இன்ஃபெர்னோ
அன்புள்ள ஆசிரியருக்கு,
மும்பை எனக்கு மஹாலட்சுமி. படித்து முடித்து திருச்சி பெல் நிறுவனத்தில் பயிற்சி முடித்தவுடன் அங்கிருந்து வேலை தேடி நான் ரயிலேறியது(1997) மும்பைக்கு. அது மழைக்காலம். தாதரில் இறங்கி தராவி சென்றேன். அன்றிரவு தங்குவதற்கு தாராவியில் ஏற்பாடு செய்திருந்தார் என் மூத்த சகோதரர். அதிகாலை பெய்த பெருமழையில் அறைக்குள் தண்ணீர் வந்து விழித்துகொண்டேன். அங்கிருந்த கழிப்பறைக்குள் என்னால் அமரவே முடியவில்லை, கழிப்பறை கதவில் சொருகியிருந்த பீடி துண்டுகளும், நாற்றமும் குடலை வெளியே எடுக்க வைத்தது.
மும்பை பெருநகரம், எங்கும் மனித தலைகள், ஹிந்தி தெரியாது, ஆங்கிலம் சரியாக பேச வராது. விழி பிதுங்கி நின்ற நேரம் அது. மறுநாளே அங்கிருந்து கிளம்பி எனக்கு பணிதரும் சிறிய நிறுவனம் இருந்த பயந்தர் எனும் இடத்திற்கு சென்றேன். அங்கே பணியில் இருந்த நம்மூரை சார்ந்த விஜயன் என்பவர் தங்கியிருந்த அறையில் தங்குவதற்கு எனக்கும் ஏற்பாடு செய்து தந்தார். எனக்கு அப்போது தினக்கூலி அறுபது ரூபாய்+ஓவர் டைம். பாலன் என்பவர் நடத்தும் பொங்கல் வீடு. அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீடு அது. அதன் ஒரு அறையில் அவரும் மனைவியும், மூன்று குழந்தைகளும். பத்துக்கு பதினைந்து அடி கொண்ட ஒரு அறையில் இருபது பேருக்கு மேல் தங்கியிருந்தோம் அப்போது .மாதம் எழுநூற்றி ஐம்பது ரூபாயில் மூன்று வேளை உணவும், முப்பத்திஐந்து லிட்டர் (ஒரு வாளி) தண்ணீரும் தருவார். குளிக்க, துணி துவைக்க, கழிப்பறை செல்ல என அனைத்திற்கும் அந்த ஒரு வாளி நீர் மட்டுமே. ஒரு பெட்டி மட்டும் வைத்துகொள்ளலாம். காலையில் பணிக்கு போனால் மாலை ஐந்து மணிக்கு மேல்தான் அறைக்கு திரும்ப வரவேண்டும்.
இரவில் அருகில் படுத்திருக்கும் சாதிக், “கொஞ்சம் தள்ளி படு இடிக்குது” என்பான். “ராத்திரி முருகேசன் வருவான் அவனுக்கு படுக்க இடம் வேண்டாமா” என்பான் கோபால். இரவில் அருகில் படுத்திருப்பவரின் உடல் பட்டு அவரது உடல் சூடு, உடலுக்குள் செல்வதை பழகுவது வரை இரவுகள் தூக்கமின்றி கழிந்தது. மூன்றே மாதத்தில் பாலனின் அறையில் இருந்த நான்கு பேரை சேர்த்துக்கொண்டு வேறொரு அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து சென்றுவிட்டேன். கொஞ்சம் வசதியாக தங்கினோம்.
2000த்தில் கப்பலில் வேலை தேடும் பொருட்டு தராவி அருகில் உள்ள மாட்டுங்க லேபர் கேம்பில் உள்ள அறைக்கு வந்தேன். முதலில் பார்த்தது அறைக்குள் கழிப்பறை இருக்கிறதா என. மாட்டுங்க லேபர் கேம்பை சுற்றியுள்ள ஏராளமான குறுகிய அறைகளில் என்னை போல வேலை தேடும் தமிழ்,மலையாளிகள் இரண்டாயிரம் பேருக்கு மேல் இருந்தனர். தினமும் வேலை கிடைத்து வெளிநாட்டிற்கும், கப்பலுக்கும் போய்கொண்டே இருந்தனர் பலர். தினமும் புதிதாய் வந்துகொண்டே இருந்தனர். சிலருக்கு மும்பை வந்த ஒரு மாதத்தில் அவர்களின் லட்சிய வேலை கிடைத்தது, சிலருக்கு ஒரு சில ஆண்டுகள். நான்கு ஆண்டுகள் வரை வேலை தேடி தான் விரும்பிய ராயல் கரீபியன் எனும் அமெரிக்க உல்லாச கப்பலில் பணிக்கு போன ஒருவரை நானறிவேன்.
