சுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை-1
சுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை 2
[ 3 ]
சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளுக்கும் நகுலனின் கதைகளுக்கும் நடுவே ஓர் உலகம் உள்ளது, அது சா.கந்தசாமியின் உலகம். உலக இலக்கியத்தில் சுரேஷ்குமார இந்திரஜித்தின் பாணியில் எழுதியவர் என்று தேடினால் உடனே சிக்குபவர் ஜான் ஓ ஹாரா.
ரசனை விமர்சனத்தின் நெறிகளின்படி ஒரு படைப்பாளியை நாம் வெவ்வேறுவகையான ஒப்பீடுகள் வழியாகவே புரிந்துகொள்கிறோம். அவருடைய முன்னோடிகளுடன், உலக இலக்கிய சூழலுடன் ஒப்பிடுகிறோம்.அவருடைய கதைகளுடன் ஒன்றையொன்றும் ஒப்பிடுகிறோம். ஒற்றுமைவேற்றுமைகள் வழியாக அவரை அணுகுகிறோம். புரிந்துகொள்ளும் அளவுக்கு அணுகி, வகுத்துவிடுவதற்கு முன்னரே நின்றுவிடுகிறோம்.
சா.கந்தசாமியின் ஒரு கதைத்தொகுதியின் தலைப்பு ‘சாந்தகுமாரி’ எந்த அடைமொழியும் வர்ணனையும் இல்லை. பெரும்பாலான அவருடைய கதைகள் அந்த தலைப்புபோலவே ஓர் புனைவு உத்தியாகவே தன்னை தட்டையாக ஆக்கிக்கொண்டவை. வெறும் நிகழ்வுகளின் தொடர், அவை சுழன்று ஒரு புள்ளியை காட்டுகின்றன. அல்லது ஒன்றையொன்று அவை தொடுத்துக்கொள்வதன் வழியாக ஒரு சரடை வாசகனுக்கு உணர்த்துகின்றன. மிகமிக அரிதாகவே தக்கையின்மீது நான்கு கண்கள் போல ஒரு படிமமாகத் திரள்கின்றன
சா.கந்தசாமி ‘கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதே என் அழகியல்’ என்று அறிவித்துக்கொண்டவர். அந்த அழகியலை அவர் நாவல்களாகவும் முன்னெடுத்தார். கதை என்பது முன்னரே ஆசிரியன் உருவாக்கிக்கொண்ட ஒரு மையம் சார்ந்தது என்றும், அது ஆசிரியனை வலுவாக புனைவுக்குள் இருத்துகிறது என்றும் ஆகவே அது தவிர்க்கப்படவேண்டியது என்றும் கந்தசாமி கருதினார்.
சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளைப்பற்றியும் அதையே சொல்லமுடியும். கதைகளை வெளியேற்றிவிட்ட கதைகள் அவை. அவற்றை அகதைகள் என்று அடையாளப்படுத்துவேன். எந்த இலக்கியக்கலைச்சொல்லும் ஒரு சிறுவேடிக்கைச் சொல்லாட்சியாகவே அறிமுகமாகிறதென்பதனால் இக்கலைச்சொல்லை தொடர்ந்து கையாள்கிறேன். அகதை என்பது சம்ஸ்கிருதத்தில் கதனம் என்று சொல்லப்படுவது. அதாவது வெறும் சித்தரிப்பு அல்லது கூற்று [Narration or account] அதற்கு ஆசிரியன் எந்த இலக்கையும் மையத்தையும் அளிக்கவில்லை. அவன் அதை கூறுவதனூடாக, அதை அவன் முன்வைப்பதனூடாக அது அர்த்த ஏற்றம் கொள்கிறது
கலையில் கண்டெடுத்தபொருட்களாலான கலை வடிவம் ஒன்றுண்டு. வேர்முடிச்சுகள், கழிகள், கூழாங்கற்கள் போன்ற பொருட்களை எந்த மாற்றமும் இன்றி குறிப்பிட்ட வகையில் முன்வைப்பதன் வழியாக உருவாக்கப்படும் அர்த்தம் கொண்ட கலை அது. forefronting என்று சொல்லப்படும் முன்வைத்தல் வழியாகவே அது அர்த்தமேற்றப்படுகிறது. முன்வைக்கப்படும் கோணம் மேலதிக அர்த்தத்தை அதற்கு அளிக்கிறது. அதற்கிணையான கதைசொல்லல் முறை என்று இதைச் சொல்லலாம்.
