இந்திய சிந்தனை மரபில் குறள் 2

ஆ. குறள் என்னும் நீதிநூல்

கி.பி. ஒன்றாம் நூற்றாண்டுக்கும் மூன்றாம் நூற்றாண்டுக்கும் நடுவே , தமிழகத்தை சமணர்களான களப்பிரர்கள் ஆண்ட காலகட்டத்தில், திருவள்ளுவர் என்று சிறப்புப்பெயரால் குறிப்பிடப்படும் நூலாசிரியரால் இயற்றப்பட்ட திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் நீதிநூல்வரிசையில் முதன்மையானதாக நெடுங்காலமாகவே போற்றப்பட்டு வருகிறது.  தமிழர்களின் முதல்நூலாகவும் தமிழ்ப்பண்பாட்டின் கொடியடையாளமாகவும் குறள் முன்னிறுத்தப்படுகிறது. திருக்குறளைப்போன்ற ஒரு நூலை அவ்வாறு முன்னிறுத்துவது எந்த ஒரு சமூகத்துக்கும் பெருமையளிக்கக்கூடிய ஒன்றே.

மேலே குறிப்பிட்ட விவாதத்தில் குறள் என்ன சொல்கிறது?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்

எல்லா உயிர்களும் பிறப்புசார்ந்து நிகரானவையே. ஆனால் சிறப்பு என்பது அவ்வண்ணம் நிகரானது அல்ல. அது செய்யும் தொழிலால் வேறுபடுகிறது– என்பது இதன் நேரடிப்பொருள்.  இதற்கு பரிதியார் ‘நற்குலத்தாரவர் என்றதால் இழிதொழிலாலே இழிகுலமாவார் என்பதாம்’ என்று விளக்கம் அளிக்கிறார்.

இந்தக்குறளை கீழான தொழிசெய்பவர்கள் கீழானவர்கள் என்றோ கீழான தொழில்செய்யும் சாதிகளில் பிறந்தவர்கள் கீழானவர்கள் என்றோ பொருள்கொள்பவர்கள் சிலர் உண்டு.ஆனால் அடுத்த குறள் இன்னும் தெளிவான விளக்கத்தை இந்த பாடலுக்கு அளிக்கிறது. உண்மையில் இவ்விரு குறள்களையும் பிரிக்காமல்தான் பொருள்கொள்ள வேண்டும்.

மேல் இருந்தும் மேல் அல்லர் கீழ் இருந்தும்
கீழ் அல்லர் கீழ் அல்லவர்

மேன்மைகுணம் இல்லாதவர் சமூகத்தின் மேல்படிகளில் இருந்தாலும் மேலானவர்கள் அல்லர். சமூகத்தின் கீழ்ப்படிகளில் இருந்தாலும் கீழ்மைக்குணம் இல்லாதவர்கள் கீழானவர்கள் அல்லர். 

இக்குறளுக்கு பரிமேலழகர் ‘செயற்கரிய செய்யலாகாது சிறியராயினர் உயர்ந்த அமளி மிசை இருந்தாராயினும் பெரியார் ஆகார். அவைசெய்து பெரியராயினர் தாழ்ந்த வறுநிலத்து இருந்தாராயினும் சிறியார் ஆகார்’ என்று உரைகொள்கிறார். பிற உரையாசிரியர்களும் அவ்வண்ணமே உரைகொள்கிறார்கள்.செயல் மற்றும் தகுதி மூலம் மட்டுமே ஒருவரை மேல் கீழ் என்று அடையாளப்படுத்த முடியும் என்று குறள் தெளிவாகவே சொல்கிறதென்று கூறலாம்.

அதேபோல பிராமணர்களைப்பற்றி அல்லது பிராமணத்தன்மை பற்றி குறள் சொல்வதென்ன என்றும் பார்க்கலாம். அந்தணர் என்று குறள் சொல்வது பிராமணர்களை அல்ல என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. அறவழி நின்றவர் என்ற பொருளில் அது பயின்றுவருவதனாலும் குறளின் பொதுவான கருத்துநிலையாலும் அது அறிவர் என்றும் அறவோர் என்றும் சமணர்களால் சொல்லப்படும் துறவிகளையே குறிக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். குறட்பாக்கள் அதற்குத்தான் பொருந்தி வருகின்றன.

