அழகியல் விமர்சனம் சார்ந்த வாசிப்பில் ஒருவழிமுறை படைப்புக்களை பலவகையாக வகுத்துக்கொள்வது. அந்த வகைபாடுகள் அறுதியானவை அல்ல என்றும், அவை ஒருவகையான வழிகளே என்றும் வாசகனுக்கு தெளிவு இருக்கவேண்டும். கோட்பாட்டுவிமர்சகர்களைப் போல அறுதியாக அடையாளப்படுத்திக்கொள்ள அவன் முயலக்கூடாது.
அழகியல் சார்ந்த விமர்சகனுக்கும் வாசகனுக்கும் படைப்பு வாழ்க்கை போலவே ஒன்றுதான். வாழ்க்கையின் ஒரு துண்டுதான். உயிருள்ளது, வளர்வது. ஒரு மெய்வாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தை எதிர்கொள்வதுபோலவே புனைவை எதிர்கொள்வதையே முதன்மையாக அவன் செய்யவேண்டும். அதை தன் கற்பனையில் விரிக்கவேண்டும். அதை மதிப்பிட்டு தொகுத்துக்கொள்ளும்பொருடே அந்த வகைபாடுகள்.
அவ்வகையிலான பலவகைபாடுகளில் ஒன்றென முதன்மை இலக்கியம், சார்பிலக்கியம் என ஒரு பிரிவினையைச் செய்துகொள்ளலாம். முதன்மை இலக்கியமே பேரிலக்கியம் என்பது என் கணிப்பு. முதன்மைப்படைப்பாளிகளின் புனைவுலகை ஒட்டுமொத்தமாக ஒற்றைப்புனைவுலகாக எடுத்துக்கொண்டு அதன் அலகுகளாக அவர்களின் புனைவுகளை வாசிக்கமுடியும். அப்புனைவுலகம் முழுமையானது. அது முழுமையாக ஒரு வாழ்க்கையை நெய்துவிடுகிறது. அதற்கு வெளியே இருந்து எதுவுமே தேவையில்லை. நிலம், உயிர்க்குலங்கள், மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை என அனைத்தும் அதன் புனைவுக்களத்திலேயே நிறைந்திருக்கிறது. வரலாறு, பண்பாடு, சமூகவியல், தத்துவம், மெய்யியல் என அது அனைத்தையும் தன்னுள் கொண்டுள்ளது.
ஒருவகையான தற்சுட்டுத்தன்மை [self-referential,] அது. அதை புரிந்துகொள்ள அதிலிருந்தே தொடர்புகளை, சூழலை எடுத்துக்கொள்ளமுடியும். தல்ஸ்தோய், தாமஸ் மன் முதல் கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸ் வரையிலான புனைகதையாளர்களின் படைப்புக்கள் இத்தகையவை. தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி புனைவுலகுகளும் இத்தகையவையே.
இன்னொருவகை புனைவுலகம் சார்பிலக்கியம் என்பது. அது முழுமையானது அல்ல. அது பிறிதொன்றின்மீதான விமர்சனமாக, பிறிதொன்றை விளக்குவதாக, பிறிதொன்றை நிரப்புவதாக நிலைகொள்கிறது. பிறிதொரு பெரும்களத்தில் அது வேர்கொண்டுள்ளது. அதைப்புரிந்துகொள்ளவும் விளக்கவும் அப்பின்புலத்திற்கு செல்லவேண்டும். அப்பின்புலத்தை அறிந்தவர்களுக்கான புனைவுலகம் அது. ஒருவகையில் துணைப்புனைவுலகம். அதிலுள்ள பொருட்கோடலுக்கு அது அப்பின்புலத்தை எப்போதும் சுட்டிக்கொண்டே இருக்கிறது.