ஜான் ஓ ஹாராவின் கதைகளை எண்பதுகளின் இறுதியில் முதலில் படிக்கையில் ஏன் இவர் இலக்கியவாதி என்று சுட்டப்படுகிறார் என்னும் திகைப்பே எனக்கு உருவானது. அமெரிக்க வாழ்க்கையின் உணர்ச்சியற்ற, யுதார்த்தவாத சித்தரிப்புக்கு அப்பால் அவை ஏதுமில்லை என்ற எண்ணம் உருவானது. ஆனால் பின்னர் அவருடைய சமகாலத்தவர் உருவாக்கிய புனைவுகளின் பின்னணியில் அவரை மதிப்பிட்டபோது உருவான சித்திரம் பிறிதொன்று. அமெரிக்க எழுத்து இருவகையான அமெரிக்கச் சித்திரங்களைக் காட்டுகிறது. மோதலும் கொந்தளிப்பும் நிறைந்த ஒரு அகவய அமெரிக்கா. அதை நாம் ஃபாக்னர், பெக்கெட் போன்றவர்களில் காண்கிறோம். அமெரிக்காவின் வணிகப்புனைவுகளில் அமெரிக்க அன்றாடத்திலிருந்து சில சித்திரங்கள் எடுக்கப்பட்டு பரபரப்பான கதையுலகு ஒன்று உருவாக்கப்படுகிறது.
ஜான் ஓ ஹாரா அவ்விரு உலகங்களுக்கும் ஓர் அமைதியான எதிர்வினையை அளித்தார். அவருடைய கதைகள் நடுத்தர- உயர்நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்தவை. பெரிய கொந்தளிப்புகளில்லாத, சற்றே சலிப்பூட்டக்கூடிய, அன்றாடம் கொண்டவை. தத்துவக்குழப்பங்கள் அரசியல்மோதல்கள் ஏதுமற்ற அன்றாடம். வன்முறையற்ற ஒழுங்குக்குள் உருவாகி அமையும் சிடுக்குகள் மட்டுமே உள்ளன. நான் அமெரிக்கா சென்றபோது அமெரிக்காவுக்கு மிகநெருக்கமான ஆசிரியர் ஜான் ஓ ஹாரா தானோ என்னும் எண்ணத்தை அடைந்தேன். சாலையில் நான் கண்ட மக்களை ஜான் ஓ ஹாரா வழியாகவே புரிந்துகொள்ள முடியும். பெக்கெட்டும் ஃபாக்னரும் எந்த அளவுக்கு எனக்கு அன்னியர்களோ அந்த அளவுக்கே அவர்களுக்கும் அன்னியர்கள்தான்
கதையை வெளியேற்றிவிட்ட கதை ஒரு விந்தையைச் செய்கிறது. ஒரு திறம்படச் சொல்லப்பட்ட கதை அதன் கதைசொல்லியை நமக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. ஒரு சிற்பத்திலிருந்து சிற்பியை விலக்கமுடியாது. ஓர் அம்மியில் அதை செதுக்கியவன் இல்லை. அகதையில் இருந்து ஆசிரியன் கூடுமானவரை வெளியேறிவிடுகிறான்.கதை மட்டுமே நம் முன் நின்றிருக்கிறது, ஒரு உரைநடைத்துண்டாக. வாழ்க்கைபற்றிய சில சொற்களாக. அந்த சுதந்திரமே கதையிலிருந்து வெளியேறியதும் கதையால் அடையப்படுகிறது என நினைக்கிறேன்.
சுரேஷ்குமார இந்திரஜித்தின் ஒரு கதை இப்படி ஆரம்பிக்கிறது ’நான் உறையிட்ட கத்தியை இடுப்பில் செருகிவைத்திருக்கிறேன். மருமகள் வீட்டிலிருந்து சாப்பாடு வருகிறது. எங்கள் குடும்பம் உருக்குலைந்து போய்விட்டது’ கதையின் முதல் பத்தி இதுதான். இது கதையின் மொத்தத்தையும் சொல்லிவிடுகிறதென்பதை மீதிக்கதையை வாசிக்கையில் அறியலாம். அடுத்த பத்தி இப்படி ஆரம்பிக்கிறது ‘நான் முதலிலேயே மேகலாவிடம் கூறினேன். அந்தப்பையன் சரியில்லை. அவன் அப்பா ஒச்சாத்தேவர் வம்புதும்புக்கு போகிற ஆள்…’
சுரேஷ்குமார இந்திரஜித் எதையுமே விவரிப்பதில்லை. எதையும் வர்ணிப்பதுமில்லை. உணர்ச்சிகள் நேரடியாக வெளிப்படுவதுமில்லை. அடுத்த பேருந்து நிறுத்ததில் இறங்குவதற்கு முன்னர் ஒரு யதார்த்தவாதியான மூத்தவிவசாயி தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நம்மிடம் சொல்வது போன்றவை அவை. மிகவிரைவாக, தேவையான செய்திகளால் மட்டுமே முடைந்து அவை உரைக்கப்படுகின்றன.வாசகன் முன் வைக்கப்படுவது ஒரு விரைவான கோட்டுச்சித்திரம் மட்டுமே. இதை ஒருவகை சுருக்கவாதம் எனலாம்
சுருக்கவாதம் [minimalism] என்பது கலையின் அழகியல்கூறுகளில் ஒன்று. முதன்மையாக ஓவியத்தில் ஓர் இயக்கமாக அது தொடங்கியது. பின்னர் பல கலைகளிலும் அது படர்ந்தது. ஆனால் இலக்கியத்தில் ஓர் இயக்கமாக அது நிகழவில்லை. இலக்கியத்தில் எழுந்த சுருக்கவாதத்தன்மை கொண்ட எழுத்தை விமர்சகர்கள் சுருக்கவாதம் என்று அடையாளப்படுத்தினார்கள். ஜான் பார்த், வில்லியம் காஸ் போன்ற பலர் சுருக்கவாதத்தின் முகங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும்கூட வாசகனாக நான் அமெரிக்க எழுத்தில் காணும் தெளிவான சுருக்கவாதி என்றால் ஏர்னஸ்ட் ஹெமிங்வேதான். குறிப்பாக அவருடைய பிற்காலச் சிறுகதைகளில்.
