திருச்சி, ஸ்ரீனிவாசபுரம், பச்சைமலை

விஷ்ணுபுரம் விருதுவிழா மதுரையில் முடிந்தபின்னர் ஒருநாள் மதுரையில் தங்கியிருந்தேன். பொதுவாக இம்மாதிரி விருதுவிழாக்கள் முடிந்தபின்னர் நண்பர்கள் விடைபெற்றுக் கிளம்புவது வலியூட்டும் ஓர் அனுபவம். ஒவ்வொருவராக சொல்லிக்கொள்வார்கள். கடைசியில் நாம் மட்டுமே எஞ்சுவோம். அதற்காக நாம் முன்னரே கிளம்ப முடியாது. அது அனைவரையும் விட்டுவிட்டு கிளம்புவதுபோல.

விஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்த மறுநாள் நண்பர்கள் தங்கும்பொருட்டு வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த பல பங்களாக்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஒருநாள் மேலும் நீட்டித்திருப்போம். மண்டபத்தை மறுநாள் காலையிலேயே கொடுத்துவிடவேண்டியிருக்கும். பங்களாக்களில் ஒன்றில் கூடி அமர்ந்து பகலெல்லாம் பேசி சிரித்து அந்த நாளின் வெறுமையை கடப்போம். விழாவை அமைத்தவர்களுக்கு அது வெற்றியை கொண்டாட, சிறு பிழைகளை மதிப்பிட்டுக்கொள்ள, இளைப்பாற ஒருநாள்.

நான் வழக்கமாக அன்று கிளம்பி ஊட்டி செல்வதுண்டு. என்னதான் இருந்தாலும் அப்படி ஒன்றை நிகழ்த்தியபின் ஒரு தருக்கு உருவாகும். அதிலிருந்து விலகி மீண்டும் தணிவுகொள்ள நித்ய சைதன்ய யதியின் சமாதியிடத்தில் ஒரு நிமிடம் அமர்ந்திருந்தால் போதுமானது. ஆசிரியர் நம்மை பெருமிதம் கொள்ளவைக்கிறார், தேவையானபோது சிறியவராகவும் உணரச்செய்கிறார்.

இம்முறை மதுரையிலேயே இருந்தேன். நண்பர்கள் உடனிருந்தனர். அன்று இரவு 12 மணிவரை பேச்சும் சிரிப்புமாக சென்றது. நண்பர் இளங்கோவன் முத்தையாவும் ஆத்மார்த்தியும் வந்திருந்தனர். அவர்களுடன் இலக்கியத்தின் தொடர்ச்சி, ஏற்பும் மறுப்புமான உரையாடல் தன்மை ஆகியவற்றை பற்றியும் சென்றகால இலக்கிய நிகழ்வுகளைப் பற்றியும் தீவிரமான உரையாடலை நிகழ்த்தினேன்.

26 அன்று காலையிலேயே கிளம்பி திருச்சி சென்றோம். செல்லும் வழியில் கொடும்பாளூர் சென்று மூவர்கோயிலைப் பார்த்தோம். நான் பலமுறை அங்கே சென்றதுண்டு. தமிழக கோயில்கலை உருவான தொடக்க இடங்களில் ஒன்று கொடும்பாளூர். பல்லவர் கால கட்டிடக்கலையில் இருந்து சோழர்கால கட்டிடக்கலை கிளைத்தெழுந்த இடம்.

பொயு 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இவ்வூருக்கு அருகே இருக்கும் நார்த்தாமலை விஜயாலய சோளீச்வரம் ஆலயங்கள் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவை. சிறிய ஒற்றை அறைக் கோயில்கள். கருவறைமீதே கோபுரங்கள். நாற்புறமும் கோட்டங்களில் அழகிய சிற்பங்கள். இங்குள்ள உமாமகேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்கள் மிக அழகானவை. மணற்பாறையால் கட்டப்பட்டவை. காலை ஒளியில் பொன்னென மின்னுபவை.

