ஒரு கடிதம்

திருவலஞ்சுழி

தன்னை வரையறை செய்தல்

உடல், குற்றவுணர்வு, கலை

தல்ஸ்தோயின் மனிதாபிமானம்- கடிதங்கள்

அன்பு ஜெ,

நலமா? தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி மிக மிக நீண்ட நாட்கள் ஆகிறது. பள்ளியை தற்காலிகமாக ஒரு வருடத்திற்கு திறக்காமல் இருக்க முடிவுசெய்துவிட்டோம் இப்பொழுது சென்னையில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளேன். உங்களிடம் நேரம் போதவில்லை என்று சொல்வது தவறு. ஆனால் அது தான் உண்மை. காலை எழுந்ததும் முதல் வேலையாக தங்கள் தளத்தை வாசித்துவிடுகிறேன். அதை எக்காரணம் கொண்டும் இடைநிறுத்துவதில்லை. அன்றைய நாளுக்கான என் எண்ணங்களை தெரிவிப்பதற்குள் அலுவலகம் வந்துவிடுவேன். அலுவலகம் வந்துவிட்டால் இது ஒரு தனி உலகம். இந்த உலகில் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்பது நினைவிலேயே இருக்காது.

இன்று சற்று பணி குறைவு உடனே உங்களுக்கு எழுதிவிடலாம் என்று ஆரம்பித்துவிட்டேன். கொரானா காலத்தில் செல்வேந்திரன் வழியாக தாங்கள் செய்த உதவி என்றென்றும் மறக்க முடியாதது. என்றும் நினைவுடன் நன்றிக்கூறத்தக்க செயல். காலத்தினாற் செய்த உதவி அது. தொடர்ந்து இன்றளவும் அவர் வாய்ப்புகளை வழங்குகிறார் தங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

சமீபத்தில் கனலியின் ஜப்பானிய சிறப்பிதழில் என் மொழிப்பெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. தங்களுக்கு நன்றி தெரிவித்து அதற்கு கடிதம் எழுதியிருந்தேன். என் மொழிபெயர்ப்பு சார்ந்து தங்களின் கருத்துக்களையும், வழிகாட்டுதலையும் தெரிவித்தால் மிக்க உதவிகரமாக இருக்கும். தங்களின் உடல், குற்றவுணர்வு, கலை பற்றிய கடிதம் வாசித்தேன். அது எனக்காகவே தாங்கள் கூறியது போன்று இருந்தது. என்னை நோக்கி வந்த பல கேள்விகளுக்கு, இனி வரும் கேள்விகளுக்கு அதில் தாங்கள் தெரிவித்துள்ள பதில் அப்படியே பொருத்தமாக சொல்லிவிடலாம்.

அதை வாசித்ததும். லா.சா.ரா.வின் இந்த வரிகள் நினைவிற்கு வந்தன. ஒருவர் மனதைத் தொட்டு, அட இது எனக்கு நேர்ந்ததாச்சே, இதை ஏன் என்னால் எழுத முடியவில்லை. இந்த ஆள் எழுதியிருக்கிறானே! என் மனதில் ஓசையை எழுப்புகிறானே என்று வாசகன் நன்றி செலுத்துகிறான் பாருங்கள்… அது போலான எழுத்தைத்தான் நான் நல்ல எழுத்து என்று நினைக்கிறேன். ஏன் உன்னை அழகுப்படுத்திக்கொள்வதில்லை. ஏன் வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதில்லை. ஏன் இப்படி உடுத்துகிறாய் என ஏன் ஏன் என பலக் கேள்விகளுக்கு நான் மனதில் கருதிய பதிலை, என்னால் வெளிப்படுத்த முடியாத பதிலை உங்கள் பதிவு தந்துவிட்டது.

லியோ டால்ஸ்டாய் பற்றி தாங்கள் எழுதிய கட்டுரை தங்களின் ஆகச்சிறந்த இலக்கியக் கட்டுரை. உடல், குற்றவுணர்வு, கலை மற்றும் தன்னை வரையறை செய்தல் ஆகிய இரண்டு கட்டுரையும் மொத்த இந்திய ஞான மரபின், வேதாந்தத்தின் நுழைவாயிலுக்கான ஆகச்சிறந்த கட்டுரை.

