ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கத்துடன் ஆத்மார்த்தி
பொன் வைக்கும் இடத்தில் பூவை வைப்பதாகப் பன்னெடுங்காலமாக ஒரு உபயோகமொழி உண்டல்லவா.? அப்படி வைக்கப்பட்ட பொன்பூ நேற்றைய நிகழ்வு. இதுவரை விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு நிகழ்த்திய விழாக்களை அவைகள் குறித்த பின்னிணைப்புச் செய்திகள் புகைப்படங்கள் மூலமாகவே அறிந்திருக்கிறேன். கலந்து கொண்ட நண்பர்கள் அதன் க்ராண்டியர் மற்றும் இயல்பு இரண்டையும் கலந்தே பாராட்டுவர்.
கோவையில் நிகழ்கிற விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலைக் கடந்த சில வருடங்களாகவே சிறு ஏக்கமாகிற வகையில் சேகரித்துக் கொண்டிருந்தேன். இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விருது மதுரையில் வாழும் எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு அறிவிக்கப்பட்டது. இந்த வருடத்தின் தேதிகளைக் கொரோனா என்ற பேரையணிந்த கொடும்பூச்சி தன்னால் ஆனமட்டிலும் அரித்துத் தின்றுவிட்டது. காலம் வழமைக்கு மாறான ஒப்பனையும் சப்தமுமாகக் கிளைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வருடமே இன்னும் சில தினங்களுக்குள் தீர்ந்து விடப் போகையில் மதுரைக்கே வந்து சுரேஷூக்கான விருதினைத் தந்து செல்வதாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நிகழ்தலின் இயல்பை நெகிழ்த்திக் கொண்டு முடிவெடுத்தது உயர்ந்த ஆதுரம்.
நேற்றைய நிகழ்வு இனிமையாகவும் அருமையாகவும் நடந்ததை உணர முடிந்தது. முக்கியமாக அந்த ஆவணப்படம் அது அபாரம். இந்த விழாவில் ஒரு பார்வையாளனாகக் கலக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு மனம் மகிழ்கிறேன். விழாவில் தங்களது உரையும் அதன் பின் மாலையில் கிடைத்த உரையாடலும் நிஜமான கொடுப்பினை.
நன்றியும் அன்பும் வாழ்தல் இனிது
பேரன்புடன்
ஆத்மார்த்தி
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது என்றே நான் நினைக்கிறேன். கூட்டம் கொண்டாட்டம் எல்லாம் தேவைதான். ஆனால் அதெல்லாம் ஒருபக்கம். மறுபக்கம், இந்தப்பக்கம் நாம் நம் தரப்பைச் சரியாகச் செய்திருக்கிறோமா என்பதே முக்கியம். அப்படிப்பார்த்தால் நாம் மிகச்சிறப்பாக நடத்தியிருக்கிறோம். நான் 2011 முதல் விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்துகொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வு அது. விழாவை நானும் சேர்ந்து நடத்துவதாகவே எண்ணிக்கொள்கிறேன். இந்த ஆண்டும் நானும் உடனிருந்ததாகவே என் மனதில் ஓடுகிறது
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
இரா.ஆடலரசு