குறைந்த சொற்கள் வழியாக விரைவான கோட்டுச்சித்திரமாக கதைசொல்லுதல் காஃப்காவின் குட்டிக்கதைகள் முதலே அறிமுகமானது என்றாலும்கூட அவை அவருடைய கவித்துவக் குறிப்புகளால் செறிவூட்டம் கொண்டவை. பெக்கெட்டின் பல கதைகளை அவ்வாறு சொல்லமுடியும் என்றாலும் அவை குறியீட்டுத்தன்மை அல்லது தத்துவக்குறிப்பு கொண்டவை. ஆகவே செறிவானவை. உருவகமாக்கல், வரலாற்றுக்குறிப்பு ஏற்றம், தத்துவப்படுத்தல் ஆகியவற்றையும் தவிர்த்துவிட்டு வெறும் சொற்கோட்டுச்சித்திரமென நிலைகொள்வதே மெய்யான சுருக்கவாதம் எனலாம்.
எவ்வளவு குறைத்துச்சொல்லமுடியுமோ அந்த அளவுக்கு மட்டுமே சொல்லி அனைத்தையும் உணர்த்த முயலும் அழகியல் உத்தி என சுருக்கவாதத்தை சுருக்கமாக வரையறைசெய்யலாம். இத்தகைய கூறுமுறை மனிதர்களின் வாழ்க்கையில் இயல்பானதுதான். ஒன்றை நாம் சொல்லும்போது மிகச்சுருக்கமான ஒரு வழியை கண்டடைவது எப்போதும் நிகழ்கிறது. ஆகவே இக்கூறுமுறை அதன் அசலான தன்மை காரணமாக என்றும் இலக்கியத்தில் இருந்துகொண்டிருக்கும்.இலக்கியத்தில் இருவகை சுருக்கவாதங்களைக் காணமுடியும். ஒன்று செவ்வியலில் இரண்டு நவீனத்துவத்தில்.
செவ்விலக்கியத்தின் வேர் பழங்குடி வாய்மொழி இலக்கியங்களில் உள்ளது. அவர்கள் தங்கள் நேரடியான இயல்பாலேயே குறைவாகச் சொல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பழங்குடி-நாட்டார் இலக்கியங்களின் அழகியல் சிறப்பாகவே இதைச் சுட்டிக்காட்டலாம். அவை நேரடி அனுபவத்திலிருந்து அப்படியே பதிவானவையாக இருக்கும். கவித்துவக் கற்பனையால் வளர்த்தெடுக்கப்பட்டவையாக இருக்காது. அவற்றை வாழ்க்கையில் இருந்து தொட்டெடுக்குமிடத்தில்தான் கவிஞனின் கற்பனை செயல்பட்டிருக்கும்.
