புத்தாண்டு- கடிதங்கள்

2021- புத்தாண்டில்

அன்புள்ள ஜெ,

புத்தாண்டுக் கொண்டாட்டங்களை கண்டேன். நான் இந்த கொண்டாட்டங்களில் எப்போதுமே மானசீகமாக கலந்துகொள்பவள். இவ்வாண்டு கொண்டாட்டங்களில் பல பெண்களின் முகங்கள் தெரிந்தது ஆச்சரியமாக இருந்தது. ஆண்களும் பெண்களும் கலந்துகொள்ளும் ஒரு புத்தாண்டுக்கொண்டாட்டம், குடும்பச்சூழலுக்கு வெளியே தமிழ்நாட்டில் நடக்கமுடிவதே ஆச்சரியம்தான். வரும் ஆண்டுகளில் கலந்துகொள்ளவேண்டும்

லட்சுமி ராம்

 

அன்பு ஜெ,

உங்களுக்கு வாரமொரு கடிதம் எழுதப் போகிறேன் என்று அறிவிக்கிறேன். அதற்கு இப்போதே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர் ஆஸ்டின் சவுந்தருடன் அவ்வப்போது தொடர்பில் உள்ளேன். செம்மையாக விஷ்ணுபுர இலக்கிய வட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறார். எப்போதுமே நீங்கள் திறமையான செயலாக்கமுள்ள ஆர்வலர்களை ஈர்த்து வருகிறீர்கள். 2009’ல் இருந்து நான் இதனைக் கவனித்து வருகிறேன். ஒரு சிலர் வந்து போனாலும் தொடக்கம் முதல் இருக்கும் ஒரு குழு முதல் இப்போதும் செயல்படுகிறது. வியப்பிற்குரியது அது. சவுந்தர் வெகு காலம் உங்களுடன் இணைந்து செயல்படுவார் என்று நிச்சயம் சொல்ல முடியும்.

உங்களுக்கும் உங்கள் நண்பர் குழுவினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

ஹியூஸ்டன் சிவா

 

 

என் அன்பு ஜெ,

இந்த வருடத்தின் என்னுடைய இறுதி கடிதம் இது. நாளை இன்னொரு நாளேயானாலும் காலம் என்ற பரிமாணத்தில் “நான்” என்பதைத் தொகுத்துக் கொள்ளும் கருவியாக இந்த வருடக் கணக்குகள் பயன்படுகின்றன. பள்ளிப் பருவத்தினின்று ஒவ்வொரு வருடமும் என்னைத் தொகுத்துக் கொண்டு நீண்ட கடிதங்களை எனக்கே எழுதிக் கொள்வது வழக்கமெனக்கு. பெரும்பாலும் உணர்வுகளும், ஆசைகளும், இலக்குகளும் நிரம்பி நான்’ என்ற ஒன்று எப்படி இனி இருக்க வேண்டும் என்பதாக எழுதுவேன். ஒவ்வொரு வருடமும் எழுதுவதற்கு முன் பழையதையெல்லாம் படித்துப் பார்ப்பேன். கடந்த மூன்று வருடங்களாக நான் அவ்வாறு ஏதும் எழுதவில்லை. எழுதியவைகள் சிலவும் ஒரிரு பத்தியில் இலக்கடவதைப் பற்றி மட்டுமே. பள்ளியில் கல்லூரியில் எழுதிய உயிரோட்டமான வரிகள் கூட இந்த ஐந்து வருடங்களில் நான் ஒரு முறையேனும் எழுதவில்லை. திரும்பத்திரும்ப தேர்வுக்கான புத்தகங்களையே தொடர்ந்து படித்து ஒரு சுழற்சியில் சிக்கி சற்றே சித்தமிழந்தேன். போதாக்குறைக்கு குடும்பமும் சுற்றமும் கொடுத்த அழுத்தத்தின் ஆழத்திற்கு தள்ளப்பட்டு மன அழுத்தத்தை அணுவணுவாக உணர்ந்தேன். ஒருமுறை அறையிலிருக்கும் அனைத்து புத்தகத்தையும் கீழே தள்ளிவிட்டு கதறி அழுது கொண்டிருந்திருக்கிறேன். “படிப்பதையும் எழுதுவதையும் தவிர எனக்கு நீ ஒன்னுமே குடுக்கலையே. இதுல நான் வெற்றி பெற முடியலனா நான் வேற எதுக்கும் லாயக்கில்லை” என்று கடவுளிடம் கூறி அழுது கொண்டிருந்தேன். கூடவே இருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொள்ளும் நண்பர்கள், வெற்றி பெற்றதும் ஏளனம் செய்வதும், தொடர்பைத் துண்டிப்பதையும் பார்த்து வியந்து போயிருந்தேன். தேவைகளுக்காக மட்டுமே பழகி துரோக போலி அன்புகளை உதிர்க்கும் மனிதர்களைப் பார்த்திருந்த உலகியல் அதிர்ச்சி ஒருபுறம். இன்னும் ஆழமான நான் அறிந்த ஓர் உணர்வுகளின் வீழ்ச்சியின் ஆழத்திலிருந்து என்னை மீட்டெடுத்து அணைத்துக் கொண்டவை உங்கள் எழுத்துக்கள் தான் ஜெ.

