ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-2

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்.-1 தொடர்ச்சி…

ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம் நாவலை இன்று வாசிக்கையில் தோன்றும் குறைபாடுகளை முன்னரே சுட்டிவிடுகிறேன். ஒன்று, அதன் வடிவம் இன்று இறுக்கமில்லாததாகவும், பல பகுதிகளை தள்ளிவிட்டு வாசிக்கலாமென்றும் தோன்றுகிறது.

இரண்டு, அதில் ஹென்றியின் பின்கதையாக வரும் அவன் அப்பா பற்றிய விஷயங்கள் ஒருவகையான ஃப்ளாஷ்பேக் போல உள்ளன. அவை நவீன புனைவு உத்திகளைக் கொண்டு குறைவாகச் சொல்லப்பட்டிருக்கலாம். ஹென்றி கிருஷ்ணராஜபுரத்துக்கு வந்ததும் கதை தொடங்கிவிடுகிறது. பின்னர் அவன் எங்கிருந்து வந்தான் என்பது ஒரு தகவலே ஒழிய புனைவு பின்னகரமுடியாது.

மூன்று, இந்நாவல் முன்வைக்கும் மையச்சிந்தனைகளை தொட்டுக்கொண்டு ஆழமான விவாதங்கள் நாவலுக்குள் நிகழவில்லை.அதற்கான வாய்ப்புகள் இந்நூலில் உள்ளன. ஆனால் அதை ஜெயகாந்தன் முன்னெடுக்கவில்லை. இந்நாவலின் சிந்தனைமையமும் தரிசனமையமும் சற்றே தொட்டு விடப்படுகின்றன. நாவல் என்பது ஆழ்ந்த விவாதங்களுக்கான களம்.

நான்கு, இந்நாவலில் ஹென்றி உட்பட எல்லா கதாபாத்திரங்களும் புகைப்படச் சித்திரங்களாகவே உள்ளனர். அவர்களுக்கு அகநகர்வே நிகழவில்லை. ஏனென்றால் அவர்கள் எந்த சிக்கலையும் சந்திக்கவில்லை.ஆகவே இன்றைய நிலையில் இந்நாவலை ஒரு குறுநாவல் என்றே சொல்லமுடியும்.

ஆனால் இந்நாவலை தமிழில் எழுதப்பட்ட சிறந்த  நவீனத்துவநாவல்களான ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே.சிலகுறிப்புகள் [சுந்தர ராமசாமி] தண்ணீர், பதினெட்டாவது அட்சக்கோடு [அசோகமித்திரன்] நித்யகன்னி [எம்.வி.வெங்கட்ராம்] நாளை மற்றுமொரு நாளே [ஜி.நாகராஜன்] போன்றவற்றின் வரிசையில் சேர்க்கமுடியாது.

அதேசமயம், இந்திய யதார்த்தவாதம் உருவாக்கிய ஏறத்தாழ இதேவகையான நாவல்களான பாரதிபுரம் [யு.ஆர்.அனந்தமூர்த்தி] போன்றவற்றின் வரிசையிலும் சேர்க்கமுடியாது.யதார்த்தவாத மரபில், அந்த வகையான நாவல்களின் முழுவீச்சையும் அடையாதுபோன ஓர் ஆக்கம் இது. அவ்வகையில் யதார்த்தவாத பெருநாவல்களின் அழகை அடைந்த படைப்பு என்றால் ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் இரண்டு நாவல்களையும் இணைத்து ஒரு நாவலாகக் கொண்டால் அதைச் சொல்லலாம்.அதில் கதைமாந்தரின் பரிணாமங்கள் அழகாக வெளிப்பட்டுள்ளன.

ஆனால் தமிழுக்கு ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம் மிக முக்கியமான நாவல். மூன்று காரணங்களால்.

ஒன்று, அன்றைய உலகத்தின் அகஅலைச்சலை, கண்டடைதலை தமிழில் இருந்து தொட்டுப்பார்த்த ஒரே நாவல் இதுதான்.

இரண்டு, அந்த முயற்சியில் அது முற்றிலும் இந்தியச்சூழலில் ஓர் இந்திய விடையை சென்றடைகிறது.

மூன்று, அதன் கட்டமைப்பில் அது தொட்டுச்செல்லும் பல நுண்புள்ளிகள் படிமங்களென விரிகையில் நம் முன் ஒர் அரிய கலையனுபவம் திகழ்கிறது.