பெரும்பாலான நாட்டார் பாடல்களில் சுருக்கவாதத்தின் அழகான வடிவங்களைக் காணமுடியும். சுருக்கவாதத்தின் ஆராதகராக – ஆனால் நடையின் இயல்பால் மிகைசொல்லியாக- இருந்த சுஜாதா நாட்டார்பாடல்களில் இருந்து இந்தவரியைச் சுட்டிக்காட்டி இதை அடைவதே தன் கதைசொல்லலில் இலக்கு என்று ஓரிடத்தில் சொல்கிறார்
கந்தனை காணவென்று- நான்
காவடி எடுத்தேனடி
உந்தனைக் கண்டுவிட்டேன் -இனி
ஊருக்கு போகமாட்டேன்
சங்க இலக்கியங்களில் இந்தக் சுருக்கவாத நோக்கை தொடர்ந்து காணலாம். வர்ணனைகளில் மிகயதார்த்தமான நேரடி மனப்பதிவு இருக்கும். ‘மயில்கால் அன்ன மாக்குரல் நொச்சி’ என ஒரு கவிஞன் சொல்லும்போது எந்த மிகையும் இல்லை. நொச்சியின் இலைகள் மயிலின் கால்விரல்கள் போல மூன்றாகப்பிரிந்துதான் இருக்கும். அது ஒருவகை செவ்வியல் சுருக்கவாதம். வர்ணனைகளில்கூட இயல்பான ஒப்புமை, மேலதிகமான எந்த கற்பனையும் இல்லாதது. ’
ஆனால் மேலும் நேரடியான சுருக்கவாதம் சங்கப்பாடல்களில் உண்டு. சுருக்கவாதத்தின் மிகச்சரியான உதாரணமாக அது முன்னரே பிரமிளால் சுட்டபட்டுள்ளது. பாரிமகளிர் எழுதிய ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்..’ என்ற கவிதைதான் அது. அதில் உச்சகட்ட உணர்வெழுச்சி மிகமிகச் சாதாரணமாக சொல்லப்பட்டுள்ளது. அது சங்கப்பாடல்களிலேயே கூட மிக அரிதான ஒன்றுதான்
சீன இலக்கியத்தில் சுருக்கவாதத்தின் இலட்சியவெளிப்பாட்டை அடைந்தவர் என்று பை ஜூயி [Bai Juyi ] குறிப்பிடப்படுகிறார். மிக நேரடியான எளிய மொழிவெளிப்பாடும் சுருக்கமான சித்தரிப்பும் கொண்ட பை ஜூயியின் கவிதைகள் பத்தொன்பதாம்நூற்றாண்டிலேயே சீனமொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யப்பட்டன. ஆனால் 1950 களுக்குப்பின்னரே ஐரோப்பிய சுருக்கவாத அழகியல் மரபில் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்தின
தமிழகத்தில் தொடக்ககாலச் செவ்வியல்மரபான சங்கக்காலக் கவிதை ஒருவகை செவ்வியல் சுருக்கம் கொண்டது. பின்னர் கவிதையின் வளர்ச்சி சுருக்குவதற்குப்பதிலாக வளர்த்தெடுப்பதை நோக்கித் திரும்பியது. அதை மானுடப்பண்பாட்டின் வளர்ச்சியின் விளைவு என்றே சொல்லலாம்.விழுமியங்கள், நெறிகள், அழகியல்கூறுகள், உணர்ச்சிநிலைகள் எல்லாமே சாத்தியமான உச்சநிலைகளை நோக்கிக் கொண்டுசெல்லப்பட்டன. ஒட்டுமொத்தமாக இதை கற்பனாவாதம் என்கிறார்கள். தமிழில் கற்பனாவாதப்பேரிலக்கியம் என்றால் அது கம்பராமாயணம்தான்
அதன்பின் நவீன இலக்கியக் காலகட்டத்தில் மீண்டும் சுருக்கவாதம் உருவானது. இம்முறை அது இயல்பாக உருவாகவில்லை. மிகுந்த பிரக்ஞையுடன் செவ்வியலிலும் நாட்டாரியலிலும் இருந்து கண்டெடுக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது. தனக்கு முந்தைய கற்பனாவாதமரபு அனைத்தையும் மிகையாக்கி நிறுவனமாக்கி விட்டிருக்கிறது என உணர்ந்த நவீனக் கலைஞன் அந்த மிகைகளைக் களைந்து ’இருப்பதை இருப்பதுபோல’ காட்டவேண்டுமென விரும்பினான். அதற்காக அவன் சுருக்கவாதத்தை கண்டடைந்தான்.
சுருக்கவாதம் என்பது நவீன இலக்கியத்தின் முக்கியமான அழகியல்மரபான இயல்புவாதத்தின் [Naturalism] அடிப்படையாகும். புறவயமான யதார்த்தமே உண்மையானது, பொதுவானது, மாறாதது என அது நம்புகிறது. உணர்ச்சிகள், சிந்தனைகள், கற்பனைப்பெருக்கு எல்லாமே அதன் மீது அகவயமாக ஏற்றப்படுவன மட்டுமே.அவற்றைச் செயற்கையாகவே எழுதமுடியும். எது நடந்தது என்பது மட்டுமே எல்லாருக்குரியது, எழுதப்படவேண்டியது. ஆகவே இயல்புவாதம் புறவய யதார்த்தத்தை மிகக்கூர்மையாகவும் கறாராகவும் சொல்லமுயல்கிறது. புறப்பொருட்கள், புறநிகழ்ச்சிகள் ஆகியவற்றை மட்டுமே சார்ந்து தன் புனைவை உருவாக்குகிறது.
தமிழில் நவீன இலக்கியம் உருவான ஆரம்ப காலகட்டத்திலேயே சுருக்கவாதநோக்குள்ள புனைவுகள் வர ஆரம்பித்துவிட்டன. அனைத்துக்கும் முதல்முன்னோடி வடிவை எழுதிய புதுமைப்பித்தன்தான் சில கதைகளை அவ்வகையில் எழுதியிருக்கிறார்.அதன்பின்னர் முற்போக்கு இலக்கியம் வலுப்பெற்றபோது இயல்புவாதம் தமிழின் முக்கியமான ஓர் அழகியல்வடிவமாக வளர்ந்து வந்தது.பூமணி தமிழில் இயல்புவாத எழுத்தின் ஒரு உச்சம் என்று சொல்லலாம்.
