இந்தமுறை கோவிட் தொற்று காரணமாக விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா இருக்காது என்று முன்னரே முடிவுசெய்திருந்தோம். குமரகுருபரன் விருது வழங்கப்பட்டதுபோல அந்த ஊரிலிருப்பவர்களே சென்று வாழ்த்துவழங்கி மீள்வதே திட்டமாக இருந்தது. ஆனால் மதுரையில்தான் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்திற்கு ஆளே இல்லை. ஆகவே ஒரு கும்பல் நேரில் சென்று விருதை வழங்கலாமென்று முடிவுசெய்தோம்
ஆனால் சுரேஷ்குமார இந்திரஜித் ஏற்கனவே பல நோய்களுக்கு சிகிழ்ச்சை எடுத்துக்கொள்பவர். அவருடைய உடல்நிலையை கருதி அவர் குடும்பத்தவர் மிகக்கவனமாக இருக்கிறார்கள். ஆகவே அதிகமான நண்பர்களை அவர் சந்திக்கமுடியாது. ஓரிருவருக்கு அப்பால் அங்கே செல்லமுடியாது. நிறைய யோசித்து சரி விருதைக் கொடுப்போம், அவருக்கு வசதியான முறையை அவரே தெரிவுசெய்துகொள்ளட்டும் என முடிவெடுத்தோம்
24 ஆம் தேதி காலை நானும் லக்ஷ்மி மணிவண்ணனும், சுஷீல்குமாரும், கே.பி.வினோதும் சுஷீல்குமாரின் காரில் மதுரைக்கு வந்தோம். காலை பத்துமணிக்கு கிளம்பி மாலை மூன்றுமணிக்கு மதுரையை வந்தடைந்தோம். நண்பர்களுடன் ஒரு நீண்ட கார்ப்பயணம் எப்போதுமே உற்சாகமளிப்பது. அதிலும் இம்முறை வழி முழுக்க பசுமை. கோயில்பட்டியிலேயே ஏரிகள் நிறைந்து நீரொளி கொண்டிருந்தன. மழைமுகில் செறிந்த வானம்
சென்றமுறை ஆவணப்படம் எடுக்கும்பொருட்டு வந்தபோது தங்கியிருந்த ராயல் செர்வீஸ்ட் அப்பார்ட்மெண்ட்ஸ் விடுதி வசதியாக இருந்தது. அதில் தங்க அறைகள் போட்டிருந்தோம். நான்காவது அடுக்கு முழுக்கவே எங்களுக்காக பதிவுசெய்திருந்தோம்.
கோவையிலிருந்து இருவராவது வரவேண்டும் என்று முன்னரே சொல்லியிருந்தோம். ’குவிஸ்’ செந்தில், நரேன் இருவரும் வந்தனர். ராம்குமார் தனியாக பின்னர் வந்து சேர்ந்தார். 24 ஆம் தேதி இரவே நாலைந்துபேர் சேர்ந்துவிட்டனர். நீண்ட இடைவேளைக்குப் பின் நண்பர்களைச் சந்திக்கிறேன். ஆகவே வழக்கமான அரட்டை. சந்தித்த நிமிடம் முதல் சிரிப்பு. இரவு 12 மணிவரை தூக்கமில்லை. அதன்பின் தூங்கச் சென்றபோதும் அரைமயக்கம்தான்
காலை ஐந்துமணிக்கு எழுந்து மீனாட்சி கோயில் சென்றோம். சென்றமுறை மீனாட்சியை தரிசனம் செய்ய முடியவில்லை என எழுதியிருந்தோம். அதை வாசித்துவிட்டு வாசகரும் மாவட்ட நீதிபதி பணியில் இருப்பவருமான பிரேம் ஆனந்த் ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தார். அவரே காலையில் வந்து அழைத்துச்சென்றார்
காலையில் மீனாட்சி ஆலயத்தை நெரிசலற்ற சூழலில் பார்ப்பது உளநிறைவளித்த அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு கல்லும் குளிர்ந்திருக்கும் பொழுதே தெய்வங்கள் கல்லென எழுந்த ஆலயங்களைச் சந்திக்க உகந்தது.