எப்படியும் வேலை கிடைத்துவிடும். அதுவரை மிக மலிவான விலையில் உணவும், மிக குறைந்த பணத்தில் இருக்க இடமும் மும்பை மட்டுமே தரமுடியும். வடா பாவ் அப்போ மூன்று ரூபாய்தான், பத்து ரூபாய்க்கு அரை பிளேட் சாதமும், இருபது ரூபாய்க்கு அன்லிமிடட் சாப்பாடு தரும் இந்து ஹோட்டலும், அதே இருபது ரூபாய்க்கு வாழை இலையில் சட்டி கறியுடன் (சாளை மீன்) சாப்பாடு தரும் கேரள உணவங்களை கையில் காசே இல்லாத வேலை தேடும் நாங்கள் மட்டுமே அறிவோம்.
கையில் காசு இருக்கும் நாட்களில் தனியாக ஹோட்டல் சென்று சாப்பிட்டு தன் வயிற்றை மட்டும் நிரப்பாமல் ஒரு பார்சல் சாப்பாடு வாங்கி மூன்று பேராக சாப்பிட்ட நாட்கள் உண்டு. அப்போது என்னுடன் அறையில் இருந்து வேலை தேடிய நண்பர்கள் பலர் இப்போது கப்பல்களில் சீப் இஞ்சினியராகவும், காப்டனாகவும், கணினி துறையில் அமெரிக்காவிலும், லண்டனிலும் உயர்பதவிகளிலும் இருக்கிறார்கள். உங்கள் நண்பர் சுராவின் மாணவன் என நீங்கள் சொல்லும் சுதாகர் அப்போது என் அறையில் இருந்து வேலை தேடியவன்.
படித்து முடித்து மும்பைக்கு வந்த அவன் தனது சுயவிவர படிவத்தில் எதிர்பார்க்கும் சம்பளம் 26,000ரு என குறிப்பிட்டு இருந்தான். அப்போது மற்றவர்கள் அதிகபட்சமாக மூவாயிரம் முதல் நான்காயிரம் தான் போட்டிருந்தனர். “லே இது உனக்கு ரொம்ப கூடுவலா தெரியலயா” என கேட்டேன் . “காக்கா,மசிர கெட்டி மலய இழுக்கனும்,வந்த மல,போனா மசுரு” என்றான். இப்போது சுதாகர் துபாயில் இருக்கும் உயர்பதவி நீங்கள் அறிவீர்கள். உழைக்க தயாராக இருக்கும் எவரையும் இந்த மஹாலட்சுமி கைவிட்டதே இல்லை. வேலை தேடி வந்த பலரும் இங்கே தொழிலதிபர்கள் ஆகி இங்கே தங்கி விட்டவர்களும் உண்டு.
தினமும் இந்தியா முழுவதிலுமிருந்து மும்பை வரும் ரயில்களில் புதிதாய் வேலைதேடி, கனவுகளுடன் வருபவர்கள் ஐம்பதாயிரதிற்கும் மேல். அனைவருக்கும் இந்த மும்பை தண்ணீரும், உணவும் கொடுக்கிறது. மது, போதை, விபச்சாரம் என தீய வழியில் செல்வதற்கான வாசல்கள் அனைத்தும் திறந்தே இருக்கிறது இங்கு… ஆனாலும் இதில் சிக்காமல் உழைத்து மேலுழுந்து சென்றவர்களும், இங்கேயே மகிழ்வுடன் வாழ்வை அமைத்துகொண்டவர்களும் பல கோடி பேர்.
இப்போதும் எனக்கு பிடித்த ஊர் இந்த குப்பை குவிந்து கிடக்கும் அழுக்கு மும்பைதான். உங்கள் சோற்று கணக்கு கெத்தெல் சாகிப் போல் என் பசிக்கு உணவளித்த கரங்கள் இங்கே இருந்தன. இந்த மும்பை இரு முறை தாக்குதலுக்கு உள்ளானபோதும் ஊரில் இருந்த நான் இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் கவலையோடு இருந்தேன்.
உங்களது புறப்பாடு மும்பை தாராவியில் தங்கியிருந்த அனுபவமும் அப்படித்தானே? முப்பது ஆண்டுகளுக்கு முன் அறை நண்பர்கள் மழை காலத்தில் அறைக்குள் காகிதத்தை விரித்து அதில் மலம் கழித்து மடித்து எடுத்து கொண்டு வீசி எறிந்தார்கள். இப்போதும் இதியாவின் வட பகுதியில் மலம் கழிக்க திறந்துவெளியை பயன்படுத்தும் கூட்டம் வேலை தேடி மும்பை வந்தபின் அரை லிட்டர் தண்ணீருடன் ரயில் தண்டவாளம் அருகில் அமர்ந்து மும்பையை மலக்காடாக ஆக்குகிறது.
