ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-3

ஒரு நாவல் நாற்பதாண்டுகள் நான்கு வாசிப்புகள்- 2 தொடர்ச்சி

இந்தியநாவல்களில் ஒரு பொதுவான கதைப்படிவம் காணப்படுகிறது. தொன்மையில் உறைந்த ஒரு சிற்றூருக்கு அன்னியன் ஒருவன் வருகிறான், அங்கே அவன் சில மாற்றங்களை உருவாக்குகிறான், அல்லது உருவாக்கமுயன்று தோற்கிறான், அல்லது அங்கிருக்கும் தேக்கநிலைக்குச் சாட்சியாக திகழ்ந்து மீள்கிறான். இந்தியா என்னும் பிரம்மாண்டமான அசைவின்மையை சித்தரிக்க இந்திய எழுத்தாளர்கள் கண்டடைந்த ஒரு கதைவடிவம் இது.

இந்த வடிவம் இங்கிருந்தே உருவாகி வந்தது. இங்கே எழுதவந்த முன்னோடி எழுத்தாளர்கள் அனைவருமே சிற்றூர்களிலிருந்து ஆங்கிலக் கல்விபெற்று எழுந்துவந்தவர்கள். அவர்கள் தங்கள் சிற்றூரை, இந்தியாவை விலகிநின்று திரும்பிப் பார்த்தபோதே எழுதத் தொடங்கினார்கள். நான் இவர்களில் ஒருவன் என்னும் உணர்வும், அவர்களை அயலவனாக நின்று பார்க்கும் கோணமும் ஒருங்கே அமைந்தபோது அவர்களின் எழுத்து உருவாகியது. அதற்குரிய கதைவடிவம் ’அன்னியனின் வருகை’

இன்னொரு வரலார்றுப்பின்புலமும் இதற்குண்டு. இந்தியாவின் மறுமலர்ச்சியை ஒட்டி உருவானது இந்திய நவீன இலக்கியம். இந்திய மறுமலர்ச்சியின்போது உருவான ஆரியசமாஜம், பிரம்ம சமாஜம், ராமகிருஷ்ண மடம் போன்ற தொடக்ககால மதச்சீர்திருத்த அமைப்புக்கள் தன்னார்வலர்களை கிராமங்கள் தோறும் அனுப்பின. அதன்பின் 1920களில் உருவான காந்தியின் சுதேசிக் கல்வி இயக்கம் சிற்றூர்களிலெல்லாம் ஓராசிரியர் பள்ளிகளை உருவாக்கியது. ஆசிரியர்கள் ஊரூராகச் சென்றனர்.பின்னர் மருத்துவர்கள் செல்லலாயினர். சுதந்திரப்போராட்ட வீரர்களும் சென்றனர்

இந்த ‘அன்னியர்கள்’ அச்சிற்றூர்களில் வெளியுலகை அறிமுகம் செய்தனர்.புதிய சிந்தனைகளை, புதிய வாழ்க்கைநெறிகளை முன்வைத்தனர். ஜனநாயகம், சமத்துவம், தனிமனித உரிமைகள் போன்ற கருத்துக்கள் அறிமுகமாயின. பெண்கள், அடித்தள மக்களின் விடுதலைக்கான அறைகூவல் உருவானது. இவை இந்திய நாவல்களின் இயல்பான கருப்பொருட்களாயின. இந்திய நாவலாசிரியர்களில் பலர் தாங்களே அவ்வண்ணம் சிற்றூர்களுக்குச் செல்லநேர்ந்தவர்கள்

பலநாவல்கள் எண்ணத்திலெழுகின்றன. விபூதிபூஷன் பந்த்யோபாத்யாயவின் ‘வனவாசி’ வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர்வாடி’  ஓ.வி.விஜயனின் ‘கசாக்கின்றே இதிகாசம்’ போன்றவை மிகச்சிறப்பான உதாரணங்கள். தமிழிலும் பொன்னீலனின் ‘கரிசல்’ உட்பட பல முற்போக்கு நாவல்களின் கதைச்சட்டகம் இதுவே.

