[2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி வெளியிடப்படும் சுரேஷ்குமார இந்திரஜித்- வளரும் வாசிப்பு என்னும் நூலின் முன்னுரை. ஜெயமோகன்]
சுரேஷ்குமார இந்திரஜித் தமிழ் இலக்கியத்தின் ஒரு காலகட்டத்தின் இலக்கிய நுட்பம் ஒன்றின் பிரதிநிதி. குறைத்துச் சொல்லுதல், முடியுமென்றால் சொல்லாமலேயே இருந்துவிடுதல், என்னும் கலைப்பாணி அது. அவரது அலையும்சிறகுகள் என்னும் முதல்சிறுகதைத்தொகுதி எண்பதுகளின் தொடக்கத்தில் அதன் ‘கதையற்ற தன்மை’க்காகவே கவனிக்கப்பட்டது
சுரேஷ்குமார இந்திரஜித்தின் உலகம் பெரிதும் நகர்சார்ந்தது. மனிதமுகங்கள் இருக்கும், கதாபாத்திரங்களாக அவை வரையறைசெய்யப்பட்டிருக்காது. இடங்கள் இருக்கும், அவை மேலதிகக் குறியீட்டு அர்த்தங்களைச் சுமந்துகொண்டிருக்காது. உளவியல் அவதானிப்புகள் இருக்கும், உளமோதல்களின் நாடகத்தனம் இருக்காது. நிகழ்வுகள் இருக்கும் கதை இருக்காது
ஆனால் இந்த சித்தரிப்புகள் வழியாக எப்போதும் வாழ்க்கையின் ஒரு துண்டை அவர் வெட்டி எடுத்துவைக்கிறார். ஆகவே அவை கலைப்படைப்புகளாக ஆகின்றன. சென்ற முப்பதாண்டுகளாக சீராக, மென்மையாக ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு கதையுலகம் அவருடையது. அது விவாதப்பொருள் ஆனதில்லை. தீவிரமான கவனிப்பைப் பெற்றதுமில்லை.
ஆகவே 2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அவருக்கு வழங்கப்படுவதை ஒட்டி இளைய படைப்பாளிகள் , வாசகர்கள் அவரைப்பற்றி எவ்வண்ணம் மதிப்பிடுகிறார்கள் என்று அறிய விரும்பினோம். பத்து கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு கோணங்களில் அடுத்த தலைமுறையினர் சுரேஷ்குமார இந்திரஜித்தை ஆராய்கிறார்கள்
இளைய தலைமுறையினர் என ஓர் எல்லை வகுத்துக்கொண்டமையால் சுரேஷ்குமாரின் தலைமுறையைச் சேர்ந்த , முந்தைய தலைமுறையினராகிய சிலருடைய நல்ல கட்டுரைகளைச் சேர்க்க முடியவில்லை. ஆனால் இந்நூல் சுரேஷ்குமாரைப் பற்றி மட்டுமல்லாமல் இன்றைய வாசிப்புமுறைகுறித்தும் ஒரு தெளிவை அளிப்பது என நினைக்கிறேன்
ஜெயமோகன்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்