குமரப்பாவும் மொண்ணைப்பொருளியலும்

மொண்ணைச்சிந்தனை என ஒன்று உண்டு. எந்த அடிப்படைப் புரிதலும் இல்லாமல் எதையாவது வாசித்து தன்னம்பிக்கையுடன் எதையாவது பேசுவது, எழுதிவைப்பது. அப்படிப்பட்ட கட்டுரைகளில் ஒன்று தமிழ் ஹிந்துவில் வந்த ஜே.சி.குமரப்பா இன்றும் ஏன் தேவைப்படுகிறார்? காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பேராசிரியர் வ.ரகுபதி, என்பவர் எழுதியிருக்கிறார்.

ஜே.சி.குமரப்பா எனக்கு எப்போதுமே ஆர்வமூட்டும் மெய்யான பொருளியல் சிந்தனையாளர். ஆகவே அக்கட்டுரையை படித்தேன். ஒருவரி என்னை எரிச்சலின் உச்சத்துக்கே கொண்டுசென்றது.  “ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் இந்தியர்கள் போதிய உணவின்றிப் பட்டினியில் சாகின்றனர் என்ற தகவல்களும் வருகின்றன”.

ஆமாம்,இன்றைய இந்தியாவில்! ஆண்டுக்கு 25 லட்சம் பேர், கால்கோடி மனிதர்கள், பட்டினியால் சாகிறார்களாம்! இது உண்மையென்றால் உலகிலேயே அதிகமானவர்கள் பஞ்சத்தில் சாகும் நாடு இந்தியாதான். எத்தியோப்பியப் பஞ்சம், உகாண்டாப் பஞ்சமெல்லாம் இதைவிடச் சிறியவைதான். என்ன ஒரு கணக்கு! இதன்படி இந்தியாவில் சுதந்திரத்திற்குப்பின்பு மட்டும் பதினைந்துகோடிபேர் பட்டினியால் செத்திருக்கிறார்கள். இதைத்தான் புள்ளிவிபரம் என நம் தலையில் இவர்கள் கட்டுகிறார்கள்.

இந்த மொண்ணைச் சிந்தனையாளர் ஏதோ சில பாடநூல்களை புரட்டி இந்த வாந்தியை எடுத்திருக்கிறார். தரவுகள் என மேடைப்பேச்சு செய்திகளை தட்டிவிடுகிறார். அல்லது ஒருவேளை ஏதாவது அரைவேக்காட்டு வெள்ளையன் அமெரிக்காவிலிருந்துகொண்டு ஆராய்ச்சி செய்து இந்த ‘உண்மையை’ கண்டுபிடித்தானோ என்னவோ.

காந்தியும், குமரப்பாவும் கள ஆய்விலிருந்து மட்டுமே சிந்தனை செய்தவர்கள். இந்தப்பேராசிரியர்கள் தங்கள் வீட்டிலிருந்து கல்லூரி செல்வதற்கு அப்பால் வெளியுலகையே அறியாதவர்கள். கல்லூரி வகுப்புக்காக, பல்வேறு நிதியுதவிகளுக்காக, கருத்தரங்குகளுக்காக வாழ்நாள் முழுக்க ஒரே ஆரம்பநிலைக் கட்டுரையை முடிவில்லாமல் திருப்பித்திருப்பி எழுதுவதற்கு அப்பால் ஏதுமறியாதவர்கள். காந்திய சிந்தனையின் தலையெழுத்து.

வெறுமே ஒரு காரில் இந்தியாவைச் சுற்றிவந்தாலே தெரியும் காட்சிவடிவ உண்மை ஒன்று உண்டு, இந்தியாவில் பட்டினி மறைந்துவிட்டிருக்கிறது. இன்று இந்தியாவின் அனேகமாக எல்லா மாநிலங்களிலும் இலவச தானியம், அல்லது ஒரு ரூபாய்க்கு உணவுத் தானியம் ரேஷனில் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் எல்லா மாநிலங்களிலும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. எங்குமே அடிப்படை உணவுத்தேவை இல்லை. இந்தியாவின் உபரி தானிய உற்பத்தி இந்தியாவெங்கும் இலவச தானியம் அளிக்கப்பட்டபின்னர் மிஞ்சுவது.