எங்களுடன் இருந்த நண்பர் ஒருவர் தொண்ணூறுகளில் மும்பைக்கு வந்தவர் அவர் சொல்வார் “மள பெய்யத்துல இங்க வர முடியாது, பீயா மெதக்கும், ஒரு ரூவாக்கு நியுஸ் பேப்பர் வாங்கி கையில மடிச்சி வெச்சிட்டு முட்டளவு தண்ணீல அந்த பேப்பரால பீய ஒதுக்கி உட்டுட்டு ரூமுக்கு வருவேன்” என. இப்போது அந்த அவலம் இல்லை கொஞ்சம் மாறியுள்ளது.
இத்தனை ஆண்டுகளில் இப்படி மும்பைக்கு வந்து மேலேறி சென்றவர்களால்தான் மும்பை அழுக்கும் குப்பையுமாக கிடக்கிறது. இந்த மஹாலட்சுமியை மிதித்து மேலேறி சென்ற பல கோடி பேரில் நீங்களும், நானும் அடக்கம். அப்போது தாராவியில் தங்கியிருந்த நீங்கள் இப்போது அதன் மிக அருகிலுள்ள பாந்த்ரா கிரிகெட் கிளப்பின் நட்சத்திர அறையில். நீங்கள் எழுதி கங்கையை சுத்தபடுத்தும் பணி, காடுகளில் பிளாஸ்டிக் தவிர்த்தல் போன்றவை கவனம் பெற்றுது. அதுபோல் இந்த மும்பையின் குப்பை, மலம் அகற்றவும் உரிய அதிகாரிகளின் காதுகளை போய் எட்டட்டும். மும்பை எனும் மஹாலட்சுமி தூய்மை அடையட்டும். இது பற்றி எழுதிய உங்களுக்கும் நன்றி.
மும்பையில் அழகிய இடங்களும் இருக்கிறது. சகோதரர் பனை மனிதன் அருட்பணி காட்சன் சாமுவேல் பணிபுரியும் மும்பை ஆரே பால் குடியிருப்பு அடர் வனம். மும்பைக்குள் இப்படி ஒரு இடமா என வியந்து போவீர்கள். இந்த கடிதம் படிக்கும்போது மும்பையில் இருந்தால் காட்சனை அழைத்துவிட்டு ஆரே காலனி வரை போய்விட்டு வாருங்கள். கடந்த பிப்ரவரியில் காட்சனின் வீட்டில் ஒரு நாள் தங்கியிருந்தேன். மும்பைக்குள் இப்படி ஒரு அடர் காடு இருப்பது பெரும்பாலோருக்கு தெரியாது. அப்படி தெரியாமலே இருக்கட்டும் என நினைத்துகொண்டேன்.
ஷாகுல் ஹமீது.
ஆசிரியருக்கு வணக்கம்,
Inferno கட்டுரை படித்தேன். தற்கால Mumbai பற்றி தெளிவாக அறிய முடிந்தது. ஒருவகையில் சமூகத்தில் எப்படி நாம் ஊரை கவனித்துக்கொள்கிறோம் என்ற பார்வை முக்கியமாக புரிகிறது.
ஒரே ஊரில் அழகான பராமரிக்கப்பட்ட இடம் , மிக அலங்கோலமான பாதைகள், அடுக்கு மாடிகள், உயர்குடி மனிதர்கள், உயர்குடி கார்கள், துரு ஏறிய வண்டிகள் என கட்டுரை நீள்கிறது.
இப்படி தற்கால அறிவு வளர்ச்சிக்கும், ஊரின் நிலைமைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பது மிகப்பெரிய குறை. இதை எடுத்து சொல்வதற்கு யாருக்கும் துணிவில்லை. தங்களை போன்ற ஆசிரியர்களுக்கு மட்டும் இது சாத்தியப்படுகிறது.
அது மட்டுமில்லை, இன்னும் வரும் காலங்களில் உதாரணமாக 2050ல், எப்படி ஊர் இருக்கும், மனிதர்கள் எப்படி பழகுவார்கள், என்ன சிக்கல்களை எதிர்கொள்வார்கள் என்ற விஷயங்களை சொல்வதற்கு ஆள் இல்லை. தங்களை போன்ற பல விஷயங்களை தேடிச்சென்று, பல அனுபவங்களை பெற்றவர்களுக்கே இது முடியும், மற்றும் தகுதியும் உண்டு. சமீபத்தில் Yuval’s Homodeus படித்தேன். மனித எதிர்காலத்தை பற்றி பொதுவாக உள்ளது. எதிர்கால சந்ததிக்கு நீங்கள் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. இது தற்கால, எதிர்கால மனிதர்களுக்கு நேரடி உதவியாக இருக்கும். ஏற்கனவே எழுதியிருந்தால் கூறவும், அது என் அறியாமை.
நன்றி,
இராதாகிருஷ்ணன்.