வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்

2020 ஆம் ஆண்டின் இறுதிநிகழ்ச்சி வேதசகாயகுமாருக்கான அஞ்சலி. கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள ஸிய்மா அமைப்பின் அழகிய சிறிய கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எண்பதுபேர் அமரலாம். ஆனால் நாற்பதுபேருக்கே அனுமதி. ஆகவே முன்னரே நிகழ்ச்சியை அறிவிக்கவில்லை. தளத்தில் மட்டும் ஓர் அறிவிப்பு போட்டோம். அணுக்கமான நண்பர்களே வந்திருந்தனர். 30 பேர்.

நானும் நண்பர்களும் யோகிஸ்வரனின் காரில் காஞ்சிகோயிலில் செந்தில்குமாரின் பண்ணைவீட்டில் இருந்து கிளம்பினோம். ஒன்பதரை மணிக்கு கோவையை சென்றடைந்தோம்.தொடர்ச்சியாக மழைத்தூறல் இருந்தது. நிகழ்ச்சி தொடங்கியதுமே மழை. ஒரு துயரநிகழ்வின் பின்னணியில் மழை அதை மேலும் ஆழ்ந்ததாக ஆக்கிவிடுகிறது.

நண்பர்கள் ஈரோட்டில் இருந்தும் கோவையிலிருந்தும் வந்து கூடினர். அரங்கு நிறைந்துகொண்டிருந்தது. அதுவரை நண்பர்களைச் சந்திப்பது ஓர் உற்சாகத்தை அளித்துக்கொண்டிருந்தது. பலரைச் சந்தித்து ஓராண்டு கடந்துவிட்டது. ஆனால் அரங்கின் முகப்பில் இருந்த வேதசகாயகுமாரின் முகம் அத்தனை உற்சாகத்தையும் அழித்து எடை ஒன்றை நெஞ்சில் ஏற்றி வைத்துவிட்டது.

வேலைநாள், முன்னரே அறிவிப்பு வெளியாகவுமில்லை என்பதனால் பலர் குறுஞ்செய்திகளில், அழைப்புகளில் வருத்தம் தெரிவித்துக்கொண்டே இருந்தனர். நினைவில் நின்றிருக்கும் கோவையின் நிகழ்ச்சிகள். நண்பர்களின் முகங்கள். வராத நண்பர்களின் முகங்களின் நினைவுகள்.

நண்பர் குவிஸ் செந்தில்குமார் விஷ்ணுபுரம் சார்பில் வரவேற்புரை சொன்னார். அவருக்கு வேதசகாயகுமாருடன் நெருக்கமில்லை. அவர் வேதசகாயகுமாரின் ஓருசில கட்டுரைகளையும் என் குறிப்புகளையும் வாசித்திருந்தார். ஆனால் எனக்கும் அவருக்குமான நெருக்கம் தெரியும்

நண்பர் ஈரோடு கிருஷ்ணன் வேதசகாயகுமார் போன்ற ஒருவர் நுண்ணிய அவதானிப்பால் எப்படி தன்னைப்போல ஒரு வாசகருக்கு அரிய வெளிச்சங்களை அளிக்கக்கூடும் என்று பேசினார். கால்டுவெல்லுக்கும் இரேனியஸ் அய்யருக்குமான ஒப்பீட்டினூடாக வேதசகாயகுமார் முன்வைத்த ஓர் அவதானிப்பிலிருந்து தொடங்கி நுண்ணிய பார்வைகள் ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கு எப்படி கடக்கின்றன என்று விளக்கினார்

நரேன் வேதசகாயகுமாரின் சிறுகதை அவதானிப்புகளைப் பற்றியும் ஜி.எஸ்.எஸ்.வி நவீன் வேதசகாயகுமாரின் புதுமைப்பித்தன் ஆய்வுகளைப்பற்றியும் பேசினார்கள். சுருக்கமான அஞ்சலி உரைகள். ஆத்மார்த்தமான, போலிப்பூச்சுக்கள் இல்லாத சுருக்கமான மதிப்பீடுகள் மூன்று உரைகளுமே

இந்நிகழ்வில் பேசியவர்களில் கிருஷ்ணன் மட்டுமே வேதசகாயகுமாரை 2010ல் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சியில் சந்தித்திருக்கிறார். பிறர் அவரை ஓர் அறிவியக்கவாதியாக மட்டுமே அறிந்தவர்கள். ஒருவகையில் அத்தகைய ஓர் அஞ்சலியே அவருக்கு அளிக்கப்படும் சிறந்த மறுகொடை என்று நினைத்துக்கொண்டேன்

நான் சுருக்கமாகவே பேசவேண்டும் என நினைத்தேன். ஆனால் பேசப்பேச நினைவுகள் பெருகின. அவருடைய ஆளுமை, அவர் கருத்துக்க்ளை முன்வைக்கும் முறை, அவருடைய கருத்துப்பரிணாமம் என்று அவ்வுரை பெருகிச் சென்றது. அதற்கு என் முன்னால் அமர்ந்திருந்த அத்தனை நண்பர்களும் எனக்குத்தெரிந்தவர்கள் என்பதே முக்கியமான காரணம்

இழந்த ஒருவரை சொல்லில் மீட்டுக்கொள்கிறோம். மறைவுகளின் போது துக்கம் விசாரிப்பது அதனால்தான். இழந்தவர்கள் இழக்கப்பட்டவரை சொல்லிச் சொல்லி மீண்டும் நிகழ்த்திக்கொள்கிறார்கள். மீண்டும் உயிர்ப்பிக்கிறார்கள். அவ்வாறு சொல்லில் எழுந்தவர்களுக்கு அதன் பின் சாவு இல்லை– நினைக்கப்படுவது வரை அவர்கள் வாழ்வார்கள்.

வேதசகாயகுமார் ஓர் அறிவியக்கவாதி. அவ்வாறன்றி வேறெவ்வகையிலும் அவர் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை. பிற எந்த அடையாளத்தையும் அவர் சூடிக்கொள்ளவில்லை. பேராசிரியர் என்றுகூட அவர் மேடையில் தன்னை முன்வைப்பதில்லை.முனைவர் பட்டத்தை போட்டுக்கொள்வதில்லை. அவர் அறிவியக்கம் என்னும் மாபெரும் சொல்வெளியின் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறார். அங்கே அழிவில்லாது வாழ்வார்

பேசி முடிந்ததும் விடுபட்டுவிட்டேன். முற்றிலுமாக. சிரிக்கவும் கேலிசெய்யவும் முடிந்தது. அதன்பின் வழக்கமான உரையாடல்கள், தழுவிக்கொள்ளல்கள். வேதசகாயகுமாரே ஏதோ வடிவில் உடனிருப்பதுபோல

முந்தைய கட்டுரைமுதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்
அடுத்த கட்டுரைநிறைவின்மையின் ஒளி