இரவில் வாழ்தல் -கடிதம்

சார்,

வழக்கம்போல உங்கள் தளத்திலுள்ள பழைய கட்டுரை, கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்தப்பதிவு கிடைத்தது.(இரவில் மட்டும் வாழமுடியுமா?)

நானும் இரவை விரும்புபவன். என்னுடைய தினம் காலை 9 மணியில் தொடங்கி, இரவு மூன்றிலிருந்து ஐந்து மணி வரை நீள்கிறது. இரவில்தான் நான் முழுமையாக இருக்கிறேன் என்று தோன்றுகிறது. அப்போது என்னுடைய மனநிலையில் மிகுந்த மாற்றத்தை உணர்கிறேன். பகலில் இருக்கும் தர்க்கரீதியான நான் அல்ல அப்போது. மாறாக மிகுந்த கவிதையுணர்வுடன், எதையும் ஏற்றுக்கொள்பவனாகவும், எளிதில் அழுதுவிடக்கூடியவனாகவும் இருக்கிறேன் அப்போது. மனதில் மிகப்பெரிய நன்றியுணர்வு நிறைந்திருக்கும் அக்கணங்களில். இதை நன்றாக உணர்ந்தபிறகு மெல்லமெல்ல என்னுடைய பகல் பொழுதுகளும் மாறிவிட்டன. இப்போதெல்லாம் என்னுடைய மென்மையான பகுதியை ஒளியில் ஒளித்துக் கொள்வதில்லை.

ஆனால் இரண்டு பொழுதுகளுக்கு இடையிலுள்ள வித்தியாசம் ஆச்சரியமானது. திற்பரப்பில் எல்லோரும் உறங்கியபிறகு, தண்ணீரின் சத்தத்தைக் கேட்டபடி கழித்த இரவை மறக்கமுடியவில்லை இப்போதும். இளமஞ்சலியிலும் அதுபோன்று இரு இரவுகள் கழிந்தன. செயற்கையான ஒளி ஏதுமின்றி இரவை இரவாகப் பார்க்கமுடிந்தபோதுதான், அது உண்மையிலேயே எவ்வளவு அழகு என்று புரிந்தது.

எனக்குப் பிடித்த கலீல் ஜிப்ரானின் கவிதை ஒன்று: “Man is two men, one is awake in the darkness and one is asleep in the light”

எஸ்.ராவின் பாதிப்பில் இரவைப் பற்றிய நான் எழுதிய பதிவை,மீண்டும் இங்கு (இருளும் ஒளியும்)பதிந்துள்ளேன்.

இரவைப் பற்றி மேலும் ஏதும் சொல்ல முடியுமா?

ஆனந்த் உன்னத்

அன்புள்ள ஆனந்த்

இரவில் மட்டும் வாழலாம். ஆனால் பகலை இழக்கவேண்டியிருக்கும். மானுட உலகியல் கலாச்சாரத்தில் பெரும்பகுதி பகலில்தான் இயங்குகிறது. அவற்றை முழுக்க நிராகரிக்க வேண்டும்

இரவில் மட்டும் விழித்திருக்கும் பல யோகிகளை நான் கண்டிருக்கிறென். அது ஒரு வகை யோகம்

ஜெ

Palidrome என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லை அனுப்ப இயலுமா?? தொந்தரவுக்கு மன்னிக்கவும்

ராதே.கெ

அன்புள்ள ராதே’

நான் அறிந்தவரை மிகச்சரியாக அப்படி ஒரு சொல் இல்லை. முன்பு செய்யுள் மரபில் அப்படி ஒரு வகை இருந்தது. அதற்கு விகடகவி என்று பெயர். அதை திருப்பிச்சொன்னாலும அதுவே வரும்

உரைநடையில் ஒரு பெயர் உருவாக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன்

ஜெ

அன்பின் ஜெயமோகன்,

இப்போதுதான் “சோற்றுக்கணக்கு”வாசித்தேன்.

உங்களின் சமீப கதைகளில் spiritual experience தான் கதைகளின் கருவாயுள்ளன.

கடவுளுக்கு அப்பாலான ஆன்மிகம் பற்றிய எண்ணங்களை மீள் வாசிப்பு செய்ய உங்கள் ‘அறம் மற்றும் சோத்துக்கணக்கு’ கதைகள் சரியான தேர்வு.

மொசுமொசுவென்ற மயிரடர்ந்த கைகள் அம்மாவை நினைவுறுத்துகிறது எனில் நாம் மனதின் ஈரத்தை தொலைக்காமல் இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் அது.

உணவு,அதன் ருசி,அது நம்மில் கிளர்த்தும் மண்ணின் மிச்சங்கள்,எல்லாம் இந்த கதையை ஒரு ஆன்மீக தளத்துக்கு கொண்டுபோகின்றன.

அதுவே இந்த கதை நாயகனை ராமலச்சுமியை திருமணம் செய்ய அகத் தூண்டுதலாயிருக்கிறது.

நான் இதுவரை எனக்கு சோறிட்ட கைகளை நினைத்துப்பார்த்து மனதுக்குள் நன்றி சொன்னேன்.

மனம் அதிரும்படியான, வாசிப்பின் எல்லைகளை விரியச்செய்கிற இதுமாதிரியான கதைகளை தொடர்ந்து எதிர்பார்க்கும் வாசகன்,,,

பேரன்பு,

சரவணன்,

முந்தைய கட்டுரைகதைகள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்