மதிய உணவுக்கு திருச்சி சென்றுவிட்டோம். அங்கே நண்பர் செந்தில்குமார் தேவனின் திருமணம். அறைக்கு திருச்சி நண்பர்கள் வந்தனர். அன்று மாலை திருமணநிகழ்ச்சிக்குச் சென்றோம். மறுநாள் காலை கிளம்பி மீண்டும் ஒரு பயணம். திருச்சி அருகில் இருக்கும் ஸ்ரீனிவாசநல்லூர் என்னும் சிற்றூர். அங்கிருக்கும் குறங்கநாதர் ஆலயம் தமிழ் ஆலயக்கலை வரலாற்றில் முக்கியமான ஒன்று.

விஜயாலய சோழர் காலத்தில் கட்டப்பட்டது. கொடும்பாளூர் மூவர் கோயில்களின் அதேகாலகட்டத்தைச் சேர்ந்தது. மூலக்கருவறையில் இப்போது சூரியனின் சிலையே உள்ளது. சூரியநாராயணர்கோயில் என அழைக்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள ஓரிரு சூரியன் ஆலயங்களில் ஒன்று இது. ஒன்பதாம் நூற்றாண்டில் சைவமும் வைணவமும் பேருருக்கொள்வதற்கு முன்பு தமிழகத்தில் சௌரம் பெருமதமாக திகழ்ந்தது என இந்த ஆலயம் சான்றளிக்கிறது.

சாஞ்சி ஸ்தூபி முதலிய ஆலயங்களில் உள்ளதுபோல மிகச்சிறிய புடைப்புச்செதுக்குச் சிற்பங்கள் கொண்ட சுற்றுச்சுவர் கலை ஆர்வலர் கவனத்துக்குரியது. ஓரிரு செண்டிமீட்டர் அளவுக்கே கல்லில் இருந்து புடைத்திருக்கும் இச்சிலைகளை ஓவியங்கள் என்றும் சொல்லலாம். இங்குள்ள சிற்பங்களின் தலையலங்காரத்தில் உள்ள காந்தார [கிரேக்க] சாயல் ஆச்சரியமூட்டுவது.

இங்குள்ள பல சிலைகள் அவற்றின் பின்னாளைய வடிவத்திலிருந்து வேறுபட்ட கைமுத்திரைகள், தோற்றங்களுடன் உள்ளன. ஸ்ரீனிவாசநல்லூரின் தட்சிணாமூர்த்தி சிலையும் சிறிய வேறுபாடுகள் கொண்டது. கலை ஆர்வலர் தமிழகச் சிற்பக்கலையை பயில தொடங்கவேண்டிய புள்ளிகளில் ஒன்று ஸ்ரீனிவாசநல்லூர்.

அருகே உள்ள பச்சைமலைக்குச் சென்றோம். அதை ஒரு கோடைவாசத்தலம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இதமான குளிர்காற்று இருந்தது. அங்கிருந்த மங்கலம் என்ற அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். அருவியில் நீராடிவிட்டு துறையூர் வழியாக ஈரோடு சென்றோம். ஈரோட்டைச் சென்றடைய இரவாகிவிட்டது. செந்தில்குமாரின் பண்ணைவீட்டில் இரவுத்தங்கல். மறுநாள் ஈரட்டி வனவிடுதிக்கு பயணம்.

காலை எழுந்து மீண்டும் காரிலேறி ஈரட்டி நோக்கிச் சென்றபோது 24 ஆம் தேதி நண்பர்களுடன் நாகர்கோயிலில் இருந்து கிளம்பியதெல்லாம் மிகமிக தொலைவில், பழைய நினைவாக ஆகிவிட்டிருந்தது.

முந்தைய கட்டுரைஆண்டறுதிக் கணக்கு
அடுத்த கட்டுரைவட்டவானவில்- கிராதம்