கடந்த வாரம் சிற்பத்திற்காக மீண்டும் ஒரு பயணம் மேற்கொண்டேன். முதன் முதலாக தங்கள் வழிகாட்டுதலில் பயணம் செய்தப்பொழுது விடுபட்டுப்போன சில ஊர்களை இந்தப்பயணத்தில் சேர்த்துக்கொண்டேன்.  ஈரோடு வாசகர் சந்திப்பில் அறிமுகம் ஆன நண்பர் சூரியபிரகாஷ் உடன் இணைந்து இரண்டு நாட்கள் புள்ளமங்கை, திருவலஞ்சுழி, தாராசுரம், கங்கைக் கொண்ட சோழபுரம், மேலக்கடம்பூர், பாலைவனநாதர் கோயில், திருப்பழனம், திருவையாறு, தஞ்சை பெரியக் கோயில் எனப் பல கோயில்களுக்கு சிற்பங்களைக் கண்டுகளிக்க சென்றோம். அது மிக சிறந்த அனுபவமாக இருந்தது.

அன்றைய நாள் முழுவதும் உங்கள் பெயரைத்தான் அதிகமாக உச்சரித்தோம். கிராதம், பிச்சாண்டவர், பைரவர், பூத கணங்கள் போன்ற சிற்பங்கள் பார்க்கும் பொழுதெல்லாம் வெண்முரசு, விஷ்ணுபுரம் போன்றவற்றில் தங்கள் சித்தரிப்பு நினைவில் கொண்டு பேசிக்கொண்டோம். மேலும் சில சிற்பங்களை வெண்முரசு வாசித்தால்தான் அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்ததும். கிராதம் சிற்பம் பார்க்கும் பொழுதெல்லாம் கிராதம் நாவல் நினைவிற்கு வந்துவிடும்.

இந்த ஒவ்வொரு கோயிலைக் காணும் பொழுதும் நாம் எவ்வளவு வரலாற்று பொக்கிஷங்களை இழந்துள்ளோம் என்று தெரிகிறது. புள்ளமங்கை, திருப்பழனம் போன்ற கோயில்கள் மிகவும் உள்ளடங்கிய கிராமங்களில் இருந்தது. எவ்வித பாதுகாப்பு வசதியோ, வரலாற்று செய்திகளோ, கோயிலின் முக்கியத்துவம் பற்றிய அறிவிப்புகளோ என எதுவும் இல்லை. நாங்கள் சென்றப்பொழுது கோயிலுக்கு அருகில் குடியிருப்பவர்கள் தான் வந்து கோயிலை திறந்து காண்பித்தார்கள். கோயிலின் நிலையைக் கண்டு வருத்தம்தான் அடைந்தோம்.

திருப்பழனம் கோயிலின் விமானப்பகுதியிலெல்லாம் அரச மரம் நன்றாக கிளைவிட்டே வளர்ந்துவிட்டது. திறந்துவிட்டவரிடம் விசாரித்தப்பொழுது இந்த கொரனா காலத்தில் அதை சீர்செய்ய யாரும் வரவில்லை. என்னால் முடிந்தளவிற்கு செலவுசெய்து சீர்செய்தேன். அதற்குப்பிறகு பராமரிக்க என்னால் செலவு செய்ய முடியவில்லை. இதற்கு முன்பு சிவத்தொண்டு புரிவதற்கு என்று சிவனடியார்கள் கூட்டாக வருகைபுரிந்து கோயில் முழுவதையும் தூய்மை செய்வார்கள். இந்த நோய் காலத்தில் யாரும் வரவில்லை என்று தெரிவித்தார்.

மிக மிக அழகான சிற்பங்கள் கொண்ட விமானப்பகுதியின் கிரீவம், ஸ்தூபி போன்ற பகுதிகளில் மரங்கள் வேர்விட்டு வளர்ந்து விதைத்துவிடுகிறது. விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியவில்லை. இதைப்போல் நாம் தொலைத்தது பல்லாயிரம். திருப்பழனம், புள்ளமங்கை போன்றவை தேவாரப் பாடல் பெற்ற தலம் வேறு. அதற்கே இந்த நிலைமை.

