பூரிசிரவஸின் கதாபாத்திரம்

அன்புள்ள ஜெ

வெண்முரசின் நாவல்களை இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். சின்னஞ்சிறிய கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் வளர்கின்றன என்று பார்க்கிறேன். அதில் பூரிசிரவஸ் முக்கியமானவன். அவனை சோமதத்தி என்று ஒரே இடத்தில் மகாபாரதம் சொல்கிறது. அதன்பின்னர் செய்தியே இல்லை. ஆனால் இறுதியில் போர்க்களக்காட்சியில் மிகமுக்கியமான திருப்புமுனை அவனுடைய சாவில்தான் நிகழ்கிறது.

அந்தக் கதாபாத்திரத்தை நீங்கள் ஏன் அவ்வாறு பிரம்மாண்டமாக கட்டிக்கொண்டுவருகிறீர்கள் என்று பார்த்தபோதுதான் நான் மூலமகாபாரதத்தை எடுத்து அந்தக் கதாபாத்திரத்தின் பரிணாமத்தைப் பார்த்தேன். நீங்கள் கதாபாத்திரங்களை எப்படி அமைக்கிறீர்கள் என்று புரிந்துகொண்டேன். நீங்கள் கடைசியிலிருந்து ஆரம்பிக்கிறீர்கள். கடைசியில் போரில் அவர்கள் எந்த வகையில் முக்கியமானவர்கள் என்று பார்க்கிறீர்கள். அங்கிருந்து முன்னால் வந்து அந்தக்கதாபாத்திரத்தை அமைக்கிறீர்கள்.

ஒட்டுமொத்தமாகவே எல்லா கதாபாத்திரங்களும் conceive செய்யப்பட்டுள்ளன. என்னைப்போன்றவர்கள் வாசிக்கும்போது கூடவே கங்கூலி மகாபாரதத்தையும் சென்று பார்க்கிறோம். இது அங்கே இல்லையே, இது மாறியிருக்கிறதே என நினைக்கிறோம். ஏனென்றால் முழுமகாபாரதத்தையும் நானெல்லாம் வாசிக்கவில்லை. எந்தக்கதாபாத்திரத்துக்கும் முழுச்சித்திரமும் எங்கள் மனதில் இல்லை.  இந்த சிக்கல் மகாபாரதத்தை ‘கொஞ்சம் கொஞ்சம்’ தெரிந்துகொண்டு வெண்முரசை வாசிப்பவர்களுக்கு இருக்குமென நினைக்கிறேன்

பூரிசிரவஸ் பாரதப்போரின்போது கொல்லப்படுகிறான். அங்கே அவன் ஒரு tragic hero . ஒரு வகையான பரிதாபமான சாவு. அர்த்தமே இல்லாத சாவு. அந்த எல்லையிலிருந்தே இங்கே அவனுடைய தொடக்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. பூரிசிரவஸ் இளைஞனாக இருக்கிறான். மலைக்குடிகளில் பிறந்து தன்னுடைய குடியின் வெற்றிக்காக கனவு காண்கிறான். ஒரு நகரை கட்டி எழுப்புகிறான். ஆனால் வீண்சாவு அடைகிறான்

பூரிசிரவஸின் தத்தளிப்புகளும் அலைக்கழிப்புகளும் ஆழமானவை. அவனுக்கு வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் சொந்தமாக தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை. இன்றைய இளைஞனைப்போல இருக்கிறான். அங்குமிங்கும் அலைந்துகொண்டே இருக்கிறான். பெரியவீரன், ஆனால் வயதே ஆகாத சின்னப்பையன் போலவும் இருக்கிறான்

அவன் ஏன் சின்னப்பையன் போல இருக்கிறான் என்று சிந்தித்தபோது எனக்கு இரண்டு விடைகள் வந்தன. ஒன்று, அவன் மலைக்குடி. அவர்கள் இன்னும் முழுமையாக பண்பாட்டுக்குள் வரவில்லை. சதி சூழ்ச்சி அரசியல் எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. ஆகவே அவர்கள் ஒரு குடியாகவே வயதே ஆகாத இளைஞர்களாக இருக்கிறார்கள்

இன்னொன்று சொல்லவேண்டுமென்றால் அவன் தன் வாழ்க்கையின் கடைசியில் பரிதாபமாகச் சாகப்போகிறான். ஒரு டிராஜிக் ஹீரோ. அவ்வாறு அவன் இருக்கவேண்டுமென்றால் அவனை இப்படி lovable youth என்று காட்டுவது அவசியம். உண்மையில் மகாபாரதத்தில் அப்படி இல்லை. அதில் சோமதத்தி சாஸ்திரங்கள் அறிந்தவனாகவே இருக்கிறான். நியாயம் சொல்கிறான். ஆனால் இங்கே பூரிசிரவஸ் இளமையான துடிப்பான அப்பாவியான கதாபாத்திரமாக இருக்கிறான்

பூரிசிரவஸும் சாத்யகியும் விதியால் கட்டப்பட்டிருக்கிறார்கள். அது போரில்தான் தெரியவருகிறது. அது போரில் நடந்த தற்செயல்தான். ஆனால் அதை விதி என்று கொண்டு அவர்கள் இருவரையும் தொடக்கம் முதலே இணைத்து இணைத்து பின்னிக்கொண்டே இருக்கிறது வெண்முரசு. பூரிசிரவஸின் விதி சாத்யகியால் முடிவதை அறிந்தபின் படிக்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் ஒரு பதற்றம் வருகிறது

பூரிசிரவஸின் கதாபாத்திரம் எனக்கு ஏன் இந்த அளவுக்கு ஒரு பதற்றத்தை அளித்தது என்று எண்ணிப்பார்த்தேன். முக்கியமான காரணம் அவன் என்னைப்போலத்தான். சாமானியனான ஒருவன். மகாபாரதத்தில் எல்லாருமே வீரர்கள் ஞானிகள். நடுவே சர்வசாதாரணமான ஒருவனாக அவன் இருக்கிறான். அவனுக்கு எந்த வஞ்சமும் இல்லை. எந்த பேராசையும் இல்லை. அவன் ஆசைப்படுவதெல்லாம் நாட்டின் நலன் மட்டும்தான்

மகாபாரதம் போன்ற மாபெரும் அழிவுகளின்போது பூரிசிரவஸ் போன்றவர்கள் அடித்துச்செல்லப்பட்டுவிடுவார்கள். அந்த climax twist அவனுக்கு அமையாமல் இருந்திருந்தால் கதையில் அவனுக்கு ஒரு பெயர் மட்டும்தான் மிஞ்சியிருக்கும். இப்போதுகூட மகாபாரத டிவி சீரியல்கள் எதிலும் பூரிசிரவஸ் இருப்பதுபோலத் தெரியவில்லை. இதுதான் பூரிசிரவஸின் கதாபாத்திரமா என நமக்கு தெரியாது. ஆனால் அவனை இந்தக்கதை இந்த வடிவில் immortalize செய்துவிட்டது

நான் இப்போது சொல்வளர்காடு படித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரை வந்த கதாபாத்திரங்களில் என் மனசுக்கு மிக உகந்த கதாபாத்திரமென்றால் அது பூரிசிரவஸ்தான்

ஜி.சரவணன்