ஆனால் குறள்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் [ குறள் 560]

என்று சொல்லும் இடத்தில் அது பிராமணர்களையே குறிக்கிறது. இங்கே புராதன ஸ்மிருதிகள் வகுத்த ஆறு தொழில்களையே குறிக்கிறது என்பது தெளிவு. வேதங்களின் விளக்கநூலான சதபத பிராமணத்தில்தான் பிராமணர்களின் ஆறு தொழில்கள் சுட்டப்படிருக்கின்றன. பின்னர் யாக்ஞவல்கிய ஸ்மிருதி பத்துவகையான ஆசாரங்களை அவர்களுக்கு பட்டியலிடுகிறது.  பின்னர் வந்த ஸ்மிருதிகளில் பதினாறு ஆசாரங்களாக அவை மேலும் விரித்துரைக்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்துமே கல்வியையும் வேள்வியையும் மட்டுமே செய்து அதற்குரிய வாழ்க்கைநெறியைக் கடைப்பிடித்து வாழவேண்டியவர்களாக பிராமணர்களை வகுத்துரைப்பவை.

குறள் அறுதொழிலோர் நூல்மறப்பர் என்ற சொல்லாட்சியின் வழியாக பிராமணர்களின் இந்த செயல்சார்ந்த அடையாளத்தையே முன்னிறுத்துகிறது என்று சொல்லலாம். பிறப்பின் அடிப்படையில் பிராமணர்களுக்கு வரக்கூடிய மேலிடத்தையோ உரிமைகளயோ அது பொருட்படுத்தவில்லை. ஞானம் மூலமும் ஆசாரங்கள் மூலமும் உருவாகும் முதன்மையையே அது கணக்கில் கொள்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற குறளில் உள்ள செய்தொழில் என்ற சொல்லுடன் இங்குள்ள அறுதொழில் என்ற வரியை இணைத்துக்கொள்ளலாம்.

ஆக, முழுமையாக மனு முதலிய ஸ்மிருதிகளில் இருந்து வேறுபட்டுச் செல்கிறது குறள். இதை குறள் பிற மதிப்பீடுகளைப் பேசும் இடங்களைச் சுட்டிக்காட்டியும் விரிவாக நிறுவ முடியும். ஆனால் குறளுக்கு உரை எழுதும் பரிமேலழகர் தன் உரைப்பாயிரத்தில் ‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலும் ஆகும்’ என்று சொல்கிறார். அது ஒழுக்கம் வழக்கு தண்டம் என்ற மூன்று என்று சொல்லும் பரிமேலழகர் ‘ அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரம்மசரியம் முதலிய நிலைகளில் நின்று அவ்வவற்றுக்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’ என்று சொல்கிறார். அத்துடன் தண்டம் என்பது ‘நால்வகை நிலத்ததாய் வருணந்தோறும் வேறுபாடு உடையது’ என்கிறார்.

அதாவது குறளின் நீதியிலிருந்து பரிமேலழகரின் நீதி மனு முதலாகிய பிற்கால ஸ்மிருதிகளைநோக்கி நகர்ந்திருக்கிறது. இந்த நகர்வு தமிழகத்தின் நீதிப்பிரக்ஞையில் எந்தக்காலத்தில் நிகழ்ந்தது, அதற்கான உரையாடற்களம் எது, அதகான சமூக அரசியல் காரணங்கள் எவையெவை என்பதையே நாம் குறளைப்பற்றிப் பேசும்போது கூர்ந்து அவதானிக்க வேண்டியிருக்கிறது.

குறள் தமிழில் எழுதப்பட்ட சமூகச்சூழல் எது என்ற வினா அதற்கு முன் எழுப்பப்பட வேண்டும். இன்றுவரையிலான குறள் ஆய்வுகளை எடுத்து நோக்கினால் பெரும் கருத்துக்குழப்பத்தையே நாம் அடைய வேண்டியிருக்கும். குறளை ஒரு சைவநூலாகக் காட்டும் பெரும் ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. குறள் சங்ககாலத்தைச் சேர்ந்த அல்லது அதற்கும் முந்தைய தொல்தமிழ்நூல் என்று வாதிடும் ஆய்வுகளும் பல உள்ளன.

