இயற்கைப்பொருட்களின்மேல் மனிதன் தன் உடலையும் அர்த்தங்களையும் ஏற்றத் தொடங்கியபோது மொழி பிறந்தது. உணர்வுகளை ஏற்றத்தொடங்கியபோது கவிதை பிறந்தது. இரண்டும் ஒரு கண இடைவெளியில் பிறந்தன. எது முதலில் என்று சொல்லமுடியாது– நித்யாவின் உரையில் ஒரு வரி.
தொல்கவிதைகளை வாசிக்கையில் அவற்றின் முதன்மையான அழகியலென்பது மகிழ்ச்சி துயரம் எழுச்சி நிறைவு என்னும் மானுட உணர்வுகளனைத்தையும் இயற்கைமேல் ஏற்றுவதுதான் என்று படுகிறது. எமர்சன் அவருடைய கட்டுரை ஒன்றில் மானுட மொழி என்பதே இயற்கையின் பதிலீடு வடிவம்தான் என்கிறார். ஆகவேதான் உள்ளம் ’ஒளிர்கிறது’, நினைவு ‘இருள்கிறது’, சிந்தனை ’ஓடுகிறது’, ’படிப்படியாக’ நிகழ்கின்றன நம் எண்ணங்கள்.
சில தருணங்களிலேனும் கவிதை என்பது திரும்பத்திரும்பச் சொல்லுவதன் கலை என்று தோன்றுகிறது. சிறந்த கவிதை என்பது பெரும்பாலும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதுதான். பலமுறை. பலநூறுமுறை, பல்லாயிரம் முறை. அவ்வப்போது கவிஞர்கள் புதிதாகச் சொல்ல முயல்கிறார்கள். அவை வேறுபாட்டால் முரண்பாட்டால் மெல்லிய சுவை கொண்டிருக்கின்றன. எனக்கு அவை ஒவ்வாச்சுவையெனவே அமைகின்றன
என் கவிதையை மீண்டும் இப்படி வகுத்துக்கொள்கிறேன். ஆயிரம் முறை சொல்லப்பட்டபின்னரும் புதியதாகச் சொல்லப்படுவது. சொல்லச்சொல்ல மேலும் புதியதாக ஆகும் ஒன்றின் மொழிவடிவம்.