அதர்வம்- ஒருகடிதம்

ஆசிரியருக்கு,
புலன்கள் உணரும் அழகெல்லாம் போகத்தின் விதை விரிவே. போகங்களெல்லாம் தீதின் விதை விரிவே. தீது வளர்தலின்,பரவலின்,பன்னிற முகம் காட்டலின் இயக்கு சக்தி. தீது உயிரினத்தின் அத்தியாவசியம்,பிரபஞ்சத்தினது கூட.

வேகமும் எதிர்பாராத் திடீர் திருப்பமுமாக அறிமுகமாகும் ஒளியின்,அழகின்,அழிவின் வடிவாக ஊழில் பிறக்கும் திரௌபதி. தட்டில் அவளின் முகம் பார்க்கும் ஆவலில் கதா பாத்திரங்களின் தோள்களின் பின்னால் எம்பிக்கொண்டு இருக்கை நுனியில் வாசகன். ஏற்கனவே துருபதன் யாஜனை சந்திக்கும் முன் (அந்த மனிதர் ஓர் உலர்ந்த வவ்வால் போலிருந்தார்) வாயிலில் கண்ட நபரின் வடிவில் (ஏழடிக்குமேல் உயரம்கொண்ட பிரம்மாண்டமான ஒரு மனிதன் அவர்களைநோக்கிவந்தான்.அவன் முகம் பலவகைகளில் சிதைந்து கோரமாக இருந்தது. நாசியே இல்லை. மயிர்மண்டிய இரு துளைகள். தொங்கும் உதடுத்துண்டுகள்) கிடைத்த துப்பில் ஒரு வாசகன் ஊகித்த முகத்திற்கு முற்றிலும் எதிராக திரௌபதி காட்டப்படும் போது சில்லிடவைக்கும் அதிர்ச்சி, பின்னணியில் (இனிய மயிலகவல் ஓசையில்தான் இருந்தன. பளிங்கில் உதிரும் பொன்மணிகள் போலச் சொற்கள் தெறித்தன. விடியல் நதிமேல் வெயில் போல வேதகோஷம் அந்த தருணத்தை நிறைத்து பரவி பொன்வெளியாக ஆக்கியது).
(அத்தனை பெருங்காவியங்களின் வர்ணனைகளையும் வெறும் சொற்களாக ஆக்கும் பேரழகி ஒருத்தி அவனைநோக்கிப்புன்னகை செய்தாள்) கதைகளில் பொதுவாக இதன் எதிர்மறையே புனையப்படும், சாத்தியப்படும். காக்கவைக்கப் பட்டு கடைசி நுனி நோக்கி நகர்த்தி , இங்கு அவிழ்க்கப் பட்ட புதிர் துனுக்குறலுடன் வாசகனை உள் வெளியாகத் திருப்பிப் போடுகிறது.

அறிதலில், இருள் ஒளி இல்லை, நன்று தீது இல்லை, வேண்டியது கூடாதது இல்லை, ( மனிதனுக்கு அன்னியமான ,விலக்கப்பட்ட ஞானம் எதுவுமே இல்லை என்பார் என் தமையனார் . அறிவை அடையும் வழிகளையெல்லாம் அந்த அறிவே நியாயப்படுத்தும் என்பார்)
அதே சமயம் எந்த சிறு அசைவின் அடியிலும்,குறைந்தபட்ச அறிதலிலும் உறைந்திருப்பது
(தூய அறிவென்று ஏதுமில்லை . அறிவதெல்லாம் நம்முள் சென்று அகங்காரமாகவே மாறுகிறது .அறத்தால் வழிநடத்தப்படும் அறிவு மட்டுமே மனிதனுக்குப் பயன் தரக்கூடியது…)
துவங்கியபின் அழிவின் விரிவும் , செல்தொலைவும், அளவும் ஒரு அணுவெடிப்பை நினைவூட்டுகிறது. ( பிரம்மாண்டமான பேரழிவுச் சக்தியை வசப்படுத்தி பயன்படுத்திக் கொள்ள முயல்வது .இதன் உண்மையான பலன் என்னவென்று நாம் அறிய முடியாது ,அந்த சக்திகளே அறியும்) கெடுதல் ஆயினும் முதலில் பரத்தல் நன்றே. ஆம் பறந்து கேடுக !
இவ்வளவு எழிலுடன்,இவ்வளவு வண்ணத்துடன்,இவ்வளவு இன்பத்துடன் தீது என்னை ஒரு மோகினி போல் அழிக்குமானால் அது அழிவுக்கே ஆயினும் நான் அவள் மடிக்கு தலை கொடுப்பேன்.
அனால் ஊர்ந்து சென்ற ஒரு நாகத்தின் சுவடில் தென்படுவது அழிவும் நசிவுமல்ல , அழகும் ஆக்கமும் ஆன அனுபவம், இக்கதை வாசிக்கும் அனுபவம்.

கிருஷ்ணன்.

 

அதர்வம் [சிறுகதை ]

 

முந்தைய கட்டுரைகலை-ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்