இவற்றில் ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலுடன் ஒப்பிட்டு விவாதிக்கத்தக்க இருநாவல்கள் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் பாரதிபுரம், எஸ்.எல்.ஃபைரப்பாவின் தபலியு நீனாட மகனே [நீ அனாதை, என் மகனே]. கன்னடத்தில் எழுதப்பட்ட இவ்விரு நாவல்களும் ஒன்றோடொன்று நுட்பமான உறவுகொண்டவை. இந்தியாவில் இவ்வகையில் எழுதப்பட்ட பலநாவல்களுக்கு முன்மாதிரியாகவும் அமைந்ததவை.

பைரப்பாவின் நாவல் 1968ல் வெளிவந்தது.  ஐந்தாண்டுகளுக்கு பின் 1973ல் அனந்தமூர்த்தியின் பாரதிபுரம் நாவலும் ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலும் வெளிவந்தன. கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவை. பைரப்பாவின் நாவல் அமெரிக்கா சென்று நவீன வேளாண்மை பயின்று ஊருக்குத் திரும்பிவரும் கலிங்கா ஊரில் ஒரு மாறுதலை உருவாக்க முனைகிறான். அவனுடைய மதிப்பீடுகளுக்கும் ஊரின் மதிப்பீடுகளுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. அவனுக்கு நீரும் பசுவும் பொருளியல் மூலப்பொருட்கள். ஊருக்கு அவை தெய்வ வடிவங்கள். பசுவை கலிங்கா கொன்றுவிட்டான் என்ற எண்ணம் கலவரத்தில் முடிகிறது

அனந்தமூர்த்தியின் பாரதிபுரம் பிரிட்டனில் கல்விகற்று பாரதிபுரத்துக்கு வரும் ஜெகன்னாத் அந்த ஊரில் தலித்துக்களை ஆலயத்திற்குள் கொண்டுசெல்ல முயல்வதன் கதை. அதுவும் மதிப்பீடுகளின் மோதல் கலவரமாகி முடிவதைக் காட்டுகிறது.பாரதிபுரம் பெயரே சுட்டுவதுபோல இந்தியாதான். அதன் தொன்மை, மேதமை, சமகாலத்தின் தேக்கநிலை, அதன் முடிவில்லாத அபத்தங்கள் உள்மோதல்கள் என விரியும் பெரிய நாவல் அது

இவ்விரு நாவல்களுடனும் ஒருவகையில் ஒப்பிடவேண்டிய நாவல் க.நா.சு.எழுதிய ஒருநாள். 1951 ல் க.நா.சு எழுதிய நாவல் இது. இதில் மேஜர் மூர்த்தி என்ற நடுவயதினன் உலகப்போரில் ஈடுபட்டு வாழ்க்கையின் ஒருபகுதியை செலவிட்டபின் சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரத்திற்கு வருகிறான். அங்கே தன் அத்தையுடன் தங்குகிறான். அவள் மகளை மணம்புரிந்துகொள்ள முடிவெடுக்கிறான். அந்த ஒருநாள்தான் நாவல்.

ஊருக்கு வரும் அன்னியர்கள் என்னும் இந்த கதையமைப்புக்குள்தான் இந்நான்கு நாவல்களுமே வருகின்றன. இவற்றுடன் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவல் கொண்டுள்ள உறவு அல்ல, வேறுபாடே கவனத்திற்குரியது. பைரப்பா, அனந்த மூர்த்தி இருவரின் நாவல்களிலும் ஊருக்கு வருபவன் அந்த ஊரைச் சேர்ந்தவன். வெளிநாட்டுக் கல்வியால் புதிய கண்களை அடைந்தவன். அந்த ஊரின் தேக்கநிலையுடன் அவனுடைய புதிய பார்வை மோதிக்கொள்கிறது. ஒருவகையில் அது அவன் தன்னுடைய இறந்தகாலத்துடன் மோதிக்கொள்வதுதான்.