இன்று ஒருவர் ஒருநாள் வேலைசெய்தால் இந்தியாவில் எந்த இடத்திலும் குறைந்தபட்சம் 300 ரூ கூலி உள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 1500 ரூபாய். கேரளத்தில் 1000 ரூபாய். தமிழகத்தில் 700 ரூபாய். பிகாரிலும் வங்கத்திலும் தான் ஆகக்குறைவு. அந்த 300 ரூபாயிலேயே ஐந்துபேர் கொண்ட குடும்பத்திற்கு ஒருவாரத்திற்கு தேவையான ரேஷனை வாங்கிவிடமுடியும் ஒரிசாவில் அரிசி மட்டுமல்ல பருப்பும் இலவசம்!

இந்தச் சாதனை நரசிம்மராவ் காலம் முதல் சீராக கொண்டுவரப்பட்ட பொருளியல் சீர்திருத்தங்களின் விளைவு. தொழில்துறை வரிகள் கூடுகின்றன. அந்நிதியால் அரசு உபரி தானியத்தை கொள்முதல் செய்து ரேஷனில் இலவசமாக, அல்லது கிட்டத்தட்ட இலவசமாக ,அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் இதை நரசிம்மராவின் சாதனை என்றே காண்கிறேன்

திரும்பத்திரும்ப இந்தியாவில் அலைந்துகொண்டிருக்கிறேன். செல்லுமிடமெல்லாம் அடிப்படைச் செய்திகளை நேரில் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இங்கே ’இடதுசாரிகள்’ கூசாமல் புள்ளி விவரங்களை எடுத்துவிடுகிறார்கள். ஒரு சராசரி இந்தியனின் ஒருநாள் வருமானம் 12 ரூபாய் என்று ஒர் இடதுசாரி பேச்சாளர் நேற்று பேசக்கேட்டேன். இந்தியாவில் ஆண்டுவருமானம் 12000 ரூபாய்க்கு குறைவாக வாழ்பவர்கள் 70 கோடிபேர் என்று இன்னொருவர் முழங்குகிறார். இதுவும் அதேபோன்ற ‘தரவு’தான் ஆண்டுதோறும் 25 லட்சம் பேர் இந்தியாவில் பட்டினியால் சாகிறார்களாம்! இந்த கேனப்பொருளியலை செவிபுளிக்க கேட்டுக்கொண்டிருக்கிறோம்

பட்டினி அகன்றிருக்கிறது, ஆனால் வறுமை அகன்றிருக்கிறதா? வறுமையின் இலக்கணம் மாறியிருக்கிறது. இன்றைய வறுமை என்பது உணவு,ஆடை ஆகியவற்றில் இல்லை. செயற்கைத்துணி உற்பத்தி ஆடைத்தேவையை தீர்த்துவிட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் சிற்றூரில்கூட நூறுரூபாய்க்குள் விற்கப்படும் ஆடைகள் குவிந்துகிடப்பதை கண்டிருக்கிறேன்.

இன்றைய வறுமை குடியிருப்பில் உள்ளது. கணிசமானவர்கள் இன்றும் மிகச்சிறிய, வசதியற்ற இல்லங்களில் குடியிருக்கிறார்கள். ஆனால் சென்ற சில ஆண்டுகளில் பிகாரின் மிகப்பிற்பட்ட கிராமங்களில்கூட சிறிய கான்கிரீட் வீடுகள் அரசு நிதியுதவியுடன் ஏராளமாக உருவாகி வந்திருப்பதை காண்கிறேன். பரிதாபமான குடிசைகள் இருப்பது நகர்ப்புறங்களிலேயே.