இன்று வாசிக்கையில் இந்நாவலின் குறைகள் என தெரிபவை அன்றைய காலகட்டத்தின் எல்லா நாவல்களிலுமே பொதுவாகத் தெரிபவை. நடை, உத்தி எல்லாமே காலத்தில் பழையனவாகிவிடுகின்றன. அவற்றுக்காக படைப்பை வாசிப்பவர்கள் சமகால இலக்கியங்களை ரசிக்கும் தொடக்கக்காரர்களே.தேர்ந்த வாசகர்கள் இலக்கியப்படைப்பில் தேடுவது பண்பாடு, ஆன்மிகம் என்றெல்லாம் முகம்கொண்டு மானுடத்தினூடாக தொடர்ந்துவரும் ஒன்றை. அது இலக்கியத்தில் வெளிப்பாடு கொள்ளுவதை.

அதற்காகவே அவர்கள் பண்டைய இலக்கியம்வரை வாசிப்பை நீட்டிக்கொண்டுசெல்கிறார்கள். இன்றைய படைப்பின் கூறுமுறை நுட்பங்களை மொழியை நேற்றைய இலக்கியங்களில் அவர்கள் தேடுவதில்லை. மிகப்புதுமையான நடையும் கூறுமுறையும் கொண்ட எழுத்தாளர்கள்கூட அரைநூற்றாண்டுக்குப்பின் அன்றைய பொதுநடையின் ஒரு பகுதியாக, பொதுவான கூறுமுறையை கொண்டவர்களாக தெரிவது ஒரு பெரும் விந்தை. காலத்தால் நாம் அகலும்போது தனிப்பட்ட நடைவேறுபாடுகள் மழுங்கிவிடுகின்றன

அவ்வாறு பார்க்கையில் காலத்தை கடந்து பொருட்படுத்தும்படி இலக்கியத்தில் நிலைகொள்வன எவை? ஒன்றே ஒன்றுதான். ஆசிரியனின் உள்ளம் மேலெழுந்தமை. அது மொழியில் தன் தடத்தை பதித்திருந்தால் அது இலக்கியமே. தேர்ந்த வாசகன் காலம் உருவாக்கும் மங்கல்களை மழுங்கல்களை கடந்து சென்று அந்த உள்ளஎழுச்சியை சென்று தொடமுடியும்- இலக்கியப் பயிற்சியின் உச்சநிலை என்பது அதுவே.

அந்த உள்ள எழுச்சி எவ்வண்ணம் புனைவில் வெளிப்படுகிறது? ஒன்று, கதைமாந்தர்களாக. மனிதன் என நாம் எண்ணுவது மானுடம் ஒட்டுமொத்தமாக புனைந்தமைத்த ஒன்றே. தன் கனவில் ஒரு கண்ணியும் நடைமுறையில் மறுகண்ணியுமாக அதை புனைந்துகொண்டே இருக்கிறான். அக்கனவின் சரடு இருப்பது கலைஞர்களிடம்.

கலைஞர்கள் மானுடனை, தனிமனிதனை கற்பனைசெய்து முன்வைத்தபடியே இருக்கிறார்கள். அதிமானுடனை மட்டுமல்ல சாமானியனையும்கூட. இலட்சியமானுடனை மட்டுமல்ல அன்றாட மனிதர்களையும்கூட. மனிதன் என நாம் நினைப்பதெல்லாமே கதைசொல்லிகளால் உருவாக்கப்பட்டவை மட்டும்தான். அதற்கப்பால் நாம் மனிதனை அறிவதுமில்லை, உருவகித்துக்கொள்வதுமில்லை. விந்தையாக இருக்கலாம், இதுவே உண்மை என நம் சூழலை, நம் அகத்தை கூர்ந்தால் உணரலாம்.

புனைவெழுத்து என்பதே மனிதர்களை கற்பனை செய்வதற்கானதுதான். மெய்யான மனிதர்களை விட நம் முன் உயிர்த்துடிப்புடன் நிலைகொள்பவர்கள் புனைவிலெழுந்த மானுடரே. காலத்தில் நினைவுகூரப்படும் மானுடர் பெரும்பாலும் புனைவுக்கதாபாத்திரங்கள்தான். மெய்யான மானுடரைக்கூட நாம் புனைந்துகொண்டபின்னரே நமக்குள் நிலைகொள்கிறார்கள். புத்தரோ காந்தியோ பெரும் புனைவுகள்தான். அவ்வகையில் அவர்கள் கம்பனின் ராமனுக்கும் சுந்தர ராமசாமியின் ஜேஜேவுக்கும் நிகரானவர்கள்தான்.

