முருகவேலன்- கடிதம்

அறிவியக்கவாதியின் உடல்

அன்பு ஜெயமோகன்,

நடமாட இயலாத உடற்குறை கொண்ட நண்பர் சக்திவேலின் கடிதமும், அதற்கான தங்கள் பதிலையும் கண்டேன். அக்கடிதத்தில் எழுத்தாளர் மற்றும் வாசகர்களின் நிழற்படங்கள் வெளியிடுவது குறித்தான கருத்தையும் சுருக்கமாகத் தெரிவித்திருந்தீர்கள். அப்பதிவில் முருகவேலன் எனும் எனது பழைய பெயரைக் குறிப்பிட்டிருந்தது நினைவுகளைக் கிளறியது.

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை எனும் பெயரில் முருக வழிபாடு தொடர்பான அறக்கட்டளை நிறுவி இருந்த காலம் அது. 2013-இலிருந்து 2015-க்குள் இருக்கும். என்னுடன் நண்பர் தியானேசுவரன் இணைந்திருந்தார். சக்திவேல் எனும் பெயருக்குப் பதிலாக முருகவேலனை முதன்மைப்படுத்தினேன். தமிழ் முருக வழிபாடு, தமிழ் முருகக் கோட்டம் போன்ற பிரம்மாண்டக் கனவுகள் கொண்டிருந்த காலகட்டம் அது. மூன்றரை கோடித் தமிழர்கள் “தமிழ் போற்றி முருகா போற்றி தமிழும் முருகனும் போற்றி போற்றி” எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும். அப்படியான நிலைப்பாட்டில் தீவிரமாய் இருந்த நேரம் அது. அச்சமயத்தில்தான் விஷ்ணுபுரம் தொடர்பான தொடர்கடிதங்களை எழுத நேர்ந்தது.

படைவீடு குறித்த எனது அனுபவங்களையும், புரிதல்களையுமே விஷ்ணுபுர விமர்சனக் கடிதங்களில் பகிர்ந்திருப்பேன். முருக வழிபாடு தொடர்பான தேடல் வழியாகவே சமயம் என்பது குறித்த குறைந்தபட்சத் தெளிவு கிடைத்தது. முதலில். விஷ்ணுபுரம் நாவலை வைதீக வைணவச் சமயத்துக்குக் கொடி பிடிக்கும் இந்துத்வா நாவலாகவே கருதி இருந்தேன். மேலும், இந்து மதம் என்பதே வைதீக வைணவச் சமயம் என்பதே எனது அறிதலாக இருந்தது. இராமாயணம், மகாபாரதம், கீதை போன்ற இந்துமதபிரதிகளின் மூலவர் கிருஷ்ணன். ஆக, வைதீக வைணவச் சமயமே இந்துமதம் என்பதான தருக்கப் புரிதலும் ஆசுவாசம் தருவதாய் இருந்தது. சைவ சித்தாந்தம்(தமிழர்) எதிர் வைதீக வைணவம்(ஆரியர்) எனும் முரண்பாட்டைக் கொண்டு சைவ சித்தாந்தத்தைத் தமிழருடையது என்றும், வைதீக வைணவம் என்பது ஆரியரால் நம் மீது திணிக்கப்பட்டது என்றும் நம்பவும் செய்தேன். என்றாலும், தனித்தமிழ் முன்னோடிகளின் தமிழ்த்தேசிய அரசியல் எனக்கு உவப்பானதாக இல்லை. இச்சமயத்தில்தான் அ.ச.ஞானசம்பந்தன், கி.வா.ஜெகநாதன், குன்றக்குடி அடிகளார், சோதிப்பிரகாசம், கோவை ஞானி, அஸ்வகோஸ்(இராசேந்திர சோழன்), அருணன், ஆ.சிவசுப்பிரமணியன், தேவ.பேரின்பன், ராஜ் கெளதமன், ஸ்டாலின் ராஜாங்கம், பிரேம், கோ.கேசவன், மெளனகுரு, தொ.பரமசிவன், ந.முத்துமோகன், எஸ்.வி.ராஜதுரை, பக்தவத்சல பாரதி, ஆ.செல்லப்பெருமாள், ச.பிலவேந்திரன், சுந்தர்காளி, எஸ்.என்.நாகராசன் போன்றோரின் கட்டுரைகளை நிதானித்து வாசிக்கும் சூழல். இணையாக, சமய நூல்கள் மற்றும் புராணங்களையும் முன்நோக்கங்களின்றி வாசித்தேன். விளைவாக, பெருந்திகைப்பும் பித்தும் என்னில் சுழன்றன. ஆசுவாசத்திற்கான திணறலில் விஷ்ணுபுர வாசிப்புக்கு வந்து சேர்ந்திருந்தேன்.

விஷ்ணுபுர வாசிப்பு இருள்வனத்தில் கருநிழல்களைத் துரத்துவதைப் போன்றே துவக்கத்தில் இருந்தது. நாவலின் புறவிவரணைகளில் மனம் நிற்கவே இல்லை; நாவலின் காலமுரண்களிலும் அது கவனம் கொள்ளவில்லை. அதன் தத்துவ விசாரணைகளையே மனம் சுற்றி வந்தது. இடையிடையே பாத்திரங்கள் பேசும் சில வாக்கியங்கள், தரிசனங்களாக எனக்குப் புலப்படத் துவங்கின. அத்தரிசன வாக்கியங்களை முகப்பாகக் கொண்டு முருக வழிபாட்டு அனுபவங்களைத் தொகுக்க முயன்றேன் அல்லது என் அலைக்கழிப்பை நிதானமாக்க விரும்பினேன். அவையே விஷ்ணுபுர வாசிப்புத் தொடர் கடிதங்களாக தளத்தில் பிரசுரமாயின.