தமிழில் நவீனத்துவத்தின் முக்கியமான கலைஞர்களுக்கு சுருக்கவாத நோக்கில் ஆர்வமிருந்திருக்கிறது. ஜி.நாகராஜன் அவரது கட்டுரை ஒன்றில் சுருக்கவாதமே உண்மையான கலைவடிவ என வாதிட்டிருக்கிறார். அவருடைய ‘டெரிலின் சட்டையும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்’ போன்ற கதைகளை சுருக்கவாத அழகியலின் தமிழ் முன்னுதாரணங்களாகச் சொல்லலாம். நுண்விவரணைகள் கொண்டதாயினும் மிகவிரைவான கோட்டுச்சித்திரம் அது. அசோகமித்திரன் சில கதைகளை எழுதியிருக்கிறார். சென்னை நகர்ப்புற வாழ்க்கையின் சித்திரங்களாக மட்டுமே நின்றுவிடும் கதைகள் அவை.
சுருக்கவாத அழகியல் தமிழில் ஒரு தெளிவான அடையாளமாக ஆனது சுரேஷ்குமார இந்திரஜித் படைப்புக்களின் வழியாகத்தான். சுரேஷ்குமார இந்திரஜித் வழக்கமாக இயல்புவாத எழுத்தாளர்களிடமிருக்கும் சில அடிப்படைகளையும் தவிர்த்துவிடுகிறார். இயல்புவாதம் புறவயமான பொருள்மய உலகை துல்லியமாகச் சித்தரிக்க முயற்சி எடுத்துக்கொள்ளும். ஒருவகையான புகைப்படத்தன்மையுடன் அவர்கள் கதைக்களனை காட்டுவார்கள்.
சுரேஷ்குமார இந்திரஜித் அந்த வகை சித்தரிப்பையும் முழுமையாக தவிர்த்துவிடுகிறார். இடங்கள் பொருட்கள் வர்ணிக்கப்படுவதே இல்லை. வெறும் நிகழ்ச்சிகள் மட்டுமே கதைகளில் உள்ளன. தனக்கு புறவய உலகைக் காட்டுவதில் ஆர்வமில்லை என அவர் பலவாறாகச் சொல்லியிருக்கிறார். அகவய உணர்ச்சிகளை சொல்வதிலும் அவர் ஈடுபடுவதில்லை. அவருடைய புனைவுலகில் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் அவற்றை ஒட்டிய சில எண்ணங்களும் மட்டுமே உள்ளன
இவ்வாறு ரத்தினச்சுருக்கமாக ஆக்கப்பட்ட கதையுலகம் வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறு வகையான வாழ்க்கைகளை எளிமையாகச் சொல்லிச் செல்வதுபோல தோன்றும். வெறும் வாழ்க்கைத்துணுக்குகள், வேறென்ன என்ற எண்ணத்தையும் வாசகனுக்கு உருவாக்கலாம். ஆனால் இந்தவாழ்க்கைகளை அவர் தொகுத்துவைக்கும் விதத்தில், நிகழ்ச்சிகளை தொடுக்கும் விதத்தி, நடுவே அவர் விடும் சிறிய இடைவெளிகள் வழியாக அவரது வாழக்கைநோக்கு வெளிப்படுகிறது. அவரது விமர்சனமும் பார்வையும் வாசகனை வந்தடைகின்றன. ஆகவேதான் இவை இலக்கியப் படைப்புகளாக ஆகின்றன
சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளை வாசிக்கும் வாசகன் அந்தப்பேருந்துப் பயணியிடம் பேசிவிட்டு நீண்ட சொந்தப்பயணத்தில் முழுக்க அவனைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் இன்னொரு பயணியைப்போன்றவன். .உறையிட்ட கத்தி கதையையே எடுத்துக்கொள்ளலாம் . தன் ஒட்டுமொத்தவாழ்க்கையும் விதவிதமான நிகழ்ச்சிகள் வழியாகச் செல்வதைச் சொல்லும் ஒரு முதியவரின் குரல் இது. அவரது மகளின் வாழ்க்கை அழிகிறது. பழிக்குப்பழி வாங்குவதற்காக அவர் குமுறிக்கொண்டே இருக்கிறார். ஆனால் ஒன்றும் செய்வதில்லை. உறையிடப்பட்ட கத்தியை பாதுகாப்புக்காக வைத்துக்கொண்டு திண்ணைகளில் சும்மாதான் இருக்கிறார்.
