அரசன்

பனிப்பிரதேசங்களில் ஸ்லெட்ஜ் என்னும் இழுவைவண்டி ஏன் பயன்படுத்தப்படுகிறது, ஏன் சக்கரங்கள் இல்லை? அதே போன்ற இன்னொரு வினாதான் ஏன் குதிரைகளுக்குப் பதிலாக நாய்கள்?

அதற்கான விளக்கத்தை நெடுநாட்களுக்கு முன் யாக்கவ் பெரெல்மானின் நூலில் படித்தேன். ஆனால் அறிவியல்விளக்கம் என்னதான் கற்பனையை விரித்தாலும் ஓர் எல்லைவரைதான். அது வாழ்க்கையில் எங்கோ நம் அனுபவமென நிகழ்கையில்தான் அது ஒரு இயற்கைத்தரிசனமாக விரிகிறது.

ஊற்றுகளின் அருகே நீரை மிகையாக உறிஞ்சி ஓங்கிவளரும் மரங்கள் இருப்பது நீர் அங்கே கிடைப்பதனால்தான் என்பது நம் இயற்கையான புரிதல். நீர்ச்சுனைமேல் நிழலைப்பரப்பி நீரை ஆவியாகாமல் பாதுகாக்க காடு எடுக்கும் முயற்சி அது என்பது சூழியல் அறிவு. ஆனால் ஈரட்டிக்காட்டில் சுனை ஒன்றைச்சுற்றி நீர்மருதமரங்கள் அடிமரம் செழித்து, கிளைகோத்து,இலைக்கூரை பரப்பி நீரூற்றை இருட்டுக்குள் மறைத்து வைத்திருப்பதைக் கண்டபோது காடு அதை கைகளால் பொத்திவைத்திருப்பதாகத் தோன்றி மெய்சிலிர்ப்படைந்தேன்.

உருளும் சக்கரங்கள் இழுவிசையை பின்னுக்கு உந்தும் விசையாக மாற்றித்தான் முன்னகர்கின்றன. அந்த விசை பனிப்படலம்மீது வண்டியின் எடையுடன் கூடுதல் எடையாக சேர்ந்துவிடுகிறது. குதிரைகள் குளம்புகளின் மிகச்சிறிய பகுதிக்குள் உடல் எடையை செலுத்துகின்றன. பனிப்பாளத்தை அவை பிளந்துவிடும் என்கிறார் யா பெரெல்மான்.

டிஸ்னியின் டோகோ என்ற படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். ஸ்லெட்ஜ் வண்டியை நாய்கள் இழுத்துச் செல்கின்றன. வரைகலையின் சாத்தியங்களை திரைப்படச்செயல்பாட்டாளனாக இன்று அறிந்திருக்கிறேன். ஆனாலும் என்னை ஒரு நேரடியனுபவம் என உள்ளிழுத்துக்கொண்டது அந்தக்காட்சி. நான் படம்பார்த்துக்கொண்டிருப்பதையே உணரவில்லை. இசையை கேட்கவில்லை, சூழலைக்கூட உணரவில்லை.அங்கிருந்தேன், அவர்களுடன்.

உறைந்த ஏரியின் பனிப்பாளம் சவுக்கடிச் சொடுக்கின் ஓசையுடன் நீண்ட கோடுகளாக விரிசலிட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த அறைகூவலை எச்சரிக்கையை எதிர்கொண்டு நாய்கள் விரைந்தோடுகின்றன. ஒரு மாபெரும் சதுரங்கக் களத்தில் நாய்களும் மனிதர்களும் தங்களையே காய்களென வைத்து கண்ணுக்குத்தெரியாத மாபெரும் ஆற்றல் ஒன்றுடன் விளையாடுகிறார்கள். வெல்கிறார்கள்.

திரைப்படம் என நிபுணர்கள், அறிவுஜீவிகள் அவ்வப்போது சிலவற்றை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நான் அவ்வாறு கொண்டாடிய பல படங்களை இன்று பேசுவார் இல்லை. காலத்தில் நீடிப்பவை நிகர்வாழ்வனுபவமாக ஆகிய, வாழ்வனுபவத்தை கனவால் கடந்து சென்ற சிலபடங்களே. இன்று கண்ணை நிறைப்பதே சினிமா என நினைக்கிறேன். டோகோ அத்தகைய படம்.