இந்த விவாதங்களின் ஒட்டுமொத்தமாகத் திரண்டு வந்திருக்கும் இன்றைய கருத்துக்களைச் சார்ந்து இந்த ஆய்வை அமைத்துக்கொண்டிருக்கிறேன். குறள் கிபி மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழில் எழுதப்பட்டிருக்கலாம். அக்காலத்தில் தமிழகம் களப்பிரர்களால் ஆளப்பட்டது. அவர்கள் சமண- பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள். அக்காலத்தில் பரவலாக நீதிநூல்கள் எழுதப்பட்டன. அவை பிற்காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு என்று தொகுக்கப்பட்டன. ‘திருவள்ளுவர்காலம்’ என்ற தலைப்பில் மா.இராசமாணிக்கனார் எழுதிய ஆய்வுரையில் சொல்லும் இக்கருத்துக்கள் எனக்கு பெரிதும் ஏற்புடையனவாகவே உள்ளன.

திருக்குறளின் ஆசிரியரான திருவள்ளுவர் பிறப்பால் வள்ளுவர் சாதியைச் சேர்ந்தவர். வள்ளுவர் என்ற சாதி முரசறையும் சாதி என்று இராசமாணிக்கனார் சொல்கிறார். வள்ளுவர் என்ற சாதி இன்றும் கேரளத்தில் உள்ளது. இவர்கள் சோதிடம் மற்றும் பூசைத்தொழில்களைச் செய்யும் சாதியினர். மத்தியகேரளம் வள்ளுவநாடு என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. வள்ளுவர்கள் செல்வாக்கான சாதியாக இருந்து பின்னர் பலவாறாக சிதைந்து பரவியிருக்கலாம்.

வள்ளுவர் குறித்து கூறப்படும் தொன்மக்கதைகளை பெரிதும் பொருட்படுத்த முடியாதென்றே ராசமாணிக்கனார் சொல்கிறார். அவர் நெசவாளர் என்றும் வாசுகி என்ற மனைவி அவருக்கு இருந்தார் என்றும் சென்னை அருகே மயிலாப்பூரில் அவர் வாழ்ந்தார் என்றும் சொல்லப்படும் செய்திகளெல்லாம் மிகப்பிற்கால நூல்களான திருவள்ளுவமாலை, ஞானாமிர்தம், கபிலர் அகவல், புலவர் புராணம், தமிழ்நாவலர் சரிதை போன்றவற்றில் உள்ளவை. திருவள்ளுவரை சைவராக காட்டும் திருவள்ளுவநாயனார் புராணமும் உள்ளது.

ஆனால் சமணர்களால் சொல்லப்படும் ஒரு கருத்து அத்தகைய எளிய நிராகரிப்புக்கு உரியதல்ல என்று நான் நினைக்கிறேன். திருப்பாதிரிப்புலியூரில் வாழ்ந்த குந்துகுந்தாச்சாரியார் என்ற சமணத்துறவியால் இயற்றப்பட்டதே திருக்குறள் என்று சில சமண நூல்கள் சொல்கின்றன. சமணமூலநூல்களை ஆராய்ந்து இக்கருத்தை இன்னமும் தெளிவாக விவாதிக்கலாமென்றே படுகிறது.

இந்தத் தளத்தில் மிக முக்கியமானதாக நான் எண்ணும் ஒரு நூல் டாக்டர் ர. விஜயலட்சுமி எழுதி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழகத்தில் ஆசீவகர்கள் என்ற நூலாகும். தமிழகத்தில் சங்ககாலம் முதல் எவ்வாறு ஆசீவகக் கருத்துக்கள் வேரூன்றிருந்தன என்பதை விவரிக்கும் இந்நூல் தமிழகத்தின் சமணத்தின் முன்னோடி மதமாக  ஆசீவகம் இருந்ததை குறிப்பிடுகிறது. ஆசீவகத்துக்கே ற்றிய பல சிறப்புக்கருத்துக்கள் தமிழ்நூல்களில் காணப்படுகின்றன என்பதை விஜயலட்சுமி சுட்டிக்காட்டுகிறார்.