பைரப்பா, அனந்தமூர்த்தி இருவருமே மரபை தேங்கிப்போன பேரெடைகளாகவே காண்கிறார்கள். அனந்தமூர்த்திக்கு அது பொருளற்ற விலக்குகளும் அச்சங்களும் நம்பிக்கைகளும் கொண்ட ஒரு சமூகவெளி மட்டும்தான். பைரப்பாவுக்கு அது தேங்கியிருந்தாலும் உள்ளாழத்தில் ஓர் ஆன்மிகத்தையும் கொண்டுள்ளது. அந்த தேக்கநிலையை மாற்றும்பொருட்டு அந்த ஆன்மிகத்தைச் சீண்டுவது அழிவை உருவாக்குவது.

மாறாக க.நா.சுவின் நாவலில் சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரத்தின் தேக்கநிலை என்பது ஒருவகையான நிலைபேறு என்று தோன்றுகிறது.உலகமே காற்றில் மரங்கள் போல அலைகொந்தளித்துக்கொண்டிருக்கையில் அந்தச் சிற்றூர் நூற்றாண்டுகளாக அப்படியே அசைவற்றிருக்கிறது. அலைக்கழிந்து திசையிழந்து அங்கே வந்துசேரும் மூர்த்திக்கு அந்த நிலைப்பேறு நிறைவை அளிக்கிறது. அதைப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறான்.

ஆச்சரியமென்னவென்றால் க.நா.சுவின் நாவலில் வெளியுலகம் பற்றிய குறிப்பே இல்லை. வெளியுலகம் ஆபத்தான நிலையற்ற ஒன்று என்ற மூங்கையான பயம் மட்டுமே உள்ளது. தமிழ்ச்சூழலில் இருந்த உலகறியா தன்மைக்கும், பழமைவழிபாட்டையே நவீனப்பார்வையாக அமைத்துக்கொண்டமைக்கும் ஒருநாள் மிகச்சரியான உதாரணம்

அந்த அக்ரஹாரத்தின் அசைவின்மையை முழுமையாகவே ஒரு மகத்தான விஷயமாக மூர்த்தி பார்த்தானா என்பது ஐயம்தான். ஊரிலுள்ள வம்பர்களை அவன் சந்திக்கிறான். அதிலும் அவ்வூரில் ஒளிகொண்ட முகத்துடன் இருப்பவர்தான் பெரிய வம்புக்கிழவர். ஊரில் பெரும்பகுதியினர் இளம்விதவைகள், அவர்களில் பாதிப்பேர் ஒழுக்கமில்லாதவர்கள். ஊரில் ஒரு மூங்கில்புதர் சிலுவையேறிய ஏசு போல தெரிவதை திரும்பத்திரும்ப அவன் காண்கிறான்

சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரம் போன்ற ஒன்றே கிருஷ்ணராஜபுரமும். அழகான ஊர் என்று அதை ஆசிரியரே அறிமுகம் செய்கிறார். ஆனால் அது தொன்மையின் அழகு அல்ல.அது நெடுங்காலம் காய்ந்த காடுதான். மின்சாரம் வந்து மோட்டார் போட்டபின்னரே பசுமையும் வாழ்க்கையும் வந்திருக்கிறது.

க.நா.சுவின் நாவல் அக்ரஹாரத்தை மட்டுமே கிராமம் என்று காட்டுகிறது. ஜெயகாந்தன் ஊரின் முழுச்சித்திரத்தையும் தொட்டுக் காட்டிவிடுகிறார். நாயிடுவான தேவராஜன், மணியக்கார கவுண்டர், போஸ்ட் மேன் நடராஜய்யர், டீக்கடை வைத்திருக்கும் தேசிகர் என வெவ்வேறு சாதியினரால் ஆன ஒரு கிராமச்சமூகம். அவர்கள் நடுவே இருக்கும் ஒத்திசைவும் நல்லெண்ணமும்.

