அஞ்சலி- தொ.பரமசிவன்

தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம் இன்று இயற்கை எய்தினார். தமிழ்ப் பண்பாட்டு ஆய்வில் அவருக்கு ஒரு தனியிடம் உண்டு. பண்பாட்டை ஆராய தொல்லியல் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றுக்கு நிகராக நாட்டாரியல் ஆய்வுக்கூறுகளை கருத்தில்கொள்ளலாம் என்ற பார்வை எண்பதுகளில் உருவாகியது. அந்த நோக்கில் சில அடிப்படையான கேள்விகளை எழுப்பி முன்சென்றவர் தொ.ப.

அவருடைய அழகர்கோயில் அவ்வகையில் ஒரு முன்னோடி நூல். அழகர்கோயில் என்னும் ஆலயத்தின் அடித்தளமாக அமைந்த பொருளியல் கட்டுமானத்தை, சமூகக் கட்டுமானத்தை அவர் ஆராய்ந்தார். ஓர் ஆலயம் என்பது ஒரு குறிப்பிட்ட வகையான பொருளியல்நிர்வாகத்தின் மையமுடிச்சு என்பதைக் காட்டினார். அந்தவகையான ஆய்வுகள் அவருக்குப்பின் தொடர்ந்து நிகழ்ந்தாலும் இன்னும் செய்யவேண்டியவை நிறையவே உள்ளன

தமிழ்ப்பண்பாட்டின் பல வினாக்களை நாட்டாரியல் தரவுகளுக்கு செவ்வியல்பின்னணியில் விளக்கம் அளிப்பதன்மூலமும் செவ்வியலில் உள்ள இடைவெளிகளை நாட்டாரியலினூடாக  நிரப்புவதனூடாகவும் தொ.பரமசிவன் விடைகாண முயன்றார். அவர் முன்வைத்தவை பெரும்பாலும் ஊகங்களே.அவருடைய தமிழகத்தின் பண்பாட்டு அசைவுகள் போன்ற நூல்கள் நம் அன்றாடத்தின்மேல் புதிய பார்வைகளை முன்வைப்பவை, பிறிதொரு வரலாற்றுவாதத்தை உருவாக்கிக் காட்டுபவை.

தொ.பவின் ஆய்வுமுறை என்பது மார்க்ஸிய அடிப்படையிலானது. பண்பாட்டு அடிப்படைகளின் அடிப்படைகளை பொருளியல் கட்டுமானமே முடிவுசெய்கிறது என்னும் பார்வை கொண்டது. அவருடைய பார்வையில் திராவிட இயக்கக் கொள்கையும் செல்வாக்கு செலுத்தியது. தமிழ்ப் பண்பாட்டின் பரிணாமத்தை பிராமணிய ஆதிக்கம்- அதற்கு எதிரான செயல்பாடு என  வகுத்துக்கொள்வது அது. தொடர்ச்சியான செயல்பாடுகள் வழியாக தமிழ்ச்சிந்தனையில் செல்வாக்கைச் செலுத்த அவரால் இயன்றது

இருபதாண்டுகளாக தொ.பவுடன் நேர்ப்பழக்கம் இருந்தது. அவருடன் சிறுபயணங்களும் செய்திருக்கிறேன். என் ஆய்வுகள் சிலவற்றுக்கு அவர் உதவியும் செய்திருக்கிறார். அவருடைய பெரும்பாலான ஆய்வுக்கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை. அவை புறவயமான முறைமை அற்ற ஊகங்களாகவே பெரும்பாலும் உள்ளன என்பது என் எண்ணம். அவருடன் பலவாறாக விவாதித்திருக்கிறேன். அவ்விவாதங்களைக் கடந்து இயல்பான நட்புணர்வுகொண்டவராகவும், எந்நிலையிலும் கற்பிக்கும் ஆசிரியத்தன்மை கொண்டவராகவும்தான் அவர் இருந்தார்

அஞ்சலி