சங்கம் மருவியகாலகட்டத்து நூல் என திருக்குறளை எண்ணுவது பொதுவான வழக்கம். தமிழிலக்கியங்களை வைத்துப்பார்த்தால் சங்க காலம் என்பது பழங்குடி அரசுகளில் இருந்து பெரிய அரசுகள் உருவாகிக்கொண்டிருந்த போராட்ட காலம் என்றே ஊகிக்க முடிகிறது. வேளிர்மன்னர்கள், கடல்சேர்ப்பர்கள், குன்றுகளை ஆண்ட குறவ மன்னர்கள் என பலநூறு மன்னர்களால் அக்கால தமிழகம் ஆளப்பட்டது. இவர்களில் இருந்து உருவான சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள் இந்த்ச் சிறுமன்னர்களை வென்று பெரிய அரசுகளை உருவாக்கும் ஓயாத போரில் இருந்தார்கள்.

இந்தக்காலத்தில்தான் தமிழகத்தில் களப்பிரர் ஆதிக்கம் ஏற்பட்டிருக்கிறது. களப்பிரர்கள் தமிழகத்துக்கு வடக்கே உள்ள ஆந்திர – கர்நாடக மையநிலப்பகுதியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். அப்பகுதியில் இருந்து வரலாற்றுக்காலம் முழுக்க தமிழகத்தில் குடியேற்றம் நிக்ழ்ந்தபடியேதான் இருக்கிறது. இங்கிருந்த அரசியல்நிலையின்மை காரணமாக அவர்கள் எளிதில் இப்பகுதியைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்தனர். இரண்டு நூற்றாண்டுக்காலம் அவர்களின் ஆட்சி நிகழ்ந்திருக்கலாம். திருக்குறள் உள்பட உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவை.

களப்பிரர் காலத்தில் அத்தனை நீதிநூல்கள் எவ்வாறு உருவாயின? அவற்றுக்கான தேவை எது? விவாதக்களம் எது? இந்த வினாவை எழுப்பிக்கொண்டு பலகாலமாக விடைதேடப்பட்டுள்ளது. களப்பிரர்காலம் இருண்ட காலகட்டம் என்றும் ஆகவே அக்கால தமிழகம் நெறிவழுவிக்கிடந்தது என்றும் அதன்பொருட்டே நீதிநூல்கள் உருவாயின என்றும் ஒரு தரப்பு உண்டு. அது சமூக இயக்கத்தை முற்றிலும் உணராது சொல்லப்படுவது. நூல்கள் அறியாமையில் இருந்து உருவாவன அல்ல, அறிவில் இருந்தே அவை உருவாகின்றன.

டி.டி.கோஸாம்பி இந்தியவரலாற்றுக்கு ஒரு முகவுரை நூலில் இந்தியாவில் பிராமணியம் ஆற்றிய பங்கு குறித்துச் சொல்வதை நான் இங்கே கணக்கில்கொள்கிறேன். இந்தியாவில் எப்படி பிராமணியம் முக்கியமான ஒரு கருத்தியலாகவும் அதிகார அமைப்பாகவும் ஆகியது? சமூக வளர்ச்சியில் அது எத்தகைய பங்கை ஆற்றியதன்மூலம் அந்த இடத்தை அடைந்தது? கோஸாம்பி அளிக்கும் சித்திரம் இது. கங்கைசமவெளி நாகரீகத்தில் ஏராளமான உபரி உருவாகி அதன் வழியாக பெரும் அரசுகள் பிறந்தன. அவ்வரசுகள் சுற்றியுள்ள நிலப்பரப்புகளை வென்றும் ஈர்த்துக்கொண்டும் தங்களுடன் இணைத்துக்கொள்ள ஆரம்பித்தன. மிக மெல்ல பற்பல நூற்றாண்டுகளாக நடந்த இந்த இணைப்புச்செயல் இந்தியப்பண்பாட்டின் உருவாக்கத்தின் அடிப்படை என்கிறார் கோஸாம்பி.