அந்தக் கோயிலின் பூதகணங்ளைப் பார்த்ததும் இந்த வருத்தமெல்லாம் மறைந்து நகைத்துவிட்டோம். ஒவ்வொரு பூதகணங்ளையும் சிற்பி அவ்வளவு சேட்டைகளுடன் வடித்துள்ளான். அதில் ஒருபூத கணம் சிவன் நடனம் புரிவது போன்ற தோற்றத்தில் நின்று காண்பிக்க மற்றொரு பூதகணம் மேளம் வாசிக்க, இதை மற்றொரு பூதகணம் ஆச்சரியத்துடன் பார்த்தவாறு நின்றுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த வரிசையில் பல பூதகணங்களின் சேட்டைகளைப் பார்த்து சிரித்தவாறேதான் இருந்தோம்.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு முக்கிய கோயில் மேல்கடம்பூர் கரக்கோயில். எவ்வித சிதைவும் இல்லாத இரண்டு குதிரைகள் பூட்டிய ரதத்தை இழுத்து செல்வது போன்ற வடிவமைப்பில் இருக்கும் இக்கோயில் முதலாம் குலோத்துங்கள் காலத்தைச் சார்ந்தது. கோஷ்டத்தில் இருக்கும் பரிவார தெய்வங்களுக்கு என்று தனியாக முன்னிழுத்து சந்ததி போன்ற வடிவமைப்பை ஏற்படுத்திக்கொடுத்த முதல் கோயிலும் இதுதான். ரோமர், சந்திரன், சூரியன் போன்ற சிற்பங்கள் மிக மிக நேர்த்தியானவை. ரோமரின் சிற்பம் மிக நேர்த்தியாக வடித்துள்ளனர். தமிழத்தில் எஞ்சியுள்ள முழுவடிவமைப்பில் உள்ள ஒரே கரக்கோயில் இதுதான் என்று வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோயிலுக்கு செல்லும் வழியெல்லாம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப்போர்த்திய வயல்வெளிகள் தான். வழியில் ஆனைசாத்தான், மீன்கொத்தி, கொண்டலாத்தி, செங்கால்நாரை, நாகனவாய் பறவை எனப் பல பறவைகளைக் கண்டுகளித்தோம்.

மிக விரிவாக எழுத வேண்டிய பதிவு. மிக மிக சுருக்கமாக எழுதிவிட்டேன். உங்களின் ஒவ்வொரு சொற்களுமே உயிர்க்கொண்டு என் ஆன்மாவிடம் உரையாடும் வல்லமைக் கொண்டது. உங்களை வாசிக்கும்பொழுது உடலாக வாசிக்காமல், ஆன்மாவாக வாசிக்கும் இன்பம் வெளியிடப்பட இயலாதது. இத்தனை நாட்கள் அவ்வாறுதான் வாசித்துள்ளேன். அதனால்தான் உங்கள் எழுத்துக்களிடம் அவ்வளவு அன்புடன் உள்ளேன். தங்களின் இந்த இரண்டு கடிதத்திற்கான பதில்களும் எனக்கு நீங்கள் யார் என அறிய, தொகுத்துக்கொள்ள உதவின. அதற்கு மிக்க நன்றி.

நீங்கள் மற்ற அனைத்து எழுத்தாளர்களிடம் இருந்து வேறுபடும் இடமும் இதுதான். உங்கள் சொற்கள் நேரடியாக மனிதனின் ஆத்மாவிடம் பேசும் வல்லமைக்கொண்டவை. மிக எளிய சொற்கள் அல்ல உங்களுடையது. செயலூக்கத்தை, முன்னகர்வை ஏற்படுத்தும் சொற்கள். வாசிக்கும் ஒருவனை தன் வாழ்வில் ஒரு படியையாவது முன்னிலைப்படுத்தும் எழுத்துக்கள் உங்களுடையது. உங்கள் எழுத்தை வாசிப்பதற்கு முன்பு தங்கள் வாழ்வில் அவர்கள் எப்படியிருந்தார்கள், தங்கள் எழுத்தை தொடர்ந்து வாசித்து, உணர்ந்து, கடைபிடித்ததற்குப்பின் எப்படி உயர்ந்துள்ளனர் என்ற நேரடி அனுபவம் எனக்கு உண்டு. நானும் அதில் ஒருவன்.

உங்களின் எழுத்துக்களே என்னையும், என் போன்றோரையும் வழிநடத்திச் செல்பவன. மனம் நிம்மதி அடைய, சஞ்சலமாக இருக்கும் பொழுது வாசிக்க, வாழ்க்கையின் ஒரு முடிவு எடுக்க என அனைத்திற்கம் தங்களின் எழுத்துக்களைத்தான் துணைக்கு அழைக்கிறோம். என் வாழ்வின் ஞான குரு தாங்கள். உங்கள் வழிகாட்டுதல் என்றென்றும் எனக்குத் தேவை.

நன்றியும் அன்புடனும்,

ரா. பாலசுந்தர்

முந்தைய கட்டுரைமாஸ்டர்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபிழைகளை வாசிப்பது