சார்பிலக்கியங்களில் பல வகைகள் உண்டு. பெரும்பாலான அறிவுத்தளப் படைப்புக்கள் அத்தகையவை. அவை தங்களுக்கு பின்புலமாக ஓர் அறிவுப்பரப்பை கொண்டிருக்கின்றன. பலகாலமாக எழுதப்பட்ட நூல்களில் இருந்தே அவை தங்கள் அர்த்தங்களை எடுத்துக்கொள்கின்றன. வரலாறு, பண்பாடு போன்ற பிறதுறைகளில் இருந்து நூல்களை அவை பின்னணியாகக் கொள்ளலாம். முந்தைய இலக்கியப் படைப்புக்களையே பின்னணியாகக் கொள்ளலாம். அந்நூல்களை ஏற்கனவே வாசித்தவர்களால் மட்டுமே அவற்றின் பெரும்பகுதியை பொருள்கொள்ளமுடியும். போர்ஹெஸின் சிறுகதைகள் சிறந்த உதாரணம். க.நாசுவின் அவதூதர், வள்ளுவரும் தாமஸும் போன்றநூல்கள் உதாரணம்.
அங்கத- பகடி இலக்கியங்களில் ஒரு பிரிவைச்சேர்ந்தவை சார்புநிலைஅத்தகையவை. அவை வாழ்க்கைக்கு பதிலாக அறிவியக்கத்தை, இலக்கியத்தைப் பகடி செய்பவைஅவை எவற்றை பகடிசெய்கின்றன என்று அறிந்தாலொழிய நாம் அவற்றுக்குள் நுழைய முடியாது. ஆங்கிலத்தில் வுடி ஆலனின் எழுத்தும் தமிழில் பேயோன் எழுதுவதும் உதாரணங்கள்.புதுமைப்பித்தனே இவ்வகை எழுத்துக்கான பல முன்னுதாரண ஆக்கங்களை எழுதியிருக்கிறார். உதாரணமாக புதுமைப்பித்தனின் ‘இந்தப்பாவி’ ஒரு கனகச்சிதமான வூடி ஆலன் கதை.
இன்னொருவ. சார்பிலக்கியம் ஒன்றை நாம் உருவகம்செய்யலாம். அது சமகாலச் சூழலை ஒட்டுமொத்தமாக தன் சுட்டுப்புலமாகக் கொண்டுள்ளது. செய்திகள், சினிமாக்கள், மற்றும் இலக்கியங்கள். அவற்றை நினைவில் கிளர்த்துவதன் வழியாகவே அது தன்னை தொடர்புறுத்தமுடியும்.ஏனென்றால் அதற்கு ஒரு முழுமையான புனைவுலகம் இருக்காது. இத்தகைய ஆக்கங்கள் புறவுலகை பெரும்பாலும் சொல்வதில்லை. அகவுலகநிகழ்வுகளையும் சொல்லமுயல்வதில்லை. சமகாலம் என்பதை ஒரு பெரும்புனைவு என எடுத்துக்கொண்டு அதில் சில இடங்களில் தங்களை நுட்பமாகப் பொருத்திக்கொள்கின்றன. தங்கள் அடிப்படை அர்த்தங்களை அப்பெரும்புனைவுப்பரப்பில் இருந்து எடுத்துக்கொண்டு தாங்கள் மேலதிகமாக சற்று அர்த்தங்களை உருவாக்கிக் கொள்கின்றன.
தமிழில் எந்த இலக்கியமுயற்சிக்கும் புதுமைப்பித்தனே முதல்வடிவை எழுதியிருப்பார். இதற்கும் அப்படியே. என்றாலும் ஆனால் இவ்வகை எழுத்தின் முன்னோடி என்று க.நா.சுவையே சொல்லவேண்டும்.க.நா.சுவின் அவதூதர், வள்ளுவரும் தாமஸும், பித்தப்பூ போன்ற நாவல்கள் அவர் வாசித்தவற்றிலிருந்து உருவானவை. அவர் அவற்றுக்கு அளிக்கும் எல்லா பொருட்கோடல்குறிப்புகளும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பிறநாவல்களுக்கும் மற்றவகையான புனைவுகளுக்குமே சென்றுசேரும்.
க.நா.சுவின் கதைகளை காட்டிலும் அவருடைய கவிதைகளே இவ்வகை எழுத்துக்கு மிகச்சிறந்த உதாரணங்கள். அவை மிக நேரடியான எளிமையான நடையில் சொல்லப்பட்டவை. ‘அகதைகள்’ என்று அவற்றை வரையறைசெய்ய முடியும். அவற்றிலிருந்துதான் உண்மையில் தமிழில் ஒரு நீட்சி உருவானது. பின்னாளில் பா.வெங்கடேசன் அவ்வகைப்பட்ட கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார்
கடலிலே பல்லாயிரக்கணக்கான
துயரங்கள் புதைந்து கிடக்கின்றன.
