தன்னை வரையறை செய்தல்
உடல், குற்றவுணர்வு, கலை
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு,
வணக்கம்.இரண்டு தினங்களாக “உடல் குற்றவுணர்வு கலை”,”தன்னை வரையறை செய்தல்” தலைப்புகளில் நீங்கள்எழுதி வருகிற கடிதங்கள் மிகவும் முக்கியமானவை.அனைவரும் படித்திருக்க வேண்டியவை.இதில் எனக்கு விஷேசமாகத் தென்பட்டது , இதுபோன்ற பொருள்களை மேலைநாட்டுக் கட்டுரைகளைப் போலன்றி ;சொந்த குருதிக்குள் இருந்து பேசும் தன்மை.இதனை ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்ந்து செல்ல இயலுமாயின் மேலும் உபயோகமாக இருக்கும்.இங்கே ஒவ்வோருவரும் தன்னைத்தானே திறந்து கொள்வதற்கு வழி உண்டாகும்.
ஒரு குற்றபோதத்திலிருந்து மீளும் ஒருவர்,மீண்டு அதனினும் பெரிதான குற்றத்திற்குள் நுழைவதைக் கண்டிருக்கிறேன்.குற்றவுணர்ச்சி அதுவொரு போலி தகவமைப்பே ,சமாதானம் சொல்லுதலே என எனக்கு தோன்றியிருக்கிறது.தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்கான நாடகமே.குற்றபோதத்தை அபாயமாக உணர்ந்திருக்கிறேன்.அதன் அனைத்து பக்கங்களையும் இதில் பேசிச் செல்கிறீர்கள்.
இந்திய பெண்கள் அதிகம் உடலால் கட்டுண்டிருக்கிறார்கள்.மிகவும் மூர்க்கமாக தாக்கி உடைத்து அல்லாமல் வெளியேறும் வழி அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. அதிலிருந்து விடுவித்துக் கொள்ளுதல் எப்படி என்பதற்குரிய படிப்பினைகள் இல்லை.பாடங்கள் சொல்லித் தரப்படுவதில்லை.பிறகு அதனை துயராக மாற்றுகிறார்கள்.தங்கள் சுயநரகை உருவாக்கி அதனுள் புகுந்து கொள்கிறார்கள். சுயநரகின் ருசியை வாழ்நாள் முழுவதும் குடிக்கிறார்கள். சார்ந்தவர்களுக்கும் அதே சுயநரகை பரிசளிக்க விரும்புகிறார்கள்.மறுத்தால் வில்லங்கமாகிவிடும்.இதில் விடுதலை காணாதவரையில் ஆன்ம பயணம் இல்லை. நம்முடைய பெண் சம்பந்தபட்ட அக்கறைகள் இதிலிருந்து தொடங்க வேண்டியவை என்றே நினைக்கிறேன்.
இங்கே இன்று ஆசாரவாதிகள் ,ஆன்மீக உணர்வை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.இது இப்போது வேகம் பெற்றிருக்கிறது.பழைய தடைகளைக் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் பெண்ணுடலில் பொருத்துவது.அதனை ஆன்மீகமாக நாடகமாடுவது.இதனை தெளிவுபடுத்துகிறீர்கள்.இத்னை ஆழத்தில் இருந்து எடுத்து உரைத்து வழி உண்டு பண்ண வேறு ஒருவரால் ஆகாது.இன்னும் இன்னும் அதிகமாக நீங்கள் இது குறித்துப் பேச முடியும் என்று நினைக்கிறேன். மையமான சரடு ஒன்றில் நின்று இந்த கடிதங்களில் நுட்பமாக உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு என்னுடைய அன்பு
அன்புடன்,
லக்ஷ்மி மணிவண்ணன்
அன்புள்ள மணிவண்ணன்
நான் சொல்பவை நான் நம்பும் மரபிலிருந்து பெற்றவை. வேதாந்தத்தின் பதில்கள் இவை. ஒரு புதிய வாழ்க்கைச்சூழலுக்கு ஏற்ப, அதை புதிய சொற்களில் சொல்கிறேன் என்பது மட்டுமே என்னுடைய பங்களிப்பு என நினைக்கிறேன்
நவீன உளவியல் இத்தகைய சிக்கல்களைப் பரிசீலிக்கிறது என்பது உண்மை, வழிகாட்டவும் செய்கிறது. ஆனால் முழுமையான வாழ்க்கைத் தத்துவம் ஒன்றை அது அளிப்பதில்லை. அந்த குறிப்பிட்ட சிக்கலை கடந்துசெல்ல மட்டுமே அது வழிகாட்டுகிறது. அதன் உள்ளுறையும் வாழ்க்கைப்பார்வை என்பது வாழ்க்கை உடலின்பம், புலனின்பங்களுக்கானது என்பதே. அதை குற்றவுணர்வால் இழக்கவேண்டாம் என்பதே
அதற்கப்பால் ஒரு வழிகாட்டல் வேதாந்தத்தில் உண்டு. அது முழுமைநோக்கு. வாழ்க்கையின் ஒட்டுமொத்த இலக்கு என்ன, அதற்கான வழி என்ன என்று சொல்வது அதையே முன்வைத்தேன்
ஜெ