லியனார்ட் செப்போலா, தன் நாய் டோகோவுடன்

அலாஸ்காவின் பனியில் சறுக்குவண்டிகளை இழுக்கும் டோகோ என்ற நாயின் கதை இது. இதன் வரலாற்றுப் பின்னணி, அதை திரைப்படம் ஒட்டியும் வெட்டியும் செல்லும் விதம் பற்றியெல்லாம் ஆங்கிலத்தில் மிக விரிவாகவே எழுதிவிட்டார்கள். டோகோ உண்மையாகவே வாழ்ந்த நாய். 1913 முதல் 1929 வரை வாழ்ந்தது. லியனாட் செப்பாலா என்னும் நாய்பயிற்றுநரால் வளர்க்கப்பட்டது.

மெய்வாழ்க்கையில் டோகோ ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் முதன்மை வகித்தது. 1925ல் அலாஸ்காவில் நோம் என்ற ஊரில் டிப்தீரியா நோய் தாக்கியது. அவர்களுக்குரிய உயிர்முறி மருந்தை எவ்வகையிலும் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 20 நாய்வண்டிகளால் ஐந்தரை நாட்களில் 1085 கிலோமீட்டர் தொலைவுக்கு அந்த மருந்து ஜனவரி மாதத்தின் உறைந்த பனிப்பாளங்களாலான அலாஸ்காவின் நிலம் வழியாக கொண்டுசெல்லப்பட்டது. இது அலாஸ்கா சீரம் விரைவுப்பயணம் என்று செய்திகளில் புகழ்பெற்றது. அந்த பயணத்தின் முதன்மைநாய் என டோகோ இன்று கருதப்படுகிறது.

இந்தத் தொடரோட்டத்தில் பங்கெடுத்த இன்னொரு நாய் பால்டோ. கடைசியாக நோம் நகரைச் சென்றடைந்தது அந்தக் குழுதான். அதன் ஓட்டுநர் கன்னர் காசனும் பால்டோவும் பெரும்புகழ்பெற்றனர். நியூயார்க் நகரில் பால்டோவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் அந்த வரலாற்றில் விடுபட்ட டோகோவுக்கு உரிய இடத்தைக் கொடுக்கும் நோக்கம் கொண்டது. இது டோகோவையும் அதன் பயிற்றுநரான லியனாட் செப்பாலாவையும் கதைநாயகர்களாக முன்வைக்கிறது.

டோகோவின் மெய்வரலாறு இணையத்தில் உள்ளது. இன்று டோகோ ஓர் அரிய நாய்வம்சாவளியாக கருதப்படுகிறது. இந்தப்படத்தில் டோகோவாக நடித்திருக்கும் நாய் உண்மையிலேயே டோகோவின் குருதிவழி வந்தது. டோகோவைபோலவே தோற்றம் கொண்டது. நாய்களைப் பற்றி நமக்கு அந்த பிரமை எப்போதுமுண்டு, அவை சாவதில்லை. உடல்களிலிருந்து உடல்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றன என்று. உண்மையில் மனிதர்களும் அவ்வாறுதான்.

டோகோ படத்தின் கதை எளிமையான ஒரு சாகசம்தான். அதன் அழகு பனிவெளியை காட்சிப்படுத்தியதில் இருக்கிறது. இயற்கை தெய்வப்பேருரு என நின்றிருக்க மனிதன் எது அவனை இதுவரை கொண்டுவந்து சேர்த்ததோ அந்த உள்ளாற்றலுடன் அதை எதிர்த்து நிற்கிறான். இயற்கை தன் மைந்தனை எண்ணி எங்கோ கனிகிறது, வழிவிடுகிறது.

டோகோவில் என்னை கவர்ந்தது அந்த நாயின் குணச்சித்திரப் பரிணாமம். அது பிறவியிலேயே தலைவன். ஆகவே கட்டுப்படாதவன், தன் வழியை தானே கண்டடைபவன், புதிய வழிகள் தேடுபவன், தன்னைத்தானே வரையறை செய்துகொள்பவன். ஆனால் அன்பானவன், கடமையை உணர்ந்தவன். தலைவனை தலைவன் என நாம் கண்டுகொள்ளும் கணம்வரை அவன் எரிச்சலையும் ஒவ்வாமையையும்தான் உருவாக்குகிறான்.