கிருஷ்ணராஜபுரத்தில் அத்தனைபேருக்கும் தலைமுறைக் கதைகள் உள்ளன. ஒருவன் ஊரைவிட்டுச் சென்றாலும் அவனுடைய இடைவெளியாக இருப்பு உணரப்படுகிறது.ஒவ்வொருவருக்கும் அடையாளம் உள்ளது. அந்த அடையாளத்தின் சிதைவுதான் மணியக்காரருக்கு நிகழ்ந்தது. அவர் காவல்நிலையத்தில் சிறிய அவமானத்தைச் சந்திக்கிறார். அவர் மனைவியால் சிறுமை செய்யப்படுகிறார். அதன்பின் அவர் அந்த அடையாளம் கொண்டவர் அல்ல, அவரால் உயிர்வாழமுடியாமலாகிறது.

’ஒருநாள்’ நாவலில் வரும் சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரம் போல உயிரற்றது அல்ல கிருஷ்ணராஜபுரம். இதிலுள்ள முதிர்ந்த வயோதிகர் முதல் மண்ணாங்கட்டி போன்ற இளைஞர்களிலிருந்து சிறுவர்கள் வரை வாழ்வாசையுடன் ஒருவரையொருவர் சார்ந்து அன்றாடத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் நாவலில் உள்ள சோர்வு இதில் இல்லை. ஒருநாள் நாவலிலுள்ள அச்சோர்வு கதைசொல்லியின் தளர்வான உளநிலை மட்டுமல்ல அக்கதைநாயகனின் சலிப்பும்கூட.அது இந்நாவலில் இல்லை.

ஜெயகாந்தனும் ஹென்றியும் வாழ்க்கைமேல் பெரும் பற்றுகொண்டவர்கள். அவர்களிடம் சலிப்பு என்பதே இல்லை. ஜெயகாந்தன் தானே ஹென்றி என ஒரு பேட்டியில் சொன்னார்.  ஹென்றி ஆடும் ’சோப்பெங்கப்பா?” என்ற நடனம் ஜெயகாந்தனே ஆடுவது என்பதை அவருடைய நண்பர் பி.குப்புசாமி எழுதிய குறிப்புகளிலிருந்து அறியலாம். அளவுக்குட்பட்ட போதை, களியாட்டம், அரட்டை, கூட்டுணவு கொண்டாட்டம் எல்லாம் கொண்டது கிருஷ்ணராஜபுரம்

ஆனாலும் ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம் தமிழ் நவீன இலக்கியத்தின் அன்றைய பல விமர்சகர்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை, ஆனால் ஒருநாள் பிடித்திருந்தது. அதைப்பற்றிச் சுந்தர ராமசாமியிடம் பேசியிருக்கிறேன். ‘ஒருநாள்’ சூம்பிப்போன ஒரு படைப்பு, அதன் மொழியும் கூறுமுறையும்கூட தொளதொளப்பானவை. சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரம் என்னும் சொல்லை மட்டும் நீக்கிவிட்டால் அது ஒரு குறுநாவலாகிவிடும் என்று ஒரு பகடி உண்டு. திரும்பத்திரும்ப அச்சொல்லே வந்து காதில் ஞொய் என்னும் ஒலியை எழுப்புகிறது. ஒப்புநோக்க ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் விரிந்து எழும் படைப்பு. நம்பிக்கையும் ஒளியும் கொண்டது. அது ஏன் சிற்றிதழ்ச்சூழலில் இலக்கியமாக ஏற்கப்படவில்லை?

எளிமையான காரணம்தான். அன்றைய எழுத்தாளர்களின் கடந்தகால ஏக்கம் அந்த தேங்கிப்போன அக்ரஹாரத்தையே அடையாளம் கண்டது, கிருஷ்ணராஜபுரம்போன்ற ஒரு பலசாதித் தொகுதியான ஊரை அல்ல. அந்த ’அமைதியான’ அக்ரஹாரமே அவர்களின் கனவிடம். ஒருநாள் கழிந்தது காட்டும் மனிதர்களின் சோர்வில் இருந்த இருத்தலியல் கூறு ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் இல்லை என்பதை வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம்