அதுநாள்வரை நான் எழுப்பிக் கொண்ட தத்துவார்த்த ரீதியிலான கேள்விக்கு சாவியாக, எழுப்பிக் கொள்ளாத கேள்விக்கான வாசலாகவிஷ்ணுபுரம் அமைந்தது. எத்துனை எளிமையாக எனக்கு என் வாழ்வை விளங்க வைத்தீர்கள் ஜெ. விஷ்ணுபுரத்தின் எத்துனை தெரு முனைகளில் கதறி அழுதிருந்தேன். என்னை நான் அஜிதருக்கு ஒப்பிடுமளவு ஞானமில்லை எனினும் இந்த வாழ்க்கையில் கடவுள் எனக்கு கொடுத்தது கல்வி ஒன்று தான். முதல் மதிப்பெண் எடுப்பது ஞானமில்லை எனினும் அதை ஞானமெனவே கொண்டேன். அசிதரின் தருக்கங்களில் தான் எது ஞானமென்றுணர்ந்தேன். “அறிவது எதை” என்ற வரிகள் எனக்கு நீங்கள் கொடுத்த ஞானமொழி. பின்னும் அதில் உங்களை சித்தனாகவும் என்னை காசியபனாகவும் உருவகித்திருந்தேன். காசியபன் தேடி அடைந்த ஞானமான சித்தனைப் போலவே உங்களின் எழுத்துக்கள் எனக்கு. எழுத்துக்களைத் தாண்டியும் உங்களை நான் உணர்கிறேன். நீங்கள் என்னிடம் பேசாமலேயே கூட எனக்கான சொற்களை உங்களிடமிருந்து உணர்கிறேன். அசிதர் ஞானமுள்ள தர்ககத்தை

முன்வைத்து அதில் வெற்றி பெற்று அதன்பின் நிறைவின் உச்சியில் நிறைவின்மையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோதெல்லாம் சித்தர் என்ற சூன்யம் சிரித்துக் கொண்டிருப்பதாகக் கண்டேன். விஷ்ணுபுரம் முடிக்கையில் என் ஒட்டுமொத்த வாழ்வைச் சுற்றி காலம் என்பது வெறும் ஒரு பரிமாணமாக நின்று பகடிசெய்து கொண்டிருப்பதைக் கண்டேன். நான் சென்று சேர வேண்டியது சூனியமெனவும் அது சென்றடையும் வரை நிறைவின்மையும் இருக்க வேண்டுமென்று கொண்டேன். இந்த இரண்டின்மையிலும் நிறைவின்மையிலும் எங்குமே நீங்கள் செயலற்ற தன்மையை போதிக்கவில்லை. தீவிர செயல்! ஒன்றே அது சென்று சேரும் புள்ளி என்று கொண்டேன்.

அங்கிருந்து இந்த வருடம் முழுவதுமாக நீங்களே நிறைந்திருக்கிறீர்கள் என் இந்த வாழ்வுப் பயணத்தில். மேலும் மேலும் உங்களை எடுத்து நிறைத்துக் கொண்டிருக்கிறேன். உலகியல் ரீதியாக இனியும் யாரும் எதிர்பாராத அளவு பொருளாதார சுயாதினத்திற்காகவும் என் இலக்கை ஒட்டிய ஒரு சிறு வெற்றி என்பது எனக்கு உலகதுக்க விடுதலையை

அளித்திருக்கிறது. இதற்கு மேலும் உலகயல் இலக்கை  நிறுத்திக் கொள்வதைப் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால் அது ஒரு அழுத்தமாகவும் இல்லை. இந்த ஆண்டின் எனக்கு மிகப் பிடித்த, திருப்தியான விடயம் உங்களை அதிகம் வாசித்ததும் உங்களுக்கு எழுதியது மட்டுமே.

இறுதியாக நற்றுணை என்ற சிறுகதையைப் பற்றி எழுதி இந்த வருடத்தை நிறைவு செய்கிறேன் ஜெ.