கதைநிகழ்ச்சிகளில் சில ஆவேசமானவை. சில சாதாரணமானவை. எல்லாவற்றையும் சமமான தோரணையில்தான் சுரேஷ்குமார இந்திரஜித் சொல்கிறார். நிகழ்ச்சிகளின் இடைவெளிகளில் உள்ளது கதையின் சாரம். சந்திரனும் பிறரும் சகோதரி அநியாயமாக சாகவிடப்பட்டமைக்குப் பழிவாங்கச் செல்கிறார்கள். சென்ற இடத்தில் அவர்கள்தான் கொலைசெய்யப்படுகிறார்கள். ஒரே ஓரிடத்தில் கதைசொல்லியின் குடும்பம் தெலுங்கு பேசுவது வந்து செல்கிறது. மேகலாவை கட்டிய குடும்பம் தேவர்கள். அந்த விஷயம் இக்கதையில் கதைசொல்லியின் செயலின்மையின் கொந்தளிப்பை புரிந்துகொள்ள வைக்கிறது. சட்டென்று நம் கவனம் தலைபபி நோக்கிச் செல்கிறது. உறையிடப்பட்ட கத்தி
சுரேஷ்குமார இந்திரஜிதின் ஆரம்பகாலக் கதையான விரித்தகூந்தல் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். கதை சுருக்கமான விவரணைகள் வழியாகச் செல்கிறது. குற்றாலத்தில் குளித்து முடித்து நிற்கும் பெண்களின் விரித்த கூந்தல் கதைசொல்லியை ஏதோ ஒருவகையில் தொந்தரவுசெய்வதுதான் கதை. அது கண்ணகியை நினைவூட்டுகிறது கொற்றவையாக ஆகிறது. ஆனால் அக்கதை காய்ந்தவிதை போல உயிரற்ற உயிர்ச்சாத்தியத்துடன் எழுதப்பட்டிருக்கும்.
”மலைமேல் இருக்கும் ஒரு அருவியைக் காண எண்ணி இருவரும் எழுந்து நடந்தனர். சிகரெட் பற்ற வைத்துக் கொண்டனர். சாலைக்குச் சென்று அங்கிருந்து பிரியும் மலைப் பாதையில் செல்ல வேண்டும். ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது பாழடைந்த ஒரு தேரின் அருகே தரையில் அலங்கோலமான ஆடைகளுடன் இளவயதுப்பெண் அமர்ந்திருந்தாள். தலையில் கலர் காகிதங்களை பூப் போலச் சொருகியிருந்தாள். அவனுக்கு தன் மனதில் அவள் உருவம் ஓர் இடம்பிடிக்க முயல்வதாகத் தோன்றியது. இவன் உதற, உதற அவள் உருவம் தடுமாற்றமின்றி சகஜமாக நுழைவதாகத் தோன்றியது”
என்பது கதையின் நடைக்கு சான்று. விரித்தகூந்தலுடன் ஆணின் சாவை உணர்த்துவதுபோல பெண்கள் அலைந்துகொண்டிருக்கும் சிற்றூரில் ஒரு பித்திப்பெண் எங்கோ கேட்கும் நாதஸ்வர ஓசையில் மயங்கி தன்னை மணப்பெண்ணாக அலங்கரித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். அந்த முரண்பாட்டில் இருந்து, அதை காணும் கதைசொல்லியின் மனம் கொள்ளும் உணர்வுகளிலிருந்து கதையைப் புனைந்துகொள்ளும் பொறுப்பு வாசகனுக்கே வழங்கப்பட்டிருக்கிறது.
இரண்டாம்கட்ட கதைகளில் சுரேஷ்குமார இந்திரஜித் ஒரு வடிவ நெகிழ்ச்சியை அடைந்திருக்கிறார். மொழியில்,கட்டமைப்பில் இயல்புத்தன்மை கைகூடியிருக்கிறது.முந்தைய கதைகளில் அவரிடமில்லாமலிருந்த ஓர் அங்கதம் இப்போது கூடியிருக்கிறது. ’வெற்றிச்செல்வி அலுவலகத்துக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தாள். மருத்துவக்கல்லூரியும் பொறியியல்கல்லூரியும் அவள் நிர்வாகத்தின்கீழ் இயங்கி வருகின்றன. வேலை என பெரிதாக ஏதும் இல்லை. அலுவலத்துக்குச் சென்று அமர்ந்தால்தான் அனைத்து நிறுவனங்களும் கட்டுக்கோப்புடன் நடக்கும் என்று நினைப்பதால் தினமும் செல்கிறாள். கணவர் கோயிலுக்குச் செல்ல தயாராகிவிட்டாரா என்று அறைக்குள் எட்டிப்பார்த்தாள். அவர் அப்போது பிரா அணிந்துகொண்டிருந்தார்’