ஆகவே எத்தனை மங்கலான மொழிச்சித்திரமாமாக நமக்கு கிடைத்தாலும் முதன்மையான கதைமாந்தரை ஒரு உருவாக்கிவிட்டது என்றால் ஒரு கதை மாபெரும் புனைவெழுத்தே. அவ்வகையில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த புனைவுக் கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் ஜெயகாந்தனின் ஓங்கூர் சாமியும், ஹென்றியுமே முதல் இடங்களில் வருவார்கள். இந்த ஒரு காரணத்தாலேயே ஒரு மனிதன் ஒரு வீடு ஓர் உலகம் முக்கியமான ஆக்கம்.

ஹென்றி இந்திய மொழிகளில் எழுதப்பட்ட பல முதன்மையான ஆளுமைகளில் ஒன்று. வனவாசியின் சத்யசரண் [விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய] ஓ.வி.விஜயனின் ரவி [கசாக்கின் இதிகாசம்] கசன்ஸகீஸின் சோர்பா [சோர்பா தி கிரீக்] தொடங்கி பல்வேறு உலக இலக்கியங்களின் நாயகர்களுடன் இணைத்து ஹென்றியைப் பற்றி ஆராயமுடியும்

அடுத்தபடியாக, கவித்துவத் தருணங்கள் இலக்கியத்தில் காலத்தால் மங்காமலிருக்கின்றன. கவித்துவம் என்பது வாழ்க்கைகுறித்த தரிசனத்தால் அமைவது. ஒட்டுமொத்தப் பார்வை, முழுமைப்பார்வை,சாராம்சமான பார்வை என தரிசனம் என்பதை வகுத்துக்கொள்ளலாம். அது மூன்றுவகைகளில் புனைவில் வெளிப்படுகிறது. நாடகீயத்தருணங்கள், உரைகள், படிமங்கள்

நாடகீயத் தருணங்கள் அவற்றில் முதன்மையானவை. இங்கே நான் மெல்லுணர்ச்சிகளைச் சொல்லவில்லை. நாடகீயத்தருணங்கள் உணர்வெழுச்சிகளால் ஆனவை. ஒரு கதைக்களத்தில் முதன்மைக் கதைமாந்தர் வெவ்வேறு மதிப்பீடுகளின் அடையாளங்களாக ஆகி மோதிக்கொள்கையில் அவை உருவாகின்றன. மகத்தான நாடகத்தருணங்கள் எல்லாமே விழுமியங்களின் மோதலும் கண்டடைதலும் கொண்டவை. உலக இலக்கியத்தின் பெரும்பகுதி அதுதான்.

உரை என்பது விசைகொண்ட உரைநடையால் ஆசிரியன் நேரடியாக வெளிப்படுத்தும் தரிசனம். நாடகீயத்தன்னுரை [ Dramatic monologue] ஆசிரியர் உரை என பலவகையில் அவை வெளிப்படுகின்றன. ஷேக்ஸ்பியரின் நாடகீயத்தன்னுரைகளும் சரி, தஸ்தயேவ்ஸ்கியின் நீண்ட பேருரைகளும் சரி, பெருந்தரிசனத்தின் வெளிப்பாடாக அமைகின்றன

இலக்கியத்தின் அடிப்படையாக அமைபவை படிமங்கள். தொன்மங்களிலிருந்து ஆழ்படிமங்களில் இருந்து அவை முளைத்தெழுகின்றன. மரபான படிமங்களின் மறுஆக்கமாகவோ, நவீனப்படிமமாகவோ அவை ஆகின்றன. ஹெர்மன் மெல்வில்லின் திமிங்கலம் போல. சுந்தர ராமசாமியின் புளியமரம்போல. அவை ஒருகட்டத்தில் இலக்கியத்தை கடந்து ஒரு நவீனத்தொன்மமாக நிலைகொள்கின்றன.

