2021- புத்தாண்டில்

சென்ற புத்தாண்டு அட்டப்பாடியில் சத் தர்சன் அமைப்பில் நடைபெற்றது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஈரட்டியில். இவ்வாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டம் தேவையா என்னும் எண்ணம் இருந்தமையால் ஒத்திப்போட்டுக்கொண்டே வந்து இறுதியில் சரி கொண்டாடுவோம் என முடிவெடுத்தோம். கொண்டாடும் தருணங்கள் எதுவாக இருந்தாலும் எதன்பொருட்டும் ஒத்திப்போடவேண்டாம் என்று நானே பலமுறை எழுதியிருக்கிறேன்.

ஆனால் ஈரட்டி மாளிகை ஏற்கனவே இன்னொருவருக்கு அளிக்கப்பட்டுவிட்டது என்று நண்பர் விஸ்வம் சொன்னார். ஆகவே கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நண்பர் பாலுவின் பண்ணைவீட்டில் நடத்தலாம் என்று முடிவெடுத்தோம். கோவையிலிருந்து ஒருமணிநேரத்தில் சென்றுவிடலாம் என்பது வசதி. அங்கே இருபதுபேர் தங்கமுடியும். ஆகவே இருபதுபேருக்கு மட்டும் நண்பர் கிருஷ்ணன் தகவல் சொன்னார். ஆனால் முப்பத்தைந்துபேர் வந்துவிட்டனர். திருச்சி, ஈரோடு,சென்னை,பெங்களூர் என பல ஊர்களிலிருந்து.

பெரியநாயக்கன் பாளையம் பண்ணைவீடு முப்பத்தைந்துபேருக்கு கொஞ்சம் நெரிசலானதுதான். ஆனால் உண்மையில் அசௌகரியமாக நெருக்கிக்கொண்டு இரவு படுத்திருக்கையில் உருவாகும் ஒரு நெருக்கமும் கொண்டாட்டமும் சிறப்பானவை. சென்ற ஆண்டுகளை விடவும் இவ்வாண்டு சிரிப்பும் கும்மாளமும் கூடுதலாக இருந்தன.

வேதசகாயகுமார் விழா முடிந்தபின் டி.பாலசுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில் அனைவருக்கும் காஸ்மாபாலிடன் கிளப்பில் மதிய உணவு ஏற்படு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து நேராக பெரியநாயக்கன் பாளையம் பண்ணைக்குச் சென்றுவிட்டோம். நண்பர்கள் பலர் மாலையில் வந்தனர். அந்திவரை வந்துகொண்டே இருந்தனர்.

பொதுவாக இத்தகைய புத்தாண்டில் ‘நிகழ்ச்சிநிரல்’ என எதுவும் வைத்துக்கொள்வதில்லை. உரையாடலை அதன்போக்கில் செல்லவிடுவோம். ஆனால் அரசியல் சினிமா சார்ந்து செல்லவிடாமல் கலை, இலக்கியம், ஆன்மிகம் சார்ந்து அவ்வப்போது திருப்பிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அரசியல் சார்ந்து கொஞ்சம் நகர்ந்தால்கூட பெண்கள் சலிப்படைய தொடங்கிவிடுவார்கள். அது நல்லதுதான், அவர்கள் ஒருவகை கண்காணிப்பு சக்தி

இரவு பன்னிரண்டு மணிவரை உரையாடல்தான். இலக்கியம் அல்லது ஆன்மிகம் சார்ந்து ஒரு மணிநேரம் தீவிரமான உரையாடல் என்றால் அடுத்த ஒருமணிநேரம் நையாண்டி, சிரிப்பு, கொண்டாட்டம். செல்வேந்திரனும் அரங்கசாமியும் கொப்பளித்துக்கொண்டே இருப்பவர்கள். ஆனால் வேடிக்கையில் ‘டெவில்’ என அழைக்கப்படுபவர் திருச்சி நண்பர் சக்தி கிருஷ்ணன்.இம்முறை அவர் வரவில்லை.