சுரேஷ்குமார இந்திரஜித்தின் இரு கதைக்காலகட்டங்கள் நடுவே என்ன நிகழ்ந்தது? ஒரே வரியில் சொல்லப்போனால் இருத்தலியம் வந்துசென்றது. ஒரு படைப்பாளியாக சுரேஷ்குமார இந்திரஜித் எந்தவகையான தத்துவக்கொள்கையையும் கற்றவரோ சார்ந்திருப்பவரோ அல்ல. ஒருவகையில் அறிவார்ந்த தளம் ஏதுமில்லாத புனைவுலகமாகவே அவருடையது நமக்குத்தெரிகிறது. ஆனால் அவர் தன் சூழலில் இருந்து பெற்றுக்கொண்ட அறிவுத்தளம், தத்துவ அடிப்படை அவருடைய கதைகளில் உள்ளது
சுரேஷ்குமார இந்திரஜித் எழுதிய ஆரம்பகாலக் கதைகளில் காஃப்காவின் செல்வாக்கு உண்டு. அவர் காஃப்காவின் கதைகளை அந்த வயதில் எந்த அளவு படித்திருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் காஃப்கா அதிகமாகப் பேசப்பட்ட காலம் அது. அலையும்சிறகுகள் கதையில் ‘அவன்’ எப்போதும் தன்னை அன்னியப்படுத்திக்கொண்டவன், வேறு எங்கோ நின்று உலகைக் கவனிப்பவன். அவனுக்கு இங்கே அறம்சார்ந்த பொறுப்புகள் இல்லை, ஆகவே சீற்றங்களும் விமர்சனங்களும் இல்லை. அவன் வெறும் சாட்சி
ஆனால் இரண்டாம்கட்ட கதைகளில் அவனிடம் விமர்சனம் எழுந்திருக்கிறது. பலகதைகளில் நேரடியான பகடியாக அங்கதம் வெளிப்படுகிறது. ஏனென்றால் அவன் இப்போது புறவுலகை நோக்கி திரும்பிவிட்டிருக்கிறான். மெல்லமெல்ல அந்த பெயரற்ற அன்னியனான கதைசொல்லி மறைந்துவிட்டிருப்பதைக் காணலாம். அதற்குப் பதிலாக திட்டவட்டமான ஆளுமையும் அடையாளமும் கொண்டவர்கள் கதைசொல்லிகளாகவோ அல்லது கதைநாயகர்களாகவோ தென்படத் தொடங்குகிறார்கள். பழைய கதைகளில் வெறும் முகங்களாகவோ நினைவுகளாகவோ வந்த மனிதர்கள் பல்வேறு அரசியல் சமூகவியல் பிரச்சினைகள் கொண்டவர்களாக வந்து தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள்.
’அலையும் சிறகுகள்’ கதையில் இருந்து ’எலும்புக்கூடுகள்’ கதை வரைக்குமான நகர்வையே நாம் சுரேஷ்குமார இந்திரஜித்தின் பயணம் என்று கொள்கிறோம். இரு வேறு காலகட்டங்களின் கதைகள் இவை. தன்னில் ஒடுங்கிக்கொண்ட ஒரு யுகம். பாப்மார்லியின், ஜான் லென்னானின், காஃப்காவின் யுகம். அது சேகுவேராவின் யுககத்தின் இறுதிச் சோர்வின் காலகட்டம். எலும்புக்கூடுகள் கதையில் அந்த தனியனின் அகவுலகை உடைத்து வரலாறு உள்ளே வந்துவிட்டது. ஆதிக்கமும் எதிர்ப்பும் இணைந்து முடையும் அரசியல்புறவுலகின் ஒரு துளியே தான் என்றும், உண்மையென்பதுகூட ஒருவகை புனைவென்று வரலாறு காட்டிவிட்ட காலத்தில் வாழ்பவன் தான் என்றும் அவன் உணர்ந்துகொண்டுவிட்டிருக்கிறான். இந்த இரண்டாம் காலகட்டத்தைச் சேர்ந்தவை பிற்காலக்கதைகள்
அங்கே பெண்ணுடன் தனிமையிலிருப்பவனின் அறையின் சன்னலை தட்டி அழைக்கும் கணவன் அவனை இருண்ட சுழற்பாதைகளினூடாக அழைத்துச்சென்று மீளவே முடியாத புதிருலகில் விட்டுவிடுகிறான். என்றோ அறிந்த பெண்ணை என்றோ மீண்டும் சந்திப்பவன் அவள் ‘உன்னிடமிருந்து ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பினேன்’ என்று சொல்லக்கேட்டு ஒரேகணத்தில் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் சுழற்பயனத்தில் பின்னோக்கி ஓடி மீள்கிறான்.
ஆனால் வெவ்வேறு மனிதர்களாக தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைமாந்தர்களினூடாக அந்த அன்னியனான, தனியனான கதைசொல்லி அவ்வப்போது வந்துசெல்கிறான் என்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும். சிலுவையையும் சாமிடாலரையும் சேர்த்து கழுத்திலணிந்திருக்கும் விபச்சாரியைக் கண்டு அமைதியிழப்பவன் அவனே. இந்த கதைகளின் சுழற்சியின் அடியில் எப்போதும் பதைத்த கண்களுடன் அவனும் இருந்துகொண்டிருக்கிறான்.