கற்பனையுள்ள சென்னைவாசிகள்
மாலையில் பொழுது போக்க
ஆனந்தமாகக் கடற்கரைக்குச்
செல்கிறார்கள். கடலுக்கும்
ஆனந்தத்திற்கும் வெகுதூரம்
என்றறியாமல்
போன்ற க.நா.சு கவிதைகளை பார்க்கையில் அவற்றிலிருக்கும் திகைக்கவைக்கும் சர்வசாதாரணத்தன்மை, அதைக்கடந்து எஞ்சும் ஒரு சிறிய முள்போன்ற உறுத்தல், அது எழுப்பும் கற்பனை ஆகியவை கலந்த கலையனுபவமே பின்னாளில் சுரேஷ்குமார இந்திரஜித் வரை நீண்டது என்று சொல்லத் தோன்றுகிறது.
அவ்வகை எழுத்தின் அடுத்தகட்ட நகர்வு என்று நகுலனைச் சொல்லலாம். நகுலனின் முன்னுதாரண ஆளுமையாக க.நா.சு திகழ்ந்தார். நகுலனை க.நா.சுவின் சோகையான உருவாக்கம் என்று வேதசகாயகுமார் எழுதியதுண்டு.க.நா.சுவின் எழுத்திலிருந்து நகுலன் பெற்றுக்கொண்டது உணர்ச்சிகளோ விவரணைகளோ இல்லாத நடை, நேரடியான பேச்சுபோன்ற சொற்றொடர்கள், இலக்கியம் உட்பட அறிவுத்துறையிலிருந்தே குறிப்புகளை எடுத்துக்கொண்டு புனையும் முறை போன்றவை. இலக்கியத்தைப் பற்றிய இலக்கியம் எனச் சொல்லத்தக்கப் படைப்புகளை இருவரும் எழுதியிருக்கிறார்கள்
மேற்கொண்டு நகுலனிடம் உள்ள சிறப்புக்கூறுகள் மூன்று ஒன்று, இலக்கியக்கிசுகிசுக்களையும் வம்புகளையும் புனைவுக்குள் புகுத்திக்கொள்வது, அவற்றையே புனைவாக எழுதுவது.இது திருவனந்தபுரம் எழுத்தாளர்கள் அனைவருக்குமே இருக்கும் பொதுவான வழக்கம். நீலபத்மநாபன் தேரோடும்வீதி என்ற மாபெரும் நாவலையே இலக்கியக் கிசுகிசுக்களால் எழுதியிருக்கிறார்.ஆ.மாதவனும் கதைகளும் ஒரு நாவலும் அவ்வகையில் எழுதியிருக்கிறார்.
இரண்டாவது கூறு, நகுலனுக்கே உரிய வேதாந்தத் தேடலும் அதனுடன் இணைந்த இருத்தலியல்வாதமும்.நகுலனின் வேதாந்தம் அவருடைய மரபிலிருந்து வந்தது. பெரும்பாலும் ராமகிருஷ்ண பரமஹ்ம்சரை சார்ந்தே அவர் தன் வேதாந்த கருத்துக்களை உருவாக்கிக்கொண்டார்.ஓரளவு ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் செல்வாக்கும் அவரிடமிருந்தது.
வேதாந்தம் ஒரு தனிமனிதனின் இருப்பை அவனுடைய அகத்தின் ஐந்துநிலைகளாக பகுத்து ஐந்தாம் நிலை நோக்கிய பயணமாக அகச்செயலை வகுக்கிறது. அகம் மட்டுமேயான இருத்தல் என்னும் இருத்தலியல் கருத்துடன் அதை இணைத்துக்கொள்ளும் நகுலன் மல்லார்மே, பால் வலேரி ஆகியோரின் இருத்தலியல்தன்மை கொண்ட கவிதைத்தளத்தை சென்றடைகிறார். ஆனால் நகுலனின் கவிதைப்பாணி டி.எஸ்.எலியட்டிலிருந்து உருவானது.