இரவு 12 மணிக்கு நானும் செல்வேந்திரனின் பாப்பா இளம்பிறையுமாக கேக் வெட்டினோம். புத்தாண்டின் முதல் இனிமையை மாறி மாறி ஊட்டிக்கொண்டோம். இது ஒரு மேலைநாட்டுச் சடங்கு. இதுவரை எந்த முன்னேற்பாடும் இல்லாமல்தான் இந்நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியே முதல்முறை. அடுத்த ஆண்டு முதல் இதையே ஒரு நல்ல நிகழ்ச்சியாக முறைப்படுத்திவிடவேண்டும். எவரேனும் முக்கியமானவர்கள் விளக்கேற்றி வைத்து தொடங்கலாம்

அது ஆங்கிலப்புத்தாண்டு என்பதனால் வேண்டுமென்றால் கேக்கையும் வெட்டிக்கொள்ளலாம். எதுவுமே விலக்கு அல்ல, எதுவுமே அயலானவையும் அல்ல. நல்லவை எவையும் வருகைக்குரியவைதான். அவ்வாறுதான் இங்கே எல்லா சடங்குகளும் உருவாகிவந்திருக்கின்றன.

இம்முறை விஷ்ணுபுரம் அமைப்பின் நண்பர்கள் பலருக்கு திருமணம் ஆகியிருக்கிறது. நண்பர் ராகவ், நண்பர் யோகேஸ்வரன், நண்பர் திருமூலநாதன். திருமூலநாதன் அவருடைய புதுமனைவியுடன் வந்திருந்தார்.

நள்ளிரவில் புத்தாண்டை தொடங்கிவைத்து நான் பத்து நிமிடம் பேசினேன். அதன்பின் மூன்றரை மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். காலை ஆறுமணிக்கே நண்பர்கள் எழுந்து குளத்தில் நீராடக் கிளம்பிவிட்டார்கள். ஏழரை மணிக்கு மீண்டும் ‘ஜமா’ சேர்ந்துவிட்டது.என் இளம்வயது நண்பனும் ‘அடிபிடி’ கூட்டுகாரனுமாகிய கே.விஸ்வநாதனின் மகன் ஜெயராம் இப்போது என் வாசகன். சிலநாட்களாக என்னுடன் அவனும் இருக்கிறான். அவன் ஓவியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன்.ஆகவே ஓவியக்கலை பற்றி ஒரு பேச்சு முன்னகர்ந்தது

எனக்கு நுண்கலைகளின் பண்பாட்டுப்பங்களிப்பு- வரலாற்றுப் பரிணாமம் பற்றித்தான் தெரியும். அவற்றின் அழகியலைப் பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. அன்று இந்திய ஓவிய- சிற்பக்கலையின் பரிணாமம் பற்றிய விவாதம் நடைபெற்றது. திட்டமிடாத பேச்சு என்றாலும் நன்றாக அமைந்தது

திருமூலநாதன் கணிதத்துறையில் முனைவர் பட்டம் பெற்று கான்பூர் ஐஐடியில் பணியாற்றுகிறார். கவனகம் என்னும் அஷ்டாவதானக்கலை தேர்ந்தவர்.ஒரே சமயம் எட்டு விஷயங்களை நினைவில் வைத்துக்கொண்டு நிகழ்த்துவது அது.அதை நிகழ்த்தினார்.நேரில் பார்க்கையில் திகைக்கவைக்கும் நினைக்கலை அது

கணவனின் அந்த திறனை மனைவி முதல்முறையாகப் பார்க்கிறார். அவர் திகைத்துப்போனது தெரிந்தது.  அஷ்டாவதானியின் மனைவி! அதற்கு அவர் தனிப்பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

மதியம் உணவுடன் கலைந்து செல்ல தொடங்கினோம். ஒவ்வொருவரும் தழுவி இன்சொல் உரைத்து உணர்வெழுச்சியுடன் விடைபெற்றனர். இந்த அமைப்பை இதுவரை ஒரு பெரிய குடும்பம் எனவே நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம். இவ்வாண்டு புதிய முயற்சிகளுடன் இது வளரவேண்டும்.

புத்தாண்டு2020
சிரிப்புடன் புத்தாண்டு
வெண்முரசும் புத்தாண்டும்
புத்தாண்டு, சத்- தர்சன் — கடிதங்கள்
ஈரட்டிப் புத்தாண்டு – கடிதங்கள் – 2

 

முந்தைய கட்டுரைதீபம்- போகன் சங்கர்
அடுத்த கட்டுரைவெண்முரசில் போர்க்கலை