தூய்மையான சூழல் உரிய மருத்துவ வசதிகள் ஆகியவற்றில் வடஇந்தியாவில், குறிப்பாக பிகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் போன்ற பிற்பட்ட மாநிலங்களில் பெரிய குறைபாடு உள்ளது. உத்தரப்பிரதேசம் பிகார் மேற்குவங்கம் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசுப் போக்குவரத்துவசதி மிகக்குறைவு.

மையநில மாநிலங்களில் மிகக்கடுமையான புரோட்டீன் பற்றாக்குறை உள்ளதை குழந்தைகளைப் பார்த்தால் காணலாம். அவர்கள் பால், ஊனுணவு மிகக்குறைவாகவே உண்கிறார்கள். தென்மாநிலங்களிலுள்ள பால்புரட்சி, பிராய்லர் புரட்சி அங்கில்லை. அவர்களின் மதநம்பிக்கைகளும் ஊனுணவுக்குத் தடையாகின்றன.

ஜார்கண்டின் மலைப்பகுதிகள், பிகார் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் உட்பகுதிகளில் பள்ளிக்கல்வி முறையாக இல்லை. தனியார் பள்ளிகள் பெருகி நடுத்தர வர்க்கத்தினர் அங்கே செல்கின்றனர். ஏழைகளுக்கான அரசு பள்ளிகள் சீரழிந்த நிலையில் உள்ளன. பல பள்ளிகளில் ஆசிரியர்களே இருப்பதில்லை. உள்ளூரில் எவரையாவது வேலைக்கு வைத்துவிட்டு ஆசிரியர்கள் நகரங்களில் இருந்துவிடுகிறார்கள்.

இந்தியா முழுக்க பார்க்கக்கிடைக்கும் ஒரு விஷயம், கிராமங்களில் விவசாயம் தவிர வேறு தொழிலே இல்லை என்பதுதான். கிராமங்களில் நிகழ்ந்த நெசவு, மரவேலை, இரும்புவேலை போன்ற நூற்றுக்கணக்கான தொழில்கள் தொழிற்சாலைகளுக்குச் சென்றுவிட்டன.

மறுபக்கம் விவசாயமும் அதிகமாக வேலைவாய்ப்பை அளிக்கும் இடத்தில் இல்லை. சென்ற நூற்றாண்டுபோல இன்றைய விவசாயக்கூலிகளுக்கு உணவும் குடிலும் போதாது. அவர்களுக்கு இன்றைய வாழ்க்கை கோரும் தேவைகள் பல. அதற்குரிய வருமானம் தேவை. அந்த ஊதியத்தை விவசாயத்தொழிலில் இருந்து அளித்தால் விவசாயம் நஷ்டமடையும்.

ஆகவே இந்தியாவெங்கும் விவசாயத்தில் இயந்திரங்கள் வந்துவிட்டன. கங்கைவெளி வயல்களெங்கும் டிராக்டர்கள்தான். இமாச்சலப்பிரதேச மலைச்சரிவு விவசாயத்திலேயே ஓரளவு மக்கள் உழைப்பு தென்படுகிறது. விளைவாக கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற நேரிடுகிறது. தொழில் மற்றும் நகர்ப்புற கட்டுமானத்துறைக்கு கூலியாட்களின் தேவை ஏராளமாக உள்ளது

இவ்வாறுதான் இந்திய நகரங்கள் உப்பிப்பெருக்கின்றன. மாபெரும் சேரிப்பகுதிகளாக ஆகின்றன. எந்த வசதியும் இல்லாமல் புழுக்களைப்போல மக்கள் வாழ்கிறார்கள். இந்த வாழ்வில் அவர்களுக்கு எந்த கொண்டாட்டமும் இல்லை. மதம், பண்பாடு சார்ந்த எல்லா கொண்டாட்டங்களும் இடம்பெயர்கையில் மறைந்துவிடுகின்றன. அந்த இடத்தை குடி எடுத்துக்கொள்கிறது. குடியால், பலவகை போதைகளால் மட்டுமே நகர்ப்புற புலம்பெயர் தொழிலாளர்கள் அந்தவாழ்க்கையைத் தாக்குப்பிடிக்கிறார்கள்.