ஜெயகாந்தனின் இன்னொரு நாவலான ’பாரிசுக்குப் போ’வுடன் இந்நாவலை சேர்த்து யோசிக்கலாம். அதிலும் ஓர் அன்னியனின் முரண்பாடுதான் கதை. சாரங்கன் திரும்பிவருவது தன் ஊருக்கு அல்ல, தன் குடும்பத்திற்கு. அவன் பாரிஸில் உலக இசை பயின்றவன், இந்தியாவில் தன் குடும்பத்திற்கு வந்து தந்தையுடன் தங்குகிறான். ஆசாரவாதி என்னும் சொல்லுக்கு அனைத்துவகையிலும் பொருத்தமானவர் அவன் தந்தை. கலைஞர், ஆனால் பழுத்த உலகியல்வாதி, அன்பானவர், ஆனால் ஆசாரங்களில் பிடிவாதமானவர்

பலவகையிலும் சாரங்கன் ஹென்றியைப் போலிருக்கிறான். ஆனால் அவனுக்கு போதை தேவையாக இருக்கிறது. ஹென்றிக்கு இசையில் பெரிய நாட்டமில்லை. சாரங்கனுக்கு இசையே உலகம். சாரங்கனால் இயலாத ஒன்றை ஹென்றி செய்கிறான். கைகளை தட்டிக்கொண்டு நடனமாடுகிறான், மற்றவர்களை நடனமாடச் செய்கிறான். பழமையான ஒரு கிராமத்தின் நடனத்தில் அவன் வந்து இணைந்துகொள்கிறான் என்று தோன்றும். அந்த நடனத்தால் அவன் கிருஷ்ணராஜபுரம் வந்த அன்றே அதில் இணைந்துகொள்கிறான். சாரங்கன் தன் தந்தையிடமிருந்தே திரும்பிச் செல்கிறான்

இந்நாவலில் உள்ள ஒரு வட்டம் இதன் உள்ளார்ந்த சாரத்தை காட்டுவது என்று நினைக்கிறேன். ஹென்றியின் தந்தை ஒரு துயரத்தால் கிளம்பிச் செல்கிறார். அவர் மைக்கேலைச் சந்திக்கிறார். ஹென்றியின் அன்னையை சந்திக்கிறார். ஹென்றியை வளர்ப்புமகனாக இருவரும் கண்டடைகிறார்கள். அவனுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அவர் அளிக்கிறார். அந்த நீண்டகதை ஹென்றியின் நினைவுகள் வழியாகச் சொல்லப்படுகிறது. அதன்பின்னரே ஹென்றி கிருஷ்ணராஜபுரம் வருகிறான்

அந்தக் கதைக் களத்தை ஓர் உலோகஉலைக்களம் எனலாம். உலப்போரின் வெம்மைமிக்க உலை அது. அதில் கிழக்கு மேற்கு என்னும் இரு உலோகங்கள் உருக்கிக் கலக்கப்படுகின்றன. அவை ஒன்றாகி ஹென்றி என்னும் அரியமனிதனை வார்க்கின்றன. வீட்டுத்தலைவன் என்ற பெயர்கொண்டவனை. கிருஷ்ணராஜபுரத்திற்கு வருபவன் பைரப்பா, அனந்தமூர்த்தி நாவல்களில் வருபவன் போல மேலைக்கல்வியால் பிறிதொருவனாக மாறியவன் அல்ல. மேஜர் மூர்த்தி போல அலைந்து சலித்தவனும் அல்ல. சாரங்கன் போல அகவினாக்கள் கொண்டவன் அல்ல.

காளிங்காவுக்கும் ஜெகன்னாத்துக்கும் அவர்களுக்குள்ளேயே ஓடும் அகமோதல்கள் உண்டு. மேஜர் மூர்த்தியும் சாரங்கனும்கூட அடிப்படை வினாக்கள் கொண்டவர்கள்தான். ஹென்றி வினாக்களற்றவன், தெளிந்தவன். இந்நாவல் முழுக்க எங்கும் ஹென்றிக்கு செய்யவேண்டியதென்ன என்று குழப்பமே இல்லை. அவன் பேசுமிடங்களிலெல்லாம் ஐயமற்ற தெளிவையே எளிமையான சொற்களில் வெளிப்படுத்துகிறான்.