இக்கூறுகளைக்கொண்டே நேற்றைய இலக்கியத்தை மதிப்பிடவேண்டும். அவ்வகையில் பார்த்தால் அத்தனை குறைகளுடனும் ஹென்றி என்ற ஒற்றைக்கதாபாத்திரத்தின் ஒளியால் தமிழிலக்கியத்தில் அழிவில்லாமல் நிலைகொள்கிறது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். ஆனால் தமிழ் வாசக உளவியலில் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கிய, அடுத்த தலைமுறையினரில் மேலும் தீவிரமாக நீடித்த, இந்நாவல் பற்றி விமர்சன ஆய்வுகள் அனேகமாக நிகழவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்நாவல் வெளிவந்து அரைநூற்றாண்டை நெருங்கப்போகிறது. இதைப்பற்றி எழுதப்பட்ட விமர்சனங்கள் அனேகமாக அனைத்தையுமே வாசித்துவிட்டேன். இந்நாவலை புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதவையாக நாவலில் உள்ள சில அடிப்படை அடையாளங்களைப் பற்றிய எந்தகுறிப்பும் எவர் எழுத்திலும் பதிவாகவில்லை. ஒரு நாவலை வாசிப்பதன் ஆதாரவிதிகளில் ஒன்று, அதன் கதைமாந்தர் குறியீடுகளும்கூட என உணர்வது. அந்த வாசிப்பே நிகழவில்லை

உதாரணமாக, நாவலின் தொடக்கத்திலேயே ஹென்றி சந்திக்கும் மூன்று கதாபாத்திரங்கள் வழியாக ஜெயகாந்தன் அவருடைய இந்தியதரிசனத்தை உருவாக்கிக் காட்டுகிறார். ஒருவன் தேவராஜன். அவன் அயன்ராண்டின் அட்லஸ் ஷ்ரக்ட் என்னும் நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறான்.ஹிப்பி யுகம் உச்சத்திலிருந்தபோது, அதற்கு நேர் எதிரான உலகப்பார்வையை முன்வைத்த நாவல் அது.எதையெல்லாம் ஹிப்பி இயக்கம் எதிர்த்ததோ அவையனைத்தையும் குவித்தால் அதுதான் அயன் ராண்ட் முன்வைத்த புறவயவாதம் [Objectivism] என்னும் தத்துவக் கொள்கை

அறிவார்ந்தவர்களே உலகைச்சமைப்பவர்கள், ஆகவே உலகு முதன்மையாக அவர்களுக்குரியது என்று வாதிடும் படைப்பு அட்லஸ் ஷ்ரக்ட். வெல்வது, படைப்பது இரண்டுமே அவர்களால் செய்யப்படுகின்றன.ஆகவே அவர்கள் அரசால், அல்லது பெருந்திரளின் கூட்டுச்சக்தியால் கட்டுப்படுத்தப்படலாகாது. தனிமனிதனின் படைப்பூக்கம் மற்றும் ஆற்றலின் மோதல்கள் வழியாக உருவாகும் ஓர் உலகை அயன் ராண்ட் கற்பனைசெய்தார்.

அட்லஸ் ஷ்ரக்ட் நாவலின் கதைநாயகன் ஜான் கால்ட்டின் ஆளுமைக்கு நேர் எதிரானவன் ஹென்றி. ஜான் கால்ட் உலகை உருவாக்க, வெல்ல, உரிமைகொள்ள முயல்பவன். படைப்புசக்தியும் அதன் விளைவான தன்முனைப்பும் கொண்ட ஆளுமை. மாறாக ஹென்றி உரிமையுணர்வே இல்லாதவன். எதையுமே உருவாக்க எண்ணாதவன். வெறுமே வாழ்க்கையில் ஒழுக விரும்புபவன்.தேவராஜன் அட்லஸ் ஷ்ரக்ட் நாவலை வாசித்துக்கொண்டிருக்கையில் ஹென்றியை சந்திக்கிறான்.

இந்தப்புள்ளி ஏன் நவீன இலக்கிய சூழலில் கவனிக்கப்படவில்லை என புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ் நவீன வாசிப்புச்சூழலில் அயன் ராண்ட் ஒருமுறைகூட ஓரிடத்தில்கூட குறிப்பிடப்பட்டதில்லை. அன்றைய தமிழிலக்கிய முன்னோடிகள் அவ்வாறு ஒருவர் எழுதிக்கொண்டிருப்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அத்துடன் அயன்ராண்டின் தத்துவத்திற்கு அன்றைய ஹிப்பிகளின் வாழ்க்கைப் பார்வைக்குமான முரண்பாட்டைப் பற்றியெல்லாம் அன்றைய சிற்றிதழ்ச்சூழலில் எவருமே எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள். நானறிந்து ஒருவரியும் எழுதப்படவில்லை. ஹிப்பிகள் குளிக்கமாட்டார்கள் என்பதற்கு அப்பால் தமிழிலக்கியத்தில் ஹிப்பிகள் பற்றிய குறிப்புகளே இல்லை.