இவ்விணைப்பில் ராணுவ ஆதிக்கம் முடிந்தவரை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. அடர்ந்த காடுகளுக்குள் போக்குவரத்து வசதிகள் எட்டாத தூரங்களில் சிதறிக்கிடந்த ஆயிரக்கணக்கான பழங்குடி, அரைப்பழங்குடி இனக்குழுக்களை வென்று இணைத்துக்கொள்ள ராணுவத்தை அனுப்புவது சாத்தியமாக இல்லை. இந்நிலையில் பேரரசுகளின் ஆதாரக் கருத்தியலாக இருந்த பிராமணியத்தை அப்பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதே சிறந்த வழிமுறையாக இருந்தது. தொலைதூர நாடுகளுக்கு பிராமணகள் சென்றார்கள். அங்கே அவர்கள் பிராமணக்கருத்தியலைப் பரப்பினார்கள்

பிராமணர்கள் மையப்பண்பாட்டின் அறிவுஜீவி வற்கம். அவர்களிடம் மையப்பண்பாடு அடைந்த ஞானம் முழுக்க இருந்தது. அதில் பருவநிலைமாற்றங்கள் குறித்த ஞானம், மொழியிலக்கணம், மருத்துவம், நடைமுறை அறிவியல் ஆகியவை அடங்கும். அவை அவர்கள் செல்லுமிடங்களுக்கெல்லாம் தேவையானவையாக இருந்தன. ஆகவே அவர்கள் எளிதில் தொலைதூரநிலங்களை ஊடுருவினர். அம்மக்களிடையே தங்கள் கருத்தியலைப் பரப்பினர்.

அக்கருத்தியலின் மையமாக இருந்தது அவர்களுடைய பிரம்மம் என்னும் இறைக் கோட்பாடுதான். பிரபஞ்ச சாரமாக உள்ள அறியமுடியாத ஆற்றல் என்ற தத்துவ உருவகம் அது. பிற  அனைத்து தெய்வங்களும் அந்த பிரம்மத்தின் தோற்றநிலைகளே என்ற கருத்தியல் அனைத்து வழிபாட்டுமுறைகளையும் ஒரே சரடில்கோர்க்க அவர்களுக்கு உதவியது. அனைத்து இனக்குழுக்க¨ளையும் தங்கள் நால் வருணம் என்ணும் கட்டமைப்புக்குள் கொண்டுவரவும் அவர்களால் முடிந்தது. விளைவாக படிப்படியாக இந்திய சமூக உருவாக்கம், அதிகாரமைய உருவாக்கம் நிகழ்ந்தது.

இந்த சட்டகத்தை அப்படியே களப்பிரர் காலத்தில் நீதிநூல்கள் உருவானமைக்குப் போட்டுப்பார்க்கலாம். களப்பிரர் தமிழ் நிலத்தை ராணுவபலத்தால் மட்டுமல்லாமல் கருத்தியலாலும் வெற்றிகொண்டு மேலாதிக்கம்பெற்றனர் என்று கொள்ளலாம். அக்கருத்தியலாதிக்கத்துக்காக உருவானவையே இந்த நீதிநூல்கள் என்று கொள்வதே பொருத்தமானதாகப் படுகிறது. பல்வேறு இனக்குழுக்களும் சிறு அரசுகளும் தமிழ்நாட்டை பகிர்ந்துகொண்டு ஆண்ட அக்காலகட்டத்தில் பொதுவான ஒரு நீதியமைப்பை  உருவாக்குவதே அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கன வழியாக இருந்திருக்கலாம். அதற்கு ஆசீவக, சமண, பௌத்த மதங்களின் பங்களிப்பு அவர்களுக்கு உதவியிருக்கலாம்.