ஹென்றி தன் பூர்வீக வீட்டை மீண்டும் கட்டி எழுப்பும்போது அதை முன்பிருந்ததுபோலவே கட்டுகிறான். எந்த மாற்றமும் செய்யவில்லை. மங்களூர் ஓடுவேய்வதற்குக்கூட ஒப்புக்கொள்ளவில்லை.

“பெரியசாதனைதான். ஒருமாசத்திலே கட்டி முடிச்சுட்டதைச் சொல்லலே. அப்படியே அவா காலத்து வீடாவே மறுபடியும் அதை நிமிர்த்தி நிறுத்தியிருக்கேளே அதை சாதனைங்கிரேன். மனுஷா புத்தி அப்டி நிலைய இருக்கிறதில்லை. இங்கே மட்டும் ஒரு தளம் போட்டுக்கலாம்னு தோணும். அப்றம் அங்கே பார்த்தது இங்கே பார்த்ததுன்னு ஏதாவது செய்யச்சொல்லும். தொரை பிடிவாதமா ஏதோ மானுமெண்டை புதுப்பிக்கிற மாதிரின்னா அழகு பண்ணிட்டார் அந்த வீட்டை. மனம் விட்டுச் சொல்றேன், நம்மவா கோயிலை புனருத்தாரணம் பண்றேன்னு சினிமாசெட்டு போடறானே…” என்று நடராஜ அய்யர் சொல்வதன் வழியாக வெளிப்படும் ஹென்றியின் குணச்சித்திரம் முக்கியமானது. அவன் மாற்றியமைக்க வரவில்லை. எதையும் சேர்க்கவில்லை. சிறந்த ஒன்றின் இயல்பான நீட்சியாகவே அமைகிறான்.

மரவள்ளிக்கிழங்கைப் பற்றி ஒருமுறை பேச்சில் பி.கே.பாலகிருஷ்ணன் சொன்னார். “எந்த உள்ளூர் செடியை விடவும் மரவள்ளிக்கிழங்கு கேரளத்தன்மை கொண்டது. அது தென்னமேரிக்காவிலிருந்து போர்ச்சுக்கல்காரர்களால் கொண்டுவரப்பட்டது. இங்கே இந்தமண்ணை முழுமையாக ஏற்றுக்கொண்டது. இந்த மண்ணுக்குரிய செடியாக மாறியது. மிகச்சிறந்த மருமகள் போல. இந்த மண்ணின் மக்களின் பசிதீர்த்தது. அது இன்று ஓர் இந்திய தெய்வம்போல”

ஹென்றி அவ்வண்ணம் இந்தியாவுக்கு வந்த ஒருவன்.மேலைப்பண்பாட்டின் ஒரு சிறந்த துளி இந்தியா வந்து இந்தியாவாகவே ஆவதைப் பற்றி ஜெயகாந்தன் கற்பனைசெய்கிறார். இந்தியாவை சீர்திருத்துவதைப் பற்றி அல்ல, இந்தியாவின் மிகச்சிறந்த நாற்றடியில் மேலை ஆன்மிகத்தின் ஒரு விதை வந்து விழுவதை, வளர்ந்து மரமாவதை ஜெயகாந்தன் கனவுகாண்கிறார்.

ஐரோப்பியப் பண்பாடு இரண்டு முகம்கொண்டது. நாமறிந்த ஐரோப்பியப் பண்பாடு என்பது வெள்ளைய ஆதிக்கம். அது வணிகமும் ராணுவமுமாக உலகமெங்கும் பரவியது. இன்னொன்று உண்டு, ஏசுவிலிருந்து தல்ஸ்தோயிலிருந்து நீண்டு  வேர்ட்ஸ்வெர்த்தில் தோரோவில் எமர்சனிலூடாக முழுமைகொள்ளும் ஒர் ஐரோப்பியப் பண்பாடு. ஹெர்மன் ஹெஸும், நிகாஸ் கசன்ட்ஸகீஸும் நம்பிய ஆன்மிகம் அது. அதன் நீட்சிதான் ஹென்றியாக வந்து கிருஷ்ணராஜபுரத்தில் குடியேறுகிறது.