இதை பெரிய ஆளுமைகளின் வாழ்க்கையில் எப்போதுமே காண்கிறோம். ஞானிகளாக கனிந்தவர்கள் கூட  இளமையில் அடங்காதவர்களாகவும் முரடர்களாகவும் கிறுக்குகளாகவும் இருந்திருக்கிறார்கள். எந்த நெறிகளுக்கும் பணியாதவர்களாகவும் எவ்வகையிலும் புரிந்துகொள்ளமுடியாதவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். ஏன் சுடலைமாடன் கதை, மாயாண்டிச்சாமி கதை போன்றவற்றில்கூட அவர்களின் இளமைக்காலத்தை பாடல்கள் சொல்லும்போது அடங்காமையையே விரித்துப்பாடுகின்றன.

அதை ஓஷோ ஓர் உரையில் விளக்குகிறார். அதை அடிப்படை ஆற்றல் [Elemental power] என வகுக்கிறார். அது வெறும் ஆற்றல் மட்டும்தான். படைப்பாற்றலோ செயலாற்றலோ அல்ல. அது முட்டித்ததும்புகிறது. வெளிப்பட வழிதேடி துடிக்கிறது. காமம், வன்முறை என அது வெளிப்படலாம். சாகசம், அத்துமீறல் என வெளிப்படலாம். அது சரியான பாதையை கண்டடைந்துவிட்டால் அறிவாக, சேவையாக, ஞானமாக தன்னை உருவமைத்துக் கொள்கிறது. பெருங்கொலைகாரனிலும் பெருங்கலைஞனிலும் ஞானியிலும் வெளிப்படுவது ஒரே விசைதான் என்று ஓஷோ சொல்கிறார்.

உயிர்த்துடிப்பே உருவாக இருக்கிறது குட்டி டோகோ. அதை எங்கும் கட்டிப்போட முடியாது. அதை எதுவுமே கட்டுப்படுத்தாது. அதற்கு அனைத்தும் விளையாட்டுதான். துள்ளிக்குதிக்கிறது. ஓடிக்கொண்டே இருக்கிறது. செப்பாலாவின் வண்டிக்கு குறுக்காக பாய்கிறது. பிறநாய்களை அலைக்கழிக்கிறது. அதை பயிற்றுவிக்கவே முடியவில்லை. அது அடங்காதது, அதற்கு செலவழிக்கும் உழைப்பு வீண் என்று செப்பாலா கருதுகிறான்.

“நான் நாய்களை பயிற்றுபவன். எனக்கு அவை செல்லப்பிராணிகள் அல்ல. அவற்றுடன் எனக்கு மெல்லுணர்வுகளும் இல்லை. அவற்றுக்கு செலவழிக்க எனக்கு நேரமில்லை” என்கிறான். டோகோவை எங்காவது ’தள்ளிவிட’ முயல்கிறான். ஆனால் டோகோ தன் உரிமையாளர் எவர் என்று முடிவெடுத்துவிட்டது. எங்கே கொண்டு சென்றுவிட்டாலும் மறுநாள் காலை அது வாசலில் மகிழ்ச்சியுடன் துள்ளிக்கொண்டு நின்றிருக்கிறது. அதைக்கண்டு செப்பாலா அடையும் எரிச்சலும் அவர் மனைவியின் புன்னகையும் அழகான தருணங்கள்.

செப்பாலாவின் மனைவி அவளுக்குள் இருக்கும் தாய்மையால் டோகோவின் அடங்காமைக்குள் இருக்கும் உயிராற்றலை அடையாளம் கண்டுகொள்கிறாள். எப்போதுமே அது அப்படித்தான், அன்னையர் ரசிப்பது அதைத்தான். அவர்கள் கருவுற விரும்புவதும் அந்த ஆற்றலைத்தான். முன்னரே வகுக்கப்பட்ட நெறிகளின் அடையாளமான தந்தைக்கு அந்த ஆற்றலின் மீறல் எரிச்சலை அளிக்கையில் அன்னையர் அந்த மீறலை ஊக்குவிக்கிறார்கள். ஏனென்றால் அது அவர்கள் வழியாக நிகழும் ஒரு முன்னகர்வு.