25 ஆம் தேதி காலை ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன் வந்தார். விருதுக்கான ‘டிரோபி’ ராம்குமார் ஏற்பாடு செய்துகொண்டுவந்தார். மதுரையில் டாக்டர் ரவியும் ஜிஎஸ்எஸ்வி நவீனும் ஏற்பாடுகளைச் செய்தனர். எத்தனை குறைவான நபர்களுடன் விழாவை நடத்தமுடியுமோ அத்தனை நன்று. ஆகவே மதுரையின் ஆளுமைகள் எவரையும் அழைத்து தெரியப்படுத்தவில்லை. இளங்கோவன் முத்தையா, ஆத்மார்த்தி இருவரும் வந்திருந்தனர்
காலையில் ஈரோட்டிலிருந்து கிளம்பிய நண்பர்கள் மதியம் வந்துசேர்ந்தனர். சுரேஷ்குமார இந்திரஜித்தின் வீட்டுக்கு இருவர் சென்று விருதை அளித்துவிட்டு வரலாம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அவர் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கே வருவதாகச் சொன்னார். ஆகவே இரண்டரை மணிக்கு தன்னிச்சையாக விழாவை ஒருங்கிணைத்தோம். பெரிய திட்டமிடல்கள் ஏதுமில்லை
விஷ்ணுபுரம் அமைப்பை அறிமுகம் செய்து ஈரோடு கிருஷ்ணன் பேசினார். விருது அறிவிக்கையை குவிஸ் செந்தில் வாசித்து அளித்தார். டாக்டர் ரவி கே.பி.வினோத் எடுத்த ஆவணப்படத்தை வெளியிட்டார். சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்பட இயக்குநர் கே.பி.வினோத் ஒளிப்பதிவாளர் ஆனந்த்குமார் ஆகியோரை கௌரவித்தார். சுரேஷ்குமார இந்திரஜித் பற்றி விஷ்ணுபுரம் அமைப்பு வெளியிடும் ‘சுரேஷ்குமார இந்திரஜித்- வளரும் வாசிப்பு’ என்ற நூலை லக்ஷ்மி மணிவண்ணன் வெளியிட்டார்
விஷ்ணுபுரம் விருதை நண்பரும் விஷ்ணுபுரம் அமைப்பின் அமைப்பாளர்களில் ஒருவருமான ராம்குமார் அளித்தார். சுரேஷ்குமார இந்திரஜித் பற்றிய ஆய்வுரையை சுனீல்கிருஷ்ணன் நிகழ்த்தினார்.நான் சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு வாழ்த்துரைத்தேன்.
சுரேஷ்குமார இந்திரஜித் ஏற்புரை அளித்தார். வி.எஸ்.செந்தில்குமார் நன்றி கூற இரண்டுமணிநேரத்தில் விழா முடிந்தது. சுருக்கமான விழா. ஆயினும் உற்சாகமான இருபது நண்பர்களின் முன்னிலையில் நிறைவளிக்கும் விழாவாக அமைந்தது. சுரேஷ்குமார இந்திரஜித்தின் மனைவியும் மனைவியின் இரு உடன்பிறந்தவர்களும் வந்திருந்தார்கள்.
நான் சுரேஷ்குமார இந்திரஜித்திற்கும் எனக்கும் இருந்த முப்பதாண்டுக்கால நட்பையும், கடிதங்கள் வழியாகவே எங்களுக்கிடையே ஓடிய இலக்கியவிவாதங்களையும் நினைவுகூர்ந்து பேசினேன். சுனீல் கிருஷ்ணன் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கலையின் ஊற்றுமுகம் குறித்து பேசினார்.
சுரேஷ்குமார இந்திரஜித்தின் ஏற்புரையில் அவருக்கு இலக்கியத்தில் அறிமுகத்தை உருவாக்கி அளித்த அவருடைய அண்ணியை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தார். ஜெயகாந்தனை ஆதர்ச எழுத்தாளராகக் கொண்டிருந்த அவர் எழுதியபோது ஜெயகாந்தனின் செல்வாக்கே இல்லாமல் எப்படி எழுதினார் என்றும் அதற்கான வாழ்க்கைச்சூழல் பற்றியும் பேசினார்
விழாவில் சுரேஷ்குமார இந்திரஜித் பற்றி கே.பி.வினோத் எடுத்த ஆவணப்படமான ‘தற்செயல்களின் வரைபடம்’ திரையிடப்பட்டது. சுரேஷ்குமார இந்திரஜித் கிளம்பிச் சென்றார்.
அதன் பின் இலக்கியவிவாதம், சிரிப்பு என இரவு பதினொரு மணிவரை நீண்டது சந்திப்பு. ஊடே ஒவ்வொரு நண்பர்களாக விடைபெற்று கிளம்பிச் சென்றுகொண்டிருந்தார்கள்.
இந்த டிசம்பரில் பல விஷ்ணுபுரம் நண்பர்கள் கடந்தகால நிகழ்ச்சிகளைப் பற்றிய ஏக்கமும் தனிமையுமாக எழுதினார்கள். இனியும் டிசம்பர்கள் வரும், இனியும் மகத்தான தருணங்கள் அமையும் என்று மட்டும் சொல்லிக்கொள்வேன்.