நகுலன் எழுதிய சிறுகதைகள் ஒற்றை தொகுதியாக காவ்யா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இன்றைய வாசகன் அவற்றிலிருந்து ஓரிரு கதைகளுக்குமேல் பொருட்படுத்தும்படி எதையும் எடுக்க முடியாது. பெரும்பாலான கதைகள் அந்தந்த சூழலில் வெவ்வேறு எதிர்வினைகளாக எழுதப்பட்டவை. மிகச்சுருக்கமான குறிப்புகளாக, போகிறபோக்கில் எழுதப்பட்டவை அவை. இலக்கியவம்புகளே மிகுதி. அவற்றில் இருப்பவற்றில் சிறந்தகதை [எனறு அடையாளப்படுத்திய விமர்சகன் நான்தான்] ஒரு ராத்தல் இறைச்சி என்ற அக்கதை பலவகையிலும் ஒரு தொடக்கம்.
அக்கதையில் நகுலனின் பிறகதைகளில் இல்லாத ஓர் அம்சம் உள்ளது, கதைக்குள் விளக்கப்படாமல் வாசகனே தேடிச்செல்லும் ஓர் அம்சம் உள்ளது. சிலகதைகளில் அவற்றின் தன் வரலாற்றுத்தன்மையால் எவரைச் சொல்கிறார் அல்லது எதைச் சொல்கிறார் என்னும் மெல்லிய ஆர்வம் எழுகிறது [உதாரணம், தில்லைவெளி] அந்த இயல்பால் அவை சிறுகதை என்னும் வடிவை, குறைந்தபட்சக் கலைத்தன்மையை அடைகின்றன.
இவ்வகை கதைகளின் மதிப்பு என்ன? ஒரு பெரிய இலக்கியத்திரட்டு காலத்தில் உருவாகிவிடும்போது அவற்றிலிருந்து இவை உருவாகின்றன. ஐரோப்பாவின் இலக்கியத்திரள் மிகப்பெரியதென்பதனால் இத்தகைய இலக்கியமும் சற்று மிகுதி.இலக்கியவாசகர் சற்று முதிரும்போது பிறர் வாசிக்காத ஒன்றை தான் வாசிக்கவேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. ஒருவகை தன்முனைப்பினால்தான். அவர்களுக்கு இவ்வகை எழுத்து பிடித்திருக்கிறது. இலக்கியத்திரளை அறிந்தபின் அறியவேண்டிய எழுத்து இவை என்பதனால் நுழைவுத்தேர்வு கொஞ்சம் கடினம். அதையே ஒரு தகுதியாகக் கொள்கிறார்கள்.
இலக்கியவாசகர்களுக்கு இத்தகைய நுட்பமான ஆடல்களில் கொஞ்சம் ஆர்வம் இருக்கும் என்பது இயல்பே. ஆனால் இவ்வகை எழுத்திலேயே திளைப்பவர்கள் இலக்கியத்திலிருந்து வாழ்க்கைக்குச் செல்லும் பாதை இல்லாதவர்கள். வெறும் நூல்வாழ்வு மட்டுமே கொண்டவர்கள். கற்பனை குறைவானவர்கள். செய்திகளை தொடுத்து இணைத்து ஒரு கோலத்தைச் சமைத்துக்கொள்வதையே கலையனுபவமென அறிந்தவர்கள். இலக்கியத்தை மொழியனுபவம், வடிவ அனுபவம் மட்டுமாக அறிந்தவர்கள். வாழ்வனுபவமாக அறியாதவர்கள்.