இரண்டாவது கதாபாத்திரம் தேவராஜனின் வீட்டில் இருக்கும் கிழவர்.கால இடம் மறந்தவர். முதுமையில் வற்றி ஒடுங்கி ஒரு இருப்பு மட்டுமே ஆனவர். ஆனால் கனிந்தவர்.குழந்தைபோலவே ஆகிவிட்டவர். எவரிடமும் மனம் கனிந்து மட்டுமே பேசுபவர். அவ்வப்போது வண்டி வந்துவிட்டது என்று சொல்லி ‘எங்கோ’ கிளம்புகிறார்.தன் வாழ்வில் நிகழ்ந்த சில கொடிய இழப்புகளால் அவ்வண்ணம் சித்தம் உறைந்து முதுமையில் உறைந்தவர்.

தெளிவாகவே இந்தியப் பாரம்பரியத்தின் அடையாளமாகவே கிருஷ்ணராஜபுரத்தின் முதியவர் திகழ்கிறார். ஹென்றி அவரை அறிமுகம் செய்யும் போது தேவராஜன் “தாத்தா வந்திருப்பது யார்? உங்க அப்பாவா மகனா?”என்று கேலியாக கேட்க குழந்தைபோல மகிழ்ந்து “மா நயனாரா?” என்று அவர் கேட்கிறார். எந்த கதாபாத்திரமும் அறிமுகமாகும் இடத்தில் ஆசிரியனின் உள்ளக்கிடக்கை வெளிப்படும். அந்தக் கதாபாத்திரத்தை எதன் குறியீடாக முன்வைக்கிறான் என்பது தெரியவரும். ஜெயகாந்தன் இந்திய மரபை கனிந்த, இனிய, ஆனால் தேங்கிப்போன ஒன்றாகவே காண்கிறார்.

அயன் ரான்ட் வாசிக்கும் தலைமுறைக்கும், கனிந்து உறைந்த தலைமுறைக்கும் இடையே ஓர் ஊடாட்டம் என அக்கம்மா வருகிறாள். அக்காவும் அம்மாவும் ஆனவள். இளவயதிலேயே விதவை. ஆனால் உலகியல் துயரங்களின் வழியாகவே தன்னை ஓர் சக்திவடிவமாக ஆக்கிக்கொண்டவள். வாழ்நாள் முழுக்க அளித்துக்கொண்டே இருப்பவள். சீதை, திரௌபதி என நாமறிந்த பெருமகளிரின் நுண்கலவை. அவள் வாழ்வது ஒருவகையான காலமின்மையில்.

இம்மூன்று கதாபாத்திரங்களுக்கும் நடுவே கொண்டுநிறுத்தப்படுகிறான் ஹென்றி. சாலையில் வரும் லாரிக்கு கைகூட காட்டாமல் நடந்துகொண்டிருப்பவன். அவன் ஹிப்பியா என்ற கேள்விக்கு “இல்லை” என்று பதிலளிக்கிறான். அவனை பார்த்தால் காலண்டரில் இருக்கும் வெள்ளைக்காரனை [ஏசு] போலிருப்பதாக நவநீதம் கருதுகிறாள். கல்வியே கற்காதவன். ஆங்கிலமும் தமிழும் கொச்சையாகவே பேசுகிறான். அடித்தள மக்களுடன் இயல்பாக பழகுகிறான். அவன் அறிந்த வாழ்க்கையே அந்நிலையில் திகழ்வதுதான்

ஹென்றிகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறார்கள். ஊட்டி நித்யா குருகுலத்தில் நான் பல ஹென்றிகளை கண்டதுண்டு. சமீபத்தில் நண்பர் கதிரேசன் அவர் பார்த்த ஒரு ஹென்றியை பற்றி எழுதியிருந்தார். [வேறுவழிப் பயணம் ]  ஜெயகாந்தனின் ஹென்றியின் அதே தோற்றம் கொண்டிருந்தார் கதிரேசன் அறிமுகம் செய்த ஜான். அதே மனநிலைகள், அதே வாழ்க்கைப் பார்வை.