ஆசீவக, சமண, பௌத்த மதங்களை வைசிய எழுச்சியுடன் தொடர்புபடுத்துவது நம் ஆய்வாளர்களின் வழிமுறையாகும். அவை பழங்காலத்திலும் சிரமண மதங்கள் — உழைப்பவர்களின் மதங்கள்– என்று சொல்லப்பட்டன. எப்படி க்ஷத்ரிய எழுச்சியின்போது பிராமணியம் ஒரு கருத்தியல் மேலாதிக்க சக்தியாக பயன்பட்டதோ அதேபோல வைசிய எழுச்சியின் கருத்தியல் மேலாதிக்க சக்தியாக ஆசீவக, பௌத்த, சமண மதங்கள் பயன்பட்டன. இந்தியப்பெருநிலம் வணிகப்பாதைகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டபோது வணிகம் பெருகியது. வணிக குலங்கள் தழைத்தன. அக்காலத்தில் உருவானதே வணிகர்களின் எழுச்சி. அவர்கள் செல்வமும் அதன் விளைவான அதிகாரமும் கொண்ட சமூகப்பிரிவாக ஆனார்கள். அவர்களின் கருத்தியலாக வளர்ந்தன ஆசீவக, சமண, பௌத்த மதங்கள்.

சங்கம்மருவிய காலகட்டத்தில் வணிகர்கள் தமிழகத்தில் பெரும் அதிகார மையங்களாக ஆகிவிட்டிருந்தமையை நாம் காப்பியங்களில் காணலாம். வட இந்திய நகரங்களான மகதம் பாடலிபுத்திரம் போன்றவற்றில் இருந்த பெருவணிகர்களின் ஆதிக்கத்தைப்பற்றி நாம் கதாசரித சாகரம் முதல் சம்ஸ்கிருத நாடகங்கள் வரையிலான இலக்கியங்களில் காணமுடிகிறது. முத்ரா ராட்சஸம் அரசியல் சதிகளில் வணிகர்கள் ஆற்றிய பங்கைப்பற்றிச் சொல்லும் ஆவணமாகும். அர்த்தசாஸ்திரத்தில் வணிகர்களிடமிருந்து அரசர்கள் எப்படியெல்லாம் நயந்தும் பயந்தும் பொருளைக் கவரலாமென்று சாணக்யன் பேசுவதை நாம் காணலாம்.

ஆகவே சங்கம் மருவிய காலகட்டத்தில், ஏற்கனவே வணிகர்கள் ஒரு சக்தியாக இங்கே ஆகிவிட்டிருந்த சூழலில், சிரமண மதங்களாகிய ஆசீவக சமண பௌத்த மதங்கள் இங்கே பரவின. அதைத்தொடர்ந்து களப்பிரர் ஆட்சியும் உருவாயிற்று என்று கொள்ளலாம். அதற்கு முன்னரே தமிழ்நிலத்தில் வைதீகமதமும் பிராமணியக் கருத்தியலும் அறிமுகமாகியிருந்தன என்பதற்கு ஏராளமான இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் போதாமையை அல்லது இடைவெளியை சிரமண மதங்கள் நிரப்பின என்று சொல்லலாம்.

புராதன தமிழகத்தில் பிராமணியம் என்ன பங்கை ஆற்றியிருக்க முடியும்? புறநாநூறில் பிராமணர்களைப்பற்றிய சித்தரிப்புகள் பெரும்பாலும் அவர்களை வேள்விகள் செய்பவர்களாகவும், விரதங்களால் மெலிந்து வெளிறிய உடல்கள் கொண்டவர்களாகவும், போர்களில் தூதுபோய் சமரசங்கள் செய்பவர்களாகவும்தான் காட்டுகின்றன. புறநாநூற்றுப்பாடல் ஒன்று மெலிந்த பார்ப்பனன் போரில் இருந்த நகரத்தில்கூட எந்த விதமான தடையும் இல்லாமல் ‘நில்லாமல் சென்று’ மன்னனைச் சந்தித்ததாகச் சொல்கிறது. இது அவர்களுக்கு இருந்த மரியாதையையும் சமூக இடத்தையும் சுட்டுகிறது.

