விசாரனை தேவை’ என திண்டுக்கல்லில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஆனால், அம்மரணம் மறக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சுற்றி இன்றும் பல துணியாலைகள் செயல்படுகின்றன. 15 வயது முதலான சிறுமிகள் அங்கேயே தங்கி பணிபுரிகிறார்கள். அவற்றில் ஒரு மில்லில் ஒரு 17 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடக்கிறாள். ஆடைகள் கலைந்த நிலையில் அவள் இறந்து கிடந்த போதும் அது சந்தேக மரணம் என்றே போலீசில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. புலன் விசாரணைக்குப் பிறகு அவள் ‘சூப்பர் வேஸ்மால்’ கேசத் தைலத்தை தவறுதலாக தண்ணீர் என்று அருந்தியதால் மரணம் என்று வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அச்சிறுமியின் பெற்றோர் அவ்வாறு வழக்கை முடிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனையில்லை என்று எழுதித் தருகிறார்கள்.

ஒரு தொழிற்சங்கத் தலைவர் மட்டும் அம்மரணம் தற்செயல் மரணமில்லை என்றும் அச்சிறுமி அந்த ஆலையைச் சேர்ந்த சிலரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் ஆட்சேபனை செய்கிறார். அப்பெண்ணின் ஏழைப் பெற்றோருக்கு ஒரு தொகை ஆலை நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டு பிரச்சனை பேசிமுடிக்கப்பட்டதாகவும் அக்கொலைக்கு நீதி வேண்டும் என்ற அந்த தொழிற்சங்கவாதி இன்றளவும் நீதிமன்ற படிகளில் தவம் கிடக்கிறார்.

அபயாக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இன்றளவும் கொலைகுள்ளாகிறார்கள். இனியும் நடக்கும். நம்மால் கொலைகளைத் தடுக்க இயலாது. ஆனால் இத்தகைய மறைகொலைகளை முறையாக விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்கும் பொறுப்பிலுள்ள காவல்துறையும், நீதித்துறையும் சந்தேக மரணம் தொடர்பான வழக்குகளை அதீத கவனத்துடனும் நேர்மையுடனும் அணுக வேண்டும்.

பொதுவாக சந்தேக மரணம் தொடர்பான வழக்குகளில் காவல் ஆய்வாளர் நிலையில் இறுதியறிக்கை தாக்கல் செய்கிறார்கள், அதனை குற்றவியல் நடுவர் நிலையில் ஏற்றுக் கொள்கிறார்கள். சந்தேக மரண வழக்குகளில் பெரும்பாலும் நேரடியான புகார் மற்றும் சாட்சியம் இருப்பதில்லை. எனவே பணம் மற்றும் அதிகாரம் கொண்ட குற்றவாளிகள் அதனை ஏற்கும் பக்கம் இறைத்து எளிதில் தப்பிவிடுகிறார்கள். இதனைத் தடுக்க சந்தேக மரண வழக்கின் இறுதியறிக்கையை காவல் ஆய்வாளர் தயாரித்து அதனை காவல் கண்காணிப்பாளர் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அதன் பின்பே அந்த இறுதியறிக்கை குற்றவியல் நடுவர் முன்பு தாக்கல் செய்யப்படவேண்டும் என்றும் விதிவகுக்கலாம்.

அதே போல அத்தகைய வழக்குகளில் குற்றவியல் நடுவர் உத்தரவானது மாவட்ட அமர்வு நீதிபதியால் சீராய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் விதிகள் செய்யலாம். இதற்கு சட்டத்திருத்தம் தேவையில்லை, அத்தகைய விதிகளை உத்தரவிட உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. அத்தகைய படிநிலைகளை உயர்த்தினால் ஒவ்வொரு வழக்கும் நான்கு நபர்களின் பார்வைக்குச் சென்று முடிக்கப்படும். அதில் ஒருவர் உத்தமராக இருந்தால் கூட நீதி காக்கப்பட வாய்ப்புள்ளது.

எனினும் பொது மக்கள் இன்றளவும் நம் நாட்டின் குற்றவியல் சட்டத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளவில்லை. சட்ட விவாதம் நடத்தும் ஊடகங்களுக்கு சட்டத்தின் அரிச்சுவடிகூட தெரியவில்லை. ஒரு குற்றவாளி எப்போதும் நிரபராதி என்று நம் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்படுவதே இல்லை. இது புரியாமல் ஒவ்வொரு குற்றவழக்கிலும் விடுதலை செய்யப்பட்டவர் தான் நிரபாதி என்று மார்தட்டுகிறார். ஊடகங்கள் அப்போது யார் குற்றவாளி ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு என கோமாளித்தனமான விவாதங்கள் வைக்கிறார்கள்.

ஒவ்வொரு குற்ற வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஐயம் திரிபற நிரூபிக்கப்படவில்லை என்ற அடிப்படையிலேயே விடுதலை செய்யப்படுகிறார்கள். ஒரு குற்ற வழக்கில் எதிரி மீதான குற்றச்சாட்டில் சிறு சந்தேகம் இருந்தால் கூட அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் அவரை தண்டிக்கலாகாது என்பதே நம் சட்டம். இதை அடியொட்டியே ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பது பழமொழியாயிற்று. ஆனால் ஆயிரம் குற்றவாளிகள் தப்பினால் அதன் விளைவுகள் என்ன என்பதை நம் சட்டம் இயற்றும் அமைப்புகளும் நீதிமன்றங்களும் சிந்திக்க வேண்டிய எல்லையில் நாம் நிற்கிறோம். தீர்வு காணும் வரை அபயாக்களின் அபயக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அன்புடன்,

ஆர். பிரேம் ஆனந்த்.       

முந்தைய கட்டுரைசிற்பக்கலை பற்றி அறிய
அடுத்த கட்டுரைஇருவகை இலக்கியங்கள்