விஷ்ணுபுரம் விருது விழா-2020
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றிய செய்தி மகிழ்ச்சியையும் ஏக்கத்தையும் அளித்தது. சென்ற எட்டு ஆண்டுகளாக விஷ்ணுபுரம் விருதுவிழாக்களில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். வைரமுத்து வாசகனாக இருந்த நான் இன்று நவீன இலக்கியவாசகனாக ஆகியிருக்கிறேன் என்றால் அது விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சிகளால்தான்.
அவை எனக்கு புதிய உலகை திறந்து காட்டுவனவாக இருந்தன. இலக்கியம் என்றால் என்ன என்ற அடிப்படைகளை அங்கே நடந்த விவாதங்கள் வழியாகவே கற்றுக்கொண்டேன். அங்கே வந்த படைப்பாளிகளில் இருந்தே தமிழில் என்னென்ன நடக்கின்றன என்று அறிந்தேன். அந்த விழா நடக்கும் இரண்டு நாளும் எனக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்தன. எனக்கு அவை இல்லாமலான இந்த ஆண்டு மிகப்பெரிய இழப்பு
இலக்கியவிவாதம் என்றால் அதில் சமரசமே இல்லாத தீவிரம் இருக்கலாம் என்று அங்கேதான் கண்டேன். நான் நூற்றுக்கணக்கான இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். கோவையிலும் சென்னையிலும். ஆனால் எங்குமே அந்த தீவிரமும் அர்ப்பணிப்பும் கண்டதில்லை. பொய்யான கோபம் சில இடங்களில் வெளிப்படும். உண்மையான அர்ப்பணிப்பு இல்லை.விஷ்ணுபுரம் விழாவில் ஒருவரை ஒருவர் மறுக்கும் பார்வைகள் வீச்சுடன் வெளிப்படும். அதேசமயம் எல்லா தீவிரமும் இயல்பான நட்புடனும் இருக்கமுடியும் என்பதையும் கண்டிருக்கிறேன்.
அத்தனை தீவிரமான விவாதங்களை கொஞ்சம் அனல் குறைக்க நீங்கள் தொடர்ந்து முயல்வதை கண்டிருக்கிறேன். ஆனால் விவாதம் முடிந்தபின் அனைவரும் கட்டித்தழுவி சிரித்துப்பேசி மகிழ்ச்சியான கொண்டாட்டமும் இருக்கும். இலக்கியம் என்பது அப்படித்தான் இருக்கவேண்டும் . சமரசமில்லாத தீவிரமும் நட்புணர்வும் என்பதை விஷ்ணுபுரம் அரங்கில் கண்டேன்.
விஷ்ணுபுரம் விழாவின் குளறுபடிகள் இல்லாத கச்சிதமான ஒழுங்கும் ஆச்சரியமளிப்பது. அந்த ஒழுங்கு ஒவ்வொருவருக்கும் பயன் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அமைந்தது. சரியான நேரக்கட்டுப்பாடு. அனைவருக்கும் பேசும் உரிமை. அதேசமயம் மைக்பிடுங்கிகளுக்கு இடமளிக்காத கறார்தன்மை எல்லாமே விஷ்ணுபுரம் விழாவில் சிறப்பம்சங்கள்.
இலக்கியவாசகர்களுக்கு இத்தகைய விழாக்கள் இனிமையான ஞாபகங்கள். நாம் அன்றாடம் கசப்பான பலவற்றை பார்க்கிறோம். அதை விட சலிப்பூட்டும் அன்றாடவேலையில் உழல்கிறோம். நமக்கு நம் மனசுக்குள் அழுத்தமாக உள்ள இலக்கியத்தை மட்டுமே கொண்டாடும் இரண்டு நாட்கள் என்பவை ஒரு பெரிய களியாட்டம். இந்த ஆண்டே வெறுமையாக முடிவதுபோல உள்ளது
வழக்கம்போல மிகச்சிறப்பானமுறையில் ஒழுங்குடனும் கச்சிதமாகவும் இந்த விழாவும் நடந்திருக்கும் என நினைக்கிறேன். சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு விஷ்ணுபுரம் விழா மீண்டும் பழைய பெருமிதத்துடன் சிறப்பாக நடைபெறவேண்டும் என விரும்புகிறேன்
ஜி.செந்தில்குமார்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
திரு சுரேஷ் குமார இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுர விருது அளிக்கப்பட்ட தகவலை தளத்தில் கண்டேன். ஒரே சமயத்தில் நிறைவும், மகிழ்ச்சியும், ஏக்கமும், துக்கமுமாயிருந்தது. விஷ்ணுபுர விழா டிசம்பரில் வருவதற்கு ஜனவரியிலிருந்தே காத்துக்கொண்டிருப்பேன் வழக்கமாக.
வைரஸ் தொற்று காரணமாக இம்முறை இருக்குமா இருக்காதாவென்று சந்தேகமிருந்தாலும், இங்கு கல்லூரிகள் திறந்து வழக்கம்போல் பாடமெடுத்துக்கொண்டும், எல்லா பேருந்துகளும் ஓடும் சாலைகளில் பயணித்துக் கொண்டுமிருப்பதால் எப்படியும் நெறிகளுக்குட்பட்டு விழா நடந்துவிடுமென்றும் ஒரு நம்பிக்கை அல்லது நப்பாசையும் இருந்தது. விழா சுருக்கமாக முடிந்ததில் மனம் கனத்து விட்டிருக்கிறது.
விஷ்ணுபுரம் விழா வாசகர்களான எங்களுக்கு, குறிப்பாக எனக்கு பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்குமொன்று. உங்களையும் இன்னும் பல முக்கிய எழுத்தாளர்களையும், உலகின் எல்லா பக்கங்களிருந்தும் வந்திருக்கும் நண்பர்களையும் சந்தித்து இரண்டு முழுநாட்களும் குடும்பமாக சேர்ந்து இருந்துவிட்டு இன்னும் ஒருவருடத்திற்கான ஒளியை நெஞ்சில் ஏற்றிக்கொண்டு வீடுதிரும்பிய கடந்தகால விழா நினைவுகளை இன்று அதிகாலையில் இருந்து மீள நினைத்துப்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த தொற்றுக்காலத்தில் பல இடர்கள் இருந்தன ஆனால் எதையுமே பெரிதாக நினைத்துக்கொள்ளவில்லை. எனினும் விஷ்ணுபுர விழா வழக்கம்போல் நடக்காததும் அதில் கலந்து கொள்ள முடியாமல் போனதுமே இந்த தொற்றினால் ஏற்பட்ட ஆகப்பெரிய இழப்பெனக்கு
நீங்கள் “இன்னும் டிசம்பர்கள் வரும் மகத்தான தருணங்கள் அமையும்’’ எனச்சொல்லியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது . சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புடன்
லோகமாதேவி