ஹென்றி ஒரு புனைவுக் கதாபாத்திரம் அல்ல. ஒரு வெற்றுக் கனவு அல்ல.  குறுகியவாழ்க்கை கொண்ட நமது நவீனத்துவ விமர்சகர்களும் வாசகர்களும் அப்படி அதை அடையாளப்படுத்தியது அவர்களின் பிரச்சினை. ஹென்றி என்றுமுள்ள ஓர் ஆளுமை. ஒரு மாபெரும் கருத்துநிலை. ஒரு தரிசனத்தின் மானுட வடிவம். சென்ற இருபதாண்டுகளில் நான் உலகமெங்கும் ஹென்றிகளை பார்த்தபடியே இருக்கிறேன். தமிழில் அவ்வண்ணம் ஒரு கதாபாத்திரம் எழுதப்பட்டது என்பது ஒரு இலக்கியப் பெருநிகழ்வு.

ஹென்றியின் கதாபாத்திரத்தை மிக இயல்பாகச் செதுக்கியிருக்கிறார் ஜெயகாந்தன். எவற்றுடன் அவனை அடையாளப்படுத்தவேண்டும், எவற்றுடன் விலக்கிக்கொள்ளவேண்டும் என்னும் தெளிவு அவருக்கிருக்கிறது. உதாரணமாக, அன்றைய ஹிப்பிகளின் முதன்மை இயல்பு போதைமயக்கம். கஞ்சா அவர்களின் மதமாகவே ஆகியிருந்த காலம் அது. ஹென்றியைச் சுற்றி குடியும் கஞ்சாவும் புழங்குகின்றன. ஆனால் அவன் அவற்றில் ஈடுபடுவதில்லை. தனக்கு போதை ஒத்துக்கொள்ளாது என்று மறுத்துவிடுகிறான். அப்பழக்கத்தை அவன் நிராகரிக்கவில்லை, தன் இயல்பு அல்ல என்று கொள்கிறான்.

பொறுப்பின்மை பற்றின்மை ஆகிய இரு இயல்புகளும் ஹென்றியிடமிருக்கின்றனவா? அப்படி தோன்றும். ஆனால் செல்வத்தில் பற்றில்லாமல் இருக்கும் ஹென்றி தந்தைமேல் பெரும்பற்றுடன் இருக்கிறான். அவன் கிருஷ்ணராஜபுரம் வந்ததே அந்தப் பற்றினால்தான். பொறுப்பில்லாமல் இருப்பவனாக தோன்றினாலும் நாகரீகங்களை, பிறருடைய உள்ளங்களை அவன் எப்போதும் கருத்தில்கொள்கிறான்.கிழங்கு விற்கும் பெண்ணை தன் இல்லத்தின் திறப்புவிழாவுக்கு அழைக்கிறான். தேவராஜனுடன் தங்காமல் தன்னுடன் தங்கும்படி துரைக்கண்ணு கேட்டுக்கொண்டபோது தேவராஜனின் மனம் சோர்வடையக்கூடாது என்று நினைக்கிறான்.

ஆனால் உலகியலில் அவன் ஈடுபடவில்லை. திருமண உறவை விரும்பவில்லை. சொத்துக்களை பேணிக்கொள்ளவும் எண்ணவில்லை. ஒவ்வொரு கணத்திலும் முழுமையாக ஈடுபட்டு அதில் திகழ்ந்து நிறைவடையவே அவன் விரும்புகிறான். அவனுடைய அந்த இயல்பே அவனை பிற அனைவரிடமிருந்தும் வேறுபடுத்தி நிறுத்துகிறது. அவன் கிருஷ்ணராஜபுரத்தில் நிலைகொள்வானா? நிலைகொள்ளலாம், சென்றுவிடலாம். அவர்களிடம் ஓர் ஆழமான உளப்பதிவாக அவன் எஞ்சலாம்.

ஹென்றி என்பது ஜெர்மானிய-டியூட்டானிக் வேர்கள் கொண்ட சொல். அதன்பொருள் ’இல்லத்தலைவன்‘ அல்லது ‘இடத்தை ஆள்பவன்’. தற்செயலாகவோ திட்டமிட்டோ இப்பெயர் அமைந்துள்ளது ஹென்றிக்கு. அவன் அங்கிருந்து செல்லாமல் அந்த இடத்தின் தலைவனாக அமையலாம். அல்லது வீடு போல உலகமே அவனுடைய இடமென்றும் ஆகலாம்.