அதுதான் ஹென்றியின் குணச்சித்திரம். ஐரோப்பாவிற்குரிய உரிய உயர்குடித்தன்மைகொண்ட ‘மிதமான’ நாகரீகமே இல்லாதவன், கொண்டாட்டமானவன். அவர்களின் பெருங்கல்வியின் செருக்கு இல்லாதவன், அவர்களின் பொருள்விழைவும் வெல்லும்விழைவும் அறவே இல்லாதவன், அவர்களைப்போல ஆக்ரமிக்கவும் ஆட்கொள்ளவும் எண்ணாதவன், அவற்றையெல்லாம் துறந்து வெறும் தோரோவாக கிருஷ்ணராஜபுரத்தை நாடி வந்தவன்.மதங்களுக்கு அப்பாற்பட்டவன். ஆனால் இந்துமதமும் கிறிஸ்தவமும் கண்டடைந்த ஆன்மிகத்தின் சாரத்தை உள்வாங்கிக்கொண்டவன்

அத்தகையவர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். பாண்டிச்சேரியில், திருவண்ணாமலையில் அவர்களை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். ஹென்றி அவர்களில் எவரிலிருந்தோ ஜெயகாந்தனை வந்தடைந்தவன், ஜெயகாந்தனின் கனவில் வளர்ந்தவன். ஹென்றியைப்போல ஒரு மகத்தான கதாபாத்திரத்தை தமிழிலக்கியத்தில் நாம் எழுதிக்கொண்டோம் என்பதில் பெருமை கொள்ளலாம். நாம் அக்கனவை அன்றைய ஐரோப்பாவின் அலைக்கழிதலில் இருந்து பெற்றுக்கொண்டு நம் சிற்றூரின் முற்றத்தில் பதியனிட்டுக்கொண்டோம் என்பதில் நிறைவடையலாம்

இன்று மீண்டும் ஆதிக்க ஐரோப்பாவை பேருருவில் கண்டுகொண்டிருக்கிறோம். இது பண்பாட்டு ஆதிக்கம். அவர்களின் இசை, அவர்களின் இலக்கியம், அவர்களின் கலைகள், அவர்களின் படிமங்கள், அவர்களின் மொழி. நாம் அவர்களாக மாறி நம்மை நடித்துக்கொண்டிருக்கிறோம். எழுபதுகளின் மீறலை ஐரோப்பாவும் அமெரிக்காவும் மறந்துவிட்டன.அந்த சென்றகாலத்தைய சுரண்டல் மற்றும் ஆதிக்கம் பற்றிய குற்றவுணர்சசிகளில் இருந்து அவர்கள் விலகிசென்றுவிட்டிருக்கின்றனர். தங்கள் ஆக்ரமிப்புகளையும் ஆதிக்கங்களையும் நியாயப்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டன. எழுபதுகளின் ஹிப்பிகளில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கி உலகை சுற்றிவளைத்தார் என்பது ஒரு மாபெரும் படிமம்.

இன்று நாம் அந்த எழுபதுகளின் கனவை ஓர் அரிய முத்து போல தொட்டு எடுக்கவேண்டியிருக்கிறது. ஒரு மீட்டிக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஒரு ரகசிய மெட்டுபோல மீட்டிக்கொள்ளவேண்டியிருக்கிறது. நம் கனவுகளில் ஹென்றி என்றுமிருக்கவேண்டும். நாம் நெடுந்தொலைவு அகன்றுவிடாமலிருக்கும் நங்கூரமாக ஹென்றி வந்து வேரூன்றிய கிருஷ்ணராஜபுரமும் இருந்துகொண்டிருக்கவேண்டும்

[நிறைவு]

வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’

வன லீலை


ஜெயகாந்தன் பழையவராகிவிட்டாரா?
ஆலமர்ந்த ஆசிரியன்
உலகமனிதன் -கடிதம்
ஜெயகாந்தனின் நினைவில்…
நடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்
கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர்
சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா
சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்

முந்தைய கட்டுரைநற்றுணை இலக்கியக் கலந்துரையாடல் – சென்னை
அடுத்த கட்டுரைவெண்முரசு- வாசகர்களின் விடை