சார்பிலக்கியமாக உருவாகி அவ்வெல்லையை கடந்து முதன்மை இலக்கியமாக நிலைகொண்ட சில படைப்புகள் உலக இலக்கியப் பரப்பில் உண்டு. இரண்டு மாபெரும் உதாரணங்கள் செர்வாண்டிஸின் டான்குவிசாட், ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸ். செர்வாண்டிஸ் தன்காலகட்டத்தின் வீரக்கற்பனை நாவல்களை பகடிசெய்யும்பொருட்டே எழுதினார். மத்தியகால இரண்டாம் வீரயுகத்தை நவீனயுகத்தில் மீட்டெடுக்கும் முயற்சிகளையே அவர் அதில் விமர்சனம் செய்தார். ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிசஸ் அவர் காலத்தைய ஃப்ராய்டியம் உட்பட மனிதனைச் சூழ்ந்த அறிவியக்கத்தின்மீதான எள்ளலையும் கசப்பையுமே எழுதினார்
ஆனால் காலப்போக்கில் அவை எவற்றை பகடி செய்தனவோ அவற்றை அறியாதவர்களுக்கும் கூட இலக்கியப்படைப்பாக தெரியும்படி தனித்த இருப்பு கொண்டன. ஆகவே முதன்மையிலக்கியங்களாயின. அவ்வண்ணம் நிகழ இருகாரணங்கள். ஒன்று அவை முழுமையான ஒரு மொழியுலகை உருவாக்கின.அவற்றிலிருந்த வரிகள் பழமொழிகளும் வழக்காறுகளுமாக பேச்சில்புழங்குமளவுக்கு பெருகின. ஒரு மொழிமண்டலமாக அவை ஆனதுமே தற்சுட்டுத்தன்மையை அடைந்து பிறிதொன்று தேவைப்படாமலாயின
அத்துடன் அவை செய்த பகடியும் விமர்சனமும் படிமங்களாலானவை. அப்படிமங்கள் வாசிப்பில் பெருகி தன்னியல்பான புதியபொருள் கொள்ளத் தொடங்கின. படிமங்களின் இயல்பு அது, அவை படைத்தவனை உதறி வாசகனிடம் பெருகுபவை. மிகச்சிறந்த உதாரணம், செர்வாண்டிஸின் டான்குவிசாட். எழுதப்படும்போது அதன் பகடி இலக்காக்கியது பழமைமீட்பு உளநிலையை. அந்த பகடி இன்றும் நீள்வதே. நுறாண்டுக்கால தனிமையில் ஜோர் ஆர்கேடியோ புவாண்டியா காந்தத்தால் மண்ணை அகழ்ந்து தொன்மையான துருப்பிடித்த கவசத்தை கண்டடையும்போது நாம் செர்வாண்டிஸை காண்கிறோம்.
ஆனால் பத்தொன்பதாம்நூற்றாண்டில் உலகமெங்கும் தேசிய அரசுகள் உருவாகி, அரசு என்னும் அமைப்பில் மக்கள் பங்கெடுக்கும் ஜனநாயகம் பிறந்து, மக்கள் அரசை விமர்சிக்க தொடங்கியபோது டான்குவிசாட் அரசு என்பதன் உருவகமாக மாறினார். உலகளவில் டான்குவிசாட் கேலிப்படங்களில் பெரும்பாலும் அரசு, அரசியல்வாதிகளின் உருவகமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். புரட்சியாளர்கள், சர்வாதிகாரிகள், ஜனநாயகவாயாடிகள் அனைவருமே டான்குவிசாட் ஆக உருவகிக்கப்பட்டிருக்கிறார்கள். விளைவாக இருபதாம்நூற்றாண்டில் டான்குவிசாட் முற்றிலும் புதியவாசிப்பைப் பெற்றது.மையப்புனைவென நிலைகொண்டது
பகடிகளாக எழுதப்பட்ட கலிவரின் பயணங்கள் [ஜொனதன் ஸ்விர்ப்ட் ], ஆலிஸின் அற்புத உலகம் [லூயி கரோல்] போன்றவற்றை அவற்றிலுள்ள குழந்தைக்கதை இயல்பால் வாசகர்கள் படிமங்களென வளர்த்துக்கொண்டனர். அவை எவற்றின் மீதான பகடிகள் என்பது இன்று எவருக்கும் தெரியாது. இன்று அவை சுட்டும் பொருட்கள் சமகாலம் சார்ந்தவை. நம்மால் உருவாக்கப்படுபவை.
தமிழில் நகுலனின் புனைவுமுறை பெரிதும் பொருட்படுத்தப்படவில்லை. ஏனென்றால் அதில் குறிப்பிடத்தக்க கதைகளென ஏதுமில்லை.ஆனால் ஒரு தற்செயல்தொடர்ச்சி என அது சுரேஷ்குமார இந்திரஜித்தில் நிகழ்ந்தது. ஒரு ராத்தல் இறைச்சி சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளின் சரியான முன்னோடிவடிவமாக அமைந்திருப்பதை வாசகர்கள் காணமுடியும்.
[மேலும்]