இந்நாவலில் ஒரு குறிப்பிடத்தக்க படிமத்தை ஜெயகாந்தன் பயன்படுத்துகிறார், நிர்வாணம். முதல்நாள் லாரியில் வரும்போதே ஹென்றி குளிக்கும் பெண்ணின் நிர்வாணத்தை பார்க்கிறான். அதை கூர்ந்து பார்க்கலாகாது எனறு துரைக்கண்ணு கண்டிக்கும்போது அவன் அதேபோல அனைத்துக் காட்சிகளையும் கூர்ந்து பார்ப்பதை அவன் சொல்கிறான். அவன் இயற்கையையும் நிர்வாணமாகவே பார்க்கிறான், ஆகவே நிர்வாணத்தை இயற்கையாகப் பார்க்கும் உரிமையும் தகுதியும் அவனுக்கு இருக்கிறது

தேவராஜனின் தோட்டத்தில் கிணற்றில் நிர்வாணமாக நீராடுகிறான் ஹென்றி. அவனுக்கு முற்றிலும் புதியவனாகிய தேவராஜன் முன் நிர்வாணமாக நிற்க தடையே இல்லை. தேவராஜன் அந்த விடுபட்ட நிலையைப் புரிந்துகொள்கிறான். அந்த அகநிர்வாணநிலைதான் அவன் மொழியில் வெளிப்படுகிறது. அவன் கல்வியே கற்காதவன், நாளிதழ்கள்கூட படிக்கமுடியாதவன் என்பதை சொல்லும் ஜெயகாந்தன் உணர்த்துவது அந்த ‘தூய’ நிலையைத்தான்

நிர்வாணமாக அலையும் பித்தியாகிய பேபி ஹென்றியின் மொழியை புரிந்துகொள்வது, அவன் சொற்களுக்குப் பணிவது, அவன் அளித்த ஆடையை அணிந்துகொள்வது அந்த நிர்வாணமான மொழியால்தான். அகநிர்வாணமே அவர்களை இணைக்கிறது. அதில் சற்றும் பாலியல் சாயல் இல்லை. அவனுக்கு அவள் வெறும் குழந்தைதான். அவன் போட்ட பெயர்தான் பேபி.

பேபியில் மெல்ல குவியும் நாவல் அவள் அவனைவிட்டு விலகுவதில் முடிகிறது. அவனுக்காக ஊரே கூடியிருக்கையில் அவள் விலகிச் செல்கிறாள். அவள் வருவதற்காக என்றும் திறந்திருக்கும் அவன் இல்லம் என்று நாவல் நிறையும்போது அந்த வீடு என்றென்றைக்குமான ஒரு காத்திருப்பாகவே திகழப்போகிறது என்றும், ஹென்றியின் வாழ்வின் பொருளும் அதுதான் என்றும் வாசகன் உணரமுடியும்

அந்த முடிவின் வசீகரமான மர்மத்தை விளக்கி அழிக்க விமர்சகன் முயலக்கூடாது என்று சொல்லிக்கொள்கிறேன். பேபியின் கதாபாத்திரத்தை நான் எப்படி வகுத்துக்கொள்கிறேன் என்று என்னை கேட்டுக்கொள்கிறேன். திரும்பத்திரும்ப அவளுடைய அழகை, அரசமகளுக்குரிய நிமிர்வை, அவளிடமிருக்கும் தெய்வத்தன்மையை ஜெயகாந்தன் சுட்டிக்காட்டுகிறார். அவள் துரைக்கண்ணுவுக்கு புளியம்பழங்களை ‘பிரசாதமாக’ அளிக்கிறாள். ஒரு தெய்வவிக்ரகம் அவள். ஆலயத்தின் ஐம்பொன்சிலைகளுக்குரிய நிர்வாணம் அவளுடையது.