“அன்றாட நிகழ்வுகளின் தற்செயல்களில் ஒரு திட்டமிடாத திட்டம் இருக்கிறது அதையே நாம் விதி என்கிறோம். அதன் சூதாட்டத்தை சொற்களின் வழியாக தொடர முனைவதே என் கதைகள்” என்று சுரேஷ்குமார இந்திரஜித் ஓர் உரையாடலில் சொல்கிறார்.ஆனால் புனைவுகளை வாசிப்பவர்கள் ஒன்றை அறிந்திருப்பார்கள், எல்லா புனைவுகளுமே இந்த புதிரைத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றன. மிகச்சாதாரணமான வணிகத்திரைப்படங்களின் கதையோட்டத்தில்கூட அதுதான் இருக்கிறது. சர்வசாதாரணமாக ஒரு மனிதன் தன் வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தால் தற்செயல்களின் புதிரான தொடர்ச்சியை தானே கண்டு திகைத்துப் பெருமூச்சுவிடுவதையே காண்கிறோம்.
அதற்கப்பால் இக்கதைகளினூடாக வாசகன் கண்டடையும் ஆசிரியனின் பார்வை என்ன என்று தொகுத்துக்கொள்ள முடியுமா? அலையும் சிறகுகள் கதையிலிருந்து வாசகன் கண்டடைவது தன்மேல் அவநம்பிக்கை கொண்ட ஒரு தனியனை. அவன் தன்னைத்தானே முடிவிலாது மீட்டிக்கொள்வதை. அந்த தனியனிலிருந்து எழுந்த பிந்தைய புனைவுலகில் சுரேஷ்குமார இந்திரஜித் வரலாற்றின்மேல், மானுடத்தின்மேல் அவநம்பிக்கையென அதை விரித்துக்கொண்டாரா என்று தோன்றுகிறது.
’மினுங்கும் கண்கள்’ விசித்திரமான ஒரு கதை. “அவனுடைய உள்ளுணர்வு இருளில் மிருகத்தின் கண்கள்போல மின்னுவது” என்று சுந்தர ராமசாமி ஜே.ஜே.சில குறிப்புகளில் சொல்கிறார். அந்தவரியிலிருந்தே இக்கதைக்கு வரமுடிகிறது. உச்சகட்டங்களில் மானுடரின் கண்களில் அவர்களின் சாராம்சம் மின்னுகிறது. இயல்பான அன்புணர்வு கொண்ட அந்தோணிராஜ் எட்டுத்திக்கும் மதயானைகளால் சூழப்பட்டிருப்பதன் சித்திரம் இது. அவருடைய வாழ்க்கையின் எல்லாமே பிழையென்றே நிகழ்கிறது. நண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி அடிக்கும்போது நிகழும் பிழை உதாரணம். ஒரு மகள் விவாக ரத்து கோரி நிற்கிறாள். மற்றொரு மகள் மதம் மாறி வாழ்கிறாள்.
அந்தோணிராஜ் பசித்துவந்த சிறுவனுக்கு உணவிடுகிறார். அவன் பசி தீர்ந்ததும் சட்டென்று கத்தியை எடுத்து அவர் கழுத்தில் வைத்து கொள்ளையிட்டுச் செல்கிறான். அதைச் சொல்லும் அந்தோணிராஜ் தான் அவனுக்கு உணவிட்டதால் கழுத்தில் கத்தியை இறக்காமல் விட்டான் என்று அந்த தீமைவெளியிலும் ஒரு சின்ன மின்மினி வெளிச்சத்தை புனைந்துகொள்ள முயல்கிறார். ஆனால் அவரை அந்தச் சிறுவனின் கண்களின் ஒளி அச்சுறுத்துகிறது. அவர் பகல் முழுக்க அவர் உருவாக்கிக்கொண்ட ஒளியில் வாழ்வார் இரவில் இருள்சூழ்கையில் அந்த கண்களின் மினுமினுப்பை கண்டு அஞ்சி பிரார்த்தனை செய்தபடி படுத்திருப்பார்.
ஜெயகாந்தனின் மேல் பெரும்பற்று கொண்டவர் சுரேஷ்குமார இந்திரஜித் என அவர் கூறினார். ஜெயகாந்தனின் உலகிலிருந்து எத்தனை விலகியிருக்கிறது, எத்தனை எதிர்மறையாக இருக்கிறது இவ்வுலகம் என்பது திகைப்பூட்டுகிறது. சென்றகாலங்களின் இலட்சியங்களிலிருந்து விலகி அகத்திருளில் அலைந்து புறஇருளின் வெளிக்கு வந்து நின்றிருப்பவன் நெடுந்தொலைவில் ஒரு மாயும்நினைவாக ஜெயகாந்தனை திரும்பிப் பார்க்கிறார் போலும்.
[ நிறைவு]