டோகோ ஒரு தலைவன் என செப்பாலா புரிந்துகொள்ளும் கணம் ஒரு தரிசனமாகவே அவனில் நிகழ்கிறது. தலைவன் முன்னால் மட்டுமே செல்லமுடியும். வழிகாட்ட மட்டுமே முடியும். அதற்குக் குறைவாக எதையும் அவனால் ஏற்கமுடியாது. பிறப்பிலேயே டோகோ தலைவன். அதை மற்றநாய்கள் உடனடியாக புரிந்துகொள்கின்றன. டோகோ செப்பாலாவின் ஸ்லெட்ஜின் முகப்பில் நிலைகொள்கிறது.

வாழ்நாள் இறுதி வரை டோகோ தலைமைக்கு குறைந்த ஒருநிலையை ஏற்றுக்கொள்வதே இல்லை. கால் உடைந்து ஓடமுடியாமலாகும்போது அதை வீட்டில் விட்டுவிட்டுச் செல்கிறான் செப்பாலா. அது தடைகளை உடைத்து மீறி ஓடிச்சென்று தன் இடத்தை பிடித்துக்கொள்கிறது. தலைமைப்பண்பு என்பது உயிர்களுக்கு இயற்கை உருவாக்கி அளித்த ஒன்று. அது ஒரு கலாச்சாரப்படைப்பு அல்ல, உயிரியல் ஆக்கம். டோகோ ஓர் அரசன். இளவரசனாக பிறந்து அரசனாகி, முதிய தந்தையாகி இளவரசர்களை பிறக்கவைத்து நிறைவாழ்வு வாழ்ந்து மறைகிறது.

இந்தப்படம் முழுக்க டோகோவின் கம்பீரமான அசைவுகளை, அமைதியை, உறுதியை, தன்னை யாரென தானே முடிவெடுத்துக்கொள்ளும் அதன் நிமிர்வை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்பண்புகள் மானுடன் தன் கற்பனையால் விலங்குமேல் ஏற்றுவதல்ல. தன்னிலும் விலங்கிலும் மானுடன் கண்டடைவது. ஒருவகையில் இயற்கையின் ரகசிய நெறியொன்றை, தெய்வ ஆணை ஒன்றை கண்டடைவதற்கு நிகரானது. நாயை அறிந்தவர்கள் டோகோவின் மேலிருந்து ஒருகணமும் கண்களை நகர்த்தாமல் இப்படத்தை பார்ப்பார்கள்.

டோகோ வெல்கிறது, வெற்றிக்கென பிறந்தது அது. ஆனால் அந்த வெற்றி அதன் ஆளுமையின் வெளிப்பாடு. அதன்பொருட்டு மானுடர் அளிக்கும் எதுவும் அதற்கு தெரியாது. அதன் உலகம் வேறு. அது கௌரவிக்கப்படவில்லை, இன்னொரு நாய் அப்புகழைப் பெற்றது என்பவை செய்திகளாக படிக்கையில் வேறுவகை உணர்வை உருவாக்கலாம். நேரில் என டோகோவை பார்த்துக்கொண்டிருக்கையில் அந்த அரசனுக்கு இவையெல்லாம் என்ன பொருட்டு என்றே எண்ணத்தோன்றுகிறது.

இத்தகைய படங்களில் நாய்கள் ‘தியாகம்’ செய்து உயிர்விடுவதை காட்டுவார்கள். அதிலும் போர்களில் நாய்கள் உயிர்விடுவதை காட்டும் சில படங்களுண்டு, அவை போல எனக்கு ஒவ்வாமையை அளிக்கும் பிறிதில்லை. இந்தப்படத்தில் டோகோ ஆற்றுவது ஆற்றி மைந்தருடன் பெருகி வாழ்ந்து நிறைவடைகிறது.

பார்த்து முடித்தபின்னரும் நெடுநேரம் சினிமாவிலேயே அமர்ந்திருக்கும் அனுபவம் அரிதாகவே எனக்கு நிகழ்கிறது. அப்படிப்பட்ட திரையனுபவங்களில் ஒன்று டோகோ.

அய்யா!

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – மேலும்…
அடுத்த கட்டுரைஆ.மாதவன் -அஞ்சலி