ஆகவே டி.டி.கோசாம்பி சொல்வதுபோல பார்ப்பனர்கள் அக்கால மன்னர்களுக்கு தேவையாக இருந்த சமூகத்தொகுப்புப்பணியை, சமூக இணக்கப்பணியை செய்யும் கருத்தியல் சக்தியாகவே இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஆற்றிய பணி என்பது பல்வேறு இனக்குழுச்சமூகங்களை பொதுவான ஒரு கட்டமைப்புக்குள் இருத்தும் செயல்தான். அந்தக் காலகட்டத்துக்கு அடுத்த காலட்டமான வணிகயுகம் கோரிய அதேபோன்ற ஒரு பணியையே சிரமண மதத்தின் அறிவர்களும் துறவியரும் செய்தார்கள் என்று கொள்ளலாம்.

பிராமணர்களைப்போலன்றி சமணர்களுக்கும் பௌத்தர்களுக்கும் மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட செயல்முறை இருந்தது. பள்ளி, சங்கம் போன்ற அமைப்புகள் அவர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தன. ஊர்நடுவே பள்ளிகளூம் விகாரங்களும் அமைக்கப்பட்டன. சமண பௌத்த துறவிகள் மொழிக்கல்வியும் அறக்கல்வியும் கற்பித்தார்கள். வணிகம் பரவ ஆரம்பித்த அக்காலகட்டத்தில் பெரிதும் தேவையாக இருந்த அடிப்படைக்கல்விகள் அவை.  வணிகத்துக்கு அவசியமான அடிப்படை அறங்கள் அடிப்படை தொடர்புறுத்தல் ஆகிய இரண்டுமே இதனுடன் தொடர்புகொண்டவை. அத்துடன் அன்று மக்களுக்கு பெரிதும் தேவையாக இருந்த மருத்துவத்திலும் ஈடுபட்டார்கள்.

இதில் சமணத்தைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். சமணம் இந்தியா முழுக்கவே இலக்கண நூல்களையும் மருத்துவநூல்களையும் நீதி நூல்களையும் உருவாக்கியது. சம்ஸ்கிருதத்தில் மட்டுமல்லாமல் பிராந்திய மொழிகளிலும் அதன் பங்களிப்பு அதிகம். தமிழிலும் சமணம் இந்த மூன்று தளங்களிலும்தான் தன் பண்பாட்டுக்கொடையை நிகழ்த்தியிருக்கிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவ்வாறு உருவானவையே என்று கொள்ளத்தான் தமிழக வரலாறு அடிப்படையமைக்கிறது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறள் இந்தக் காலகட்டத்தில் இந்த வரலாற்றுச்சூழலில் உருவானதெனக் கொள்வதற்கே வாய்ப்புகள் அதிகம். திருக்குறளை சங்க காலத்துக்கு அல்லது அதற்கும் முன்னால் கொண்டுசெல்லுதல் போன்ற ஊகப்பாய்ச்சல்களுக்கு வேறு உள்நோக்கங்கள் இருக்கலாமென்றே எண்ணத்தோன்றுகிறது. ஆகவேதான் குந்துகுந்தாச்சாரியார் என்ற சமணத்துறவியால் எழுதப்பட்ட சமணநூல்தான் திருக்குறள் என்ற கூற்றை நிராகரித்துவிடமுடியாது என நான் எண்ணுகிறேன்.

இக்குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்த நீதிசார்ந்த விவாதக்களத்தை நாம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், அக்காலத்து சமண நெறிநூல்கள், தென்னிந்திய சமண வரலாற்றுக்குறிப்புகள் மற்றும் பொதுவான இந்திய வரலாற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் விரிவாகச் சித்தரித்துக்கொள்வதன் மூலமே குறள் பேசும் நீதியின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முடியும். இதுகாறும் வந்த திருக்குறள் ஆய்வுகளைப் பார்க்கையில் அவை குறளை தமிழ்ப்பண்பாட்டின் தலைநூல் என்ற வகையில் தமிழ்வரலாற்றிலும் தமிழிலக்கிய விவாதக்களத்திலும் மட்டும் வைத்து மதிப்பிடுபவையாகவே உள்ளன. அடுத்த கட்டத்துக்கான நகர்வுக்கான தேவை இன்று உள்ளது.

29 ஜன்வரி 2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஆற்றியகமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறக்கட்டளைச் சொற்பொழிவு. பகுதி 2

முந்தைய கட்டுரைஇசை, மீண்டும் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஇந்திய சிந்தனை மரபில் குறள் 3