சமீபமாய் விஷ்ணுபுர நாவல் வாசிப்புக்கு மேம்பட்ட திகைப்பை பேராசிரியர் டி.தருமராஜ் அயோத்திதாசர் வழி அளித்தார். அவரின் அயோத்திதாசர் நூல், வாசகப்பரப்பில் பெருங்கவனம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வுப்பேராசிரியரான அவரின் புனைவுப்பித்து வழியாகவே வரலாறு, வழக்காறு போன்றவை தொடர்பான தரிசனங்களைப் பெற்றேன். அபுனைவு, புனைவு எனும் பதங்களை ஒட்டிய நவீன அறிவின் மயக்கத்தை டி.த்ருமராஜ் திகைப்புக்கு உட்படுத்தினார்; பிரதியின் அச்சு மயக்கங்களின் திரிபுகளைக் கண்டுகொள்ளத் தூண்டினார். பல மணிநேரங்கள் அவருடன் உரையாடியதன் வழியாக கலை இலக்கியங்கள் குறித்த புரிதல் இன்னும் தீர்க்கமானது. எதிர்காலக் கனவு எனும் கானல் நம்பிக்கையைக் களைந்து நிகழ்காலச் செயல்பாடுகளில் காத்திரமாகப் பங்காற்றும் உறுதியை அவரே அளித்தார். உங்களை பலமுறை சந்தித்திருக்கிறேன்; தனிப்பட்டுப் பேசியதில்லை. தருமராஜ் அவர்களையோ நான் சந்தித்ததே இல்லை; மணிக்கணக்கில் பேசி இருக்கிறேன்.

கடந்த வாரம், தஸ்தயேவ்ஸ்கி குறித்து ஜி.என்.பணிக்கர் மலையாளத்தில் எழுதி இருந்த கட்டுரை நூலைத் தமிழில் வாசித்தேன். புனைவுத்தன்மை மிகுந்திருக்கும் சிறந்த கட்டுரை நூல் அது. மொழியாக்கம் உதயஷங்கர் என நினைக்கிறேன். தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கைப் பின்புலத்தோடு அவரின் ஆக்கங்களைப் பொருத்திப்பார்க்கும் வாய்ப்பை பணிக்கர் ஏற்படுத்தித் தந்திருந்தார். அசடன், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் போன்ற ஆக்கங்களை இன்னும் நெருங்க அக்கட்டுரை நூல் உதவியது.

முருகவேலனில் துவங்கி பணிக்கருக்கு வந்து நிற்கிறது. இப்படி எழுத்து நெளிந்து செல்வதைத் தவிர்க்க முடிவதில்லை. முருக வழிபாடு குறித்த தெளிவும், நடைமுறை அடையாள அரசியல் குழப்பங்களும் படைவீடு அறக்கட்டளைத் திட்டங்களைக் கைவிட உந்தின. சக்திவேல் எனும் இயற்பெயரிலேயே எழுதலாம் என முடிவு செய்தேன். அச்சமயத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த இளமுருகு (புஞ்சை புளியம்பட்டி மறைமலை அச்சகப் பொறுப்பாளர்) மற்றும் தமிழ் ஒலியன்களின் உச்சரிப்பைத் தெளிவுற விளக்கிய பெருமாள் ஐயா (கோபிசெட்டிபாளையம்) போன்றோரின்  நினைவு வந்தது. அவ்விருவருக்கும் தனித்தமிழ் பிடிக்கும். அவர்களுக்கான செய்நன்றியாய் சத்திவேல் எனும் பெயரைக் கொண்டேன். தொடர்ந்து அப்பெயரிலேயே எழுதவும் உறுதி பூண்டேன்.

இப்படியான சூழலில், நண்பர் சக்திவேல் எழுதும் கடிதங்களை நான் எழுதியதாக நினைத்து பல நண்பர்கள் வினவி இருக்கின்றனர். அக்கடிதங்களில் சக்திவேல் எனும் பெயர் மட்டுமே இருக்கும்; ஊர்ப்பெயர் இருக்காது. அவரை இன்று நிழற்படமாகக் கண்டபோது ஒருபுறம் அதிர்ச்சி; மறுபுறம் கிளர்ச்சி. இவரா அப்படி எழுதினார் எனும் அசட்டுத்தனமான யோசனையை இங்கு மறைக்க விரும்பவில்லை. சேலம் வானவன் மாதேவியிடம் (வானதி) ஏதாவது எழுதிக்கொண்டிருக்கும்படி அவ்வப்போது வற்புறுத்துவேன். சிரித்தபடியே உரையாடும் அவளின் மனச்சிடுக்குகள் மர்மமானவை; இலக்கிய ஆக்கங்களுகான வேர் கொண்டவை. ஏனோ, அவளால் இயலாமல் ஆயிற்று.

உடலியல் சோர்வைப் புறந்தள்ளி உற்சாகமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சக்திவேலை சகநண்பனாய் வாழ்த்துகிறேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்.

 

முந்தைய கட்டுரைகதைகளை நினைக்கையில்…
அடுத்த கட்டுரைபத்திபிரித்தல்