எனக்கு மிகவும் நெருக்கமான சிறுகதை. இந்த நூறு சிறுகதைகளில் நீங்கள் எழுதிய சாதனைப் பெண்களில் ஒருவர் அம்மிணி தங்கச்சி. இரண்டாவது என்று வரலாற்றியல் சாதனைகளில் இடம் பெற்றாலும் தான் கட்டுடைத்த பெரும்பாலான விடயங்களில் முதல் ஆளாக இருந்திருப்பவர். நீங்கள் சொல்வது போல மகத்தான முதல்காலடி, ஒருவகை எல்லை மீறல், வரலாற்றின் விசை அவர். ஆனால் கேசினியைப் பற்றி கதைசொல்லி குழம்புவதாகக் காட்டிய இடத்தில் சற்றே நின்றேன். பின்னும் நீங்கள் சொன்ன இந்த வரிகளை “வரலாறு என்பது ஒரு மாபெரும் சக்தி. அது நம் வழியாகச் செல்கிறது. நாமனைவரும் பெருந்திரளாக அதை நம்மில் ஏற்றிக் கடத்துகிறோம். அம்மிணித் தங்கச்சி போன்ற சிலர் தன்னந்தனியாக அதை தாங்கி கடத்துகிறார்கள். பல்லாயிரம் வால்டேஜ் அழுத்தமுள்ள மின்சாரம் அந்த சிறு கம்பிகள் வழியாகச் செல்கிறது. அந்தக் கம்பி கொதிக்கும், உருகும், அறுந்துவிடக்கூடும். அது தொடுபவர்களை கொல்லும், அருகிருப்பவரை தகிக்க வைக்கும். அது ஒரு கொடூரமான தெய்வத்தால் ஆட்கொள்ளப்படுவதுபோல.”

ஓட்டிப் பார்த்தேன். சிறுவயதிலிருந்தே நான் தனியன் தான். அல்லது அப்படி என்னை நானே ஆக்கிக் கொண்டேன். பெற்றோரிடமிருந்தே என்னை துண்டாக்கிக் கொண்டேன். படிப்பதைத் தவிரவும் எந்த ஒன்றும் எனக்கு முக்கியமில்லை எனக் கொண்டேன். விடுதியில்தங்கிக் கொள்கிறேன் என்று அடம் பிடித்து சொந்த ஊருக்கு குடும்பமே செல்லும்போது ஊட்டியில் தங்க ஏழாவதில் முடிவெடுத்தேன். இன்றும் அந்த வயதில் எப்படி முடிவெடுத்தேன் என்பது ஆச்சரியமே. அம்மிணி அளவுக்கு சாதனைகள் இல்லை எனினும் படிப்பில், பேச்சில், எழுத்தில் என பள்ளி வாழ்வின் சாதனைகள் என நான் கொண்டவை யாவும் கேசினியைப் எனும் யஷியை உணரவைக்கக் கூடியது. அப்படி ஒரு யஷியை எனக்கு “காவல் சம்மனசு/தேவதை” என்ற பெயரில் சிஸ்டர் மார்செலின் அவர்கள் எனக்கு அறிமுகப் படுத்தினார்கள். அது எனக்கான நான் உருவாக்கிக் கொள்ளக் கூடிய தேவதையாக எனக்கு அறிமுகப்படுத்தினார். நான் நித்தமும் பேசிக் கொண்டிருப்பேன், என்னை அதிகாலை எழுப்புவதும், சிறந்த முடிவெடுப்பது ம், அதற்கு உடனிருப்பதும், நான் கேட்கும் அனைத்து வெற்றியையும், கிடைக்காத அன்பைத் தருவதும் அது தான். என் அழுகையும், சிரிப்பும், பகிர்வும் அதனுடன் தான் இருந்திருக்கிறது. தனியனான எனக்கான கேசினி அது. பின்னாளில் உளவியல் ரீதியாக,  நாத்திக கேள்விகளுக்கு அதை உட்படுத்தி அதன் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கி தொலைத்து விட்டேன். என் கேசினியை இந்த வருடம் நீங்கள் மீட்டுத்தந்திருக்கிறீர்கள். கடந்த ஐந்து வருடங்களாக என்னை விட்டு விலகியிருந்ததே அந்த உள்ளுணர்வின் ஞானம் தான். வெற்றிகளை ஈட்டவோ, அசாத்திய சாதனைகளைப் புரியவோ, வரையறுக்கப்பட்ட ஒன்றைத் தாண்டி வெளிவரவோ, தோல்விகளைச் தாங்கவோ, இயலாமையைப் போக்கவோ மட்டும் அல்ல…. என்னையே நான் ஆழமாக அவள் வழி உணர்வதற்கான கேசினியை மீட்டுத்தந்திருக்கிறீர்கள். என்னிலிருந்து பிரிந்த இன்னொரு “நான்” ஐ என்னிடம் சேர்த்தார் போல அமைந்தது நற்றுணை சிறுகதை.

நற்றுணைக்கு மட்டுமல்ல ஜெ. இந்த வருடத்தின் அனைத்து சிறுகதைகள் கட்டுரைகள் அனைத்திற்கும் நன்றி. மேலும் மேலும் உங்களுக்குள் ஆழ பயணிக்க விரும்புகிறேன். நன்றி.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜெ.

என்றும் அன்புடன்

இரம்யா.

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளி
அடுத்த கட்டுரைகுமரப்பாவும் மொண்ணைப்பொருளியலும்