கதையின் தொடக்கத்திலேயே ஹென்றிக்கு தரிசனம் தரும் பேபி சமணமரபில் தீர்த்தங்காரர்களுக்கு வழிகாட்டியும் காவலுமான யக்ஷிகளைப்போன்ற ஒருத்தி. அல்லது தாந்தேக்கு வழிகாட்டும் பியாட்ரீஸ் போன்ற ஒரு தேவதை. அவன் வாழ்க்கையில் அவள் தோன்றுமிடம் முக்கியமானது. அவன் வீடுகட்ட செங்கல் கொண்டுவந்து வைக்கும்போது அவள் வருகிறாள். வரவில்லை, நிலவொளியில்  ‘தோன்றுகிறாள்’. வீடுமுடிந்து குடியேறும்போது கிளம்பிவிடுகிறாள். அலைந்தவனை அமையச் செய்யவந்த தெய்வமா அவள்?

பியாட்ரீஸும் தாந்தேயும். ஓவியம் Giovanni di Paolo

அலைபவனை வழிகாட்டி அழைத்துச் செல்லும் தேவதை. இந்தப் படிமம்தான் ஐரோப்பிய மரபில் எத்தனை தொன்மையானது. தாந்தேவின் பியாட்ரீஸ் ஆழமாக நவீன இலக்கியத்திற்குள் வந்த ஒரு படிமம். தஸ்த்யேவ்ஸ்கி தொடங்கி பெரும்படைப்பாளிகள் அனைவரிடமும் அதன் மறுவடிவங்கள் உள்ளன. தேடுபவன், அலைபவன் தன் அறிவுச்சிடுக்குகளுக்குள் உணர்வுக்கொந்தளிப்புகளுக்குள் நின்றபடி கள்ளமற்ற சிரிப்புடன் ஒளிரும் துருவவிண்மீன் போன்ற நிலைத்தன்மையுடன் ஒரு தேவதையை காண்கிறான். அவனுக்குள் இருந்து அவள் எழுகிறாள்

இன்னொரு கோணத்தில் பார்த்தால் அலையும் தனியன், துயருற்ற மெய்யுசாவி என்பவன் கிறித்தவ மதிப்பீடுகளிலிருந்து திரண்டவன். அந்த தேவதை கிரேக்க – பேகன் தொன்மங்களிலிருந்து வந்த தெய்வம். அறிவின் தெய்வமான சோஃபியா, அல்லது கருணையின் தெய்வமான பீய்ட்டி. அவள்தான் ஷிவாகோவின் லாரா.  செகாலின் பெல்லா.

The Flying Lovers, Bella and Marc Chagall. மார்க் செகால், பறக்கும் காதலர்கள்.

பித்தி என்னும் இக்கதாபாத்திரத்தை நீலகண்டப்பறவையைத் தேடி நாவலில் வரும் மணீந்திரநாதுடன் ஒப்பிட்டுக்கொள்ள தோன்றியது. பித்தர்களுக்கு இருக்கும் நிமிர்வு எங்கிருந்து? ஒவ்வொருவர் மேலும் இச்சமூகம் ஏற்றிவைக்கும் எதுவும் அவர்கள்மேல் இல்லை. அதிகாரம், ஒழுக்கம், அரசு, தெய்வம் எதுவும். அது அவர்களை அரசர்களாக அரசியராக ஆக்குகிறது. பேபி சுண்ணாம்பு அரைக்கும் பெண்கள் அனைவருக்கும் அள்ளி அள்ளி தண்ணீர் கொண்டு கொடுக்கும் காட்சி மணீந்திரநாத் யானைமேல் வரும் காட்சிக்கு நிகரானது. என்னவென்றே சொல்லமுடியாத ஒரு நெகிழ்வை அளித்த அழியாச் சித்திரம் அது.

பேபி அந்த வீட்டில் விளக்கு ஏற்றிக்கொண்டுவருவது வரை உடனிருக்கிறாள். கோலம்போடும்போது உதவுகிறாள். அனைவரும் வந்து வீடு உயிர்பெறும்போது அனைவரையும் விழுந்து கும்பிட்டுவிட்டு விலகிச் செல்கிறாள். இன்னமும்கூட அவள் உள்ளம் என்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஒளியாக அங்கே தன்னை நிறுத்திவிட்டு செல்கிறாள் திருமகள் என நினைத்த்துக்கொண்டேன்.

[மேலும்]

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- வாங்க

வேறுவழிப் பயணம்

வேறுவழிப் பயணம்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைமதார் கவிதை வெளியீட்டு விழா – கடிதங்கள்
அடுத்த கட்டுரைமுதற்கனல் – வேள்விமுகம்