வடஇந்தியக்கிராமங்களுக்குச் சென்றால் எங்கும் மக்கள் நிகழ்த்தும் பஜனை ஒலித்துகொண்டே இருப்பதைக் கேட்கலாம். அது ஓர் உச்சம் என்றால் ஜாத்ரா என்ற கேலிக்கூத்து நிகழ்ச்சி இன்னொரு எல்லை. அந்த கேளிக்கைகளை நகர்ப்புறத்தில் காணமுடியாது. அந்த வெறுமை உழைப்பாளர்களை வெற்றுவாழ்க்கையை வாழச்செய்கிறது

இதுதான் இன்றைய ‘இந்திய வறுமை’ இதை என்ன செய்வதென்றே இங்கே பொருளியலாளர் சொல்லவேண்டும். அதற்கு மிக அதிகமாக பங்களிப்பாற்றக்கூடியவர்கள் குமரப்பாவின் வழிவந்தவர்கள். ஆனால் அவர்கள் 1940களின் புள்ளிவிவரங்களில் இருந்து வெளிவரவில்லை. இன்றைய இந்திய வறுமை நகர்ப்புறத்தின் செறிவு, வீழ்ச்சியுமே ஒழிய கிராமங்களில் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும் ‘கண்ணுக்கே தெரியாத’ கால்கோடிபேர் அல்ல.

இதெல்லாம் எவருக்கும் சும்மா சென்று பார்த்தாலே தெரியும் நடைமுறை உண்மைகள்.நான்கு பாடநூல்களையும் அரைவேக்காட்டு வெள்ளையர்களின் ‘ஆய்வேடுகளை’யும் புரட்டிப்பார்த்து இந்தியாவில் ஆண்டுக்கு இருபத்தைந்து லட்சம்பேர் பட்டினியால் சாகிறார்கள் என எழுதுபவர்கள் உண்மையில் பிரச்சினைகளில் இருந்து பார்வைகளை திசைதிருப்புகிறார்கள். எந்த அடிமுட்டாளுக்கும் இவர்கள் எழுதுவது அபத்தம் என்று தெரியும். அதை எவரும் பொருட்படுத்தவும் மாட்டார்கள். பிறகென்ன?

அனைத்துக்கும் மேலாக மக்களின் மனநிலையில் உள்ள வறுமையை சுட்டிக்காட்டவேண்டும். பெரும்பாலான இந்திய கிராமவாசிகளுக்கு தூய்மை பற்றிய பிரக்ஞையே இல்லை. கிராமங்கள், தெருக்கள் குப்பைமலைகளாலானவை. ஆண்களில் பெரும்பாலானவர்கள் ஏதேனும் போதைக்கு அடிமையானவர்கள். தெற்கே குடி, வடக்கே மாவா. ஆகவே சேமிக்கும் வழக்கம் அடித்தளங்களில் அனேகமாக இல்லை. கணிசமானோர் குழந்தைகளை படிக்கவைப்பதில்லை. அக்கறையே காட்டுவதில்லை

இதெல்லாம்தான் இந்தியா சந்திக்கும் சவால்கள். இச்சவால்களை எதிர்கொள்ளும்படி அரசையும் மக்களையும் செலுத்துவதே பொருளியலறிஞர்கள் செய்யவேண்டியது. ஆனால் இங்கே பொருளியல் பேசுபவர்கள் இதைப்போல கேனப்பொருளியலாளர்களாக உளறிக்கொண்டிருக்கிறார்கள்.

முந்தைய கட்டுரைபுத்தாண்டு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசின் வாசகர்களை கணக்கிடுவது…